மோகனங்கள் பேசுதடி!05

258870534_107665628407960_2661016960017320672_n-d9e50faa

மோகனம் 05

லண்டன்

விடிந்தும் விடியாமலும் இருள் மறைந்து வெளிச்சத்தை மெதுமெதுவாகக் கதிரவன் கொடுத்துக் கொண்டிருக்க, இங்கே விஷ்வாவோ அறை முழுவதையும் இருட்டாக்கிவிட்டு முழு போதையில் உறங்கிக்கொண்டு இருந்தான்.

அவனது மொபைல் அடித்து மாளாது மீண்டும் மீண்டும் இசைத்து அடங்க, நேற்று அவன் குடித்த விஸ்கி அவனை உறக்கத்திலே வைத்திருந்தது.

ஆனாலும் அழைப்பு வந்தமையமாக இருக்கவே, அவனின் செவிகளுக்குள் ஏதோ ஒரு ஓரத்தில் கேட்கச் செய்தது.

“பச், யார் இந்த நேரத்துல?” சலித்தபடி அவனது தொல்லைபேசியை தேட, அவன் கைகளுக்கு அகப்பட்டது என்னவோ நேற்று அவன் முழுதாகக் குடித்து முடித்து வைத்த விஸ்கி பாட்டில் தான்.

“ச்சை, நம்ம நேரத்துக்கு எதுவும் கிடைச்சு தொலையுறது இல்ல” கடுப்புடன் திறக்க முடியாத கண்களை மெதுவாகத் திறந்தவன் எப்படியோ அந்த தொல்லைபேசியை எடுத்துவிட்டான்.

அம்மா கால்லிங் என்று திரையில் தென்பட, இவன் முகம் சலிப்பின் காரணமாகப் புருவம் சுருங்கி பெருமூச்சொன்றை விட்டவன் “இவங்களுக்கு வேற வேலையே இல்ல. நம்மகிட்ட இருக்குற கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் மொத்தமா மூட்டக்கட்டி தூக்கிட்டுக்கு போய்டுவாங்க போல”கடுப்புடனே அதனை உயிர்பித்தான்.

எடுத்த எடுப்பிலே,” விஷ்வாஆஆ…..”காது கிழியும் அளவிற்கு அவன் அன்னை மஞ்சுளா கத்தினார்.

“எதுக்கு மா இப்படி பாசமா கூப்பிட்டு உங்க எனெர்ஜியை வேஸ்ட் பண்றீங்க?”

” டேய் இப்ப மட்டும் நீ கையில கிடைச்ச, என் பாசத்த பாயாசமா ஆக்கிக் கொடுத்துடுவேன் டா ராஸ்கல்” மகனிடம் சண்டைக்கு நின்றார். அது அவர் விடும் பெரிய பெரிய மூச்சுக்களிலே தெரிந்தது.

“கூல் மா” மகன் அன்னையை சமாதானம் படுத்த முயல,

“என்னடா கூலு கஞ்சினுட்டு. ஒரு தடவைக்கு எத்தன தடவை உன்னைக் கூப்பிடுறது. துறைக்குப் போன் எடுக்க முடியாதோ? இங்க நீ போன் எடுக்குற வரைக்கும் எனக்கு உயிரே இல்ல டா. நீ என்னனா சாவகாசமா பேசுற” மகனின் இச்செயல் கோபத்தையும் கவலையையும் ஒருங்கே ஏற்படுத்தியது.

“ம்மா!”

“உனக்கு அம்மா மீது இருந்த பாசம் எங்க டா போச்சி. இப்படி ஏதோ ஒரு மூலையில நீ உக்காந்துகிட்டு எங்களை ரொம்ப கஷ்டப்படுத்துற விஷ்வா. இந்த வயசான காலத்துல எங்களை ஏன் நீ இப்படி காயப்படுத்தி பாக்குற? ஒரு அம்மாவா என் இடத்துல இருந்து நீ யோசிச்சு பாரு விஷ்வா, அப்போ தான் ஒரு அம்மா படுற கஷ்டம் புரியும்” கவலை தேய்ந்த குரலில் மகனிடம் தன் குமுறல்களை ஆற்றாமையுடன் கொட்டினார்.

அன்னை தன் மனபாரத்தை மகனிடம் கொட்ட, மகனோ அமைதியாக இருந்தான். அவனால் அவன் அன்னையை சமாதான படுத்த முடியவில்லை. சமாதான வார்த்தைகள் வெறும் வார்த்தையாக மட்டுமே வரும்.அதை அவனால் செயல்படுத்த முடியாதபோது, அவருக்கு நமிக்கையை கொடுக்க விழையவில்லை.

அவன் செய்த தவறுகள் அவன் அன்னையிடமிருந்து பிரித்து வைத்தது.நெருஞ்சி முள்ளாய் அவன் செய்த பாவங்கள் அவன் நினைவலையில் வந்து அவனின் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குத்தி எடுத்துக் கொண்டிருந்தது.

இது ஒன்னும் அவன் தெரியாமல் செய்த பாவம் இல்லையே, அதை மறந்து வாழ்வதற்கு. இது அவன் தெரிந்தே தான் அத்தனையும் செய்தான். அதற்கான தண்டனையையும் அனுபவிக்குறான்.

இந்த தண்டனை அவனுக்கு அவனே கொடுத்தது.

விதியை வெல்ல எவரால் முடியும்!

விதியின் விளையாட்டில் இவர்கள் யாவும் கைபொம்மையே!

மகனின் இந்த அமைதி அன்னையின் கோபத்தை உச்சத்தில் கொண்டு நிறுத்தியது.

“டேய்! நீ ஊரு பக்கம் வந்து எத்தனை வருஷமாச்சு தெரியுமா?”மஞ்சுளா கோபமே உருவமாய் மாறிக் கேட்க, அவரின் கோபம் இவனை நிதானத்திற்கு கொண்டு வந்திருந்தது.

“இப்போ அதை தெரிஞ்சிக்கிட்டு நான் என்ன சுந்தர்பிச்சையாவா ஆகப்போறேன் சொல்லுங்க” அசட்டுத்தனத்துடன் பதில் கூறினான்.

“இந்தப் பேச்செல்லாம் பேசாத விஷ்வா. உன்ன நாங்க கண்ணால பார்த்தே நாலு வருஷமாகப்போகுது. உனக்குக் கொஞ்சமும் என் மேல பாசம் இல்லையா டா”

“ம்மா, இப்படி எமோஷ்னல் ப்ளேக் மெயில் பண்ணாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது” சிறிது கோபத்தை விஷ்வா அன்னையிடம் அழுத்தமாகக் காட்ட,

“அப்படியாவது நீ வந்துடமாட்டியான்னு இருக்கு டா. பாவம் அவனே எவ்வளவு தான் பார்ப்பான். உன்னோட பொறுப்பையும் சேர்த்து அவன் பார்க்குறான்.உன்ன பார்குறதா இல்ல அவனைப் பார்குறதா சொல்லு “சொல்லி மகனின் பதிலுக்காகக் காத்திருக்க, அவனோ மீண்டும் அமைதியை கடைபிடித்தான்.

“விஷ்வா!”

“மா, எனக்கு ஒரு முக்கியமான கால் வருது. பாய் மா” அன்னையின் பதிலைக் கூட எதிர்பாராது வைத்துவிட்டான்.

எழுந்து சென்று வார்ட்ப்ரோபை திறந்தவன், அவனின் விலைமதிப்பில்லா செல்வத்தைக் கையில் எடுத்துதான்.

அது ஒரு சட்டை. அவனின் பிறந்தநாள் பரிசாக அவன் நேசிக்கும் பெண்ணால் கொடுக்கப்பட்டது.அதை அப்படியே தன் நெஞ்சோடு வைத்து அணைத்தவன்,” உன்ன நானே கொன்னுட்டேனே”என்றவன் அழுகையில் கரைந்தான்.

******

அருவியிடம் பேசிவிட்டு திரும்பியவனுக்கு தொலைபேசியிலிருந்து அழைப்பு வர, அதை உயிர்பித்தான்.

“சொல்லுங்க மா!”

“அருண்…அருண்…”கூறிய மஞ்சுளாவின் குரல் அடுத்த வார்த்தை பேச முடியாது அழுகையில் கரைந்தார்.

அன்னையின் அழுகை மகனைப் பதற்றமடைய செய்ய,”ம்மா, என்னாச்சி மா?எதுக்கு இப்படி அழுறீங்க?” பதற்றத்துடன் கேட்க,

“அருண் அப்பாக்கு…” சொல்ல முடியாதளவு நெஞ்சம் வேதனையில் துடிதுடித்தது.

“அப்பாக்கு என்ன மா? ஏதாவது சொல்லுங்க?”

“அப்பா நெஞ்ச புடிச்சுட்டு அப்படியே மங்கிட்டாரு டா. எனக்கு பயமா இருக்கு அருண் நீ சீக்கிரமா வா டா “துக்கம் தொண்டையை அடைத்தது.

அன்னை சொன்னதை கேட்டு அதிருவுற்றவன்,” இதோ வரேன் மா. அப்பாக்கு ஒன்னும் இருக்காது” ஆறுதல் கூறி வைத்தவன், அடுத்தநிமிடமே மருத்துவ அவசர ஊர்தியை அழைத்து வரவழைத்து விட்டான்.அடுத்த அரைமணி நேரத்தில் கங்காதரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் கங்காதரனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபடி இருந்தனர்.

வெளியே இருந்த அருண், மஞ்சுளா மற்றும் ஜீவாவிற்கு பயத்துடன் கூடிய பதட்டத்துடனே இருந்தனர். ஏற்கனவே ஒரு முறை நெஞ்சுவலி வந்திருந்தமையால், இந்த முறை சிறிது கடினம் என்றே மருத்துவர்கள் கூறி சென்றிருக்க, இவ்விடயம் உடனே விஷ்வாவிற்கு தெரிவிக்கப்பட, இந்திய மண்ணையே மிதிக்கக் கூடாது என்று வைராக்கியத்துடன் இருந்தவன், தந்தையின் உடல்நிலையை கொண்டு அடுத்து கிடைத்த விமானத்தில் ஏறிவிட்டான்.

நேரம் நெருங்க நெருங்க விஷ்வாவின் நிலை படுமோசமாக இருந்தது.ஒரு புறத்தில் தந்தையின் நிலையை எண்ணி கவலை, மறுபுறத்தில் அவன் செய்த பாவத்தின் செயல் அவனை கிழித்து எறிய ஆயுதத்தோடு காத்திருந்தது.

விஷ்வாவின் தற்போதிய நிலை கழுத்தில் கத்தி வைத்த கதையாகி போனது.

பத்து மணிநேர பயணத்திற்கு பிறகு மும்பை வந்து இறங்கிய விஷ்வா, கனெக்ட்டிங் பிலைட் பிடுத்து அடுத்த இரண்டு மணிநேரத்தில் கோவை வந்து இறங்கினான்.

அடுத்த அரைமணிநேரத்தில் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த விஷ்வாவிற்கு மூச்சு முட்டியது. அவன் சுதந்திரமாகச் சுற்றிய ஊர் தான் இது. ஆனால் இந்த நான்கு வருடத்தில் ஏதோ இந்த இடம் அந்நியமாகத் தோன்றியது.

அனைவரும் அவனைச் சுற்றி இருந்தும் அனாதரவாக இருப்பது போல் தோன்றி கலங்க செய்தது.

விதி வரைந்த பாதையில், விடை தெரியாத விண்மீன்களாய் பயணம் செய்ய, அதில் விஷ்வாவும் ஒருவன்.

அவனுக்கான நான்கு சக்கர வாகனம் வரவும், அதில் ஏறிச் சாய்வாக அமர்ந்தவன் தடதத்த நெஞ்சத்தின் மீது கை வைத்து இமை மூடிக்கொண்டான்.

அவன் மனக்கண்ணில் அவளை முதன்முதலாகப் பார்த்த நொடி நினைவுப்பெட்டகத்திலிருந்து வெளிவந்தது.

****

நான்கு வருடத்திற்கு முன்பு,

அது ஒரு புகழ் பெற்ற கல்லுரி. கலை மற்றும் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், நர்சிங் என அந்த வளாகத்திலே பல தரப்பட்ட கல்லூரி அமைப்புகள் கொண்டது.

இதில் தான் விஷ்வா BBA இறுதி வருடத்தில் இருந்தான்.அவனது துறையில் தான் இன்று பன்னிரெண்டாம் வகுப்பிலிருக்கும் மாணவர்களுக்காக ‘அடுத்து எதைத் தேர்ந்தெடுப்பது’ ஒரு மோட்டிவேஷனல் கிளாஸ் வைத்திருந்தார்கள்.

அங்கே தான் அவனின் தேவதையை முதன் முதலில் சந்தித்தது. அவனை முதன்முதலில் ஈர்த்தது என்னவோ அவளது மான் போன்ற அலைபாய்ந்த கண்கள் தான்.

இந்த வகுப்பிற்காக நிறைய பள்ளிகள் வருகை தந்திருக்க, அதில் ஒரு பள்ளியைச் சேர்ந்தவள் தான் அந்த மான்விழி கண்கள்.

திசையறியாத பிள்ளைபோல் தனியாக நின்றுகொண்டு பார்வையை அங்கும் இங்கும் அலையவிட்டு ஒரு வித பதற்றத்தோடு காணப்பட்டாள்.

இரட்டை ஜடை பின்னலிட்டு ஒரு பக்கத்தில் மட்டும் சிறிய அளவிலான மொட்டு போன்ற ரோஜாவைச் சூடியிருந்தவள், கைகளைப் பிசைந்தபடி தவிப்புடன் நிற்க, பார்த்த விஷ்வாவிற்கு பொம்மையைத் தொலைத்து தேடிய குழந்தை போல் தான் தெரிந்தாள்.

அவளை நோக்கிக் கால்கள் தானாகச் செல்ல, அதோடு அவன் மனமும் சென்றது.

தன்னை நோக்கி ஒருவன் வருவதை கண்ட பேதைக்கு, உள்ளூர உதறல் எடுத்தது.

‘முருகா முருகா’ ஜெபம் போல் அவன் நெருங்கி வருவதற்குள் ஒரு நூறு முறையாவது கடவுளைத் துணைக்கு அழைத்திருப்பாள்.

கடவுளோ, அவளது அழைப்பைக் காதில் வாங்கிக்கொளாது மேலோகத்திலிருந்து வேடிக்கை மட்டுமே பார்த்தார்.

அவளை நெருங்கி வரவும் அவளின் கால்கள் தானாகப் பயத்தில் பின்னோக்கி நடந்தது.அதில் கால் தடுக்கி விழப்போனவளை ஒரே எட்டில் தாவி அவளின் கரத்தைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தான்.

“முருகா” என்று கதியவள் அவன் கரத்திலே பயத்தில் மயங்கிச் சரிந்தாள்.

இப்பெண் மயங்கி விழிகவும், ஒரு நொடி அவனுமே பயந்து விட்டான். இவளது சத்தம் கேட்டு விஷ்வாவின் நண்பர்கள் வந்துவிட்டனர்.

“மச்சான், யாரு டா இந்த பொண்ணு?” ஒருவன் அவன் கரங்களில் பொத்தி வைத்திருந்த சிறுபெண்ணை காட்டி கேட்க,

“தெர்ல டா.இங்கேயே ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்தா.அதான் என்னென்னு பாக்கலாம்னு வந்தா மயங்கி விழுந்துட்டா” கூறிய விஷ்வாவின் பார்வை முழுவதும் அவள் மீதே பரிதவிப்போடு இருந்தது.

“யாராவது தண்ணி எடுத்துட்டு வாங்க”விஷ்வா படபடத்த மனதை அடக்கிச் சொல்ல, வேகமாகத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது.

கைகள் நடுங்க தண்ணீர் பாட்டிலை வாங்கிய விஷ்வா, அவள் முகத்தில் தெளிக்க சிறிது நாழிகையில் முகச்சுருக்கங்களோடு மான்விழி கண்ணை மெதுவாகத் திறந்தாள்.

“பீலிங் பெட்டர்?” அவள் கூற போகும் பதிலுக்காக மனம் அவனுக்குத் தெரியாமலே ஏங்கி நின்றது. இது அறியா பிள்ளை பேந்த பேந்த முழித்தாள்.

ஒரு நொடி அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை சுற்றி நிற்பவர்களைப் பார்த்தவள், தனக்கு நெருக்ககமாக ஒரு ஆணின் முகம் தெரியவும் பதறிப்போய் அவனை விட்டு வேகமாக விலக முயன்றாள். அதனைப் புரிந்து கொண்ட அவனுமே அவளை எழும்பி நிற்க வைத்தவன் விலகிக்கொண்டான்.

“முதல கொஞ்சம் தண்ணி குடி பாப்பா.”அவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்ட, அவளோ பயந்த விழிகளோடு நேர்பட அவனை நோக்கினாள்.

“இ…ல்…ல வே…வேணாம் “வார்த்தைகள் தந்தியடிக்க கண்கள் கலங்கி குளம் கட்டியது.

பயந்து போயிருக்காலெனப் புரிந்து கொண்ட விஷ்வா கூட்டத்தை விலக்கி விட்டான்.

“பொண்ணுங்க இப்படி பயப்படக் கூடாது.தைரியமா எதையும் பேஸ் பண்ண கத்துக்கணும் மா. இப்படி பயந்து உன்னை நீயே மத்தவங்களுக்கு காட்டிக்கொடுக்காத” சிறுபெண்ணின் பயத்தை போக்க தைரிய வார்த்தைகள் கூறி அவளை நிதானத்திற்கு அழைத்து வர முற்பட்டான்.

அது சிறிது வேலை செய்தது போல, மெதுவாக வாயைத் திறந்தாள்.

“நான் இங்க நடக்குற ஒரு ஈவென்ட்டுக்கு ப்ரெண்ட்ஸோட வந்தேன். இப்போ அவங்கள மிஸ் பண்ணிட்டேன்.வழி தெரியல “குயில் போலான குரலில் சிறுபிள்ளையாய் சொல்லியவள் அடுத்த அழுகைக்கு தயாரானாள்.

‘வளர்ந்த குழந்தை’ என தான் அவனுக்கு தோன்றியது.

“சரி, வா நான் உன்ன கூட்டிட்டுபோய் விடுறேன்” சொன்னவனை தயக்கமாகப் பார்த்தவள், சிறு நம்பிக்கை கொண்டு அவனோடு சென்றாள்.

அவளை அவள் பள்ளி மாணவர்களோடு சேர்த்தவன்,”தைரியமான பெண்ணாக இரு” சொல்லிச் சென்றான்.

******

திடிரெனப் பிரேக் போட்டு வண்டி நிற்கவும் கடந்த கால பயணத்தில் இருந்தவனை வெளிக்கொணர்ந்து வந்தது.

“என்ன ஆச்சி?”

“ட்ராபிக் ஜாம் சார்.”

“ம்ம்ம்…” மீண்டும் விழி மூடி நித்திரைக்கு முற்பட்டான்.

இங்கே பள்ளியிலிருந்து கிளம்பிய அருவி, நேராக வீட்டிற்கு வந்தவள் எதுவும் பேசாது அமைதியாக அவள் அறைக்குள் முடங்கிக்கொண்டாள்.

பார்த்திருந்த அன்னைக்கு மகள் இவ்வளவு சீக்கிரம் வீடு வந்திருப்பது கண்டு என்னவோ ஏதோ என்று பதறிப்போனார்.

இதில் அறைக்குள் செல்வதற்கு முன்பே,’என்னைய தொந்தரவு பண்ணாதீங்க’ கூறி சென்றிருக்க அன்னையாய் மகளின் நிலையை எண்ணி தவித்தார்.

அவள் அறைக்குள் சென்றதிலிருந்து அந்த அரை வாசலையே பார்த்த படி இருக்க,” என்ன மூத்த தண்டத்துக்கு மேடம் காவல் காக்குறீங்களோ? அடச்சீ, போ போய் சூடா சுக்கு காப்பி போட்டு எடுத்துட்டு வா”மனைவியை அதட்டி சமயலறைக்கு அனுப்பி வைத்து ஒரு வித கர்வத்துடன் மீசையை முறுக்கினார்.

குடும்பத்தைத் தன் காலடியில் வைத்திருப்பது என்னவோ மிகப் பெரிய சாதனையைச் செய்தது போல் நினைப்பு அவருக்கு.

ஒரு தகப்பனாய் சந்தானமூர்த்தி ஒவ்வொரு இடத்திலும் அவருக்குத் தெரியாமல் தோற்று கொண்டு தான் இருக்கிறார். அவரை ஜெயிக்க வைக்கிறது என்னவோ அவர் குடும்பம் தான். அந்த குடும்பம் இல்லையெனில் மூர்த்தியை நாய் கூடச் சீண்டாது. அது அறியா மூர்த்தி கர்வத்துடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

அடுத்தநாள் காலை சீக்கிரமே எழுந்த அருவி, குளித்துக் கிளம்பி வந்தாள்.

விடியற்காலையிலே கிளம்பி வந்த மகளை வியாகூலத்துடன் பார்த்திருந்தார்.

“ம்மா, நான் கோவை வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன் மா.அம்முவ பத்திரமா பார்த்துக்கோங்க” என்றதும் மகளின் முகத்தை ஆராய்ச்சியாக நோக்கினார்.

“அத்தையோட சமாதிக்குப் போயிட்டு வரேன்” அன்னை கேட்க நினைத்துக் கேட்காது மனதிற்குள் அடைத்து வைத்த கேள்விக்கு அவளே பதில் கூறினாள்.

“தேனு…”என்று அழைத்தாலும் அதற்கு பின்பு ‘போகாதே’ என்ற வார்த்தையும் தொக்கி நிற்பதை புரிந்து கொண்ட அருவி உயிர்ப்பில்லா புன்னகையை உதிர்த்தாள்.

“வந்திடுறேன் மா” கூறி செல்லும் மகளைப் பார்க்கையில் நெஞ்சம் கனத்தது. இருப்பினும் நடந்தவற்றை அவரலால் மாற்ற முடியாதே.

ஆனால் இனி நடப்பதை மாற்ற முடியும் அல்லவா?

அதிகாலையிலே ஆறு மணி போலவே கோவையை அடைந்த அருவி, தன்னை இந்த நான்கு வருடத்தில் பார்த்துக் கொண்ட ஆனந்திக்கு மலர்வளை வாங்கி சென்றாள்.

அவரின் சமாதி முன்பு வைத்தவள், நிர்மலமான முகத்துடன் எந்த வித உணர்வையும் காட்டாது அவரையே வெறித்திருந்தாள்.

வெகுநேரம் அங்கிருக்காமல் விரைவிலே அவ்விடத்தை விட்டுக் கிளம்பியும் விட்டாள்.

குன்னூர் போகும் பேருந்தில் ஏறியவள், கண்களை இறுக மூடிக்கொண்டாள். எங்கே முழித்திருந்தால் கடந்த காலம் நினைவுக்கு வருமோ பயந்துவிட்டாள்.

எங்கெங்கோ இருந்த விஷ்வா மற்றும் அருவியின் வாழ்க்கை பாதைகள் இப்போது ஒரே நேர்கோட்டில் பயணிக்கத் தொடங்கியது.

விதி அதனின் விளையாட்டை ஆரம்பித்தது. இதில் காயப்படப்போவது யார்? காயப்படுத்தப்போவது யாரென்று அவர்களின் மன குமுறல்களை பொறுத்தே வேறுபடும்.