மோகனங்கள் பேசுதடி!07

eiL5KAD79398-00f09015

மோகனம் 07

அந்த பெரிய வீடே நிசப்தமாய் இருந்தது. ஊசி கீழே போட்டால் கூட சத்தம் வரும் அளவிற்கு அமைதியாக இருந்தது. மஞ்சுளா பேசிவிட்டு சென்றபின் இரு மகன்களும் திசையறியாது திகைத்து போய் பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டனர்.

மஞ்சுளாவின் பேச்சு அவர்களின் மனதில் இடியென இறங்கியிருக்க, இப்போது தான் அன்னையை பற்றி சிறிது நினைத்து பார்த்தார்கள்.

எப்போதும் புன்னகையோடு தவழ வரும் அன்னையின் இன்றைய கோபமும் கண்ணீரும் இவர்கள் இதுநாள்வரை கடைபிடித்து வந்திருந்த தீர்மானம், இன்று அன்னையின் பேச்சில் சற்று ஆட்டம் காணத்தொடங்கியது.

யாருக்கு யார் ஆறுதல் கூறி தாங்கிக்கொள்ள என்று தெரியாமல் இருவரும் மௌனத்தையே மேலும் கடைப்பிடிக்க, ‘போதுமடா சாமி இந்த அமைதி’ என அதனை முதலில் அருணே கலைத்தான்.

“உனக்கு எதாவது பிரச்சனை இருக்கா விஷ்வா?” அவனின் இந்த மாற்றத்திற்கான விடயத்தை அறிந்துக்கொள்ள எண்ணி கேட்டான். அவனுமே அவனை இந்த ஒரு வாரமாய் பார்த்து கொண்டு தானே இருக்கிறான்.

“…” மௌனமே பதிலாய் அண்ணனுக்கு வழங்க,

“போதுமே டா. உனக்கு என்னவோ பிரச்சனை இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியுது. ஆனா அது நீயா சொல்லாத வரைக்கும் எப்படி எங்களுக்கு தெரியவரும்?” அண்ணன் தம்பியின் பிரச்சனை அறிந்து தீர்வு காண முயன்றான்.

“என்னால சொல்ல முடியாத நிலையில இருக்கேன் அருண். நான் செஞ்ச பாவம் என்னை சும்மா விடாது டா” மனம் நிறைந்த வலியுடன் தமையனிடம் கூற,

“எதுக்கும் கவலை படாத விஷ்வா. உனக்கு இந்த அருண் இருக்கேன் டா” ஆறுதல் வார்த்தைகள் கூறி அவனின் தலையை ஆதூரியமாய் கோதிவிட்டான்.

இந்த ஆறுதல் வார்த்தைகள் அவனின் புண்பட்ட மனதிற்கு இதமாய் இருந்தாலும், அதை ஆற்ற வேண்டும் என அவன் எண்ணவில்லை.

அது ஆறாது இருக்கும் வரை தான், தான் செய்த பாவத்திற்கான தண்டனை என்று எண்ணினான். அதனை தூசுதட்டி தூக்கி போட அவனின் தேவதை அவனுக்காக காத்திருக்கிறாள். அவளது பாசத்தில் திக்கு முக்காட போகிறான் என்பது தெரியாமல் சோக கீதம் வாசித்து கொண்டிருக்கிறான்.

விஷ்வா கடந்த காலத்தை நினைத்து ஒரு நிலையில் இல்லை என்று புரிந்து கொண்ட அருண், பேச்சினை மாற்றலானான்.

“அடுத்து என்ன பண்றதா இருக்க விஷ்வா..?” கேள்வியாய் தம்பியை நோக்க,

“இத்தனை வருஷம் நான் தண்டனை அனுபவிக்கிறதா நினைச்சு அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் டா. சோ இனி இங்க தான் இருக்க போறேன். நீ?” பதில் கூறி அவனின் கேள்வியை சடுதியில் அவனுக்கே திருப்பி விட்டான்.

“உண்மையா என்ன பண்றதுன்னே தெரியல. எப்படி டா என்னோட இந்து இருந்த இடத்துக்கு இன்னொரு பொண்ணை கூட்டிட்டு வர முடியும் சொல்லு” அவன் இதனை கூறும்போதே வேதனையின் சுவடுகள் அவன் முகத்தில் தெரிந்தது.

“டேய், உனக்கான வாழ்க்கை இதோட முடியபோறது இல்லையே டா. உனக்காக இல்லன்னாலும் அம்மாக்கிட்ட அண்ணி சொல்லிட்டு போன கடைசி ஆசையை நிறைவேத்தனும் தானே டா. ஒரு கணவனா நீ அதை செஞ்சா தான் அவங்க ஆத்மா சாந்தி அடையும் ” தமையனுக்கு சொல்லி புரிய வைக்க முயல, அவனுமே அதனை ஏற்க தான் இப்போது முயல்கிறான்.

இது உடனடியாக நடக்கின்ற காரியமா என்ன? இதுநாள்வரை அன்னையின் கெஞ்சல்களை ஓரங்கட்டியவன், சாமியார் போல் ஒரு வாழ்க்கையை எந்த ஒரு ஆசை பாசமும் இல்லாமல் வாழ நினைத்திருக்க, இன்று அன்னை பொறிந்து தள்ளியதில் அன்னையை எத்தனை கஷ்டத்திற்கு ஆளாக்கிருக்கோம் என்று புரிந்தது.

அன்னைக்காகவாது மறுமணம் செய்து வாழ நினைத்தாலும், அவனின் கடந்த கால பிரச்சனை இனி எதிர்காலத்திலும் வருமே… இனியொரு துக்கத்தை தாங்கிக்கொள்ளும் அளவிற்கு அவன் மனம் இல்லை. அவனின் மனைவி இறந்த போதே மனம் பலகீனமாகிவிட்டது.

தன் பலகீனத்தை காட்ட விரும்பாது தான் அனைவரிடத்தும் கோபத்தை முகமூடியாக போட்டு அலைந்தான்.

யாருக்குமே அவனது பிரச்சனை தெரியாது என்கிற பொழுது, அவர்களுமே அடுத்து என்னவென்று தான் பார்ப்பார்கள்.

இவனது பிரச்சனை தெரிந்த ஒருவன் விஷ்வா மட்டுமே.

இப்போது அவன் இருக்கும் நிலையை கண்டால் தனக்கு ஒரு நல்ல வழி காட்டுவான் என்று தோன்றவில்லை.

அடுத்த என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் நடுக்காட்டில் வழி தெரியாத பச்சபிள்ளைகள் போல் தத்தளித்தனர்.

இப்படியே இருவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கி விட, அன்றைய நாள் அமைதியாக சென்றது.

அடுத்த நாள் காலையில் விஷ்வா அன்னை முன்பு வந்து நிற்க, அவரோ அவனை கண்டுக்கொள்ளவே இல்லை.

“ம்மா!” வெளியே வராத குரலில் அன்னையை அழைத்தவனின் தலை அவர் முன்பு கவிழ்ந்தது.

“…” இதுநாள்வரை மகன் எடுத்த மௌனத்தை இப்போது அன்னையை எடுத்துக்கொள்ள,

“ம்மா?” குரிலில் அத்தனை கவலைகளையும் தேக்கி வைத்து அழைத்திருந்தான்.

இருவரது பஞ்சாயத்தையும் பார்த்திருந்த கங்காதரன் தான்,” மஞ்சு, விஷ்வா கூப்பிடுறான்ல என்னனென்னு கேளு. இப்படி அமைதியா இருந்தா எப்படி?” அறிவுரை வழங்க,

“எனக்கு காது நல்லாவே கேக்கும்ங்க. விஷயத்தை சொல்லிட்டு கிளம்ப சொல்லுங்க.” கணவனிடம் சொல்ல,

“ம்மா, நான் ஊருக்கு போயிட்டு வந்துடுறேன்.சில…” மகன் சொல்லி முடிப்பதற்குள் இடையிட்ட மஞ்சுளா,” போயிட்டு வந்தறேன்னா நீ என்ன சொல்ல வர.?” கேள்வியாய் புருவ முடிச்சோடு மகனை பார்க்க,

“அங்க இருக்கிற வேலையை விட்டுட்டு, எனக்கு தேவையான ஒன்னு அங்க இருக்கு ம்மா. அதை எடுத்துட்டு வரணும்” சொன்ன மகனை நம்பாத பார்வையோடு நோக்கினார்.

“எனக்கு தெரியுது உங்களை எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்திருக்கேன்னு. அதை என்னால மாத்த முடியாது. ஆனா இனி வரும் காலங்கள்ல என்னைய நான் மாத்திக்க விரும்புறேன் மா. உங்க மகனா இருக்க விரும்புறேன்.” என்று சொன்ன மகனை விழியகலாது பார்த்த மஞ்சுளா எதுவும் பேசாது அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

தந்தை தான்,” போயிட்டு சீக்கிரமா வந்திடு விஷ்வா” கூற தலையசைத்தான் விஷ்வா.

அடுத்த நாளே விஷ்வா லண்டன் சென்றுவிட, அருண் அவனது வேலைகளில் மூழ்கிப் போனான்.

இங்கே அருவியின் குடும்பம் மொத்தமும் தந்தை ஊரில் இல்லாததால், வீட்டு பின்னாடி நெருப்பை மூட்டி குளிருக்கு இதமாக அந்தச் சூழலில் அமர்ந்திருந்தனர்.

பெண்கள் நால்வரும் நெருப்பினை சுற்றி அமர்ந்திருக்க, சூடான வரக்காப்பியோடு பஜ்ஜியை பேசியபடி உண்டனர்.

வரக்காப்பி வாய்க்குள் இறங்க இறங்க, குளிருக்கு அது அவர்களுக்கு சொர்கம் போல் இருந்தது.

இந்த மாதிரி ஒரு சூழல் எல்லாம் கிடைப்பது அறிதோ அறிது. மூர்த்தி குடும்பத்தை தனித்து விட்டு செல்வது என்பது நடக்காத ஒரு காரியம். ஆங்கிலேயரிடமிருந்து கூட எப்படியோ இந்தியா சுதந்திரத்தை பெற்றது. ஆனால் இவரிடமிருந்து அவர்களுக்கு சுதந்திரம் என்பது நிலவை தொட்டு விடும் தூரத்தில்.

சந்தானமூர்த்தி ஆந்தை போல் எப்போதும் குடும்பத்தை நோட்டம் விட்டுக்கொண்டே தான் இருப்பார். முதலிலே அப்படி தான் இருப்பார். எப்போது அருவி பிரச்சனை வந்ததோ அன்றிலிருந்தே இருபத்தி நாலு மணி நேரமும் குடும்பத்தின் மீது தான் பார்வை.

அது தெரிந்தாலும் அங்கிருந்த யாரும் அதற்காக கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவரிடம் நின்று பேசி ஒவ்வொன்றையும் புரிய வைப்பதற்கு, கடந்து செல்லலாம் என்று அவரை கடந்து விடுகின்றனர்.

இது அறியாத அவரோ, தனக்கு பயந்து தான் செல்கின்றனர் என்று மீசையை முறுக்கி பெருமிதம் கொள்வார்.

“ம்மா! நான் ஒன்னு கேக்கலாமா?” விழி அன்னையிடம் தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள எண்ணி கேட்க,

“ம்ம், கேளு விழி”அன்னை பஜ்ஜியை சுட்டவரே சொல்ல,

“அப்பா ஏன் ம்மா இப்படி இருக்காரு?அவருனால தான நமக்கு இத்தனை கஷ்டம். ஏன் அது அவருக்கு புரியமாட்டேங்கிது?” விழி கேட்க அருவி அமைதியாக நிலவை பார்த்த படியே தன் மடியில் படுத்து அவர்கள் பேசும் கதையை கேட்டுக்கொண்டிருந்த மதியின் தலையை கோதியவாறு இருந்தாள்.

“என்னத்த சொல்ல விழி. இவரு இப்படி இருக்க காரணமே உங்க பாட்டி தான். அவங்க தான் உங்க அப்பா இப்படி இருக்க காரணமே.”

” பாட்டி என்ன ம்மா பண்ணுச்சி?”

“இவரு அப்படியே அவங்க அம்மா மாதிரி. அவங்க அவரு கிட்ட நமக்கு கீழ தான் எல்லாரும் இருக்கனும்னு சொல்லி சொல்லியே வளர்த்துருக்காங்க. இதுல எனக்கும் அவருக்கும் கல்யாணமாகி கொஞ்ச நாள்ளையே நான் கர்பம் ஆகிட, பையன் தான் வேணும்னு அவரும் அவங்களும் எதிர்பார்க்க, அருவி வந்து பொறக்கவும், அவங்க ரெண்டு பேருக்கும் அருவிய பிடிக்காம போயிடுச்சி. இதுல அடுத்தடுத்தும் பெண் பிள்ளைகளே பிறக்கவும் ரெண்டு பேருக்கும் கோவம். பெண் பிள்ளைகளே பிடிக்காத அவருக்கு மூணுமே பொண்ணுங்களா பிறக்கவும் அத அவராள ஏத்துக்க முடில. அந்த கோவத்தை நம்ம மேல காட்டிட்டு இருக்காரு” என்று சொல்லவும், விழிக்கு இவர்கள் என்ன மாதிரியான மனிதர்கள் என்று அருவருத்து போனாள்.

இப்படியே ஏதேதோ கதை பேசி நேரத்தை கழித்திட, நடு நேரம் போல் தான்

உறங்கவே சென்றனர்.

இப்படியே ஒருவாரம் கழிந்துவிட, அடுத்த நாள் வீட்டிற்கு வந்த சந்தானமூர்த்தி கூட அமைதியாக இருந்தார்.

இவரது அமைதி சந்திராவை யோசனைக்குள் இழுத்து சென்றது.

விஷ்வாவும் சொன்ன படியே ஒருவாரத்தில் குன்னூர் திரும்பி இருந்தான். மஞ்சுளாவிற்கு இது சற்று நிம்மதியை கொடுத்திருந்தது. அது முழுமையாக வேண்டுமென்றால் அது அருணின் கையில் தான் உள்ளது.

இது நடந்து ஒருவாரத்தை கடந்திருந்தாலும், அருண் இன்னும் ஏதும் கூறாது வேலை வேலை என ஓடிக்கொண்டிருந்தான்.

இது சீசன் டைம் என்பதால், சாக்லேட் பேக்டரியிலே அதிக நேரத்தை செலவழித்தான். இதில் பள்ளிக்கு கூட போக முடியாமல் போக, ஜீவாவிடம் தன் பொறுப்பின்னை ஒப்படைத்திருந்தான்.

விஷ்வா வந்ததுமே ஜீவாவோடு சேர்ந்து அவனது பொறுப்பை தட்டி கழிக்காமல் எடுத்துக்கொண்டான். இந்த மாற்றமே குடும்பத்திற்கு சிறிதளவு சந்தோசத்தை கொடுத்திருந்தது.

முதல் நாள் பள்ளிக்கு வந்த விஷ்வாவை ஜீவா அறிமுக படுத்த நினைக்க, அதை தடுத்து வேண்டாமென்றான்.

“ஏன் வேணாம்னு சொல்ற அண்ணா?” ஜீவா புரியாது கேட்க,

“இவளோ நாள் நான் இங்க இல்ல ஜீவா. எனக்கு நம்ம ஸ்கூலோட எத்திக்ஸ் எதுவும் தெரியல. முதல அத தெரிஞ்சிப்போம்,அதுவும் இல்லாம இவங்களோட ஒருத்தனா நான் இருந்தா தான், ஸ்கூல்ல பத்தி இங்க வேலை பாக்குறவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்க முடியும் டா. சோ இப்போதைக்கு வேணாம்.” நிதானமாக சொல்லியவன் ஜீவாவை பார்க்க அவனோ குழப்பத்துடன் அவனை பார்த்திருந்தான்.

“என்ன டா?”

“கண்டிப்பா இப்படி தான் பண்ணனுமா?” கேள்வியோடு அவனை பார்க்க,

“நான் ஏதாவது அவசரத்துல செய்ய போய் அது ஸ்கூலுக்கு பிரச்னையை கொண்டு வரக்கூடாது பாரு. இந்த ஸ்கூல் அப்பா அம்மாக்கு ரொம்ப முக்கியமானது டா. அதுல எந்த தப்பும் நடந்திட கூடாது. அதான்” தன் விளக்கத்தை கொடுத்தவன் ஸ்கூலை ஒருமுறை பார்வையிட்டு வந்தான்.

விஷ்வாவை பார்த்த சில இளம் பெண் ஆசிரியர்கள் அவனை ஜொள்ளுவிட்டனர். அவனின் தேகம் அவர்களை ஈர்த்திருந்தது. ஆனால் அவன் கண்ணிற்கு அவர்கள் யாரும் தெரியப்போவதில்லை.

விஷ்வா மேனேஜ்மெண்ட் எடுத்து படித்திருந்ததால், மேனேஜ்மெண்ட் லைனில் இருந்துகொண்டான்.

இதனாலே அருவியோ விஷ்வாவோ பார்க்க இடமில்லாமல் போனது. ஆனால் அவனை பற்றின பேச்சுக்கள் அவள் காதினுள் விழ தான் செய்தது. எதையும் பெரிதாக எடுத்து கொள்ளாதவள் இதனையும் ஒதுக்கி வைத்தாள்.

இந்த நிலையில் பள்ளியிலிருந்து மாணவ மாணவிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்திருக்க, அவர்களுக்கு துணைக்கு என சில ஆசிரியர்களை நியமித்து இருந்தனர். அதில் அருவியும் ஒருவள்.

சந்தானமூர்த்தி, இதற்கு என்ன சொல்லுவாரோ என்று அருவி பயந்திருக்க, அதெல்லாம் அவசியமே இல்லை என்பதுபோல் நடந்துகொண்டார்.

‘போயிட்டு வா’ சொல்லி அவளுக்கு அனுமதி தந்திருந்தார். இதில் பூவினி தான் நானும் அன்னையோடு போவேன் என்று அடம்பிடிக்க தவித்து போனாள் அருவி.

மகளை எவ்வளவோ சமாதானம் செய்து பார்க்க, குழந்தையோ முரண்டு பிடித்தது.

இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்தது சுற்றுலா செல்வதற்கு. தான் வரவில்லை என்று எவ்வளவு கூறியும், நீ வந்தே ஆகணும் என்று ஆசியர்கள் சொல்லிவிட்டனர்.

மகளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் குழம்பி போன மனநிலையுடன் அவளது இருக்கையில் அமர்ந்திருக்க, அந்த நேரம் பார்த்து அருண் அங்கே வருகை தந்திருந்தான்.

“என்ன மிஸ்.தேனருவி யோசனை எல்லாம் பலமா இருக்கும் போலையே?” கேள்வியோடே உள்ளே வர, அருணை கண்டதும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள்.

“அப்டிலாம் ஒன்னும் இல்ல சார். சும்மா தான் உட்காந்து இருந்தேன்”என்று அவள் சொல்ல,

“ஹோ…சரி… அப்றம் டூர் போக எல்லாம் ரெடியா?”

“ம்ம் சார்” ஏதோ போல் சொல்ல, அவளது முகம் சிறிது சோகத்தை தத்தெடுத்திருக்க, அதை கண்டு கொண்டவன் என்னவென்று கேட்டான்.

“என்ன பிரச்சனை?”

“அது அம்முவும் கூட வருவேன்னு ரொம்ப அடம் பிடிக்குறா. எவ்வளோ எடுத்து சொல்லியும் கேக்க மாட்டேங்கிறா. அதான் என்ன பண்றதுன்னு தெரியாம முழி பிதுங்கி போய் இருக்கேன்” தன் கவலைக்கான காரணத்தை சொல்ல,

“அவளோ தான.நான் கூட ஏதோவோன்னு பயந்துட்டேன். வெரி சிம்பிள் பாப்புவையும் கூட்டிட்டு போங்க டீச்சர் அம்மா” கிண்டலாக மொழிந்தாலும் அதில் கூட்டிட்டு போ என்ற கட்டளையும் இருந்தது.

“அது…” அருவி இழுக்க, “நோ அது… இது… கூட்டிட்டு போங்க தட்ஸ் இட்” சொல்லி அங்கிருந்து சென்று விட, இதனை இரு கண்கள் பார்த்து விட்டு புருவங்கள் இரண்டும் இடுங்கியது.

மதியம் போல் சிட்டவுட்டில் ஒரு தேவதை சோகமான முகத்தோடு அமர்ந்திருக்க, அருண் வந்திருக்கான் என்று அறிந்த விஷ்வா அவனை காண வந்தவன், குட்டி தேவதையை பார்த்தவனின் கால்கள் தானாக குழந்தையை நோக்கி சென்றது.

குழந்தை பக்கத்தில் அமர்ந்த விஷ்வா,” பேபி ஏன் சோகமா இருக்கீங்க?” அவளை பார்த்தவாறு குனிந்து ஒற்றை கன்னத்து குழியுடன் புன்னகைத்தவாறு கேட்டான்.

விஷ்வாவை திரும்பி பார்த்த பூவினி,முகத்தை திருப்பிக்கொண்டாள்.

‘பார்டா!’ சிரிப்பு வந்தது அவனுக்கு குழந்தையின் செயலில்.

“பேபி!”அழைக்க,

“நான் பேபி இல்ல. மை நேம் இஸ் பூவினி” அன்று காலை அவளுக்கு எப்படி தன்னை அறிமுகம் படுத்த வேண்டும் என்று ஆசிரியர் சொல்லி கொடுத்திருக்க, அதை இவனிடம் தான் பயின்றதை இங்கு சொன்னாள்.

“பேபி நேம் பூவினியா… அழகான பேரா இருக்கே” சொல்லி புன்னகைக்க, அதில் குழந்தை குஷியானது.

“எங்க மம்மி தான் வச்சாங்க.”அழகாய் புன்னகைக்க, அந்த புன்னகையில் ஆணவன் வீழ்ந்தான்.

ஏனோ குழந்தையுடன் பேசும்போது இதுநாள்வரை இருந்த தனிமை உணர்வு இல்லாது போனது போல் ஒரு உணர்வு.

“ஏன் பேபி சோகமா இருக்காங்க?”

“அது மம்மி என்னைய டூருக்கு கூட்டிட்டு போ மாதேன்னு சொல்லித்தாங்க” முகம் சுருக்கி கவலையோடு கூற,

“அம்மா ஏன் வேணாம்னு சொன்னாங்க?”

“அது… அது… தெர்லயே. மம்மி சொல்லல” குழந்தை இதழ் பிதுக்கி சொல்ல,

“அச்சச்சோ, அம்மாக்கு கஷ்டமா இருக்கும் டா. உன்னையும் பார்க்கணும் மத்த குழந்தைகளையும் பார்க்கணும்ல. உன்கூட அவங்களால டைம் கூட ஸ்பென்ட் பண்ண முடியாது. பாவம் தான உங்க அம்மா.” குழந்தைக்கு ஏதுவாக சொல்லி புரிய வைக்க முயல,

“மம்மி பாவம்”பாவம் போல் முகத்தை வைத்தாள்.

‘சோ ஸ்வீட்…’உள்ளுக்குள் குழந்தையை கொஞ்சினான்.

“ஆமா.அம்மா வேணா போகட்டும். நாம இங்க தனியா ஒரு டூர் போலாம் ஒகே வா பேபி.”

மலர்ந்த முகத்துடன் அவனை நேரிட்ட பூவினி,” நிஜமா..?” ஆவலுடன் கேட்க,

“பிங்கி ப்ரோமிஸ் பேபி. நாம போலாம்” என்றதும் குழந்தை சந்தோசத்தில் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு ஈரப்படுத்தியது.

குழந்தையின் இந்த எதிர் பார அன்பளிப்பில் நெஞ்சம் நெகிழ்ந்து போனான் விஷ்வா. சொல்ல முடியா சந்தோஷம் அவனை ஆட்கொள்ள, அதை கலைக்கும் விதமாக பூவினியை அழைத்தபடி வந்து சேர்ந்தாள் அகல்விழி.

அவளை பார்த்தவனின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்து கொண்டது.