மோகனங்கள் பேசுதடி!08

eiL5KAD79398-fbd58620

மோகனம் 08

குழந்தை முத்தமிட்ட இடத்தைத் தொட்டு பார்த்தவனுக்கு உடல் ஏனோ சிலிர்த்து அடங்கியது.

குழந்தையின் இந்த ஒற்றை முத்தம் அவனின் இத்தனை கால வலிக்கு ஒரு வடிகாலாக அமைந்திருந்தது.

முத்தம் காமத்தை சேர்ந்தது மட்டுமல்ல. அது அன்பின் வெளிப்பாடு… விலை மதிப்பில்லா பொக்கிஷம்… அதுவும் குழந்தைகளின் முத்தம் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்ததற்கு சமம்…

இந்த முத்தம் விஷ்வாவை ஒரேயடியாகக் குழந்தையின் புறம் சாய்த்திருந்தது.

குழந்தையைப் பார்த்ததிலிருந்தே அவனுக்குள் ஏதோ ஒருவித பரவசம். சொல்லத் தெரியவில்லை. குழந்தையின் பேச்சு அவனுக்குத் தேனாய் பாய்ந்தது.

அதுவும் குழந்தையின் பெயர் அவனை அசைத்தது. அவனிற்கு பூக்கள் என்றால் பிடித்தமான ஒன்று. அந்தப் பூவிலே குழந்தையின் பெயர் தொடங்கியிருக்க, குழந்தையை நோக்கியே மனம் செல்ல மனதினுள்ளே குழந்தையைக் கொஞ்சினான்.

அடுத்த கன்னத்தைக் காட்டி ‘இங்கொரு முத்தம்’ என்று கேட்பதற்குள், “அம்மு” அழைத்தப்படி அவர்களை நோக்கி வந்தாள் அகல்விழி.

குரல் வந்த திசையைக் கண்டவனது விழிகள் அதிர்ச்சியிலும் ஆச்சிரியத்திலும் பெரிதாக விரிந்து விட, தானாக அவனது இதழ்கள் அவளின் பெயரை முணுமுணுத்தது.

யாரோ ஒருவருடன் பூவினி இருப்பதை கண்டு வேக நடையுடன் வந்த விழி, குழந்தை பக்கத்தில் வர வர கால்கள் தானாக நடையை நிறுத்தியது.

அவளது விழிகள் அவனைக் கண்டு கோபத்தில் சிவந்து போனது.

கோபமாக அவர்கள் பக்கத்தில் வந்தவள், விஷ்வாவை கண்டுக்கொள்ளாது பூவினியை அழைத்துக் கொண்டு செல்லப் பார்க்க, அவர்களைத் தடுத்து நிறுத்தலானான் விஷ்வா.

“அகல் மா” விஷ்வாவின் இந்த அழைப்பில் ஒரு நொடி அப்படியே திகைப்பில் நின்றவள், திரும்பிப் பாராது நடக்கத் தொடங்கினாள்.

“அகல் மா!” ஓடிவந்து அவர்கள் முன்பு மூச்சு வாங்க நின்றான்.

அவனைக் காண பிடிக்காது முகத்தைத் திருப்பிக் கொள்ள, “அகல் மா!எப்படி இருக்க டா?” பாசத்துடன் வினவ,

அவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டவள்,”ஹோ, என்னை எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா. நான் கூட மறந்துருப்பீங்கன்னு நினைச்சேன்” காரமாய் வெளிவந்தது அவள் வார்த்தைகள்.

“அகல்!” கன்னத்தில் கை வைத்தவாறே கூப்பிட,

“அப்படி கூப்பிடாதீங்க. உங்களுக்கு உங்களோட காதல் தான் முக்கியம்னு போனீங்கள. அப்பறம் எதுக்கு என்கிட்ட பேசுறீங்க. போங்க… போங்க… உங்க காதலிக்கிட்டயே போய்ப் பேசுங்க. எனக்கு நீங்க வேணாம்.” வீராப்புடன் ஆரம்பித்தவள் கடைசியில் விசும்பலுடன் முடித்திருந்தாள்.

குழந்தை இருவரையும் மாத்தி மாத்தி பார்த்துவிட்டு, விளையாட ஓடிவிட்டது.

“அகல் மா! சாரி டா …கண்ணைத் தொடசிக்கோ “அவனது கைக்குட்டையை தர, வாங்க மறுத்தவள் தன் சுடிதார் ஷாலை கொண்டு கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“என்னோட குட்டி ப்ரேவ் கேர்ள் அழுகலாமா?” சமாதான படுத்த முயல, அவனை முறைத்து வைத்தவள்,”ஏன் இந்த அழுகை கூட உங்க காதலிக்குத் தான் வரணுமோ. ஏன் தைரியமான பொண்ணா இருந்தா எங்களுக்கு எல்லாம் கண்ணீர் வரக் கூடாதா.என்னங்கடா லாஜிக் இது?” முறைப்புடனே அவனை வறுத்தெடுக்க தயார் நிலையில் இருந்தாள்.

“ஷ், அகல் மா என்ன இது வார்த்தைக்கு வார்த்தைக்குக் காதலின்னு சொல்ற, அருவி இப்போ இன்னோருத்தனோட மனைவி. இப்படிலாம் பேசக் கூடாது ரொம்ப தப்பு.” அதட்டலுடன் வார்த்தைகள் வெளி வந்தாலும் அதில் அவன் அருவி மீது வைத்திருந்த அன்பை விழியால் உணர முடிந்தது.

அவனது அதட்டலில் விழிக்கு அப்படியொரு சிரிப்பு.வெடிக்க மாட்டாது சிரிக்க, விஷ்வா குழப்பத்துடன் அவளை ஏறிட்டான்.

“இப்போ இந்தச் சிரிப்பு எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“ஹோ, தெரிஞ்சிக்கலாமே. அதுக்கு முன்னாடி அந்தக் குழந்தை யாருன்னு நீங்கத் தெரிஞ்சிக்க வேணாமா?” விளையாடும் குழந்தையைக் கை காட்டி கேட்க,

குழந்தை பூவினியை பார்த்ததும் இதழ்கள் தானாக மலர்ந்தது.

“ஆமா யாரோட பேபி? பேபி ரொம்ப க்யூட். அழகா பேசிறா அப்படியே தூக்கிட்டு போகலாம்னு தோணுச்சு. ஏனோ பேபிய பாக்கும்போது ஒரு புது விதமான பீல்… எனக்குச் சரியா சொல்லத் தெர்ல “புன்னகை மாறாது விஷ்வா சொல்ல, விழி அவனைத் தான் பார்த்திருந்தாள்.

“பூவினி…உங்க அருவியோட பொண்ணு” என்றதும் அவனின் விழிகள் கண்ணீரை தத்தெடுக்க, விழிகள் குழந்தையையே பார்த்து மனதில் நிறைத்தது.

“அரு…அரு…அருவியோட குழந்தையா?” ஒரு வித சந்தோசத்தில் வார்த்தைகள் வெளி வர மறுத்திட, எப்படியோ திக்கி திணறிக் கேட்டுவிட்டான்.

“ஆமா, ஆனா ரொம்ப சந்தோஷப்படாதீங்க. அவளோட சந்தோஷத்த நாலு வருஷத்துக்கு முன்னாடி நீங்க எடுத்துட்டு போய்ட்டு, இப்போ அவளுக்காகச் சந்தோஷப்படுறீங்களா?” முகத்தைச் சுருக்கி காரசாரமாய் மொழிந்திட,

“நான் என்ன பண்ணேன்?” புரியாது ஆணவன் முழிக்க,

“என்ன பண்ணலையா?அவ போகச் சொன்னான்னு இத்தன வருஷமா ஓடி ஒளிஞ்சிகிட்டவறு தான நீங்க?உங்களால தான் அவ அத்தனை கஷ்டத்தையும் அனுபவிச்சா… இல்ல அனுபவிக்குறா.”

“என்ன சொல்ற அகல் மா? அருவி சந்தோஷமா இருக்கட்டும்னு தானே நான் அவ கண்ணுல படாம ஒளிஞ்சு வாழுறேன்.”விஷ்வா அப்படி சொன்னது தான் தாமதம் அவனின் சட்டை காலரை கொத்தாகப் பிடித்திருந்தாள்.

“ஏன் அவளை விட்டுட்டு போனீங்க? ஏன் போனீங்க? அவள பத்தி தெரிஞ்ச நீங்க அவளைக் காப்பாத்திருக்கலாமே. எதுக்கு அவளை வேற ஒருத்தனுக்கு விட்டுக் கொடுத்தீங்க.என்கிட்ட சொல்லத் தெரிஞ்ச உங்க காதலை ஏன் அவ கிட்ட சொல்லாம போனீங்க. ஐ ஹேட் யூ “அவளின் நிதானத்தை முற்றிலுமாக இழந்திருக்க, படப் படப் பட்டாசாய் பொரிந்து தள்ளினாள்.

“அகல் காம் டவ்ன் டா” பொறுமையாய் அவளின் கைகளிலிருந்து தனது சட்டையைப் பிரித்தெடுத்தான்.

“என்ன காம் டவ்ன்… பேசவேண்டிய நேரத்துல யாரும் பேசுறது இல்ல.ஆனா என்ன மட்டும் கண்ட்ரோல் பண்ண பாக்குறீங்க. எனக்கு உங்க ரெண்டு பேரையுமே புடிக்கல.” குழந்தை போல் அவள் மூக்கு விடைக்கப் பேசிக்கொண்டே போக, சிரித்த முகத்தோடு அவளைப் பார்த்திருந்தான்.

“போதுமடா உன் கோபம். என்னோட அகல் மா இப்டி கோப படலாமா. முதல என்ன நடந்துச்சின்னு சொல்லு. எனக்குத் தலையும் புரியல வாழும் புரியல. அருவி சந்தோசமா இருப்பான்னு தான் நான் இத்தனை வருஷமா நினைச்சுட்டு இருந்தேன். ஆனா நீ ரியாக்ட் பண்றத பார்த்தா, ஏதோ சரியில்லன்னு தோணுது” அருவியின் வாழ்வில் அப்படி என்ன குழப்பம் நடந்திருக்கும் இப்படி அகல்விழி கொதித்து போகும் அளவிற்கு. அப்போது கூட அவர்களுக்குள் ஏதோ சண்டையெனத் தான் அவன் நினைத்திருந்தான். அவர்கள் இருவருக்கும் டிவோர்ஸ் ஆகி இருக்கும் என்று விஷ்வா எண்ணவில்லை.

“முடியாது…” முரண்டு பிடிக்க, சிறு குழந்தையாகத் தான் தோன்றினாள்.

“சரி, ஐஸ் கிரீம் வாங்கி தரேன் வா” என்று சொல்ல, குஷியாகினாள் அகல்விழி.

பின்னர் இருவரும் பூவினியை அழைத்துக் கொண்டு ஐஸ் கிரீம் பாலர் சென்றனர்.

ஐஸ் கிரீம் சாப்பிட்டபடியே அவளுக்குத் தெரிந்த விவரத்தைக் கூறி, இறுதியில்”பூவினிக்கு உங்கள மாதிரி ஒரு அப்பா கண்டிப்பா வேணும். இனி அருவிய நினைச்சு பிரிஞ்சு இருக்காம, அவளோட சந்தோசமான ஒரு வாழ்க்கைய வாழப் பாருங்க. உங்க காதல புரிய வைங்க மிஸ்டர். விஷ்வப்ரசாத். அப்புறம் அவ அங்க தான் ஒர்க் பண்றா பார்த்துக்கோங்க” பெரிய மனுஷியாய் கூறி குழந்தையுடன் கிளம்பிவிட்டாள்.

அவள் சென்றதும் அங்கேயே அமர்ந்து இருந்தவனுக்கு ஏனோ இதயம் கனத்தது போலான ஓர் உணர்வு. தன் அருவிக்கு இத்தனை கொடுமைகள் நடந்திருக்கிறது என்று தெரிந்ததும், அவன் மனம் சுக்கு நூறாய் உடைந்தது.

பூவைப் போன்ற மென்மையான மனம் கொண்ட அவளுக்கு ஏன் இத்தனை கொடுமைகள் நடந்தன. நினைக்க நினைக்கத் தன் மீதே ஆத்திரம் பொங்கியது. இப்படியொரு சூழ்நிலைக்கு நானே அவளைக் கொண்டு சென்று விட்டேனே. எத்தனை கஷ்டத்தை அனுபவித்திருப்பாள். ஐயோ கடவுளே ஏன் என் அருவிக்கு மட்டும் இத்தனை கொடுமைகள் நடந்தன என உள்ளுக்குள் கதறினான்.

எவ்வளவு நேரம் அங்கேயே அமர்த்திருந்தானோ, ஜீவாவின் அழைப்பில் தான் நிதானத்திற்கே வந்திருந்தான்.

*****

வேலை முடித்து வீடு திரும்பிய அருவி, மகளைக் காண செல்ல, அவளோ விழியுடனும் மதியுடனும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.

அன்னையை பார்த்ததும் குழந்தை ஓடி வந்து அருவியைக் கட்டிக்கொண்டது.

“அம்மா இன்னைக்கு எனக்கு ஸ்கூல்ல அது சொல்லிக்குடுத்தாங்க மா” என அன்னையிடம் கதைக்கதையாய் அளக்க, ஆசையுடன் கேட்டிருந்தாள் அருவி.

அவளைப் பார்த்த விழிக்கு அக்காளின் வாழ்க்கையில் இனி வசந்தத்தை கொண்டு வர விஷ்வா உள்ளான் என்று நினைக்கவே மனம் ஒரு வித நிம்மதியை அடைந்தது.

இவள் இங்கு நிம்மதியாய் இருக்க, அங்கே விஷ்வா அவனது வீட்டில் இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் தொலைத்திருந்தான்.

“அம்முக்கு மம்மி மேல இருந்த கோபம் போய்டுச்சா?”குழந்தையைப் பார்க்க,

“போச்சே மம்மி… இப்போ பேபி ஹாப்பி” குதுகலத்துடன் குழந்தை சொல்லவும் ஆச்சரியமானாள் அருவி.

“காலைல கூட அம்மு கோவமால இருந்தாங்க. அப்படி தான விழி?” தமக்கையை கூட்டு சேர்த்துக்கொள்ள, அவளும் அக்காளுக்கு ஏற்றவாறு ஆமா சாமி போட்டாள்.

“மார்னிங் பேபி கோபமா தான் இருந்தா. மம்மி பாவம்ல உங்களால என்ன பார்க்கக் கூட முடியாது. சோ பேபி மம்மி கூட டூர் வரல” பெரிய மனுஷியாய் பூவினி சொல்லி ஓடிவிட, ஆவென பிள்ளையைப் பார்த்திருந்தாள் அருவி.

“என் பொண்ணா இது?இத்தனை நாள் பேசாம பிளுக்கு காட்டிட்டு இருந்துட்டு இன்னைக்கு என்ன வரலன்னு சொல்லிட்டு போறா”போகும் மகளைப் பார்த்தவாறே தங்கையிடம் புலம்ப,

“மாற்றம் ஒன்றே மாறாது அக்கா…”சொல்லிக் கண்ணடித்து சென்றாள்.

“இவளுக்கு என்ன ஆச்சி? ஒன்னும் புரியலடா சாமி” புலம்பியவாறே அவளது அறை நோக்கிப் போய்விட்டாள்.

அடுத்த நாள் மாலை அருவி சுற்றுலா கிளம்பி விட, அவளது மகளோ ஊரைச் சுற்றி பார்க்க ஆசைகொண்டாள்.

மதியம் போல் அவனுக்காகப் பூவினி காத்திருக்க, குழந்தையைக் காண ஓடோடி வந்துவிட்டான்.

‘எப்போது டா பிள்ளையைப் பாப்போம்’ என்று ஒரே நாளில் ஏங்கிப்போய்விட்டான்.

இனி குழந்தைக்காக அருவியைக் கூட எதிர்த்து நிற்கத் தயாராகிவிட்டான். ஒரு கை பார்க்காமல் விடப் போறதில்லை ஸ்திரமாக முடிவெடுத்துவிட்டான்.

“பேபி!” மூச்சு வாங்க குழந்தையை அழைக்க,

“பேபி கோவம்” சொல்லி முகத்தைக் கோபமாய் வைத்துக்கொண்டாள்.

“அச்சோ, பேபிக்கு ஏன் கோபம்?”

“லேட்” ஒருவரி பதில் கூறி, அவனை முறைத்தாள்.

“அச்சோ, செல்லத்த பார்க்கத் தான் ஓடிவந்தேன்.கால் எல்லாம் வலிக்குது” பாவமாய் முகம் வைத்துக் குழந்தையிடம் சொல்லி, காலைத் தேய்ப்பது போல் செய்கை காட்ட, குழந்தை அவன் முகத்தை ஏறிட்டது.

“வலிக்குதா, ஆய்மன்த் போது சரியா போய்டும். மம்மி போதுவாங்க” பூவினி முடிக்கவும், விஷ்வாவின் மனதிற்குள் வலி எடுத்தது.

குழந்தை தன் முகத்தைப் பார்ப்பதை உணர்ந்து கொண்டவன், முகத்தைப் புன்னகைக்கு மாற்றலானான்.

“பேபி சொல்லிட்டா அப்போ செஞ்சிட வேண்டியது தான்…”சொல்லித் தம்சப் காட்ட, கன்னக்குழி விழ அழகாய் புன்னகைத்தாள்.

குழந்தையின் கள்ளம் கபடமில்லாத புன்னகை, விஷ்வாவின் அந்த நேர வலியை மறைக்க உதவியது.

“நான் உங்கள எப்படி கூப்பிதுறது?”பூவினி வினவ,

நொடி தாமதிக்காது பதில் கூறினான் விஷ்வா.

“சீனியர்…”

“சீனிஅர்… நல்லா இருக்கு”சொல்லிக் கிளுக்கி சிரித்தாள்.

அன்றைய தினம் அவன் கூறியது போலவே குழந்தையோடு ஊரைச் சுற்றி வளம் வந்தான். வெகுநாட்களுக்குப் பின்னான இந்த ஊர் சுற்றுதல் விஷ்வாவிற்கு பிடித்திருந்தது. மகளின் சந்தோஷத்தில் இவனும் மகிழ்ந்தான்.

ஆம் ‘இவள் என் மகள்’என மனதோடு முடிவெடுத்து விட்டான். அருவிக்காகக் கூட இந்தப் பந்தத்தை இனி விடப் போறதில்லை.

காதலுக்காக அருவியை விலகியவன், வரும் காலங்களில் ஒரு தந்தையாக அவளை நெருங்கப் போகிறான்… அவனின் மோகனங்கள் இனி பேசும்.