மோகனங்கள் பேசுதடி!09

eiL5KAD79398-e690e6ba

மோகனம் 09

மாலை வீட்டிற்கு வந்த அருவிக்கு நிலைக்கொள்ளவே முடியவில்லை. விஷ்வாவை கண்டது ஒருவித அதிர்ச்சி என்றாலும் அவனிடமிருந்து பிரித்துக் கூட்டி வந்ததற்காகத் தன்னிடமே சண்டைக்கு நிற்கும் மகள் மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தாள்.

விஷ்வாக்கு எப்படி தன் மகளைத் தெரிய வந்தது. இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது என்ன புதிதாகப் பிரச்சனையைக் கிளப்ப வந்திருக்கிறான் என்று தெரியவில்லை.

அன்று என் நம்பிக்கையைக் காட்டி என் மனதை உடைத்தான். இப்போது என் மகளா?

இல்லை இன்னொரு முறை அவனிடம் தான் அசிங்கப்பட்டு தலைகவிழ்ந்து நிற்கக் கூடாது என்று ஸ்திரமாக முடிவெடுத்தாள்.

அருவி என்ற அமைதியான பொண்ணை விஷ்வாவும் மூர்த்தியும் சேர்ந்து சூறாவளியாய் மாற்ற முயற்சி செய்கின்றனர்.

வீட்டிற்கு வந்த அருவி அமைதியாய் அவளது அறையிலிருந்து கொண்டாள்.

எங்கே தான் வெடித்து விடுமோ என்று பயந்து அறைக்குள்ளே ஒடுங்கி கொள்ள, வெளியே இருந்த குழந்தை பூவினியோ மகிழ்ச்சியுடன் விஷ்வாவிடம் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள்.

அருவி விஷ்வா பற்றின யோசனையில் சுழன்று கொண்டிருக்க, அவளை மேலும் கோபமேற்றும் அளவிற்கு அவளின் மகள் செயல் இருந்தன.

“மம்மி!” அழைத்தப்படி ஆரவாரத்துடன் ஓடி வர,

“என்ன அம்மு?”கோபத்தை மறைத்து அமைதியான குரலில் கேட்கவே,” மம்மி இந்தா” என ஃபோனை அவளிடம் நீட்டியது குழந்தை.

குழப்பத்துடனே மொபைலை வாங்கிய அருவியிடம்,” மம்மி சீனிஅர் பேசுதாங்க… உன்கித்த கொடுக்கச் சொன்னாரு” சொல்லிப் புன்னகைக்க, அருவிக்குப் பற்றிக்கொண்டு வந்தது அவள் அழைத்த அழைப்பில்…

“அம்மு… அந்த பேர் சொல்லிக் கூப்பிடாத. எனக்கு அது பிடிக்கல” எரிச்சலுடன் மகளிடம் சொல்ல,

“எனக்குப் பிடிச்சிருக்கு மம்மி…சீனி…அர்… சீனிஅர்” சொல்லிச் சொல்லிப் புன்னகைத்து வெறுப்பேற்றவும் அருவிக்குக் காதில் புகை வராத குறை தான்.

“சொல்லாத சொல்றேன்ல அம்மு. மீறி சொன்னா என்ன அர்த்தம். வர வர நீ என் பேச்சைக் கேக்குறதே இல்ல அம்மு.” குறையாய் சொல்ல, மகளுக்கு எங்கே அவள் கூற வருவது புரிய போகுது.

“இனி அவங்க கூடப் பேசுறதை பார்த்தேன். உதை விழும் அம்மு” அருவி முறைப்பாய் சொல்ல, குழந்தை அம்மாவின் திட்டலில் அழுகைக்கு தயாரானது.

“அருவி…”அதட்டலான குரலில் எங்கிருந்தோ அழைப்பு வர, பெண்ணவள் ஒரு நொடி அந்த குரலில் ஸ்தம்பித்தாள்.

பின்னே, அது அலைப்பேசியிலிருந்து வந்தது தெரியவர, ஆத்திரமாக வந்தது.

“உனக்கு எப்படி நம்பர் கிடை …”சொல்லி முடிப்பதற்குள் அது யாரோட வேலை என்ன புரிந்து விட பல்லைக் கடித்தாள்.

“நீ எதுக்கு இங்க போன் பண்ணி பேசிட்டு இருக்க? உன்னால நான் பட்ட பாடு போதும்” அவள் பேச, அதைக் கண்டுகொள்ளாத விஷ்வா,”ஜூனியர்” என்றழைக்க, அழுகைக்கு தயார் நிலையில் இருந்த குழந்தை அவனின் இந்த அழைப்பில் குட்டி சிரித்தது.

“சீனிஅர்…” முகம் கொள்ளா புன்னகையுடன் அழைக்க,

“நீங்க விழி சித்தி கூட இருங்க நான் மம்மி கிட்ட கொஞ்சம் பேசிட்டு உங்ககிட்ட பேசுறேன்” சொல்லக் குழந்தை சரி என்று வெளியே ஓடிவிட்டது.

“இங்க நான் பேசுறது உன் காதுலையே விழுகலையா என்ன?” கூப்பாடு போடாத குறையாக அவள் கத்த,

“அருவி…”அழுத்தமாய் அழைத்தவன்,” இனி நம்ம பொண்ண அதட்டி பேசாத அருவி. பாரு குழந்தை எப்படி பயப்படுறான்னு. எதுவா இருந்தாலும் பொறுமையா சொல்லு பாப்பா புரிஞ்சிப்பா. இப்படி உங்கப்பன் மாதிரி வள்ளு வள்ளுன்னு வில்லாத அருவி” பொறுமையாய் அவளுக்கு எடுத்துச் சொல்ல,

“அத சொல்ல நீ யாரு?”

“என் பொண்ணுக்கு அப்பா…”சொல்லவும் அருவி திடுக்கிட்டாள்.

இவன் என்ன பேசுகிறான். தேவை இல்லாத பேச்சைப் பேசி அடுத்த குழப்பத்தை உருவாக்க நினைக்கிறானோ? முதல் முறை அனைவர் முன்பும் கூனி குறுகி நின்றது, இப்போது நினைத்தாலும் உடல் கூசியது.

இப்போது இவன் பேசும் பேச்சு என்னை என்ன மாதிரி மற்றவர்களுக்குக் காட்டும் என நினைக்கவே உடல் நடுங்கியது. மீண்டுமொரு முறை இவனால் அசிங்ப்பட்டு அவமானப்பட்டு நிற்கமுடியாதே. அன்றாவது நான் தனி ஆள் இன்று அப்படி இல்லையே. தனக்கு என மகள் இருக்கிறாள். என்னோடு சேர்ந்து அவளோட வாழ்க்கையும் அல்லவா பாதிக்கும். அபாயமணி அவளுள் அடித்தது.

அருவி அவளின் சிந்தனையில் மூழ்கிப் போக, அதனைக் கலைத்தான் விஷ்வா.

“என் பொண்ணுக்கு நல்ல அம்மா வேணும். இல்லனா நானும் என் ஜூனியரும் வேற மம்மி பார்க்க வேண்டியதா வரும் பார்த்துக்க” உல்லாச மனநிலையுடன் அருவியைச் சீண்டி விளையாட,

“வேணாம். இது நல்லா இல்ல. இதுவரைக்கும் நீங்க எனக்குச் செஞ்சதே போதும். இனி ஒருதரம் என்னால வலிய தாங்க முடியாது.ப்ளீஸ் இவ்வளோ நாள் எப்படி இருந்தீங்களோ அப்படியே இருங்க. எங்க வாழ்கைக்குள்ள வர நினைக்காதீங்க “அருவி பொறுமையாய் அவனுக்கு எடுத்துக் கூற, அவனோ அவளை மேலும் கடுப்பேத்தினான்.

“உன்னோட வலிக்கு மருந்து நான் தான் பொண்டாட்டி.என்ன நினைச்சுட்டே இருந்தா, அப்படியே வலி எல்லாம் பறந்து போய்டும்.லவ் யூ பாய்” சொல்லி அலைப்பேசி வழி ஒரு முத்தத்தைக் கொடுத்து வைத்தான்.

விஷ்வாவின் இந்தப் பரிமாணத்தில் பெண் திடுக்கிட்டுத் தான் போனாள். அவளுக்குத் தெரிந்த விஷ்வா இப்படி கிடையாது. கண்ணியமானவன்…பெண்களை மதிப்பவன். அவனோடு பழகிய நாட்களில் கூட அவன் கண் தன் முகத்தைத் தாண்டிச் சென்றதில்லை. அப்படி இருக்கையில் இந்த செயல் பாடுகள் அவனின் நிஜம் எது என்று யோசிக்க வைத்தது?

இங்கே இவள் யோசனையுடன் அவளது அறையில் இருக்க, அப்போது வீட்டிற்கு வந்த சந்தானமூர்த்தி கையில் கவரோடு வந்திருக்க, சந்திரா கவனித்தும் கவனியாது போல அவருக்குத் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார்.

அதை வாங்கி பருகியவர், போகும் மனைவியை அழைத்தார்.

“ஏய், கொஞ்சம் அந்த மூத்த தண்டத்தை கூப்பிடுறீயா?” சந்தானமூர்த்தி மனைவியிடம் சொல்ல,

“இப்போ எதுக்கு அவளைக் கூப்பிடுறீங்க?”

“என்ன வர வர வாய் நீலுது “கோபமாய் சொன்னவர்,” கூப்பிட போறீயா இல்லையா”கர்ஜனையாக வந்தது அவர் குரல்.

அதில் மிரண்டாலும் சிறிது தைரியத்தை வரவழைத்து,”அவளே இப்போ தான் ஓஞ்சி போய் வந்திருக்கா. அவளை எதுக்கு கூப்பிடுறீங்க?”

சந்திராவிற்கு தெரியும் மகளைக் கணவர் அழைக்கிறார் என்றார் அவளுக்கு ஏதுவாக ஒரு ஆப்பை தயார் நிலையில் வைத்திருப்பார் என்று.

“கூப்பிட சொன்னா கூப்பிடு” என்றவர் மூத்த தண்டம் பெற்ற சிறிய தண்டம் கண்ணில் தென்பட்டதால் மனைவியை விடுத்து பேத்தியை அழைத்தார்.

“சின்னக் குட்டி இங்க வா” என்று அழைக்க,

“சொல்லுங்க தாத்தா…”

“போ போய் உன்னோட அம்மாவ கூட்டிட்டு வா”

“ஓகே தாத்தா”என்ற சிட்டு அன்னையை அழைக்கப் பட்டாம்பூச்சியாய் பறந்து சென்றது.

விஷ்வாவின் பேச்சில் யோசனையுடன் இருந்த அருவியை மகள் வந்து எட்டி எட்டி பார்க்க, அதனை உணர்ந்து கொண்ட அருவிக்கு இதழோரத்தில் புன்னகை கீற்று.

“அம்மு இங்க வா” என்று அழைத்து மடியில் அமர்த்திக் கொள்ள,

“எதுக்கு இப்படி எட்டி எட்டி பாக்குறீங்க அம்மு?”

“அது…” சிறிது நேரத்திற்கு முன்பு அன்னை தன்னிடம் கோபத்தை காட்டியதை நினைவு கூர்ந்தவள், அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

“என்னாச்சி என் பட்டுச் செல்லத்துக்கு?”

“திட்டிட்ட மம்மி” இப்போதும் அழுகைக்கு தயாரானது குழந்தை.

“நீ பண்ணது சரியா அம்மு? யாருன்னே தெரியாதவங்க கிட்ட இத்தனை க்ளோசா பழகுவாங்களா?” அவளுக்குப் புரியும் வகையில் எடுத்துரைக்க முயல, மகளோ அன்னைக்கே வகுப்பெடுக்க தயாரானாள்.

“மம்மி, அது சீனிஅர்… என்னோட சீனிஅர்‌” பெருமைபொருங்க கூறும் மகளை ஆற்றாமையுடன் பார்த்திருந்தாள்.

இவளும் கூட இதேப் போல் தான் மற்றவர்களிடம் சண்டயிட்டிருக்கிறாள். இவனுக்காக மற்றவர்களிடம் பகையை ஏற்படுத்திக் கொண்டவள், இன்று விஷ்வாவையே பகையாளி பட்டியலில் சேர்த்துவிட்டாள்.

” சீனிஅர் சோ ஸ்வீட் தெரியுமா மம்மி. எனக்கு நிறைய சாக்லேட் வாங்கி கொதுத்தாங்க. பைக்ல டுர் போனோம்… ஜாலியா இருந்துச்சி மம்மி” மகள் அத்தனை ஆர்பாட்டத்துடன் கையசைத்து அசைத்துச் சொல்ல, மகளின் கள்ளங்கபடமில்லா பேச்சில் அன்னை ஆசையாய் கண்டிருந்தாள்.

அப்போது மகளுக்கு ஞாகபம் வந்தவளாய்,” மம்மி உங்கள அந்த மீசை தாத்தா கூப்பிட்டாங்க”என்று சொன்னதும், எதற்காக அழைத்திருப்பார் என்ற யோசனையுடனே தந்தையை காண சென்றாள்.

“என்னைய கூப்பிட்டீங்களா பா?” தந்தையின் முன்பு நிற்க,

“ஆமா” என்றவர் அவர் கையில் வைத்திருந்த ஒரு கவரை எடுத்து அவள் முன் நீட்டினார்.

அவளோ அதை வாங்காது கேள்வியாகத் தந்தையை நோக்க,”மகாராணிக்கு சொல்லனுமோ வாங்குங்கன்னு. பிரிச்சு பாரு “என்று கடுப்பாகக் கூறியவர் அதனை அவள் கையில் திணித்தார்.

திறந்து பார்த்தவள் கண்கள் தந்தையின் செயலில் மனம் மீண்டுமொருமுறை உடைந்தது.

“ப்பா…”கலங்கிய குரலில் அழைக்க,

“உனக்குப் பார்த்திருக்க மாப்பிள்ளை ஃபோட்டோ. கல்யாணத்துக்கு ரெடியா இரு. உனக்குச் சீக்கிரமே இவரோட கல்யாணம் “இடியை அமைதியாக இறக்கிவிட்டு நகர்ந்தார்.

அப்படியே இடிந்து போய் தரையில் அமர்ந்துவிட்டவளுக்கு கண்ணீர் கூட வற்றிப்போனது.

இதனை முற்றிலுமாக எதிர்பார்க்கவில்லை. தந்தையின் இந்த செயல் அருவியை மனதோடு மரித்துப் போக வைத்தது.

அன்னை அழுவதை கண்ட பூவினி,”மம்மி” என்று வர அவளை அணைத்து கொண்டு கதற கதற கண்ணீர் விட்டாள்.

சந்திராவிற்கு மனது தாங்கவில்லை இப்படி தன் மகளைப் போட்டு வாட்டி வதைக்கிறாரே என்று ஆத்திரம் வர, கணவனை நோக்கி நடயிட்டார்.

“நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? அருவி அப்படி உங்களுக்கு என்னத்த செஞ்சிட்டான்னு இத்தனை பண்றீங்க?” கோபமாய் கேட்ட மனைவியை இளகாரமாய் பார்த்த மூர்த்தி, அவரின் பிடரி முடியைக் கொத்தாகப் பிடித்தார்.

“என்ன வாய் ரொம்ப நீளுது? பேசுற நாக்கை அறுத்துப் போட்டா சரியா வரும்”என அவரின் முடியைப் பிடித்து ஆட்ட, அந்த வலியிலும் கூட,”என்ன என்ன வேணாலும் பண்ணுங்க அருவி பாவம் அவளை விட்டுடுங்க” கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினார்.

அவரின் இந்த கெஞ்சல் மூர்த்திக்கு அத்தனை சந்தோஷத்தைத் தர, வெடி சிரிப்பு சிரித்தார்.

“உன் பொண்ணு பண்ணின வேலைக்கு அவ இன்னும் என் கையால சாகாம இருக்காளேன்னு நினைச்சு சந்தோச படு. அதைவிட்டுட்டு தேவையில்லாத விஷயத்தில் மூக்கு நுழைக்க நினைச்ச உன் பொண்ணுங்க யாரும் உயிரோட இருக்க மாட்டாலுங்க. இந்தக் கல்யாணம் நடந்தே தீரும்” அவரைத் தள்ளி விட்டுப் போனார்.

கீழே விழுந்தவர், மகளின் வாழ்க்கையில் கணவர் இப்படி விளையாடுகிறாரே நினைத்துக் கண்ணீர் சிந்தினார்.

அகல்விழிக்கும் மதிக்கும் இந்த விடயம் தெரியப்படுத்தவில்லை. 

*****

தரகர் குடுத்து விட்டுச் சென்ற புகைப்படங்களிலிருந்து அவருக்குப் பிடித்தமான ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்து அருணிற்காக காத்திருக்க, அவனுமே வந்து சேர்ந்தான்.

“அருண்! இங்க வா “வேலை முடித்து வந்த மகனை அழைத்தார் மஞ்சுளா.

“ரொம்ப டையர்டா இருக்கு மா. குளிச்சிட்டு வந்துடுறேன் இருங்க” என்று கூறிவிட்டு மகன் செல்ல, அவனுக்காக ஹாலிலே காத்திருந்தார் மஞ்சுளா.

வெளியில் காற்றாட வாக்கிங் சென்று வந்த கங்காதரன், மனைவி பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொள்ள, “என்னங்க நடந்துட்டு வந்தாச்சா?” என்றவர் கணவருக்குக் குடிக்க தண்ணீர் கொடுத்தார்.

“ம்ம் மஞ்சு. அவன் கிட்ட பேசிட்டியா என்ன?” கணவர் கேள்வியாய் மனைவியை நோக்க,

“இல்லங்க, இப்பத்தான் வந்தான். குளிச்சிட்டு வரேன்னு சொல்லிப் போயிருக்கான். அவனுக்காகத் தான் வெயிட் பண்றேன்.பொண்ணு ஃபோட்டோவ பார்த்ததும் பையன் சந்தோஷத்துல ஷாக் ஆகப்போறான் பாருங்களேன்” புன்னகையோடு மனைவி கூற,

“எப்படியோ அவன் சந்தோஷமா இருந்தா அதுபோதும் மஞ்சு”கணவர் கூறவும் மஞ்சுளா அவரின் தோளில் ஆதூரியமாகச் சாய்ந்து கொண்டார்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் அருண் சொன்னபடி வந்து அன்னைக்கு எதிர்க்க இருந்த இருக்கையில் அமர்ந்தவன்,”இப்போ சொல்லுங்க ம்மா” அவரை ஏறிட்டான்.

“சொல்லணும் இல்ல அருண். உங்கிட்ட காட்டணும்” என ஒரு கவரை அவனிடம் கொடுக்க, அதனை வாங்கியவன்” என்ன ம்மா இது?” கேட்டு அந்த கவரையே பார்த்திருந்தான்.

“உனக்குப் பார்த்திருக்கிற பொண்ணு போட்டோ அதுல இருக்கு” புன்னகையுடன் சொல்ல, அதிர்ந்து தான் போனான் அருண்.

“பிரிச்சு பாரு டா” மஞ்சுளா ஆரவாரத்துடன் அவனின் உணர்வுகளைப் பார்க்கத் துரிதப்படுத்த, மகனோ “இதோ ம்மா” ஒருவித அலைப்புறுதலுடனே பிரித்தவனுக்கு அதிர்ச்சி.

அதில் கண்ணுக்கு எட்டாத புன்னகையுடன் அருவி இருந்தாள்.

“ம்மா?” அதிர்ந்து எழுந்தே விட்டான்.

“எப்படி உனக்குப் புடிச்ச பொண்ணையே நான் பேசி முடிச்சுட்டேன் பார்த்தியா” சிரிப்புடனே அன்னை ஆனந்தமாய் சொல்ல,

“ம்மா தேனருவி என்னோட பிரெண்ட் அவளோ தான் மா. அவங்கள எப்படி என்னால.? இது முடியாது ம்மா. இதுக்கு ஒருநாளும் நான் சம்மதிக்க மாட்டேன்.” ஸ்திரமாகச் சொல்ல,

“நீ பொண்ணு பாருங்கன்னு சொன்ன நானும் பார்த்துட்டேன் அருண். இந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு. இவ தான் இந்த வீட்டு மருமக நான் முடிவெடுத்துட்டேன். நீ யோசிச்சு நல்லபதிலா சொல்லு அருண்” மஞ்சுளா சொன்ன நொடியே அவனிடமிருந்து பதில் வந்தது.

“முடியவே முடியாது ம்மா” விடாக்கண்டனாகக் கூறி அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

“என்னங்க இவன் இப்படி சொல்லிட்டு போறான்.இவனை நம்பி அந்தப் பொண்ணோட அப்பாகிட்ட வேற பேசிட்டேன்”வருத்தமான குரலில் கூறிட, மனைவியைச் சமாதான படுத்தினார்.

ஒருவாரம் ஆகியும் அருண் அவனின் முடிவில் மாறாது இருக்க, இங்கே இவர்களது பதிலுக்காகக் காத்திருந்த மூர்த்தி மஞ்சுளாவிற்கே அழைத்து விட்டார்.

மூர்த்தியின் அழைப்பைக் கண்டு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் சங்கடத்துக்குள்ளானார் மஞ்சுளா.

“சொல்லுங்க அண்ணா?”

“நீங்கப் பையன் கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்லி இருந்தீங்களே? ஒருவாரமா உங்களோட அழைப்புக்காகக் காத்திருந்தேன். நீங்கக் கூப்பிடவே இல்லையா அதான் நானே கூப்பிட்டேன். என்னோட பொண்ணு வாழ்க்கை விஷயம் இல்லையா” சொல்லி அவரின் பதிலை எதிர் பார்த்துக் காத்திருக்க, அந்த பக்கம் மௌனமே.

“லைன்ல இருக்கீங்களா?”

“ஹான், இருக்கேன் அண்ணா. பையன் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்றான்” தயங்கி தயங்கி சொல்ல, விஷயத்தைப் புரிந்து கொண்டவருக்கு ஆத்திரமாக வந்தது.

“புறியுது மா. என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க போகுதுன்னு நினைச்சு கொஞ்சம் நிம்மதியா இருந்தேன். அது அந்த கடவுளுக்கே புடிக்கல போல. தேனு வாழ்க்கைல என்ன எழுதி இருக்கோ.சரி நான் வச்சிடுறேன் மா” வருத்தப்படுவது போலப் பேசி வைத்துவிட்டார்.

மூர்த்தி பேசியதை கேட்ட மஞ்சுளாவிற்கு கஷ்டமாகி போனது. இப்படியொரு நல்ல குடும்பத்தை வேணாம் என்கிறோமே என்று வருந்தினார்.

அவருக்குத் தான் மூர்த்தியின் கொடூர குணம் தெரியாதே. பெண் தங்கம் தான். ஆனால் மூர்த்தி மனித ரூபத்தில் இருக்கும் மிருகம்.

மூர்த்தி முடிவு செய்து விட்டார், அருண் தான் இந்த வீட்டு மருமகன் என்று. அதற்கான வேலையிலும் இறங்கிவிட்டார்.

இப்படியே நாட்கள் நகர, விஷ்வாவும் குழந்தையும் அவர்களது உலகத்தில் வலம் வந்தனர்.

அருவியால் என்ன செய்தும் இவர்களின் இந்தப் பிணைப்பை உடைக்க முடியவில்லை.

பூவினியிடம் அவனோடு பேசாதே என்று சொல்லிப் பார்த்தால்…கெஞ்சி பார்த்தால்… ஏன் கண்டித்து பார்த்தால் கடிந்தும் கூடப் பார்த்துவிட்டால், இவள் பேசப் பேசக் குழந்தை அவனோடு மேலும் ஒன்ற தான் செய்தது.

அருவிக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சனை அவளைத் தேடி பூகமமாய் வந்தது.

இதெல்லாம் போதாது என்று, மூர்த்தி அடுத்த கட்ட வேலையைச் செய்ய நாள் குறித்திருந்தார்.

****

ஸ்கூல் சார்பில் சென்னையில் ஒரு மீட்டிங் வைத்திருக்க, அதற்காக விஷ்வாவிற்கும் அழைப்பிதழ் வந்திருந்தது.

இரண்டு நாள் மீட்டிங் இருக்க, அதுவும் முக்கியமான மீட்டிங் என்பதால் அவனால் அதனைத் தட்டிக்கழிக்க விஷ்வாவால் முடியவில்லை.

முன்பே குழந்தையிடம் சொன்னால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாள் என்று தெரிந்த விஷ்வா, இரவு கிளம்புவதற்கான அனைத்தையும் எடுத்து வைத்தவன், மகளைக் காண எப்போதும் சந்திக்கும் இடத்தில் வந்து பார்க்க, அந்த இடமோ காலியாக இருக்கவே அவனது மனதும் கூட ஒருவித வெறுமையை உணர்ந்தது.

இத்தனை நாட்களாய் மகளோடு நேரத்தைச் செலவிட்டவனுக்கு, அது அவனது பொற்காலங்களில் சேர்ந்திருந்தது.

அருவியோடு செலவிட்ட நாட்களை எப்படி, அத்தனை பத்திரமாக மனபெட்டகத்தில் சேமித்து வைத்தானோ, இப்போது அதேப்போல மகளின் நேரத்தையும் மனதோடு சேமித்து வைத்தான்.

இன்று அவள் இல்லாது வெறுமையாய் காணப்படும் அந்த இடத்தைக் காணவே பிடிக்கவில்லை விஷ்வாவிற்கு.

மகள் தன்னை காணாமல் இருக்க மாட்டாள், வருவாள் என்று அவளுக்காகக் காத்திருக்க, நொடிகள் நிமிடங்களாய் கடந்து நேரமணிகளாய் மாறிச் சென்றதே ஒழிய மகள் வந்தபாடில்லை.

தந்தைக்கு கவலை தொற்றிக்கொண்டது. ஆனால் என்ன செய்வது அவனுக்கான வேலை அவனின் கழுத்தை நெரித்தது.

மகளைக் காணாது கவலையுடன் குன்னூரை விட்டுச் சென்னையை நோக்கிப் பயணம் செய்தான்.

பெற்றால் தான் பிள்ளையா… இரத்தம் பந்ததிற்கு மட்டும் பலம் இல்ல, பாசத்தினால் பிணைக்கப்படும் உறவிற்கும் பலம் அதிகம் தான்…

அதான் விஷ்வா பூவினி பந்ததிலும்….

மகளை நினைத்தபடி அவன் மலைகளை விட்டுப் பயணம் செய்ய, இங்கே மூர்த்தியோ மதியோடும் பூவினியோடும் கூடலூரில் பழங்குடியினர் வாழும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.