மோகனங்கள் பேசுதடி!10

eiL5KAD79398-6e5e5a20

மோகனம் 10

காலையிலே எழுந்த மூர்த்தி, வீட்டைச் சுற்றி வலம் வந்தமையமாக இருந்தார்.

அருண் கல்யாணத்திற்கு விருப்பமில்லை என்று மஞ்சுளா சொல்லிக் கேள்விப்பட்டவரால் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

மஞ்சுளாவாக தான் தன்னை சந்தித்து பேசி, தனக்கு உங்கள் மகளைப் பிடித்திருக்கிறது எங்கள் வீட்டு மருமகளாக அவள் வர வேண்டும் என்று ஆசைக்கொள்கிறோம் கூறி மூர்த்தியின் மனதில் ஆசையை வளர்த்து விட்டிருந்தார்.

மூர்த்தி ஒரு விஷப்பாம்பு எனத் தெரியாமல் அதற்கு ஒரு முறை பால் வைத்துவிட, அதுவோ மீண்டும் மீண்டும் வேண்டுமென அடம்பிடித்தது.

மஞ்சுளா பேசிவிட்டு சென்றபின் அவரின் பின்புலத்தை அடுத்த ஓரிரு நாட்களிலே அறிந்து கொண்டவருக்கு, மேலும் ஜாக்பாட் அடித்தது போலான அருண் மற்றும் அருவியின் நட்பு ரீதியான பந்தம்.

இந்தப் பந்தத்தை வைத்தே நினைத்ததை சாதித்து விட நினைத்து, மௌனமாகவே அதற்கான திட்டத்தைத் தீட்டத் துவங்கினார்.

அகல்விழிக்கு இங்கு நடப்பது எதுவும் தெரியாது என்றாலும் அக்காளின் முகமும் அன்னையின் முகமும் சரியில்லாததை கண்டு அவளின் புருவங்கள் இரண்டும் இடுங்கின.

அன்னையிடமும் அக்காவிடமும் எத்தனையோ முறை ‘உங்களுக்கு என்னவாக்கிற்று?’ என்று கேட்டுப் பார்த்துவிட்டாள். இருவருமே கல்லுளிமங்கன் போல ஒன்றுமில்லை என்ற பதிலையே பதிவேட்டு செய்தது போல் சொன்னதையே சொல்லினர்.

ஒரு கட்டத்தில் வெறுத்தே போனவள்,” எப்படி இருந்தாலும் தெரிய தான் போகுது. அன்னைக்கு இருக்கு உங்களுக்கு” மிரட்டி விட்டு இடத்தைக் காலி செய்தாள்.

அடுத்து அவர்களிடம் கேட்கவில்லை என்றாலும் அவளின் மூளைக்குள் என்னவாகிறுக்கும் என யோசித்த மையமாகத் தான் இருந்தாள்.

தீட்டிய திட்டத்தைச் செயல்படுத்தும் நாளும் வந்துவிட, காலையிலே அருவியை அழைத்து விட்டார்.

அவரது அழைப்பைக் கேட்டதும் உடல் பயத்தில் நடுநடுங்கியது. அடுத்து என்ன வைத்திருப்பாரோ என்று.

“சொல்லுங்க” அப்பா என்ற வார்த்தையைத் தவிர்த்தாள் அருவி.

“உனக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளை உன்னை வேணாம்னு சொல்லிட்டான்” எனக் கடுப்போடு கூறி அவளின் நெஞ்சில் பாலை வார்த்தார்.

“உண்மையாவா?” திகைப்புடனும் அதேநேரத்தில் மகிழ்ச்சியுடனும் கேட்க,

“உன்கிட்ட பொய் சொல்லி எனக்கென்ன காசா கிடைக்க போகுது” சொல்லி “நாளைக்கு கோத்தகிரில ஒரு காது குத்து பங்ஷன் இருக்கு. அதுக்கு சின்னக் குட்டியையும் கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்” மெதுவாய் மீனிற்கு தூண்டில் போட்டார்.

“அவ எதுக்கு நீங்க மட்டும் போயிட்டு வரலாமே” தந்தையை எதிர்த்துப் பேச,

“எனக்கு மட்டும் என்ன சின்னக் குட்டியைக் கூட்டிட்டு போகனும்னு ஆசையா? போன முறை ஒரு பங்க்ஷனுக்கு போயிருந்தப்ப அவளைத் தான் கேட்டு நச்சரிச்சுட்டானுங்க”

“அதுக்கு அவளைக் கூட்டிட்டு போகணுமா? நீங்களே ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாமே” அருவி சஞ்சலம் கொண்டு சொல்ல,

“இங்க பாரு உன்கிட்ட நான் அனுமதி கேட்கல கூட்டிட்டு போறேன்னு சொல்றேன்” தீவிரமான குரலில் சொல்லியவர் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

அவர் பேசியதை கேட்டு அங்கேயே தவிப்போடு நின்ற அக்காவை கண்ட குட்டி சகோதரி அவளிடம் வந்தாள்.

“அக்கா…” மதி அழைக்க,

“சொல்லு மதி, ஏதாவது வேணுமா என்ன?” வாய் அவளிடம் பேசினாலும் மனது தந்தை பேசியதையே நினைத்தது.

“ஏன் ஏதாவது வேணும்னா மட்டும் தான் உங்கிட்ட பேசணுமா அக்கா” சிறிய குரலில் வருத்தமாகக் கூறியவளை பார்த்து அருவி தலையில் அடித்துக் கொண்டாள்.

“சாரி டா”

“விடு க்கா. நீயும் அப்பாவும் பேசிட்டு இருந்ததை கேட்டேன்” மதி சொல்லவுமே அருவிக்குத் திக்கென்று ஆனது.

மதிக்கு அருவியின் கடந்த கால வாழ்க்கையை பற்றி ஒன்றுமே தெரியாது. படிக்கும் பிள்ளை மனதில் கவலையை ஏற்ற யாரும் விரும்ப வில்லை. அதனால் அதனைப் பற்றி அவளிடம் சொல்லிருக்காத நிலையில் இந்த மாதிரியான சூழ்நிலையில் அவள் என்ன காதில் வாங்கியுள்ளாள் என்று தெரியாது தவித்தாள் அருவி.

“அப்பா அம்முவ அந்த பங்க்ஷன்க்கு கூட்டிட்டு போக நினைக்குறாரு, ஆனா உனக்கு அதுல விருப்பம் இல்ல அப்டி தான அக்கா?”

“ஆமா மதி. அம்முக்கு நம்ம அப்பாவ அவளுக்கு புடிக்காது. துடுக்குத்தனமா ஏதாவது பேசிட்டா, அப்புறம் பிரச்சனை தான் வரும் அதான் பாக்குறேன்” வருத்ததுடன் கூறிய அக்காளின் கையைப் பிடித்துக் கொண்ட மதி,” நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?” என்றதும் தங்கையை ஏறிட்டு பார்த்தாள்.

“என் குட்டி தங்கச்சி வளர்ந்துட்டா போலயே” சிலாகித்து கூற, புன்னகைத்த மதி தனது யோசனையைக் கூறினாள்.

“இல்ல மதி மா. இது சரி வராது. உன்ன அம்முக்கு துணையா அனுப்புறதுல எனக்கு விருப்பம் இல்ல” தங்கையின் யோசனையை மறுத்து வேணாம் என்றிட,” அப்பாவ பத்தி உன்ன தவிர யாருக்கு நல்லா தெரியப்போகுது சொல்லு.அவரு ஒன்னு நினைச்சா அதை முடிக்காம விடமாட்டாருன்னு உனக்குத் தெரியாதா. நீ எதைப் பத்தியும் யோசிக்காத அக்கா. நான் அம்முக்கு துணையா அப்பா கூடப் போய்ட்டு வரேன்” மதி சொல்லவும், அருவிக்குத் தன் தங்கை வளர்ந்துவிட்டாள் என்று புரிந்தது.

வளர்வது என்றால் என்ன உயரத்தாலும் வயதாலும் வளர்வது அல்ல. அது முழுக்க முழுக்க சிந்தனையிலும் அதன் செயலிலும் உள்ளது.

மதி கூறியது போலவே அன்றிரவு மூர்த்தியுடன் பூவினியும் மதியும் சென்றனர். மதியும் தங்களுடன் வருகிறாள் என்று சொன்னபோது திகைப்பு தான். ஆனாலும் ஒன்றுக்கு இரண்டு லட்டு என்று மனதினுள் நினைத்துக் கிளம்பினார்.

அருவிக்கு மனம் ஏதோ நெருடியது. ஆனாலும் அமைதியாக இருந்தாள்.

காலையில் கிளம்பி எப்போதும் போலப் பள்ளிக்குச் சென்றுவிட, அங்கே அருணை காண நேர்ந்ததும் அவனை தவிர்க்கப் பார்த்தாள்.

“மிஸ். தேனருவி நில்லுங்க” என்றதும் நின்றவள் ஏதும் பேசாது அவனை நோக்கினாள்.

“எனக்கு உங்க சூழ்நிலை புரியுது. எனக்குமே உங்க…” அவனின் நிலையைச் சொல்ல வாயெடுக்க,” வேணாம் சார் அதைப் பத்தி பேசாதீங்க. உங்களுக்குமே என்னை மாதிரியான ஒரு சிச்சுவேஷன் தான். ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் சோ பெட்டர் லீவ் இட் சார்” என்றவள் நகர பார்க்க,

“அப்புறம் ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க?”

“அவாய்ட் பண்ணல சார். கொஞ்சம் ஸ்பேஸ் எடுத்துக்குறேன் அவ்ளோதான்”

“புரியுது.இந்துக்கு அப்பறம் நான் நல்லா பேசுற ஒரே ஆள் நீங்கத் தான். இப்போ நீங்களும் போறீங்க போங்க” என்று சொல்லித் திரும்பியவன் நடக்க தொடங்கினான்.

போகும் அருணை திசையறியாது பார்த்தவள், அவளோட பாதையில் அவள் நடந்தாள். இருவரது பாதைகளும் வெவ்வேறு திசைகள் தான். ஆனால்…??

மாலை அருவி மகளுக்குத் தின்பண்டம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தவள், அன்னையிடம் சென்றாள்.

“அம்மா, இன்னுமா அவங்க மூணு பேரும் வரலை?” சாதாரணமாகத் தான் கேட்டாள். அப்போது கூடத் தந்தை மீது சந்தேகம் வரவில்லை.

“இன்னும் இல்ல அருவி. அவங்களுக்காகத் தான் நானும் வாசலையே பாத்திட்டு இருக்கேன். மழை வேற இப்பவா அப்பவான்னு இருக்கு. மழைக்கு முன்ன வீடு வந்து சேந்துரனும்” இப்படியாக இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அகல்விழியும் வீடு வந்து விட்டாள்.

ஆனால் போன் பேசியபடியே வந்தவள், இவர்கள் பேசுவதை கவனிக்க வில்லை.

இது அவளுக்கு இறுதி வருடம் என்பதால், அவளின் ப்ராஜெக்ட் விஷயத்தில் தனது முழு கவனத்தையும் வைத்திருந்தாள். அதனால் இவளுக்கு மதியும் அம்முவும் தந்தையுடன் சென்றிருப்பது தெரியவில்லை. முன்பே தெரிந்திருந்தால் அவர்களை அனுப்பிவிட்டிருக்க மாட்டாள்.

போனில் பேசியபடியே உள்ளே சென்ற விழி,”இதோ ஒரு நிமிஷம் வீட்டுக்கு வந்துட்டேன். அம்முகிட்ட கொடுக்கிறேன்” என்றவள் வீடு முழுவதும் அலசிப் பார்த்துவிட்டாள்.

அம்மு இருப்பதற்கான அடையாளமே இல்லை.

“அம்மு வெளிய போயிருப்பா போல. நான் அவ வந்ததும் கால் பண்றேன்”என்று விஷ்வாவிடம் கூறி வைத்தவள், அருவியை நோக்கி வந்தாள்.

“யாரு போன்ல?” அருவி விழியை ஆராய்ச்சி பார்வையோடு கேட்க,

“அம்மு எங்க ஆளைக் காணோம்?” கேள்விக்குப் பதிலாகக் கேள்வியே அவள் முன் வைக்க,

“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே விழி. போன்ல யாரு?” மீண்டும் கேட்கவே, விழி பதில் கூறினாள்.

“உன்னோட சீனியர் கிட்ட தான்” கூறவும் அருவிக்கு ஆத்திரமாக வந்தது.

“யாரை கேட்டு அவங்க கிட்ட நீ பேசிட்டு இருக்க விழி? இது நல்லத்துக்கு இல்ல சொல்லிட்டேன். முதல அவங்க கிட்ட பேசுறதை நிறுத்து. அதிக பிரசங்கி வேலை பார்க்காத” தங்கையை எச்சரிக்கை விடுக்க,

அருவி பேசியதை கண்டுகொள்ளாதது போல்,” அம்முவும் மதியும் எங்க? அவங்களை ஆள காணோம்?”கேள்வியாக வினவ,

“அவங்க ரெண்டு பேரும் அப்பா கூட ஒரு பன்க்ஷனுக்கு போயிருக்காங்க” சொன்னதும் தான் தாமதம், அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தாள்.

அப்போதே சாரலாய் மழை தூர தொடங்கியது.

“யாராவது அவரை நம்பி அவங்க ரெண்டு பேரையும் அனுப்பி வைப்பாங்களா?”

“அப்பா தான்…” என்று எதையோ சொல்ல வருவதற்குள் தொப்பலாக நனைந்தபடி உள்ளே வந்தார் சந்தானமூர்த்தி.

அருவியும் விழியும் அவர் வருவதை கண்டவர்களின் பார்வை அவரை கடந்து செல்ல, கோணலாக ஒரு சிரிப்பை அவர்களுக்கு உதிர்த்தார்.

அவர் சிரிப்பைப் பார்த்த விழிக்கு ஏதோ தவறாகப் பட்டது. அவளது ஆறாம் அறிவு சொன்னது ஏதோ விபரீதமாக நடக்கவிருக்கிறது என்று. ஆனால் அது என்னவென்று தான் அவளுக்கு புரியவில்லை.

வாசலையே அருவி பார்த்துக் கொண்டிருக்க, அப்போது தான் சமயற்கட்டிலிருந்து வெளி வந்த சந்திரா,”வீட்டுக்கு வந்துடீங்களா, எங்க அம்முவையும் மதியையும் காணோம்?” கேட்டபடி அங்கே வர, அவரோ அதனை கண்டு கொள்ளாது காது குடைந்தார்.

“அம்மா தான் கேக்குறாங்களே பதில் சொல்லுங்க” விழி முந்திக்கொண்டு வந்து பேச,

“ஏய், போ போய் சூடா ஒரு காப்பி எடுத்துட்டு வா” என மனைவியை விரட்ட,” அவங்க ரெண்டு பேரும் எங்க?” மீண்டும் அதே பல்லவியை பாடவும் கடுப்பானார் மூர்த்தி.

அருவி பரிதவிப்புடன் வாசலையும் தந்தையையும் மாறி மாறிப் பார்க்க, அந்தோ பரிதாபம் அவளை மூர்த்தி கண்டு கொள்ளவில்லை.

அதோடு தூறலாய் ஆரம்பித்த மழை இப்போது இடியுடன் கொட்டி தீர்த்தது.

“அப்பா!அம்முக்கு இடினா பயம் பா. அவ எங்க பின்னாடி வந்திட்டு இருக்காளா?” தவிப்போடு அருவி கேட்க, மூர்த்தியோ அருவி ஏதோ ஜோக் சொன்னது போல் வெடித்து சிரித்து வீட்டையே அதிர வைத்தார்.

“அப்பா…”கண்ணீரும் கம்பலையுமாக ஒரு வித பதற்றத்துடன் அழைத்தாள்.

அருவியின் கரத்தைக் கெட்டியாகப் பிடித்து அழுத்தத்தைக் கொடுத்த விழி,” அவங்க ரெண்டு பேரையும் எங்க வச்சிருக்கீங்க?” காரசாரமான பார்வையோடு விழி தந்தையிடம் கேட்டாள். இவளது கேள்வியில் மற்ற இருவரும் திகைத்தனர்.

“இந்த வீட்லயே நீ தான் கொஞ்சம் புத்திசாலியாய் பொறந்து தொலைச்சிட்ட” தாடையை சொரிவது போல் செய்தவர், “என் கஸ்டடில பத்திரமா இருக்காங்க. நான் ஆசை பட்டது நடக்கணுமே அதான் திட்டம் போட்டுத் தூக்கிடேன்” அசட்டையாக மூர்த்தி பதில் சொல்ல, அருவி ஒருவித வலியோடு தந்தையை ஏறிட்டாள்.

ஒரு நிமிடம் அந்த வீடே அசாதாரண அமைதியில் இருந்தது. எப்போதும் அமைதியாகவே எதையும் கடப்பவள் இந்த முறை வெடித்து விட்டாள்.

அருவியாய் பேசவில்லை… பூவினியின் அன்னையாகப் பேசாமல் இருக்க முடியாதே… அவளின் வாழ்க்கை இதோ தன் முன் நிற்கும் தந்தையின் பிடியில் அல்லவா இருக்கு. இத்தனை நாள் மனதில் இருந்ததை கொட்டி தீர்த்தாள்.