மோகனங்கள் பேசுதடி!11

eiL5KAD79398-54409496

மோகனம் 11

உன்னை மதித்தால் நீ மதி, உன்னையே மிதிக்கும் பட்சத்தில் அவர்களை வீசி எறிந்துவிடு.

அமைதையாய் இருக்கும் அருவி தந்தையின் இந்தச் செயலில் வெடித்து விட்டாள்.

அருவியாய் இருக்கும் வரைக்கும் இந்தப் பொறுமை மென்மை எல்லாம். அதுவே அன்னையாய் வரும்போது மகளின் நல்லதை மட்டுமே நோக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் தனக்கு எதிரே இருப்பவர் தன் மகளைப் பிடித்து வைத்திருக்க, காளி அவதாரம் எடுத்திருந்தாள்.

“நீங்க ஆசைப்பட்டது நடக்கணும்னா என்ன வேணாலும் பண்ணுவீங்களா? உங்களுக்குப் பலிக்காடா நான் இருக்குறது பத்தாதா. அவங்க ரெண்டு பேரும் சின்னக் குழந்தைங்க. அவங்கள எப்படி உங்க ஆசைக்குப் பண்ணைய வைக்க முடியுது?” ஆக்ரோஷமாகக் கத்த,

“என்ன வாய் நீளுது? நீ பண்ண தப்பை எல்லாம் மறந்து போச்சா? ஒரு முறை ஞாபக படுத்தணுமோ” வார்த்தையில் அமிலத்தை வைத்துப் பேசினார்.

“என்ன எப்போ பார்த்தாலும் நான் தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன்னு சொல்றீங்க? உண்மையா அன்னைக்கு என்ன நடந்துச்சின்னு எனக்கே தெரியாத போது, அந்த இடத்துல என்ன குற்றவாளி கூண்டுல நிறுத்தி வச்சது நீங்க. ஏன் எனக்கு என்ன நடந்துச்சின்னு யோசிக்க கூட விடல, விடாம என் மேல பலி போட்டிங்க. நான் துவண்ட நேரத்துல ஆறுதலா இருக்க வேணாம் ஆனா காயப்படுத்தாம இருந்திருக்கலாமே. ஆனா நீங்க என்ன பண்ணீங்க குத்திக்காட்டி குத்திக்காட்டியே சாவடிசீங்க. உங்க விருப்பம் போல என்னை ஆட்டிவச்சீங்க. கடைசில நான் என் வாழ்க்கையை தொலைச்சி என் பெண்ணோடு நடுத்தெருவுல நின்னது தான் மிச்சம். இப்போ தான் கொஞ்சம் நார்மல் லைஃப்க்கு வந்தேன் அது பொறுக்கலையா, அடுத்த மாப்பிள்ளை போட்டோவ காட்டி கல்யாணம்னு சொல்லறீங்க. என்ன பார்த்தா விளையாட்டுப் பொம்மை மாதிரி தெரியுதா? உங்களோட சந்தோஷத்துக்கு நான் ஏன் சக்கரையா இருந்து கரையனும்” இத்தனை நாள் அமைதியாக மனதினுள் வைத்திருந்ததை கொட்டி தீர்த்தாள்.

“அமைதியா போறேனா அதுக்கு காரணம் என் மேல தப்புன்றது மட்டுமல்ல, உங்க மேல வச்சிருந்த மரியாதையும் தான் காரணம். அதை நீங்களே கெடுத்துக்குறீங்க. ஒரு அப்பாவா நீங்கத் தோத்து போய்ட்டிங்க” நிறுத்தி நிதானமாய் அழுத்தம் திருத்தமாய் கூறியவள்,” என் பொண்ணு இப்போ என்கிட்ட வந்தே ஆகணும். ஏதாவது முரண்டு புடிசீங்க நான் போலீஸ் கிட்ட போக வேண்டியதா வரும்” அதிரடியாகக் களம் இறங்கி இருந்தாள் அருவி.

அவளின் இத்தனை கால அமைதி இன்று வெடித்து விட, மழையின் சத்தம் மட்டுமே அங்கே கேட்டது.

அவளின் இந்தப் பரிமாணத்தில் மூர்த்தி திகைத்தது ஒரு நிமிடம் தான். அவள் பேசியதை எல்லாம் தூசு போல் தட்டிவிட்டார்.

“என்னவேணா பேசிட்டு போ. உனக்கு உன்னோட பொண்ணும் தங்கச்சியும் வேணும்னா நீ அந்த அருணை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும். எனக்கு என்னோட ஆசை தான் பெருசு.ஏதோ போலீஸ்க்கு போறேன்னு சொன்ன, போய்த் தான் பாரேன் அடுத்து என்ன நடக்குதுன்னு. நீயே இவ்வளோ யோசிச்சீனா அப்போ நான் எவ்வளோ யோசிப்பேன். ரெண்டு நாள் டைம் தரேன் அதுக்குள்ள அந்த அருணை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சி அவனோட தாலிய வாங்க பாரு” சாந்தமான குரலில் மிரட்டல் விடுத்தவர் சந்திராவை நோக்கி,”எவ்வளவு நேரமாச்சி உன்கிட்ட காப்பி கேட்டு. போ போய் அந்த வேலையாவது உருப்படியா செய் “மீசையை முறுக்கி விட்டவாறே அவரது அறைக்குச் சென்றுவிட்டார்.

தங்களுக்கு காவலன் என்று நினைத்தவர்களுக்கு முன்பு நான் காவலன் இல்லை காலன் என்று காண்பித்து விட்டார்.

இங்கே அருவி இடிந்து போய் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டவளுக்கு ஓவ்வென்று அழுக மட்டுமே முடிந்தது.

“அழுகுறதை நிறுத்துத் தேனு “அடக்கப்பட்ட கோபத்துடன் சொல்ல,

“விழி அம்மு…அம்மு…”எனத் தேம்பி தேம்பி அழுதிட, அதில் மேலும் விழிக்குக் கோபம் தான் வந்தது.

“இப்படி நீ அழுதா எல்லாம் சரியாகிடும்னா சொல்லு நானும் உன்கூட சேர்ந்து அழுகுறேன். இந்த ஆளோட சதி தெரியாம அவருக்கு ஒத்து ஊதுனில அழு நல்லா அழு” காரமாய் அவள் மீது வார்த்தைகளை வீச, அருவிக்கு அழுகை கூடியதே ஒழிய குறைந்தபாடில்லை.

“நிப்பாட்டு க்கா.அப்பவும் அழுக மட்டும் தான் செஞ்ச, இப்பவும் அழுகுற. அழுதா பிரச்சனை தீர்ந்திடுமா? நானும் உன்னையும் அம்மாவையும் கவனிச்சுட்டு தான் இருந்தேன். உங்க முகமே சரில்லை. இப்பவாச்சும் என்ன நடந்ததுன்னு ஒன்னு விடாம சொல்லு” கடுமையாகப் பேசவும், அருவியும் அனைத்தையும் கூறினாள்.

இதைக் கேட்ட விழிக்குத் தந்தையை கொலை செய்திடும் அளவிற்கு ஆத்திரம் வந்தது. இது கோவத்தை காட்டும் நேரமில்லை என்று புரிந்து கொண்டவள், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

ஆனால் அன்னையான அருவிக்கு யோசித்து செயல்படனும் என்றெல்லாம் தோன்றவில்லை. அவளுக்குப் பூவினியை மீட்க வேண்டும் அவ்வளவு தான்.

தந்தை சொன்னது போல் செயல் பட எண்ணினாள்.

நேரம் காலத்தை எல்லாம் அவள் யோசிக்கவே இல்லை அவனுக்கு அழைத்து விட்டாள்.

தம்பியுடன் ஸ்கைப்பில் இருந்தவனுக்கு அழைப்பு வரவும்,” ஒரு நிமிஷம் டா” என்றவன் அதனைப் பார்க்க மிஸ்.தேனருவி என்று திரையில் ஒளிர்ந்தது.

“மிஸ்.தேனருவி இந்த நேரத்துல எதுக்கு கூப்பிடுறாங்க” யோசனையுடன் கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்தவனை கலைத்தது விஷ்வாவின் குரல்.

“யாரு டா லைன்ல?”

“மிஸ்.தேனருவி டா” என்றான்.

இவன் கூற கேட்டவனுக்கு காதில் வேறு ஏதும் கேட்டுவிட்டதோ என்று யோசித்தவனின் மூளை சொன்னது நீ சரியாகத் தான் கேட்டாய் என்று.

அதிர்ச்சியிலும் அதிர்ச்சி பேரதிர்ச்சி விஷ்வாக்கு.

“இப்போ யார் பெயரைச் சொன்ன?” மீண்டும் ஏதும் தவறாகக் கேட்டுவிட்டதோ என்று கேட்க,

“டீச்சர் அம்மா டா மிஸ்.தேனருவி” சொல்லவுமே அவனின் இதயம் உடைந்தது.

இவள் தான் அண்ணனுக்குப் பார்த்திருந்த பெண்ணா? நினைக்கும் போதே உள்ளம் பிசையச் செய்தது.

அருண் யோசனையில் இருக்கும்போதே அது அடித்து ஓய்ந்து விட, மீண்டும் அழைப்பு வந்தது.

“அருண் பிக்கப் தி கால்” விஷ்வா கூற,

“ம்ம்” என்றவன் அதனை உயிர்பித்தான்.

உடனே விஷ்வா ஸ்பீக்கர்ல போடு என்று சைகை செய்ய, அதைக் கவனித்த அருண் ஸ்பீக்கரில் போட்டான்.

“அருண் சார்…” கேவலோடு அவள் குரல் வர விஷ்வாவிற்கு மனம் பதறியது.

“என்ன ஆச்சி மிஸ்.தேனருவி? அழுகுறீங்களா?”

“என் பிள்ளையைக் காப்பாத்தி குடுங்க” கேவலோடே கூறியவளின் குரல் முற்றிலுமாக உடைந்திருந்தது.

‘பாப்பாக்கு என்ன ஆச்சி?’ படபடப்புடன் அவள் பேசுவதை கேட்டிருந்தான் விஷ்வா.

“புரியல தேனருவி, அம்முக்கு என்ன ஆச்சி?”

இவள் ஒன்று விடாமல் நடந்தது அனைத்தையும் கூற பல்லைக் கடித்தான் விஷ்வா. அவனின் இந்த மாற்றத்தைக் குறிப்பெடுத்து கொண்டான் அருண்.

“முதல காம் டௌன் ஆகுங்க தேனருவி. அம்முவை காப்பாத்திடலாம் கவலை படாதீங்க” சொல்லிச் சமாதானம் செய்ய, அவளோ அழுத மையமாகவே இருந்தாள்.

இது சரி பட்டுவராது புரிந்த விஷ்வா, தன் அமைதியை உடைதான்.

“அருவி…” திடகாத்திரமான குரலில் அழைக்க,

“அருவி அழுகையை நிப்பாட்டு” ஒரு வித அழுத்தத்துடன் சொல்லவும், அவளின் அழுகை சத்தம் நின்றது. அருணிற்கு இது ஆச்சரியமாக இருந்தது.

“பிரசாத் அம்மு அம்மு “எனத் தேம்ப,

“நம்ம பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. நான் இருக்கேன் கவலை படாத”தைரியம் கூறி அவளுக்கு விடை கொடுத்தான்.

இவர்கள் இருவரும் பேச அருணோ அமைதியாகத் தம்பியைத் தீப்பிழம்பாய் எரித்தபடி இருந்தான்.

“விஷ்வா! இங்க என்ன நடக்குது? உனக்கு முன்னவே தேனருவிய தெரியுமா?”

“ம்ம். நான் பாரின் போனதுக்கு காரணமே அருவி தான். அவளைத் தான் நான் உயிரோட கொன்னுட்டு போனேன்.” மனமுடைய அவன் சொல்ல,

“விஷ்வா…அப்போ நீ காதலிக்குறது தேனருவியையா?”

“ம்ம்ம்…”என்றான்.

‘அய்யோ!’ அருண் தலையில் கைவைத்து விட்டான்.

“விஷ்வா அடுத்து என்ன பண்ணலாம்ன்னு இருக்க?”அருண் வினவ, விஷ்வா தனது யோசனையைச் சொல்ல, அருண் அவனின் இந்த யோசனைக்கு எதிர்ப்பை வழங்கினான்.

“இல்ல அருண் இது தான் சரியா வரும். நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு. எனக்கு என்னோட ரெண்டு பொண்ணுங்களுமே முக்கியம் டா. அம்மு குழந்தைனா மதி வளர்ந்த குழந்தை டா. அவங்களுக்காகவாது கல்யாணத்துக்கு சம்மதம் கூறிடு” விஷ்வா முடிவாய் கூற, மறுத்துப் பேச முடியாத படி செய்து விட்டான் விஷ்வா.

விஷ்வாவின் இந்த முடிவில் அருணிற்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. ஆனால் அவன் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான்.

அடுத்தநாளே மஞ்சுளாவிடம் தனக்கு நீங்கள் பார்த்த அந்த பெண்ணைப் பிடித்துருக்கு சீக்கிரம் கல்யாணத்திற்கு தேதியைப் பாருங்கள் என்று கூறி செல்ல, வியப்பின் உட்சத்தில் இருந்தார் மஞ்சுளா.

நேரம் தாழ்த்த விரும்பாத மஞ்சுளா கணவரிடம் சொன்னவர், உடனே மூர்த்திக்கும் அழைத்துச் சொல்லிவிட்டார்.

கேட்ட மூர்த்தியின் முகத்தில் வெற்றியின் சாயல்.அதிலே அவருக்குப் புன்னகை விரிந்தது.

அருண் அருவியிடன் விவரத்தைக் கூற, தந்தையை நோக்கி ஓடினாள்.

“அப்பா, நீங்க சொன்னது போல அவரைக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிட்டேன் பா” கண்ணீரோடு சொல்ல,

“அதுக்கு?”

“அம்முவை கூட்டிட்டு வாங்க”

“இன்னும் கல்யாணம் முடியல. முடியட்டும் சின்னக் குட்டிய நானே போய்க் கூட்டிட்டு வரேன்” சொன்னவர் ‘இந்த ராஜா கைய வச்சா ராஜா அது ராங்கா போனதில்லை’ என்ற பாடலைப் பாடியவாறு போனார். போகும் அவரையே தாங்க முடியாத மனவலியுடன் பார்த்திருந்தாள்.

இங்கே சென்னையில் இருந்த விஷ்வா, அடுத்தநாளே கிளம்ப எத்தனிக்க வங்க கடலில் உருவான புயலின் காரணத்தினால், பிலைட் நிறுத்தப்பட்டது. தொடர் மழையினால் ரயிலும் பேருந்தும் கூடத் தடை செய்யப்பட, அவனின் இந்த நிலையை எண்ணி நொந்தான்.

இப்படியே இருந்தால் அது சரிவராதே, தாமதிக்காது ஜீவாவை அழைத்தவன் சுருக்கமாக விவரத்தைக் கூறி இருவரையும் தேட சொன்னான். அடுத்த இரண்டு நாளில் குன்னூர் திரும்பி இருந்தான் விஷ்வா.

அருவி சொன்னது போல் கோத்தகிரி முழுவதும் சல்லடை போட்டுத் தேடிவிட்டனர். ஆனால் எந்த வித முன்னேற்றமும் இல்லை.

நாட்கள் வேகமாக நகர்ந்தது, இங்கே மஞ்சுளாவும் மூர்த்தியும் கல்யாண நாள்ளை குறித்தனர்.

அடுத்த இரண்டு வாரத்தில் சிம்பிளாகத் திருமணம் என்று முடிவு செய்திருக்க, அகல்விழிக்கு தாங்க முடியவில்லை.

“நீ என்ன பண்றன்னு தெரிஞ்சி தான் பண்றியா க்கா?”

“தெரிஞ்சு தான் பண்றேன். எனக்கு அம்மு முக்கியம்”என்றாள்.

“அதுக்காக நீ பண்ணிட்டு இருக்கிறது சரியா? ஒரு நிமிஷம் யோசி க்கா” தமக்கையின் இந்த முடிவை எப்படியாவது மாற்ற நினைத்தாள்.

ஆனால் அது பூஜ்ஜியம் தான். அடுத்ததாக விஷ்வாவிடம் பேசினாள்.

அவனுமே,” அருண் ரொம்ப நல்லவன். அருவியை நல்லா பார்த்துப்பான் அகல் மா “கூற தலையைப் பிய்த்துக் கொண்டாள்.

ரகசியமாக விஷ்வாவும் ஜீவாவும் சேர்ந்து குழந்தையையும் மதியையும் தேடிய படியே தான் இருந்தனர்.

கோத்தகிரியை அடுத்துள்ள அரவேனு, சோல்லுர்மட்டம், கரகோர்மட்டம் ஏன் கோடநாட்டில் கூடத் தேடிவிட்டனர். ஆனால் கிடைத்த பாடு தான் இல்லை.

இவர்கள் இவ்வாறு ஏதாவது செய்வார்கள் என்று தெரிந்து தான் மூர்த்தி ராஜ தந்திரமாகக் கூடலூர் என்று சொல்லாமல் கோத்தகிரி என்று சொல்லி இருந்தார்.

இருவரும் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமல் குடும்பமே தவித்தது. இதிலும் அருவி உயிரோடே ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைத்தாள்.

அருண் தான் இப்போவரைக்கும் அவளுக்கு ஒரு நண்பனாய் துணை நின்றான். அவளுக்காக மட்டுமே இந்தத் திருமணத்திற்கு கூடச் சம்மதித்தான்.

உதவிக்கு யாருமில்லையென வருந்தாதே உனக்குத் துணையாக நான் இருக்கிறேன் தைரியமாகப் போராடு என்று சொல்பவன் தான் உண்மையான நண்பன். அதைத் தான் இங்கே அருணும் செய்தான். தோழியின் துக்கத்தில் அவளைத் தாங்கி நின்றான்.

அருவிக்கு அன்று விஷ்வா என்ற ஒருவன் பேசியது எல்லாம் ஞாபகத்திலே இல்லை. இப்போதைய கடவுள் அவளுக்கு அருண் தான்.

திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு தந்தையிடம் வந்தவள், “ப்பா, கல்யாணம் நடக்கணும்னா நீங்க அம்முவையும் மதியையும் கூட்டிட்டு வரணும். அப்போ தான் இந்தக் கல்யாணம் நடக்கும்” திட்டவட்டமாக அருவி கூறிட,

“எனக்காக இத்தனை செய்யும்போது நானும் ஏதாவது செய்யணும்ல. அம்மா கல்யாணத்துக்கு பொண்ணு இல்லனா எப்படி, அதனால சின்னக் குட்டிய கூட்டிட்டு வரேன்.ஆனா மதி உங்க கல்யாணத்துக்கு அப்றம் தான் வருவா” சதுரங்க ஆட்டத்தில் காயைப் பார்த்துப் பார்த்து நகர்த்தினார் மூர்த்தி.

அருணிடம் இதனைக் கூற, “முதல அம்மு நம்ம கைக்கு வரட்டும் “சமாதான படுத்தினான்.

மூர்த்தி சொன்னபடி திருமணதிற்கு முதல் நாள் இரவுக் குழந்தையை அழைத்து வந்துவிட்டார்.

அடுத்தநாள் அருணும் அருவியும் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை ஓதினர்.

“கெட்டிமேளம்… கெட்டி மேளம்…” ஐயர் தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுக்க, நாதஸ்வரம் கீதமாய் இசைக்க அவள் கழுத்தில் இரண்டாவதாக மாங்கல்யம் ஏறியது.

இருளாய் இருந்த அவள் வாழ்வில் வெளிச்சமாய் மெழுகேற்ற செய்யவென அவள் வாழ்வில் கணவனாய் நுழைந்திருந்தான்அவன்… அவளின் குழந்தையின் தந்தையானான்.