மோகனங்கள் பேசுதடி!12

eiL5KAD79398-b29d882e

மோகனம் 12

உறங்குகின்ற விழிகளுக்குள்
உறங்காத நினைவுகள்
நடத்தும் ஒளிக் காட்சிகனவு…

விடிந்தால் அவள் இன்னொருவனின் மனைவி நினைக்கும்போதே அவளின் உடல் தீயாய் வெந்தது.

மகளை இறுக அணைத்தப்படி கண்ணை மூடி படுத்திருந்தவளின் விழிகளுக்குள் அடுத்த நாள் நடக்கும் நிகழ்வை நினைத்து கலங்கியது.

சந்தானமூர்த்தி எப்போது குழந்தையை அருவியிடம் ஒப்படைத்தாரோ அப்போதிலிருந்து பூவினியை யாரிடமும் குடுக்காமல் தன் பிடியிலே வைத்திருந்தாள்.

பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனைகள் தான். இதில் சிலர் கிண்டலடித்தும் சென்றனர்.

அவர்களை எல்லாம் அருவி கண்டுக்கொள்ளவே இல்லை. இதில் குழந்தையும் வேறு பயந்திருக்க, அன்னை உளம் மகளுக்காய் தவியாய் தவித்தது.

இவளின் நிலை உணர்ந்தவர்கள் இவளை பாவமாக தான் பார்த்தனர்.

மஞ்சுளா தான் அவள் அருகில் வந்தவர்,”பயப்படாத டா. பூவினி இனி என்னோட பேத்தி .அவளை நான் வேற ஒருத்தனோட பொண்ணுன்னு நினைச்சு எல்லாம் பழக மாட்டேன். என் பையனோட மகளா இந்த குடும்பத்தோட மூத்த பேத்தியா தான் பார்ப்பேன்” என்று அவள் தலையை கோதியவாறே சொல்ல, புன்னகைக்க முடியாமல் புன்னகைத்தாள்.

அவளின் புன்னகையை பார்த்ததும் தான் மஞ்சுளாவிற்கு சிறிது நிம்மதியே.

தூரத்திலிருந்து மொபைலில் பேசிய நிலையில் இருந்தவாறே, அருவியையும் குழந்தையையும் பார்த்தப்படி இருந்தான்.

அருண் கவனிப்பதை உணர்ந்த அருவிக்கு நெஞ்சில் பாரம் ஏறியது. அவனை தவிர்க்கவென அவளது அறைக்கு சென்று படுத்துவிட்டாள்.

இதனையெல்லாம் நினைத்த அருவிக்கு, மதியின் ஞாபகம் வர அவளுக்காய் துடித்தாள்.

தன் மகள் தன்னிடம் வந்துவிட்டாள் என்று சந்தோஷப்படுவதா, இல்லை இன்னும் மதி தந்தையின் பிடியில் இருப்பதை நினைத்து கலங்குவதா என்று தெரியாமல் தத்தளித்தாள்.

படுத்திருந்த அருவி விருட்டென எழுந்துக்கொண்டாள். அவளால் அங்கே படுத்திருக்கவே முடியவில்லை.

குழந்தையை விழியின் பொறுப்பில் கொடுத்துவிட்டு மாடிக்கு சென்றாள்.

குளிர் காற்று அவள் தேகத்தை இதமாய் பரவ, அவளுக்குள் அந்த காற்று தீயாய் தகித்தது.

அனைவரையும் குளிர்விக்கும் நிலா, இவளை பார்த்து மட்டும் எள்ளலாய் சிரிப்பது போல் இருந்தது. கண்ணை இறுக மூடிக்கொண்டாள்.

அவளை கண்காணிப்பதே வேலையாக வைத்திருக்கும் அருண், அவளை தேடி மேலேயே வந்துவிட்டான்.

“டீச்சரம்மா…!!!” மெல்லிய குரலில் அவன் அழைக்க, செவியில் அவன் அழைப்பு விழுந்தாலும் திரும்பாது நின்றாள்.

தனக்காக அல்லவா ஒரு நல்லவனை இங்கு கஷ்டப்படுத்துகிறேன். தோழி என்கிற பந்தத்தினால் மட்டுமே இதனை துணிந்து செய்கிறான். நண்பனை தன் சுயநலத்திற்காக பயன்ப்படுத்துகிறோமே என்று எண்ணமே பெண்ணை மனதால் உடைய வைத்தது.

அவளின் பக்கவாட்டில் வந்து நின்றவன், அவள் வெறிக்கும் அதே நிலவை இரசித்தவாறே,” எனக்கு உன்னோட நிலை புரியுது தேனருவி. உன்னோட இந்த நிலைக்கு நான் தான் முழு காரணமே. என் அம்மா பேசாம இருந்திருந்தா இப்படி ஒரு பிரச்சனை வந்தும் இருக்காது, நீயும் நானும் இப்படி நின்றிருக்கவும் மாட்டோம்” என்று வேதனையோடு அவன் கூறவே அவன் புறம் பார்வையை வீசினாள்.

“இல்ல… இந்த பிரச்சனை நீங்க இல்லன்னாலும் எப்படி இருந்தாலும் வரப்போவது தான். என்ன சீக்கிரமே வந்திட்டு அவ்வளவு தான் வித்தியாசம்” கூறி நகரமுற்ப்பட்டவளை அவனின் பேச்சால் நடையை தடைப்போட்டான்.

“இன்ன வரைக்கும் நீ எத்தனையோ கஷ்டத்தை அனுபவிச்சிருக்கலாம் தேனருவி. இது தான் நீ கடைசியா அனுபவிக்கிற கஷ்டம். நாளைல இருந்து உனக்கு சந்தோஷம் கொட்டி கிடைக்கப்போது. உன் லைஃப் கலர்ஃபுல்லா மாறப்போது டீச்சரம்மா ” என்று சொல்ல அவனை திரும்பி பார்த்து கசந்த முறுவல் புரிந்தாள்.

“ஒருநாள் நீ எனக்கு தேங்க்ஸ் சொல்ல தான் போற. இப்போ போய் தூங்கு. அம்மு பாவம்” என்று அவளை கீழே அனுப்பி வைத்தவன் பெருமூச்சொன்றை விட்டான்.

அடுத்தநாள் காலை யாரையும் எதிர்பார்க்காமல் விடிந்திருந்தது.

இந்த விடியல் பலரின் தேவைகளை கொண்டது.

மூர்த்திக்கு பணத்தேவை , அருவிக்கு குழந்தையின் நலன் ,சந்திராவிற்கு மகள்களின் நலன் , அருணிற்கு அருவியின் நிம்மதி, மஞ்சுளா மற்றும் கங்காதரனிற்கு மகனின் திருமணம் மற்றும் விழிக்கோ திருமணம் நிற்கவேண்டும் என பலருக்கும் பல வித தேவைகள்.

விடியலே திருமணத்தை வைத்திருக்க, திருமண வேலைகள் அனைத்தும் சுறுசுறுப்பாய் நடந்தேறியது.

விருந்தினர்கள் யாவும் அவர்களுக்குள் கிசுகிசுத்தப்படியே தான் இருந்தனர்.

‘ஏய்! உனக்கு இது தெரியுமா டி.‌ அந்த பொண்ணு புருஷன் வேணாம்னு விட்டுட்டு வந்துடுச்சாம்’ ஒருவள் சிறிதாய் பற்ற வைக்க, அது அழகாய் நாலா புறமும் பரவியது.

இறுதியில்,’ அது அப்படி இல்லையாம் டி. அவ நடத்தை சரியில்லைன்னு தான் அத்து விட்டுருக்கான். அவன் தப்பிச்சுக்கிட்டான் இந்த அப்பாவி மாட்டிக்கிட்டான் ‘ என பெண்ணை பற்றி நாலாவிதமாக பேசி அவர்களின் நேரத்தை நன்றாகவே போக்கினர்.

இதில் என்ன சந்தோஷம் கிடைத்ததோ இந்த மாதிரியான ஜென்மங்களுக்கு. இது இவர்களுக்கு வெறும் பேச்சுக்கள், ஆனால் கேட்டிருந்த இரண்டு குடும்பத்திற்கும் வேதனை… வேதனை மட்டுமே.

இவர்களின் பேச்சினை கேட்ட சந்திராவிற்கு பெற்ற மகளை நினைத்து மனம் கலங்க, அவர்களை திட்ட முடியாத கோபத்தில் எரித்திடும் பார்வையை பார்த்தார்.

ஆனால் வருங்கால மாமியாரோ களத்திலே இறங்கினார்.

அவர்களை நோக்கி அதிரடியாக சென்றவர்,” கல்யாணத்துக்கு வந்தோமா மொய்யை வச்சிட்டு சாப்ட்டு கிளம்பினோமான்னு இருங்க. என் மருமகளை பத்தி அவதூறா பேசுனீங்க, அப்புறம் நடக்குறதே வேற” மிரட்டி விட்டு திரும்பியர், மீண்டும் அவர்கள் புறம் திரும்பி” என் மகனுக்கும் தான் இது இரண்டாவது கல்யாணம். அப்போ அவன் கிட்ட எந்த பிரச்சனையும் இருக்காதா என்ன? பொண்ணுங்கன்னா எப்படி தெரியுமோ உங்களுக்கு எல்லாம்” வெறுப்போடு மொழிந்து விட்டு அகன்றார்.

கேட்டிருந்த சந்திராவிற்கு மனம் குளிர்ந்தது.

மணப்பெண் அறையிலோ, உலகமே இன்று அழிந்து விடும் என்ற செய்தி கிடைத்தது போல, அத்தனை சோகத்தையும் ஒத்திகைத்து எடுத்தது போல் அங்கே நிலைக்கண்ணாடியின் முன்பு அமர்ந்திருந்தாள்.

அடர் சிவப்பு வண்ண காஞ்சிப்பட்டில், தங்க நிற கரை வைத்திருக்க, புடவையை அவளுக்கு ஏற்றவாறு பாந்தமாக உடலோடு ஒட்டியிருக்க, அவளின் அழகை மேலும் அழகு சேர்த்தனர் அழகுக்கலை நிபுணர்கள்.

கழுத்திலும் காதிலும் கரத்திலும் தங்க ஆபரணங்கள் மின்னி, அவளுக்கு மேலும் மேலும் அழகு சேர்பித்தப்படி இருந்தது.

மஞ்சுளா இத்திருமணத்தில் எந்த வித குறையும் வந்திட கூடாது என பார்த்து பார்த்து செய்தார்.

எத்தனை அழகு அவளுக்கு சேர்பித்தாலும், மனம் கசங்கிய நிலையில் அல்லவா உள்ளது.

வெளியில் செயற்கையாக புன்னகைக்க முயன்றாலும், உள்ளுக்குள் அவள் மனம் ஓலமிட்டு கலங்கிய நிலையை காட்டாது துடியாய் துடித்தது.

‘என் வாழ்க்கை இதோட முடிந்து விட கூடாதா? நான் விளையாட்டு பொம்மை அல்ல’ மனம் கதறிய கதறல்கள் அவள் மட்டுமே அறிவாள்.

அப்போது அவள் பக்கத்தில் வந்த விழி,” இது வேணாமே க்கா. நாம வேற ஏதாவது செய்து மதியை மீட்கலாம் க்கா. ப்ளிஸ் இதை பண்ண வேணாமே” இறுதியாக அவளிடம் அவளுக்காய் கெஞ்சினாள்.

மனம் இறங்கினாள் இல்லை. கற்சிலையென அமர்ந்திருந்தாள்.

ஆம்! சிலை தான்!

அவளை சிலையாக மாற்றியது அவளுக்கு உயிர் கொடுத்தவரே. வரம் கொடுத்தவரே அதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து இப்போது முழுதாக பிடுங்கிக் கொண்டார்.

நேரம் போக போக செயற்கை புன்னகையும் மறைந்தது.

மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை ஸ்ரத்தையாக அருண் மறுமொழி புரிய, திருமண கோலத்தில் முகத்தில் எந்த விதமான உணர்வுகளையும் பிரதிபலிக்காது, நிர்மலமான முகத்தோடு மணமகன் அருண் பக்கத்தில் மேடையில் கையில் குழந்தையுடன் வந்தமர்ந்தாள் அருவி.

அவளுக்கு விழிகளில் கண்ணீர் கூட வற்றிப்போனது.

தனக்கு மட்டும் கடவுள், ஏன் இத்தனை கொடுமைகள் செய்கிறாரோ என்று புரியாமல் மனதோடு ரணப்பட்டாள்.

குழந்தையை தன்னிடமிருந்து யாராவது பரித்துவிடுவார்களோ என பயத்தோடு தன் மகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். மகளுமே மூர்த்தியை பார்த்து பயத்தோடு அன்னையோடு ஒன்றி‌யது.

அவளை ஐயர் அழைத்திடும் நேரமாய் பார்த்து, சந்தானமூர்த்தி மகளை எச்சரித்திட்டு வந்திருக்க, அதுவே இப்போது ஒருவித நடுக்கத்தை அவளுக்கு கொடுத்திருந்தது.

அருவியின் பக்கத்தில் மணக்கோலத்துடன் அமர்ந்திருந்த அருணோ,” சில் தேனருவி, பயப்படாத உனக்காக ஒரு நண்பனா நான் இருக்கேன் உன் வாழ்க்கையை செழிக்க வைக்க ” அன்போடு அருண் மொழிந்திட, மனதின் வலியை உள்ளாரே மறைத்து வைத்து வெளியே புன்னகைக்க முயன்றாள்.

முகம் புன்னகைத்தாலும் விழி தனது வலியையும் வேதனையும் அப்பட்டமாக காட்டியது.

ஐயர் மந்திரங்கள் ஓத, மகளது திருமணத்தினால் கிடைக்க இருக்கும் வரவுகளை எண்ணி சொர்கத்தில் மிதந்தார் சந்தானமூர்த்தி.

மகளின் வாழ்வு இப்படி விளையாட்டு பொருள் போல், கணவனால் பந்தாடப்படுக்கிறதே எண்ணி உள்ளுக்குள் வருத்தப்பட மட்டுமே முடிந்தது அந்த அன்னையால்.

கணவனை மீறி ஒருவார்த்தை கூட பேச முடியவில்லை. அவரது கைபொம்மையாய் இருக்கிறதை நினைத்து வெட்கினார் சந்திரா.

அதிலும் இப்போது கடைசி மகள் அவர் பிடியில்…

நண்பனாய் அவளுக்காக அத்தனை நேரம் அமர்ந்திருந்த அருணின் இதழ்கள் மெதுமெதுவாக புன்னகைத்தன.

அதற்கு காரணம் அவன்… மண்டபத்தின் திரையில் தெரிந்த   தம்பியின் பிம்பம். அதுமட்டுமல்லாது  அவனுக்கு பின்பே வரும் நபர்களை கண்டும் தான்.

அருவியின் புறம் திரும்பியவன்,” உன் லைஃபோட கலர்ஃபுல் வருது பாரு” சொல்லவும் , அருணை தான் பார்த்தாள்.

” இங்க இல்ல அங்க…” என வாசலை நோக்கி அவளின் தாடையை பிடித்து திருப்பினான்.

அதுவரை இருண்ட முகமாக இருந்த அருவி மற்றும் பூவினியின் முகங்கள் மெதுவாய் புன்னகையில் விரிந்தது.

அருவியை போல மேடையில் மணமக்களை பார்த்திருந்தவர்களும் திரும்ப, அங்கே விஷ்வாவும் அவன் பின்னே ஜீவாவும் வர, அவன் பக்கத்தில் மதி வந்து கொண்டிருந்தாள்.

அருவியின் புன்னகை மதியாக இருந்தாலும், குழந்தையின் புன்னகை விஷ்வா மட்டுமே.

அன்னையால் கூட கொண்டு வர முடியாத புன்னகையை விஷ்வா கொண்டு வந்திருந்தான்.

மூர்த்தி விஷ்வாவை பார்த்து அதிர்ந்து போய் நின்றவர், பின்னால் வரும் மதியை கண்டு தூக்கிவாரிப்போட்டது.

சந்திரா ஓடிச்சென்று மகளை அணைத்து கண்ணீர் விட்டார்.

மண்டபத்திலிருந்த அனைவரும் புரியாது பார்க்க, அருண் மேடையை விட்டு எழுந்தான்.

அவனை விடவும் வேகமாக எழுந்த குழந்தை விஷ்வாவை நோக்கி ஓடியது “அப்பா…”என்ற அழைப்போடு.

அன்னை மகள் பாசப்போராட்டத்தை கைக்கட்டி பார்த்திருந்த விஷ்வா, மகளின் இந்த அழைப்பில் அவனின் விழிகள் வேகமாய் சந்தோஷ மிகுதியில் நீர் கோர்த்தது.

ஓடிவரும் குழந்தையை தூக்கிக் கொண்டவன் முகமெங்கும் முத்தத்தை பதிக்க, அவனுக்கு ஈடு கொடுத்தது குட்டி.

“என்னை என்னென்னு சொல்லி கூப்பிட்ட செல்லம்?” ஆனந்த மிகுதியில் கேட்க,

“அப்பா…அப்பா…” குழந்தை அவனை கட்டிக்கொண்டு சொன்னது.

மீண்டும் மீண்டும் சொல்ல சொல்லி கேட்டு அவன் புது உலகத்திற்குள் பயணிக்க, மூர்த்தி அவனிடமிருந்து குழந்தையை பிரித்து கீழே விட்டவர், அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.

“ராஸ்கல் நீ என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணனும்னே கங்கனம் கட்டிக்கிட்டு இருக்கியா ” சட்டையை பிடித்து உலுக்க, அதை லாவாக எடுத்து விட்டவன் பயத்தில் நடுங்கிய குழந்தையை தூக்கி சமாதானப் படுத்தினான்.

ஏதோ புரியாத படம் பார்ப்பது அங்கிருந்தவர்கள் பார்க்க, மஞ்சுளா தான்” விஷ்வா இங்க என்ன நடக்குது? சம்பந்தி நீங்க எதுக்கு இவனை அடிச்சீங்க?” கேட்டவாறே அவர்களை நெருங்கினார்.

“இவன் என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணவே வந்திருக்கான் தங்கச்சி.இந்த கல்யாணத்தை நிறுத்த தான் வந்திருக்கான் நாயி” மூர்த்தி புகார் வாசிக்க,

“இவன் என்னோட ரெண்டாவது பையன் விஷ்வப்ரசாத் அண்ணா. அவன் மேல நீங்க அபாண்டமா பேசுறதை நான் கேட்டுட்டு இருக்க மாட்டேன்” கண்டனத்துடன் சொல்ல, கண்கள் விரிந்தது மூர்த்திக்கு.

“இவனா உங்க இரண்டாவது மகன்?”விஷ்வாவை காட்டி மூர்த்தி வினவ,

“ஆமாம்!அவன் என் தம்பியே தான். இனி உங்க மூத்த மருமகனும் கூட” சொன்னப்படி இறங்கினான் அருண்.

மூர்த்தியோடு அனைவரும் குழப்பத்தோடு அருணை பார்க்க,” என்ன உளறல் இது அருண்” கங்காதரன் மகனை கூர்ந்து பார்த்து கேட்க,

“இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல முடியாது ப்பா. விஷ்வாவோட சந்தோஷம் மொத்தமும் அருவியும் பூவினியும் தான். அதை கெடுத்திடாதீங்க” தந்தையிடம் சொன்னவன்,” போதும் டா. உன் பாசப் போராட்டத்தை கொஞ்ச நிறுத்திட்டு என் ப்ரெண்ட் கழுத்துல தாலி கட்டுற வழியை பாரு” கிண்டலாய் மொழிய அசடு வழிந்தான் விஷ்வா.

“முடியாது… முடியாது…அது நடக்காது” அதுவரை மேடையில் திக்பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தவள் எழுந்து கொண்டாள்.

அருணிடம் வந்தவள்,” நீங்க எனக்கு யாரும் செய்ய முடியாத விஷயத்தை எனக்காக செய்ய துணிந்தீங்க. இதோ என் தங்கச்சியை கூட என்கிட்ட கொடுத்துட்டீங்க.‌ அதுக்காக நீங்க சொல்ற எல்லாத்தையும் என்னால செய்திட முடியாது. மதிக்காக தான் இந்த கல்யாணமே அவளே வந்த பிறகு இனி எதற்கு இத்திருமணம் அதுவும் இவனோடு?” கோபமாய் கேள்வி கேட்க, அருவியை கண்டுக்காது குழந்தையோடு அய்க்கியமானான் விஷ்வா.

அருண்,”நான் எதையும் செய்யல‌ தேனருவி. நான் ஒரு கருவி அவ்வளவு தான். இது அனைத்தையும் செஞ்சது விஷ்வா தான்.நீ இப்படின்னு சொன்னதுல இருந்து அவன் ஒரு பொட்டு தூங்கல.இப்ப தான் அவன் முகத்துல சிரிப்பே வருது”

“எல்லாம் நடிப்பு. முன்பு நேரடியா ஏமாத்துனான் , இப்போ உங்க மூலமா செய்றான் ” என்றவள் குழந்தையை அவனிடமிருந்து பிடுங்க முயன்றாள்.

குழந்தை விஷ்வாவின் கழுத்தை இறுக கட்டிக்கொண்டு வரமாட்டேன் என்று அடம்பிடித்தது.

“விடு அருவி. குழந்தையை கஷ்டப்படுத்தாத”விஷ்வா பொறுமையாய் கூற,

“அவ‌‌ என் பொண்ணு…”

“நம்ம பொண்ணு…”

“இல்ல என் பொண்ணு…”

“நம்ம பொண்ணு…”

இருவரும் மாறிமாறி விவாதம் புரிய, விழி குழந்தையை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.

“நிறுத்துங்க…” மஞ்சுளா சூழ்நிலை புரிந்து சொன்னவர் இருவரையும் இழுத்துச் சென்றார். அவரோடு மொத்த குடும்பமும் பின்தொடர்ந்தது.

மண்டபத்தில் மீண்டுமொரு சலசலப்பு.

அறைக்கு வந்தவர்,” இங்க என்ன நடக்குது? “கேட்க, அதுவே மற்றவர்களுக்கும் கேள்வியாய் இருந்தது.

விஷ்வா,” நாங்க லவ் பண்றோம்” சொல்ல, கண்கள் விரிந்தது அருவிக்கு. அவளின் இந்த முகபாவத்தில் மெல்லிதாக சிரிப்பு வந்தது விஷ்வாக்கு.

“விளையாடுறீயா விஷ்வா? நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறீயா?” மஞ்சுளா மகனின் இப்பேச்சில் காட்டமாய் வினவினார்.

“இல்ல ம்மா  நான் காதலிச்சேன்.ஆனா நானே அவளை நோகடிச்சிட்டு வந்தேன். அந்த காதலுக்கு பயந்து தான் ஓடி ஒளிந்தது எல்லாம்”

“இல்ல உங்க மகன் பொய் சொல்றான். அவன் என்னை ஏமாத்திட்டான்.நம்பிக்கை துரோகம் செய்தான்” உணர்ச்சிவசப்பட்டு பேச, கேட்டவர்களுக்கு அது வேறு விதமாய் புரிந்தது.

இருவரும்  வேறொன்றை முன்நிறுத்தி சொல்ல, அங்கிருந்தவர்கள் ஒன்றை புரிந்து கொண்டார்கள். அதுவும் கூட இவர்களது பேச்சிற்கு ஒத்து போனது.

ஆக இவர்கள் காதலித்தவர்கள் என்று முடிவுக்கு வந்துவிட்டனர்.

“நீங்க காதலிச்சீங்கன்னா அதை எங்க கிட்ட சொல்லியிருக்கணும். இப்படியா நடுசபையில வச்சி குடும்பத்தை அசிங்கப்டுத்துவீங்க” மஞ்சுளா கண்டனத்துடன் காரமாய் மொழிய,

“நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை ஆண்டி “அருவி அவள் நிலையை கூற முயலவும், அவளது மகள் அப்பா என்று விஷ்வாவிடம் ஓடியது.

மகளே அருவிக்கு எதிராய் இருந்தாள்.

“ம்மா… அப்பா ம்மா… சீனிஅர் ம்மா…” குழந்தை விடாது விஷ்வாவோடு ஒன்றியவாறே சொல்ல, இங்கு அருவி சொல்ல வருவதை யாரும் கேட்க தயார்நிலையில் இல்லை.

கிடைப்பது லாபம் என்று மூர்த்தி அடக்கியே வாசித்தார்.

அருண் தான்,” அவனோட வாழ்க்கை தேனருவி தான். அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ சண்டை சோ பிரிஞ்சிட்டாங்க. அதை காரணமா காட்டியே இவங்களோட பாதை மாறிடுச்சு. இப்போ அது நேர்பட ஒரு வாய்ப்பு. அதை கெடுத்திடாதீங்க” கூறி மாலையை விஷ்வா கழுத்தில் மாட்டிவிட்டான்.

அங்கே அடுத்து யாரும் அருவி சொல்ல வருவதை கேட்கவில்லை. அருண் கூறுவது தான் உண்மையாக இருக்கும் என நினைத்து, விஷ்வாவை மாப்பிள்ளையாக்கி அருவியை அவன் பக்கத்தில் அமரவைத்தும் விட்டனர்.

இந்த முறையும் இவ்வுலகம் விஷ்வா சொல்வதையே கேட்க, அனைவரையும் அந்த நேரம் வெறுத்து தள்ளினாள்.

இங்கே பாதி குடும்பம் கெட்டு நாசமாய் போவதற்கு காரணமே காது கொடுத்து கேட்காதது தான்.

காது கொடுத்து மற்றவர்கள் என்ன சொல்கீறார்கள் என்று கேட்டால் போதும் பாதி பிரச்சனைகள் குறையும். அதை யாரும் செய்வதில்லை.

எண்ணெயில் தீய்ந்து போன கடுகாய் விஷ்வா மற்றும் பூவினி பக்கத்தில் அமர்ந்திருக்க, விஷ்வாவோ குழந்தையோடு சடங்குகளை செய்தான்.

ஐயர் வேதங்கள் ஓதி மணமகன் கையில் தாலியை எடுத்துக் கொடுக்க, தேவர்களின் ஆசியோடு பெற்றோர்களின் முன்னிலையில் விஷ்வா மூன்று முடிச்சிட்டு அருவியை தன்னில் சரிபாதியாய் ஆக்கினான்.

அருவி சந்தானமூர்த்தியிலிருந்து திருமதி அருவி விஷ்வப்ரசாத்தாக மாறியிருந்தாள்.

அது  பெயரளவில்லே மட்டுமே வந்த மாற்றம். அந்த நொடி அவளின் மொத்த வெறுப்பையும் சம்பாதித்திருந்தான் விஷ்வா…

வெறுப்பையும் தாண்டின பாசம் இவர்களுக்குள் உள்ளது.