யாகம் 14

யாகம் பதினான்கு

 

நிரைகலசம் முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி அலங்கரிக்கப்பட்டிருக்க, கமலமும் சாமந்தியும் தோரணங்களாக தொங்க, அக்கினி குண்டத்திற்கு முன்னமர்ந்து, மந்திரத்தை ஒப்புவித்துக் கொண்டிருந்தான் ஹஸ்வந்.

 

பட்டு வேட்டி, சட்டை உயரமானவனை இன்னும் வசிகரமாக காட்ட, அவனோ தூங்கிவிழும் கண்களை நித்திரா தேவியிடமிருந்து சிரமப்பட்டு, விடுதலை வாங்க போறாடியவன், “மனிசன் தூங்குற நேரத்துல கல்யாணம் ஒன்னு தேவையா? சரிதான் இனி ஜென்மத்துக்கும் நிம்மதியா தூங்க கூடாதுனு இப்போவே ட்ரைனிங் போல”, 

 

என்னுடைய கஸ்டம் எனக்கு என்பதாக, உள்ளுக்குள் புகைந்தவன், கண்களை மட்டும் சுழலவிட்டு மணமேடையின் கீழ் கதிரையில் ஐக்கியமாகியிருக்கும் பெரியவர்களை நோக்கினான்

 

“எல்லாம் இதுங்க படுத்தின பாடு” வஞ்சித்தவன், இசை கடத்தப்பட்டபின் நிகழ்ந்தவைகளை மீட்டிப் பார்த்தான். 

 

அன்று; நடராஜன் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு தரையில் வீழ்ந்து கிடக்க, கவியோ மெதுவாகவே தயாராகி கீழே வந்தாள். “மாமா, கிளம்பலாமா? நான் எல்லாம் எடுத்து வைச்சிட்டேன்” பேசிக் கொண்டே கதவினருகில் வந்தவள் தன் மாமாவின் பதில் கிடைக்காமல் போக, வேகமாக கதவைத் திறந்தாள்.

 

“ஐயோ! மாமா உங்களுக்கு என்ன ஆச்சு” கூச்சலிட்டுக் கொண்டே, முட்டியிட்டு அவரைத் தொட, அவருடல் ஜில்லிட்டிருந்தது. அடுத்து என்ன? யோசனைக்கு விடையாக, இவள் சத்தத்தில் வீட்டினுள் ஓடிவந்த காவலாளி உதவ, நடராஜனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

 

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட, செய்தி பிரசாத், இந்தர் மற்றும் அமராவிற்கு சேர்பிக்கப்பட்டது. பிரசாத்தும் படபிடிப்பை பாதியில் நிருத்திவிட்டு வைத்தியசாலைக்கு புறப்பட்டிருக்க,

 

இந்தரும் அமராவும் கூட வைத்தியசாலைக்கு வந்திருந்தனர். இசையும் சற்று நேரத்திற்கு முன்னே கண்விழித்திருக்க, அவள் தந்தையைக் காணவேண்டியும், அவரின் உடல்நிலை பற்றி அறியவேண்டியும் சிகிச்சையறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

சிவகாமியோ, தொடர் அதிர்ச்சிகளால் தாழ முடியாமல் இருக்கையில் ‘பொத்’ என அமர்ந்தார். வேலுவும் மேகவியும் அவரின் இருபுறம் தோள்களைப் பற்றி ஆறுதல் கூற, அவர் நயனத்தில் நீர் கோடாக இறங்கி கழுத்து வழியே ஆறாக ஓடியது.

 

அதே நேரம்; ஹஸ்வந் இசையை நலம் விசாரிப்பதற்காக அங்கு வர, காந்திமதி தகவலை அவனுக்கு வழங்கி அவனுடனே இவர்களைச் சந்திக்க வந்தார்.

 

“அத்தை! மாமாவுக்கு எதுவும் ஆகாது. நீங்க தைரியமா இருக்வேண்டிய சந்தர்பத்தில மனச விட்டுடாதிங்க.” சமாதானப்படுத்த, 

 

“அழாதிங்க அம்மா, இந்த ஹாஸ்பிடல் சரி வரலனா, வேறு எங்காவது காட்டலாம். நமக்கிட்ட இல்லாத பணமா” இந்தர் பேச,

 

“அதுலாம் இந்த ஹாஸ்பிடல்லேயே டாப்லெவல் கார்டியோ இருக்காங்க” வெட்டிப் பேசிய ஹஸ்வந், “பணம் இருக்காம் பணம் அப்போ எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்தாங்களாம். திமிர் பிடிச்சவன்” இந்தரின் காதுபடவே முணுமுணுத்தான்.

 

“ஸ்ஷூ, கண்ணா சும்மா இருடா. மிஸ்டர் நாங்க பாத்துப்போம். எங்க டாக்டர்ஸ்கு முடியலனா, வெளிநாட்டுல இருந்து சோர்ஸ் எடுக்க எங்களால முடியும்” காந்திமதி கூற,

 

அமராவோ, இந்தரும் ஹஸ்வந்தும் சண்டைக்கு நிற்பது போன்ற தோற்றத்தில் பல்லைக் கடித்து முறைப்பதைப் பார்த்து, சுவர் பக்கமாக திரும்பி தன் முறுவலை மறைக்க பெரும்பாடு பட்டாள். அவள் மனமோ ‘சரிதான்’ என்று கூறிக் கொண்டது.

 

தீவிர பிரிவினுள்ளே, தான் பூமியில் உதிப்பதற்கு வித்திட்ட ஜீவன், பல்வேறு கருவிகளுக்கு நடுவே துன்புறுவதை ஏறிட்ட இசைக்குள் துயரம் தொண்டையை அடைத்தும், ஒரு வைத்தியராக, இதய சத்திரசிகிச்சை நிபுனருடன் சேவையில் ஈடுபட்டாள்.

 

கிட்டத்தட்ட, மூன்று மணிநேரங்கள் போராட்டத்தின் பின்பே, நடராஜனின் ஊசலாடும் உயிர் எமனின் பாசக்கையிறுக்கு அகப்படாமல் அவரிடமே தொத்திக் கொண்டது. உயிர்காக்கும் பணியினை முடித்த வைத்தியர்கள், தாதியொருவரை நோயளிக்குத் துணையாக விடுத்தி வெளியேறினர்.

 

வெளியில், “டாக்டர், வாட் ஹெபன்ட் டூ ஹிம்” இந்தர் விசாரிக்க, “நத்திங் டூ வொரி, இசைபிரபா யூ கேன் எஸ்பிலைன் இட் நௌவ்” இதயநிபுனர் செல்ல, 

அங்கு பிரசாத்தும் வந்து சேர்ந்தான். 

 

படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு வரும் போதே, வைத்தியசாலையின் நிர்வாகியிடம் பேசிய கார்த்திக், பிரசாத்தின் வண்டியை, பின்பக்க ‘அவசர வெளியேற்றம்’ எனும் பதாகை வைக்கப்பட்ட நுழைவாயிலினூடக ஓட்டி வந்து, பிரசாத்தை பொதுமக்கள் அடையாளம் கண்டு கொள்ளும் முன்பே,

 

தொப்பி, கண்ணாடி, முகமுடி அணிந்து தன் முகத்தை முழுவதுமாக மறைத்த பிரசாத்தை உயர்வர்க்கத்தினருக்காக தனித் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த இப்பிரிவுக்கு அழைத்து வந்தான். அதற்கான காரணமும் உண்டல்லவா?

 

யாராவது தெரியாத்தனமாக, ‘நடிகர் பிரசாத் வைத்தியசாலையில்’ இரண்டு புகைப்படங்களில் இவனது உருவத்தை பிரசுரித்தால் போதும், பின் வைத்தியசாலைக் கட்டிடமே ரசிகர், ஊடகம் என அமளியில் அதிர்ந்துவிடும்.

 

சில சமயங்களில் பிரபலமாக உலாவுவதும் ஆபத்தே. “அப்பாக்கு மேஜர் ஹாட் அட்டாக். சிவியர் சிச்சுவேஷன் தான். பட் நேரத்துக்கு தாமதிக்காம ஹாஸ்பிடல் கொண்டு வந்திருந்தா, இப்படி…” முடிக்க முடியாமல் தொண்டை அடைக்க, இசை கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுக்க ஆரம்பித்தது.

 

“இசை”, “பிரபா” அவளின் முதுகுக்குப் பின்னால் இரண்டு ஆடவர்களின் குரல் ஒருமித்து  ஒலிக்க, பீரிட்டு அழ ஆரம்பித்தவள், நன்னீரிலே துஞ்சும் அல்லிமலர்கள் சந்திரனைக் கண்டு அலர்வது போல், வதங்கிய தண்டுகள் ஸ்திரம் பெற தன் அண்ணனின் நெஞ்சில் புதைந்து கொள்ள,

 

“பிரபா” என விளித்த ஹஸ்வந், முகம் சோபையிழந்து, தலையைக் கோதும் போது, பக்கவாடாக பிரசாத்தும் அவன் மார்பிலிருந்து முகத்தை மட்டும் நகர்த்தி இசையும் அவனையே பார்த்தனர். 

 

“அப்பாக்கு எதுவும் இல்லைடா” அவள் முதுகில் பிரசாத் நீவி விட, அவளின் நெடியவனோ ‘ஒன்னுமில்லை’ என கண்களை மூடித் திறந்தான்.

 

“மேகா! உன்னைத் தானேமா மாமாவ கவனிக்கச் சொல்லி விட்டுட்டுப் போனோம். என்னதான் உன் கல்யாணத்தை நான் நிறுத்தி, என் தேவாவ கட்டிக்கிட்ட கோபம் என்மேல இருந்தாலும், ஒரு வாட்டி நான் சொன்னத காதில எடுத்து இருந்தா நிலமை இவ்வளவு தீவிரமாகி இருக்காது இல்லையா?”,

 

மென்மையாக கேட்டாலும் அழுத்தமாக உச்சரித்தாள் அமரா, “மேகம், நீ இப்படி பண்ணுவனு நான் எதிர்பாக்கவேயில்லை” கண்டிப்பும் அதிருப்தியும் இந்தரின் குரலில்.

 

“இல்..இல்லை, நான் குளிச்சிட்டு வரும் போதே…. மாமா என்னைக் கூப்பிட்டு இருப்பாரா? நான் தான் கவனி..கவனிக்வில்லையா? அப்பா வேணும்…நான் பண்ணல”, 

 

நடராஜன் மயங்கிக் கிடந்த அதிர்ச்சியிலிருந்தே மீளாத கவி, இவர்களிருவரின் அதட்டல் மிரட்டலின் பலனாக தனக்குள் ஒடுங்கிப்போனவள்.

 

வேலுவே மகளை உச்சிமுகர, பிரசாத்தும் இசையும் இப்போது கவியைத் தேற்றவேண்டி, “இப்போ அப்பாக்கு சரியாகிடிச்சு கவிக் குட்டி”, “அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில எழுந்திருச்சி, என் கவியை யாரு அழவைச்சதுனு எங்களத் திட்டப்போறார்” என பேசி அவளை தெளிவுபடுத்தினர்.

 

நிலமை சற்று சீரடைய, “இசை, நேத்து என்ன ஆச்சு?” பிரசாத் அவளிடம் கேட்க, “அது அண்ணா…” எனும் போதே, “நாம கொஞ்சம் தனியாக பேசலாமா?” ஹஸ்வந் குறுக்கிட்டான்.

 

“சரி, வாங்க” அத்தளத்தின் கடைசி மூலையில் போடப்பட்டிருந்த மேசையை நோக்கி அவன் எட்டுக்களை வைக்க, இசை மற்றும் ஹஸ்வந் அவனைத் தொடர, அமராவும் இந்தரும் ஒருவரை ஒருவர் கேள்வியாக ஏறிட்டனர்.

 

மேசையை நோக்கி நடந்த பிரசாத்தின் இமைகளுக்குள் ஒருமணி நேரத்துக்கு முன் அவன் பார்த்த புகைப்படம் மின்னி மறைந்தது. 

 

காரில் பயணிக்கும் போது தான் கார்த்திக் இசை இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வைக்கூற, பிரசாத்தின் தனிப்பட்ட தொலைபேசியில் ‘வாட்சப்’ இல் ஏதோ குறுஞ்செய்தி வந்து நிரம்பியது.

 

தனது ‘ஐபொட்’ ஐ காதில் பொருத்தியவன், முதலில் தினேஸ் அனுப்பிய குரட்பதிவுகளை செவிமடுக்க, அதில் தினேஸ் கட்டைக்குரலில் கர்விக் கொண்டிருந்தான்.

 

“ஏன்யா, நீ மட்டும் தான் பொண்டாட்டியிருக்க, எல்லாப் பொண்ணுக் கூடவும் கூச்சமில்லாம தொட்டு நடிக்கிரேனு பார்த்தா, உன் தங்கச்சி உன்னை விட மோசமா இருப்பா போல. இதை உன் அப்பாட்ட கேட்டா, போனைக் கட்பண்ணுறான். நீயும் போனை ஆன்சர் பண்ண மாட்டியா, அது தான் இப்படி…” 

 

மேலும் மேலும் இசையின் நடத்தையின் மீது போலிச் சாயம் பூசி, அவளினை தூற்றியவன், ஹஸ்வந்துடனான புகைப்படங்களையும் அனுப்பி வைத்திருந்தான்.

 

அப் புகைப்படங்களைப் பார்த்த பிரசாத்துக்கு, என்ன என்று சொல்ல முடியாத உணர்வு. இத்தனைக்கும் இசை ஹஸ்வந்தை முத்தவிடுவதைத் தவிர அதில் எந்தவித கலங்கமான காட்சிகளும் ஔியிடப்படவில்லை.

 

இதைவிட நெருக்கமான புகைப்படங்களல்லவா, அமரா அவர்களின் திருமணத்தின் போது சபை முன் வீசியடித்திருந்தாள். ஆனால் அத்தனையும் பொய்யாகவே சித்தரிக்கப்பட்டது.

 

பிரசாத் உறுதிபூண்டவனாக, தினேஸ்க்கு அழைப்பைவிடுத்தவன். ‘நீ என்தங்கைக்கு மணாளனாக தகுதியில்லாதவன். இசையைக் குறிப்பிட்டு மேலும் தகாத வார்தையை விட்டால், உன் நிலை நிச்சயமற்றது’ என மிரட்டிவிட்டே அழைப்பைத் துண்டித்தான்.

 

வைத்தியசாலையில் இசையைச் சந்திக்கும் வரையிலும் கூட அவன் மனம், தினேஸின் கூற்றுடன் ஒப்பவில்லை, ஆனால் ‘பிரபா’ என ஹஸ்வந் அழைத்தவுடன் இசையின் விழிகளில் கண்ட துடிப்பிலேயே உண்மையை யூகித்து விட்டான்.

 

மேசையினை சுற்றிப் போடப்பட்டிருந்த கதிரையில் மூவரும் அமர, “சோ யூ மிஸ்டர்” என்க, “ஹஸ்வந்” முந்திக் கொண்டு அவனின் நாமத்தை உச்சரித்தாள் இசை.

 

“ஹஸ்வந், இசை உங்களுக்குள்ள என்ன இருக்குனு நீங்களே சொல்லி இருக்கலாம். இப்படி தினேஸ் மூலமா அப்பாவுக்குத் தெரிந்ததால் தான், அவருக்கு ஹாட்அட்டாக் வந்திருக்கு…” பிரசாத் முடிக்கும் முன்னே,

 

“அண்ணா” இசை அதிர்ச்சியடைய, “என்னங்க பிரபா இவரு சொல்றது, நமக்குள்ள என்ன?” ஹஸ்வந் இடையிட, ‘அப்போ இசையே வெளிப்படுத்தவில்லை போல’ பிரசாத் விளங்கியவனாக,

 

“இதைப் பாரு இசை, நீ தாமதிக்காம இவருக்கிட்ட சொல்லுறது நல்லது. இந்த அண்ணன் நீ என்ன முடிவெடுத்தாலும் உன் பக்கம் துணையா நிற்பேன்”, ஒரு அண்ணணாக பேசியவன்,

 

“எனக்குத் தெரிந்த, நான் வளர்த்த இசை எப்போவும் தையிரிமானவ, எதுக்கும் அஞ்சாம முன்னபோய் சண்டை போட்டு ஜெயிக்கிறவ…” அவள் தோளில் அழுத்தமாக தட்டிக் கொடுத்தவன், தன் தொலைபேசியில் புகைப்படங்களை பார்வையிடும் படி அவளிடம் கொடுத்துச் சென்றான்.

 

இசையோ, அவனின் பூடகமான பேச்சினை, ஒவ்வொரு சொல்லாக அலசி முடிவுக்கு வந்தவளாக, புகைப்படத்தை பார்த்தவள் ‘யாரு எடுத்திருப்பா? அந்த சைக்கோ தினேஸ் ஆள் விட்டு என்ன வேவு பாத்திருப்பான். அவன் பார்வையே சரி கிடையாது’

 

அடுத்தடுத்த புகைப்படத்தை தள்ளியவள் கை அசைய மறுத்தது, நேற்றிரவு கொடுக்கப்பட்ட முத்தக்காட்சியினில் விழிகள் நிலைக்குற்றியது. ‘இவனுக்கு கி…கிஸ் பண்ணி..’ வானத்தில் மிதப்பதாக உணர்வு அவளிடம்.

 

ஹஸ்வந்தோ, ‘என்னடா இது நமக்கு வந்த சோதனை’, விரல்களால் மேசையில் தளமிட்டுக் கொண்டிருந்தவன், இசையின் முகத்தில் நெடிக்கொருமுறை வந்துபோகும் ஜாலத்தினை அப்பட்டமாக ரசித்துக் கொண்டிருந்தான்.

 

என்ன முடிவெடுத்தாளோ, திடீரென “ஹஸ்வந், எங்கவீட்டோட மாப்பிள்ளையா வர சம்மதமா?” சிரிப்பில் அதரங்கள் துடிக்க, கண்களைக் கூட சிமிட்ட மறந்து, முகம் முழுவதும் செம்மைபூசிக் கொள்ள, அவள் கேட்க,

 

“என்னங்க?” புரியாமல் ஹஸ்வந் திணறவும், “இனிமேல் நான் தான் உங்களை என்னங்கனு கூப்பிடனும்னு ஆசைப்படுறேன்” என்றவள், இன்னும் அவன் தெளிவடையாமலிருக்க, “கருப்பும் வெள்ளையும் சேர்ந்து மஞ்சள்ல முடிபோடலாம்னு சொல்றேன்” என்றாள்.

 

“வாட்” அதிர்ந்தவன், பின் “மஞ்சள்ல முடி போட்டா போதுமா? ஐந்து பத்துனு ஜூனியர் டாக்டர், லாயர ரிவீல் பண்ண வேண்டாமா?” கண்சிமிட்டி குறும்புடன் கேட்டு அவன் சம்மதத்தைத் தெரிவிக்க, அவள் முகம் அந்திவானமாக சிவந்து விகாசித்தது.

 

நடராஜனும் ஐந்து நாட்களில் வீட்டுக்கு அனுப்ப‌ பட்ட போதிலும், வைத்தியர் “இனி அதிர்சிகளை தாங்க மாட்டார். வாழ்நாள் சுருங்கிக்கொண்டிருக்கிறது” என பிரசாத்திடமும் இசையிடமும் மட்டும் அறியப்படுத்தியிருந்தார்.

 

அதன் பின் பிரசாத்தே, இசையின் காதல் விடயத்தை தந்தையிடம் கூறி, ஹஸ்வந்தினைப் பற்றிய தகவலையும் திரட்டி, அவனும் இனத்தில் ஜாதியில் தங்களவர்களே என்று எடுத்துக் காட்டி தமக்கையின் திருமணத்திற்கு சம்மதமும் வாங்கியிருந்தான்.

 

ஹஸ்வந்தின் பெற்றவர்களிருவரும், ஏன் அவனுமே டெல்லியைச் சார்ந்தவன் என்பதால், மேலதிக விசாரனைகளை ரகு, கௌரியிடம் ஒப்படைக்களாம் என்று நடராஜன் கூற பிரசாத்தோ மறுப்பாக, அவன் நண்பனிடம் வேலையை ஒப்படைக்க, அவனும் நல்ல முடிவுகளையே வழங்கியிருந்தான்.

 

விளைவாக, அடுத்த வாரமே ஹஸ்வந்தின் பெற்றவர்கள் ‘சூம்’ செயலி மூலம் காணொளியில் தொடர்பு கொள்ளப்பட்டனர். நடராஜனின் உடல் நிலையைக் கருதி, அவரால் டெல்லி சென்று சம்மந்தம் பேச முடியாத நிலை, அதேபோல் கமலக்கண்ணன், தேவிக்கும் டெல்லியில் பணியை ஒத்திவைத்து விட்டு வரமுடியாத நிலை, 

 

ஆகையால் இவ்வாறு தொலைத்தொடர்பு சாதனம் மூலம் முதற்கட்ட பேச்சு வார்தை முடிக்கப்பட, திருமண தேதி இரண்டு வாரங்களிலும் அதன் முன் தினம் நிச்சயதார்தமும் சென்னையில் வைத்துக் கொள்ள நாட்களும் குறிக்கப்பட்டது.

 

அமராவே, திருமணத்திற்கு தேவையான நகை, புடவை, சீர் என அனைத்தையும் முன் நின்று கவனித்துக் கொண்டாள். வீட்டின் மருமகளாக அடியெடுத்து வைத்தவள் அப் பொறுப்பிலிருந்து நூலளவேனும் விளகாமல் நடந்து கொண்டது அனைவருக்கும் திருப்தியையே கொடுத்தது.

 

திருமணம் முடிந்து மாதங்கள் கடந்திருந்த போதும், தன் தாய் வீட்டிற்கு டெல்லிக்கு செல்லவேண்டும் என அமரா கேட்டுக் கொள்ளவேயில்லை. அதற்கான காரணம் பிரசாத்தின் படப்பிடிப்பென வெளியில் பூசிமொழுகியது இந்தருக்கும் அவளுக்குமிடையிலான உண்மை.

 

ஹஸ்வந்தும் இசையும் திருமண கனவில் திளைத்திருந்தாலும் அவர்களின் காதல் பரிபாசைகள் அழைப்பேசியிலே தொடரக் காரணமுமிருந்தது. அவன் சொல்லாமல் விட்ட தொழில் இரகசியமது. டெல்லி உயர் நீதிமன்றத்திலல்லவா அவன் வழக்கறிஞராக கடமையிலிருக்கிறான்.

 

“கேஸ்கு, அப்பில் வந்தாச்சு பிரபாமா. டீடெயில் எல்லாம் எடுக்கனும். நிச்சத்தன்னைக்கு வந்துடுவேனாம்” ஆயிரம் சாமாதப் புறாக்களைப் பறக்க விட்டே ஊருக்குப் புறப்பட்டிருந்தான்.

 

வாக்குறுதிகளுக்கிணங்க, நேற்று நிச்சயமும் தடல்புடலாக நடைபெற்று முடிய, இன்று மணக்கோலத்தில் அவன், அவனவளின் வருகைக்காக மணமேடையில் வழிபார்த்து காத்திருக்கிறான்.

 

என்னில் நீ பாதியா?

இல்லை உன்னில் நான் மீதியா? 

வலமும் இடமும் சமப்பட,

வாழ்வை வசப்படுத்துவோம்  

நம் கைப்பட!

 

அவள் வீழ்த்தினாள்….

 

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!