யாகம் 17

யாகம் பதினேழு

 

ஊசியிலை மரங்கள், ஆகாசத்தைத் தொடுமென நெடுமரமாக வளர்ந்து, வரிசையான தூண் போல அவ் வீட்டின் மதில் சுவருக்குப் பின்னால் நீண்டிருக்க, 

 

அவற்றின் ஒல்லியான இலைகள் சிறு சலசலப்பை  உண்டுபண்ணி, அவ்வீட்டின் திறந்து விடப்பட்டிருந்த சாரளத்தின் வழியே உள்நுழைந்து, அங்கே துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவனின் கேசத்தைக் கலைத்தது.

 

தான் எடுத்த காரியத்திலே கண்ணாய் இருப்பது போல அவனோ உடைகளைத் தன் பயணப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருக்க, அவன் அகத்தே ஒருத்தி தீயிட்டு வேகச்செய்து கொண்டிருந்தாள்.

 

நேற்றைய இரவு, உலகில் எத்தனையோ பேருக்கு உறக்கத்திற்காக இருளை வாரிவழங்க அவனுக்கும் அவனவளுக்கும் தூங்கா இரவாகவே நீண்டது.

 

தன் புதுமனைவி, அதிலும் நேற்றைய நாள் இரவில் ஏகாந்தத்தில் தனித்திருந்து பின் விடியலில் ஔியிழந்த கதையாக, காலையில் எவ்வாறு அழுதுவிட்டாள். எப்படியோ சமாதானம் செய்து, அவள் வீட்டிற்கே அழைத்து வந்த போதும் இசையிடம் அவனால் அதிகமாக ஒட்டி உறவாட முடியவில்லை.

 

ஒருபக்கம் வரிசையான சடங்குகள் மறுபக்கம் குடும்பத்தினர் ஊருக்கு திருப்பிச் செல்ல ஆயத்தங்களை செய்தாக வேண்டும், அதிலும் அவன் செல்லம் கொஞ்சும் ‘அமைரா’வைப் பாதுகாப்பாக யாரின் பார்வைக்கும் புலப்படாமல் ஊருக்கு அனுப்பவேண்டும் என தலையின் மேல் அதிக சுமைகளைச் சுமந்து,

 

அதனை இறக்கி வைக்கும் போது, சந்திரன் பூமியில் பவனிவரத் தொடங்கியிருக்க, ஹஸ்வந்தும் தன் சரிபாதியை தேடி அறைக்குள் நுழைந்தான்.

 

காலையில் இரண்டு முறை வந்துபோன அறைதான் இருப்பினும் அவன் அவ்வறையை சரியாக அலசிப் பார்க்கவில்லை ஆகையால், தன்னவள் இத்தனை நாள் ஜீவித்த நான்கு சுவருக்குள் அடைக்கப்பட்ட அறையை விழிகளால் ஆராய்ந்தான்.

 

அத்தனை நேர்த்தி என வகைப்படுத்த முடியாத அறைதான் அது, திருமணத்திற்காகவும் அதன் பின் இவனும் இங்கு தங்குவான் என்பதற்காகவும் சற்று அழகுபடுத்தப்பட்டிருந்த அவ்விடத்தின் ஒரு சுவரில், எழும்புக்கூடென்று ஆணியில் கை, கால்கள் விரித்து வைக்கப்பட்டு தொங்கவிடப்பட்ட நிலையில்,

அதன் அருகில் படிப்பதற்கான மேசைமீது, அவள் துறைசார் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க,

 

அப்புத்தகங்களுக்கு அருகில் பேனா தாங்கியானது அலங்கார வடிவமாகவும் அதன் நடுவில் அவளது குடும்ப உறுப்பினர்கள் அச்சுப்பதிப்பிக்கட்டிருக்க, ‘மை ஹூரோஸ்’ என அவள் அப்பா மற்றும் அண்ணாவின் புகைப்படத்தில் நேர்த்தியான கையெழுத்தில் எழுதி வைத்திருந்தாள் இசை.

 

அவ்வெழுத்துக்களை உச்சரித்தவன் உதடுகள் ஏளனமாக விரிந்தன, “சில ஸிரோங்க இங்க ஹீரோ வேசம்போடுது” முனங்கியவன், “எங்க பிரபாவைக் காணோம். அவகிட்ட பேசியாகணுமே” வாய் தொடர, கண்கள் கதவை வெறித்தது.

 

அவன் காத்திருப்பை உடைக்கவிரும்பாமல், பால் குவளையை ஏந்திக்கொண்டு உள்ளே வந்தாள் இசை. வந்தவள் எதையும் ஏன் ஹஸ்வந் என்ற நெடியவன் தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு தன் முழு உயரத்துக்கு நின்றிருந்ததைக் கூட அவள் கருத்தில் கொள்ளவில்லை. 

 

நேராக சென்று பால் குவளையை, கட்டில் அருகிலிருக்கும் குட்டி டீபாயில் வைத்தவள், தன்னுடலை மஞ்சத்தில் கிடத்திக் கொண்டாள். இவளின் நடவடிக்கைகளை இமைவெட்டாமல் பார்த்திருந்த ஹஸ்வந் பொறுமையைக் கையில் கெட்டியாக பிடித்துக் கொண்டு, மெத்தையின் மறுபுறம் வந்து படுத்துக் கொண்டு,

 

இசையின் இடையில் தன் வலக்கரத்தைப் பதித்து, தன் பக்கமாக அவளை இழுத்து அவன் கைவளைவிற்குள் கொண்டுவர, அவளோ ஹஸ்வந்தின் கரத்தைத் தட்டிவிட்டாள். அவளின் செய்கையில் குறும்புச் சிரிப்பொன்று ஒட்டிக் கொள்ள, அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன்,

 

“பிரபாக்கு என்னவாம்” என்றது தான் தாமதம், அடக்கி வைத்த ஆதங்கமத்தனையும் உடைப்பெடுக்க புயலென வார்த்தையால் அவளவனை சூரையாட ஆரம்பித்தாள். “என்னனா? என்ன அர்த்தம் ஹஸ்ஸூ? யாரு அவன்னு கேட்க வாறியா இல்ல, எவன் கூட என்னோட உடம்பை பகிர்ந்திட்டேன்னு கேட்கபோறியா? உனக்கும் உடம்பு தானே தேவை?” மூச்சை இழுத்து விட்டவள்,

 

“காலையில இருந்து ஒரு வார்த்தை சரியா பேசினியா? ஆனாப்பாரு ராத்திரிக்கு நான் தேவைப்படுறேன். என் முகத்தைப் பார்த்து உன்னால பேச முடியாதம் ஆனா என் உடம்பு உனக்குத் தேவையா?” ஆக்ரோசமாய் இசை கத்தத் தொடங்கவும், அவள் பேச்சின் சாரம்சம் அவனுக்கு நாரகாசமாகவிருக்க,

 

“பிரபா, என்னை சந்தேகப்படுறியா?” அவன் என்ன கூறவருகிறான், எதை விளக்க முனைகிறான் என்பதைக் காது கொடுத்துக் கேளாமல், “யாரு? நான் சந்தேகப் பட்டேனா? நீதான் ஹஸ்ஸூ அந்த மாப்பிங் பண்ணின ஃபோட்டோஸ பார்த்து என்ன சந்தேக படுற. இப்போ கூட அந்த ஃபோட்டோவில இருக்குற என்னோட உடம்பு இதுதானானு சந்தேகத்துல தான லைட்டக் கூட ஆஃப் பண்ணாம என்னைத் தொட்ட”,

 

“பிரபா”, அவளின் பேச்சுக்களில் தெளிக்கப்பட்டிரும் அமிலத்தைச் சுகிக்க முடியாமல், அத்தனை அதட்டலாக அந்த அறை அதிரும் வண்ணம் கத்தியிருந்தான் ஹஸ்வந்.

 

அதுவரை அவன் அருகில் படுக்கையில் சாய்ந்தவாரு கூச்சலிட்ட இசை, திமிரி எழும்பி காட்டுக்கத்தல் கத்தலானாள், “என்ன ஹஸ்ஸூ கோபமா வருதா உண்மை அது தானே? முடிஞ்சா என்னவிட்டு தூரமா இருந்துக்கோ. அப்போ நம்புறேன். நீ என்னை சந்தேகப்படல, அந்த ஃபோட்டோஸ நம்பலைனு” 

 

அவளின் குரலே அறையில் ஓங்கி ஒலித்தது. ஏதோ பேசுவதற்கு வாயெடுத்த ஹஸ்வந், அவளின் நயணங்களை ஏறிட அது அழுகையில் சிவந்து, வீங்கி கண்றிப்போயிருக்க, அவனால் அவளின் முகவாட்டத்தைக் கூட சகிக்க முடியவில்லை. பேசிப் புரியவைக்க பிராயத்தனப்பட்டு, இசையைக் கைகவளைவிற்குள் கொண்டுவந்தவனை எப்படி முடியுமோ, அப்படியே அடித்து தூரவிலக்கினாள் பாவை.

 

இசையின், முகத்தில் படிந்து எழில் கோலத்தைச் சிதைத்த அவளின் முடிகளை, செவிகளுக்கு பின்னால் ஒதுக்கிவிட்டவன், அறையின் பால்கனியில் சென்று நின்று கொண்டான். அவன் மனம் முழுவதும் எஞ்சியிருந்தது ரணம் மாத்திரமே.

 

சென்னையில் தான் முன்பு தங்கியிருந்த வீட்டில் அவன் பயன்படுத்திய ஆடைகள் வைத்தது வைத்தபடியிருக்க, அவற்றைப் பெட்டியில் அடுக்கி இசை வீட்டிற்கு கொண்டுசெல்லும் நோக்கில், வேலையில் இறங்கியவனின், ஆவி பொருள்; ஆதி அந்தம் என முற்றிலும் வியாபித்திருந்தது அவனின் ‘பிரபாவே’.

 

அடுத்தது எனச் சட்டையை மடிக்க, உடையடுக்கில் அவன் கரம் வைக்க அங்கு வெற்றிடமிருப்பதை அப்போது தான் உணர்ந்தான் ஹஸ்வந். “உப், நான் ராட்சசன் ஆவேன்னு பார்த்தா அவ ராட்சசியா மாறிட்டா. ஒரு வார்த்தை சொல்றத கேட்க முடியாத அளவு அப்படி என்ன கோபம் பிரபா? அதுவும் உன் ஹஸ்ஸூ மேலேயே?” யாருமற்ற அறையில் சத்தமாகவே அவன் உரைக்க,

 

“என்னடா வளர்ந்தவனே! தனிய பேசிட்டு இருக்க. சம்சாரியானதுல இருந்து உன் போக்கே சரியில்லியே” அவன் முதுகில் ஐவிரால் அழுத்த அடித்துக் கொண்டே கேட்டவன் வேறு யாருமல்ல, ஹஸ்வந்தின் இந்துமா தான்.

 

“இந்துமா! ஐ மிஸ் யூ” இந்தரின் தோளில், சிரசை முட்டிய ஹஸ்வந் முணுமுணுக்க, “ஹர்சு என்னடா கண்ணா”அவன் முதுகைத் தட்டிக் கொடுக்க, “அமரா எங்க?” அடுத்த கேள்வி ஹஸ்வந் கேட்டான்.

 

“என்னை வாசல்ல விட்டுட்டு, சின்னதா ஷாப்பிங்னு கிளம்பினா”.அவன் உதட்டைப் பிதுக்க, ஹஸ்வந்தோ அப்புகைப்படத்தின் பின்னணியை விளக்கி, இசை உச்சகோபத்தில் உழலுவதாக கூறினான்.

 

“மாப்புள ஹர்சு! விடுடா பார்த்துக்கலாம். பெஸ்ட் நீ ஒரு கிர்மினல் லாயர்டா. உணர்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காம, ஒரு வக்கிலா யோசி எல்லாமே சரியாகிடும்” இந்தர், ஹஸ்வந்தின் தோளில் தட்டிக் கொடுக்க, ஒரு தெளிவு வந்தவனாக,

 

“லவ் யூ இந்துமா” என இந்தரின் கன்னத்தை ஈரமாக்கி அவன் பழைய சில்மிசக் கண்ணாக உருமாற, “எத்தனை வாட்டி சொல்றது, ஏன்டா எச்சில் பண்ணுற?” கன்னத்தைத் துடைக்காமலே புன்னகையுடன் இந்தர் வினவ,

 

“நான் பண்ணலனா மட்டும், ஊருல இருக்குற பொண்ணுங்கல பண்ணவிடுவ பாரு. நீ கடைசி வர ஒண்டிக்கட்டதான் மாப்பு!” என இவன் வம்பளக்க, “அடேய், என் மதிப்புத் தெரியுமா?” இந்தர் பேசிக் கொண்டே அவனை அடிக்க எத்தனிக்க, ஹஸ்வந் ஓட ஆரம்பித்தான்.

 

அவன் ஓட இவன் துரத்த, பின் இவன் ஓட அவன் துரத்த என கட்டிலைச் சுற்றி ஓட்டப்பந்தயம் நடத்தி, கடைசியில் உடம்பு ஈடு கொடுக்காமல், படுக்கையில் வீழ்ந்த இருவரும் “ஹாஹா, ரொம்ப நாள் ஆச்சுல” என கெக்கரித்து, வயிற்றைப் பிடித்துக் கொண்டே,

 

இந்தரின் கால் பக்கம் ஹஸ்வந், இடவலமாக புள்ளடி வடிவவில் அவன் மீதே உருண்டு படுத்து நித்திரையில் ஆழ, இந்தரும் தன் ஹர்சுவின் உறக்கம் தொடரட்டும் என அவனும் இமையை மூடிக்கொண்டான்.

 

உறக்கத்தில் கேசத்தினை யாரோ கோதி, காற்றுக்கு எதிராக ஒதுக்கிவிடுவதை உணர்ந்த இந்தர், விழிகளை மெதுவாக விழித்தான். கட்டிலின் நடுவில் சம்மணமிட்டவாறு அமர்ந்திருந்த அவனின் பார்பி கேர்ள்,

 

வலது கையால் இவன் முடியையும் அதே போல இடது கையால் ஹஸ்வந்தின் முடியையும் ஒரே நேரத்தில் ஒதுக்கிவிட்டுக் கொண்டிருக்க, 

ஹஸ்வந்தும் விழித்திருந்தான்.

 

அடுத்த நொடியே, இருவரும் கட்டிலில் அரைவட்டமாக நீச்சலடித்து, பூஜை மலர்கள் எவ்வாறு தெய்வத்தாயின் பாதத்தில் சரணடையுமோ அது போல தலையை அவளின் மடியில் ஒப்படைத்தனர்.

 

“இன்னைக்கு மழை ஏதும் வரும்னு தோனுது. இரண்டு பேரும் என் மடில தூங்க அடிச்சிக்காம இருக்கிங்க. என் சமத்து தங்கக் கட்டிங்க” கூறிக் கொண்டே இருவரின் கன்னத்தையும் கிள்ளி உதடுகளில் ஒற்றிக் கொண்டாள்.

 

“நாங்க எப்போவும் குட் பாயிசாக்கும்” ஒருசேர இருவரும் உரைக்க, “பாரேன் செல்லக் குட்டிங்கல” மீண்டும் கொஞ்சியவள்,

 

“உங்க இரண்டு பேருக்கும் சர்ப்ரைஸ், குட்டா சின்னு வா வா” அவளின் தங்கங்களைத் தள்ளிக் கொண்டு சாப்பாட்டு மேசையின் முன் அமர்த்தியவள்,

 

“சிக்கன் பிரியாணி, மட்டன் ப்ரை, ஆப்பிள் வித் காரட் ரைத்தா” துள்ளலுடன் மூடிவைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பாத்திரங்களைத்திறக்க, 

 

“நீ சமைச்சியாடா” ஆண்கள் ஒரே கேள்வியைக் கேட்க, “எஸ், அமைராவ பார்த்த சந்தோசம் இன்னும் மனசு முழுக்க குத்தாட்டம் போடுது. ம்ஹ்ம் இங்க வந்ததுல இருந்து, அவ கூட நான் பேசவேயில்லயே. எங்க நான் பேசினா அம்முமா இப்போ வானு கூப்பிடுவா. அவ கூப்பிட்டா என்னால போக முடியாதே அந்த பயத்துல, நீங்க பேசுறியானு கேட்டாலும் வேணாம்னு சொல்லிட்டேன்.

 

ஆனா, இப்போ சின்னு கல்யாணத்தை வைச்சு அவளை இங்க அழைச்சிட்டு வந்து, மூனு நாள் வைச்சிட்டிருந்த சந்தோசம் தான், இன்னைக்கு சமைக்க தோணிச்சு” என்றவள் பெரிய விட்டத்தையுடை தட்டை எடுத்து வாசனை மூக்கின் உணர்வு நரம்புகளை திரிதூண்டி விட, பிரியாணியை வைத்தவள்,

 

“அதுதான் கடைக்குப் போய், எல்லாத்தயைும் வாங்கி வந்தா, இரண்டு ராஜாக்களும் தூக்கத்துல இருந்திங்க. நானே தனிய சமைச்சு உங்களை சர்ப்ரைஸ் பண்ணிட்டேன்” தன் தெத்துப் பற்களின் ஏற்ற, இறக்கத்துடன் கிளுங்க, அவளின் உட்சாகம் ஆடவர்களையும் தொற்றிக் கொண்டது.

 

“என் பொண்ணு இப்போ என்ன பண்ணுதோ” என இந்தர் யோசனையாய் இழுக்க, “என் பட்டு இப்போ விளையாடிட்டு இருக்கும்” என்ற ஹஸ்வந், “நம்ம இந்த வீட்டுல எல்லோரும் எப்போ மறுபடி சேர்ந்து இருக்கப் போறோமோ” என்றான்.

 

அவன் கூறியது போல, இந்த வீட்டின் உரிமை அவனுடையது மட்டும்மல்லவே! மூவர் பெயரிலும் சமபங்கு உரிமையில் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள வீடல்லவா இது!

 

“வளந்தவனே! எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகும். வா சாப்பிடு, இன்னைக்கு நானே உனக்கும் ஊட்டி விடுவேனாம்” என்ற இந்தர் மறைமுகமாக ஹஸ்வந்தின் காயத்திற்கும் மருந்திட்டு, ஒரே தட்டில் அமரா, ஹஸ்வந் இருவருக்கும ஊட்டியவன், அவனும் அதையே உண்டான்.

 

ஆழியில் முக்குளிப்பதோ, முத்தெடுப்பதோ கூட சுலபமே. ஆனால் பெண்ணின் ஆழ்மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் நூதன கீர்தனங்கள், படைத்தவனின் செவிகளுக்குக் கூட இனிய பாவாக ஏறாது.

 

மண்ணிற்கா?, இல்லை பிறப்பிடத்திற்கா? எனச் சண்டைபோடும் மழலையாக அலைகள் அடித்து வீச, அதன் மத்தியில் தன் பஞ்சுப்பொதிகைப் பாதங்களை நனையவிட்டவாரு நின்றிருந்தாள் இசைபிரபா.

 

அவளுக்குச் சற்றுத் தொலைவில் மரத்திலான பலகையிருக்கையில் கடலைக் கூட ஏறிடாமல் தன் அழைப்பேசியில் மூழ்கியிருந்த கவி, அப்பட்டமாக ரசித்துக் கொண்டிருந்தது, வேறு யாரையுமல்ல. அவளின் கண்ணாளனேயே. 

 

அவனுடைய சமுக வளையத் தளமான ‘இன்ஸ்டா’ செயலியில் பதிவேற்றப்பட்டிருந்த அவனின் விதவிதமான புகைப்படத்திலேயே லயித்திருந்தவள்,

 

‘ஹீ சோ கியூட்’ என பாடல்வரிகள் மனதில் ஓட, ‘ஆனாலும் இவரு ஸ்வீட் இல்லியே! மேகம் மேகம்னு சொல்லி என்ன மொத்தமா கவுத்திடுவார் போல. என் ஃபிரண்ட்ஸ் பேசிக்குற மாதிரி இவரு சம்ம ஹேண்ட்சம். கோபத்துல கூட கன்னம் குழிவிழ சிரிக்கும் போது அந்தக் குழிக்குள்ள நாம போய் விழுந்துட மாட்டோமானு தோனுதே. கவி உன் புத்தி போற போக்கு சரியில்லைடீ’ மனதோடு மாளிகை கட்டினாள் கவி.

 

கடந்த சில மாதங்களில், இரண்டு மூன்று தடவை இந்தர் அவள் கல்வி பயிலும் கல்லூரிக்கு வியாபார நோக்குடன் சென்றுள்ளான். அங்கு அவனை யாரும் அவளுடைய நண்பிகள் கண்டுவிட்டால் போதும், ஆசிரியர் என்ன பாடம் எடுக்கிறார் என்பதைக்கூட மறந்து, அவர்கள் அவனைச் செய்யும் வர்ணனைகள் ஏராளம்.

 

இப்படியாக நண்பிகள் கரைத்துக் கரைத்து நாளடைவில் மேகமும் காற்றான இந்தரின் மீது குளிர்மழை பொழியத் தயாரானாள். ஆனால் அவர்களின் வாழ்வினில் எந்த முன்னேற்றமுமில்லை என்பதே நிஜம்.

 

சில சமயம் சிரிப்பான், பல சமயம் முறைப்பான், எரிச்சலூட்டுவான், பின் சாமாதான தூது விடுவான். இப்படியாக இல்லறம் நகர, முன்பு போல் அல்லாமல் கவியும் அழுகையில் உடையாமல் அவனிடம் ஏட்டிக்குப் போட்டியாக வாயாட ஆரம்பித்திருந்தாள். இந்த மாற்றத்திற்கு காரணமானவன் எப்போதும் மௌனியாக அவளை தொடர்கிறான் என்பதை அவள் அறியாள்.

 

கவியின் குதூகலமான மனநிலைக்கு நேர் எதிரான மனநிலையில் அலைகளுடன் உறவாடிக் கொண்டிருந்தாள் இசை. அவளின் உடல் மட்டுமல்ல உள்ளமும் உஸ்னத்தில் ஓலமிட்டது.

 

“ஐ எம் ரியலி சாரி ஹஸ்ஸூ. நேத்து நான் உன்னை ரொம்ப காயப்படுத்தி இருப்பேன்னு எனக்குத் தெரியும். என்கிட்ட இருந்து உன்னை விலக்கி வைக்க எனக்கு வேற எந்த வழியும் கிடைக்கலடா” சமுத்திர

பகவானின் பேரொலிக்கு முன்னால் அவள் பேசிக் கொண்டிருந்த வார்தைகள் காற்றில் கலந்தன.

 

நேற்று இரவு, ஒரு முடிவுக்கு வந்தவளாக இசை அறையை நோக்கி நடக்க, சிவகாமியோ, “இசைமா, இந்தப் பாலை கொண்டு போய் தம்பிக்கு கொடுத்துட்டு நீயும் குடிதாயி. காலையில இருந்து உம் முகமே வாடிக்கிடக்கு” 

 

தாயறியா சூளுண்டா? என்பதாக மகள் வாழ்வின் அடுத்த கட்டத்தில் நுழைந்து விட்ட ஆட்பரிப்பில் இசையை அனுப்பி வைத்தார் அவ் வயதில் மூத்த தாய்.

 

மாடியின் ஒவ்வொரு படியாக எண்ணி ஏறிய இசை, மனதில் அடுத்தடுத்த திட்டத்தை வகுத்துக் கொண்டாள். அதன்படியே ஹஸ்வந்தின் மனதை சின்னாபின்னமாக்கி, துகள்துகளா உடைத்தவள்,

 

அவன் இவளின் முடியை ஒதுக்கி விட்டு பால்கனியில் சென்று இருட்டை வெறிக்க, அவளோ அவனின் முதுகை வெறித்துவிட்டு தன் தலையனைக்குள் முகத்தை அழுத்தப்புதைத்து வெடித்தழுதாள்.

 

நேற்றைய நாளின் கனம் இன்னும் மீள, மேகவியை “போர் அடிக்குது, ஹாஸ்பிடலுக்கு வேற லீவு. வா நடந்துவிட்டுவருவோம்” என வம்படியாக அவளைக் கிளப்பி, அவர்களின் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடைதூரத்திலுள்ள இக்கடலின் முன் அழைத்து வந்துள்ளாள்.

 

“ஹஸ்ஸூ! எனக்குப் பயமா இருக்கு. அதிக தைரியம்னு நினைச்சி யாருக்கோ கையை ஓங்கினாக் கூட ஒரு பொண்ணு மேல இத்தனை வன்மம் யாருக்கு வரும் சொல்லு. தெரியலையே! அதை மறந்தாலும், ஒரு வே…வேளை நான் உனக்குள்ள உருகிக் குழையும் போது அந்த ஃபோட்டோ எனக்கு நியாபகம் வந்து, உன்னை உ…உன்னை கட்டில பாதில ஒது…ஒதுக்கினா? 

 

நீ எப்படி எடுத்துக்குவ, எனக்கு ஏதோ ஏதோ தோனுதுதே ஹஸ்ஸூ. அதனாலதானே நேத்து அப்படி…” அதற்கு மேல் முடியாமல் முகத்தை உள்ளங்கைக்குள் அவள் புதைத்து நின்றாள்

 

அதே நேரம்; இந்தக் காட்சியை தூரத்திலிருந்து வலது புறமாக நகர்ந்த காரிலிருந்து பிரசாத் பார்த்துவிட, இடது புறத்திலிருந்து வலமாக நகர்ந்த காரிலிருந்து ஒரு ஜோடிக் கண்கள் வஞ்சிக்கும் பார்வை  பார்த்தது.

 

மயிலாக ஆடும் பாவை,

சிறை குயிலாக கூவியதென்ன?

வெயிலும் மழை ஈரம் சி்ந்தித்தான் போனால்,

மங்கையிலும் உன் நிந்திப்பு தொடரவேண்டுமா அன்பே!

 

அவள் வீழ்த்துவாள்….