யாகம் 19

யாகம் பத்தொன்பது

 

வர்ணமற்ற நீர்த்திவலைகளிலிருந்து ஜனனித்த வானவில்லின் வளைவு போன்ற புருவத்தைச் சுருக்கி, கீழ் அதரங்களை மேற்பற்களினால் கடித்துக் கொண்டு கவி,

 

வெண் நிற கடதாசி ஒன்றினை விரித்து, அதில் பென்சிலினால் ஓவியம் வரைந்து கொண்டிருந்தாள் அவள். ஒரு வினாடி கண்னை மூடி தன் நாயகனின் விம்பத்தைக் விழிகளுக்கு நடுவில் கொண்டு வந்து, மீண்டும் அவன் வடிவத்தை வரைந்து கொண்டாள்.

 

கடந்த வாரம், தன்னை தனது பேராசிரியரிடம் இருந்து காப்பாற்றிவன், அடுத்த நாள் காலை ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைப் பரிசளித்து விட்டு,

 

“மேகம், நீ இப்போ சின்னப் பொண்ணு கிடையாது. உன்னோட பார்வை எப்போவும் அடுத்தவர் என்ன நோக்கத்தில உன்னைப் பார்க்குறார்னு தெளிவுபடுத்துறதா இருக்கனும். இங்க யாரும் கெட்டவங்க இல்லை, அதே போல எல்லோரும் நல்லவங்களும் இல்லை, 

 

புரியலயா? சந்தர்பமும் சூழ்நிலையும் தான் மனிதனுடைய நடத்தைய தீர்மானிக்குது. நான் உன்னைக் கண்டிக்கப் போறது கிடையாது. அப்படிக் கண்டிக்க எனக்கு முழு உரிமையும் இருக்கு, ஆனா வேண்டாம். நீயா சமூகத்தைப் பாரு, கொஞ்சம் கொஞ்சமா உன் கூட்டை விட்டு வெளிய வரலாம்” என கன்னத்தில் தட்டியவன்,

 

“நேற்றுக் காலையிலேயே, அந்த பொறுக்கி சாரைப் பற்றிச் சொல்ல உன்னை தேடினேன். பட் நீ நேரத்துக்கு கிளம்பிட்ட. விடு இனியாவது ஜாக்கரதையா இருடி என் பால் டப்பி” என்றவன்,

 

அதைத் தொடர்ந்து வந்த இரு நாட்களிலும், ‘மேகம்’ என்றும் ‘பட்டிக்காடாடி நீ’ என்றும் ‘இதுலாம் ஒரு புத்தகமா?’ , ‘தீ நோட் புக் படிச்சிருக்கியா?’ நிமிடத்திற்க்கு நிமிடம், அன்பாக பண்பாக சில நேரம் கோபமாக என அவளை வம்பளந்து கொண்டிருந்தான் இந்தர்.

 

அவனுடைய பேச்சு, நடவடிக்கை என அனைத்தும் இப்போதெல்லாம் கவிக்குப் மேலும் மேலும் பிடித்து விட, 

 

இன்று அதிகாலையில் ஏதோ டெல்லி தலைமை நிறுவனத்தில் ஊழியர் சம்பள பிரச்சனை என ஹஸ்வந்தையும் உடன் அழைத்து டெல்லி புறப்பட்டிருந்த, தன் கணவனின் பிரிவுத்துயர் தாங்காமல் ஓவியம் தீட்டுவதில் இறங்கிவிட்டாள் கவி.

 

“இவரு பார்வைக்கு மட்டும் இல்ல, உள்ளத்திலயும் ஹீரோ போலத்தான் இருக்கார். வர வர இந்திரஜித் மேல மேகம் பைத்தியமாகிட்டு போல தோனுது. அதிலயும் இன்னைக்கு ரெம்ப மனசு தேடுது. நம்ம படிச்ச பசலை நோய் இப்படித்தான் இருக்குமோ” உதட்டை அழுத்தக் கடித்து முனங்கியவள், தன் வேலையைத் தொடர்ந்தாள்.

 

கடமையில் எப்போதும் கருத்தாகவிருக்கும் இசை, அன்று வைத்தியசாலைக்கு விடுப்பு எடுத்திருக்க, மனதில் எதிலும் நாட்டங்கொள்ளமுடியாத உணர்வு தலைவிரித்து பேயாட்டம் ஆட, மேகவியின் அறைக்குள் நுழைந்தாள்.

 

“கவிக் குட்டி. என்னடா பண்ணுற?.” கேள்வியாக வந்தவளிடம், “சும்மாதான் இசை, ஆர்ட் பண்ணிட்டு இருந்தேன். ஏதோ அவரோட படத்த வரையனும்னு தோனிச்சா, அது…தான்” வெட்கத்துடன் கவி குழைய,

 

“சரிடா, நீ வரைடா” என்ற இசை வந்தவழியே திரும்ப, “என்ன இசை?” என்றாள் கவி.

 

“இல்லைடா, லீவ் போட்டனா அதுதான் நீ என்ன பண்ணுறனு பார்க்க வந்தேன்” என இசை முடிக்கும் போது, அவள் கவியின் அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.

 

நேரே தன் அறைக்குள் வந்தவள், பால்கனியில் சென்று நின்று கொண்டாள். அளவில் பெரியதுமில்லாமல், சிறியதுமில்லாமலிருந்த பால்கனியினை முற்றிலுமாக மல்லிகைக் கொடி மூடியிருக்க, ஒரு மூலையில் சாய்வு நாற்காலி போடப்பட்டிருந்தது.

 

அவ் நாற்காலியில் தொய்ந்து அமர்ந்தவளின் அகம் முழுக்க ஹஸ்வந்தின் பேச்சுச் சத்தங்களே,

 

குறும்பனாக பேசியது முதல் நேற்று அதிகாரனாக ஆனாலும் அமைதியாக பேசியது வரை மீட்டிப் பார்த்தாள் இசை.

 

கடைசியாக அந்த வழக்கு சம்பந்தமாக இவள் கத்தியதற்குப் பின், கணவன் மனைவி இருவருக்கு இடையிலும் பேச்சு வார்த்தை அரிதாக மாறியது. அதிலும் இசையின் பங்கே அதிகம் எனலாம், ஹஸ்வந் எப்படி தாழ்மையாக எடுத்துக் கூற முனைந்தாலும் அது அசிரத்தையாகவே முடிந்தது.

 

முகம் கொடுத்துப் பேசாமல், ‘துரோகி’ என்ற ஒரு பார்வைவட்டத்துக்குள் அவனை நிருத்தி, விலக்கி வைத்தாள்.

 

நாட்கள் அவ்வாரே நகர, நேற்று மாலையே மெல்லப் புகைந்த எரிமலை தன் மக்மா குழம்புங்களை மண்மீது விசிரியடிப்பது போல ஹஸ்வந் எனும் காதல் கணவனின் இதயத்தை சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கினாள் இசை.

 

மாலை நேர உள்ளக நோயார்களை பரிசோதித்து வந்த இசை, தனது அறையில் சற்று ஓய்வாக அமர்ந்திருக்க, அவளின் அலைப்பேசியின் மின்னஞ்சல் செயலி அதிர்ந்தது. வழக்கம் போலவே போலியான மின்னஞ்சல் முகவரியில் அவளின் போலியான புகைப்படங்கள்.

 

கை சுயேட்சையாகவே அவற்றை தொலைபேசியில் இருந்து நிரந்தரமாக அழித்துவிட, வீடு செல்வதற்காக வெளியே வர, வரவேற்பு அறைப்பக்கமாக ஒரே கூச்சல், சலசலப்பு கேட்கவே வேகமாக அங்கு விரைந்தாள்.

 

“யாருடா நீ? என் மேல கைவைக்குற, ஒரு டாக்டரையே அடிக்கிறியா? போலீஸ்ல கம்ப்லைன்ட் பண்ணிடுவேன் பார்த்துக்கோ” இசையின் உடன் படிக்கும் வைத்தியர் ஒருவனை ஹஸ்வந் தன் கைமுஷ்டியால் ஓங்கி குத்து விட்டுக் கொண்டிருந்தான்.

 

“முடிஞ்சா பண்ணிக்கோடா” என்ற ஹஸ்வந் வாக்கியத்தின் இறுதியில் ஆங்கில கெட்ட வார்த்தையொன்றையும் உச்சரித்திருந்தான். இசைக்கு நடப்பை உணர்ந்து கொள்வதற்கே சில நொடிகள் தேவைப்பட்டன.

 

ஹஸ்வந்தின் தாக்குதலினையும் மற்றையவனின் கூச்சலினையும் வைத்தியசாலையில் வேலைபார்க்கும் மற்றும் நோயாளர்களுடன் வருகை தந்தவர்கள் என பலர் வேடிக்கையாக நோட்டமிட, இசையோ, 

 

“ஹஸ்ஸு” என சத்தமிட்டே கத்தியவள், அவனின் தோள்பட்டையைத் தன் பக்கமாக இழுத்து, ஆத்திரத்தில் அவனின் கன்னத்தில் இரண்டாவது முறையாக அடித்தாள்.

 

“ரௌடியா நீ. ஹஸ்பிட்டல வந்து ஒரு டாக்டரை அடிக்குற, அதுவும் அவன் என் ஃபிரண்ட்டு. உனக்கு என்ன வெறி எதுவும் பிடிச்சிருக்கா? இல்லை இவன் கூட நான் பேசுவதைப் பார்த்து சந்தேகமா? இருக்கும். ஏன் இருக்காம போக ஒரு ரேப்பிஸ்ட்க்கு ஆதரவாக் கொடி தூக்குறவன் தானே நீ” ஆதங்கமாக மூக்கு விடைக்க அவள் பேச, 

 

‘இவ்வளவு தானா? அந்தக் காதலின் புரிந்துணர்வு இது தானா?’ என்ற அடிபட்ட பார்வை பார்த்த ஹஸ்வந், நெடுமரமென்று சாய்ந்தது என்பதைப் போல விடுவிடு வென தன் காரை நோக்கி நடக்க,

 

“ஆர் யூ ஓகே அறிவு! சாரி சாரி என் ஹஸ்பண்ட் தான் ஏதோ….” மன்னிப்புக் கேட்டுக் கொண்டே அவனுக்கு முதலுதவி செய்ய அறைக்கு அழைத்துச் சென்றாள். மீண்டும் மீண்டும் நண்பனிடம் தன் மனம் வருந்திய மன்னிப்பைக் கேட்ட இசை சற்றுத் தாமதமாகவே வீடு சென்றாள்.

 

காரை நிருத்தும் போதே தன் கணவன் வீட்டிற்கு வந்துவிட்டான் என அறிந்த இசை, தன் அறைக்கதவைத் திறக்க, அங்கு டெல்லிக்கு எடுத்துச் செல்வதற்கான உடைகளை மடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து,

 

“உனக்கு அறிவு கூட என்ன பிரச்சனை?” முன்பிருந்த அதட்டல் சற்று மட்டுப்படுத்தப்பட்டிருக்க, சாதாரணமாக அவள் வினவ,

 

சுவரினை வெறித்துக் கொண்டே ஹஸ்வந், “ப்ச், பிரபா! நீ என்னை அடிக்கிறதுக்கு முதல் இதைக் கேட்டிருக்கனும் பிரபா! ஒரு வைத்தியரா உனக்கு இருக்குற பொறுமை, ஏன் சாதாரண பொண்ணா நடந்துக்கும் போது காத்தில பறக்குது.

 

இது இரண்டாவது முறை. நீ எனக்கு கை நீட்டினது. ஆனா என்னால இந்த இரண்டு முறையும் உன்னைத் திருப்பி அடிக்க முடியாதுனு நினைச்சியா? ப்ச் நான் அடிச்சா உன்னால வலியைத் தாங்கிக்க முடியாது. உன்னோட வேதனையை என்னால சகிக்கவும் முடியாது” 

 

அவன் முடிக்கும் முன்பே, “ஹஸ்ஸூ” கரகரப்பான குரலில் அவள் தொடங்க, “இன்னைக்காவது என்னை முழுசா பேச விடுறியா? ப்ளீஸ்!” என்றவன் தொடர்ந்து,

 

“உனக்கு சுர் சுர்னு கோபம் வந்ததால தானே யாரோ ஒருத்தன் பலி வாங்க உன்னை மென்டல் டார்ச்சர் பண்ண ஃபோட்டோஸ் அனுப்புறான்…பச்,

அதை விடு. நான் எப்போவாச்சும் உன்னை சந்தேக கண்ணோட பார்த்து இருக்கேனா? அது எப்படி உனக்குப் புரியும்,

 

ஏன்னா நீ என்னோட கண்ணைப் பார்த்து பேசியே ரொம்ப நாள் ஆச்சு. சரி உனக்கு பிரச்சனை தான், அதை ஏன் என்கிட்ட கொட்டித் தீர்க்கனும்னு தோனலை. ஒரு வேளை சந்தோசத்தை மட்டும் பகிர்ந்து கொள்றது தான் காதல்னு சொல்ல வாறியா பிரபா?

 

உனக்கு அதிகமாக ஏற்படுற கோபத்தை வெளிய யாரும் குறையா சொன்னக் கூட எனக்கு அது பெரிசா தெரியல. காதல் குறைகளைத் தான் அதிகம் நேசிக்கும். உன் கஷ்டம், கண்ணீரைப் பகிர்ந்துக்க முடியாம உனக்குள்ள நீ மருகினா, அப்போ கணவன்னு நான் எதுக்கு இங்க?

 

சரி அது எல்லாத்தையும் விடு, அந்தக் கேஸ்ஸை பத்தி தப்பா சொன்னியே, என் தொழிலைப் ஏதோ பணத்துக்கு ஓடுற தொழில்னு எப்படி சொல்ல முடிஞ்சது உன்னால? நீ ஏன் டாக்டர்க்கு படிச்ச பிரபா? உயிரைக் காப்பாற்றனும்னு தானே,

 

வக்கில்னு சொல்றது எனக்கு ஒரு வெறி, எங்கப்பாவை பார்த்து வளர்ந்த எனக்கு, நீ படிச்சா வக்கில் தான்டானு அப்போவே இந்த துறைக்குப் பின்னால ஓட ஆரம்பிச்சேன். இன்னைக்கு கோட்ல என்னைப் பார்த்தா எதிர்கட்சி லாயருக்கு நடுங்கும். பட் நீ சாதாரணமா பேசிட்ட, 

 

எனக்கு ஜூனியர்ஸ் யாரும் இல்லை ஏன் தெரியுமா? என்னோட கேஸ் பற்றிய எந்த விசயத்தையும் நான் தான் முடிவெடுக்கனும் அதை யாருக்கிட்டவும் பகிர்ந்துக்க கூட மாட்டேன். பட் இப்போ உன் கிட்ட சொல்லுறேன்,

 

அந்தப் பையன் எந்த தப்புமே பண்ணல, மதம் மாறி காதலிச்சதால அந்தப் பொண்ணோட அத்தை பையன் தான் ரேப் பண்ணி, கொலை பண்ணினான் இது அந்தப் பொண்னோட அம்மா, அப்பா உட்பட எல்லோருக்கும் தெரியும். பணம் கொஞ்சம் அதிகமா இருக்குறதாலும் அந்த பையன ஏதும் பண்ணும் என்கிற கோபத்தாலையும் தான் அவனை பிடிச்சு அடைச்சு வைச்சிருக்காங்க,

 

இதுக்கு போலிஸ்ல இருந்து, மினிஸ்டர் வரை துணை போயிருக்கு. இப்போ சொல்லு பிரபா, நான் துரோகியா இல்லை ரௌடியா அதுக்கும் மேல சந்தேகப் புத்திக்காரனா? வலிக்குது பிரபா இங்க வலிக்குது. வாழ்கையில முதல் முறை தோற்று போன வலி இது,

 

காதலனா, உன் கணவனா என்னை நீயே தோற்க்க வைச்சிட்ட பிரபா” என்றவனின் கடைசி வார்த்தைகள் அழுகைக்குத் தயாராகும் உடைந்த குரலிலேயே வெளிவர, இடது கரம் கொண்டு தன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்.

 

“ஹஸ்ஸூ” விம்மலுடன் அவனின் முதுகில் முகம் புதைத்து இசை அழுகையில் குளுங்க, அவளை தன் முகத்துக்கு நேராக இழுத்து நிறுத்தியவன், தன் இரண்டு கட்டை விரல்களாளும் அவளின் விழி நீரைத் துடைத்து விட்டு, 

 

“அழாதே, பிளீஸ் அழாத. உன்னை அழ வைக்கவா, நான் கல்யாணம் பண்ணி அக்கினிய சுத்தி வந்து சத்தியம் பண்ணினேன்” என்றவன், “நாளைக்கு சீக்கிரம் கிளம்பனும், தூக்கமா வருது” முடித்துக் கொண்டு,

 

அவளுக்கு முதுகு காட்டி மஞ்சத்தில் புதைந்தவனின் கண்ணீர், அவன் காதுகளை நனைத்துக் கொண்டு தலையனையில் மறைந்தது.

 

அவனுக்கு அருகில் படுத்தவள், தன் நடுங்கும் கைகளைக் கொண்டு அவனைத் தொட முனைந்தும் முடியாமல் போக, அடுத்த பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

 

காலை நேரத்துக்கு விழித்துப்பார்க்க, ஹஸ்வந் அந்த அறையில் இருப்பதற்கான அடையாளமே இல்லை. அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே டெல்லிக்குக் கிளம்பி விட்டான்.

 

வைத்தியசாலைக்கு அழைத்து விடுப்பு எடுத்தவள், கவியைப் பார்க்க சென்றாள் அவளோ, காதல் கனவுகளில் மிதந்து கொண்டிருந்தாள்.

 

சலிப்பான மனத்தோற்றம் இசையை பிடித்துக் கொண்டது. சாய்வு நாற்காளியில் இடையை வளைத்து அமர்ந்திருந்தவள், நீல வானத்தையே இமை வெட்டாமல் வெறித்திருந்தாள்.

 

சரி, தவரு, விருப்பம், வெறுப்பு என்ற நிலைகளைக் கடந்தால் ஏற்படும் வெற்றிடத்தில் நின்று கொண்டிருந்தாள் அவள். எதுவும் தோன்றவில்லை அவ்வளவே!

 

அதே பால்கனிக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் பால்கனியில், கருங்கல் கட்டு ஒன்றில் மடியில் லூக்காவை வைத்துக் கொண்டு சம்மணமிட்டிருந்தாள் அமரா.

 

கைகள் அதன் பாட்டிற்கு லூக்காவினுடைய பஞ்சு முடிகளை சீப்பினால் நேர்செய்து கொண்டிருக்க, நயனங்கள், வெள்ளை நிற அலர்ந்த பன்னீர் ரோஜாக்களில் நிலைத்தது.

 

அவளின் சிறிய கூட்டுக்குள், ஒன்றி வாழும் யாரும் இப்போது அருகில் இல்லை. சொந்தம் என கைபிடித்து தூக்கிவிட்ட அனைவரும், தந்தையின் ஊரான ‘டெல்லியில்’ இருக்க, மார்பில் தூக்கி வளர்த்த இருவரும் இன்று அங்கு சென்றுள்ளனர்.

 

‘அடுத்து என்ன?’ மண்ணரிப்பு போல இங்கு மனதை கேள்வி அரித்துக் கொண்டிருக்க, சற்று நேரத்துக்கு முன் பிரசாத் ‘வல்’ என்று இவள் மீது பாய்ந்து விட்டு சென்றிருந்தான்.

 

“போன வாரம் சம்மதம்னு சொன்ன, தயாரிப்பாளர் இப்போ பணப்பற்றாக்குறைனு சொல்லுறார். நீ தான் ஏதோ தகிடுதத்தம் பண்ணி இருக்க. என் வாழ்கையில விளையாடினது போதாதா? கெரியர்லயும் விளையாடனுமா?” 

 

நிதர்சனம் அறியாதவனாக, அமராவை நோகவைக்கும் எண்ணத்தில் வைது தள்ளிவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டான்.

 

‘அ’ என்று ஒரு சொல்லைக் கூட அவனுக்கு எதிராக உரைக்காமல், நிந்திக்கும் சிந்தனையால் லூக்காவுடன் வந்து அமர்ந்து கொண்டாள் அமரா.

 

“மிஸ் யூ சின்னு அண்ட் குட்டா” சத்தமாக பேசிவளின் ஊணும் உயிரும் இந்தர், ஹஸ்வந்தை அந்த நொடி அதிகமாக தேடியது என்பதே சத்தியமாகும்.

 

உடைப்பெடுக்கும் கண்ணீரை; மாலையாக்கி,

உன் மார்பினில் தவழ வைக்க வேண்டுமடா, 

என் கண்ணா! 

 

அவள் வீழ்த்துவாள்…