இலையுதிர் காலத்திற்கு அடுத்ததான குளிர்காலத்தின் ஆரம்பநிலையின் பிடியில், மரங்களில் வசந்தமாக பூத்துக் குலுங்கிய பல வண்ண மலர்கள் உதிர்ந்து, மரக்கொம்புகளின் நுனியில் வெண்நிற பனிப்பூக்கள் மலர்ந்து சிரித்தது. கலிஃபோர்னியாவில் ஆதவன் விழித்து பத்து மணி நேரத்தை அசைபோட்டு கடந்திருந்த போதும், ஒருவன் மட்டும் கண்மூடிக் கனவில் வலம்வந்து கொண்டிருந்தான்.
மேல்நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்ப கட்டப்பட்டிருந்த, உயர்குடி மக்கள் வசிக்கும் ஓர் இரண்டடுக்கு மாளிகை வீட்டின் மாடியில், பெரிய கண்ணாடி ஜன்னலைப் பனிக்காற்று தொட்டுச் சென்று ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தது. அவ் ஜன்னலின் உட்புற திரைச்சீலையை தாண்டி படுக்கையறை ஒன்று வியாபித்திருந்தது. அவ் அறையின் நடுவில் பரந்துவிரிந்த படுக்கையின் மீது இரண்டங்குலம் கனமான பஞ்சுப்பொதிகை படுக்கை விரிப்புக்குள் தன் நீண்ட உடலைக் குறுக்கி நித்திரையில் இருந்தான் ஒருவன்.
‘குட்டா வேக் அப்’,
‘குட்டா வேக் அப்’ என அவனது ஆப்பிள் கைபேசியின் அலாரம் பத்துதடவை அதன் இருப்பை உணர்த்தியது. கண்களை இறுக்க மூடிக் கொண்டு, கைகளால் மெத்தை மீது துளாவித் தன் கையடக்கத் தொலைபேசியின் தொடுதிரையை உயிர்ப்பித்து, அதில் உச்சிக் கொண்டையிட்டு வாயில் லாலிபப்பை அதக்கிக் கொண்டிருக்கும் அமராவின் முகத்தைப் பார்த்து கண்விழித்தான். அடுத்த நொடி நேரத்தைக் கூட பார்க்காமல், அமராவுக்கு ஒரு அழைப்பை தட்டிவிட்டான். முழு அழைப்பும் சென்றும் தொடர்பு ஏற்கப்படாமல் இருக்கவும் பதறி கட்டிலின் மீது எழுந்தமர்ந்தான் அவன்.
கண்களை மீண்டும் கசக்கித் திறந்துவிட்டு நேரத்தை சரிபார்த்து, தன் நெற்றியில் சிறிது வலிக்கும்படி தட்டிவிட்டு, “அடேய் இந்திரஜித், காலையில பத்துமணியாகும்வரை நல்லா கும்பகர்ணனாட்டம் தூங்கிட்டு, அங்க அமரா தூங்குற நேரம் கால் பண்ணுறியே!,
ஊருக்கு போனதும் மகனே நீ செத்த” என சத்தமாக முணுமுணுத்து விட்டு, கால்களை தொங்கப் போட்டு கட்டிலில் கைகளை ஊன்றி சிந்தனைகளை தன் தாய்நாட்டுப் பக்கம் சிதறவிட்டான்.’ இப்பாே என் பட்டுமா தூங்கிட்டு இருப்பா, அப்போ அமரா என்ன பண்ணுவா, ம்… அவ சின்னு மடியில கை, கால சுருட்டி படுத்திருப்பா’ மனதின் காட்சிகளுக்கு, நிழலுருவம் கொண்டு ரசித்து சிரித்திருந்தான். ‘ஐயோ சின்னுவ எப்படி மறந்தேன்?’ என சிந்திக்கும் போதே, ‘இந்துமா லவ் யூ டி’ என சின்னு இந்தர் கன்னத்தில் ஒரு ஈரமுத்தத்தை இட்டுச் சென்றான்.
இந்தரின் கைகள் சுயேட்சையாக அவனுடைய கன்னத்தை துடைத்துவிட்டது. “யப்பா இவ சின்னுவ நினைச்சாலே கன்னதுல குளிர் பரவுது, வேணாம்பா” என கிட்டத்தட்ட கத்தாத குறையாக, குரலை உயர்த்தி பேசிவிட்டு தடதடவென ஓடி குளியலறையில் புகுந்து வெதுவெதுப்பான நீரினை முகத்தில் அடித்துக் கழுவிக்கொண்டான். பின் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, கையில் தானே தயாரித்த கருப்புக் குளம்பி கோப்பையுடன் வெளியறைக்கு வந்தமர்ந்து அவனுடைய காரியதரிசி சந்துரூவை அழைத்தான்.
அதிகாலையிலேயே எழுந்து, நேற்று இரவு நடைபெற்ற வர்த்தக கூட்டு உடன்படிக்கையினை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, அதற்கான ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்து மேலதிக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சந்துரூவோ, மறந்தும் இந்தரை எழுப்பவோ அல்லது அவனுக்கான குளம்பியை தயார்செய்தோ கொண்டு சென்று, அவன் அறைக் கதவை தட்டவும் இல்லை. அவன் வேலையில் இணையும் போதே அவனுக்கு கிடைத்த மிக முக்கியமான கட்டளை யாதெனில், ‘இந்தருடைய தனிப்பட்ட எந்த விடயத்திலும் சிறு தூசாக கூட ஒட்டிக் கொள்ள முயற்சி செய்ய கூடாது எப்போதும்.’ ஆனால் நேற்றிரவு அமரா அழைத்ததும் இவ்வாறான தனிப்பட்ட விடயம் என அதிபுத்திசாலித் தனமாக சிந்தித்ததற்கு, இன்னும் சில வினாடிகளில் அவனுக்கு சரியான பாடத்தைக் கற்பிக்கவிருக்கிறது அவன் கஷ்டகாலம்.
“குட் மார்னிங் சார்”, காலை வணக்கத்தை வைத்தவாரு இந்தரின் முன்னால் சென்று நின்றிருந்தான் சந்துரு. “வ்வெரி குட் மார்னிங் சந்துரு”, என புன்னகைத்தான் இந்தர். “தென் மிஸ்டர் சந்துரு எப்போ இருந்து இந்திரஜித் ரகுவரன் ஆகினிங்கனு தெரிஞ்சிக்கலாமா?” கண்களில் ஒரு மின்னல் வெட்ட சிரித்துக் கொண்டே கேட்டான் இந்தர். “சார் புரியல!”, உட் சென்ற குரலைச் சரிசெய்யாமல் விழித்தான் அவன். “ஓஹ், புரியல! அது எப்படி அமரா மேம் கால் பண்ணினத எனக்கு சொல்லாம விட்டிங்க?” மீண்டும் அதே புன்னகை இந்தர் முகத்தில். ‘சந்துரூ, இந்தர் சார்கிட்ட சூதானமா நடந்துக்காே, அவருக்கு கோபம்னா என்னனே தெரியாது. ஏன்னா அவர் கோபத்தைக் கூட சிரித்து தான் வெளிக்காட்டுவார்.’ என சந்துருவின் தந்தை அதாவது இந்தரின் நிதி நிறுவனத்தில் மனிதவள முகாமையாளராக பணிபுரிபவர், சந்துரூ இந்தரின் காரியதரிசியாக ஒரு மாதத்திற்கு முன் வேலையில் சேரும்போது வழங்கிய அறிவுரை. இப்போது சந்துரூவுக்கு மனக்கண்ணில் வந்துபோனது.
“என்ன சந்துரூ பேச்சக்காணாேம், சரி அமரா மேம் என்ன சொன்னாங்க?” கேள்வியாய் நிருத்தினான் இந்தர். அமரா பேசிய இரு வாக்கியங்களையும் அச்சுப்பிசகாமல் ஒப்புவித்தான் சந்துரூ. “ஃபைன் மிஸ்டர் சந்துரூ, கெட் ரெடி டூ கோ ஹோம்”. வீடு என்ற வார்தையை அழுத்தி சொல்லி தாடையை நீவி விட்டபடி, அவனுடைய பிரத்யேக கன்னக்குழி சிரிப்பைச் சிந்தி, மாடிப் படிகளில் ஒரு பாட்டை ரீங்காரம் செய்தபடி தாவிச் சென்றான் அமராவின் குட்டா. இந்திரஜித் பெயரில் சுவர்க்கதின் இளவரசன், ஆனால் அவனை எதிர்ப்பவருக்கு நரகத்தின் பாதால தணல்களில் படுக்கயைமைத்து பரிசாக வழங்குபவன்.
‘கோபத்தின் வெளிக்காட்டல் இப்படியிருக்குமா’ என ஆச்சரியப்படவைக்கும் ஒரு வகை கோபக்காரன். முகம் கருக்க, கண்களை இடுக்கி, பற்களைக் கடித்து என எச்செய்கையும் அவன் கோபத்தில் இருக்காது மாறாக கண்கள் மின்ன இதழ்விரிந்த சிரிப்பு, அவ்வளவே வதைத்து விடுவான். மொத்ததில் சிரித்தே சதிராடி, சிதைத்து, சின்னாபின்னமாக்கும்
புன்னகையின் அரசனவன்.
சந்துரூவினுடைய முகம் வீழ்ந்துவிட்டது, இனி இந்தரின் காரியதரிசி வேலை அவனுக்கு கிடையாது என்பதால். அவனுக்கு இப்போதுதான் ஒன்று தெளிவாக புரிந்தும் இருந்தது, அவனுடைய வேலை தொடர்பாக எந்தவித கெடுபிடிகளும் அவனுக்கு கிடையாது, ஆனால் நன்நடத்தை என்ற ஒன்று அதிகமாக மதிப்பிடபட்டது. வாலிப வயதுக்குறிய முறுக்கான செயற்பாடுகள் எதுவும் அவனுக்கு சலுகையாக வழங்கப்படவே இல்லை. இந்த ஒரு மாத காலத்தில் இந்தருடன் எத்தனையோ வர்த்தக கூட்டங்கள், பார்ட்டிகளுக்கு சென்றுள்ளான். ஆனால் மதுவையோ மாதுவையோ நெருங்கியது கிடையாது ஏனெனின், இந்தர் இவை எதையும் தானும் நெருங்காமல் இவனையும் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வான்.
இப்பாேது சந்திருவின் புருவம் மேடிட்டு நேற்றைய நாளை நினைக்கலானான்.
லிக்ஸ்ஸா ஃபார்மா கம்பனி, அமெரிக்காவில் மருந்து வில்லைகள் தயாரிக்கும் நிருவனம். இவ் நிருவனத்தினுடன் கூட்டு உடன்படிக்கை ஒன்றை மேற்க்கொண்டு இந்தியாவில் ஒரு ஃபார்மா நிருவனத்தை புதிதாக ஆரம்ப்பிப்பதற்கான வியாபாரக் கூட்டம் அது. கூட்டம் என்னவோ ஓர் உயர்தர கேலிக்கை விடுதியில் தான் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இரவு ஏழுமணிக்கு ஆரம்பிக்கவேண்டிய கூட்டம் ஆரம்பித்தது என்னவோ இரவு ஒன்பது முப்பதிற்குதான், பிரதான பங்குதாரரான அவ் நிருவனத்தின் வாரிசு ஷாக்ஸாவின் தாமத வருகையே அதற்கு காரணம். கூட்டம் நடைபெற்ற நடுப்பகுதியில் அமரா அழைப்பை எடுக்கவே, அதனை இந்தரினால் ஏற்க்க முடியவில்லை. ஆனால் சந்துரூக்கு அழைத்த பின் அவன் இந்தரிடம் சொல்ல மறந்ததற்கான காரணமே அந்த ஷாக்ஸாதான்.
அலர்ந்த ரோஜா மொட்டின் நிறத்தையுடைய ஷாக்ஸாவுக்கோ இந்தருடைய ஆளுமையான பேச்சும், அவன் ஒப்பந்தத்தை விவரிக்கும் போது இடை இடையே கன்னங்குழிய சிரிப்பதும் தமிழற்குறிய தேன்நிற தோலும் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியது போலும். வியாபாரக் கூட்டம் முடிந்ததும், வணிக சம்பிரதாயமாக மதுபானம் பகிரப்பட்டு சாதாரண பேச்சுக்கள் பேசப்படும் போது, “ஹேய் மேன், யு ஆர் சச் அஹ் ஹாட்!” என இந்தர் இடையோடு கை போட்டு அணைக்க வந்தாள் மங்கை.
இந்தர் இரண்டெட்டு பின்னால் சென்று அவள் கையினில் அகப்படாமல், “ஹக்ஸ் ஆர் பிரோகிஃப்டட் ஃபார் மீ.” எனக் கூறினான். “பை ஹூம்” என்று உதட்டை பிதுக்கினாள் அவள். “ப்பை மை கேர்ல்!”, என சிரித்தான் அவன்.
அவளோ விடுவேனா என்பது போல், ‘யார் அந்த பெண்?, அணைப்புக்கு ஏன் தடை?, தன்னுடன் நீ ஒரு நாளை செலவழிக்க மாட்டாயா?; ஏன் நீ மது அருந்தவில்லை?’ என இடைவிடாத கேள்வி அம்புகளை எய்தது மாத்திரமின்றி, அவன் மீது படர்வதற்கு தன்னால் முடிந்தவரை முயன்றாள் அவள்.
இந்தரோ, அவள் முயற்சிகளை முறியடித்து அவளிடம் இருந்து விலகுவதற்கு பெரும்பாடுபட்டு, ஒரு வழியாக வீடுவந்து சேர்வதற்கு இரவு பன்னிரண்டாகி இருந்தது.இதையவதானித்த சந்துரூவோ இந்தருக்கு கலைப்பாக இருக்கலாம் என்ற சுய கற்பனையில், அமராவின் அழைப்பைக் கூறாதுவிட அதுவே அவனுக்கு பணிநீக்கத்திற்கு வழிவகை செய்தது.
வான்னின் நீல வண்ணத்தினை, மெதுமெதுவாய் சுருக்கி தீபத்தின் வடிவில் அமைத்த நீலமாணிக்கத்தினை பதக்கமாக வடிவமைத்து ஒரு பிளாட்டினம் சங்கிலியில் கோர்த்திருந்த மாலையையும் அதே தீபவடிவான குட்டித் தோடுகளும் அமைந்த நகையை வாஞ்சையாய் ‘ராயல் டயமன்’ எனும் பிரபலமான கடையில் பார்த்திருந்த இந்தரின் மனம், கண்ணிமைக்கும் நிமிடத்தில் அமராவுக்கு இவ் நகை பொருந்துமாவென கற்பனைசெய்து பார்த்தது. அவன் விழிகளுக்கு நடுவே அமரா விழி உருட்டிச் சிரித்தாள். அடுத்த கணம் அதே வடிவத்தில் ரூபி பதித்த இன்னொரு நகையையும் வாங்கிப் பணத்தை செலுத்திவிட்டு வெளியே வந்தான் இந்தர்.
குளிருக்கு இதமாக போடப்பட்ட ஜர்கினைத் தாண்டியும் இதயத்தில் இதம் ஒன்று உடலெங்கும் ஆக்கிரமித்தது. தூரத்தில் என்பது வயதுகளை கடந்த ஒரு தம்பதியினர் கைகளைக் கோர்த்துக் கொண்டு தூவும் பனியில் நடந்து செல்வது அவனுக்கு காவியமாக இருந்தது. இன்னும் சற்று நீண்ட பாதையில் ஐம்பது வயதான ஒருத்தர் தனது தொப்பியை கவிழ்த்து வைத்து, பனியிலும் கிட்டார் வாசிப்பது அவன் கண்களுக்கு தெரிந்தது. நெடுவன வளர்ந்த நீண்ட கால்களுடன் அவனுக்கு பணத்தை கொடுக்கும் எண்ணத்துடன் பாதையோரம் நடந்து கொண்டிருந்த இந்தர் என்னும் ஆண்மகனின் நினைவடுக்கு முழுவதும் அமரா என்ற பெண்னே வியாபித்திருந்தாள்.
காலை அவசரமாக அவளுக்கு அழைத்தது தொட்டு, நேற்று அவள் அழைப்பை இவன் ஏற்காததால் எப்படியும் சந்துருவுக்கு அழைத்திருப்பாள் எனும் மனதின் யூகத்தில் விசாரித்து, அவள் கட்டளைப்படி அவனைப் பணியில் இருந்து நீக்கியது என அவன் மனம் அசைபோட்டது. அதற்கு முந்திய தினம் ஷாக்ஸா அவனிடம் அதிக உரிமை எடுக்க பாடுபடும் போது இரு கட்டுமஸ்தான தனியார்காவலர்கள் இவனை தூரநின்று அவதானித்தது நினைவுக்கு வந்தது. அவன் கணிப்புப்படி அது அமராவுடைய ஏற்பாடாகத்தான் நிச்சயமிருக்கும்.
இருவர் பாதுகாப்பிலும் ஒருவருக்கொருவர் அத்தனை கவனமாக இருப்பார்கள். இந்தருடைய மூளை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னான ஒரு நாளினைப்போய்த் தொட்டு வந்தது.
அவனது ஐந்துவயதில் அவன் பாட்டியிடம் இருந்து பிறந்து இரண்டே நாளான, ரோஜா குவியலாக கிடந்த அமராவைக் கையில் ஏந்தியது நினைவை நனைத்தது, குழந்தை புத்தியில் அமராவிற்கு வலிக்கும் படி கிள்ளி ரசித்த நாள் அவன் தாத்தா மடியில் இவனை அமர்த்திச் சொன்ன வாக்கியம் அவன் காதுகளில் நீங்காத பசுமையாய் இன்னும் கேட்டுக் கொண்டல்லவா இருக்கிறது. “ஜித்தா, பாப்பாவ நீதான் பத்தரமா பாத்துக்கனும், எப்போவும் கைவிட்டிட கூடாதுடா, கையப்பிடிச்சே வளத்துவிடனும்பா பாசமா நான் எப்படி உன்ன பாத்துக்கிட்டேனோ அப்படி பாத்துக்கனும்டா.”
ஐந்து வயதினில் அவனுக்கு என்ன புரிந்ததோ ஆனால் அன்று கையைப்பிடித்து நடக்க, வளரக்க தொடங்கியவன். இருபத்தைய்ந்து வருடங்களாக விடாமல் உயிரிலும் அமரா என்ற பெண்னைப் பிடித்துவைத்திருக்கிறான். ஒரு கோப்பை மதுவையோ ஓரவிழி பார்கும் மாதுவையோ தன் சுயத்தை இழக்க செய்யும் என்பதற்காக இதுவரை விரல்கொண்டு தீண்டாதவன், ‘பார்பி டால்’ என அவனால் அழைக்கப்படும் அமராவிற்காக உயிரைக் கூட கொடுக்கத் தயங்கமாட்டாதவன், இரண்டு நாட்களில் அவள் அருகில் மனமேடையில் அமர்வதை நினைத்து நொடிப் பொழுதில் கண்கள் சிவக்க நின்றான் இந்தர்.
தனது பர்சில் இருந்து சில டாலர்களை அந்த கிட்டார் வாசிப்பவனுடைய தொப்பியில் இட்டுவிட்டு காரை நோக்கி நடக்கும் போது மீண்டும் அவனை ஆட் கொண்டாள் அவன் பார்பி டால். “இந்தர்! யாருக்கும் காசை இப்படிக் கொடுக்காத, அவங்க கை நீட்டாம சுயமா செருப்புத் தைத்துவித்தாக் கூட கூலிக்கு அதிகமாக பணத்தைக் கொடுக்கலாம். ஆனா முயற்ச்சினு ஒன்னும் இல்லாம யாசகம் கேட்டா அது கொடுக்கப்பட வேண்டியது இல்ல. என்னப் பொருத்தவரை யாசகம்னு ஒன்னு இந்த அமரா யாருக்கும் கொடுக்க மாட்டா மாறுதலாக கொடுத்தா அந்த நபர் வாழ்க்கையை வாழ தகுதியில்லாதவங்கனு அர்த்தம்.” இந்தரின் கையில் அவன் சிறிதாக தட்டி எப்போதோ கூறியது இந்தருக்கு இப்போது வலிப்பது போன்றிருந்து.
இந்தர், காரின் இருக்கையில் இருந்து பின் அவனுடைய தனிநபர் விமானத்தில் இருக்கயைில் அமர்ந்து, சொந்த ஊரான டெல்லிக்கு பறக்கும் போதும் கூட அவன் இருதய வீணை பல்லவி, சரணம் என அமரா எனும் இசையை மீட்டிக்கொண்டிருந்தது.
*******
“மச்சி, லவ்வுனு சொல்றது, பூ மாதிரிடா! எல்லா பூவும் தலையில வைக்க முடியாதுல அதுபோல தான்டா இப்படி, மஹிமா மாதிரி பொண்ணுங்க காதலும் தலையிலயும் வைக்க முடியாது வாஸ்ல வச்சி அழகு பார்க்கவும் முடியாது” நூறாவது முறையாகவும் ஆலோசனை என்ற பெயரில் தொலைபேசியில் அரைமணி நேரமாக கதையளந்து கொண்டிருந்தான் பிரவீன்.
“மச்சான் தயவுசெஞ்சி போனை வைச்சித்தொலை” என அவன் வைக்கும் முன்பே, அழைப்பை முடித்துவிட்டு, தனது தொலைபேசியை அணைத்து மேசைமீது விட்டெறிந்தான் கௌத்தமன். அவன் விட்டெறிந்த வேகத்தில் அத் தொலைபேசி ஓர் கண்ணாடிப் போத்தலில் தடைபட்டு, உருண்டு ஒரு மூடப்பட்ட புத்தகத்தின் அட்டைக்குள் மாட்டிக் கொண்டு தவித்தது. இது எதையும் சட்டைபண்ணாமல், கௌத்தமன் கால் நீண்ட மதுகுவளையில் பொன்நிறப் பாணத்தை தன் இரண்டுநாள் சவரம் செய்யாத மீசைக்கடியில் புதைந்து கிடந்த இதழ்களில் சரித்தான்.
மோகினியுருவாய் மஹிமா அவனுக்கு ஐந்தடி தள்ளிநின்று.’வா கௌத்தம்’ என கைகளை நீட்டியழைப்பது போல ஒரு தோற்றத்தினால், கையில் தவழ்ந்து கொண்டிருந்த குவளையை அவள் விம்பம் நோக்கி எறிந்தான் அவன். அக் குவளையோ பரிதாபமாக தரையோடு தரையாக ஒடிந்து வீழ்ந்து உயிரை மாய்த்தது. கோபத்தில் கனன்ற மனதினை வெளிக்காட்ட கண்கள் இடுங்க , முகம் கருக்க வழிந்தோடும் வியர்வையுடன் பெரும் குரலெடுத்து கத்தினான் கௌத்தமன்.
“ஏன்டி, ஏன்டி! என்ன காதலிக்கிறதா நடிச்சு ஏமாத்தின? மஹி,மஹினு வேலை எல்லாம் விட்டுட்டு உன் பின்னாடி சுத்தினா, இப்போ உன் அப்பனுக்கு என் வேலை பிடிக்கல உன் வீட்டு நாய்குட்டிக்கு என் பேரு பிடிக்கலனு சொல்லி, வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறியா?”. மேசை மீதிருந்த மதுபான போத்தலை எடுத்து நிலத்தில் அடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.”விட மாட்டன்டி, என்ன யாருனு நினைச்ச கௌத்தமன்டி நானு, நீ வேணாம்னு சென்னதும் அரச மரத்தடில போய் உக்காந்து ஞானம்வாங்கிப்பண்ணு ஐடியா பண்ணியா? மட்டேன்டி உன்ன எதுவுமே பண்ணமாட்டன், ஆனா உன் வாழ்கையை கொஞ்சம் கொஞ்சமா சிதைச்சி, என் காலுல விழவச்சிக் காட்டுறன்டி நானு.” என கத்திவிட்டு
புதிதாக குடித்ததினால் மயங்கி நிலத்தில் மடிந்தான் அவன்.”
“கட்,கட்,கட்”
பளீச்சிட்ட கேமராக்கள் ஔியை நிருத்தி, தன் இருப்பை உணர்த்தியது. நிலத்தில் வீழ்ந்து கிடந்த இல்லை, கெளத்தமனாக வீழ்ந்துகிடப்பதாக நடித்த பிரபல பெரும்புள்ளி நடிகர் தேவ் பிரசாத் எழுந்து சட்டையில் ஒட்டியிருந்த தூசுகளைத்துடைத்துக் கொண்டிருந்தான்.” சார் ஃப்பர்ஸ்ட் டேக்கே ஓகே தான், பட் இது பர்ஃபெக்ட்டாக வந்திருக்கு சார்.” என மகிழ்ச்சியில் சிரித்தான் படத்தின் இயக்குனர் அவன் அருகில் வந்து நின்று. பிரசாதாே அவன் தோள்களில் தட்டி “டயலாக்ஸ் பார்த்தா கமர்சியல் மூவி மாதிரி இருக்கு பட் இது கமர்சியல் கம் மைஸ்ட்ரினு ஸ்கிரிப்ட் படிச்ச எனக்கு நல்லாவே புரியுது. கீப் இட் அப், என்னோட யூகப்படி இந்த சீன் டீன் ஏஜ்பசங்கள கவரும்.” என புன்னகை பூசிய முகத்துடன் கேரவனை நோக்கிச் சென்றான் அந்நடிகன்.
முன்நடந்து செல்லும் பிரசாத்தின் முதுகைப் பார்த்தபடி ஒரு திருப்திப் புன்னகையிட்டான் அப் படத்தின் இயக்குனர். தமிழ்த் திரைப்படத்துரையில் புகழின் உச்சத்தைத் தொட்ட நடிகன். இதற்கு முன் இரண்டு மூன்று விழாக்களில் மாத்திரம் தூரத்தில் இருந்து பார்த்து ரசித்த ஒருவன், தன்னைப் போல அதிகம் பரீட்சையம் இல்லாத புதுமுக இயக்குனருடன் நட்பு பாராட்டி பேசுவதே அவனுக்கு ஆட்சரியமாக இருந்தது. அதிலும் இரண்டு நாட்களில் திருமணம், நான்கு நாட்களில் சென்னையில் வரவேற்புக்கு பத்திரிகை வழங்கி அனைவரையும் அழைப்புவிடுத்திருக்கும் நிலையிலும், தான் ஒப்புக் கொண்டதற்க்கமைய இன்று படப்பிடிக்கும் வந்துசெல்கிறான். என்ன மாதிரியான குணம் படைத்த மனிதன் இவரென இயக்குனர் புருவம் உயர்த்திப்பார்த்தான்.
பணம், பெயர், புகழ், கல்வி என எத்தனையோ வெளித்தோற்ற காரணிகள் மனித குணத்தை தீர்மானிப்பதில்லையே? மாறாக அகத்தின் உள்ளே மனம் எனும் மாயாவி கட்டியமைக்கும் வழிமுறைகளை ஒப்பி வாழ்பவர்களுக்கே சிறந்த குணங்களை இறைவன் பரிசளிக்கிறான். அப்படியான சிறந்த நற்குணங்கள் அனைத்தும் தேவ் பிரசாத் எனும் நடிகன் தன்வசப்படுத்தியிருக்கிறான். கேரவனின் உள்ளே தனது உடையை மாற்றிக் கொண்டிருக்கும் போது பிரசாத்தின் தொலைபேசி இருப்பை உணர்தியது. “பிரா, என் ராஜா சாப்டியாமா?,எப்போமா ஊருக்கு வருவீக? இங்க பந்தக்காலு வைக்க சொந்தம் எல்லாம் கூடி நிக்குதுமா.”, தாய் பாசம் தாரையாக பொழிந்தது அவன் தாயிடமிருந்து. “அம்மோய், இங்க சாப்பாடு ஆச்சு, அங்க பந்தியெல்லாம் முடிஞ்சுதா!” கிராமத்தாளாய் அவதாரமெடுத்தான் அவன். “எல்லாம் பசியாறியாச்சுமா, பிரா கண்ணு எப்போ வருமாம்னு சிருசுக கேட்டுடே இருக்கு ராஜா!”, “சாயந்திரம் உங்க கண்ணு உங்க முன்ன ஓடிவருவனாம்.” குழந்தையாக செல்லம் கொஞ்சி தாயுடன் பேசிக் கொண்டிருந்தான் சிவகாமியின் தவப்புதல்வன்.
பத்து நிமிடங்களாக ஊரிலிருக்கும் சில பெரியவர்களிடம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டு, தன் உள்ளங்கையை விரித்து அதன் ரேகைகளைப் பார்த்தான் அவன். அவனுடைய பத்தாவது வயதில், மேகங்கள் மழையாக பொழிந்த நன்நாளில், அவன் உள்ளங்கையில் சிப்பி விழி மூடியபடி கையில் ஏந்திக் கொண்ட மழலை மேகவி. மேகவி, விசும்புடன் உறவாடும் ஒரு துண்டு வென்பஞ்சு மேகம் அவள். அன்பையும் பண்பையும் கொட்டிவளர்த்த தாயின் தம்பி மகள். பிறந்தது முதல் இவனோடு வளர்ந்து, இவனுக்காக வளர்க்கபட்ட பெண்ணான மேகவிக்கும் பிரசாத்துக்கும் இரண்டு நாட்களில் இவர்களின் குடியுயர்ந்த ஊரில் திருமணம்.
நினைக்ககையில் பிரசாத்தின் உள் நெஞ்சில் குறுகுறுப்பொன்று கிளர்ந்து எழுந்தது. மனக்கண்ணின் முன் முகம் தெரியாத பாவையொன்று வானவில் நிறத் துப்பட்டா அணிந்து பிண்ணிய கூந்தலுடன் படிகளில் ஓடிச் சென்றாள். இன்னொரு பெண்ணோ ‘சாதா,சாதா’ என அவன் கைகளுக்குள் கை பாெதித்தாள்.
‘கடவுளே’ தலையை அழுத்தப்பிடித்துக் கொண்டு கண்களை மூடித் திறந்தான் அவன்.”சார், இஃவன்ட் டீம் என்ட் டிசைனர் க்கால் பண்ணியிருந்தாங்க சார், ரிசப்சன் தீம் அஹ் பைனல் பண்ணிட வேண்டி.”
பிரசாத்துக்கு இப்போதுதான் தான் காரில் இருப்பது நினைவுக்கு வந்தது. கேரவனில் இருந்து ஊருக்கு கிளம்புதற்காக விமானநிலையம் நோக்கிச் செல்வதற்கு வேண்டி காரில் அமர்ந்தது முதல் இப்போது வரை, அவனது சிந்தனையில் இரண்டு பெண்களின் முகமே வந்துபேனது. வெளிப்படையாக இவன் முப்பத்து இரண்டு வயதில் திருமணம் செய்வதற்கான காரணம் என்னவோ மேகவியின் படிப்பு. ஆனால் உண்மைக் காரணமென்னவோ, அவனை ஆட்டுவித்த இரண்டு பெண்களை நினைவிலிருந்து அழிக்கமுடியாமையே.
பேதைகளை நாடாமலே நேர்வழியில் ஐந்தாண்டு காலமாக எத்தனையோ வகையாக முயன்றுவிட்டான் அக் கலைஞன் ஆனால் விசக்கிருமி போல அழிக்க அழிக்க வடிவத்தை மாற்றிக் கொண்டு, அவள்கள் இருவரின் நியாபகமோ அவனை விடாது தெடர்கிறது.”சார்” அவனுடைய காரியதரிசி கார்த்திக் மீண்டும் அவனைக் கலைத்தான்.”எஸ் கார்த்திக், மேகம் தீம் அஹ் பிக்ஸ் பண்ணிட சொல்லு மேன்.” உதடு பதிலை வழங்கிய போது விழிகள் கார் ஐன்னல்வழியே வான்மேகத்தைப் பார்த்தது. துகில் கொள்ள,மஞ்சள் பூசக் காத்திருக்கும் முகில்களெல்லாம் வாகனத்தின் எதிர்திசையில் வானத்தில் அவனைக் கடந்து, களைந்து சென்றது.
காணும் யாவும் நீயடி,
காட்சிப் பிழையென நானெடி!
சித்தம் எரிக்கும் தீயிலே,
என்னை வதைப்பது ஏனெடி?
அவள் வீழ்த்துவாள்…