யாகம் 20

யாகம் இருபது

 

குளிர் காற்று உடலின் மயிர்க்கண்களில் ஊசி போல துளைக்க, உள்ளங்கைகள் இரண்டையும் பரபர வென உரசி, வெப்பத்தை உண்டுபண்ணி தன் கன்னத்தில் வைத்தவாறு அவ் பங்களாவின் மூன்றாவது மாடி பால்கனியில் நின்றிருந்தான் இந்தர்.

 

“இந்துமா, காஃபி குடி” என இரண்டு கோப்பை குளம்பிகளுடன் வந்து நின்றான் ஹஸ்வந். “ரொம்ப குளிர்ல இந்த கிளைமட்” என இந்தர் கேட்கவும், அவனை விசித்திரமாக பார்த்த ஹஸ்வந்,

 

“டேய்! என்னடா புதுசாயிருக்கு. சென்னை வெயில்ல வெந்து போய், இப்போ இந்த டெல்லி குளிருதாம்ல. அதுவும் ஸ்வெட்டர் வேற போட்டுட்டு நிக்குற. இல்ல தெரியாமத் தான் கேட்குறேன். என்ன பழசு மறந்து போச்சா? சட்டை கூட போடாம இதே குளிர்ல உக்காந்து ஹீரோ மாதிரி கிட்டார் வாசிப்ப. இப்போ என்னவாம்” மூச்சுக் கூட விடாமல் பேசி தான் ஒரு வக்கில் என நியாபகப் படுத்தினான் ஹஸ்வந்.

 

“போடா வளர்ந்தவனே” அவனின் தோளில் தட்டியவன், குளம்பியை பருகி முடிய, “அம்முப்பா” என்ற குரலுக்கு அடிபணிந்து, அறைக்குள் நுழைந்தனர்.

 

“வா, வா அம்முப்பா! ஹஸ்ஸூபா” மழலை மொழி கூட சரியாக மாறாத மொழியில் அழைத்தது வேறு யாருமில்லை. அவர்களின் செல்ல மகள் ‘அமைரா’ தான்.

 

“இதோ வந்தாச்சே” என ஆண்கள் இருவரும் ஒருமித்தே கூறிவிட்டு, அமைரா படுத்திருந்த கட்டிலின் இருபுறமும் ஆளுக்கொருவராக உட்காந்து கொண்டவர்கள்,

 

“பட்டுமாக்கு என்ன வேணுமாம்” என அவளின் சுருள் கூந்தலைக் கோதினான் இந்தர். “என் பாப்பா பால் குடிச்சதாமா?” அவளின் கைகளை வருடிவிட்டவாரு கேட்டான் ஹஸ்வந்.

 

“எஸ், பேபி கூட் கேர்ள். ச்சோ… குவக்குவக் குடிச்சேனாம்” என்றாள் அமைரா. “தங்கப்பட்டுடா நீ” அவளின் கன்னத்தில் ஆளுக்கொரு முத்தத்தை வைத்து பேச்சைத் தொடர,

 

“அம்முமா, பாப்பா பார்கனும்”, அமைரா எதைக் கேட்கக் கூடாது என ஆடவர்கள் வேண்டுதல் வைத்தார்களோ அதே கேள்வியைக் தவறான நேரத்தில் சரியாக கேட்டாள்.

 

“ஹஸ்ஸூபா கல்யாணத்தப்போ, அம்மும்மா உன் கூடத்தானடா இருந்தாங்க” நிலமையைச் சமாளிப்பா கையாள ஹஸ்வந் பேச, “எஸ்” என தெத்துப்பல் முத்தாக மிளிர புன்முறுவலொன்றை சிந்தினாள் பூஞ்சிட்டு.

 

“அப்போ பாப்பா சமத்தா தூங்கனுமாம், அம்முமா சீக்கிரம் வந்திடுவாங்கலாம்” இந்தரும் சமாளிக்க, “ஸ்டோரி சொல்லு ஹஸ்ஸூபா” என ஹஸ்வந்திடம் கதை கேட்க ஆரம்பித்தாள் சின்னவள்.

 

இந்தரோ, ஹஸ்வந்தின் திருமணத்திற்கு இவளை அழைத்து வந்தததைப் பற்றி சிந்தனையில் உழன்றான்.

 

இந்தர், அமரா, பிரசாத் மற்றும் மேகவியின் திருமணத்திற்கு டெல்லியை விட்டு வந்த போது, அமைரா, ஹஸ்வந்தின் பெற்றவர்களின் கீழ் வைக்கப்பட்டிருந்தாள். ஆனால் ஹஸ்வந்தின் திருமணத்தின் போது, குடும்பத்தினர் அனைவரும் சென்னை கிளம்ப வேண்டியிருந்ததால்,

 

அமைராவையும் உடன் அழைத்து வந்திருந்தனர். ஆனால் ஹஸ்வந் வசித்த வீட்டில் அவளை வைத்திருந்தால் நடைமுறைச் சிக்கல் ஏதும் ஏற்படும் எனும் எண்ணத்தினால் அவ்வீட்டிற்கு ஒரு தெரு தள்ளியிருக்கும் இவர்களின் மற்றுமொரு வீட்டில் அவளை பாதுகாப்பாக விட்டிருந்தனர்.

 

அமைராவுக்கு, அவளின் அம்முமா ஆகிய அமரா உடனில்லா விட்டாலும் வீட்டிலுள்ள மற்றையவர்களுடன் நன்கு ஒட்டிக் கொள்வாள். இதில் அவளைப் பராமரிக்கும் பெண்ணும் உள்ளடக்கம். அப் பெண்ணுடனே அமைராவினை சென்னையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

 

இதில் முக்கியமான இன்னொன்றும் இருந்தது. அமைரா எப்போதும் ஹஸ்வந் மற்றும் இந்தரின் செல்லம். அதனால் அமரா இவளுடன் நீண்ட நாளாக தாெலைபேசியில் பேசாமல் விட்டாலும் கூட ஆண்கள் என்ன கூறினாலும் பிடிவாதம் பிடிக்காமல் ஏற்றுக் கொள்வாள்.

 

அவளின் இந்தக் குணத்தினாலயே, அமரா இப்போது சென்னையில் ஜீவிக்கிறாள். எப்போதாவது அரிதிலும் அரிதாக அம்முமா என இந்தர் அல்லது ஹஸ்வந்திடம் கேட்டாலும் அவர்களே சமாளித்து விடுவார்கள்.

 

இவளிற்கு நேர் மாறான குணத்தில் அமரா வாழ்கிறாள் என்பதே உண்மை. எடுத்த காரியத்தைச் சரிவரச் செய்ய வேண்டிய அவசியத்தால், எங்கே அமைராவின் குரலைக் கேட்டு வெடித்து அழுது விடுவாேம் என்ற பயத்தினால் தன் சேயிடம் பேசுவதையே குறைத்துவிட்டாள் அத் தாயுமானவள்.

 

வார்தையாடுவதிலும் குறும்பு செய்து அனைவரினையும் தன் பேச்சில் வசியப்படுத்தக் கூடியவனுமான அவ்வீட்டின் ‘சின்னக் கண்ணன்’ ஹஸ்வந் ஒரு வகையாக கதை சொல்லித் தட்டிக் கொடுத்து அமைராவைத் தூங்க வைத்திருந்தான்.

 

அவளின் அறையில் இரவு விளக்கினை ஔிரவிட்ட இந்தரும் ஹஸ்வந்தும், வெளியில் வந்து தங்களது பெற்றோர்களுடன்  நீள்விருக்கையில் அமர்ந்தனர்.

 

“என் பொண்ணு அமரா என்ன பாடு படுதோ? என ஹஸ்வந்தின் தாய் வசுந்தரா தேவி பேச்சை எடுக்க, 

 

“தூசு கூடப்படாம தங்கத்தட்டுல ஊட்டி வளர்த்த பொண்ணு” என தன் இயலாமையை வெளிப்படுத்தினார் இந்தரின் தாய் கௌரி.

 

“எனக்கு கோபத்தைக் கட்டுப்படுத்த முடியலப்பா” இந்தர் கைகளை முஷ்டியாக இறுக்க, “கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிடாலம்னு தோனுது” என்றான் ஹஸ்வந்.

 

“நீங்க இரண்டு பேரும் இருந்தும் அமராக்கு இந்த நிலமையா? ஐந்து வருஷத்துக்கு முன்ன குத்துயிரா ஹாஸ்பிடல்ல கிடந்த அவ முகம் இன்னும் கண்ணுக்குள்ள நிக்குது” புடவையின் தலைப்பால் விழியைத் துடைத்துக் கொண்டார் கௌரி.

 

“அட என்ன இது, அமராவே சொல்லிட்டா சின்ன அடினு. ஏன் இப்படி புலம்பி டென்ஸன் ஆகனும்” என ஹஸ்வந்தின் தந்தை கமலக்கண்ணன் வினவ,

 

“அப்பா, இப்போ இதுக்குத் தானா உன் வீட்டைப் பூட்டிட்டு இங்க வந்த?” கடுப்பாக கேட்டான் ஹஸ்வந்.

 

“டேய் சின்னவனே! கொஞ்சம் அமைதியா இரு. என் மருமக எல்லாத்தையும் சரியாப் பாத்துக்குவா. அவ வேட்டையாட பொறந்த பெண் சிங்கம்டா. ஊருக்கு வந்தோமா, ஆப்பிஸ் பிரட்சினையை பார்தோமானு நாளைக்கு ராத்திரி கிளம்புற வழியைப் பாருங்கடா” என அனைவரையும் அடக்கினார் இந்தரின் தந்தை ரகுவரன்.

 

“அப்பா” என்று தன் தந்தையின் மடியில் தலையை வைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான் ஹஸ்வந். அவனும் தான் எத்தனை துயரத்தை தாங்கிக் கொள்வான்?

 

அலைகடலுக்கு எதிரே, மதில்களின் பின்னால் நிமிர்ந்து நிக்கும், பிரசாத்தின் வீட்டின் மாடியில் நடுவில் போடப்பட்ட நீள்விருக்கையில் அமர்ந்திருந்தாள் அமரா.

 

அவளின் முன், மற்றொரு நீள்விருக்கையில் பிரசாத்தும் இசையும் உட்காந்திருக்க, “அண்ணி நத்திங் சீரியஸ். பெருவிரல் எலும்புல சின்னதா பிராக்சர். ஒரு வாரத்தில சரியாகிடும். இந்த மெடிசின்ன பாலோ பண்ணுங்க” என்று ஆலோசனை வழங்கினாள் இசை.

 

அவளின் பேச்சைக் கேட்டாலும் காலையில் நடந்த விபத்தினையும் அதற்குக் காரணமானவரையும பற்றிய யோசனையில் புருவங்கள் முடிச்சிட முகம் சிறுத்திருந்தாள் அமரா.

 

காலையில் பிரசாத் இவளைத் திட்டித் தீர்த்துவிட்டுச் சென்றிருக்க, அரைமணி நேரமாக உள்ளுக்குள் எதையோ வாதிட்டவளாக, அத் தயாரிப்பாளரைக் காண வண்டியைக் கிளப்பினாள் அவள்.

 

“எத்தன சீ பணம் வேணும் என்றாலும் மறைமுகமா நாமலே இன்வஸ்ட் பண்ணுவோம். இல்லைனா லோனாக் கூட கொடுக்கலாம். ஏன் வட்டியைக் கூட குறைச்சுக்கலாம்” பிரசாத்தின் நலவுக்காக அவள் பயணிக்க, 

 

காரினைப் பின் தொடர்ந்து டாங்கர் லாரி ஒன்று உச்ச வேகத்துடன் பயணித்தது. பின்னால் வரும் வாகனங்களைப் பார்வையிடும் குவிவாடியினூடாக அவ் லாரியின் அசுரத்தனத்தை ஏறிட்ட அமராவுக்கு சட்டென பொறி தட்டியது.

 

“ரொம்ப நேரமா பாஃளோப் பண்ணுது” அவள் பரீட்சிக்கும் நோக்குடன் வண்டியின் வேகத்தைக் கூட்ட, அதுவும் வேகத்தைக் கூட்டியது.

 

அமராவுக்கு புரிந்து விட்டது, யாரோ தன்னைத் தட்டித் தூக்க திட்டமிட்டு விட்டனர் என்று. காரின் வேகத்தை இன்னும் அதிகரித்தவள், ஏதாவது குறுக்குப் பாதை தென்படுகிறதா எனப் பார்வையை விட, ஒரு செம்மண் சாலை கண்ணில் பட்டது.

 

உடனே வண்டியை ஒடித்துத் திருப்பியவள், அப்பாதையில் வண்டியை விட சேரும் சகதியும் அடித்து வீசப்பட்டு உராய்வு விசை ஏகத்துக்கும் தாருமாறாக விசைப்பட, கார் அவளின் கட்டுப்பாட்டை மீறி வழுக்கிக் கொண்டு சென்றது.

 

எப்படியாவது முயலலாம் என நினைத்தவள், கடைசியாக அவ் வாகனத்தைக் கொண்டுசென்று மரத்தின் மீது மோதவிட்டாள். மோதியவுடன் காரின் காற்றுப்பை (எயார் பேக்) திறந்து கொண்டது. 

 

அவளுக்கு பெரிதாக எந்த அடியும் இருக்கவில்லை. ஆனால் வலது கையின் பெருவிரலினை அசைக்க கூட முடியாத நிலை. உடனே இந்தரின் மெய்காப்பாளருக்கு அழைத்து வரவைத்து, வைத்தியசாலைக்கும் சென்று இசையிடமே வைத்தியமும் பெற்று வந்தாள்.

 

விடயத்தை தன் வீட்டினருக்குத் தெரியப்படுத்தக் கூடாது என அவள் எண்ணியிருக்க, இந்தரின் மெயக்காப்பாளர்கள் அவனிடம் விடயத்தை தொலை பேசியில் கூறியிருந்தனர்.

 

விடயம் தெரிந்த இந்தரும் ஹஸ்வந்தும் உடனே இவளுக்கு அழைப்பை விட “யாருனு கேட்டா, வேறு யாரா இருக்க முடியும். எல்லாம் உன் மாமனாருடைய வேலைதான். என்னைப் போட்டுத் தள்ளிட்டு, உன்னை விரட்டி விட்டுட்டு அவர் மக மேகவியை பிரசாத்துக்கு கட்டி வைக்கத்தான்.

 

சரி அதை விடு, நீ திரும்பி வந்ததும் பார்த்துக்கலாம். இன்னைக்கு கிளம்பி வந்துடாதிங்க, ரகு மாமாவுக்கு துணையா நின்னு பிரட்சினையை முடிச்சிட்டு வாங்க. வலது கை தானே என்னால நல்லா அட்ஜஸ்ட் பண்ண முடியும். சோ டோன் வொறி” என அவர்களுக்கு எடுத்துக் கூறி, உண்மையையும் உடைத்திருந்தாள்.

 

அவளைப் போன்ற பல்துறைக் கம்பனிகளின் உரிமையாளருக்கு மத்தியில் ஆரோக்கியமான போட்டியிருக்குமே தவிர வக்கிரம் பலிவாங்கும் யுக்தியென எதுவுமிருக்காது, ஆதலால், இது வியாபாரப் போட்டியல்ல என கணித்தவள்,

 

அடுத்ததாக, ஆட்சியிலிருக்கும் அரசியவாதி ஒருவருக்கு அழைத்தாள். “இன்னும் அரை மணி நேரத்துல, யார், என்ன, எதற்குனு அத்தன தகவலும் என் கைக்கு வரவேணும்” என்று கட்டளையிட, வேலுப்பாண்டியே சதிகாரன் என உண்மை வெளியில் வந்தது.

 

“ஆடும் வரை ஆடட்டும்” என முனங்கிக் கொண்டவள், இப்போது இசையுடன் கலந்தாலோசனை செய்து கொண்டிருக்கிறாள்.

 

“தங்ஸ் பிரபா, நான் பாத்துக்கிறேன்” என்றவள், மருந்து வில்லையின் பொதியிடலைப் பார்த்து விட்டு, “இப்போ உங்க ஹஸ்பிடல்ல, இந்த ஃபார்மா கம்பனில இருந்து தான் எல்லா மெடிசினும் பேர்சஸ் பண்ணுறீங்க போல” எனக் கேட்க,

 

“ஆமாம் போல” என இசை புருவத்தை உயர்த்த, “நத்திங் பிரபா! நம்ம கம்னியோட அமால்கமேட் தான் இந்த ஃபார்மா. சேல் எப்படி போதுனு கேட்டேன்” என்றவள், சிறு தலையசைப்புடன் அவளின் அறைக்குச் சென்றாள்.

 

“என்னவாம்” பிரசாத், தங்கையைப் பார்த்து உதட்டைப் வளைக்க, “தெரியல, எனக்கு ஏதோ சாதாரண விபத்துனு தோனல” என்றவள், வாயில் பேனாவின் நுனியைக் கடித்துக் கொண்டிருந்தாள். 

 

“சாப்டியா இசைமா”, தங்கையின் முகவாட்டத்தை தினமும் அவதானிப்பவனாக, அவளின் முடியை மென்மையாக வருடிவிட்டவறு கேட்க, “ஆச்சுண்ணா, அண்ணி தான் சாப்டலனு தோனுது. டோஸ் கூடய டெப்லட்னா. கொஞ்சம்..” முடிக்காமலே, அமராவை கவனித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டவள், தன் புத்தகத்தை புரட்டினாள்.

 

“உப்” உதட்டைக் குவித்து ஊதியவன், அவன் அறைக்குள் நுழைய, அமரா அவளின் பிரத்தியோக உறக்கமான, கரடி பொம்மைக்குள் உடலைப் புதைத்து நித்திரா தேவியிடம் தஞ்சம் புகுந்திருந்தாள்.

 

“சாப்படாம தூங்கிட்டா”, முணுமுணுத்த பிரசாத்துக்கு ஏனோ அவளை எழுப்பி உணவை ஊட்டிவிட வேண்டும் என்ற எண்ணமே எழவில்லை.

 

அவனும் அவன் இடத்தில் படுத்துக் கொள்ள, லூக்காவும் குஷியாக அவனின் காலுக்கு மத்தியில் ஏறிக் கொண்டது.

 

அடுத்த நாள் விடியல் யாருக்கு இனிமையாக இருந்ததாே இல்லையோ, பிரசாத்துக்கு நன்நாளாக அமைந்தது. அவனிடம் தற்போது நிதிப் பற்றாக்குறை என கூறிய தயாரிப்பாளர், இப்போது படத்தை தொடரலாம் என்று கூறியிருந்தார்.

 

அமரா நேற்று இரவே, அவருடன் பேசியிருந்தது பிரசாத் அறியாத ஒன்று. சற்று அதிகமான பாதீட்டில் உருவாகும் சரித்திரப்படம். அதில் நடித்தால் பிரசாத்துக்கு நடிப்புலகில் ஒரு உச்சத்தையடைய வழிவகை செய்யும் என்பதாலே அவன் அப்படத்தின் மீது ஆர்வம் காட்டுவதற்கான காரணம்.

 

மிக உற்சாகமாக தொலைபேசியில் பேசியவன், பால்கனியிலிருந்து அறைக்குள் வந்த போது நேரம் காலை பத்து மணியைத் தாண்டியிருந்தது. ஆனால் அவனின் மனைவி நேற்று எப்படி உறங்கினாலோ, எந்தவித அசைவுமின்றி அப்படியே மஞ்சத்தில் கிடக்க,

 

‘பிரசாத் இது நீ கிடையாது, பகைவரோ துரோகியோ யாரா இருந்தாலும் உணவு கொடுக்குறது தப்பே கிடையாதுனு சொல்லுவ. அவ நல்லதுக்காக உன் வாழ்கையில நுழைஞ்சாலோ இல்லை கெட்டதுக்காகவோ. ஆனா இப்போ அவ உடம்புக்கு முடியாம இருக்கா. சாதரண ஒரு மனுசியா மதித்து அவளக் கவனிப்பதுல தப்பே இல்லை’ 

 

மனம் எனும் மாயாவி, அவனின் அறியாமையை அறிவு கொண்டு திறக்க, அமராவின் அருகில் சென்று எழுப்பியவன் கண்கள், ஒரு கனம் அவளின் காலின் மச்சத்தைப் பார்த்தே மீண்டது.

 

“அமரா, எழுந்திரு மணி பத்தாகிடுச்சு” அவன் தட்டி எழுப்ப, “தாத்தா பசிக்குது. காஃபி கொடுக்குறியா பிளீஸ்” என்றாள் கண்னைத் மூடியவாரே. அதிக மன உலைச்சலினாலும், அவள் எடுத்துக் கொண்ட மாத்திரையின் தாக்கத்தாலும் அவள் குழைய,

 

பிரசாத் உடனே, அறையின் ஒரு மூலையிலிருக்கும் குளம்பி தயாரிக்கும் இயந்திரத்தின் உதவியுடன் குளம்பியை தயாரித்தான். குளம்பியின் வாசம் மூக்கின் நுகர்வு நரம்புகளைத் தூண்டி விட, விழியைத் திறக்காமலே கட்டிலில் எழுந்து அமர்ந்த அமரா முன், 

 

‘இப்படிப் பார்த்தா நேத்துப் பெறந்த பூனைக்குட்டி மாதிரி இருக்கா, ஆனா அம்புட்டும் விசம்’ என நொந்தவனாக குவளையை நீட்ட, அவளும் நயனங்களை மலர்தினாள்.

 

தனக்கு முன் நீட்டப்பட்டிருக்கும் கையையும், அதற்கு சொந்தமான முகத்தை ஏறிட்டவள். மற்றப்பக்கமாக எழுந்து நகர முற்பட, “போறதா இருந்தா, இதைக் குடிச்சிட்டு வெளிய போ. இல்லைனா? நான் குடிக்க வைப்பேன்” வீராப்பாக அவன் பேச,

 

‘இவன் படத்துல ஒரு சீன் வருமே, ச்சீ அப்படி எதும் பாய்ஞ்சிட போறான்’ என கற்பனை பண்ணிய அமரா, குவளையைப் பறித்து ஒரு மூச்சாக குடித்து முடித்தவள், குளிக்கச் சென்றாள்.

 

தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, ஈரக்கூந்தலை காய வைத்திருந்தவளின் பின்னால் சென்று நின்றான் பிரசாத். அவனுள்ளும் ஆயிரம் வாக்குவாதங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்க அவளின் டீஷட்டின் தாழ்ந்த கழுத்தின் மூலமாக தெறிந்த முதுகில்,

 

நீர்த்திவளைகள் கோலமிட்டிருக்க, அவனின் பார்வை லஜ்ஜையாக மாற்றம் பெற்றது. கேசங்கள் காய்ந்ததை உறுதிப்படுத்திய அமரா தன் முன் அங்கங்களில் தவழ்ந்த கூந்தலை மொத்தமாக அள்ளி பின் பக்கமாக வீச, அது பிரசாத்தின் முகத்தில் ஓவியமாக வீழ்ந்து கொண்டது.

 

“ஹட்ச்சு”, முடியின் உரசலால் அவன் தும்ம, ஆடவனின் அரவத்தினால் திரும்பியவளும் திகைத்து விட்டு, பின் “சாரி, கவனிக்கல” என்றாள்.

 

“ப..பரவாயில்லை” அவன் கவனம் எங்கிருந்தது என அவள் அறிந்தாள் மன்னிப்பு பதிலாக ஒரு பிரலயம் உருவாகியிருக்கும் என்பதை அவள் அறியாள், அவன் அறிந்தும் உணரான்.

 

“பச்” கூந்தலைக் கொண்டையிட

முயன்று, தோல்வியைத் தழுவியவள் சினுங்க, “கொடு நான் கட்டி விடுறேன்” என பேன்டைப் பறிக்க, அவளை வெட்டுவது போல நோக்கினாள் அமரா.

 

“யம்மா! எல்லாத்துக்கும் ஒரு முறைப்பு  முறைக்காம, கொஞ்சம் உட்காரு. என்னோட உயரத்துக்கு நீ வளந்து நின்னா எப்படிக் கட்டி விடுறதாம்” என்றவன், அவளை அமர வைத்து, முடியை அழுத்தச் சீவி இரண்டு, மூன்று முடிகளை சீப்புடன் இழுத்து எடுத்தான். 

 

“உப், வலிக்குது” அவள் சிலுப்பிக் கொண்டு எழப்போக, “சூ” என அவளை வழுக்கட்டாயமாக பிடித்து வைத்து தன் எடுத்த காரியத்தில் வெற்றியும் அடைந்தான்.

 

“இதோ பாரு, நான் ஒன்னும் உன் ஹஸ்பன்ட்னு உரிமை எடுத்துக்கல. ஏதோ பாவம் விரலை உடைச்சிட்டு வந்திருக்கியேனு செய்றேன். அதுவும் உன் நொன்னன் எண்ட் அத்தை மகன் அது தான், கையில பேன்டும் கண்ணுல விளக்கெண்னையும் வைச்சிட்டு,

 

உன் பின்னால சுத்துவாங்களே அவங்க வரும் வரைக்கும் இது எல்லாம் நான் தான் பண்ணுவேன். வாய மூடிட்டு இருக்கல, மகளே காலையில சொன்னது மாதிரி..” இழுத்தவன்,

 

இரு புருவக்களையும் ஏற்றி இறக்கி, “மேட்டர முடிச்சிடுவேன். புரியல, அந்தப் படம் பார்களைனா சொல்லு. ரியாலிட்டில டெலிகாஸ் பண்ணிடுவேன். என்ன ஒன்னு இங்க நீ தான் ஹீரோயின் நான் தான் ஹீரோ. எந்த எடிடிங்கும் கிடையாது” 

 

ஒவ்வொரு வாக்கியமாக உச்சரித்தவன், அடிமேல் அடி வைத்து அவளின் உடலுடன் உடல் விட்டால் பசை போல்  ஒட்டிக் கொள்ளும் எனும் தூரத்தில் நின்று, 

 

அமராவின் இரு வரிக்கவிதையாகிய இதழ்களை பெரு விரல் ஆட்காட்டி விரல் இரண்டையும் இணைத்து, பிடித்து இழுத்தவன், ஒரே ஒரு நொடி கண்களுடன் கண்கள் கலக்க விட்டு, பின் அவளை விட்டு விட்டு,

 

“பசிக்குதுனு சொன்ன வந்து சாப்பிடுறியா?” அவன் கேட்கவும், நீ என்ன பேசினாலும் நான் அசர மாட்டேன் என நின்றவள், “எனக்கு பாஸ்தா வித் சைனீச் சிக்கன் வேணும், ஆடர் பண்ணியிருக்கேன் வந்ததும் பாத்துக்கிறேன்” என்றாள்.

 

‘உன் பருப்பு என் கிட்ட வேகாதுனு சொல்ல வறா போல’ என நினைத்தவன். வெளியில் செல்ல, அவள் கேட்ட பொருளை வாயில்காப்பவன் கொண்டு வந்து பிரசாத் கையில் கொடுத்துச் சென்றான்.

 

மீ்ண்டும் அறைக்குள் வந்தவன், “வா” என அவளை இழுத்துக் கொண்டு சென்று நீள் விருக்கையில் அமர்தியவன், தானே உணவையும் ஊட்டிவிட்டான். 

  

அமரா வேண்டாம் என மறுப்பாக தலையசைக்க, “சொன்னது மறந்து போச்சா? ஒரு ட்ரையல் காட்டவா?” எனக் கேட்க, கப்சிப் என அமைதியாக உண்டவள்,

 

“என்னோட பணம்னு யோசிக்க வேணாம். உன்னைப் பார்க்க வைச்சி சாப்பிட்டா எனக்கு வயிரு வலிக்கும். சும்மா இரண்டு  வாயை சாப்பிடு தேவா! ஒரு நாள் டையட்ட விட்டா ஏதும் ஆகாது. இந்த நடிப்பு, பணம் எல்லாமே ஒரு ஜான் வயித்துக்காக தானே!” என வம்பளக்க, 

 

“உனக்கு இப்படி எல்லாம் பேச வருமா?” கேட்க வேண்டும் என்ற உந்துதலில் அவன் கேட்க, “தெரியலியே” என்றவள், “போதும்” என எழும்பிக் கொண்டு பால்கனிக்கு நடையை விட,

 

‘ஜஸ்ட் மிஸ், இல்லைனா..’ துடிக்கும் இதயத்தில் கையை வைத்து அழுத்தியவள், அந்த நொடி அடைந்த உணர்வு பேரானந்தமே!

 

முன்னால் நடந்தவளின் உருவத்தை இமைக்க மறுத்து ஏறிட்டவனின் விழிகளில் வெற்றிச் சிரிப்பே!

 

நேற்று, பாடல் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தான் பிரசாத். கதையின் நாயகியும் நாயகனும் எதிர் எதிர் சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்க, நாயகியின் நீட்டப்பட்ட காலை நாயகன் சுண்டி இழுத்து கட்டிப் பிடிப்பது போன்ற காட்சி,

 

படத்தின் நாயகி நிஷோஷா, முதல் காலை நீட்டி சுவரில் சாய்ந்திருக்க, அப்போது தான் உடை மாற்றி வந்த, பிரசாதனதுக்கு அக்காட்சி ஏதோ கடந்த கால நிகழ்வொன்றின் விம்பமாக தோன்றியது. 

 

‘இது, இது’ என சிந்தித்தவன், இறுதியில் அக்காட்சியின் உண்மை நாயகியை அறிந்து கொண்டான்.

 

“அமரா! உன் பேயருக்கு அர்த்தம் பகைவனா இல்ல, வான தேவதையா? எதுவா இருந்தா என்ன இந்த தேவன் கிட்ட வசமா சிக்கிக் கிட்ட, இன்னும் எண்ணி பத்து நாள்ல, இந்த நடிகனோட உண்மையை அதவாது வில்லத்தனத்தை புரிந்து கொள்ளுவ நீ” 

 

பால்கனியில் நின்றவளின் நிழலை நோக்கி வரிசையாக பற்கள் தெரிய சிரித்தவன், மெல்லிய ஒலியில் பேசிக் கொண்டான்.

 

கள் வஞ்சகன் நீயடா!

கள்ளியும் நானடா!

என் முட்களில் பூவினுள் மதுவாக,

உன் உதிரம் ஊற்றிக் கொள்ளடா!

 

அவள் வீழ்த்துவாள்….