யாகம் 21

யாகம் இருபத்தொன்று

 

அந்தகாரங்கள் எல்லாம் விடியலில் தொலையும், உதயங்கள் எல்லாம் உதிராமல் நிலைக்காது, சிலர் வாழ்வினிலும் அப்படித்தான், 

அமராவுக்கு அடிபட்டு சரியாக பத்து நாட்கள் முடிந்திருந்தது.

 

டெல்லிக்கு ஊழியர் பிரட்சினை என அடிக்கோடிடப்பட்டு விரைந்த இந்தரும், ஹஸ்வந்தும் அடுத்த நாள் இரவே, சென்னைக்குத் திரும்பியிருந்தனர். தலைமை நிருவனத்தில் நடைபெற்ற பிணக்கினை சரிசெய்து வெற்றியும் பெற்றுக்கொண்டு வந்திருந்தனர்.

 

வானத்தின் வர்ணங்கள்; நீலமாக, மஞ்சளாக ஏன் சிவப்பாகக் கூட சிவக்குமல்லவா? அதற்கேற்றவாரே, கவியும் சாயங்களைப் பூசிக்கொண்டாள் தன் மீது.

அவளின் வானம் இந்தராக, அவனின் நிறங்கள் மேகமாகிய அவளாக.

 

சிவப்பு கடுதாசியில் சுற்றி அவள் வரைந்த படத்தை அவனுக்கு பரிசளிக்க, “பால் டப்பி! லுக்கிங் ரியலிஸ்டிக்.இது போல அமராவையும் வரைஞ்சு கொடுக்கியாடீ” என அவளின் மோகனத்தில் மண்னைத் தூவியன். அடுத்த நாளே,

 

“இங்கப் பாரேன், இந்த ஓவியத்தை பிரேம் பண்ணிட்டேன். இது உனக்கு நான் கொடுக்குற கிப்ட்” என்றவன், அவள் வரைந்த படத்தை சட்டத்திற்குள் அடைத்து அதன் கீழ் ‘இந்திரஜித் ரகுவரன்’ என அவனின் கையெழுத்தை எழுதிக் கொடுத்திருந்தான்.

 

அச் சட்டத்தில் மேகவி அவதானிக்க முடியாத ஒன்றும் இருந்தது. அவளின் கையெழுத்து ‘மேகவி’ என எழுதப்பட்டிருக்க, அதன் தொடர்சியாக தான் அவனின் கையெழுத்து கிறுக்கப்பட்டிருந்தது.

 

பின், இந்தரே சுவற்றில் ஆணியடித்து கட்டிலுக்கு நேர் எதிரே அதனை மாட்டியும் விட்டான். அவனின் புரியாத புதிரான செயற்பாடுகளும் கூட கவிக்கு ரசனையாகவிருந்தது.

 

ஹஸ்ந்திடம் இப்போதெல்லாம் இசை சமதானப் புறாக்களை பறக்கவிட்டுக் கொண்டிருக்க, அவனோ அவளிடம் அளவுக்கதிகமாக பேசுவதை தவிர்த்து வருகிறான். பரீட்சையில் கேட்கபடும் திறந்த கேள்விகளுக்கான பதில்கள் போல, ‘ஆம்’, ‘இல்லை’ சம்பாசனைகளே அவனிடம் அதிகமாக கேட்கமுடிந்தது.

 

பிரசாத்தின் அமராமீதான குற்றேவல்கள் எல்லாம் அவளின் இரு சிறகுகளான இந்தர், ஹஸ்வந் வரும் வரைதான் அதன் பின் வழக்கம் போல பாராமுகமே!

 

அதற்கு நேர்மாறாக, இந்தரும் ஹஸ்வந்தும் அவளை தலைமேல் தூக்கி வைத்து தாங்கினர் எனலாம். வீட்டிலிருந்த அனைவருக்குமே அவர்களின் உறவு பொறாமையைத் தான் கொண்டு வந்திரும்.

 

‘ஒரு விரல்ல அடி பட்டதுக்கு, இதுங்க பண்ணுற அளும்பு இருக்கே, சப்பா முடியலடா’ பிரசாத் மனதினுள் நினைத்துக்  கொள்ள, மற்றவர்களும் அதே பொருளில் வேறு வாக்கியங்களை அகத்தினுள் அர்ச்சித்தனர்.

 

இன்று பத்து நாட்கள் கடந்த நிலையில், கட்டும் பிரிக்கப்பட்டு சுகதேகியாக மாறியிருந்தாள் அமரா. காலையில் விழித்தவள்,

 

நேராக சமையல் அறைப்பக்கம் நடக்க, அங்கு யாருமேயில்லை. அதிகாலையில் வீடே உறங்கியிருக்க, அவள் மட்டும் எழுந்து இங்கு வந்து நிற்கிறாள்.

 

கைகள் தானாவே அசைந்தது, சந்தத்திற்கு கட்டுப்படும் பாடல் போல, வேகவேகமா வீட்டினர் அனைவருக்கும் பாலை கலக்கினாள்.

 

நேரே; சிவகாமி அறையிற்கு முதலில் பாலை கொண்டு சென்றவள். “பா..ப்ச் அத்தை, இது மாமாவுக்கு சக்கரை போடாத பால். மற்றயது உங்களுக்கு” என அறையின் கதவினருகில் கொண்டை முடிந்து நின்ற சிவகாமியிடம் பால் குவளையை ஒப்படைத்தாள்.

 

அடுத்து வேலுப்பாண்டியின் அறைக்குள் புகுந்து, “முதல் தடவை போட்டிருக்கேன் பெரியப்பா” என பாசத்தை  பரவசமாக பொழிந்தவள், வீட்டிலிருந்த இளையவருக்கும் பாலைக் கொடுத்து விட்டு, தன் அறைக்குள் புகுந்து கொண்டவள், அரை மணி நேரத்தில் அலுவலகத்திற்கு கிளம்பியிருந்தாள்.

 

அவள் சென்று பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு, இரவு பணிக்குச் சென்றிருந்த இசை, முகம் முழுக்க பூரித்துப் போன புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைந்தவள். நேரே தன் ஹஸ்ஸூவைக் கட்டியணைக்க துடித்த மெய்யுடன் அறையை அடைய,

 

ஹஸ்வந்தும் முகத்தை, துவாலையால் துடைத்துக் கொண்டு நிலைக்கண்ணிடியின் முன் நின்றிருந்தான். “ஹஸ்ஸூ” என கிசுகிசுப்பான குரலில் அழைத்தவாறு அவனின் முதுகில் தன் முகத்தை அழுத்தப் புதைத்துக்கொண்டாள்.

 

இத்தனை நெருக்கமாக அவள் அணைக்க, மூடிவைத்தாலும் ஔி வீசும் வைரமாக அவன் காதலும் அவனினுள் இருந்து வெளிச்சத்தைக் கிளப்ப, அவளினைத் தன் முன்பக்கமாக பிடித்து நிறுத்திக் கொண்டவன்,

 

“என்னவாம் பிரபாவுக்கு” அவளின் முகத்தை உள்ளங்கைக்குள் தாங்கி அவன் வினவ, அவனின் வலது கரத்தை எடுத்து, அவளின் ஆழிலை வயிற்றின் மீது வைத்தவள். “சின்னக் கண்ணனுக்கு ஒரு குட்டிக் கண்ணன் வரபோறான்” என்றாள் இசை.

 

அவளின் வார்த்தைகளில் அத்தனை உயிர்பு, ஜன்மசாபல்யம் அடைந்தவன் ஆனந்த கூத்தாடுவது போன்று மெய் சிலுக்க அவள் நின்றிருக்க, நொடியில் அவளைக் கட்டியணைத்தவன், 

 

கன்னம், நாசி, நுதல் என ஈர இதழ் ஒற்றல்களைக் கடைபரப்பியவன், அடுத்த நொடியே துடித்து விலகி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

 

“ஹஸ்ஸூ” அவளின் குரல் காற்றாகிப் போனது. இரவு பணிக்குச் சென்றிருந்த இசையின் கண்கள் நாட்காட்டியை எதேர்சையாக ஏறிட, அவளுள் குட்டிப் பூகம்பம் ஒன்று நிகழ்ந்தது. உடனே தன் தொலைபேசியை எடுத்தவள் தனது மாதவிடாய் சக்கரத்தினை செயலி மூலம் சரிபாத்தவளுக்கு,

 

உவகை பொங்கி வழிய, உடனே காந்திமதியின் அறைக்குத்தான் சென்றாள். விடயத்தைக் கூறி தன்னைப் பரிசோதிக்குமாறு கூறிவளிடம், சோதனை முடிவாக காந்திமதி,

 

“கண்ணனை பிரவசம் பாத்தது இந்தக் கைதான் இசை. இப்போ என் கண்ணனுக்கு ஒரு குழந்தைனு வரவும், ஐ எம் சோ ஹெப்பி. உன் குழந்தையும் நான் தான் பிரசவம் பாத்து வெளிய கொண்டு வருவேன்” என்றவரின் கண்கள் பனிக்க, கைக்குட்டையில் ஒற்றிக் கொண்டார்.

 

இசைக்கு இப்போதே இந்த நிமிடமே ஹஸ்வந்தை கட்டிக் கொள்ள மாட்டோமா? என்ற வேட்கையைத் தனிக்கவே முடியாமல், நொடிகளை யுகங்களாக எண்ணி, பணி நேரம் முடிய பட்சியாக இவனிடம் வந்து ஒட்டிக் கொண்டு அவள் ஆர்பரித்தால், அவனின் பதில் என்ன என்பதே புரியாத நிலை.

 

வைத்தியராக தம்பதிகளின் கற்பத்தை உறுதி செய்தவள் கண்ணூடே பார்த்து இருக்கிறாள் அல்லவா, அவர்களின் உயிரில் உதிக்கவிருக்கும் ஜீவனைப் பற்றிய செய்தியை அறிந்தவுடனே, வைத்தியர் இருப்பதையும் மறந்து அனைப்பதும் சிரிப்பதுமாக,

 

எத்தனை இனிமையான தருணமது. ஆனால் தன் கணவனின் பிரதிபலிப்பு சற்றும் அவளுக்கு உவகையாக இல்லை. இருப்பினும் அவன் வெளியே வரட்டுமென கட்டிலில் காலைத் தொங்க விட்டு அமர்ந்தவளின் கரங்கள் மெதுவாக தன் வயிற்றை ஸ்பரிசித்துக் கொண்டது.

 

அங்கே, குளியலறைக்குள் ஹஸ்வந்தோ விழியை வட்டவடிவமாக்கி தன் விம்பத்தையே கண்ணாடியில் பார்த்திருக்க, கண்கள் சிகப்பு நிறக் கோடுகளை உருவாக்கி மெல்ல மெல்ல உவர்பான திரவத்தை சொரிந்தது.

 

“கடவுளே! என்னால முழுசா சந்தோசத்தைக் கூட அனுபவிக்க முடியல. பாதி கூட சரியான உண்மைகளை பிரபாக்கு சொல்லவே இல்லை. இப்போ என் குழந்….தை, இன்னொரு பக்கம் என்னோட முதல் குழந்தைங்க இரண்டுக்கு நான் என்ன பதில் சொல்ல போறேன். கண்டிப்பா அமரா…” வார்த்தையை முடிக்காமல் கண்ணாடியை வெறித்தான் அவன்.

 

இசைக்கு உண்மைகளை முழுதாக எடுத்துக் கூறாமல் வாழ்க்கையைத் தொடங்கியதே அபத்தம் என அவன் மனது அவனைக் குத்திக் குடைய, இன்னொரு மனமோ; தான் எடுத்த காரியம் அதிலும் அமராவிற்கு நியாயம் செய்யாமல் விட்டுவிட்டோம். என பேரிரைச்சலை ஏற்படுத்த,

 

சுயபட்சாதாபத்தில் தன் விம்பத்தின் மீதே, கைகளை முஷ்டியாக்கி ஓங்கி ஒரு குத்தை வைக்க, அதுவோ உடையாத கண்ணாடி வகையைச் சார்ந்தது போல,

 

சிறிய நொருக்கங்களை மாத்திரம் ஏற்படுத்தியிருந்தாலும், அவன் அடித்த வேகத்திற்கு இசைக்கே தெளிவாக சத்தம் கேட்க, குளியலறைக் கதவைத் தட்டக் கையை வைக்க, அது தானாகவே திறந்து கொண்டது.

 

பதற்றத்துடன் அவளவனை அவள் ஏறிட, அவனோ குளியறைத் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான். “ஹஸ்ஸூ, எ..என்னாச்சு…ஏன்” அவனிடம் நெருங்கி அமர்ந்தவள்; அவன் வலது கரத்தைப் பிடிக்க, அது கண்றிச் சிவந்து இருந்தது.

 

பெயரில்தான் சின்னக் கண்ணனாக இருப்பவன், பிரசாத் மற்றும் இந்தரைக் காட்டிலும் வெளிரிய நிறமே! அவனின் நிறத்திற்கு நன்றாகவே இசையால் அவதானிக்க முடிந்தது, செம்மை நிறத்தில் வீங்கிக் கொண்டிருக்கும் அவன் விரல்களை.

 

“எய்ந்திருச்சு வா” என அவனைத் தன் முழுப் பலம் கொண்டு எழுப்பியவள். மஞ்சத்தில் அவனை அமர்த்திவிட்டு, களிம்பொன்றை எடுத்து பூசிவிட்டாள்.

 

“அட விடு பிரபா! ஐம் சாரி, எப்படி ரியாக்ட் பண்ணனு தெரியல. நீ தூங்குடாமா. நா..நான் கொஞ்சம் வெளியே கேஸ் விசயமா போய்ட்டு நைட் வந்துடுறேனாம்” என எழுந்தவனின், கையை விடாமல் தன் புறம் இழுத்தாள் இசை.

 

“என்னடாமா ஏதும் வேணுமா?” அவன் கேட்க, ‘ஆம்’ என தலையை மட்டும் அசைத்து, சற்று எம்பி அவனிதழலில் மென்மையாக இதழை வைத்துப் பிரித்தவள், ‘போ’ என மீண்டும் தலையசைத்தாள்.

 

ஐந்தடுக்குக் கட்டிடத்தின் கடைசித்தளத்தின், உரிமையாளர் என பெயர் பொறிக்கப்பட்டிருந்த அறையில் தனது நாற்காலில் தலையை சாய்த்து உட்காந்திருந்தாள் அமரா.

 

கடந்த மூன்று நாட்களாக, அவளின் உள்மனம் அடித்துக் கொண்டிருக்கிறது. ‘வேஷம் களைத்திடும் நேரம் வந்துவிட்டது’ என்ற அசரீரி காதுகளில் முளங்க, நயனங்கள் தோள் பட்டை என்பன அடிக்கடி சிறிய அதிர்வொன்றை வெளிக் காட்டிக் கொண்டிருந்தன.

 

இதே அதிர்வுகளை அவள் ஐந்து வருடங்களுக்கு முன்பு அனுபவித்திருந்தாள். அதன் விளைவுகள் சுனாமி பேரலைகளாக அவளைச் சுழற்றியடித்தன.

 

இந்தர், ஹஸ்வந் எனும் ஆடவர்களை விட ஏன் தன் அத்தை மாமா என அனைத்து உறவினரையும் விட அதிகமாக அவளை மார்பிலும் தோளிலும் போட்டு உச்சி முகர்ந்த தாத்தாவை பறிகொடுத்தாள். அடுத்து அவர் காரியம் முடியும் முன்பே,

 

தன் ஆத்மாத்தமான காதலைத் தூக்கி எறிந்தாள், கடைசியில் விபத்தில் சிக்கி, நான்கு நாட்கள் கண்விழிக்காமல் பித்தாகி எமனிடம் போராடி உயிர் மீட்டாள்.

 

இப்போதும் கடந்து வந்த அந்த ஐந்து ஆண்டுகளை மறக்காமல் அவள் தவிக்க, அதே நிகழ்வுகள் மீட்சியாகபோகிறது என்ற யோசனையே அமராவை வாட்டி எடுத்தது, தன் மாமாவும் இந்தருடைய தந்தையுமாகிய ரகுவரனுக்கு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டு நிமிர,

 

அவளின் குட்டா அறைக்குள் நுழைந்தான். “இன்னும் ஒரு வாரம் இங்காதான?”, ‘கடைசிவரை கவி கூட இருந்திட மாட்டோமா’ என்ற கேள்வியை வெளியில் திரிபடைய வைத்து அவன் வினவ, “எஸ், நாளைக்கு அமைரா இங்க வருவா, மாமாகிட்ட சொல்லிட்டேன்” என்றவள்,

 

இந்தரின் மனதைப் படித்தும் விட்டாள், “பாப்பா இங்க எதுக்கு…” இழுத்தவன், “உன் முடிவு சரியாத்தான் இருக்கும் பார்பி கேர்ள்” என்றவன் கோப்பை புரட்ட, ஹஸ்வந் சோகமே வடிவாய் அறையினுள் நுழைந்தான்.

 

இருக்கையில் சாய்வாக வந்து இருந்தவன், “உப்” என மூச்சை இழுத்துவிட, “சின்னு! கைல என்னாச்சு” என அவனின் டெடி வினவ, 

 

“பிரபா இஸ் பிரெக்னன்ட்” மின்னாமல் முழங்காமல் இடியை இறக்கவில்லை அவன், ஆனால் சீனியும் சக்கரையும் கொட்டாமல் கிலோக் கணக்கில் அல்வாவையல்லவா அமராவின் தலையில் கொட்டினான்.

 

“மாப்புள” என இந்தர், ஹஸ்வந்தைக் கட்டிக் கொள்ளச் செல்ல, “ஹாஹா” என அமராவின் வெடிச் சிரிப்பில் தன்னைச் சுதாரித்தவன் அவளை நோக்கினான்.

 

“முடிக்கும் போது ஆரம்பமா? பலிவாங்கும் படலம் அந்தாதி போல தொடருது” கைதட்டி கிளுங்கியவள், “முடிச்சிடலாம், நம்ம ஃபார்மா கம்பனில புதுசா கர்பத்தடை மாத்திரை வெளிவரப் போகுது தானே?” சிந்திப்பதாக பாங்கு செய்தவள்,

 

“ட்ரயல் அண்ட் எரர்  இந்தவாட்டி பிரபா தான் நமக்கு சாம்பில், சோ சின்னு நீயே அவளுக்கே தெரியாம அவ குழந்தையக் கொள்ளுற, எப்படினா… பிரபாக்கு காசி அல்வா ரொம்ப பிடிக்கும் சோ…” மீதியை அவள் சொல்லா விட்டாலும் ஆண்கள் விளங்கிக் கொள்வார்கள் அல்லவா?

 

“அமரா, வேணாம்டா” என இந்தர் ஆரம்பிக்க, “சோ, பார்பி கேர்ள் அமராவா மாறிட்டேன்ல மிஸ்டர் இந்தரஜித் ரகுவரன்” என்றவள், “மிஸ்டர் ஹஸ்வந் கமலக்கண்ணன் வாட் எபௌட் யூ? நான் சொன்னதை முடிச்சிட்டு என்னை வந்து பாருங்க” என்றவள், அவளின் சென்னை வீட்டிற்குச் சென்று விட்டாள்.

 

ஹஸ்வந்தும் வாய்ப்பூட்டு போட்டவனாக, அவள் சென்ற அடுத்த நிமிடம் அவனும் வெளியேறி மெரீனா கடற்கரைப் பக்கமாக வண்டியை விட்டான்.

 

இந்தரோ தலையைப் பிடித்துக் கொண்டு மேசையை வெறிக்க, “எனக்கு மூனு வயசு இருக்கும் போது, அவன் பிறந்தான். அவன் கூடவே தான் வளந்தேன். சின்ன விசயத்துக்கே சென்சிடிவ் ஆஹ நடத்துப்பானே! அடுத்து அமரா; நான் தூக்கி வளர்த்தவ, 

அவ முடிவு எடுத்தா அது கல்லுல எழுதினது மாதிரியாச்சே! நான் என்ன தான் செய்றது, யாருக்கு சார்பா பேசுவேன்” முணுமுணுத்துக் கொண்டான் இந்தர்.

 

தன் வீட்டின் முன் அமைக்கப்பட்டிருக்கும் பூங்காவில் போடப்படிருந்த கல் இருக்கையில் அமர்ந்திருந்த இசை, தூரத்தில் தெரியும் கடலை வைத்த கண் எடுக்காமல் வெருவுதலாக நோக்கியிருந்தாள். வேறு ஒரு இடத்தில் ஹஸ்வந்தும் கடலைத்தான் பார்திருந்தான்.

 

அமரா, அவளின் வீட்டில் மொட்டை மாடியில் நடைபயின்று கொண்டிருந்தவள், சட்டென அருகிலிருக்கும் வேம்பு மரத்தில் அவளின் விழிகள் ஸ்தம்பித்தது. 

 

அங்கே தாய்பறவை, தன்சேய்பறவைகளுக்கு உணவினை தன் அலகுகளால் ஊட்டிக் கொண்டிருக்க, புறக்காட்சிக்கும் அகக்காட்சிக்கும் இடையிலான வெற்றிடத்தினை ஜலங்களாக, வெள்ளைத் திரை விரிந்தது.

 

அத்திரையில் கருப்பு உருவங்களாக, சில மனிதர்களின் நடமாட்டம். இரண்டு பொசுங்கிப்போன உருவங்களில் சாம்பலில் தூசுகள் காற்றில் கலந்தது, ஒரு பாடல் ஒலி ‘தாய்ப்பறவை, மிதித்தால் சேய்ப்பறவை, நோவதில்லை, காயம் ஆவதில்லை!’ எனும் பாடல் வரிகளை உச்சரிக்கும் அதரங்கள், என மாயைகள் தோன்ற, மடிந்து நிலத்தில் அமர்ந்து கொண்டாள் அவ்வஞ்சி. 

 

சிறு விடிவிளக்கின் ஔியில் மங்கிய ஓவியமாக தன் அறையின் நீள்விருக்கையில் கூந்தளைக் கூட முடியாமல், தோள் வழியே தொடைகளைத் தொடுமாறு விரித்து விட்டு அமர்ந்திருந்தாள் இசை.

 

‘ஏன்’ என்ற வினா, ‘வேண்டாம்’ என்ற முடிவில் அவளைத் தள்ளி விடுவது போன்ற தோற்றம் அவளுள். நடுக்கடலில் மிதக்கும் படகாக அகத்தே தத்தளிப்பவளை கவலை கவற்றியது.

 

சிலையென சமைந்து இருந்தவளின் முன் நிழலாட, நயனங்களை மட்டும் நிலைகுத்தாக ஏறவிட்டவளின் முன் மண்டியிட்டான் அவளின் அன்பன்.

 

“என்னடாமா இருட்டுல உக்காந்து இருக்க?” தேற்றுதலாக அவளின் கைகளை வருட, “கொ..கொஞ்சம் பேசலாமா?” என்றாள் காரிகை.

 

“பேசலாம், ஆனா முதல்ல இதை சாப்பிடுவியாம். நானே உனக்கு ஊட்டி விடுறேன்” கையிலிருந்த காசியல்வா பெட்டியிலிருந்து, ஒரு கரண்டியை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.

 

“உனக்கு ஹஸ்ஸூ” என அவனை நோக்க, “நீ சாப்பிடுடா, நான் பிறகு பாத்துக்கிறேன்” என்றவன், முழுதையும் அவளுக்கு ஊட்டி முடித்தான்.

 

“சரி இப்போ சொல்லுடா”, என அவன் வினவ, “ஹஸ்ஸூ! உனக்கு இப்போ குழந்தை வேணாம்னு தோனுதா? நான் பிரக்னன்ட்னு சொன்னதும், நீ நடந்துக்கிட்ட விதம் ஏதோ..தப்பா..” அவள் பேச பேச அவனின் கண்ணில் ஒரு தீட்சண்யம் தெரிய வார்த்தைகளை முடிக்காமல் அவள் நிறுத்த, 

 

“சொல்லு பிரபா” என்றான் கர்சனையாக, “இல்ல, இப்போ, ஐ மீன் பிளானிங் இல்லைனா… உன..உனக்கு வேணாம்னா, அ..பார்…சன்” அவள் உச்சரிப்புக்கள் தேய்ந்து கடைசி வார்த்தை வாய்குள்ளேயே முற்றுப் பெறாமல் தங்கிக்கொண்டது, 

 

ஏனெனின் ஹஸ்வந்தின் இருகிய முகமும் இடுங்கிய உக்கிர பார்வை வீசிய கண்ணகளையும் ஏறிட்டு, அவளால் தொடர்ந்து வாயை அசைக்கக் கூட முடியவில்லை.

 

“ஹாஹா” கைகள் இரண்டையும் இணைத்துத் தட்டிக் கொண்டவன், தரையிலேயே சம்மனமிட்டு அமர்ந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

 

அவனின் கெக்களம் இசையினுள் பீதியைக் கிளப்ப, சற்று தன்னை அடக்கியவனாக, “ரொம்ப சந்தோசமா இருக்கே, அபோர்சன் தானே தாராளமாப் பண்ணிடலாம். எந்த ஹஸ்பிடல் உனக்கு வசதியா இருக்கும். நீ வேர்க் பண்ணுர ஹஸ்பிடல் ஓகேனா, மதிமா கிட்ட பேசிடட்டுமா?” ரௌத்திரமாக கத்தினான் அவன்.

 

“இ..ல்..ல” காற்றாகி போனது அவளின் மொழி. “என்னடீ இல்ல, என்ன இல்ல, அடிச்சேன்னு வை, ஜென்மத்துக்கும் சிரிக்க முடியாதபடி பல்லை கழட்டிக் கையில கொடுத்துடுவேன்” ஓங்கிய கையை, அந்தரத்திலே நிறுத்திவிட்டு, மீண்டும் அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து,

 

கரங்களை அவளின் இடையூடு மாலையாக கோர்த்து, அவளின் உதரத்தில் முகத்தைப் புதைத்தவன், ஐந்து நிமிடங்களாக அசைவின்றிக் கிடந்தான்.

 

முதலில் என்ன செய்வது என விளங்காதவளாக முழித்த இசை, பின் அவனின் முதுகையும் பிடரிசிகையையும் வாஞ்சையாக வருடிவளின் கை சில நொடிகளில் நடுங்கியது.

 

மெல்லிய சிஃபான் சேலை கட்டியிருந்தவளின் வயிற்றுப் பகுதியில், ஈரத்தை உணர்ந்தாள் பெண். ஆண்கள் அழ மாட்டார்கள் எனும் விதியை தகர்தெறிந்து, அவனின் கண்ணீர் அவளின் வயிற்றை நனைக்க,

 

“ஹஸ்ஸூ” என்றாள், நடுங்கும் குரலில், உதடு அவனின் நாமத்தை உச்சரித்தாலும், அவளின் நயனங்களும் அணைகடக்க நீரை வாரியிறைத்தது.

 

“அழாதா பிரபா! தயவு செய்து அழாத. மீறி நீ அழுதா அது நான் உயிரோட இல்லாதப்போவா இருக்கனும். ஆனா அப்போவும் உன் அழுகையை என்னால தாங்கிக்க முடியாது. போறதா இருந்தா உன்னையும் கூட கூட்டிட்டே பேயிடுவேன்” கரகரத்த தொனியில் பேசியவன், அவளை அணைத்த நிலையை மாற்றிக் கொள்ளவேயில்லை.

 

சட்டென மழைவிட்டது போல அவள் ஸ்தம்பித்து அழுகையை நிறுத்த, “எனக்கு ஒரு வாய்ப்பு கொடு பிரபா, இன்னும் பத்து நாள் கொடு. எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன். ஆனா…” திக்கியவன்,

 

“ஆனா இது நம்ம உயிருடாமா. இதை கொ..கொலை பண்ணுற அளவு நான் மிருகம் எல்லாம் கிடையாது. நம்ம காதலோட தேடல்ல கடவுள் கொடுத்த பரிசைத் தூக்கியெறிய எனக்கு எப்படி மனசு வரும். காலையில எனக்கு சத்தியமா எப்படி ரியாக்ட் பண்ணுறனு புரியல,

 

ஐம் சாரி, உன்னைக் காயப்படுத்தியிருந்தா மன்னிச்சிகோ. ஆனா என் குழந்தைக்கு நான் நல்ல அப்பாவா இருக்க ஆசைப்படுறேன். உனக்கும் தான் நல்ல கணவனா இருக்கனும்னு… பிளீஸ் என்னை வெருத்து ஒதுக்கிடாத. என் இரத்தத்தை அழிக்கனும்னு,

 

இனி ஒரு வாட்டியும் சொல்லிடாதடாமா. கான்ட் டாலரேட் இட். அண்ட் லவ் யூ போத்” முடித்தவனாக அவளின் ஆழிலையில் அழுத்த முத்தமொன்றை வைக்க, இசையின் ரோமங்கள் சிலிர்த்து அடங்கியது. 

 

அம்முத்தத்தில் காமமில்லை, காதல் கொட்டிக் கிடந்தது. தன் மனைவிக்கும் குழந்தைக்கும் ஏன் அவனுக்குமான காதலை மூன்ரெழுத்தில் உச்சரித்து சொல்லியதை விட அம்முத்தம் நன்றாக வெளிப்படுத்தியது.

 

வேட்டைக்கு இறைதேடும், பசித்திருக்கும் சிங்கம் தன் கண்கள் மின்ன பளிச்சிடுவது போன்ற, தோற்றத்தில் பிரசாத் தன் அறைக்குள் நடந்து கொண்டிருந்தான். அவனின் கரங்களில் ஒரு வைத்திய அறிக்கை பத்திரப்படுத்தப்பட்டிருந்தன. 

 

“விடியலுக்கு இன்னும் ஆறு மணித்தியாலம் மட்டும் தான் இருக்கு. இது சூரிய உதயத்துக்கு இல்லை, என் வாழ்கையின் இல்லை என் வீட்டைப் பிடிச்சிருக்கும் இருளை விலக்குறதுக்கான விடியல்” என சத்தமாக பேசிக்கொண்டிருந்தான் அவனின் அறையில்.

 

சுற்றத்தின் நித்திரையைக் களைத்து விடியலும் வந்தது. “மேகம்” என கவியை அழைத்த இந்தர், ஏதோ தூண்டுதலால் அவளின் தலையை வருடிவிட்டு ‘வருகிறேன்’ எனும் விதமாக தலையை அசைத்துவிட்டு,

 

‘லூக்கா’ வினை அதன் பெட்டியில் அடைத்து, ஹஸ்வந்தையும் உடனழைத்து அமரா தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்றான்.

 

நேற்று ‘வேலை அதிகம்’ என சிவகாமிக்கு அழைத்துச் சொன்ன அமரா, பிரசாத்தின் வீட்டிற்குச் செல்லவேயில்லை. கடந்த மாதங்களில் அவள் இவ்வாறு நடந்து கொண்டிருந்ததால் அவரும் ஏதும் கேள்வி கேட்காமலிருந்தார்.

 

ஹஸ்வந் மற்றும் இந்தருக்கும் நன்றாகவே புரிந்திருந்தது. அமராவின் உள்ளம் நிலையாகவில்லை என்பது. அதனால் தனியே இருந்து சிந்தித்து விட்டு இவர்களுக்கு அழைப்பாள் என அவர்களும் விட்டு விட,

 

அமைரா சென்னை வந்துவிட்டாள் என ரகுவரன் அழைத்துச் சொல்லிருந்தார் ஆண்கள் இருவரிடமும்.   அமராவின் மனக்குழப்பத்தைச் சரி செய்ய வேண்டி, அவளைச் சந்திக்கும் நோக்கத்தில்,

 

“கண்டிப்பா டெடிய பார்க்கப் போய் நின்னா, நம்ம கூட பேசவே மாட்டா இந்து. அதனால, லூக்காவை அமைராக்கு கொடுக்குற சாட்டுல அங்க போய் பேசலாம்” என ஹஸ்வந் கூற,

 

‘லூக்கா’ அமைராவுக்கு மிகவும் பிடித்தமான செல்லப்பிராணி, ஆகையால் அதனை அழைத்துக் கொண்டு அமைராவைச் சாக்கிட்டு, அமராவைப் பார்க்க சென்று கொண்டிருக்கின்றனர்.

 

சென்னை வீட்டினுள் வந்து, தூங்கிக் கொண்டிருந்த அமைராவை எழுப்பி, பல் துலக்கிவிட்டு பாலையும் கலக்கி கொடுத்து, ஒரு சுற்று சேவகத்தை முடித்தவர்கள், இரண்டாவது மாடிக்கு,

 

அமராவின் அலுவலக அறைக்கு மின் தூக்கியில் அமைராவையும் உடனழைத்துச் சென்றனர்.

 

மழலையைப் பார்த்துக் கொள்ளும் பெண்ணும் அருகிலிருக்க, லூக்காவை அமைராவின் மடியில் அமர்த்தி விட்டு, அவளை கவனித்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டவர்கள். அமராவின் அறைக்குள் புகுந்தனர்.

 

அலுவலக மேசை மீது, ஏறியமர்ந்து கால்களைத் தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தவள், சுவரில் புகைப்படமாக புன்னகைத்துக் கொண்டிருந்த தனது பெற்றோரை வெறித்தாள்.

 

“பார்பி கேர்ள்”, “டெடி” என ஒருமித்து இருவரும் அவளின் தோள்களில் கை வைக்க, “சின்னு, நான் சொன்னத முடிச்சிட்டியா?” ஆர்வமாக ஏறிட்டாள் அவனை.

 

“இ..ல்..ல..டா” அவளின் விழிகளைப் பார்பதை தவிர்த்து, அவன் மறுக, “பார்பி கேர்ள்…கொஞ்சம்” இந்தர் பேச வர,

 

“இர்திரஜத், கொஞ்சம் இருங்க” என்றவள், “சின்னு, என் கிட்ட வாயேன்” என அவனின் கரத்தை இழுத்தவள், அவனை அணைத்துக் கொண்டு,

 

“அது என்ன புதுசா தயக்கம் என் சின்னுக்கு? பிரபா கற்பம்னா அப்போ அது உனக்கு குழந்தையில்லியா? நீ என்ன பண்ணியிருக்கனும், நான் அப்பாவாக பேறேன்னு சுவீட்ஸ் வாங்கி கொடுக்க வேண்டாமா” இளநகை நகைத்தவள்,

 

“உன் குழந்தைனா எனக்கும் குழந்தை தான் சின்னு. நீ அதுக்கு அப்பான, அது எனக்கு பொண்ணோ பையணோ தானே. நான் போய் அதை அழிக்க சொல்லுவேனா? இவ்வளவு தான்ல? இருபத்தைந்து வருஷ வளர்ப்பு இதுதானா?” என்றவளின் கன்னத்தில் கோடாக சூடன திரவம் ஓடியது.

 

“நான் உன் ரியாக்ஷன பார்க்கத்தான் அப்படி பேசினேன். எனக்கு தெரியுமே நைட் காசி அல்வா வாங்கி கொடுத்து என் சித்தியை கரெக்ட் பண்ணின தானே” என கண்சிமிட்டிச் சிரித்தாள்.

 

அவளுக்கு குழந்தையைக் கொல்லும் நோக்கம் எதுவும் கிடையாது. ஹஸ்வந் இப்போதாவது தன்னிடம் எதிர்த்துப் பேசி அவன் மனைவியுடனான பனிப்போரினை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே. இவள் என்ன ஓதினால் ஹஸ்வந் எதை நடைமுறைப் படுத்துவான் என்பது, அவள் அறிந்த கலைகளில் ஒன்று.

 

“சாரி டெடி. எனக்கு எதுவுமே புரியலியா. அதுலயும் இந்துமா, என்னை விட பெரியவன் இருக்கும் போதே நான் அப்பாவாகிட்டனா, ஒரே வெட்கம். பட் இப்போ புரியது, வெட்கப்பட வேண்டியவன் இவன் தான்” மீண்டும் குறும்புக் கண்ணனாக மாறியிருந்தவனின் புஜத்தில் இந்தர் வலிக்க அடித்தான்.

 

“அதை விடு சின்னு. இங்க சிலர், தமிழே வாசிக்கத் தெரியாம தமிழ் புத்தகம் வாங்கியிருக்காங்க. அப்புறம் ஓவியம் வரையுராங்கலாம், பாட்டு படிக்காங்கலாம்” என்று இந்தரை வம்புக்கு இழுத்தவள்,

 

நொடியில் முகத்தை மாற்றி, “மேகவியை டிவோஸ் பண்ணிட்டு, அமராவை எப்போ கல்யாணம் பண்ணி குழந்தை குட்டினு வாழப் போற” எனக் கேட்டாள்.

 

அவள் கேள்வியை முடித்து அடுத்த கணம், அவளின் புஜத்தை பற்றி கன்னத்தில் தன் கை அழுத்தப்பதியுமாறு அடித்திருந்தான் பிரசாத்.

 

“ஏய்” என அவளின் காப்பான்ங்கள் கர்ஜிக்க, “சின்னு, குட்டா. நான் சொல்லும் வரை ஒரு பேச்சும் வரக்கூடாது, அண்ட் இந்த அடி எங்க கணக்கில வரும்” என்றவள், தொடர்ந்து,

 

“அன்னைக்கு நான் வரவு வைச்சேன், இன்னைக்கு நீ செலவு வைக்குற. பரீட்சை மீதி சமப்பட்டுடும் போல” தான் ஒரு வியாபாரமானி என நிரூபிப்பதாக உதட்டை சுழிக்க,

 

“என்னடீ, ஓவரா ஆடுற? உன் ஆட்டம் இன்னையோட முடியட்டும். சொல்லு யாரு நீ?” பிரசாத் கத்த,

 

“தேவா, என்னை மறந்துட்டியா?” ஆரம்பத்திலிருந்து பாடும் அதே பல்லவியை அவள் பாட,

 

“எனக்குப் பாதி தெரியும். மீதியை நீ இப்போ சொல்லல” மிரட்டியவனை, அமராவின் கட்டளைக்கு இணங்க வேடிக்கை பார்த்த ஹஸ்வந், இந்தருக்கு கூட பாவமாக இருந்தது.

 

“என்ன தெரியுமாம்?” இளக்காரமாக அவள் புருவத்தை ஏற்ற, 

 

“இதோ இந்த இந்தருக்கும், உனக்கும் குழந்தையிருக்கு. அதுக்கு ஐந்து வயசுவேற” என முடிக்க முன், “வாவ்! நைஸ்ல” உச்சிகொட்டினாள்.

 

“என்னடி கதையா கேட்குற?” மீண்டும் அவளின் கன்னத்தில் அடித்து, ஆத்திரத்தில் கத்த தொடங்கினான்.

 

“உண்மையைச் சொல்லித் தொலைடீ. யாரு நீ? என் அக்கா, இசைபிரியா காலுல இருக்குற அதே மச்சம், அச்சுப் பிசகாம உன் காலுல இருக்கு. என்னைப் போல இடது கையால எழுதுர. அது போதாதுனு என் தங்கை இசைபிரபா மாதிரிய மேனரிசம் உன்கிட்ட இருக்கு,

 

எல்லாத்துக்கும் மேல, என் அப்பா டீ.என்.ஏ உனக்கு நூறுசதவீதம் பொருத்தமா இருக்கு” சீரியவனாக, 

 

சில கடுதாசிகளை அவளின் முகத்தில் வீசியடிக்க, அவை ஜன்னல் வழியே வீசிய காற்றில் அறையில் மூலைகளில் பறந்து சென்று வீழ்ந்தது.

 

“சொல்லுடீ சொல்லு” மீண்டும் இரண்டுமுறை அவளுக்கு அரைந்திருந்தான் அவன். வலியால் துவண்டு விழாமல் நெஞ்சை நிமிர்த்தி அவள் நிற்க, அவளை வளர்த்த ஆடவர்களில் கண்கள் செம்மையுற்று கரங்களின் நரம்புகள் புடைத்து எழுந்தன.

 

“அடி பட்டு சாக போறியா, அப்படி என்ன வெறி உனக்கு எங்க குடும்பத்து மேல. உனக்கும் என் குடும்பத்துக்கும் என்னதான் தொடர்பு. ஏதும் கேவளம் கெட்ட பொறப்பா நீ?” அள்ள முடியாத வார்த்தையை விட்டு விட்டான் பிரசாத்.

 

“என்ன கேட்ட, கேவளம் கெட்ட..” வார்தையை அவளால் உச்சரிக்க முடியாமல், “வா தேவா” 

 

அவனை தரதரவென தன் முழுப்பலத்திற்கு இழுத்தவள், ஜன்னலை மூடியிருந்த திரைச்சீலையை இழத்துவிட்டாள். “பாரு, நல்லாப் பாரு. என்ன உறவாம் உறவு” என கத்த,

 

சாளரத்தின் கண்ணாடிக்கு அப்பால், சக்கர நாட்காலியில் ‘லூக்கா’வை மடியில் வைத்திருந்த அமைராவை ஏறிட்ட பிரசாத்தின் உதடுகள் நடுங்க, “இசை அக்கா” என உச்சரித்தது.

 

நான் நானாக,

ஆனால் உன்னுள் நீயாக,

நம்முள் நாம் யாராக?

காதலா, வேதமா இல்லை 

வேள்வியா?

மூன்றிலும் எரியலாம் 

மீண்டும் நாமாக ஜனிக்கலாம் அன்பே!

 

அவன் வீழ்ந்தான்….