யாகம் 22

யாகம் இருபத்தி இரண்டு

 

யுகமுடிவுகாலத்தின் அறிகுறிகள் போல வானம் இருண்டு, மேகங்கள் திரண்டு மழை பொழிவதும், காற்று, நீர், நெருப்பு, நிலம் என பஞ்சபூதங்கள் இறைவனால் சூரையாடப்படுவதும் போன்ற உணர்ச்சி பிரவாகம் தலைதூக்க, பிரசாத் நடுங்கி நின்றிருந்தான்.

 

அமராவின் உடல் மற்றும் நடத்தைகளின் இலட்சணங்களை வைத்து தனக்குள் அலசிக் கொண்டவனுக்கு கிடைத்த பதில்,

 

சிவகாமி, நடராஜன் தம்பதிகளின் குழந்தைச் செல்வங்களின் குணநோர், அமராவுடன் ஒத்துப் போவதே! 

‘சோ, இங்கு நடிகர் பிரசாத் எனும் என்மீது அவளுக்கு கோபமோ வெறியோ தனிப்பட்ட ரீதியில் இல்லை. அப்போ கு..குடும்பம்’ என,

 

தொண்டைக்குள் சிக்கிய முள்ளொன்று, சற்று கிழே இறங்கி தன் வலிமையைக் குறைப்பதாக எண்ணியவன், கிடைத்த சந்தர்பத்தில் அமராவை கவனிப்பது போல பாவனை செய்து, அவளின் தலைமயிர்கள் இரண்டை இழுத்தெடுத்து, 

 

பின் தந்தைக்குத் தெரியாமல் அவரின் முடிகளையும் சேகரித்து, டீ.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தான். தன் தந்தையிடம் மறைக்க வேண்டும் என்ற சிரத்தை ஏதும் இல்லை தான். 

 

ஆனால் தான் சந்தேகமாக நினைத்துக் கொண்டது உண்மையில்லை எனும் பட்சத்தில் இது தேவையில்லாத செயற்பாடாகிவிடுமல்லவா. அதனால் தகவலை யாரிடமும் குறிப்பிடாமல், இசை வேலைபார்க்கும் வைத்தியசாலையைக் கூட நம்பகத்தன்மையில்லை என தவிர்த்து, வேறு ஒரு வைத்தியசாலையில் பரிசோதனையே மேற்கொண்டான்.

 

அதே நேரம், முதல் முறையல்லாமல், சிறந்த ஒரு துப்பரிவாளரிடமும் அமரா பற்றிய அறிக்கையைக் கேட்டிருந்தான். நேற்று மாலை டீ.என்.ஏ ஒத்துப்போவதாக வைத்திய அறிக்கை வந்து சேர, கோபத்தை அடக்கமாட்டாமல் வீட்டை அடைந்தவனின் காதில்,

 

ஹஸ்வந், “எந்த ஹஸ்பிடல் போகலாம், கருக்கலைப்புக்கு” என அவனின் அரைகுறை சம்பாஷனையைக் கேட்டு இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிற, 

துப்பரிவாளனுக்கு அழைத்தான். அவரோ நாளை காலை முழு அறிக்கை கையில் கிடைக்கும் என கூறியிருந்தார்.

 

விடிந்தும், விடியாமலும் அறிக்கையை வாங்க பிரசாத் சென்றிருக்க, ரகசிய இடத்தில், அத் துப்பரிவாளர், “அமராவோட டெல்லி வீட்டை நெருங்கக் கூட எங்களால் முடியவில்லை. அத்தனை பாதுகாப்புங்க, அவங்க வசதிக்கு காற்றுக் கூட நெருங்குறது கஷ்டம். அதே நேரம் ஹஸ்வந் வீட்டை கூட நெருங்க முடியல,

 

ஏன்னா, அவரோட அப்பா டெல்லி கோர்ட்ல ஜட்ஜ். அதனால முடிந்த அளவு நாங்க பண்ணின முயற்சில கிடைச்சது. அதாவது அவங்க ஃபோன்காலை வைத்துக் கண்டுபிடிச்சது, என்னனா…இந்தருக்கும் அமராக்கும் ஒரு மகள் இருக்கு. வாய்சை வைத்துப் பார்த்தால் ஐந்து வயசு இருக்கும்” என மீண்டும் குட்டையில் கல்லை எறிந்தார் அவர்.

 

ஆத்திரம், ஆத்திரம் என பிரசாத்தினுள் பிரலயம் வெடிக்க, வேகமாக காரை விட்டவன், வீட்டிற்கு அழைத்து சிவகாமியிடம் “உன் மருமக்கள் எல்லோரும் எங்கே” எனக் கேட்க, ‘யாரும் வீட்டிலில்லை’ எனும் பதிலே கிடைத்தது.

 

இன்று ஞாயிராக இருந்த காரணத்தினால், கண்டிப்பாக சென்னை வீட்டில் தான் மூவரும் ஏதும் சதிராலோசனையில் குழிதோண்டிக் கொண்டிருப்பார்கள் என நினைத்தவனாக அங்கே வண்டியை விட்டான்.

 

வாயில் காப்பாளனோ, பிரசாத்தையும் அவன் குடும்பத்தினரையும் நன்கு அடையாளம் தெரிந்தவனாக, நுழைவாயிலைத் திறந்து, உள்ளே மாடியில் இருப்பார்கள் என்ற கூடுதல் தகவலையும் வழங்கியிருந்தான்.

 

பாயும் காளையாக, வேக வேக எட்டுக்களை வைத்து அவன் படியேறி அறையை அடையும் போது, துப்பரிவாளனின் கூற்றைப் போலவே, “எப்போ குடும்பமாக வாழலாம்” என அமரா சிரித்ததே காதில் விழுந்தது.

 

அதனாலேயே அசகாய சூரனாக, அமராவை அடித்தது, கத்தியது, பதறியது எல்லாமே!, ஆனால் இப்போது அமைராவினை ஏறிட்டவன் நடுங்கிப் போயிருந்தான்.

 

சாம்பலாக கூட அள்ளியெடுக்க முடியாமல் தீயில் பொசுங்கிய தன் ‘இசைபிரியா அக்கா’ உயிருடனா? சித்தம் கதிகலங்கிய நிலையில் அவன், “இசை அக்கா” என உதடுதுடிக்க,

 

“வாவ்! அக்கா, அதுவும் இசை அக்கா!” என்ற அமரா, அவனின் முன் அமைராவை மறைக்காமல் தெளிவாக காட்டவுதவிய, தொங்கும் திரைச்சீலையை இழுத்துவிட்டாள்.

 

‘ஏன்’ எனும் வினா அப்பட்டாம விழிகளில் எழ அவளின் கண்களை நேர் கோட்டில் ஏறிட்டான் பிரசாத்.

 

“அவ, உன்னோட அக்கா கிடையாது. அவ என்னோட அக்கா. புரியல? 

அமைரா சேகரகுமார். இந்த அமரா சேகரகுமாரோட கருவில இருந்து ஒன்னா வளந்த என்னோட அக்கா. எஸ் வீ ஆர் டுவின். அன்ஐடென்டிஃபையில் டுவின்ஸ்” என்று நிறுத்திய பின்னும் பிரசாத்தின் முகத்தில் தெளிவின்மையே!

 

“புரியாது தேவன்! உங்களுக்கு புரியாது” என்றவள், அவனை இன்னுமொரு சுவர்பக்கம் இழுத்துச் சென்று, 

 

“பார் தேவா, எங்க அம்மா அப்பாவ பாரு. நாங்க யாருனு கேட்டல்ல, பாரு. இது என் அப்பா சேகரகுமார், இது என் அம்மா இசைபிரியா” என்றவளின் குரலில் நடுக்கம் தெளிவாக புலப்பட முடிந்தது.

 

“அ..க்..கா, மா..மா” ஒவ்வொரு எழுத்தாக பிரசாத் கோர்க்க, “இவங்க வாரிசு தான் நாங்க இரண்டு பேரும். என்ன கேட்ட கேவளம்னா?,

 

காதல் புனிதம்னா, உன்னோட அக்கா தெய்வம்னா, நாங்க யாரு அப்போ?” என்று அவள் நாவினை வில்லாக வளைத்து சொல்லினை அம்பாக எய்தபோது, அருகிலிருக்கும் நாற்காலியில் ‘தொப்’ என விழுந்த பிரசாத்தின் கண்கள் கரிக்க ஆரம்பித்தது.

 

“தேவா தேவானு, நொடிக்கு ஒரு முறை உன்னோட பெயரை ஏலம் போடுறேன்ல? இதுல கூட எங்க அம்மா நியாபகம், உனக்கு வரவில்லையா தேவன்” கேட்டுவிட்டாள், நடுங்கும் குரலையும் சமப்படுத்தி திடத்துக்கும் திரும்பி விட்டாள்.

 

கண்ணில் கோடாக வடிந்த நீர், தொண்டைக்குழியைக் கடந்து, மென்பச்சை நிற அவனின் சட்டையை நனைக்க, தன் அக்காவின் புகைப்படத்தை வெறித்திருந்த பிரசாத்தினை, கவலையில் முகம் சுருங்க பார்த்து நின்றனர் சின்னு, குட்டா இருவரும்,

 

‘அக்கானு பெயரைச் சொன்னதுக்கும் அக்கா மகளின் பிறப்பினைச் சாடியதற்கும் இப்படி அழுகிறான். இன்னும் அவன் முழு உண்மையைத் தெரிந்து கொண்டால்?’ என பிரசாத்தை பரிதாபமாக அவர்கள் நோக்கினர்.

 

“ஓஹ், தேவன்னு சொன்னது கூட நடிகர் சாருக்கு புரிஞ்சிக்க முடியல. அப்போ இதைக் கேட்டாலாவது உங்க அக்கா நியாபகத்துக்கு வாராங்களானு பார்ப்போம்” என்றவளாக, தனது தொலைபேசியை எடுத்து  ஒரு பாடலை ஒலிக்கவிட்டாள்.

 

‘தேவன் என்றால், தேவனல்ல, தரைமேல் உந்தன் ஜனனம்!

ஜீவன் என்றால், ஜீவனல்ல என்னைப்போல் இல்லை சரணம்!

நீயோ, வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை!

நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை! 

ஏன் தான் பிறந்தாயோ?

இங்கே வளர்ந்தயோ?

காற்றே நீயே சேற்றின் வாடை கொள்ள வேண்டும்!’

 

என பாடலில் வரிகள், இசைபிரியாவின் தேன்குரலில், அறையின் அமைதியைக் கிழித்தது. இதே பாடல், இதே குரல்தான் அன்று நடராஜனை மார்பைப் பிடித்துக் கொண்டு சரியவைத்தது.

 

இன்று பிரசாத்தோ, அதே பாடலுக்கு “அக்கா!” என கேவளுடன், தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்.

 

“அழாதே தேவா” அவன் அருகில் மண்டியிட்ட அமராவின் குரலில் இப்போது அவன் அக்காவின் உச்சரிப்பை காண,

 

“தாய்ப்பறவை, மிதித்தால் சேய்ப்பறவை, நோவதில்லை, காயம் ஆவதில்லை” என பிரசாத்தின் வாய் முணுமுணுத்துக் கொண்டது.

 

“எழுந்திரு” என கட்டளையாக அமரா, அவனை எழுப்பி இருக்கையில் உட்காரவைக்க, 

“பிளீஸ், சொல்லிடு” கைகூப்பி பிரசாத் கேட்க, “ம்ம்” என்றவள்,

 

அவளை மண்ணில் ஜனித்தவரின் படத்தை ஏறிட, அவளில் பிரசாத் அவனின் அக்காவைக் கண்டான்.

 

சற்று நேரத்துக்கு முன் பிரசாத், கன்னம் கன்னமாக அமராவை அரையும் போது எப்படி நிமிர்ந்து நின்றாளோ, அதே போலவே நெஞ்சை நிமிர்த்தி, சிலையாக அசைவின்றி இருபத்து ஆறு வருடங்களுக்கு முன் அவனின் வீட்டில் நின்றிருந்தாள், பிரசாத்தின் அக்கா இசைபிரியா.

 

பூம்பொழில் கிராமத்தில் இருபத்து ஆறு வருடங்களுக்கு முன்னே,

 

தென்னந்தோட்டத்தின் நடுவில், கம்பீரமாக ராஜதோரணையில் நிமிர்ந்திருந்த, பிரசாத்தின் அதாவது, நடராஜனின் வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்த,

 

தனது அறையின் சாரளத்தின் மூலம், தன் வீட்டின் ஒருகோடி எல்லையாகவிருந்த ஓடையை ரசித்திருந்தாள் இசைபிரியா.

 

அந்தக்காலகட்டத்தில், சிவகாமி மற்றும் நடராஜன் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகளே! முத்தவள்  இசைபிரியா, இளையவன் தேவ் பிரசாத்.

 

தனக்கு பதினாறு வயதில் தன் தம்பியைத் தாய் ஈன்றெடுக்க, தம்பிக்கு தாயாக வளர்ந்தவள் இசைபிரியாவே. வீட்டில் மட்டுமல்ல அந்த ஊரையே அடக்கியாளும் படு கெட்டிக்காரி.

 

தாதிக்கு படித்து விட்டு, அவ்வூரிலிருக்கும் சிறிய வைத்தியசாலையில் பணியிலிருப்பவள், அப் பணிக்குச் செல்லவே வீட்டில் அத்தனை பிடிவாதம் பிடித்துச் சம்மதம் வாங்கியிருந்தாள்.

 

“ஏய் சிவகாமி, கூப்பிடுவே உம்ம பொண்ண” எனும் தந்தையின் கர்ஜனைக் குரல், இரண்டாம் மாடியில் நின்றிருந்த, பிரியாவிற்கு தெள்ளத் தெளிவாக விழ, 

 

“இந்த அப்பாவுக்கு இதே வேளையாப் போச்சு. ஆனா எதிர்பாத்தது தான்” முனங்கியவளாக படியில் இறங்கி வர, 

 

“மாமா, இசை” என இவளைக் காட்டிக் கொடுத்தான் வேலுப்பாண்டி. “இங்க வாலே!” என தந்தையான நடராஜன், கத்திக் கொண்டு அழைத்தார்.

 

“என்னப்பா”, ஊரே பார்த்து நடுங்கும் நடராஜரை, கண்ணோடு கண்நோக்கி, துச்சமென ஏறிட்டாள் பிரியா.

 

“என்னதாயி இது? ஆத்தாக்கிட்ட என்ன சொல்லுதே. வேலுவ கட்டிக்க மாட்டேன்னு சொன்னியா?” அவர் வினவ,

 

“ஆமாப்பா. அது மட்டும் சொல்லலியேபா, எனக்கு வேற ஒருத்தரைப் பிடிச்சிருக்குனு சொன்னேன். அப்பா அவரு ரொம்ப நல்லவருப்பா. என்னை நல்லா வைச்சிப் பார்த்துப்பார்பா, நம்மல மாதிரி வசதியானவங்க கூட…” அவள் முடிக்கும் முன்னமே,

 

முதல் முறையாக தன் பெண்னை ஓங்கி அடித்தார் நடராஜன். “என்னவே சொல்லுத, உம்ம படிக்க வைச்ச எகத்தாளமா? அப்பவே காலை உடைச்சு உலையில போட்டு இருக்கனும்வே” என மீண்டும் அடித்தவர்.

 

“இன்னும் ரெண்டு நாளுல உமக்கும் வேலுப்பாண்டிக்கும் கல்யாணம்லே” என்றவர், மூச்சை இழுத்துவிட்டு,

 

இத்தனை அடியையும் வாங்கி அசையாமல் நிற்கும் மகளின் தலையை வருடியவர். “இதோ பாரு தாயி! நம்ம கவரி மான் சாதி. முடி கொட்டினா உசுர விட்டுடனும். அந்தப் பையன் என்ன சாதியாே என்னவோ. நீ நம்ம சாதி பையனத்தேன் கட்டிக்கனும் புரியுதா தாயி” என வினவ,

 

“சாதி, சாதினு அலையாதிங்கப்பா. நம்ம எல்லாரும் மனிச சாதிதான்பா. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா குமார் கூடத்தான்” உறுதியாக அவள் கூற, தன் இடுப்பு பட்டியைக் கழட்டியவர். சரமாரியாக அவளின் தோலைப்பதம் பார்க்குமாறு அடிக்க,

 

சிவகாமி, முந்தானையால் வாயை மூடி அழுதார். அதே நேரம், வீட்டுக்குள் ஓடிவந்த பிரசாத், “அப்பா! இசையக்காவ விடு” என இசையின் மீது போய் படுத்துக் கொள்ள, 

 

தன் ஆறு வயது மகனுக்கு அடிபடுகிறதே என, பச்சாதாபம் பார்த்து பிரியாவை அடிப்பதை நிறுத்தி விட்டு, 

 

“சாயந்திரம் சீல குடுத்து அனுப்ப சொல்லுதேன். கண்ணாலத்துக்கு பிடிச்ச பட்டா எடுத்துக்கோ. தாலிக் கொடி எங்க ஆத்தாவோட பரம்பர கொடிதேம். எண்ணி இரண்டு நாள்ல கண்ணாலம் நடக்கும். இல்லைனா நீ விரும்புதேனு சொல்லுற பையன் உசுரு அந்தரத்துல மிதக்கும்” உறைத்துவிட்டு, வேலுபாண்டியுடன் வெளியேர,

 

‘பார்த்தியாடீ’ எனும் கொடூற பார்வையுடன், நடராஜன் பின்னால் சென்றான் வேலுபாண்டி. “தாயி” எனக் கேவளுடன் சிவகாமி இசைபிரியாவை அணைக்க, “அக்கா” என அழத்துவங்கினான் பிரசாத்.

 

தடிப்பமான இடுப்புப்பட்டியினால் அடிவாங்கியதால் உடம்பு சிவந்து தடித்திருந்தது, சில இடங்களில் குருதி கசிந்தாலும், துளி கண்ணீர் கண்களில் வடியாமல், பல்லைக் கடித்துக் கொண்டு கல்லாக அமர்ந்திருந்த பிரியா, 

 

“தேவன்! என் தம்பி எதுக்கு அழறானாம். அக்காக்கு எதுவும் இல்லடா” அவள் பேச ஆரம்பிக்கவும், “பாவி மகளே! ஏன்டீ இப்படி பிடிவாதம் பிடிச்சி அடிபட்டு சாகுற” என மகளைக் கடிந்தவாரே, “இரு மஞ்சள் பத்து எடுத்து வரேன்” சமையல் கட்டை நோக்கி அவர் நடக்க, 

 

“அக்கா மடில படுத்துக்கோ” என பிரசாத்தை மடியில் சாய்தவள், “உன்னை நான் அறிவேன்” எனும் பாடலை பாடி தட்டிக் கொடுத்தாள்.

 

பாடி முடித்தவள், “தேவன்! இந்த பெயரு உனக்கான ஜாதியை குறிக்கலடா தம்பி. நீ கடவுள் போலடா. கருப்பு, சிவப்புனு மனிதனைப் படைச்சாலும் எல்லோரையும் சமமா பார்க்கும் கடவுள் போல நீயும் இருக்கனுமாம். நல்லாப் படிச்சு உனக்கு எது புடிக்குமோ அந்த வேலைக்கு போகனுமாம்” என சில உபதேசங்களை வழங்கியவள்,

 

பிரசாத்தின் முகத்தைப் பார்த்து, தன் காதலனை நினைக்கலானாள்.

 

சீதாராமன், குந்தவை தம்பதிகளின் ஒரே வாரிசு சேகரகுமார். திருமணமாகி இரண்டுவருடத்தில் அவன் பிறந்திருக்க, ஒரு மகாலட்சுமியும் வீட்டிற்கு வேண்டுமென அத் தம்பதிகள் தவமிருக்க, இறைவன் அருளவில்லை. 

 

குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தவர்களாக, அவர்கள் எடுத்து வளர்த்தவரே, கௌரி. சேகரகுமாரின் காலத்தில் நிதி நிறுவனத்தை மட்டும் பரம்பரைத் தொழிலாக நடத்திவர, 

 

சேகரகுமார் படித்து முடித்ததும் தொழிலை விருத்தி செய்யும் நோக்குடன், தன் கல்லூரி நண்பனான ரகுவரனுடன் பேச்சுவார்த்தையில் இறங்க, கடைசியில் தொழிலுடன் ரகுவரனைத் தன் தமக்கையின் கணவராகவும் மாற்றி விட்டான் அவன்.

 

டெல்லியில் வசித்துவந்தாலும், தொழில் நிமிர்த்தம் அடிக்கடி வெளியூருக்கு சென்று வந்திருந்தான் சேகரகுமார். அவ்வாரே, இயற்கையின் செழிப்பில் பூத்துக் குலுங்கும் பூம்பொழில் கிராமத்தில்,

 

மரங்களை வெட்டி, குற்றிகளாக மாற்றும் வியாபாரம் ஒன்றுக்கான வளங்களைத் தேடி வந்திருந்தான் அவன். பிரியா வேலை பார்க்கும் வைத்திய சாலையினை சுற்றியுள்ள நிலங்களும் சேகரனின் வியாபார வளங்கள் அடங்கியுள்ள நிலங்களில் அடங்க,

 

அதிக இலாபத்தின் மீது ஆசை கொண்ட அவ் நிலத்தின் உரிமையாளர், வைத்தியசாலைக் காணியிலும் கையை வைத்து, சேகரகுமாருக்கு விற்க தூபமிட்டார்.

 

அரசுக்கு சொந்தமான வைத்தியசாலை நிலத்தில் இவர் கைவைக்க, வைத்திய ஊழியர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். 

 

நிலத்தகராரு என சேகரகுமார் அவ்விடத்துக்கு வர, முன் வரிசையில் தாதியுடையில் நின்றிருந்த இசைபிரியா கண்ணில் வீழ்ந்தாள்.

 

“எடுக்காதே, எடுக்காதே அரச காணியை சுடரண்டி எடுக்காதே” என கோசம் போட்டிருந்தவளின், குரலில் அவளை நன்கு நோக்கினார் சேகரகுமார்.

 

சுருள் சுருளான முடியைக் கொண்டையிட்டு, அதன் மேல் தாதி தொப்பியணிந்து, மஞ்சள் முகமும் கூர் நாசியில் இடதுபக்கம், ஒற்றைக்கல் மூக்குத்தி சகிதம் நின்றவளை,

 

வேலுநாச்சியாராகவோ அல்லது மதுரையை எரித்த கண்ணகியாகவோ தான் அவரால் நினைக்க முடிந்தது. அத்தனை நிமிர்வும் பார்வையில் தெளிவுமிருந்தது, இசைபிரியாவிடம்.

 

இடப்பிரட்சினையை தானே தீர்ப்பதாக முன்வந்து, இலாபத்தை மேலும் அதிகரித்து வழங்கி அந்நில உரிமையாளரின் வாயை அடைத்தான் சேகரகுமார்.

 

அதன் பின், தொழில் தொடங்கப்பட அவ்வூரிலேயே வாடகை வீடொன்றை எடுத்து தங்கியிருந்தவனாக சேகரகுமார், தினமும் இசைபிரியாவை சந்திக்க, கடைசியில் ஒருநாள் காதலும் கொண்டார்.

 

தைபூசத்தின் ஆரம்பநாள் அன்று, வயல்வெளிகளின் பச்சையுடையில் வெள்ளை முத்துக்களால் வேளைப்பாடு செய்தது போல, பனித்துளிகள் குழிலிட்டிருக்க, நீண்ட செம்மண் சாலையில் நடந்து வந்திருந்தாள் இசைபிரியா.

 

செம்மயில் கொண்றைப் பூவின் நிறத்தில் புடவையணிந்து, குளித்து முடித்து துவட்டியும், துவட்டாமலும் விரித்து விடப்பட்ட சுருள் கூந்தலுடன் நடந்து வந்தவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்திருந்தான் சேகரகுமர்.

 

காலில் சதிபாடும் கொலுசு, கையில் சந்தமிடும் வளைவி இசைக்கு இசைபாட நடந்தவளின் முன்னே சென்று நின்றான் அவன்.

 

“ரியா” என அவன் அழைக்க, அவள் அவனைக் கடந்து நடந்தாள். “உங்களத் தானுங்க” என அவன் மீண்டும் போய் அவள் முன் நின்றான். 

 

“யாரு நீங்க” சினத்துடன் அவள் ஏறிட, “நான் சேகரகுமார். குமார்னு கூப்பிடாலம் ரியா” அவன் ‘ரியா’ என அழுத்திச் சொன்னான்.

 

‘இசை, தாயி, இசையக்கா’ என்று பழக்கப்பட்டிருப்பவளுக்கு, ‘ரியா’ என்ற அழைப்போ புதிதாக இருக்க, “நான் ஏன் உங்களை கூப்பிடனும்” வெட்டிப் பேசவும்,

 

“கோவிலுக்கா” அவளின் கையிலிருந்த தட்டத்தை பார்த்து கேட்கவும், “இல்லை, நடந்து போற வழியில ஒருத்தர் குறுக்க வந்தார். அவருக்கு சூணியம் வைக்க போறேன்” கடித்து துப்பினாள் வார்தையை.

 

“ஹாஹா நல்லா பேசறிங்க” சேகரகுமார் கூற, “எனக்கு முகத்துக்கு நேர பாராட்டினா பிடிக்காது” என்றாள்.

 

“சரிதான், உங்களுக்கு புகழ்ந்தாப் பிடிக்காது எனக்கு சுத்தி வளைச்சு பேசினா பிடிக்காது. அதனால…” இழுத்தவனை விளங்காத பார்வை பாவை பார்க்க,

 

“எதுக்கு கூப்பிடனும்னு கேட்டதானே ரியா, எங்க வீட்டுல இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் பார்க்க மாட்டாங்க, எனக்கும் அதில உடன்பாடு கிடையாது. வரப்போற பொண்டாட்டி என் பெயரைச் சொல்லிக் கூப்பிடனும்னு ஆசைவேறு இருக்கா,

 

அதனால, என் ரியா. அதாவது எம் பொஞ்சாதி, நீ என் பெயரை சொல்லிக் கூப்பிடுற” தன் வரிசையான தெத்துப்பற்கள் தெரிய சிரித்தான் காளை.

 

காதலிக்கிறேன் என்றும் சொல்லவில்லை, கைப்பிடிக்கிறேன் என வாக்குகூட கொடுக்கவில்லை, ஆனால் என்னில் நீ சரிபாதியாக என் மனைவியாகவே மாறிவிட்டாய் என அவன் கூறியிருக்க,

 

“ரொம்ப ஆசை படாதிங்க, தொழில் அதிபரே!” சேலையின் முந்தியை சுழற்றிக் கொண்டே, இளநகை நகைத்து சென்றாள் இசைபிரியா.

 

இளநகை முழுநகையாக மாறி அவளும் அவனை கணவனாக பூஜிக்க ஆரம்பித்திருந்தாள். இசைபிரியாவை பொருத்தவரை துணிச்சல் என்பதை அதிகம் எதிர்பார்பாள். தன் கண்ணைப்பார்த்து ‘நீ தான் என் மனைவி” என நெற்றிப் பொட்டில் அடித்துக் கூறியவனின் காதலில் வீழ்ந்துவிட்டாள் காரிகை.

 

இசையும் ஜதியுமாக, தம்பதிகள் என மனதில் மட்டும் அந்தஸ்தை வழங்கி, கண்களினால் மட்டும் காதல் மொழி பேசி இருவரும் உருகிகரைய, அவர்களின் கண்ஜாலத்தை ஒரு கண்கொத்திப் பாம்பின் இரண்டு ஜோடி விழிகள் கண்டுகொண்டன.

 

 மார்கழி மழையே!

மழைவிழும் துளியே!

நின்னை நான் தழுவ,

நெஞ்சம் தவிக்கிதடி!

 

அவன் வீழ்ந்தான்…