யாகம் 23

யாகம் இருபத்து மூன்று

 

சரித்திரங்களும், சாம்ராஜ்யங்களும் அழிவினை சுவாசித்ததற்கு அடித்தளமிட்டது, சதிகளும் சூழ்ட்சிகளும் சில கயவர்களின் வன்மமுமே!

 

காதல் வானில், தத்தி நடைபயின்ற பஞ்சவர்ணங்கள் இரண்டு, சிறகை விரித்திருந்த பொழுதில் பூகம்பமாய் உள்ளே நுழைந்தான் வேலுப்பாண்டி.

 

இசைபிரியா, நடப்புக்களை உள்ளார்ந்து கொள்ள ஆரம்பித்த காலத்திலிருந்து, வேலுப்பாண்டியை அவளுக்குச் சுத்தமாக பிடிக்காது.

 

சிவகாமியின் தாய், தந்தை சற்று வசதிகுறைந்தவர்களாக இருப்பினும், சாதியில் உயர்ந்தவர்களாக, நடராஜனியின் சாதியில் ஒத்துப் போகக்கூடிய குடும்பமாகவிருக்கவும்,

 

நடராஜன், சிவகாமியை மணந்து கொண்டார். மகளின் கைககளில் தன் மகன் வேலுவையும் ஒப்படைத்துவிட்டு முதியவர்கள் மரணிக்க, அக்கா வீட்டிலே தங்கிவிட்டான் வேலு.

 

புதிதாக கண்ட அதிக வசதி வாய்பில், பேராசை கொண்டவனும், நாளாக நாளாக ஊரில் சின்னப்பண்னையார் என பட்டையைத் தீட்டிக் கொண்டு செய்வது அனைத்தும் அக்கிரமங்களே!

 

மது, மாது என வீட்டிற்கு தெரியாமல் பதுங்கி பதுங்கி நடித்தாலும், இசைபிரியா இதனைக் கண்டு கொண்டுவிட்டாள். அதையும் தாண்டிய வெறுப்பொன்றும் வேலுவின் மீது பிரியாவுக்கு கணன்று கொண்டிருந்தது. 

 

தாதிக்குப் படித்துக் கொண்டிருந்த சமயம், கல்லூரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரவிருந்த பிரியாவை, அழைத்து வர பஸ் தரிப்பிடத்துக்குச் சென்றிருந்தான் வேலுப்பாண்டி.

 

பஸ்ஸிருந்து இறங்கியவளும் ஏதும் பேசாமல் வண்டியின், முன் இருக்கையில் அமர்ந்து கொள்ள, ஓட்டுனர் இருக்கையிலிருந்து வண்டியைக் கிளப்பிய வேலு, 

 

சற்று நேர இடைவேளையின் பின், பிரியாவின் கால் முட்டிகளில் கரங்களை அழுத்தி வைக்க, முதல் தடவை சுதாரித்த பிரியா, இரண்டாவது தடவை அவனின் கண்ணத்தில்  அடித்து வண்டியிலிருந்து, வழுக்கட்டாயமாக இறங்கிக் கொண்டாள்.

 

மூச்சுவாங்க, வேகமாக அவள் நடக்க பின்னால் ஓடிவந்த வேலு மீண்டும் அவளின் தோளை தொட, இன்னும் அழுத்தமாக அவளின் கை அவனை அடித்தது.

 

“ஏய், யாரு மேலவே கைவைக்குதே! கட்டிக்கப்போறவேனு சின்னதா தொட்டா. ரொம்பத்தான் சிலிப்பிக்கிற” அடி வாங்கிய கோபத்தில் கொந்தளிக்க,

 

“யாரு யாரைக் கல்யாணம் பண்ணிக்க போறா? உன் கூட வாழுறதுக்கு நான் வாழாவெட்டியாக் கூட இருப்பேன். ஆனா உன்னைக் கட்டிக்க மாட்டேன். காசு பணம் இருக்குனு பல்லை இளிச்சிட்டு எல்லா பொம்பள பின்னால சுத்துற நீ எனக்கு தேவையே இல்ல. இன்னொரு வாட்டி உடம்புல உன் சுண்டு விரல் பட்டிச்சு. துண்டுதுண்டா கூறு போட்டு காளிதேவி கழுத்துல மாலையா போட்டுடுவேன்” என,

 

வீட்டை நோக்கி நடந்தவள், இவனின் சில்மிசத்தை தாய், தந்தை யாரிடமும் வெளிச்சம் போட்டு காட்டாதது தான் பின்நாற்களில் அவளை தீயில் பொசுங்க வைத்தது.

 

‘என்னைக்கா இருந்தாலும், எப்பாடு பட்டாலும் உன்னை கல்யாணம் பண்ணித் தீருவேன்லே’ அன்று வேலுப்பாண்டி தனக்குள் சபதமிட, இன்று பிரியாவையும் குமாரையும் ஒன்றாக பார்த்துவிட்டான் அவ் கள்வஞ்சன்.

 

“என்னையா, பொம்பளைக்கு அலையுறேன்னு சொல்லுதே. இன்னைக்கு இருக்கு உனக்கு” என சர்பமாக விசத்தைக் கக்கியவன், உடனே சென்று நின்றது. நடராஜனின் பருத்தி ஆலையில் தான்.

 

இங்கோ, சேகரகுமார் இசைபிரியாவிடம், “ரியாமா! ஊரில சின்ன சிக்கல் ஆகிட்டுமா. என் நண்பன் கமலக்கண்ணன் ஒரு வழக்குக்கு சார்பா வாதாடப் போயி, எதிர்கட்சிக் காரங்க அவனை ஆள்வைத்து அடிச்சிருக்காங்க. நான் போய் நிலைமையை பார்க்க வேண்டிய கட்டாயம்மா.

 

இன்னும் ஒரு வாரத்தில எல்லாத்தையும் சரி பண்ணிட்டு, அப்பா, அம்மா, தங்கச்சினு எல்லாரையும் அழைச்சிட்டு வந்து உன்னைப் பொண்ணு கேட்குறேன்” என சிறிய கலகத்துடன் அவர் பேச, “பயப்படாம போய்ட்டு வாங்க” என வழியனுப்பினால் பிரியா.

 

பிரியாவிற்கு, தன் காதலனின் குடும்ப விபரங்கள் அனைத்தும் அத்துப்படி. சாதியைத் தவிர மற்றைய அனைத்திலும் அவளைக் காட்டிலும் குமாரே உயர்ந்தவன். அவனின் இரு உயிர் நண்பர்களில் ஒருவர் ரகுவரன், குமாரின் தங்கை கௌரியை மணமுடித்திருக்க,

 

மற்றைய நண்பன் கமலக்கண்ணன். கமலக்கண்ணனின் தந்தையின் பூர்வீகம் மதுரை எனினும் டெல்லியில் தனது முழு வாழ்நாளையும் வழக்கறிஞராக கடமையாற்றி அங்கேயே வாழ்ந்து விட்டார். இதனால் கமலக்கண்ணனும் டெல்லி வாசியாகி, பாடசாலைக்கல்வியை சேகரகுமாருடன் தொடர நல்ல நட்பொன்னு உருவானது.

 

அவரோ வைத்தியக்கல்வி கற்கவந்த வசுந்தரா தேவியைக் காதலித்து மணம் முடித்துக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் நான்கு வயதில் மகளும், இரண்டு வயதில் மகனுமிருக்க, மகளை மனைவியின் வீட்டினர் துணைக்கு அழைத்துச் சென்று வளர்க்க, மகன்  சேகரகுமாரின் வீட்டாருடன் வளர்ந்தான்.

 

ரகுவரன் தம்பதிக்கு நான்கு வயதில் ஒற்றை மகனும் இருந்தான். இவையத்தனையும் சேகரகுமார் சொல்லி பிரியா அறிந்ததே.

 

ஒரு வாரத்தில் பெண் கேட்டு வருவான் என்ற பூரிப்பில், அவள் வீடு நோக்கி நடக்க, வேலுவோ நெருப்பை அவள் தந்தையிடம் பற்றவைத்திருந்தான்.

 

நடராஜருக்கு; பணம், பந்தம், பாசம் என்பனவெல்லாம் இரண்டாம் பட்சமே. அவரைப் பொருத்தவரை ஜாதி, ஜாதி அதுமட்டும் தான் அவரின் சுவாசத்தின் தாரகமந்திரம். ஆக ஜாதி வெறியில் ஊறிய மனிதர்.

 

சேகரகுமார் எனும் வேறு ஜாதிப் பையனை பிரியா காதலிப்பதாக, மெய்யுடன் சேர்த்து பல பொய்யையும் நடராஜனின் காதில் ஊதினான் வேலு. விளைவு இசைப்பிரியாவை அடித்து துவம்சம் செய்து, இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் எனும் நிலைதான்.

 

தான் தட்டிக் கொடுக்க, தன் மடியில் துஞ்சும் மகனாக வளர்த்த தம்பி தேவ் பிரசாத்தின் நுதலில் இதழ் பதித்த பிரியா ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

 

வழக்கமாக வீட்டில் எப்படி நடந்து கொள்வாளோ அப்படியே தன் பணிகளைத் தொடர்ந்தவள். அன்று இரவே ஊர் மொத்தமும் உறங்கும் நேரம், தன் வீட்டினரின் உறக்கதை உறுதிபடத்தியவள் ஒரு கடித்ததை எழுதினாள்.

 

அப்பா, அம்மா! மனித்துவிடுங்கள்னு சொல்லும் அளவுக்கு நான் செய்யப் போகும் காரியம் அவ்வளவு சரியானது அல்லதான். ஆனால் திருமணம் என்பது, சந்தையில் நாம் வளர்த்த மாட்டைக் கொண்டுபோய் விலைபேசுவது போன்றதல்ல! ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் மட்டும் சுமந்தால் போததல்லவா? அதைக்கட்டியவரை மனதில் சுமக்க வேண்டும். அதனால் என்னால் வேலுவையோ அல்லது குமார் தவிர்த்த வேறு யாரையுமே மணமுடிக்க முடியாது.

 

அப்பா ஜாதி என்பது சாதாரண கட்டமைப்பு, மரணத்தின் பின் எல்லோரும் வெறும் கூடுகள் தான். ஜாதி எனும் சிறையிலிருந்து சுதந்திர மூச்சை சுவாசிக்க வானம் நோக்கி பயணிக்கிறேன். நிச்சயம் மீண்டும் திருப்பி வருவேன். தம்பி தேவனை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அக்கா என பிடிவாதம் பிடித்தால், கண்டிப்பாக அவனுக்காகவேனும் நான் திரும்பி வருவேன் என்பதை எடுத்துக் கூறுங்கள்.

இப்படிக்கு உங்கள் இசை”

 

என கடிதத்தை முடித்தவள். அதை நான்காக மடித்து, தன் அறையில் வைத்து விட்டு, அடுத்த கணமே சேகரகுமாரைத் தேடி டெல்லிக்கு புகையிரதம் ஏறினாள்.

 

நாட்களைக் கடத்தி, அவளின்  குமாரை சந்தித்து, விடயத்தை கூறிவளை குமாருடன் அவனின் வீட்டினர்கள் அனைவரும் அவனின் சரிபாதியாக ஏற்றுக் கொண்டனர்.

 

தன்னை நம்பி ஒரு பெண், தன் பிறப்பு முதல் அத்தனையும் துறந்து தன்னிடம் அடைக்களமடைந்தாள் எந்த ஆணுக்குத்தான் கர்வமாகவிருக்காது. அவரின் காதல் கர்வத்தில், இரண்டுமாதங்களிலே பிரியாவின் வயிற்றில் நித்திலங்கள் உதித்தது.

 

வேடந்தாங்களில் வந்து குடிபெயர்ந்த வலசைப் பறவையாகி போனால் இசைபிரியா. அத்தை என காலைச்சுற்றும் இந்தரையும், சித்தாயி என வளைவரும் குறும்பன் ஹஸ்வந்தையும் தன்னூடே ஒட்டவைத்துக் கொண்டவளின் ஆழ்மனது எப்போதும் வீட்டையும், பெற்றவர்களையும் எல்லோவற்றிக்கு மேலதிகமாக,

 

தன் தம்பி தேவ் பிரசாத்தையும் தேடியது. அவளின் பதினாறு வயதில் கண்களை இறுக்க மூடி, விரலைச் சப்பிக் கொண்டு துயிலும் மழலையாக அவனை ஏந்தி, தாயாக வளர்ந்தவள்,

 

இன்று தன் சேய்களைச் சுமக்கும் போது, அவளின் முதல் மகனான தேவனைத் தேட, காதல் மனைவியின் முகத்தை வைத்தே அவளின் மன சஞ்சலத்தை அறிந்த குமார், எட்டுமாதங்கள் முடிவிலிருக்கும் மகவு சுமந்த மனைவியை விமானத்தில் அழைத்துக் கொண்டு அவளின் ஊருக்குப் பறந்தவர் அறியவில்லை, இதுவே கடைசியாக அவர் உயிருடன் உயரப்பறப்பது என்று.

 

பூம்பொழில் கிராமத்தின், இயற்கையிலும் வனப்பிலும் எந்த மாற்றமுமில்லை, ஏன் இசைபிரியாவின் வீட்டிலும் கூடத்தான். இந்த மாற்றமின்மை வீட்டின் தோற்றத்தில் மாத்திரமே. அங்கு குடியிருக்கும் மனிதர்களின் மனமோ, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாற்றத்தைக் கொடுத்திருந்தது.

 

பிரசாத்திற்கு, தன் அக்கா திரும்பி வருவாள் என்ற எதிர்பார்பினால் ஆன மாற்றம். அதுவே சிவகாமிக்கு, மகளைக் காண மாட்டோமா என்ற ஏக்கத்தின் மாற்றம். ஆனால் முறுக்கு மீசை வைத்த இரு ஆடவருக்குள்ளும், பிரபாவைத் துடிக்க துடிக்க கொலை செய்ய வேண்டும் என்ற மாற்றம்.

 

சேகரகுமார், இசைபிரியாவை டெல்லியிலிருந்து அழைத்து வந்தாலும் நேரடியாக, அவளை அவளின் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை. பக்கத்து ஊரில் ஒரு தனிவீட்டை வாடகைக்கு எடுத்தவர், அங்கே இருவரும் தங்கிக் கொண்டனர்.

 

“இன்னும் சில நாள் இங்க தங்கி, மெதுவா சமாதானப்படுத்தலாம் ரியாமா” என்று குமரன் கூறியிருக்க, இரண்டு நாளும் கடந்தது. 

 

காலையில் எழுந்த பிரியா, குளித்துவிட்டு, சாமிக்கு முன் நின்று வேண்டிக் கொண்டிருக்கும் போது, அவளின் பின்னால் அரவம் கேட்கவும் திரும்பிப் பார்த்தால்.

 

“இசைக்கா” என ஓடி வந்து கட்டிக் கொண்டான் பிரசாத். “தேவா, என் தேவன் தம்பி” என அவள் உச்சி முகர, “தாயி” என உள்ளே நுழைந்தார் நடராஜன். அவரின் பின்னே மௌனமாக நடந்து கொண்டிருந்தான் வேலு.

 

“ஏன் தாயி, அப்பா மேல கோபம் இருந்தாலும். ஊருக்கு வந்தா ஒரு எட்டு வீட்டுக்கு வரமாட்டியா” கடிவது போல பேசியவர். எங்கே என் மருமகன் என்று குமாரைப் பற்றி விசாரித்து, அறையில் தூங்கிய அவனையும் எழுப்பி, நல்ல முறையில் பேசினார். இறுதியில், 

 

“நடந்தது நடந்து முடிஞ்சது தாயி. உன் கல்யாணத்தை தான் பார்க்க முடியல. வளைகாப்பாவது நடத்துவோம்னு ஆத்தா சொல்லிச்சு. மூனு நாளுல நல்ல நாள் வருதுனு ஜோசியர் சொல்லுதாவே. அதானால நடத்துவோம்லே” என நஞ்சைக் கக்கும் நல்ல பாம்பின் மேனி வர்ணங்கள் போல மின்னி மின்னி பேசி மனதுள் மேலும் வன்மத்தை தூவினார்.

 

அல்லும் பகலும் மாறிமாறி ஜாலமிட, வளைபூட்டும் நாளும் வந்து சேர்ந்தது. அசைந்தாடும் தேராக ஜொலித்த தன் மனைவியை, அலங்கார நாற்காலியில் அமர்த்தி மஞ்சள், குங்கும சந்தனக் கலவைகள் பூசி ஆர்ச்சனை செய்தான் சேகரகுமார். அவனைத் தொடர்ந்து அனைவரும் பிரியாவை ஆசிர்வதிக்க, ஊரே கூடி விழாக்கோலம் பூண்டு சீறும் சிறப்புமாக, சுபகாரியத்தை முடித்தனர்.

 

விடிந்ததிலிருந்து அலைச்சலானதால், தன் வீட்டில் தனது ஆஸ்தான இடமான சாய்வுநாட்காலியில் அமர்ந்து மெல்ல ஆடிய பிரியாவிற்கு அதிக மூச்சு வாங்கியது.

 

“இசை. என்ன தாயி இது, படிச்ச பொண்ணடாட்டம் இருக்க தெரியாதாவே? புள்ளத்தாச்சி பொண்ணு வயித்தைக் குறுக்கிட்டு உக்காருவே? சத்த இங்க சுவத்துல சாய்ந்து உக்காருவே” சிவகாமி மகளை அதட்டி நிலத்தில் காலை நீட்டி உட்கார வைக்க,

 

“இசைக்கா” கிளுங்கிக் கொண்டு தனது புது மாமாவாகிய குமாருடன் ஓடி விளையாடியவனாக பிரசாத், தனது அக்காவை நோக்கி வந்தவன், நீட்டப்பட்ட பிரியாவின் உள்ளங்காலின் நடுவிள் கருத்திருந்த மச்சத்தை நோக்கினான்.

 

“அக்கா காலுல மச்சம். அக்கா வயித்துல என்ன? பாப்பாவா?” என்று வயிற்றில் கையை வைக்க, இவனின் ஸ்பரிசத்தை உணர்ந்து மகவொன்று எட்டி அவன் கைநடுவே உதைத்தது.

 

“அக்கா, பாப்பா குதிக்குது” என்றவன், ஒரு நொடி தன் ஆட்காட்டி விரலை நாடியில் தட்டி விட்டு, “பாப்பாக்கு நான் மாமாவா அக்கா?” என ஆசை பொங்க கேட்டான்.

 

“ஆமாடா. நீ தான் தாய் மாமா. ஆம்பளை புள்ளை பொறந்தா மருமகன்னு கூப்பிடு” பிரியா சொல்ல, “அப்போ பொண்ணுனா?” மீண்டும் கேள்வி தொடுத்தான் சின்னவன்.

 

“என் குட்டி மச்சினனுக்கு கட்டி வைக்க வேண்டியது தான்” என குமார் கலகலக்க, ஆறு வயதில் என்ன புரிந்ததாே, வெட்கப்பட்டு வெளியில் ஓடிவிட்டான்.

 

ஒருவாராக எல்லாம் நல்ல படி முடிய, அடுத்த இரண்டாவது நாள், “மாமா நாங்க டெல்லிக்கு கிளம்புறோம். பெண் வீட்டில தான் பிரசவம் பார்க்கனும்னு சம்பிரதாயம் இருக்கலாம். ஆனா ரியாவை காந்திமதினு ஒரு டாக்டர் தான் பாத்துக்கிட்டாங்க. அவங்க என் ஃபேமிலி ஃபிரண்ட் வேறு. அதனால…” குமார் இழுக்க,

 

“பரவாயில்ல தம்பி” என்ற நடராஜன் அனுமதி வழங்கினார். தான் முதலில் தங்கியிருந்த வீட்டில் சில துணிமணிகள் இருப்பதால் அங்கு சென்றுவிட்டு, பின் ஊருக்குச் செல்வதாக பிரியா, குமார் புறப்பட்டனர்.

 

பிரியாவை வீட்டில் விட்ட குமார், “ஊருல சிறுசுங்க, மாமா என்ன வாங்கி வந்தேனு? கேள்வியாக் கேட்கும். அதுவுமில்லாம, உங்க ஊருப்பக்கமிருக்குற எந்த இனிப்பையும் பசங்க பார்த்து கூட இருக்க மாட்டாங்க. நீ பத்திரமா இருந்துக்கோ ரியாமா. நான் கடைப்பக்கமா போய் வரேன்” என்றவன் வாசல் வரை நடந்தான்.

 

பின் என்ன நினைத்தானோ, மீண்டும் உள்ளே வந்து, பிரியாவை இருக்க அணைத்து, அவரின் இதழில் மெல்லிய முத்தமொன்றை இட்டவனாக, தன் மகவுகள் சுமந்த வயிற்றிலும் இரண்டு முத்தங்களையிட்டு விடுவிடு வென வெளியில் நடக்க,

 

முகம் கொள்ளாப் புன்னகையுடன், வீட்டின் தூணில் சாந்து நின்ற பிரியா, தன் கணவனின் உருவம் நிழலாக மறையும் வரை இமைகூட வெட்டாமல் பார்த்து நிற்க, அவளின் அடி வயிற்றில் ஊசியால் குத்தியது பாேன்ற சிறு வலியை உணர்ந்தாள்.

 

 காலை ஒன்பது மணி போல் வீட்டை விட்டுச் சென்ற கணவன், மதியவேளையாகியும் வீடு திரும்பாமலிருக்க, வாசலையே வெறித்துக் கொண்டிருந்தவளின் உடலினுள் சொல்லென்னா மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன.

 

இதயம், கண்ணிமைகள் படபடவென அடிப்பதும், வயிற்றிலுள்ள சிசு வேகவேகமாக அசைவதுமென ஒரு பிரலயத்தை உண்டு பண்ண, அமர்ந்திருந்தவளின் தோளிலினைத் தொட்டது ஓர் ஆணின் கரம்.

 

பதரி கண்கள் நிலைக்குத்திட  அவள் நிமிர அங்கு வேலுப்பாண்டியுடன் நின்றிருந்தது தன் தந்தையே. “அப்பா நீங்களா? நான் பயந்தே போயிட்டன்” என்றவள் வியர்வை முத்துக்களை சேலையின் நுனியால் துடைத்துக் கொண்டாள்.

 

“நான் தான் தாயி. உன் ஆத்தா, பால் பாயசம் செய்தா. பொண்ணு கிளம்பியிருக்க மாட்டா இதை ஒரு எட்டு கொடுத்துட்டு வாங்கவேனு சொல்லுதா” பேசிக் கொண்டே, பிரியாவை நாற்காலியில் இருப்பாட்டியவர், தானும் ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு இருந்து கொண்டார்.

 

“இந்தா தாயி! உனக்கு ரொம்ப புடிச்ச பால் பாயசம், நம்ம வீட்டு பசுப்பால்ல செய்தாவே உன் ஆத்தா” என்றவராக, ஒவ்வொரு கரண்டியாக மகளுக்கு ஊட்டிவிட, தந்தை பாசத்தில் அப்பழுக்கில்லை என நினைத்த பிரியா அதனை வாயில் நிரப்பிக் கொண்டாள்.

 

பாத்திரத்தின் பாதியளவை உண்டு கொண்டிருக்கும் போதே, அவளின் வாயிற்றில் அழுத்தமாக ஓங்கி உதைத்தாள் அவளின் ஒரு மகவு. “அப்பா” முனங்கிக் கொண்டே “போதும்பா” என  உண்பதை நிறுத்தி எழப் போனவளின் கன்னத்தில் இடியென இறங்கியது, நடராஜனின் கைகள்.

 

“அப்பா” திறந்திருந்த வாயைக் கூட மூடாமல், நயனங்களை வட்டமாக விரித்து, மூச்சுக் கூட சீறாக விடமுடியாமல், திக்கிதினறி அவள் உச்சரிக்க, 

 

“என்னவே! யாரைப் பார்த்து அப்பானு சொல்லுதே? குட்டிக் கழுதை. எப்போ அந்த நாயைத் தேடி வீட்டுப் படியைத் தாண்டினியோ, அப்பவே எம் மக செத்துப் போயிட்டா. எம்ம மானம் மருவாதை எல்லாம் குழி தோண்டிப் புதைச்சிட்டு, நீ சந்தோசமா வாழுதியவே.

 

சொத்து தொலைலே, ஊருக்க இனியாச்சும் நிமிந்து மாருதட்டி சொல்லுவோம்ல, இந்த நடரஜனுக்கு பொஞ்சாதி, பிள்ளை குட்டி எல்லாத்தையும் விட எம்ம சாதி தானுவே முக்கியம். செத்த்துப்போலே” சிங்கமென கர்சித்தாலும் அவரின் கண்ணிலிருந்தது பலிவாங்கும் வெறியே.

 

“ஏய் வேலுப்பாண்டி சொல்லுவே” என்றவர், தன் தோள் துண்டை உதரிவிட்டு, வாசலில் நின்ற தன் காரில் போய் ஏறிக் கொண்டார்.

 

இங்கு, வேலு எனும் குள்ள நரி தன் மீது பூசப்பட்டிருந்த சாயங்களைக் கலைத்து, தன் நரித் தோரனையின் சுயத்தைக் காட்டியவனாக, பிரயாவின் கன்னத்தில் சரமாரியாக அடித்தான்.

 

“கணக்கு வைச்சிருந்தேன்லே. என்ன சொன்னவே அன்னைக்கு. நான் பொம்பளைக்கு அலையுறேன். உன்னைக் கட்டிக்க தகுதியில்லேனு சென்னவேலே. இப்போ உன்னை கட்டிக்கிட்ட தகுதியுள்ள மகராசனோட நிலமை தெரியுமாலே” கண்களின் குரோதம் தாண்டவமாட, உண்மையைக் கொட்டினான்.

 

இசைபிரியா ஊரைவிட்டுச் சென்றதற்குப் பிறகு, வீட்டில் சண்டைகள் வெடித்து. நல்லவன் வேசமிட்டிருந்த வேலுவாே, “அவ எங்கேயிருந்தாலும் நல்லா இருக்கட்டும், என்னைக் கல்யாணம் பண்ணிக்கலனா என்ன எப்போவும் எனக்கு அவ அக்கா மகதேன்” நாடகமாட,

 

ஊரிலிருக்கும் பெரியவர்கள் மற்றும் இவர்களின் ஜாதியைச் சார்ந்தவர்களும் மறைமுகமாக தூற்ற துடங்கினர். இதனால் பெரும் மன அழுத்ததுக்கு உள்ளாகியிருந்தார் நடராஜன். நாளடைவில், தான் நல்லவன், ஏன் இசைபிரியா இப்படி செய்தால் என தனக்குள் மருகுவதாக வேறு நடிக்க ஆரம்பித்தான் வேலுப்பாண்டி.

 

இப்படி நாட்கள் தன் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு நகர, சேகரகுமாரும் இசையும் ஊருக்கு வந்து சேர்ந்ததை அறிந்து தன் அக்காவின் கணவரான நடராஜனிடம் போய் நின்ற வேலு,

 

பக்கத்து ஊரில் ஜாதி மாறி திருமணம் செய்த மனமக்களை வெட்டிக் கொண்றதாவும், நமக்கு மட்டும் ஏன் இந்த அவமானமும் என முதலைக் கண்ணீர் வடித்து அவரைத் தூண்டிவிட்டான்.

 

ஏற்கனவே ஜாதி வெறி, சுற்றத்தின் தாழ்ந்த பார்வையும் பேச்சும் என அகத்தே கொதித்தவராக நடராஜன், “உன் விருப்படி ஏதாவது செய்” என்று விட்டுவிட,

 

தன் வக்கிர புத்தியை அங்கு கையாண்டான் வேலு. அதாவது சேர்ந்திடுபது போல் இசைபிரியாவையும் சேகரகுமாரையும் சேர்த்து பின் முதுகில் குத்துவது. அதன்படி வளகாப்பு என தங்களுடன் ஒட்ட வைத்துக் கொண்டு,

 

பின் இரண்டு மூன்று நாட்களில் கொலை செய்வது என்று படிபடிப்படியாக திட்டமிட்டனர். ஆனால் இவர்கள் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று வந்து நிற்க, இதையே சந்தர்பமாக பயன்படுத்தினர்.

 

“எப்படி எம்ம நடிப்பு” கைகளைத் தட்டி சிரித்தவன், பிரியாவை பிடித்து நிலத்தில் தள்ள, அவளோ முதுகு அடிபட தரையில் வீழ்ந்தவள், “குமார்” என வயிற்றை அழுத்தப்பிடிக்க,

 

“உம் புருசனையா கூப்பிடுதே, அவன் வர மாட்டான்வே. அவன் உருச்சிதைந்து இரண்டு மணித்தியாலம் ஆகுதுவே” மின்னாமல் முழங்காமல் இடியை இறக்கலாம் ஆனால் வேலுவே பிரியாவின் தலையில் அண்டசராசரத்தையும் தூக்கியல்லவா பாரமேற்றினான்.

 

இனிப்பு வாங்கிவருவதற்காக, கடைப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்த சேகரகுமாரின் முன் காரினைக் கொண்டு வந்து நிருத்திய வேலு, “இசை, இசைக்கு உடம்பு முடியல, இப்பா தான் வீட்டுப்பக்கம் போன நான் பார்த்தேன். அவ உங்களை கூட்டியரச் சொல்லுதா” என்று குமாரை வண்டியில் ஏற்றிவன்,

 

நடராஜனின் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு வண்டியை விட்டான். “எங்க போறிங்க” குமார் கத்திக் கேட்டும் பதிலளிக்காமல், தொழிற்சாலைக்கு அவனை அழைத்துச் செல்ல, அங்கு பத்து அடியாட்கள் குமாரை வந்து பிடித்துக் கொண்டனர்.

 

“விடு, விடு” வென குமார் திமிரி சண்டையிடப் போனாலும் பாவம் ஒரு தனிநபரினால் பத்து தடியர்களைச் ஈடு செய்ய முடியாமல் போறாடும் போதே அவரின் வயிற்றில் கூர்மையான கத்தியொன்று தன் வித்தையைக் காட்டி சதையைக் கிளித்தது.

 

“ஆ” என கத்திக்கொண்டே, குத்திய கையைப் பார்க்க அது வேலுப்பாண்டியே. தொடர்கதையாக பத்துமுறை குத்தியெடுக்க, “ரியா” என முணுமுணுத்து கடைசி குத்தை வாங்கிய குமார் அந்த இடத்திலேயே உயிரை விட்டான்.

 

அதன் பின் நிகழ்ந்ததே மிகக்கொடூரம். “சிதைச்சிடுங்கடா” என வேலு அடியாட்களுக்கு கட்டளையிட, இருப்பு கம்பிகளைக் கொண்டு குமாரின் பிரேதத்தை தாக்கினர். மேலும் அடையாளம் தெரியாத வண்ணம் மாற்ற அவரின் உடல் பாகங்களைத் தனியாக, துண்டாக வெட்டிப் பிரித்து, 

 

தோலைப் பதணிட பயன்படும், அமிலமடங்கிய கொல்கலணில் அப்பாகங்களை அடைத்து மூடிவிட்டனர். இத்தனையும் முகம் கூட சுழிக்காமல் மாமிசமுண்ணும் கழுகு போல் அவதானித்து நின்றான் வேலு.

 

“குமார்” வெடித்து கத்திக்கதர ஆரம்பித்தாள் பிரியா. “இதுக்கே அழுதா எப்படிலே” வேலு இன்னும் இன்னும் தன் அரக்கத்தனத்தை வெளிப்படுத்த, மீதியையும் சொல்லினான்.

 

குமாரை கொலை செய்தது, நடராஜனின் அனுமதியுடனே. அடுத்து இசைபிரியாவையும் கொல்ல வேண்டும், எப்படி என திட்டமிட முனைய, அவளுக்கு விசத்தை நடராஜனின் கைகளால் ஊட்டிவிட தீர்மானித்தான் வேலு.அதன் படியே செய்தும் காட்டினான்.

 

சிவகாமிடம் பாயாசம் தயாரிக்க சொல்லி, அதில் பூச்சி மருந்தைக் கலக்கியதைத்தான் இப்போது  பிரியாவிற்கு புகட்டியது. தன் மகளுக்கு பாசத்தைக் கொட்டி தாய் சமைத்த உணவில் தந்தை விசத்தைக் கலக்கி மகளுக்கே கொடுப்பார் என்பதை அத் தாய்உள்ளம் நிச்சயமாக அறிந்திருக்கவில்லை.

 

“ஹாஹா. உன் குடும்பத்தையே கருவருத்துட்டேன். என் கூட வாழாதவே இந்த உலகத்துக்கு எதுக்குவே” தன் சுயரூபத்தில் நிமிர்ந்து நின்றவனை நோக்கி மெல்ல கையைக் குற்றி தட்டுத்தடுமாறி எழுந்த பிரியா,

 

“த்தூ” என அவன் முகத்தில் காரி உமிழ்ந்திருந்தாள். “ச்சீ…” கடைசியில் பெண்களைக் கொச்சப்படுத்தும் கெட்ட வார்தையைக் கூறி, பிரியாவின் கூந்தளைக் கற்றையாக பிடித்து இழுத்து, அவளின் வயிரு அடி படுமாறு தூணில் தள்ளிவிட்டான் வேலு.

 

அவன் தள்ளி விட்டதில் வலியுடன் சேர்ந்து, பிரியாவின் பனிக்குடமும் உடைப்பெடுக்க, “அதுதேன் உம் புருசன் சொத்துட்டான்வே அப்புறம் எதுக்கு இது கழுத்துல” அவளின் தாலிக் கொடியை அறுத்தெடுக்க, அவளின் சங்குக் கழுத்தை தாலி உரித்து எடுத்து, சிவப்பாக கோடிட்டது.

 

“குடும்பமா போய் சேருலே. உம்ம படத்துக்கு மாலை போடத்தான் வளகாப்புல போட்டே எடுத்தவே” அதே வெறிச்சிரிபுடன் சமையலறையை நோக்கி நடந்தவன், அங்கிருந்த எரிவாயுவையும் திறந்து விட்டே வெளியேரினான்.

 

‘என்ன பண்ணியும் அழுறாலா பாரு செத்தாலும் இவ ஏத்தம் அடங்காது’ இத்தனையும் செய்தும் அடங்காத மனதுடன் காரைக் கிளப்பி அவன் சென்று விட,

 

உள்ளே, பிரபாவின் பனிக்குட நீர் காலை நனைத்து தரையில் ஓட ஆரம்பிக்க, “அம்மா” என்ற போது தண்டுவடத்தில் ஒரு மின்வெட்ட, ஜனித்தாள் ஒரு மழலை. 

 

பிறக்கும் போதே தாய்க்கு வலிக்ககூடாது என சபதமிட்டிருப்பாள் போல, இரத்தத்தில் குளித்து மண்ணில் வீழ்ந்த செந்தாமரையை அள்ளியெடுத்து அணைத்த பிரியாவின் பல்முரசின் இடுக்களிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது.

 

தாதியாக பிரியாவிற்கு புரிந்து விட்டது. இனி இந்த மண்ணில் ஜீவிக்க மாட்டோம் என்று. ஆனால் வயிற்றில் இன்னும் ஓர் உயிர் அசைவதை உணர்ந்தவள். நடக்க கூட முடியாமல் தரையில் தழுவிக் கொண்டு சென்று அருகிலிருந்த நீரைக்குடித்தாள்.

விசம் அருந்தினால் நீரை பருகுவது முதலுதவியில் அடங்குமல்லவா.

 

சற்று நேரத்தில் மீண்டும் வயிறில் ஓர் மின்னல் வெட்ட அவளின் அடுத்த மகவும் ஈண்ரெடுக்கப்பட, அவளின் மார்பில் அமுதம் சுரக்க ஆரம்பித்தது.

 

“கேஸ், கேஸ் ஆ…ப்..ப” நிலத்தில் மீண்டும் அசைந்து சமயறைப் பக்கம் நகரும் போது, வீட்டில் கதவைத்தாண்டி உள்ளே வந்தார் சீதாராமன். 

 

“ஐயோ! பிரியாமா! என்னடா ஆச்சு?” அவர் அவளினருகே மண்டியிட்டு உட்கார, அலர்ந்த பூஞ்சிட்டுக்கள், மிளிற்ற ஆரம்பித்தன. ஒன்பது மாதங்களின் நடுப்பாதியிலேயே உதித்த நட்சத்திரங்கள் பாலுக்கு வேண்டி அழ, பாலூட்ட முடியாமல் கோடாக கண்ணீர் வடிய, நடந்தவற்றைத் திக்கிதிக்கி தனது மாமனாருக்கு ஒப்படைத்தாள் பிரியா.

 

“அவ பெரியவ, இவ சின்னவ” கடைசி வார்த்தை இது மட்டுமே தெளிவாக உச்சரித்தவளின், வாய், மூக்கு, காது என உதிரம் கசிய, கால்களுக்கடியில் பிறப்பின் புணிதமும், மார்பினில் தன் குழந்தைகளுக்கான மதுரமும் சிந்தி வடிய, 

 

இசைபிரியா என்ற பெண்ணின் ஆன்மா அவளின் கூட்டை விட்டு பறந்து, அவளின் நாதனான சேகரகுமாரின் ஆன்மாவிடம் போய் ஒட்டிக் கொள்ள, அவளின் வெற்றுடல் மண்ணில் சாய்ந்தது. 

 

தாய், தந்தையாக வாழவிட்டாலும், அவ் இரண்டு ஜீவன்களின் மரணம் இரண்டு குட்டி ஜீவன்களுக்கு ஜனனமாக முடிந்தது.

 

வேசங்கள் தரித்தவன்,

கொண்று செல்கிறான்!

நியாயம் கொண்டவள்,

வீழ்ந்து சாகிறாள்!

விதியோனின் மதியை,

தனக்குள் சிக்கவைக்க,

ஒருத்தி யாட்கை துறக்கிறாள்!

அவன் வீழ்ந்தான்…..