யாகம் மூன்று
நித்திலத்தின் நிறத்தில் முகிழ்களான ரோஜாக்களையும் அவற்றின் கரும்பச்சை இலைகளையும் ஒன்றிணைத்து பட்டுக்கடுதாசியினால் சுற்றப்பட்ட பூங்கொத்தொன்று அலங்கார மேசைமீது வந்து வீழ்ந்தது. அதில் ஒற்றை ரோஜா மடல் விரித்து, மொட்டெனும் நிலைகடந்து மலராக விரிந்து செந்தேனை சிந்திச் சரிந்தது. சிதறிய தேன் துளிகள் விரைந்து அமராவின் பட்டுக் கன்னத்தினை உரசி உறவாடியது. கணப்பொழுதில் தேன்துளிகள் அமிலமாக திரிந்து, அவள் கன்னங்களை தகித்தது.
மெல்ல, மெல்ல அமிலம் அவள் குறல்வளை கடந்து கழுத்து, மார்பு, கை, கால் என அங்கம் கடந்து, உடல் முழுவதும் பரவி, தீஞ்சுவாலையாய் எரிந்து பஸ்ப்பமாக்கியது.
“ஸ்ஸ்ஸ்” சிறு முணுமுணுப்புடன் திகைத்து எழுந்தாள் அமரா. நிதர்சலமாக மடிமீது தூங்கிக்கொண்டிருந்தவளின் அசைவில் இந்தரும் கண்விழித்துப் பார்தான். “பார்பி கேர்ல், ரிலாக்ஸ்டா! என்னடா ஆச்சு?” அவளது தலையை வாகாக கோதிவிட்டுக் கொண்டே, தண்ணீர் போத்தலை எடுத்து நீட்டினான். “க..கனவு குட்டா, ஏதோ ஆசிட், யாரோ ப்ச்..” இதழைப் பிதுக்கிக் கொண்டே பதிலளித்தாள் அவள்.
அவள் இடது கையை அழுத்தமாக அவன் வலதுகை கொண்டு பற்றி “இட்ஸ் ஓகேடா, எல்லாம் நல்லதா நடக்கும்!” எனக்கூறினான். “கை வலிக்குதா குட்டா?” கண்களோடு கண்கலந்து இரண்டு புருவத்தையும் உயர்த்தினாள் அமரா.
“ம்ஹூம், சின்னக் காயம்டா. வலி ஏதும் இல்ல.” கன்னம் குழிய சிரித்தான் இந்தர். இருவரின் பார்வையும் அவனது வலது கையின் மோதிர விரலின் மீது போடப்பட்டிருந்த பிலாஸ்திரியை உற்றுநோக்கியது. மிகச் சிறிய காயம் தான், அவனுக்கு வலிகூடக்கிடையாது ஆனால் அவளுக்கு வலிக்கிறது. ‘என்ன மாதிரியான பாசமிது‘ இந்தரின் மனம் சில்லிட்டது. அமராவின் மனமோ, நேற்று அவனுக்கு காயம்பட்ட காட்சியை ஓட்டிப்பார்த்தது.
சுபின், இந்தரின் கீழ் பணிபுரியும் உயர்நிலை முகாமையாரில் ஒருவன். கடந்த ஒருமாதமாக அவனுடைய மேலாண்மை நடவடிக்கைகளில் சிறு பிசகுகளை அவதானிக்க கூடியதாகவே இருந்தது. கடைசியாக இவர்களின் மருந்து வில்லை உற்பத்தி நிருவனத்தின் கூட்டு உடன்படிக்கைக்கு எதிராக, போட்டி நிருவனம் ஒன்றுடன் இணைந்து வஞ்சகம் பாராட்டியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அடுத்தநாள், அதாவது நேற்றுக் காலையே அவனை ஆதாரத்துடன் பிடித்துவிட்டான் இந்தர்.
டெல்லியில் இவர்கள் கம்பனியின் கட்டிடத்தின் அடித்தளத்தில் பாவனைக்கு உதவாத சில தளபாடங்களை இட்டுவைக்கும் அறையில் சுபினை அடைத்து வைத்து வதம் செய்து விட்டான் இந்தர். “சுபின், எங்க பணத்துல கை வைத்தாக் கூட சும்மாவே விட மாட்டோம். ஆனா நீ எங்க கம்பனி அடையாளத்தில கை வைச்சிட்ட. ஹவ் டேர் டூ டச் அஃவர் புராஜக்ட் அக்ரீமென்ட்?” கண்ணில் மின்னல் வெட்ட சிரித்துக் கொண்டே, அவனது வலது கையை சுபினின் கன்னத்தில் இறக்கினான் தொடர்ந்தும், “அது எப்படி, நீ எங்க அடையாளத்த அழிப்பியாம். நான் உன்ன அடிச்சிட்டு விட்டு விடுவேணாம். நெவர், உலகத்துல மிகக்கொடுமை என்ன தெரியுமா? தான் யாருனு வெளி உலகத்துக்கு தெரியாம இருக்குறது தான். அதனால இந்த நிமிசத்துல இருந்து நீ சுபின் கிடையாது. புரியல உன் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு எல்லா ஆவணங்களும் செல்லுபடியில்லாதது. நீ இந்தியன் சிட்டிசன் கூட கிடையாது, எப்படி முடியும்னு பாக்குறியா?” கேள்வியாக நிறுத்திவிட்டு, கைகளினால் பணத்தை எண்ணுவது போல சைகை செய்தான்.
மீண்டும் மீண்டும் அவனைச் சரமாரியாக அடித்து துவம்சம் செய்யும் போது இந்தருடைய கைவிரல் மோதிரம் நசுங்கியதால், அதனை விரலில் இருந்து வெட்டியெடுக்க வேண்டிய நிலைவந்தது. அப்படி வெட்டியெடுக்கும் போது அவனுக்கும் சிறிய காயம் அவ்வளவே. ” பார்பி, ஆர் யூ ஓகே” இந்தர் அவள் நெற்றி முடியை காதுக்கு அப்பால் ஒதுக்கிவிட்டுக் கேட்டான். “கல்யா.. இந்த கல்யாணம் நட…” திணறினாள். “அமராமா, மாமா எல்லாத்தையும் பார்த்துப்பேன், உன் குட்டா உன்கூடவே இருப்பான். பின்ன என்னடா?” இத்தனை நேரம் அரவம் அற்று காரை ஓட்டிக்கொண்டே, இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ரகுவரன் குறுக்கிட்டுப் பேசினான்.
“அப்பா, அவ பயமே உங்க தர்மபத்தினிய நினைச்சுத்தான்.” தந்தைக்கு அருகில், காரின் இருக்கையில் தலைசாய்த்து தூங்கிக் கொண்டிருக்கும் தாயை வம்புக்கிழுத்தான். “படவா, உன் அம்மாடா அவ. ஹூம் கௌரி பேசாம இருந்தா நல்லதுதான். பயத்துல படபடக்காம இருந்தா போதும்.” என்றார் ரகு. “மாமா கேப்ல என் செல்லத்த கலாய்ச்சிட்டாராமாம். இதுவே அத்தை தூங்காம இருந்தா வாய்” இழுத்து மூடுவது போல வாயில் விரல்வைத்துக் காட்டினாள் அமரா. அவள் செய்கையில் ஆண்கள் இருவரும் சத்தமிட்டு நகைத்தனர்.
அமரா காரின் கண்ணாடியை இறக்கி வைத்து விட்டு அச் சிற்றூரை வேடிக்கை பார்த்தாள். அதிகாலை நான்கு மணியைத் தாண்டாத வேளை, வலசை புள்ளினங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கீச்சிட்டு வான்நோக்கிப் பறந்தது. கரும்நீல நிற வானில் முகம் பார்க்க ஏங்கி, பசும் நெற்கதிர்கள் தோல்வியுற்றது போல தலைகுனிந்து நிலம் பார்த்து நாணி நின்றது. பனிக் காற்றும் அதில் மண்வாசமும் அவளின் நுதல், நாசி தழுவி அணைத்தது. ஆனால், கண்ணில் பட்டதெதுவும் கருத்திலில்லை‘ என்பது போல அவள் பார்வை எங்கோ வெறித்திருந்தது.
மேற்குத் தெடர்ச்சி மலையின் கீழடிவாரக் கிராமம் பூம்பொழிலில், மலைக் குன்றில் சிவனும் பார்வதியும் தம்பதி சகிதம் ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் அக் கோவில் விழாக் கோலம் பூண்டிருந்தது. சுற்றுவட்ட ஊரின் முன்னால் தலைவரும், பண்ணையாருமாகிய நடராஜனின் புதல்வன் தேவ் பிரசாத் மற்றும் அவரது மனைவியின் தம்பி வேலுப்பாண்டியின் மகள் மேகவிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம். ஊரிலிருக்கும் அனைத்து முக்கியஸ்தர்களும், பெரியவர்களும்
சரசரக்கும் பட்டுடுடித்தி தோளில் துண்டுகளுடனும், பெண்டிற்கள் தங்கம் மற்றும் வைரம் என நகை பளபளக்க கோவிலின் தளத்தில் அமர்ந்திருந்து வைபவத்தை காண காத்திருந்தனர். நெருங்கிய உறவு தவிர்த்து சிறுவர்கள், இளந்தாரிகள் யாரும் திமணத்திற்கு அழைக்கப்படவில்லை. காரணம் பிரசாத்தின் தனிப்பட்ட விருப்பமே ”அப்பா, வயசுப் பசங்க விசேசத்துக்கு வந்தா கையில ஃபோன் சகிதம் தான் இருப்பாங்க. தேவையில்லாம நடிகரின் திருமணத்திற்கு தானும் கலந்துக்கிட்டேன்னு சோசியல் மீடியால போடுவாங்க. அதனால நம்ம குடும்பம் மேல இந்த லைம் லைட் படும். உங்க எல்லோரோட தனிப்பட்ட சுதந்திரம் இதனால ரொம்ப பாதிக்கப்படும்பா. வேண்டாமே.”
திருமணத்திற்கு முன்னதாகவே அனைத்தையும் சரியாக திட்டமிட்டிருந்தான் பிரசாத். ஊரில் திருமணம் நடப்பதால் பெரியவர்களை முன்நிறுத்தி திருமணத்தை முடிப்பது. பின் சென்னையில் வரவேற்பினை, அவன் துறை சார்ந்தவர்கள் மற்றும் ஊடகத்தை அழைத்து திருமணத்தை உத்தியோக பூர்வமாக அறிவிப்பது என. ஆனால் அவனின் திட்டத்தை துகள்களாக்க விதியினை வென்ற மதியொன்று வந்துகொண்டிருப்பது அறியாமல் மனையில் அமர்ந்து மந்திரங்களை ஒப்பித்துக் கொண்டிருக்கிறான் பிரசாத், அவன் அருகில் அவனவளாக மாறப்போகும் நொடிக்காக மேகவியுடன்.
சாம்பல் நிற ஆடிக் கார் அச் சிவன் கோவில் முன்வந்து கீர்ச்சிட்டு, செம்மணில் புழுதியைக் கிளப்பிவிட்டு நின்றது. காரின் நான்கு கதவுகளையும் திறந்து கொண்டு அமரா, இந்தர், ரகு, கௌரி என நால்வரும் வெளியில் வந்தனர். எட்டுக் கண்களும் படிகளின் முடிவிலிருக்கும் கோவிலைப் பார்த்தது. எட்டுக் காதுகளுக்கும் அங்கு இசைக்கும் மேலதாளங்களும் வெற்றி முரசின் ஓசையை வழங்கிற்று. ரகு கௌரியின் கையினைப் பற்றி, “கௌரி, சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கட்டும்.” என மென்மையாகக்கூறி படிகளில் ஏறிச் சென்றார்.
இந்தரோ அமரா தனது குதியுயர்ந்த பாதணியைக் காலை விட்டு அகற்றுவதற்கு பெரும்பாடுபட்டு கொண்டிருப்பதைப் பார்த்து, அவள் முன் மண்டியிட்டு பாதணியின் பட்டியைக் கழற்றிவிட்டான். அவ்வாறே நிமிர்ந்து அவள் முகம் பார்க்கும் போது கோவிலையே வைத்த கண் அகலாமல் முகம் கூம்பி அமரா பார்த்திருந்தது புரிந்தது. கணப் பொழுதில் அவளை அவன் கைவளைவுக்கு கொண்டுவந்து நெற்றியில் இதழ்பதித்தான் அவன். முத்தத்தின் ஈரம் இதயத்திற்கு இதமாக இருந்ததோ என்னவோ அமரா கண்களால் புன்னகைத்து, அவன் கையைப் பற்றிக் கொண்டே ஐந்து வருடங்களுக்குப் பின் கோவிலுக்குள் காலடி எடுத்துவைத்தாள்.
மனிதன் அதிகமாக மனம் கனக்கும் தருணங்களில் சித்தம் துறந்து ஞானத்தை தேடுகிறான். அந் ஞானம் விருப்பு, வெறுப்பு என இரு திசைக் கருவிகளுக்கு இடையிலான மெல்லிய கோட்டினால் வேறுபடுத்தப்படுகிறது. சிலர் விருப்பைத் தேர்வு செய்து கடவுளைச் சரணடைகின்றனர். சிலர் வெறுப்பை உமிழ்ந்து கடவுளைத் தூரநிருத்துகின்றனர். இதில் அமரா இரண்டாவது ரகம். கடந்து வந்த புயலால் கடவுளை நாட மறந்துவிட்டாள். இந்தர், சின்னு என யாரும் எப்போதாவது கோவிலுக்குச் சென்றாலும், இவளுக்கு வேண்டி விபூதியிட்டுக் கொள்வதையே தவிர்த்தார்கள்.
அக்கினி குண்டத்துக்கு முன்னமர்ந்து மேகவி ஐயர் சொல்லும் மந்திரங்களை படுசிரத்தையாக உச்சரித்துக் கொண்டிருப்பதை, ஓரக் கண்களால் பிரசாத் பார்த்து உள்ளுக்குள் சிரித்து, ‘எத்தனை படத்துக்கு இந்த மந்திரத்தை ஓதியாகிற்று, பிரகாசிக்கும் இப்பொன் தாலியையும் பார்த்தாகிவிட்டது. இருப்பினும் ஏதோ புது உணர்ச்சி மனதில் செம்மையூற்றுகிறது.’ என எண்ணிக் கொண்டான். சிவகாமி, நடராஐன், வேலுப்பாண்டியின் முகத்தில் மகிழ்ச்சி சொல்லோனா அளவு கொட்டிக் கிடந்தது. அவர்களுக்கு அருகில் இசைபிரபா தன் ஒரே அண்ணணின் திருமணத்தின் சடங்குகளை ரசித்து செய்துகொண்டிருந்தாள்.
ஐயர், “கெட்டிமேளம், தம்பி மாங்கல்ய தானம் பண்ணுங்கோ!” என்று தாலியை பிரதாபின் கையில் கொடுக்கும் போது, ஒரு பெண்ணின் கை தாலியைப் பறித்தெடுத்தது. ‘யார் இவள், எப்படி வெடுவெடுவென வந்து தாலியைப் பறிக்கலாம்.’ என அனைவரும் வியப்பாக பார்திருந்த கணம், நடராஐனோ “யாருமா நீ? தாலிகட்டுற நேரத்துல தகராரு பண்ணுற?” என சன்னமாக வினவினார். “வெல்த் என்ட் பைனான்ஸ், ஏ ஸ்குவயர் குரூப் ஆப் கம்பனி சேயர்மேன் அமரா சேகரன். என் தங்கச்சி பெண்ணு.” காட்டமாக கூறினார் ரகு. கோவிலில் இருந்த கூட்டத்தில் ஊசி விழுந்தால் கூட ‘வின்‘ என சத்தம் கேட்குமளவு அமைதி.
எல்லோர் கண்களும் நொடிப் பொழுதில் ஆட்சரியத்தை தத்தெடுத்தது. காரணம் ரகு கூறிய நிறுவனத்தின் புகழ், இந்தியாவில் முதல் ஐந்து நிதி நிருவனங்களில் ஒன்று வெல்த் என்ட் பைனாஸ். வங்கியல்லாத நிதி நிருவனமான இது மூலதனக் கடன் தொட்டு விவசாயக் கடன் வரை வழங்கி வருகின்றது. இந்தியாவில் எல்லா மாநிலங்களும் ஏன் சனத்தொகை வெகுவாக குறைந்த ஊர்களிலும் கிளையொன்றைக் கொண்ட நிருவனமிது மற்றும் ஏ ஸ்குவயர் கம்பனியானது இந்தியாவை தாயகமாக கொண்ட ஏற்றுமதி, நிர்மானிப்பு, வடிவமைப்பு, ஊடகம், கல்வி என பல்துறைகளை உள்ளடக்கிய கம்பனி, கடல் கடந்து சில பல நாடுகளில் வெளிநாட்டுக் கிளைகளைக் கூட நிலைநிருத்தி வைத்திருக்கும் கம்பனி. அதன் தலைவி இப் பெண்ணா என விழி விரித்துப் பாத்திருந்தனர் அவ் ஊறார்.
“சரிங்க, பெண்ணு பெரிய இடமா இருந்தா சபையில வந்து தாலியை புடுங்களாமா?” நடராஐன் ஆதங்கப்பட்டார். பிரசாத்தும் மேகவியும் கூட ‘என்னடா இது‘ என பதறி மணமேடை விட்டு எழுந்துவிட்டனர். “வார்த்தை முக்கியம் சார், அமரா என்ன தப்பு பண்ணினா என ஆதங்கப்படுறிங்க?” இந்தர் கொதிநிலைக்கு சென்று கொண்டிருந்தான். தனது தந்தையை தன்னை விட சிறிய வயது கொண்ட ஒருவன் அதட்டிப் பேசுவது தாங்க மாட்டாமல் பிரசாத்தோ, “ஏய் நீங்க கம்பனி ஓனர்னா எங்க வந்து, எப்படி வேணாப் பேசலாமா? மரியாதை தெரியாது?” சீறினான் அவன். “இவரு பெரிய ஒழுக்க சீலன் மரியாதை பத்தி கிலாஸ் எடுக்காரு.” எள்ளி நகையாடினான் இந்தர்.
“ஏய், நான் யாருனு நெனச்ச” பிரசாத் பாய்ந்தான். ” பிரா, ராஜா என்னடாமா இது?” சிவகாமி அவன் கையைப் பிடித்து இழுத்தார். “இசை, யாருடி இவங்க? எனக்கு ஏதோ படபடப்பா வருது.” பயத்தில் மேகவி கண்களில் நீர் கோர்த்து வந்தது. “கவி அண்ணி! அண்ணா, அப்பா, மாமா, சொந்தம் பந்தம் எல்லாம் இருக்காங்க பாத்துப்பாங்க, நீ பயப்படாம பொறுமையா இரு.” மேகவி தோளைப் பற்றி ஆசுவாசப் படுத்தினால் இசை. ஏய் ஆப்ட்ரோல் நடிகர் நீ என் மேல பாய வர, உண்மைய சென்னா உருத்துதோ. பரவாயில்ல சினிமால மட்டும் இல்ல நிஜத்துலயும் நல்லா நடிக்கிற.” சிரித்தே சிதைத்தான் இந்தர்.
“தம்பி, என்னப்பா உம் பிரட்சினை சுப காரியம் நடக்குற நேரத்தில வந்து, என்னவோ சொல்லுத?.” வேலுப்பாண்டி வினவினார். “ஆமா, பிரட்சினைதான் எனக்கு இல்ல உங்க மருமகனுக்கு.” இந்தரின் கண்களில் மின்னலின் ஔி. “தம்பி, பெரியவக பேசட்டும். சார், உங்க வீட்டுப் பொண்ணு எங்க வீட்டுப் பொண்ணுக்கு கட்டவேண்டிய தாலிய பறிச்சிட்டா, ஏன் இங்க வந்து குழப்பம் பண்ணுதிய?” பெரியவராக நடராஜன் ரகுவிடம் வினவினார். “எது, எங்க பெண்ணு பறிச்சது அவளுக்கு சொந்தமான பொருளை இல்லியா? தாலி கட்டப்பட வேண்டியது அமராக்கு, இதே இந்தப் பொண்ணுக்கு இல்லை.” என மேகவியைக் கை காட்டினார்.
“எம் பெண்ணுக்கு சேர வேண்டியது இல்லியா, யோவ் என்னயா கதை விடுறியா?” வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேலுப்பாண்டி கர்ச்சித்தார்.
” ஏய், உண்மைச் சொன்னா என் அப்பா மேலயா கை வைக்க வார்ர, இந்த தாலி மணக்கோலம் எல்லாம் என் அமராக்குச் சேர வேண்டியது. உம் மருமகன் ஆரியக் கூத்தாடி, அவ பின்னால சுத்து சுத்துனு சுத்தி தேவையெல்லாம் தீர்ந்த பின்ன, தாலிகட்ட இங்க ஓடிவந்துட்டான். துரோகி!” இடியென குரலை உயர்த்தி, இந்தர் பலர் தலையில் சிந்தாமல் சிதராமல் பொறி பார்த்து ஓர் பேரிடியை அனைவர் தலையிலும் இறக்கிவைத்தான்.
தித்திப்பாய் சுவைக்கும் தேனிலே,
துளி விசத்ததைக் கலந்தவன் நீயடா!
அத்திக்காய் சிவக்கும் நிலவை,
நிந்திக்கும் வஞ்சகம் ஏனடா!
அவள் வீழ்த்துவாள்….