யாகம் 6

யாகம் ஆறு

 

அண்ட சராசரத்தினை அறைக்குள் அடக்கி வைத்தது போல காட்சியளித்தது அந்த தாஜ் ஹோட்டலின் கேளிக்கை அறை. கரு நீல நிறத்தில் அலங்கார விளக்குகள் நட்சத்திர வடிவிலும், இதர வானுடன் தொடர்புடைய செயற்கை பொருட்களும் தரையின் மீது வானம் இறங்கி வந்ததைப் போன்று ஜாலத்தைக் கொண்டு சேர்த்தது. 

 

பகட்டு உடைகளும், அவற்றிக்கு பொருத்தமான அணிகலங்களும் அணிந்த வண்ணம், பலத்த பாதுகாப்புடன் உயர்ரக மகிளூர்ந்துகளில் வந்து இறங்கினர், திரைப்படத்துறையின் முக்கிய ஜாம்பவான்கள் மற்றும் இந்திய தொழிற்துறை செல்வந்தர்கள்.

 

தொழிற்ச் செல்வந்தர்களை இந்தரும், திரைத்துறையினறை பிரசாத்தின் காரியதரிசி கார்த்திக்கும் வரவேற்று, கை குலுக்கி உள்ளே அமர வைத்தனர். இவர்கள் இருசாராருக்கும் மேலதிகமாக, புகைப்பட கருவிகளுடன் ஊடகவியலார்களும் வந்திருந்தனர்.

 

மாலை மங்கிய நேரம் பரபரப்பு, கலகலப்புடன் ஆரம்பமானது பிரசாத், அமராவுடைய திருமண வரவேற்பு நிகழ்வு. இரண்டாள் உயரத்திலிருந்த மலர்களால் வடிவமைக்கப்பட்ட கதவு திறக்கப்பட்டு ஒற்றை விளக்கொளி மட்டும் வட்ட வடிவில் அவனைச் சூழ உள்ளே நுழைந்தான் பிரசாத். கரகோசங்கள் அவ் இடத்தையே அதிரச் செய்யும் போல அனைவரும் கைதட்டி ஆர்பரித்தனர். மேலும் சில பணக்கார இளம் வாரிசுப் பெண்கள் அவனை மையலாகவும் பார்க்க தவறவில்லை.

 

அடுத்து சில வினாடிகளில், மேற்கூரையிலிருத்து நட்சத்திர வடிவ ஊஞ்சல் நிலத்தை நோக்கி சங்கிளிகளால், செயற்கையாக உருவாக்கப்பட்ட புகைக்குள் தாழ்த்தப்பட்டது. மெல்ல மெல்ல புகை விலக ஆரம்பிக்கவும் ஒரு எழில் மங்கையின் வதனம் சபையோருக்கு காணக்கிடைத்தது.

 

பிரசாத்தின் கோட்சூட்டின் அதே அடர்நீல நிறத்திலான, கைகளோ தோள்ப்பட்டியோ இல்லாத நீண்ட கவுன்,கைகளில் நீலநிற ஓட்க்கிட் மலர் பூங்கொத்து, கூந்தலை விரித்துவிட்டு தலை உச்சியில் வளையமாக கிரீடம், காதுகளின் வளைவுகளில் மட்டும் குட்டி நட்சத்திரங்களை சேர்த்தாற்ப்போல நவீன காதணி, கால்களில் குதிஉயர்ந்த பாதணி என தேவதை போல தரையில் பிரசாத்தை நோக்கி நடந்து வந்தாள் அமரா.

 

கூடியிருந்த அனைவர் முகத்திலும் ஆட்சரியம். சில நடிகைகள் கூட மனதினுள் ‘பிரசாத் ஏன் நம்மல திரும்பிக் கூட பார்கலனு இப்போ புரியுது.’ என நினைத்துக் கொண்டனர். பிரசாத்தும் திருமணமாகி மூன்றாவது நாளான இன்றுதான் அவளை சற்று நோக்கினான். அவன் கண்களுக்கும் சற்று அழகாகவே  தோற்றமளித்தாள். அதையும் தாண்டிய கம்பீரமொன்று அவள் நடையில் பிரதிபலித்தது.

 

அவன் அருகில் அவள் வந்து அவனுடன் மேடைநோக்கிய நடையில் இணைந்து கொள்ளும் போது, ”யூ ஆர் லுக்கிங் லைக் ஏஞ்சல்” என பாராட்டினான். ”இவ்வன் டெவில்ஸ் ஆல்சோ ஹேவ் விங்ஸ்.” என்று கூறிக்கொண்டே, இருபக்க உதட்டோரமும் தொடும் அவள் தெத்துப்பல்லைக் காட்டி சிரித்தாள் அமரா.

 

‘அழகைக் கண்டு ஏமாறாதே! ஆபத்துக்களில் தான் அதிக அழகு கொட்டிக்கிடக்கும். நானும் அப்படித்தான்’ மறைமுகமாக தாக்கி அவள் புன்னகைக்க அவனோ, அவள் வெண்பற்களையும் உதட்டில் பூசப்பட்டிருந்த அடர்சிகப்பு உதட்டுச்சாயத்ததையும், இரத்தம் குடிக்கும் காட்டேரிகளுடன் ஒப்பிட்டு பார்த்து மனதில் அச்சத்ததை விதைத்துக் கொண்டான்.

 

‘ச்சில் பிரசாத்’ தலையை இடவலமாக ஆட்டிவிட்டு அவளுடன் பிரை வடிவான மேடைமீதிருந்த இருக்ககையில் அமர்ந்தான். 

 

நேற்றுக் காலையில், அமராவுடைய வரவிற்க்கு பின்னனி என்னவாகவிருக்கும் என்ற சிந்தனையில் நடை பயின்றவனுக்கு கண்ணில் சிக்கியது என்னவோ ஓடையில் அமரா, இந்தர் இருவரின் ஒட்டுதல் தான். கோபத்தில் கையை முஷ்டியாக இறுக்கி கைப்பிடிச் சுவரில் குத்திவிட்டு, விருவிருவென அவன் சென்ற இடம் இசையினுடைய அறைதான்.

 

அப்போதுதான் துயிலெழுந்த இசை தனது கையடக்க தொலைபேசியினை கைகளில் எடுத்த சமயம் அதை கையில் வாங்கி எடுத்தான் பிரசாத். முகத்தை வெட்டித் திருப்பி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் இசை. ‘பாரேன் இவ கோபத்த!’ இக்கட்டான நிலையிலும் அவனுக்கு இளநகை பிறந்தது. அவள் கட்டிலில் அமர்ந்து அவனுடைய சமூக வளைத் தளத்தை திறந்தான்.

 

தொலைபேசியே வெடித்துவிடும் போல அத்தனை குறுஞ்செய்திகள். ‘என்னடா இது’ யோசனையுடன் பார்க்கும் போதுதான் அவனுடைய கருத்தில் பட்டது, ஏதோ சிறு யூடியூப் செயலியில் பகிரப்பட்டிருந்த செய்தி. ‘முன்னனி நடிகர் பிரசாத் திருட்டுத் திருமணம்.’, ‘இளம் தொழிலதிபரினை வளையில் சிக்கவைத்தாரா? நடிகர் பிரசாத்’, ‘நடிகர் பிரசாத் திடீர் திருமணம் நடந்தது என்ன?’.

 

ஊடக சுதந்திரம் எனும் போர்வையில், புகழ், வளர்ச்சியைத் தேடும் சில நிறுவனங்களின் இரண்டாம்தரமான செயற்பாடுகளைப் பார்க்கும் போது பிரசாத்திற்கு சொல்லனாக் கோபம் வந்தது.

 

அமராவின் வியாபார பேட்டி நிகழ்சியில், பொதுவாக பேசப்படும் போது கேட்கப்பட்ட வினாவான, “யார் மீதாவது ஈர்ப்பு உள்ளதா?” என்பதற்க்கு “ஈர்ப்பு என எதைக் குறிப்பிடுகிறீர்கள்?” அவளின் பதில் கேள்வியும், “யாரும் நடிகர், பிரபலம்” என தொகுப்பாளினி எடுத்துக் கொடுக்க, “நடிகர் எனும் பட்சத்தில் தேவ் பிரசாத்தை சொல்லலாம், காரணம் தமிழில் நான் பார்த்த ஒரு சில படங்களில் அவரின் நடிப்பு சிறப்பாகவுள்ளது.” என அடுத்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாள் அமரா.

 

முழுக்க முழுக்க ஹிந்தியில் ஆறுமாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட பேட்டியின் காணொளியை எடுத்து, ஊடகங்கள் கடைபரப்பி, இவர்களின் திருமண புகைப்படத்தை வேறு கசிய வைத்திருந்தனர். மேலும் சில ரசிகர் கூட்டங்கள்  ‘அண்ணா, அண்ணி’ என இவர்களின் புகைப்படத்தை வேறு இணைத்து ஏதோ பாடல்களைப்போட்டு தொகுத்து சமூகவளைதளத்தில் பதிவிட்டு இருந்தனர்.

 

இதில் கசிந்த திருமணப்புகைப்படம் எடுக்கப்பட்டது கௌரியினால் தான் என்பதும் முதல் முதலில் இதை பதிவு செய்தது சின்னு என்பதும் பிரசாத் அறியாத ஒன்று. கைகளைத் தலைக்கு கொடுத்து அமர்ந்திருந்த பிரசாத்தின் யோசனையைக் கலைத்தது என்னவோ இசையின் கொலுசொலி தான். அண்ணனை உருத்து விழித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள் அவள்.

 

‘இவள் வேறா, யாரைச் சமாளிப்பதுனே புரியமாட்டுது.’ மூச்சை இழுத்து விட்டு, கார்த்திக்கு அழைப்பை விடுத்து சில கட்டளைகளைப் பிறப்பித்தான். பேசி முடித்து விட்டு அமரும்போது, முதல் முறையாக தான் புகழின் உச்சத்திலிருக்கும் நடிகர் என்பதை எண்ணி வருந்தினான்.

 

திருமணம் முடிந்ததிலிருந்து அப்பா, அம்மா, மாமா, தங்கை, கவி என யாரும் அவனிடம் ஒரு வார்தையும் பேசிக்கொள்ளவே இல்லை. இதில் கவி எப்போதுமே அவனிடம் தேவைக்கு அதிகமாக பேசிக்கொண்டதே இல்லை எனலாம். அடிப்படையிலேயே கவி சற்று பயந்த சுபாவம் என்பதால் அவனும் அவளுடன் நெருங்கிப் பேசியது கிடையாது. ஆனால் அவனிடம் அவள்பால் அத்தனை அன்பு கொட்டிக் கிடக்கும். இசைக்கென எதுவும் பண்ணினால் அதே போலவே கவிக்கும் செய்துகொடுப்பான். 

 

இருப்பினும் கவியுடனான திருமணம் அவனுக்கு விருப்பமில்லாத ஒன்றே. வீட்டினருக்காக திருமணம் செய்யலாம் பின்நாட்களில் பிடித்தம் ஏற்படலாம் என்ற எடுகோளுடனே இத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவனின் பிடித்தமின்மைக்கும் அடிப்படையான ரணமொன்று அவன் இதயத்தில் புதைந்திருக்கிறது என்பதே நிஜம்.

 

கவி தவிர மற்றைய நால்வரும் இவனிடம் பேசாமல் அமைதியாக இருந்தால், அது விடியாத நாளாகத்தான் இருக்கும். ஆனால் இப்பொழுது நினைக்கையில் அமரா மற்றும் அவள் குடும்பத்தினர் மீது அளவிடா ஆத்திரம் கனன்றது. அவளின் கொட்டத்தை அடக்கி உண்மையை வெளிக்கொண்டுவரும் வெறியொன்று எழுந்தது. அது மாத்திரமன்று தன்னை யாருமே நம்பவில்லையா? என்ற கேள்வி இதயத்தைத் துளைத்தெடுத்தது. ஆக இருதலைக்கொள்ளி எறும்பு போல சரி, தவறு இரண்டுக்கும் இடையில் தத்தளித்தான்.

 

சிலபல திட்டங்களைத் மனதில் உருப்போட்டுவிட்டு, அன்றைய நாளைத் தொடர்ந்தான். குலதெய்வம் வழிபாடு, பொங்கல், கறிவிருந்து என அனைத்து சம்பிரதாயங்களும் நிறைவேற்றப்பட்டன. அச் சடங்குகள் அனைத்திலும் அமரா அவளின் மருமகள் என்ற உரிமையை நிலைநாட்டும் பேர்வழியில் கவியை அடக்கிக் கொண்டும், பிரசாத்திடம் பூடகமாக ஏதாவது வம்பிழுத்துக் கொண்டுமிருந்தாள்.

 

மறுபக்கம் இந்தரோ கவியை பார்வையால் வேலைகளை ஏவிக்கொண்டும், ‘அதைச் செய், அங்கு போ, இதை சாப்பிடாதே’ என கட்டளையிட்டு கடைசியில் பந்தியில் அவள் அருகில் அமர்ந்து ‘தண்ணீ கொஞ்சம் கிடைக்குமா?’ என பாவணை செய்து, அவள் இலை முழுவதும் ஜலக்கிரீடை செய்து உண்ணுவதை விட்டு அவளை எழுந்து செல்ல வைத்தான்.

 

அவனுடைய நடவடிக்கைகள் வெளியில் பார்ப்பதற்கு கரிசனம் போலவிருந்தாலும் நிஜத்தில் வக்கிரமிருந்தது, பிரசாத் மற்றும் வேலுப்பாண்டியினால் உணரமுடிந்தது. ஆனால் யாரும் மறந்தும் கூட அதிகப்படியான பேச்சுக்களை யாரிடமும் வைத்துக் கொள்ளவில்லை. ‘சென்னைக்கு சென்று நான் பார்த்துக்கொள்கிறேன்.’ என பிரசாத் கார்த்திக்கிடம் பேசிய பின் அவனின் பெற்றோர் மற்றும் மாமாவிடம் ரகசியமாக கூறியிருந்தான். இது கவி, இசை அறியாதவொன்று.

 

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து இன்று மதியத்திற்கு மேல் சென்னையில் இவ் விடுதிக்கே வரவேற்பு நிகழ்வின் நிமித்தம், ரகுவின் சொல்லுக்கிணங்கி அவர்களின் தனிநபர் விமானத்தில் வந்தடைந்தனர். ஒவ்வொருத்தரும் அவர்களின் அறையில் தயாராக சென்றிருக்க, பிரசாத் அமராவின் ஆடையைப் பற்றி எந்த விளக்கமும் கொடுக்காமல் அவன் அறையில் புகுந்து கொண்டான். 

 

‘கவி புடவையைத்தான கல்யாணத்தப்போ கட்டியிருந்தா, இப்போவும் அவளுக்காக வடிவமைச்ச ஆடையைப் போட்டு வந்து அவமானப் படட்டும்.’ அவனின் மனதை சமாதானப் படுத்திக் கொண்டே தயாராகி வந்தவன், அமராவின் ஆடை, அலங்காரத்தைப் பார்த்து வியந்து கூறியதே முன் நிகழ்ந்தது.

 

ஒவ்வொரு தொழில் வட்டத்தினர் வந்து வாழ்த்திச் செல்லும் போதுதான் பிரசாத் ஒரு விடயத்தைக் கருத்தில் கொண்டான். அமாரவின் துறை சார்ந்த பெரும் வணிகர்கள், அதாவது இவன் அழைப்பு விடுக்காத சிலரும் வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர். ‘எப்படி’ என புருவம் முடிச்சிட அமராவை பக்கவாட்டாக திரும்பி பார்த்தான் அவன்.

 

“பிரசாத், படவா! எனக்கு அப்பவே தெரியும் மூவி சூட்டிங் போது இந்த பொண்ணுக்கூட பேசுவியே. கடைசியில நான் நினைச்சது போல கல்யாணம் பண்ணிட்ட” பிரசாத்தின் கடைசியாக வெளிவந்த படத்தின் தயாரிப்பாளரான வயதான ஒருவர் அவனிடம் சத்தமாக வாழ்த்துக் கூறினார். அமரா முகத்தில் வெட்கச்சிரிப்பு வந்து போனது.

 

‘கடவுளே, உண்மையிலேயே பழையது எல்லாம் மறந்து போச்சா?, இருக்கவே இருக்காது, அப்போ இது எப்படி எல்லோரும் நடிக்கிறாங்க, இது சேஷவிகாவின் செயல்கிடையாது, காரணம் அவள் துபாயில் தன் கணவன், பிள்ளை என வாழ்கிறாள். வேறு யாரும் எனக்கு பகையெனக் கிடையாதே.’ தோளைக் குலுக்கி சிந்தனையை தடை செய்து விருந்தினரை கவனித்தான். 

 

நேரம் வேகமெடுக்க, பத்திரிக்கை, ஊடகவியலாளரை அழைத்து இதுவே என் மனைவி, நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டோம் என உத்தியோக பூர்வமாக அறிவித்துவிட்டு, பொதுப்படையாக அவன் ரசிகர்களுக்கும் நன்றியைக் கூறினான். பின் உணவுகள் முடிக்கப்பட்டு, ஆடல், பாடல்கள் ஆரம்பமானது. 

 

‘கம் ஆன் பிரசாத் அண்ட் அமரா’ என அனைவரும் வற்புறுத்த, ‘செத்தடீ நீ’ வஞ்சத்துடன் நினைத்துக் கொண்டே அமராவின் கையைப்பிடித்து இழுத்து நடனத்தை தொடங்கினான். மெதுவாக அசைந்தாடி பாட்டுக்கேற்றபடி வேகத்தைக் கூட்டி கடைசியில் அவளின் இடையைப் பற்றி நிலம் நோக்கி, வேண்டுமென்றே வளைத்தான். 

 

அமராவின் கூந்தல் நுணி தரையில் படுமளவு வளைத்தும் கீழே விழாமல் பிடி கொடுத்து ஆடினாள் அவள். அடுத்த நொடி இழுப்பு விசையில் அவன் முகத்துடன் முகமோதி நின்றாள் பெண். ”வீழ்த்துவோம்னு நினைப்பா நடிகரே! ம்ஹும் முடியாது. எப்படி உன் வாயாலேயே காதல் மனைவினு சொல்ல வைச்சேன் பார்த்தியா?, எப்படி என் ஏற்பாடு. இங்க இருக்குற குண்டூசி கூட ஸ்பான்சர்னு எனக்கு தெரியும். பட் உனக்கு தெரியாத ஒன்னு சொல்லவா?” அவன் காதுகளில் இதழ் உரச பேசிக் கொண்டிருந்தாள்.

 

“இங்க இருக்கிற எல்லாமே உனக்கு ஸ்பான்சர்னா, அந்த ஸ்பான்சர் கம்பனி எல்லாம் என் பார்ட்னர் கம்பனிடா. நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் நடிகரே! யாருக்கிட்ட? நான் அமராடா” அவனுடைய தாடையைப் பற்றி கிசுகிசுப்பாக உரைத்தாள். சுற்றி ஆடிக்கொண்டிருந்தவர்களுக்கு என்னவோ அது காதல் காவியமாகவே காணக்கிடைத்தது.

 

‘மாமா ஒருவேளை உண்மையா அமரா அக்காவை விரும்பி இருப்பாரு போல, எவ்வளவு அழகா ஆடுறாங்க. ஏன் என் கிட்ட முன்னாடி சொல்லியிருந்தா, நானே மாமாக்கும் எனக்கும் கல்யாணம் வேணாம்னு சொல்லி இருப்பேனே. அப்பாகாகதான் எல்லாத்துக்கும் சம்மதிச்சேன், இப்பே அவரக் கட்டிக்கிட்டு..’ இசைக்கு அருகில் நின்று அவர்களின் நடனத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருந்த கவி, இந்தரை திரும்பி பார்த்தாள். 

 

இந்தரே, ‘பிரசாத்து ஓவரா ஆடுறடா!’ இகழ்சியாக பிரசாத்தை பார்த்துக் கொண்டு, அருகிலிருந்த செல்வந்தர் ஒருவருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது, கவி இவனை கண்களால் தேடும் காட்சி. ‘அட நம்மாளு, அத்தானத் தேடுறியா? இதோ வந்துட்டன் செல்லம்!’. “எக்ஸ்கியூஸ் மீ” என அருகிலிருந்தவனிடம் கூறிவிட்டு கவியை நோக்கி நடந்தான்.

 

“கவி இதோ வந்துடுறேன்” இசை கழிவறை நோக்கி நகர, இந்தர் அவளருகில் வந்தான். “என்னடா நாம இருக்க வேண்டிய இடத்துல அவ இருக்காளேனு பார்க்குறியா?” தனக்கு பின்னால் கேட்ட சத்தில் தூக்கிவாரிப்போட்டு திரும்பினாள் கவி. “உன் கிட்டதான் கேட்குறேன், ஏக்கமா பார்வை போகுது. நமக்கு ரிசப்ஷன் நடக்கலனு பீல் பண்றியா? இல்ல உனக்கு நடக்க வேண்டிய பார்ட்டி, விஸ்ஷஸ் எல்லாம் அமராக்கு கிடைக்குதுனு…?” எள்ளலாக வந்தது வார்த்தை. 

 

பிரசாத்திற்க்கு ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பில், நாங்கள் அருகில் இருப்பது நன்றாக இருக்காது என மறுத்துவிட்டது மாத்திரமல்ல, ‘மேகாக்கு கூட இதுல உடன்பாடில்ல’ என அவள் தலையையும் தனக்கு சார்பாக அசைக்க வைத்தான் இந்தர்.

“இ..இல்லங்க” அவள் முடிக்கும் முன்பே, “ஆடனும்னு ஆசையா இருந்தா வாயேன் ஆடலாம். பட் அரை சைஸ் பால் டப்பி, படிக்காத பட்டிக்காடு கூட நான் டான்ஸ் பண்ணினா என் இமேஜ் என்னவாகுறது. ஆளும் அவ ட்ரெஸ்ஸும்.” அவளைக் காயப்படுத்தி விட்டே, அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

 

அடர் குங்குமநிறத்தில் லெஹெங்கா அணிந்திருந்த அவளோ, பார்வைக்கு மிக லட்சனமாகதான் இருந்தாள். ஆனால் அதை பாராட்ட இந்தர் ஒன்றும் பிரசாத் அல்லவே. இந்தர் தன் மகளை வார்த்தையாடியதை வேலுப்பாண்டி கேட்டுவிட்டார்.

 

வட்டமேசையில் சிவகாமி, நடராஜன் இருவரும் சற்று ஒதுக்குப் புறமாக அமர்ந்து ஏதோ பொதுப் பட பேசிக் கொண்டிருந்தனர். “மாமா, அந்தப்பையன் எம் பொண்ண ரொம்ம காயப்படுத்துறவ!” என கூறிக்கொண்டு இருக்கையிலமர்ந்தார் வேலு. “என்னவே சொல்லுத?” என்றார் நடராஜன். “ரெண்டு நாளா பார்குறேன் கவிமாவ, காயப்படுத்துறப் போலவே நடந்துக்குறான். எனக்கு வார ஆத்திரத்துக்கு கொண்ணு பொலி போடுவேன்.” வேலு நடந்தவற்றைக் கூறினார்.

 

சிவகாமியின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தது. திருமணமாகி ஒரு வருடத்தில் இசைப்பிரியா பிறந்த பின் பதினாறு வருடங்கள் கழிந்து பிறந்த ஒற்றை ஆண் வாரிசு பிரசாத். இப்போது எழுபதுகளின் ஆரப்பத்திலிருக்கும் இத் தம்பதிகளுக்கு, எப்போதும் பிரசாத் மீது அதீத பிரியம். அவன் ஆசைப்படியே, எவ்வளவோ கட்டுப்பாடுகளை மீறி சினிமாவில் நடிக்கவிட்டனர். அவனுக்காகவே ஊரை, சொத்தை நம்பிக்கையானவரிடம் ஒப்படைத்து சென்னையில் குடியேரினர். ஆனால் இன்று ஏதோ தாழ்த்தப்பட்ட உணர்வு மூவரிடமும்.

 

“ஊர்காரவக என்ற முன்ன, சத்தம் போட்டுக்கூட பேசமாட்டாகவே. ஆனா இன்னைக்கு நாக்கு மேல பல்லப் போட்டு காதுபட தூத்துராக. எம் மானம் மருவாத, கௌரவம்….” ஏதோ பேசிக் கொண்டிருந்த நடராஜன், நெஞ்சில் சுருக்கென்ற வலியினால், நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டார்.

 

வரவேற்பு நிகழ்ச்சி முடிவடைய நல்லிரவுக்கு மேலான காரணத்தினால் விடுதியிலேயே அறையில் தங்கிவிட்டு காலையில் வீடு செல்லும் நோக்கத்தில் அறைகளில் அடைந்து கொண்டனர். ரகுவரனும், கௌரியும் வரவேற்புக்கு வந்த நட்புக்களுடன் உறவாடி, பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்ததால் பிரசாத்தின் பெற்றவருடன் அதிகமாக நேரம் செலவிடவில்லை. 

 

மேலும் அந் நல்லிரவிலேயே “ஊருக்கு பொண்ணு, மாப்பளய அழைச்சிட்டு வாங்க. அவசரக் கல்யாணம் போட்ட வேலைகள் நிறைய இருக்கு.” என ஏதேதோ கூறிவிட்டு, இந்தரிடம் கண்களால் சைகையிட்டு டெல்லிக்கு பறந்தனர்.

 

அடுத்த நாள் விடியலின் போது, உதட்டின் சிறு முறுவலுடன் எழுந்த அமரா, குறுக்காக வைக்கப்பட்ட தலையணைக்கு மறுபக்கம் முதுகைக் காட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் பிரசாத்தை நோக்கினாள். ‘தேவ் பிரசாத்… நடராஜன், சிவகாமியின் செல்வன், இரண்டாம் பண்னையார் வேலுப்பாண்டியின் மருமகன்’ உள்ளுக்குள் முணுமுணுத்துவிட்டு, தனது பஞ்சுப் பாதணியை அணிந்தாள். அதிலிருக்கும் பூனையின் ஓவியத்தைப் பார்த்து “லூக்கா” என இதழ் பிரித்தாள்.

 

நீலாங்ரை கடற்கரையின் முன் இருபதடி மதில்களுக்குப் பின்னால் உயர்ந்து நின்ற பிரசாத்தின் வீட்டின் வாசலில் ஆலம் சுற்றபட்டு உள் அழைக்கப்பட்டனர் திருமண ஜோடிகள். இந்தர், அமரா இருவரும் வீட்டையும், வீட்டிற்க்கு முன் கார்கள் நிருத்தப்பட்டிருந்த இதர அறையையும் ஏளனமாக பார்த்தனர். 

 

கீழ் தளத்தில் வரவேற்ப்பறை, பூசை, சமயல் அறைகளும் மூத்த தலைமுறைக்கான அறைகளும் மேற்தளத்தில் இளையவர்களுக்கான அறையுடன் உடற்பயிற்சி கூடமும் சிறிய திரையரங்கு அறையுமாக வடிவமைக்கப்பட்ட அழகிய வீடு. இருப்பினும் அமராவுடைய டெல்லி வீடு பரப்பிளும் செல்வத்திலும் இதனை விட பல மடங்கு பெரியது என்பதை அவர்கள் இருவரின் பார்வையும் பூடகமாக காட்டியது.

 

அதிக பேச்சுவார்தைகள் இன்றி அவரவர் அறைகளில் புகுந்து கொண்டனர். இசையோ இத்துடன் திருமணத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட விடுப்பு முடிவடைந்த பட்சத்தில் வைத்தியசாலைக்குச் சென்றாள்.

 

சென்னை ‘வீ கெயர்’ வைத்தியசாலையில் வைத்திராகவும் அதே வைத்தியசாலைக்கு சொந்தமான கல்லூரியில் எலும்பியல் பிரிவில் மேற்படிப்பபையும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள் அவள். 

 

உள்நோயாளர்களை பரிசோதித்து விட்டு, அவளுடைய அறைக் கதவை திறந்து உள்நுழைந்தவள் கண்ட காட்சி, கடுதாசிகள் மீது பாரமேற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த குண்டினை ஒருவன் பந்து போல தூக்கி எறிந்து மீண்டும் பிடித்து விளையாடுவதே.

 

கொடுத்துவாங்க நீ நினைக்க,

எடுத்து வாழத்துடிக்கும்

என் இதயத்தை வதைக்காதே அன்பே!

 

அவள் வீழ்த்தினாள்….