IMG-20210214-WA0021-fbe77ceb

மெல்ல யாழ் மீட்டுதே

யாழ்-1

டெல்லி.

இந்தியாவின் தலைநகரம். கி.மு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே மக்கள் வாழ்வதாக தொல்லியல் சார்புகள் கொண்ட டெல்லி இப்போதும் அப்படியா இருக்கிறது?

பதினொரு மில்லியன் மக்கள் தொகையோடு பரபரப்புடன் இயங்கிக் கொண்டு, இந்தியாவில் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது.

யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள டெல்லி மாநகரம் தற்போது அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக அமைந்துள்ளது.

மக்கள் போவதும் வருவதும், போக்குவரத்து நெரிசலும், வாகனங்களின் மாசும், அனைத்தும் சேர்ந்து தூய்மைக்கேடாய் ஆகிக் கொண்டிருப்பது வருத்தத்திற்கு உரியதே!

அந்த டெல்லி மாநகரின் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு, டெல்லியின் பரபரப்பைவிட அதீத பரபரப்புடன், டாக்சியில் அமர்ந்திருந்தாள் ராஷ்மிகா.
“பையா, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” டாக்சி டிரைவரிடம் இந்தியில் கேட்டாள்.

“தர்ட்டி மினிட்ஸ்” பதிலளித்துவிட்டு அவர் திரும்பிவிட ராஷ்மிகாவிற்கு திக்கென்று இருந்தது.

தலையில் கைவைத்துக் கொண்டவள் ‘போச்சு’, ‘போச்சு’, ‘இன்னிக்கு சாமி ஆடப்போறா அவ’ என்று, அவளை நினைத்து மனதிற்குள் முணுமுணுத்தாள் ராஷ்மிகா.

டிரைவரிடம் விரைவாகப் போகச்சொல்லவும் அவளால் முடியவில்லை. அவளிற்கே தெரியும் டெல்லி ட்ராஃபிக் பற்றி! தன் நிலையை எண்ணி நொந்துகொண்டவள், இன்று அவளிடம் நன்றாக மாட்டிவிட்டோம் என்று தலையில் குட்டிக்கொண்டாள். 

ஆனாலும், “பையா, டோன்ட் மேக் இட் மோர் தன் தர்ட்டி மினிட்ஸ்” என்று சொல்ல, அவரும் யோசனையுடனே தலையை ஆட்டினார்.

அவர் யோசனையாய் தலையாட்டுவதைப் பார்த்தவளுக்கு, ‘அய்யய்யோ, இவரு தலை ஆட்றதைப் பார்த்தா லேட்டாகிடும் போலயே!’ எண்ணியபடி அமர்ந்திருந்தாள். ஆனால், அவளது எண்ணத்தைப் பொய்யாக்கி, அவளை அந்தப் பள்ளியின் முன் ஐந்து நிமிடத்திற்கு முன்னேயே இறக்கிவிட்டார் டாக்சி டிரைவர்.

வந்து சேர்ந்த நிம்மதியில் அவரசரமாக இறங்கியவள், டிரைவரிடம் காசைத் தந்து நன்றியை உரைத்துவிட்டு, வேகவேகமாக அந்த ஆர்.கே புரத்தில் அமைந்திருந்த ‘டெல்லி பப்ளிக் ஸ்கூல்’ உள்ளே நடக்க ஆரம்பித்தாள் ராஷ்மிகா.

உள்ளே நடக்கநடக்க ஆங்காங்கே போட்டிருந்த கண்களைக் கூசும் கலர் லைட்டிங்ஸும், கண்களைப் பறிக்கும் சாக்லேட் ஸ்டால்ஸும், கண்களை மின்ன வைக்கும் க்ராண்ட் ஸ்டேஜ்களையும், பார்த்து சின்னவாண்டைப் போல, ஆர்வமுடன் ஆர்ப்பரிப்பாக எழுந்த குஷியை அடக்கமுடியாமல் தவித்தாள் ராஷ்மிகா. 

அதையும் மீறி, ‘அய்யோயோ, அல்ரெடி லேட், அவ வேற திட்டுவாளே!’ மூளையில் நச்சென்று உறைக்க, மீண்டும் வேகநடையுடன் உள்ளே நடந்தாள் ராஷ்மிகா.

அந்த அறைக்குள் ராஷ்மிகா நுழைய,“ஐய்ய்ய், ராஷ்மிகாஆஆ கேம்” ஒரு சின்னஞ்சிறு வாண்டு ஆர்ப்பரிக்க,

“ஹேய்ய்ய்ய்!” அங்கிருந்த அனைத்து வாண்டுகளும் குஷியுடன் கத்த, அதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல, ஒருத்தி மட்டும் கையைக் கட்டிக்கொண்டு தன் ஒருகாலை மட்டும் தரையில் தட்டிக் கொண்டு ராஷ்மிகாவைப் பார்வையாலே துளைத்துக்கொண்டிருந்தாள்.

அவளின் பார்வையின் வீரியத்தை உணர்ந்த ராஷ்மிகாவோஅவளின் அருகில் சென்று அவளை நோக்கிக் கீழே குனிய, ‘க்ஹூம்’ அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.

“யாழ்!” என்று அழைத்தாள் ராஷ்மிகா.

“..” பதிலில்லை.

“ஏய்! இங்க பாருடி” ராஷ்மிகா அவளைப் பிடித்துத் திருப்ப, அவளோ சண்டிராணியாய் சிலுப்பிக்கொண்டு நின்றாள்.

“டோன்ட் டாக் டூ மீ” என்றவள், அங்கிருந்த அவள் உயரத்திற்கு ஏற்றவாறு இருந்த சேரில் கோபத்தோடு அமர்ந்து கொண்டாள்.

குட்டி வால்கனோ(valcano) ஆயிற்றே அவள்!

ராஷ்மிகா அங்கிருந்த கூட்டத்தைத் திரும்பிப்பார்க்க அவர்களோ, ராஷ்மிகாவைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி கேலியாக புன்னகைத்தனர்.

பின்னர் எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்க்கத் துவங்க (மேக்கப்போட) ராஷ்மிகா தன் செல்லமகள் யாழ்மொழியின் அருகே சென்றாள்.

ஒருகையை தாடையில் வைத்து, முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த மகளின் அருகில் சென்று, அவளைப் போலவே மகளைப் பார்த்தபடி அமர்ந்தாள் ராஷ்மிகா.

“யாழ்…” ராஷ்மிகா இழுக்க,

“பேசாதிங்க ம்மா!” கோபத்தோடு சிணுங்கினாள் யாழ்மொழி.

“சாரிடி! ட்ராஃபிக்ல மாட்டிட்டேன்டி நான். அதான் லேட் யாழ்” மகளிடம் கெஞ்சினாள் ராஷ்மிகா.

“அங்க பாரும்மா. எல்லாரோட அம்மாவும் சீக்கிரம் வந்துட்டாங்க. நீதான் லேட்” குற்றம்சாட்டிய செல்ல மகளிடம், அவளால் எதுவும் பேச முடியவில்லை. மகளின் கோபத்தில் முகவும் வாடிவிட்டது ராஷ்மிகாவிற்கு.

“சாரிடி தங்கம். அம்மா இனி இப்படி பண்ணமாட்டேன்” இருகைகளையும் காதில் வைத்து சோர்ந்த முகத்துடன் கேட்க, யாழிற்கு அவள் அம்மாவின் முகத்தை அப்படிக் காணமுடியவில்லை.

“சாரிம்மா! சாரி! சிரிங்க” அமர்ந்திருந்த இடத்திலிருந்து இறங்கி ராஷ்மியைத் தாவிக் கட்டிப்பிடிக்க, அவளும் மகளை கட்டிக்கொண்டு அவளின் பட்டு போன்ற மிருதுவான கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

“சரி வா. ரெடியாகலாம்” ராஷ்மிகா அழைக்க, யாழின் கருமணிகள் அவளின் புதுட்ரெஸைத் தேடி மின்னின. இன்று யாழின் பள்ளியில் மாலை நான்குமணிக்கு நடக்கவிருக்கும் ஆன்யுவல் டேவிற்குத்தான் இத்தனை அக்கப்போர்.

“ம்மா, இந்த லிப்ஸ்டிக் வேண்டாம். ரெட் போட்டுக்கிறேன்” மகள் கண்களைச் சுருக்கிக்கேட்க, முதலில் அதிர்ந்து பிறகு சிரித்தவள்,

“சரிடி. வா பக்கத்துல..” மகளை அருகில் அழைத்து ‘ஆ’ காட்டச் சொன்னவள், பிரிந்த அந்த அழகிய மலர் போன்ற மென்மையான அழகிய இதழில், லிப்ஸ்டிக்கைப் போட்டுவிட்டு கழுத்து வரை இருந்த முடியை நன்றாக சீவி, தலையில் ஒரு ஹேர்பாண்டை மாட்ட சிட்டாய் இருந்தாள் அவளின் செல்லவாண்டு.

“நல்லா இருக்காம்மா?” தன் அன்னையின் செல்போனில் முன்னால் இருந்த கேமராவைப் பார்த்தபடியே கேட்ட, மகளை அழகிய உருவைக் கண்டு அவளின் மனமோ சிறகாய் அடித்தது.

“க்யூட்டா தான்டி இருக்க… சீன் போடாம போ” மகளிடம் வம்பிழுக்க,

“நானா? நீதான் சீன். உன்னவிட நான் க்யூடுன்னு, கண்ணு வைக்காதே தாய்க்கிழவி!” சொல்லியவாறே, அங்கிருந்து ஓட்டம் பிடித்து தன் படையுடன் சேர்ந்து கொண்டாள் அந்த நான்குவயது சண்டிராணி.

ராஷ்மிகா தலையில் அடித்துக்கொண்டாள். தெரியாமல் தன் அன்னையைத், ‘தாய்க்கிழவி’ என்று ஒருநாள் யாழின் முன்னால் கூப்பிட்டதை எண்ணி இப்போது நொந்துகொண்டாள்.

யாழ்மொழியின் வகுப்பாசிரியர் அறைக்குள் நுழைந்தவர், “நாங்க இப்போ கிட்ஸை மெயின் ஸ்டேஜ்க்கு கூட்டிட்டுப்போறோம். அவங்க டான்ஸ் ப்ரோக்கிராம் முடிஞ்சதும் நீங்க வந்து என்கிட்ட இன்பார்ம் பண்ணிக்கூட்டிட்டு போயிடுங்க!” பாதி ஆங்கிலத்திலும் இந்தியிலும் சொல்லிக்கொண்டு எல்லாக் குழந்தைகளையும் கூட்டிச்செல்ல,

ராஷ்மிகாவும் பெற்றோடு பெற்றோராக சென்று ஸ்டேஜ் முன்னால் அமர்ந்துவிட்டாள். தினமும் மாலை வந்து யாழைக் கூட்டிப்போக வருவதால் அவளுக்கு ஓரளவுக்கு சில பெற்றோரோடு பழக்கமிருந்தது. அதனால் கொஞ்சம் பேசிக்கொண்டு இருந்தாள்.
“குட் ஈவ்னிங் டூ ஒன் அண்ட் ஆல் ப்ரசன்ட் ஹியர். வீ அண்ட் அவர் மேனேஜ்மென்ட் வெல்கம் யூ வார்ம்லி டூ அவர் 75th ஆன்யுவல் டே” என்று ஆரம்பிக்க, எல்லோரும் ஸ்டேஜ் பக்கம் திரும்பினர். ப்ரின்சிபால், கரெஸ்பான்டன்ட் அனைவரும் பேசிமுடிக்க ஒருவழியாக ஆறுமணிக்கு மேல் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

“ஹியர் வீ ஹாவ் அவர் எல்.கே.ஜி பட்ஸ் டூ ஹாவ் எ டான்ஸ் பர்ஃபாமன்ஸ்…” ஒரு ஆசிரியர் சொல்லி முடிக்க, ஸ்டேஜின் ஸ்கீரின் இரண்டு பக்கங்களில் பிரிந்து செல்ல, ஸ்டேஜின் நடுவில் இருந்த குட்டிகுட்டிக் வாண்டுகள் ரெட் கலர் ஃபுல் ஃப்ராக்கில் நின்றிருந்தனர்.

பாடல் ஒலிக்க ஆரம்பிக்க ஒவ்வொரு வாண்டும் ஒவ்வொரு ஸ்டெப்பை ஒவ்வொருமாதிரி கோணத்தில் போட்டனர். மழலையில் தவறுகள்கூட அழகுதான் என்பதற்கேற்ப ஆளுக்கொரு ஸ்டெப் போட அதை ரசித்தபடி நின்றிருந்தனர் அந்தக் குழந்தைகளின் பெற்றோர்.

அதில் ராஷ்மிகாவும் ஒருத்தி.

யாழ்மொழியின் ஒவ்வொரு அசைவுகளையும் செல்போனில் படம்பிடித்தபடி தன்மகளின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

“க்யூவ் எ வெரி பிக் க்ளாப்ஸ் ஃபார் திஸ் யங் லிட்டில் ப்ளார்ஸ்” அவர்கள் நடனம் முடிய, ஸ்டேஜில் இருந்த ஆசிரியர் கைதட்டிச் சொல்ல எல்லோருடைய கைத்தட்டல்களையும் அந்த மழலைகள் வாங்கினர்.

எல்லோரும் தங்கள் குழந்தைகளை நோக்கிப்போக ராஷ்மிகாவும் யாழ்மொழியைச் சென்று “சூப்பர்டி.. சூப்பரா இருந்துச்சு!” என்று கையில் தூக்கிக்கொண்டாள்.

“நான் அவ்ளோ டாலன்ட்மா. ஐம் ப்ரெய்னி டூ” அன்னையிடம் பெருமை பேசினாள் யாழ்மொழி.

“ஏண்டி? அப்ப எனக்கெல்லாம் மூளையில்லையா?” கையில் தூக்கி வைத்துக்கொண்டே, மகளை கேள்வி கேட்டு ராஷ்மிகா முறைக்க, யாழோ அவளின் பிஞ்சுக் கைகளை தன் வாயில் வைத்து நக்கலாக சிரித்தாள்.

“ம்மா, உங்ககிட்ட இருக்கா” என்று கேட்டு,“ஹாஹாஹா!” என்று தன்ஜோக்கிற்கு தானே தலைமேலே தூக்கி வானத்தைப் பார்த்து சிரித்தாள்.

மகளின் சிரிப்பில் மெய்மறந்து அவளை ரசித்தவள், “இரு இரு. வீட்டுக்கு போயிட்டு பாத்துக்கறேன்” மகளை பொய்யாக மிரட்டியவள், யாழின் க்ளாஸ் டீச்சரிடம் சொல்லிவிட்டு மகளுடன் ஸ்டேஜிலிருந்து வெளியே வந்தாள் ராஷ்மிகா.

“ம்மா, என் ப்ரண்ட்ஸ் கூட விளையாடறேன்” யாழ்மொழி ஆரம்பிக்க,

“வீட்டுக்குப் போலாம் யாழ்.. இல்லன்னா லேட்டாகிடும்” ராஷ்மிகா கொஞ்சம் ஸ்டிரிக்டானக் குரலில் கண்டிக்க,

“ம்மா, ப்ளீஸ். நாளைக்கு இருந்து சம்மர்லீவ். நான் அவங்களைப் பார்க்க முடியாது. டூ மன்த்ஸ்-க்கு” யாழ் சிணுங்க ஆரம்பிக்க,
“சரி. ஒன்லி ஃபார் ட்வென்ட்டி மினிட்ஸ்” கீழே யாழை இறக்கிவிட, அடுத்தநொடியே, தனக்காக காத்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்துடன் போய் சேர்ந்துகொண்டாள் அந்த சின்னவாண்டு.

மகள் விளையாடிக் கொண்டிருந்த அழகைக் கண்களால் ரசித்து நிரப்பிக் கொண்டிருந்தவள், அவளிற்கு ஏதாவது வாங்கலாமென்று சாக்லேட் ஸ்டாலிற்குள் நுழைந்தாள். மகளுக்குத் தேவையான ரொம்பப் பிடித்த வெரைட்டியான சாக்லேட்ஸை வாங்கியவள், தனக்கும் சாக்லேட்ஸ் பிடிக்குமென்பதால் ஒருபை நிறைய சாக்லேட்ஸை அள்ளிப்போட்டு, வாங்கிக்கொண்டு வெளியே வந்தாள்.

வந்தவள் மகள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தைப் பார்க்க, அவளைத் தவிர எல்லா வாண்டுகளும் இருப்பதைக் கண்டு திகைத்தாள்.

ஒரு நிமிடம் அங்குமிங்கும் திரும்பிப் பார்க்க அவள் மகள் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து,“குட்டிக்குரங்கு! எப்பப் பாரு என் ஹார்ட்பீட்ட அதிகமாக்கறதே இவ வேலையா போச்சு!” அருகில் சென்று அவளைத் தூக்கினாள்.

நல்லவேளை யாழ் அவள் க்ளாஸ்மேட்டின் அம்மா பினிதாவுடன்தான் பேசிக்கொண்டுடிருந்தாள்.

“ஏண்டி ஒரு இடத்துல நிக்கமாட்டியா நீ?” மகளைக் கேட்க, “ம்மா, ஆன்ட்டிகிட்ட பேசிட்டு இருந்தேன். நீங்கதான் பயந்துட்டீங்க” தலையை சிலுப்பினாள்.

“நல்லா சமாளி” என்றவள்,“ஹாய் பினிதா எப்படி இருக்கீங்க?” இந்தியில் கேட்டபடி அவரிடம் திரும்பினாள்.

இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து, பேசிக்கொண்டிருக்க “ஆன்ட்டி!” என்றபடி எல்லோரும் வர, ராஷ்மிகா அவர்களுக்குத் தன்கையில் இருந்த சாக்லேட்ஸ்களைத் தந்தாள். இப்படித்தான் எல்லாக் குழந்தைகளிடமும் அன்பாக இருந்து, அவர்களைத் தன்பால் இழுத்து வைத்திருந்தாள்.

அவர்களுக்கும் யாழ்மொழி எப்படியோ அப்படித்தான் ராஷ்மிகாவும் ஒரு பெஸ்ட் ஃப்ரண்ட்.

பாதிக்குப்பாதி காலியாகிவிட அனைவரிடமும் சொல்லிவிட்டு,“பை பினிதா” என்று கிளம்பினாள். மீண்டும் சாக்லேட் ஸ்டாலிற்குள் புகுந்து அம்மாவும் மகளும் சேர்ந்து மறுபடியும் ஒரு பை நிறைய சாக்லேட்சை வாங்கிக்கொண்டு கிளம்பினர்.

மகளைத் தூக்கிக்கொண்டு ராஷ்மிகா வெளியேவர அவள் முன்னேயே புக் செய்த டாக்சி காத்துக்கொண்டிருந்தது. உள்ளே ஏறிக்கொள்ள அவர்கள் அப்பார்ட்மெண்ட்ஸ் பகுதியிருந்த, ‘த்வாரகா’வை நோக்கி கார் பறந்தது.

தனது அப்பார்ட்மெண்ட்ஸ் வந்தவுடன் இறங்கிய ராஷ்மிகா யாழைக் கீழேயிறக்கி பணத்தைத் தந்து டாக்சியை அனுப்பி வைத்துவிட்டு, இருவரும் லிப்டின் உள்ளே புகுந்தனர்.

“என்னடி சைலன்ட்டாவே வர?” அதிசயமாய் வாயை மூடிக்கொண்டு வரும் மகளிடம் கேட்டாள் ராஷ்மிகா.
“டய்ர்டும்மா” கையைத் தூக்கி உடம்பை வளைத்தவளைக் கண்டு, வந்த சிரிப்பை அடக்கி,

“ஆமா, அப்படியே வேலை வெட்டி முறிச்சிருக்க. டயர்ட்டாமா” கிண்டலடித்தவள்,“எனக்கு தான்டி டயர்டா இருக்கு!” ராஷ்மிகாவும் வேலையின் காரணமாக சோம்பலை முறித்தாள்.

“ஆமா, இந்த நியூ டெல்லியவே நீங்கதான் காப்பாத்தீட்டு இருக்கீங்க” அன்னையின் காலை வாரியவள், லிப்ட் கதவு திறந்தவுடன் டக்கென்று வெளியே ஓடினாள்.

இரண்டுநொடி கழித்தே தன்மகளின் பேச்சு ராஷ்மிகாக்குப் புரிய,“ஏய் நில்லுடி!” பின்னேயே துரத்திக்கொண்டு ராஷ்மிகா ஓட, யாழ்மொழியும் சிக்காமல் முன்னால் ஓடி அவர்கள் ப்ளாட்டின் முன்சென்று நின்றாள்.

தன்முன் மூச்சு வாங்க நின்ற அன்னையைக் கண்டவள், கேலியாய் வாயைத்திறந்து சிரித்தாள். அவளைக் கண்டு முறைக்க முயன்று தோற்ற ராஷ்மிகா, மகளின் தலையை செல்லமாய் பரபரவென்று கலைத்து விட்டுக் காலிங்பெல்லை அடித்தாள்.

கதவு திறக்க, “லஷ்மிமா!” என்று ஒருசேர அம்மாவும் மகளும் கூவியபடி உள்ளே நுழைந்தனர். ராஷ்மிகா, யாழ்மொழி தங்கியிருக்கும் ப்ளாட்டில் வேலைக்கு இருக்கும் பெண்மணிதான் இந்த லஷ்மியம்மா. ஏனோ அவரும் தமிழ் என்பதால், இருவரின் மீதும் அந்த முதியவருக்கு பிரியம்.

காரணம் அவரை வேலையாள் போன்று ஒருபோதும் ராஷ்மிகாவும், யாழ்மொழியும் நடத்தியது இல்லை.
“என்னம்மா இவ்ளோ லேட் ஆயிடுச்சு?” லஷ்மி கேட்க, “இதோ இவதான் ஃப்ரண்ட்ஸ்கூட விளையாடணும்ன்னு கேட்டா லஷ்மிமா. அதான் லேட்” ஷோபாவில் எல்லாவற்றையும் வைத்தபடி பதிலைத் தந்தாள் ராஷ்மிகா.

“லஷ்மிமா பசிக்குது” வயிற்றில் கை வைத்து சுற்றியபடி பாவமாகக் கேட்ட யாழை கண்டு உருகியவர், “நீ ட்ரெஸ் மாத்திட்டு வாடா சாமி. நான் உனக்கு சாப்பிட எடுத்து வாரேன்” சமையல் அறைக்குள் உள்ளே புகுந்து கொண்டார்.

ராஷ்மிகாவும் யாழ்மொழியும் உடையை மாற்றிக்கொண்டு வர, அவர்களுக்கு உணவை பரிமாறினார் லஷ்மி. சப்புக்கொட்டி சாப்பிட்ட இருவரும்,“ஆஹா ஓஹோ!” என்றபடியே அந்த சாப்பாத்தியையும் சென்னாவையும் காலி செய்தனர்.

“நீங்களும் சாப்பிடுங்கம்மா” ராஷ்மிகா சொல்ல, “நீங்க சாப்பிடுங்கடா. நான் அப்புறம் சாப்பிடறேன்” என்று மறுத்தவர் அவர்களுக்கு தேவையானவற்றை பக்கத்தில் இருந்து பரிமாறினார். சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவிக்கொண்டு மகளுக்கும் கையை கழுவிவிட்டு வாயைத் துடைத்துவிட்டாள் ராஷ்மிகா.

“லஷ்மி ம்மா மறக்காம சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டுட்டு தூங்குங்க” என்று மகள் பெரிய மனுஷி போல பேசிக்கொண்டிருப்பது தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ராஷ்மிகாவிற்குக் கேட்டது. சமையலறையில் இருந்து வெளியே வந்தவள்,

“மேடம், அதெல்லாம் லஷ்மிமா கரெக்டா பண்ணிடுவாங்க. நீங்க வந்து இந்தப் பாலைக் குடிங்க” டம்ளரை நீட்ட யாழின் முகமோ அந்த டம்ளரைக் கண்டவுடன் கோணலாக மாறியது.
“ம்மா!” யாழ் சிணுங்க, “நீ குடிச்சாதான் சாக்லேட்ஸ் யாழ்” ராஷ்மிகா அதட்ட முகச்சுளிப்புடனே வாங்கி மொடக்மொடக்கென்று பாலைப் பருகினாள் யாழ்மொழி.

பருகியவளின் வாயின்மேல் வெள்ளையாய் மீசை அமர்ந்திருக்க, அதைக் கண்டு சிரித்தவள், “சரிவா! சாக்லேட் சாப்பிடலாம்” என்றழைத்தாள் ராஷ்மிகா.

அறைக்குள் நுழையும் முன் இருவரும் , “லஷ்மிமா குட் நைட்” சொல்லி விட்டுப் போக, அவரும் சாப்பிட்டுவிட்டு அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றார்.

“எனக்குதான் இந்த சாக்லேட்” ராஷ்மிகா மகளிடம் வம்பிழுக்கத் துவங்க,

“ம்மா! அது எனக்குதான்” யாழ்மொழி சிணுங்கினாள்.

“நோ நோ, எனக்கு” யாழ்மொழி மீண்டும். ஒரே ஒரு வெரைட்டி இருந்த அந்த கோகோ சாக்லேட் வகைக்கு, அம்மாவும் மகளும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

“ம்மா! எவ்ளோ சாக்லேட்ஸ் இருக்கு. நீங்க அதை சாப்பிட்டுக்கோ”

“போடி முடியாது. நீ அதையெல்லாம் சாப்பிடு” என்று ராஷ்மிகா சாக்லேட் கவரைப் பிரிக்கப்போக, “ம்மா!” என்று சின்னத் தொண்டை கிழியக் கத்தியவள், அவளின் அன்னையின் மேல் சீறிப் பாய்ந்து சாக்லேட்டைப் பிடுங்கப் பார்த்தாள். 
மகளை அப்படியே அள்ளி கட்டிலில் சாய்த்து ராஷ்மிகா குறுகுறுப்பு மூட்ட, “ம்மா.. ம்மா.. ஹா.. ஹா…!” என்று அந்த அறை அலற சிரிக்க ஆரம்பித்தாள் யாழ்மொழி.

மகளை ரசித்தவள், “சரி, இந்தா சாக்லேட்” கையை நீட்ட, வாங்க வந்த மகளிடம் இருந்து சாக்லேட்டை பின்னே நகர்த்தினாள்.

என்னவென்று பார்த்த மகளிடம், “ஒரு கிஸ் தா அம்மாக்கு” என்று கேட்க, தன் பூவிதழால் அன்னையின் கன்னத்தில் இதழொற்றியவள், அன்னையின் கழுத்தை கட்டியவள், “லவ் யூம்மா!” என்றாள்.

எப்போதுமே இருவரும் சொல்லிக் கொள்வதுதான். அவர்கள் நிலையை கலைக்கவென்றே ராஷ்மிகாவின் செல்போன் அலறியது.

“நான்தான் எடுப்பேன். நான்தான் எடுப்பேன்” பெட்டில் இருந்து இறங்கி ஓடிய மகளிடம், “ஏய்! பாத்துடி” என்றாள் ராஷ்மிகா.

ஃபோனை எடுத்துப் பார்த்தவள், “ஹை!” என்று குஷியில் கத்திவிட்டு ஃபோனை எடுத்துக் காதில் வைத்தாள். அவளின் குஷியிலேயே யாரென்று ராஷ்மிகா தெரிந்து கொண்டாள்.

“குஜிலி!” ஃபோனை எடுத்தவுடன் யாழ்மொழியை செல்லமாய் அழைத்தான் ஒருவன். அந்த ஒருவன் வேறுயாருமல்ல. அவளுடைய தாய்மாமன் ஹர்ஷவர்தன்.

“சொல்லு மாமா” யாழ்மொழி குஷியாகிவிட,
“எப்படி இருக்க அக்கா மகளே?” கேட்டான் ஹர்ஷவர்தன்.

“நான் நல்லா இருக்கேன் மாமா. நீங்க?” வினவியவளை அவனும் வம்பிழுத்தான்.

“இந்த மாமன் நீயில்லாம நல்லாயில்ல குஜிலி. பேசாம மாமனை வந்து சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ” நெஞ்சில் கைவைத்தபடி, அந்தப் பக்கமிருந்து அவன்பேச, “நான்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் போ. நீ பாட்பாய்” என்றாள் யாழ்மொழி சீரியஸாக. அவ்வளவு சீரியஸ் குரலில்.

ஒருவேளை மாமன் மெய்யாகவே கேட்கிறான் என்று நினைத்தாளோ என்னமோ!

“நானா? ஏய், என்ன குஜிலி இப்படி சொல்லிட்ட?” வருத்தமாக ஹர்ஷா கேட்க,

“ஆமா. அன்னிக்கு நீங்க டெல்லி வந்தப்ப, பக்கத்து பில்டிங் பூஜாசர்மா அக்காகூடப் பேசிட்டு இருந்தீங்க இல்ல? லிப்ட் பக்கத்துல நின்னு” குற்றம்சாட்டிய யாழ், மாமனின் குட்டை உடைக்க,

“ஷ், குஜிலி! அதெல்லாம் வெளில சொல்லக்கூடாது” என்று அக்கா மகளின் வாயை அடைக்கக் கெஞ்சினான்.

“ஹா.. ஹா! அப்ப தாத்தா பாட்டிகிட்ட சொல்றேன் மாமா” குழந்தை சிரிக்க, அவனோ, “குஜிலில! மாமா உனக்கு இங்க வந்தா ஐஸ்க்ரீம் வாங்கி தருவேனாம். ப்ளீஸ்!” என்று கெஞ்சினான்.

“அந்த பயம்” யாழ்மொழி சொல்ல, அவ்வளவு நேரம் அவர்கள் பேசியதைக் கேட்ட ராஷ்மிகா, மகளிடமிருந்து ஃபோனை வாங்கினாள்.

“ஏய்! என்னடி என் தம்பிய ரொம்பத்தான் மிரட்டுற?” என்று மிரட்ட,

“பெரிய்யய தம்பி. நீயும் உன் தம்பியும் ஹாஹா” பயப்படாமல் சொன்ன யாழ்மொழி, போய் பெட்டில் அமர்ந்துகொண்டு கோகோ சாக்லேட்டை பிரிக்க ஆரம்பித்தாள்.

“அடிப்பாவி!” வாய்விட்டே சொன்னவளைத் தம்பியின் குரல் கலைத்தது.

“பாத்தியா, உன் புள்ளையை. எப்பா! எனக்கு கல்யாணம்னா கல்யாணப் பொண்ண கொஞ்சம் லேட்டாதான் காமிக்கணும் அக்கா. இல்லன்னா அவ்வளவுதான் என் மானத்தைக் கப்பல்ல ஏத்திடுவாபோல” ஹர்ஷா சீரியஸாகக் கூற, ராஷ்மிகா சிரித்தாள்.

“டேய்! நான்தான் சொல்லிருக்கேன்ல. அவ, நீ எது பண்ணாலும் நோட் பண்ணுவா. உன் வாலை டெல்லி வந்தா சுருட்டி வைன்னு” என்றவள், “அதுவுமில்லாம, நீ அந்த பூஜாசர்மாவுக்காக வந்த மாதிரிதான் இருந்துச்சு, லாஸ்ட் டைம் வந்தப்ப. கடலை போடறதுக்கு ஒரு அளவுக்கு வேணும்டா தம்பி” கலாய்த்தாள் ராஷ்மிகா.

“அய்யோ அக்கா! நீயுமா? நான் சும்மா பேசவேன்க்கா. ஆனா, உன் தம்பி ஒரு நல்ல பையன்னு உனக்குத் தெரியாதா?” பவ்யமாய்ச் சொல்ல ராஷ்மிகா தமையனின் பணிந்த குரலில் சிரித்தாள்.

“இருக்கட்டும்டா ஹர்ஷா. இருக்கட்டும்” ராஷ்மிகா அழுத்தமாகச் சொல்ல சிறிதுநேரம் இருவரும் பேசினர்.

“அக்கா!”

“சொல்லு ஹர்ஷா. ஏதாவது சொல்லணுமா?”

“இருக்கா சித்தி பேசறாங்களாம்” கல்யாணியிடம் ஹர்ஷவர்தன் ஃபோனைத் தந்துவிட்டான்.

“ராஷ்மி!” சந்தோஷமாக ஒலித்தது ராஷ்மிகாவின் அன்னையின் குரல்.

“அம்மா, எப்படிம்மா இருக்க?” ராஷ்மி வினவ,“நல்லா இருக்கேன் ராஷ்மி. பாப்பா ஆன்யுவல்டே டான்ஸ் சூப்பரா இருந்துச்சு. என்ன அழகு” என்று ஆன்யுவல்டே வீடியோவை ராஷ்மிகா, ஹர்ஷவர்தனிற்கு அனுப்பி இருக்க, அதைப் பார்த்துவிட்டு, பேத்தியின் பெருமையைப் பாடினார் அவர்.

“ஆமா, ம்மா” புன்னகை புரிந்தவள் மகளைத் திரும்பிப்பார்க்க யாழோ உட்கார்ந்த இடத்தில் வெறும் சாக்லேட் கவருடன் தூங்கியிருந்தாள்.

தோள்பட்டையின் இடையில் ஃபோனை வைத்துக்கொண்டே, மகளை நன்கு படுக்க வைத்துப் போர்த்திவிட்டு, பால்கனியில் வந்து நின்றாள்.
“ராஷ்மி!” கல்யாணி.

“சொல்லுங்கம்மா” ராஷ்மிகா.

“உன்கிட்ட பெரியப்பா ஏதோ பேசணும்” என்று சிவக்குமாரிடம் ஃபோனைத் தந்துவிட்டார் கல்யாணி.
“ராஷ்மி, நான் பெரிப்பா பேசறேனடா” அவர் பேச,

“சொல்லுங்க பெரியப்பா. நல்லா இருக்கீங்களா?” என்று இருவரும் பரஸ்பரம் விசாரித்துக்கொண்டனர்.

“ராஷ்மி! பெரியப்பா சொன்னா கேப்பதானே?” சிவக்குமார் கேட்க,

“கண்டிப்பா பெரியப்பா” யோசிக்காமல் பதில் வந்தது ராஷ்மிகாவிடம் இருந்து.

“வர்ற புதன்கிழமை நம்ம ஹர்ஷவர்தனுக்கு நிச்சயதார்த்தம்டா. நீ சென்னை வந்துடு” பெரியாப்பாவின் உத்தரவில், ஐந்துநொடி அமைதி காத்த ராஷ்மிகா, “சரி, பெரியப்பா. வரேன்!” என்றாள்.

“சரிம்மா நீ தூங்கு. நாளைக்கு ஃபோன் பண்றோம்” என பேச்சை முடித்த சிவக்குமார், தன் மனைவி விஜயலட்சுமி, கல்யாணி, ஹர்ஷவர்தனிடம் திரும்பி கை கட்டை விரலைத் தூக்கிக் காண்பித்தார். ராஷ்மிகாவை சென்னைக்கு வரவழைக்க சம்மதிக்க வைத்ததே அவர்களுக்கு மிகப்பெரிய சாதனைதான்.
அங்கே டெல்லியில் யோசனையுடனே படுக்கைக்குச் சென்று மகளை அணைத்துக் கொண்டு, அவளின் தலையை கோதியபடி யோசனையில் படுத்தாள் ராஷ்மிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!