யாழ்-10

IMG-20210214-WA0021-6c769cf7

யாழ்-10

“ம்மா எந்திரிம்மா எவ்வளவு நேரம் தூங்குவ” என்று யாழ்மொழி ராஷ்மிகா
கன்னத்தைத் தொட ராஷ்மிகா கண்களை திறக்க முடியாமல் சிரமப்பட்டாள். நேற்று இரவு கடந்த காலத்தில் நடந்ததை அசை போட்டவள் அதிகாலை நான்கு மணிக்கே கண்களை மூடினாள்.

“ம்மா எந்திரி” என்று மறுபடியும் யாழ் எழுப்ப.. மகளின் முகத்தைப் பார்த்தவளுக்கு நேற்று அவளை அடித்தது
நினைவுக்கு வந்தது.

மகளின் குண்டுக் கன்னத்தை
வருடியவள் “ஸாரி டி” என்றாள் மகளிடம்.

யாழ்மொழி புரியாமல் விழிக்க “நேத்து அடிச்சுட்டேன்ல.. அதான் ஸாரி” என்று சொல்ல.. அஸ்வினின் பாதியும்
ராஷ்மிகாவின் மீதியுமான வாரிசு “ம்கூம்” என்று சிலுப்பிக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்றது.

மகளின் செயலில் புன்னகை அரும்ப “ராஷ்மி.. பால் வச்சிருக்க வந்து குடிச்சிரு”
என்றபடி கல்யாணி உள்ளே வர.. ராஷ்மிகாவின் முகம் அஷ்ட கோணல் ஆகியது.

திடீரென உள்ளே ஆஜரான யாழ்மொழி “பாட்டி அன்னிக்கு அம்மா.. நீங்க குடுத்த பாலை குடிக்கவே இல்லை.. வெளில
எடுத்திட்டு போனாங்க” என்று போட்டுக் கொடுக்க.. உள்ளே வந்து கொண்டிருந்த
விஜயலட்சுமி காதிலும் அது விழ “இந்த வீட்டுல பெரிசு சிறுசு எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு” என்றபடி பால்
க்ளாஸுடன் உள்ளே வந்தார்.

“இந்தா பாலைக் குடி” என்று விஜயலட்சுமி ராஷ்மிகா கையில் தர “ஹிஹி.. டெட்டி
ம்மா.. நான் ஒரு ஐந்து நிமிஷத்துல குடிக்கறேன்.. பல் விலக்கணும்” என்று ராஷ்மிகா சொல்ல..

“நாங்க இங்கையே இருக்கோம்.. நீ விலக்கிட்டு வா.. நேத்து யாழ அடிச்சதுக்கு
அதான் பனிஷ்மென்ட்” என்ற விஜயலட்சுமி “இல்லையா யாழ்?” என்று விஜயலட்சுமி யாழிடம் கேட்க…

“ஹை சூப்பர் பாட்டி.. சூப்பர்” என்று விஜயலட்சுமியும் பேத்தியும் ஹைபை அடித்துக் கொண்டனர்.

பல்லை விலக்கிக் கொண்டு வந்த ராஷ்மிகா முகத்தை அஷ்ட கோணலாக வைத்து பாலை பருக அருகில் எடுத்துச்
செல்லும் போதே முகத்தை சுளித்தாள். அதற்குள் சிவக்குமார் அங்கு வர  “பெரியப்பா” என்று ஆரம்பித்து குற்றப் பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தாள் ராஷ்மிகா.

“பிள்ளைக்கு புடிக்கலைனா
விடுங்களேன்.. ஏன் அதப் போட்டு படுத்தறிங்க” என்று அருகில் நின்றிருந்த ராஷ்மிகாவின் கையில் இருந்து பாலை வாங்கினார்.

“அத அப்படியே இந்த குட்டி குரங்குக்கு குடுங்க பெரியப்பா.. குடிக்கட்டும்”
என்றாள் ராஷ்மிகா மகளை வம்பிழுத்த படி.

“நோ…” என்ற யாழ்மொழி தன் பெரிய பாட்டி விஜயலட்சுமியைக் கட்டிக்
கொண்டாள்.

திடீரென நியாபகம் வர “பெரியம்மா ஹர்ஷா வந்துட்டானா?” என்று
வினவினாள் ராஷ்மிகா.

“ம்ம்.. நைட் இரண்டு மணிக்கு தான் வந்தான்.. சாப்பிடவும் இல்ல.. அப்படியே போய் படுத்திட்டான்” என்ற விஜயலட்சுமி யாழ்மொழியைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றுவிட்டார். அவருக்கு
யாரை எங்கே குறை சொல்வது என்று தெரியவில்லை.

“நீ போய் ஹர்ஷா டா பேசு ராஷ்மி” என்று கல்யாணி சொல்ல.. பெரியப்பாவைப்
பார்த்தாள் ராஷ்மிகா.

“போய் பேசு டா..” என்றவர் “அவனுக்கு எங்க மேல தான் கோவத்தக் காட்டத் தெரியும்.. உன் மேல கண்டிப்பா காட்ட மாட்டான் ராஷ்மி” என்ற சிவக்குமார் வேலையைப் பார்க்கச் செல்ல.. கல்யாணியும் அவருடைய வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்.

ஹர்ஷாவின் அறை முன் சென்று நின்ற ராஷ்மிகா கதவைத் தட்டினாள். பதிலே
இல்லாமல் இருக்க.. “ஹர்ஷா” என்று மறுபடியும் தட்டினாள் ராஷ்மிகா.

அக்காவின் குரல் கேட்க வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த ஹர்ஷா “வா
க்கா.. திறந்து தான் இருக்கு” என்று குரல் கொடுத்தான்.

கதவைத் திறந்து கொண்டு ராஷ்மிகா உள்ளே செல்ல ஹர்ஷா தன் தலையை வாரிக் கொண்டு இருந்தான்.

“ஸாரி டா ஹர்ஷா” என்று ராஷ்மிகாவின் குரல் கேட்க.. ஹர்ஷவர்தனோ
திரும்பினான்.

“எதுக்கு அக்கா?” என்று தன் லேப்டாப்பை எடுத்து வைத்தபடி ஹர்ஷா கேட்க..

“என்னால தானே ஹர்ஷா மொதல்ல இருந்து ப்ராப்ளம்” என்று சொன்ன  ராஷ்மிகாவிற்கு குரல் உள்ளே சென்றது.

“அதெல்லாம் உன்மேல எந்த தப்பும் இல்லகா.. தப்பு பண்ணது…” என்று
ஆரம்பித்தவன் ராஷ்மிகா அவனின் சொற்களை கவனிப்பதை உணர்ந்து
நிறுத்தினான்.

“கீர்த்தனா நல்ல பொண்ணு ஹர்ஷா” என்றாள் ராஷ்மிகா தம்பியின் மனநிலையை ஐம்பது சதவீதம் கணித்தபடி.

“என்ன நீ அவளுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ற.. உலக அதிசயம் தான்” என்று  நக்கலாகப் பேசியவன் தனது பேக்கை எடுத்து மாட்டினான்.

“அவளுக்கு எனக்கும் ஒத்துப் போகது தான் ஹர்ஷா.. அதுக்குன்னு அவ நல்ல
பொண்ணு இல்லன்னு ஆகிடுமா?..” என்றவள் “அவ எனக்கு விட்டுக்குடுத்து
போயிருக்கா.. நான் தான் அவள அட்ஜஸ்ட் பண்ணது இல்ல” என்றாள் ராஷ்மிகா நிதானமாக.

“அடடா…” என்று பரிதாபம் செய்வது போல் முகத்தை வைத்தான் அவன்.

“ஆனா நீ அவ கூட பழகவே இல்லைனு மறுக்கலையே ஹர்ஷா..” என்றாள் ராஷ்மிகா தம்பியை நோக்கி கூர்
பார்வையை வீசி..

“ஆமா பழகுனேன்..” என்று ஒற்றை வார்த்தையில் முடித்தவன் “நான் கிளம்பறேன் அக்கா.. அங்க போயே ப்ரேக்
பாஸ்ட் சாப்பிடறேன்.. லேட் ஆச்சு” என்று தனது பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே வர.. ராஷ்மிகாவும் அவனுடன்
வந்தாள்.

“பை ம்மா.. பை சித்தி..” என்றவன் “பை குஜிலி” என்று அவளது பட்டுக் கன்னத்தில் முத்தமொன்று வைத்து
விட்டுக் கிளம்பினான் ஹர்ஷா. அவனின் மனம் அவனுக்கு அதை யாராலும் அறிய
முடியவில்லை.

ஹர்ஷா செல்ல அப்போது தான் ராஷ்மிகாவிற்கு உறைத்தது.. “அவன்  கல்யாணம் வேண்டாம்னு
சொல்லலையே இப்போ.. ஆனா ஏதோ கோபத்துல இருக்கான்” என்று ராஷ்மிகா
யோசிக்க.. கீர்த்தியின் குணம்
அறிந்தவளாய் அவள்
பார்த்துக்கொள்வாள் என்று
விட்டுவிட்டாள். கரைப்பார் கரைத்தாள் கல்லும் கரையும்.

தனது புது கேமிங்கை சரி பார்த்துக் கொண்டு தனக்கு கீழ் உள்ளவர்களை ஹர்ஷா ஏவிக் கொண்டு இருந்தான்.
அவனுடைய இந்த கேம் மட்டும் ரீச் ஆகி விட்டால் அவனது தரம் இன்னும் இந்த துறையில் உயர்ந்துவிடும். கடந்த ஆறு
மாதங்களாக அவன் செய்து வரும் கேம்(game) இது. எப்படியும் நாளை முடிந்துவிடும் வேலை. அவனிற்கு இப்போது வேலை இல்லை.. அவனின்
கீழ் இருக்கும் டீம் மெம்பர்ஸ் செய்து வருவதை சரி பார்த்துக்
கொண்டிருந்தான்.

ஹர்ஷாவுடைய ஃபோன் அடிக்க.. போனில் கண்ட எண்ணைப் பார்த்தவன்
எடுக்கவில்லை. ஒரு ஃபுல் ரிங் வந்து கட் ஆனது மறுபடியும் அடிக்க ஃபோனை எடுத்தவன் “ஹலோ..” என்றான் வெற்றுக்
குரலில்.

“ஹலோலோ” – என்று கீர்த்தி அந்தப் பக்கம் ராகம் பாடினாள்.

“என்ன வேணும்…” என்று ஒற்றை வார்த்தையில் ஹர்ஷா கேட்க.. தனது ஆட்டத்தைத் தொடங்க ஆரம்பித்தாள் கீர்த்தனா ஆதர்ஷினி.

“நான் ட்ரெஸ் எடுக்கணும்” என்றாள் அவனைப் பழிப்பது போலவே அவனை
மாதிரி பேசி..

“அதுக்கு” – ஹர்ஷாவின் குரல் உயர்ந்தது.

“வந்து வாங்கிக் குடு” – என்றாள் கீர்த்தியோ கூலாக.

“என்னை என்ன வேலை இல்லாதவன்னு நினைச்சியா.. வர எல்லாம் முடியாது
ஃபோனை வையு” என்று ஹர்ஷவர்தன் கட் செய்ய.. விடுவாளா நம் பெண்.. மறுபடியும் அழைத்தாள்.

திட்டலாம் என்று ஃபோனை எடுத்த ஹர்ஷாவை பேசவிடாமல் தானே பேசினாள். “நான் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் போட போற ட்ரெஸைத் தான்
எடுத்துத் தர சொல்றேன்.. நீதான் எங்க வீட்டுல இருந்து எதுவும் எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்லிட்டேல” என்று
கீர்த்தி செக்மேட் வைக்க.. ஹர்ஷவர்தன் எதுவும் பேசவில்லை.

“எங்க வரணும்னு சொல்லு வரேன்.. ஆனா நான் வர ஒரு மணி நேரம் ஆகிடும்” என்று ஹர்ஷா கேட்க..

“எக்ஸ்பிரஸ் அவென்யூ.. ராயப்பேட்” என்று அட்ரெஸோடு அவள் சொல்ல..

“எனக்குத் தெரியும்.. எங்க அது
இருக்குனு” என்று வைத்துவிட்டான் ஹர்ஷா.

ஒரு மணி நேரம் என்று சொன்ன ஹர்ஷா அரைமணி நேரத்தில் அங்கிருந்தான்.
அவனுக்காகவே அவள் நுழைவு வாயில் அருகில் காத்திருக்க.. ப்ளாக் ஜீன் மற்றும் பச்சை நிற க்ராப் டாப்பில் நின்றிருந்தவளைக் கண்டவனுக்கு இதயம் தாளம் தப்பியது. அதை அவளிடம் மறைத்தவன் அவள் அருகில் செல்ல “போலாம்” என்று உள்ளே நடந்தாள். அவளிற்கு இந்த மாதிரி காத்திருக்க
வேண்டும் என்று என்ன அவசியம்? அதுவும் அவள் வசதிக்கு இப்படி எல்லாம்
தன்னிடம் ஏன் இப்படி இருக்க வேண்டும்? என்று ஹர்ஷாவின் மனதில் எழுந்தது. இருந்தாலும் சில சம்பவங்கள் அவனை
கோபத்தின் பிடியில் வைத்திருந்தது.

அவள் ஒரு விலை உயர்ந்த கடைக்குள் நுழைய பின்னாலேயே சென்றவனிடம்
திரும்பி “உனக்கு நான் இந்த ட்ரெஸ் தான் போடணும்.. அப்படி இப்படினு ஏதாவது
இருக்கா?” என்று வினவினாள்.

“என்ன பில் கட்ட தானே கூப்பிட்ட.. எதையோ எடு” என்று பட்டென்று அவன்
சொல்ல அவனை முறைத்த கீர்த்தி துணிகளை எடுக்க ஆரம்பித்தாள்.

அவள் துணி தேர்வு செய்து
கொண்டிருந்த செக்ஷனிற்கு வந்தவன் அதிர்ந்தான். எல்லாம் முட்டிக்கு மேல் இருக்கும் ஆடைகள்.. “அடியேயேயே….” என்று பல்லைக் கடித்தவன் அவளின்
கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான். “என்ன கருமம் டி இது” என்று கர்ஜிக்க…

“நீதான எது வேணாலும் எடுக்க சொன்ன.. அதான் பாத்துட்டு இருக்கேன்” என்று
கீர்த்தி சாதாரணமாகச் சொல்ல..

“மரியாதையா போய் சேரி.. குர்தா.. சுடிதார் னு பாரு.. இதெல்லாம் எடுத்தேனா
நான் பில் கட்ட மாட்டேன்” என்று அவன் அவளிடம் பேச.. அவளோ தன் கையில் மேல் இருந்த அவன் கையையே
பார்த்தாள். நான்கு வருடத்திற்கு பிறகு இவ்வளவு நெருக்கத்தில் நிற்கின்றனர்
இருவரும். ஹர்ஷாவிற்கும் அது எதையோ நியாபகப் படுத்த அவளின் மேல் இருந்த கையை எடுத்தான். இரண்டு நிமிடம் இருவரிடமும் எந்த
பேச்சும் இல்லை.

“சரி நான் போய் அந்த ட்ரெஸையே பாக்கறேன்” என்று அவள் நடக்க.. அவனோ அந்த செக்ஷனிற்கு போய்
சும்மா நின்றுவிட்டான்.

அவள் துணிகளை அங்கிருந்த சேல்ஸ் கேர்ள் அள்ளிக் கொண்டு போக.. ஹர்ஷவர்தனிடம் வந்த கீர்த்தி
“எடுத்தாச்சு” என்றாள்.

சரியென்று பில் இருக்கும் இடத்திற்கு வந்தவன்.. பில் கௌன்டரில் இருந்த ட்ரெஸைப் பார்த்தான். எல்லாம்
அவனிற்கு பிடித்த நிறம்.. விதம் என இருந்தது. கீர்த்தியும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். ஏனெனில் 23 செட் ட்ரெஸ்
எடுத்திருந்தாள் அவள். ஆனால் ஹர்ஷாவோ எந்த விதமான அதிர்ச்சிகளையும் முகத்தில் காட்டவில்லை.

“ஸார் இட்ஸ் 57 தௌசன்” என்று கௌன்டரில் சொல்ல தனது க்ரெடிட் கார்டை எடுத்து நீட்டினான். எல்லாம் முடிய மணி இரண்டரை ஆகி இருந்தது.

பில்லிங்கை முடித்துக் கொண்டு இருவரும் வெளியில் வர “எனக்குப் பசிக்குது” என்றாள் அவனிடம்.

பேசாமல் அவன் துணி பைகளை இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு செல்ல
செல்ல அவன் பின்னேயே இவளும் துணிப் பைகளோடு சென்றாள். அவன் சென்ற இடம் அவளிற்கு பிடித்த “பீட்சா
ஹட்”. ஏதோ மனதிற்குள் சிரிப்பு எழ அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அவன் எதிரே அமர்ந்தாள்.

அவளுக்குப் பிடித்த பீட்சாவை அவளிடம் கேட்காமலே ஆர்டர் கொடுத்து விட்டு வந்தவன்.. ஃபோனை எடுத்துக் கொண்டு
உட்கார்ந்துவிட்டான். ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தவன் எதுவும்
அவளிடம் பேசவில்லை. இவளும் பேசுவானா என்று எதிர்பார்க்க பீட்சாவே
வந்து விட்டது. அவளிற்கு மட்டும் வந்திருப்பதைக் கவனித்தவள் “உனக்கு
வேணாமா” என்று வினவினாள்.

“இல்ல.. பசி இல்ல..” என்று அதற்கு மேல் அவளிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை
என்று அவன் உட்கார்ந்தான். மற்ற பெண்ணாக இருந்திருந்தால் சாப்பிடாமல் எழுந்திருப்பாள்.. ஆனால்
இது கீர்த்தி அல்லவா.. “போடா டேய்..” என்பது போல் தன் வயிற்றை கவனிக்க  ஆரம்பித்து விட்டாள்.

நன்றாக டோமாட்டோ சாஸை பீட்சா மேல் ஊற்றியவள் டபுள் சீஸுடன் இருந்ந பீட்சாவை ரசித்து உண்ண ஆரம்பித்தாள்.
வாயின் ஒரு பக்கம் சீஸ் ஒட்டிக் கொண்டு இருக்க அதை கவனித்த ஹர்ஷாவிற்கு
அவனின் மூலை ஏதேதோ சொன்னது.. தன்னைக் கட்டுப்படுத்தியவன் “சீஸ்
ஆயிருக்கு பாரு” என்று ஹர்ஷா சொல்ல.. காதில் விழாதவள் போல் சாப்பிட்டுக்
கொண்டிருந்தாள் கீர்த்தி.

முழுதாக அனைத்தையும் காலி
செய்தவள் ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து கை வாய் எல்லாம் துடைத்து முடித்தாள்.
எழுந்து சென்று கையைக் கழுவிக் கொண்டு வந்து அமர்ந்தவள் “நீ இவ்வளவு ட்ரெஸ்க்கு பில் கட்ட  மாட்டேன்னு நினைச்சேன்” என்றாள்.

ஹர்ஷா அவளைப் பார்க்க கீர்த்தியே ஆரம்பித்தாள்.. “என்னப் பிடிக்காமையா
ஹர்ஷா இதெல்லாம் வாங்கித் தந்த” என்று கேட்க.. ஹர்ஷாவோ வாய்விட்டுச்
சிரித்தான்.

“ஓ.. நீ இப்படி நினைச்சிட்டு இருக்கியா?” என்று தன் இரண்டு கைகளையும்
முட்டியின் மேல் கோர்த்து வைத்து உட்கார்ந்து கொஞ்சம் முன்னால் சாய்ந்து அமர்ந்தவன் “நான் ட்ரெஸ் உனக்கு மட்டும் இல்ல.. நிறைய
பொண்ணுங்களுக்கு வாங்கித்
தந்திருக்கேன்.. என்ன நீ கொஞ்சம் அதிகமா எடுத்திட்ட.. அவ்வளவு தான்” என்று ஹர்ஷா வேண்டுமென்றே
அவளை காயப்படுப் நோக்கத்தோடு பேச  கீர்த்தியோ உறைந்தே விட்டாள்.

“அவங்களும் நானும் ஒன்னா ஹர்ஷா?” என்று கீர்த்தி வற்றிய குரலில் வினவ..
தோளைக் குலுக்கிக் கொண்டு பின்னால் சாய்ந்து அமர்ந்தான்.

“போலாம்” என்று ஹர்ஷா எழுந்து திரும்பிப் பார்க்காமல் முன் சென்றான். கீழே பர்ஸ்ட் ப்ளோர் வரை வந்தவன்
திரும்பக் கீர்த்தியைக் காணவில்லை. ஒரு நிமிடம் திகைத்தவன் சுற்றி முற்றி
பார்த்துவிட்டு கீர்த்திக்கு ஃபோன் செய்தான். அவள் கட் செய்ய பல்லைக் கடித்தவன் மறுபடியும் மேலே ஏறி பீட்சா
ஹட்டிற்குள் நுழைய அவர்கள் உட்கார்ந்த இடத்தில் அவள் இல்லை. ஆனால் அவன்
வாங்கிக் குடுத்த உடைகள் எல்லாம் அப்படியே கீழே இருந்தது. அதை
அனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டவன் மறுபடியும் கீர்த்திக்கு கால்
செய்தான். அந்தோ பரிதாபம்.. அவள் கட் செய்து விட்டாள்.

“எங்க இருக்க?” என்று மெசேஜ் செய்ய.. அதற்கு அவள் எதுவும் அனுப்பவில்லை.

முதலில் பார்க்கிங் வந்து தன் காரை எடுத்தவன்.. அருகில் இருந்த பஸ் ஸ்டாப் வரை சென்று எதற்கும் பார்த்தான்.
அங்கும் அவள் இல்லை என்ற போதும் ஐந்து மணி வரை சுற்றியவனுக்கு தன்
மேலேயே கோபம் வந்தது. தலையில் அறைந்து கொண்டவன் “அதிகமா
பேசிட்டமோ” என்று யோசித்தான். அவளிற்கு வாங்கித் தர அவனிற்கு
ஒன்றும் கசக்கவில்லை. அவளின் குடும்பத்தின் மேல் இருந்த கோபமே அவனை அப்படி பேச வைத்தது. அதனால் தான் அவள் குடும்பத்தில் இருந்து அவள்
எதைக் கொண்டு வருவதையும் அவன் விரும்பவில்லை.

மறுபடியும் ஹர்ஷா கீர்த்திக்கு ஃபோன் செய்ய கட் செய்தே விட்டாள். கீர்த்தியின் வீட்டு நம்பரை ஃபோனில் இருந்து
எடுத்தவன் முதலில் அழைக்கலாமா வேண்டாமா என்று யோசித்தான். ஆனால்
அவள் இப்போது முக்கியம் என்பதால் தன் வெறுப்பை ஒதுக்கி வைத்துக் கொண்டு கீர்த்தியின் வீட்டு நம்பருக்கு
அழைத்தான்.

“ஹலோ” என்றார் செல்வமணி ஃபோனை எடுத்தவுடன்.

செல்வமணி தான் பேசுவது என்பதை உணர்ந்தவன் “நான் ஹர்ஷவர்தன் பேசறேன்” என்றான்.

“சொல்லுப்பா.. தர்ஷு கிட்ட பேசணுமா?” என்று அவர் கேட்க..

“ஆமா அத்… ஆன்ட்டி” என்றான்.

“அவ அவளோட ப்ரண்ட் வீட்டுக்கு போயிட்டு வரன்னு காலைலயே போனா.. இன்னும் வரல.. வந்தவுடனே கூப்பட சொல்லட்டா?” என்று அவர் சொல்ல ஹர்ஷாவிற்கு சற்று பயம் எட்டிப் பார்த்தது.

“சரி ஆன்ட்டி” என்று ஃபோனை
வைத்தவன்.. பைத்தியம் பிடித்தவன் போன்று அன்றைய தினம் முழுதும் அலைந்தான்.

மணி ஏழரையே ஆனது. தந்தைக்கு ஃபோன் செய்து சொல்லலாமா என்று
எண்ணியவன் ஃபோனை எடுக்க கீர்த்தியே கூப்பிட்டாள். அடுத்த நொடியே ஃபோனை எடுத்தவன் “ஏய் எங்கடி இருக்க?” என்று கத்தினான்.

“மெரினா பீச்” என்றவள் ஃபோனை வைத்து விட்டாள் கீர்த்தி.

“நான் இங்க நாயா பேயா அலையற.. இவ ஜாலியா அங்க உக்காந்துட்டு இருக்கா”
என்று பல்லைக் கடித்தவன் தனது காரை உயிர்பித்து அங்கே விரைந்தான்.

பீச்சிற்கு சென்றவன் அங்கே விரைய.. அவள் இருந்த இடம் கண்டுபிடித்துப் போனான். அவள் நின்று கொண்டு இருந்ததைப் பார்த்தவன் “கீர்த்தி” என்று கத்த அதில் கீர்த்தி திரும்பினாள்.

“எங்கடி போன என்ன விட்டுட்டு.. இனி எங்காவது சொல்லாம போன காலை உடச்சிடுவேன்” என்று ஆவேசமாக பேசிக் கொண்டே வந்தவன் அவள் எதிர்பாரா வண்ணம் அவளை இறுக அணைத்தான். முதலில் விலக நினைத்தவள் அவன்  அணைப்பு உணர்த்திய உணர்வில் கல்லாக அப்படியே நின்றாள்.

“இந்த மாதிரி எத்தன பொண்ணுங்கள கட்டிப் பிடிச்சிருக்க?” என்று கீர்த்தி அவன் அணைப்பில் நின்றபடியே இறுகிய குரலில் கேட்க..

அவளின் தோளில் சாய்ந்திருந்தவனோ “இதுக்கு முன்னாடி ஒரே ஒருத்தி தான் டி..கீர்த்தனா ஆதர்ஷினிய.. ஒரு மூணு நாலு வருசத்துக்கு முன்னாடி” என்று அவளை
மேலும் தன்னுடன் இறுக்கினான்.

“ஸாரி கீர்த்தி” என்று ஹர்ஷா கேட்க. அப்படியே மரக்கட்டை போன்று நின்றாள்.

“ப்ளீஸ் டி ஏதாவது பேசு” என்று அவளை விட்டு சிறிது விலகி அவள் முகத்தைப் பார்த்துக் கேட்க.. அவளோ அலைகளை
வெறித்தபடி நின்றிருந்தாள்.

“கீர்த்தி” – என்று அழைத்தான் ஹர்ஷா. அவன் ஒவ்வொரு முறையும் கீர்த்தி என்று அழைக்கையில் தனது உயிர் வரை சென்று அது ஊடுருவுவதை உணர்ந்தாள்.
அவள் இந்த நான்கு வருடத்தில் அவனை எந்தளவு நினைத்து தவித்திருப்பாள் என்று அவளுக்கு மட்டுமே தெரிந்த
விஷயம். ஒவ்வொரு முறையும் அவனை அழைக்க அவனோ அவளை சட்டை செய்யவே இல்லை.. அவனிடம் இருந்து
அழைப்பு வராதா என்று ஏங்கிய இரவுகளும் பல இருந்தன. வீட்டில் இருந்தால் அம்மா கல்யாண பேச்சை எடுக்கிறார்கள் என்றே எது கிடைத்தாலும் சென்று விடலாம் என்று அவள் இரண்டு
வருடத்திற்கு முன்னால் சென்றது. இப்போதும் தன் காதலுக்காக அவள் தான் தொங்கிக் கொண்டு இருக்கிறாள் என்று நினைக்கும் போது அவளுக்கு கசந்தது. நெஞ்சில் தோன்றிய கசப்பை விழுங்கியவள் ஹர்ஷாவை ஏறிட்டாள். அவளுக்கும் அவனுடயை குணம் தெரியும் தான். பெண் தோழிகள் அதிகம் என்று. ஆனால் வரம்பை மீற மாட்டான் என்றும் தெரியும். ஆனால் அவர்களைப் போல நீயும் என்று அவன் சொல்லாமல்
சொல்லியது அவளுக்கு கோபத்தையும் வேதனையையும் அளித்தது.

அவளது பார்வையில் எதை
உணர்ந்தானோ ஹர்ஷா.. “ஸாரி கீர்த்தி” என்று உருகினான்.

“இன்னொருத்திய கல்யாணம் பண்ண ரெடி ஆகி.. நிச்சயம் வரைக்கும் போயிட்டேல” – என்று முறைத்த முறைப்பில்.. நெற்றிக் கண் மட்டும் கீர்த்திக்கு இருந்திருந்தால் ஹர்ஷவர்தன் பஸ்பம் ஆகி இருப்பான்.

“கால்ல விழு” என்று கீர்த்தி சொல்ல.. அவனோ அதிர்ந்தான்.

“வாட்” – ஹர்ஷா.

“என்னுடைய பாதத்தைத் தொட்டு மன்னிப்பை வாங்கிக் கொள்ளுமாறு பணிக்கிறேன்” என்று நாடக பாணியில்
கீர்த்தி சொல்ல.. ஹர்ஷாவோ அவளை முறைத்தான்.

கார் சாவியைக் கீழே விட்டவன் கீழே குனிய அவன் சட்டையைப் பிடித்து அப்படியே தூக்கி “என்ன சூர்யவம்சமா.. இத விஜய்சேதுபதி ஏற்கனவே ரம்யா நம்பீசன் கிட்ட சேதுபதி படத்துல பண்ணி மறுபடியும் விழுந்தாரு தெரியும்ல.. ஒழுங்கு மரியாதையா விழு” என்று அவள் அவனை மிரட்ட.. சுற்றி முற்றி பார்த்தவன் படக்கென விழுந்தான்.

“ஸாரிங்க கீர்த்திங்க” என்று ஹர்ஷா அவள் பாதத்தை தொட்டுவிட்டு எழ.. அவன் தோளில் பிடித்து கிள்ளி
வைத்தாள்.

அவளைப் படக்கென அருகில் இழுத்து இடுப்பை சுற்றி வளைத்தவன் அவளின்
முகத்தில் விழுந்த கற்றைக் கூந்தலை ஒதுக்கி காதோரம் விட்டு “ஐ லவ் யூ கீர்த்தி” என்றான் அவள் காதோரத்தில்.

காதோர ரோமங்கள் சிலிர்க்க.. அவனிடம் முதல் முதலாக கேட்ட இந்த வார்த்தையில் கீர்த்தி ஸ்தம்பித்து நின்றாள். அவன் முகத்தைப் பார்க்க அவனோ அவளைப் பார்த்து கண்களைச் சிமிட்டினான். ஏதோ திடீரென அவனிடம் பெண்களை தன் பால் கண்ணனின் சாயலைக் கண்டாள் கீர்த்தனா ஆதர்ஷினி.

திடீரென்று கண்கள் கலங்க “ஐ லவ் யூ ஹர்ஷா” என்று அவனை அணைத்து நெஞ்சில் முகம் புதைத்தவளுக்கு கண்ணீர் சிந்தியது. ஏனென்று
தெரியவில்லை அவளுக்கு.. அவன் உண்மையை சொன்னதனாலா அல்லது தன் நம்பிக்கை வீண் போகவில்லை என்றா அல்லது தான் ஏமாறவில்லை என்றா.. எது என்று தெரியவில்லை.
அவனை அணைத்து அத்தனை நாள் உள் வைத்திருந்ததை அழுது தீர்த்தாள்.

அவளை விலக்கி அவளின் கண்களைத் துடைத்து விட்டவன் “இனிமேல் நீ அழவே கூடாது கீர்த்தி” என்றவன் அவள் நெற்றியில் தன் இதழைப் பதிக்க அவளிற்கோ அவனின் வார்த்தையிலேயே நெஞ்சம் நிறைந்தது. “எதுக்கு ஹர்ஷா என்ன இவ்வளவு நாள் அவாய்ட் பண்ண?” என்று கேட்டாள் கீர்த்தி.

சட்டென்று முகம் இறுகியவன் “வேணாம் கீர்த்தி விடு.. நாம போலாம்” என்று திரும்ப.. அவனின் கையைப் பிடித்துத்
தடுத்தாள் கீர்த்தி.

“நமக்குள்ள இனி இந்த மாதிரி எதுவும் நடக்கக் கூடாது ஹர்ஷா.. அதுனால தான் கேக்கறேன் சொல்லு” என்று கீர்த்தி விடாப்பிடியாக கேட்க… அவளின் சொல்லிலும் நியாயம் இருப்பதை
உணர்ந்தவன் அனைத்தையும் அவளிடம் கூறினான். அவன் சொல்ல சொல்ல முகம் மாறியவள்.. அவன் சொல்லி
முடித்த பிறகு பேசினாள்.

“அண்ணா அப்படி பண்ண மாட்டாரு ஹர்ஷா..” என்றாள் கீர்த்தி உறுதியாக.

“கீர்த்தி.. ப்ளீஸ் நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே.. நீ கேட்ட நான்
சொல்லிட்டேன்.. இதப் பத்தி நம்ம இனி பேச வேண்டாம்.. நமக்கு இதுனால இனி எந்த ஒரு பிரச்சினையும் வேண்டாம்” என்று ஹர்ஷவர்தன் தெளிவாகச் சொல்ல.. கீர்த்தியும் அரைமனதோடே சம்மதித்தாள்.

பின் அவளை சாப்பிட வைத்து கீர்த்தியை வீட்டில் கொண்டு விட.. சரியாக அஸ்வினும் தங்கையை இன்னும்
காணோமே என்று நினைத்தபடி அவளிற்கு ஃபோனில் அழைத்தபடியே வெளியில் வர அஸ்வினும்.. ஹர்ஷவர்தனும் ஒருவரை ஒருவர் கண்டனர்.

“உள்ள வந்துட்டு போலாமே ஹர்ஷா” என்று கீர்த்தி அழைக்க..

“இல்ல கீர்த்தி.. நெக்ஸ்ட் டைம்
பாக்கலாம்” என்றவன் ஒரு வெற்றுப் பார்வையை அஸ்வின் மேல் வீச.. அதில் ஒன்றும் சளைத்தவன் இல்லையே அஸ்வின். இரு ஆண்மகன்களும்
ஒருவருக்கொருவர் மோதிக்
கொள்ளவில்லை. ஆனால் உள்ளுக்குள் சில பனிப்போர்கள் கனன்று கொண்டு இருந்தது.

வீட்டிற்கு வந்த ஹர்ஷா யாழ்மொழியைத் தூக்கிக் கொண்டு வம்பிழுத்து அடியை
வாங்கிக் கொண்டு இருந்தான். ஏனோ யாழ்மொழியைப் பார்க்கும் போது எல்லாம் ராஷ்மிகாவிற்கு பயமாக
இருந்தது. அது எதனால் என்று அறியும் போது அவளால் நிம்மதியாக இருக்க முடியுமா?