யாழ்-11

IMG_20220303_084637-26116723

யாழ்-11

“யாழ்! இன்னும் இரண்டு நாள்ல டான்ஸ் வச்சிட்டு ஏன் இப்படி இருக்க?” சம்யுக்தா கேட்டபடியே அவளின் அறைக்குள் நுழைய, யாழ்மொழி ஒளிக்கழித்து ஜன்னல் பக்கம் பார்த்தபடி படுத்திருந்தாள்.

அவளுக்குத் துணையாய் ஜன்னலைத் தாண்டி தெரிந்த குருவிகள்! சிறு தூறல்களாய், சொட்டுவிடும் மழைத்துளிகள்!

அன்று வருணிடம் (இனி யாழ் வரும் இடங்களில் வித்யுத், ‘வருண்’ என்ற பெயரிலேயே இடம்பெறுவான்) சொல்லிவிட்டு வந்தவள்தான். அதன் பிறகு இப்படியேதான் உம்மென்று இருக்கிறாள். அதன்பிறகு சகோதரர்கள் இருவரையுமே சென்று பார்க்கவில்லை. சம்யுக்தா அழைத்தாலும் நடனப்பயிற்சி என்று அறையிலேயே கிடக்கிறாள். யாரிடமும் தனக்கு வந்த ஈர்ப்பை அவளால் பகிரவும் முடியவில்லை.

தந்தையிடம் பகிரலாம் என்று நினைத்தவள், ‘தனக்கே தெளிவில்லாத விஷயத்தில் அவரிடம் என்னத்தை கூறுவது’ என்று கைவிட்டாள்.

அன்னையிடம் கூறலாமா என்று நினைக்க, ‘ஐயோஓ வேணாம்டா சாமி. அவ்வளவுதான் நல்ல தெலுங்கு பட வில்லி ஆன்ட்டி மாதிரி அடுத்த ப்ளைட்லயே இங்க வந்து குதிக்கவா?’ அவளின் மனசாட்சி எடுத்துரைக்க, அதை மறுபடியும் யோசிக்கக்கூட இல்லை அவள்.

‘சரியா? தவறா?’, ‘மெய்யா, பொய்யா?’, ‘காதலா? ஈரப்பா?’, ‘மகிழ்ச்சியா? துக்கமா?’ எதுவென்று தெரியாத நிலையில் அவளை பித்துப்பிடிக்க வைத்திருத்தது, அவளின் சின்னஞ்சிறு மென்மனதில் துளிர்விட்டிருந்த அழகிய நுன்னுணர்வு காதல்.

காதல் என்பது நன்றாக இருப்பவனையும், குழப்பி குத்த வைத்துவிடுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை போலும்!

“யாழ்!” மீண்டும் சம்யுக்தா அழைக்க,

“ப்ச்! காலேஜ் க்ரூப் பாத்தியா.. க்ரே ப்ரோக்கிராம் நாலுநாள் தள்ளி வச்சிட்டதா மெசேஜ் அனுப்பியிருக்கான்” திரும்பாமலேயே பதில் சொன்னவள், வெளியேவே வெறித்துப் பார்த்திருந்தாள்.

“சரி வா. டைம் ஃபைவ் ஆச்சு. டீ குடிக்கலாம்” சம்யுக்தா அழைக்க, “வேணாம் சம்யு” என்றவள் வெளியேவே பார்த்திருந்தாள்.

“என்னாச்சு யாழ்?” அவளின் படுக்கையில் ஏறி அவளருகே சென்றமர்ந்த சம்யுக்தா, அவளைத் தொட்டு தன்னை நோக்கித் திருப்பப் பார்க்க, யாழோ இரும்பாய் முரண்டு பிடித்துக்கொண்டு இருந்தாள்.

“ப்ச், விடு சம்யு. எனக்கு தனியா இருக்கனும்போல இருக்கு” யாழ்மொழி சலிக்க, சம்யுக்தாவோ எதுவும் பேசாமல் யாழ்மொழி அருகிலேயே அமர்ந்துவிட, “சம்யு! நீ போய் டீ குடி” என்றாள் யாழ்.

அதற்கு அவளிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

கோபம் கொண்டிருப்பாள் என்று நினைத்த யாழ்மொழி தலையைத் திருப்பிப் பார்க்க, சம்யுக்தாவோ புன்னகை மாறாது அமர்ந்திருந்தாள். ‘இவளுக்கு மட்டும் ஆண்டவன் பொறுமையை எப்படி படச்சானோ’ நினைத்தவள், “ம்கூம்” என்று திரும்பிக்கொள்ள, சம்யுக்தா யாழ்மொழியின் மேல் சாய்ந்துகொண்டு,

“என்னாச்சு யாழுக்கு?” வினவ, அவளின் அக்கறையிலும், அரவணைப்பிலும் சம்யுக்தாவைப் பார்த்தபடி திரும்பிப் படுத்த யாழ், அவளையே பார்த்திருந்தாள்.

அவளின் மேல் இன்னும் நன்றாக சாய்ந்த சம்யுக்தா, “என்னாச்சு?” கொஞ்சியபடி வினவ, யாழ்மொழிக்கு ஏனோ சம்யுக்தாவைப் பார்க்க பார்க்க மனம் வலிப்பதுபோல இருந்தது. அவளிடம் சொல்லிவிடலாமா என்று கூடத் தோன்றியது.

‘ஆனால், அவள் தனக்காக சென்று வருணிடம் பேசிவிட்டால்?’ நினைக்கையிலேயே தோழியிடம் சொல்லத் துடித்த வாயாடிக்கு வாய் அடங்கிப் போனது.

“ரூமுக்குள்ளயே இருந்தா இப்படித்தான். வெளிய போயிட்டு வரலாமா?” வினவ, யாழ்மொழியின் தலை சரி என்பதுபோல அசைந்தது.

“சரி நான் போய் கிளம்பறேன். நீயும் கிளம்பு” சம்யுக்தா சொல்லிவிட்டு செல்ல யாழ்மொழி எழுந்து, தன்னுடைய பிங்க் நிற லாவ் ஸ்கர்ட்டையும், வெண்மை நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸையும் அணிந்து அஜந்தா ஓவியத்தை போல வர, இருவரும் பூங்காவிற்குச் சென்றனர்.

பூங்காவை அடைந்த இருவரும் அங்கு மாலை வேளை வந்தவர்களை வேடிக்கை பார்த்தபடி இருக்க, சம்யுக்தாதான் ஏதாவது பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசுவதற்கு யாழின் பதிலோ, ‘ம்ம்’, ‘ம்ம்’ என்பது மட்டும் தான்.

திடீரென யாழ்மொழியின் விழிகளை பின்னிருந்து இரு கரங்கள் மூட, கைகளைத் தொட்டுப் பார்த்தவளுக்கு அது யாரோ ஆணுடைய கை என்பது புரிந்தது. வர்ஷித் அல்லது வருணாக இருக்கும் என்று நினைத்தவள், விரல்களைத் தடவிப் பார்க்க அவர்களும் இல்லை. ஏனெனில் இருவரும் ராசிக்கல் மோதிரம் அணிந்திருப்பார்கள். அதுவும் வருணின் முரட்டுக் கரத்தில் தங்கக் காப்பு இருக்கும்.

யாரென்று யோசித்து யோசித்துப் பார்த்தவள், “ஹூஸ் திஸ்?” வினவ, அவளின் விழிகளில் இருந்த கரத்தை எடுத்து அவள் முன் வந்து புன்னகையுடன் நின்றான் அவன்.

ஆறடி உயரத்தில், சராசரி ஆண்களை விட நிறத்தில் வெண்மையும் ரோஸும் கலந்து, அடர் புருவங்களும், குறும்பு விழிகளும், ரோஸ் நிற உதடுகளும் என பாலிவுட் ஹீரோ போல நின்றிருந்தான் அஷ்வினின் பள்ளி பருவ நண்பனின் மகன் ஸ்ரீராம்.

இத்தனை நேரம் தனக்குள் உழன்று கொண்டிருந்தவள், சிறு வயதில் தோழனை பார்த்தவுடன், “ஹே ஸ்ரீ ராம்” கூவியபடி எழ, அவனும் அவளைப் பார்த்த மகிழ்ச்சியில் அவளை அணைத்துக்கொள்ள, சரியாக சம்யுக்தா அழைத்ததில் பூங்காவிற்குள் வந்த வர்ஷித், வித்யுத் விழிகளில் இது விழுந்தது. இரண்டு வருடங்களாக இங்கு படிக்கும் வர்ஷித்துக்கு இது சாதரணம் விஷயமே. ஆனால், வித்யுத்?

அவனும் ஆங்கிலேய நாகரீகம் அறிந்தவன் தான். ஆனால், உள்ளுக்குள் அவனறியாமல் ஏதோ ஒன்று அவனை எரிச்சலூட்டியது.

சிறிய வயதிலேயே குடும்பத்துடன் வந்து இங்கு செட்டில் ஆகிவிட்ட ஸ்ரீ ராமுக்கு, இதெல்லாம் சகஜம்தானே. அதுவும் இங்கேயே பள்ளி, கல்லூரி முடித்தவனுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டு இல்லை. அவனைப் பொறுத்தவரை அது வெறும் அன்பை வெளிப்படுத்தும் முறையே.

ஆனால், பெண்ணவளுக்கோ அவனின் செயல் தூக்கிவாரிப் போட்டது. அவனின் அணைப்பில் தவறான எண்ணம் இல்லை என்ற போதிலும், சாமர்த்தியமாக பேசியபடியே சட்டென்று அவனிடம் இருந்து விலகியவள், “இங்க என்ன பண்ற?” வினவினாள்.

“ஹே! ஐ ஹாவ் டு ஆஸ்க் திஸ். நீ இங்க வந்து எவ்வளவு நாள் ஆச்சு. டாடி சொன்னாங்க. மம்மி கூப்பிட்டும் நீ இன்னும் வீட்டுக்கு வரல?” குற்றம்சாட்டியவனை அசடு வழிய பார்த்தவள், “இல்ல ஸ்ரீராம். எனக்கு டைம் கிடைக்கல. காலேஜ் வொர்க்ஸ். நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா வரேன்” என்றாள்.

“பாக்கலாம்” என்றவன் அப்பொழுதுதான் அருகில் இருந்த சம்யுக்தாவை கவனித்தான். முழு வெண்மை நிறத்தில், கனுக்காலைத் தொட்ட மேக்ஸியில், அவள் உடையோடு போட்டிபோட்ட மதி முகத்தில் இருந்த அமைதியான விழிகளும், கதுப்புக் கன்னங்களும், எடுப்பான நாசியும், இயற்கையிலேயே சிவந்திருந்த இதழ்களையும் கண்ட நொடி ஸ்ரீ ராம் அடித்து வீழ்த்தப்பட்டான்.

பட்டுப் பெண்ணின் தோற்றத்தில் வீழாதவர் உண்டோ!

“யாரு இது?” அவன் வினவ, தோழியை அறிமுகப்படுத்திய யாழ்மொழி, தங்களது அருகில் வந்த வர்ஷித்தையும், வித்யுத்தையும் அறிமுகம் செய்து வைத்தாள்.

அவனுடன் கடமைக்கு பேசிய வித்யுத் சம்யுக்தாவுடன் சென்று பேசத் துவங்க, யாழ்மொழியோ ஸ்ரீராமுடன் பேச்சில் லயித்திருத்தாள். அவ்வப்போது அவனுடனும் அவனின் குடும்பத்துடனும் அலைபேசியில் பேசி இருந்தாலும், அவளுக்கு அவனை நேரில் கண்ட குஷி அடங்கவில்லை. வாய்ஓயாமல் அவனிடம் பேசிக் கொண்டிருந்தவளைக் கண்டு வருணிற்கு பொறாமை மூண்டது.

ஏன் என்றே தெரியாத, புரியாத உரிமை உணர்வு அவனுக்குள்!

அவளிடமிருந்து அலைபேசி எண்ணை வாங்கிய ஸ்ரீ ராம், அனைவரிடமும் விடைபெற்றுச் செல்ல, இறுதியாக அவன் சம்யுக்தாவைப் பார்த்த பார்வை, யாரும் அறியவில்லை. வர்ஷித்தைத் தவிர. அவன் கண்டும் காணாததுபோல் தனக்குள் யோசித்தபடி இருக்க, யாழ்மொழிக்கு இத்தனை நேரம் இருந்த வாய், மூடியது, வருணை மீண்டும் கண்டதில். முன்பு போல் இலகுவாக பேச முடியவில்லை.

யாழ்மொழி ஸ்லிங் ஹான்ட் பேக்கின் ஸ்லிங்கை திருகியபடி நிற்க, வருண் அவளையே ஆளைத் துளைக்கும் கூர் பார்வையால் பார்த்தானே தவிர, வாய் திறக்கவில்லை. யாழ்மொழியோ அவனின் பார்வையை தாங்க இயலாது சம்யுக்தாவிடம் விழிகளைத் திருப்ப, அவள், “சாப்பிட போலாமாண்ணா” வர்ஷித்திடம் கேட்டாள்.

‘இப்ப எதுக்கு எங்கிட்ட பேசாம போறா?’ மனதுக்குள் யாழ்மொழியைத் திட்டியவன், தோள்களைக் குலுக்கிக்கொண்டு சம்யுக்தாவுடன் நடக்க, வர்ஷித்தும் யாழும் முன்னால் நடந்து சென்றனர்.

அங்கு சென்று அமர்ந்தவர்கள், இருவராக எதிரெதிரே அமர்ந்து கொள்ள, யாழ்மொழியும் வர்ஷித்தும் ஒருபுறம், எதிர்புறம் வித்யுத்தும் சம்யுக்தாவும்.

ப்ளோரிடா க்ளாம்ஸ், ஸ்ரிம்ப் போ’பாய், க்ளாஸிக் க்ரிஸ்பி ஃபிஷ் டாகோஸ், கிங் க்ராப், க்ரில்ட் லாப்ஸ்டர் என கடல் வகை உணவு பதார்த்தங்கள் அனைத்தையும் ஆர்டர் கொடுத்தவர்கள் தங்களுக்குள் பேசத் துவங்க, பேசியது என்னமோ வர்ஷித்தும், சம்யுக்தா, வித்யுத் தான்.

யாழ்மொழி அமைதியாகவே அமர்ந்திருக்க, வர்ஷித்தும் உடல் உபாதையாக இருக்கும் என்று அவளை எதுவும் கேட்கவில்லை. ஆனால், அவளின் அமைதி வித்யுத்தை சீண்டியது. ‘உனக்கு உன் ப்ரண்ட் ஸ்ரீ ராம்னா எனக்கு சம்யு இருக்காடி’ என்று சிறுபிள்ளை போல நினைத்தவன் அவளை வெறுப்பேற்ற எண்ணினான்.

“சம்யு!” வேண்டுமென்றே வருண் உரக்க அழைக்க, யாழ்மொழியின் விழிகள் தன்னால் அவனிடம் சென்றது.

தனது பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்தவன் செல்பிக்காக கரத்தை மேலே தூக்க, அவனின் எண்ணம் புரியாத சம்யுக்தாவும் அவனுடன் செல்பிக்கு புன்னகைக்க, யாழ்மொழிக்கோ பொறாமை ஒரு பக்கம் பொங்க, மற்றொரு பக்கம் ஆத்திரம் பொங்குவது போல் இருந்தது.

ஏதோ தனக்கு உரிமையான பொருளை யாரோ ஒருவரிடம் கொடுத்தது போன்ற உணர்வு. சம்யுக்தாவின் மீது சிறிது கோபம் கூட வந்தது பெண்ணவளுக்கு. அனைத்துக்கும் பூமா தேவி போன்று பொறுத்துப்போக அவளொன்றும் சம்யுக்தா இல்லையே.

ராஷ்மிகாவின் மகளாயிற்றே. கணவனின் மீதான உரிமை குணத்தை மகளிடம் கூட விட்டுக்கொடுக்காத அவளின் அந்த குணம், அவள் ஈன்றெடுத்த மகளுக்கு இல்லாதா இருக்கும்.

பல்லைக் கடித்துக்கொண்டு யாழ்மொழி அமர்ந்திருக்க, அவளின் கண்கள் அழத் தயாராகி இவள் அதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த விதத்தில், அவளின் அஞ்சன விழிகள் சிவந்திருந்தது. அதரங்கள் இறுக மூடியிருக்க, நாசி கோபத்தில் துடித்துக்கொண்டிருக்க, அனைத்தையும் கட்டுக்குள் வைத்து அமர்ந்திருந்தாள் அஷ்வினின் செல்ல மகள்.

அதற்குள் நண்பன் யாரோ அழைத்திருக்க, அவனுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த வர்ஷித்தும் யாழ்மொழியை கவனிக்க மறந்தான்.

செல்பியை எடுத்து முடித்த வித்யுத் ஓரக் கண்ணால் யாழைப் பார்த்தும் பார்க்காதது போல சம்யுக்தாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, யாழ்மொழிக்கு எழுந்து சென்றுவிடலாமா என்று கூடத் தோன்றியது.

நால்வரும் ஆர்டர் கொடுத்த உணவு வந்து சேர, நால்வரின் தட்டிலும் அனைத்தையும் பரிமாறிய சம்யுக்தா, அமர்ந்துகொள்ள மூவரும் உண்ணத் தொடங்கினர்.

திடீரென ஏதோ உறுத்த அருகிலிருந்த யாழை அப்போதுதான் வர்ஷித் கவனித்தான், யாழ்மொழி ஸ்பூனை வைத்து தட்டை அளந்து கொண்டிருப்பதை. இன்னும் ஒரு வாய் அவளுக்கு உள்ளே செல்லவில்லை. தலை குனிந்து தன் யோசனைகளில் உழன்றபடி தொண்டை அடைக்க, ஸ்பூனால் தட்டில் கோலம் போட்டிக் கொண்டிருந்தாள் மாது.

“யாழ்?” வர்ஷித் அழைக்க, நிமிர்ந்தவளின் முகத்தில் இருந்த சோர்வைக் கண்டவன்,

“ஆர் யூ ஓகே?” வினவ, “ம்ம்” என்றாள்.

“ஏன் சாப்பிடாம இருக்க?” அவன் வினவியதில் அதுவரை தங்களுக்குள் பேசியபடி உண்டு கொண்டிருந்த சம்யுக்தாவும், வருணும் நிமிர, இருவரிடமும் இருந்து தன் முகத்தை மறைத்தவள்,

“இல்ல கொஞ்சம் ஹோம் சிக்ஆ இருக்கு” என்று மீண்டும் தட்டில் பழையபடி கோலம் போட ஆரம்பித்தாள்.

மெய்யாகவே அவளுக்கு வீட்டின் ஞாபகம் வந்துவிட்டது. அதீத சந்தோஷமாக இருக்கும் தருணங்களிலும், துன்பங்களிலும் அவளின் சின்னஞ்சிறு மனம் வீட்டையே தேடும். அதுவும் பெற்றோரின் மடியை மட்டுமே. இப்போது வருணின் விஷயத்திலும், அவன் இப்போது இவளை வெறுப்பேற்றியதிலும் அவளுக்கு வீட்டிற்கு லீவு எடுத்துவிட்டுச் செல்லலாம் போல இருந்தது.

அவள் முகம் வாடி, விழிகள் ஓய்ந்து, வதனம் சோர்ந்து காணப்பட்டு, வர்ஷித்திடம் கூறியதில் அவளவனிற்கு மனம் ஏதோ செய்ய ஆரம்பித்தது. இருந்தும் வாய் திறத்து அவன் என்னவென்று கேட்கவில்லை. அவனின் ஈகோ அதை அனுமதிக்கவும் இல்லை.

பெண்ணவளுக்கோ வாய் திறந்து ஒரு வார்த்தை கேட்டுவிட மாட்டானா என்றிருந்தது. பாறைபோல அமர்ந்திருந்தவனை காணாமலேயே உணர்ந்தவளுக்கு, கோபமும், ஆத்திரமும் பன்மடங்காக, அதீத கோபத்தின் விளைவாய் கண்ணீர் முத்துக்கள் அவளின் அழகிய வழிகளில் அரும்பத் துவங்கியது.

சம்யுக்தாவும் அவளையே கவனித்துக்கொண்டிருக்க, அவளின் கரத்தைத் தொட்ட வித்யுத், அவளை சாப்பிடும்படி சைகை செய்ய, யாழும் சம்யுக்தா தன்னைப் பார்ப்பதை உணர்ந்து, ஒரு வாய் எடுத்து வைக்க, அவளின் விழிகளில் இருந்த நீர், பொட்டுக்களாய் தட்டில் விழ, அவளையே கவனித்துக் கொண்டிருந்த வருணுக்கு, அவளின் கண்ணீர் உள்ளுக்குள் மனதை துடிதுடிக்க வைக்க, அதன் தாக்கத்தில் அவளிடம் எழுந்து செல்ல அவன் எழ முற்பட, யாழ்மொழி எழுந்து ஓடினாள்.

திடீரென அவள் எழுந்து ஓடியதில் அனைவரும் அவளையே பார்த்து வைக்க, சம்யுக்தா அவசரமாக எழுந்து அவள் பின்னேயே செல்ல, வர்ஷித், வித்யுத் இருவரும் சென்றனர். அங்கிருந்த வாஷ்பேஷினில் மதியம் உண்ட அனைத்தையும் அவள் ஓங்கரிக்க, சம்யுக்தாவோ அவளிடம் டக்கென்று விரைந்து தலை பிடித்துத் தாங்கினாள்.

இரண்டு மூன்று நாட்களாக மனதை அலட்டிக்கொண்டு, பயங்கரமாக சிந்தித்துக் கொண்டிருத்தவளுக்கு தூக்கமும் சரியாக இரவில் இல்லை. சரியாக உண்ணவும் முடியவில்லை. அதன் விளைவு இன்று மதியம் சாப்பிட்டது அனைத்தும் வெளியே வந்தது.

வாய் கொப்பளித்து, முகத்தைக் கழுவியவள் ஓய்ந்து போய் நிமிர, சம்யுக்தா அவளிடம் டிஷ்யூவை நீட்டும் முன், தன்னுடைய கர்சீப்பை கொண்டு பெண்ணவளின் முகத்தை வருண் துடைத்துவிட, அவனையே பார்த்திருந்த விழிமொழியாளி(ழி)ன் விழிகளில் இருந்து நீர் மணிகள் வழிந்தோட, வருணனுக்கு தெரியும், அவளின் கண்ணீருக்கு இன்று தான்தான் காரணம் என்று.

செல்பி எடுத்துவிட்டு அவளின் முகத்தைப் பார்த்தவனுக்குத் தெரியாதா?

பெண்ணவளிடம் கொந்தளித்த பொறாமையும், கோபமும்.

அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டபடியே அவன், “ஸாரி” என்றான், அவளிற்கு மட்டும் கேட்கும் குரலில்.

அதில் அவளின் கண்கள் மேலும் கலங்க, அவனையே பார்த்திருத்தவள், தன் பிறப்பிலேயே கொண்ட தைரியத்தாலும், துடுக்குத்தனத்தாலும் “ஐ லவ் யூ வருண்” நொடிநேரம் தாமதிக்காமல் எதற்கும் தயங்காது சொல்லிவிட, அவளின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தவனின் ஆடவணின் கை அப்படியே நின்றது. அவனின் மனம் அதிர்ந்தாலும், உள்ளுக்குள் ஏதோ குளுமையாய் பரவுவதை அவனால் அனுபவிக்காமல் இருக்க முடியவில்லை.

வர்ஷித், சம்யுக்தா பற்றி சொல்லவே தேவையில்லை. ஏற்கனவே வித்யுத்தின் செயலில் சிலைபோல் நின்றிருந்தனர். ஏனெனில் இருவருக்கும் தெரியும், அவன் எப்படி என்று. பெண்களிடம் பேசினாலும் அனைவரையும் தள்ளி நிறுத்தியே வைத்திருப்பவன் அவன். இதுவரை அவனை நெருங்கி இருந்த பெண்கள் அவனின் குடும்பத்துப் பெண்கள் மட்டும்தான். (சம்யுக்தாவும் அவங்க குடும்பத்துப் பெண்தான்)

அப்படியிருப்பவன் சம்யுக்தா இருக்க அவளைத் தாண்டிச் சென்று, யாழின் கண்ணீரை தனது கைக்குட்டையால் துடைத்துவிட்டது இருவருக்கும் அதிர்ச்சி தான். இதில் சுற்றம் மறந்து, அவனின் முகத்தை பார்த்து யாழ் நேராய் சொன்ன, ‘ஐ லவ் யூ’வில் இருவரும் பனிக்கட்டியாய் உறைந்தேவிட்டனர்.

வித்யுத் எதுவுமே பேசாமல் அவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தபடியே நிற்க, அவனின் விழியை வைத்து அவளால் எதையும் யூகிக்க முடியவில்லை. தன் காதலை அவன் நிராகரிக்கப் போகிறான் என்று நினைத்தவள், அவனைத் தாண்டிச் செல்ல அவன் அப்போதும் எதுவும் பேசவில்லை. ஏன் திரும்பி அவள் செல்வதைக் கூடப் பார்க்கவில்லை.

“வித்யுத்! யாழ் போறாடா” சம்யுக்தா, வர்ஷித் இருவருமே அவளின் கண்ணீர் தாளாமல் பாவமாகச் சொல்ல, அவனோ கொஞ்சமும் அசையமாட்டேன் என்பது போல நின்றிருந்தான். இருவரும் அழைத்தபோதும் யாழ் நிற்காமல் கிளம்பியிருந்தான்.

மேஜைக்கு வந்து தன்னுடைய பேக்கை எடுத்தவள் வலியுடனே தனது அறைக்குக் கிளம்ப, மழை வலுக்கத் துவங்கியிருக்க, அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவள் இருந்தால் தானே! மழையில் நனைந்துகொண்டே நடக்கத் தொடங்கியவள், காற்று வேகமாய் அடித்தும், நடுநடுங்கும் அளவுக்கு இடி இடித்தும், வீம்போடு அறைக்குச் நடந்தே சென்றடைந்தாள்.

“வித்யுத்! எஸ் ஆர் நோ ஏதாவது ஒண்ணு சொல்லி இருக்கலாம்ல. பாவம்டா மழைல அழுதுகிட்டே போறா”

“பாவம் வித்யு. இரண்டு மூணு நாளாவே ஒரு மாதிரி இருக்கானு கூட்டிட்டு வந்தேன். இப்ப வாமிட் வேற பண்ணிட்டு மழைல அப்படியே போறா. அட்லீஸ்ட் அவளை போக வேணாம்னு சொல்லி இருக்கலாம்ல” வர்ஷித்தும், சம்யுக்தாவும் ஒவ்வொரு பக்கம் நின்று கேட்க, அவனிடம் பதிலில்லை.

***

அறைக்கு வந்த யாழ்மொழி, உடையை மாற்றிக்கொண்டு வந்து படுக்க, அவளுக்கு மீண்டும் ஓங்கரிக்கும் உணர்வு. ஆனால், உள்ளே ஏதாவது இருந்தால் தானே வெளியே வருவதற்கு.

வந்து படுத்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. சிறு வயதில் இருந்து ஆசைப்பட்டது அனைத்துமே கிடைத்து வளர்ந்தவள் அவள். அவர்கள் வீட்டின் இளவரசி, அதுவும் அஷ்வினின் செல்ல மகள்.

ஆனால், இது கேட்டு வாங்கும் பொருள் அல்லவே?

இதில் பெண்ணவளுக்கு வற்புறுத்தி வாங்க விருப்பமில்லை. மேலும் அவன் பதில் சொல்லாமல் அமைதியாய் நின்றது வேறு அவளுக்கு கோபத்தைக் கிளப்ப, பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாய் கண்ணீரை உகுத்துக் கொண்டிருந்தாள்.

‘ஏன் அவனுக்குத் தன்னை பிடிக்கவில்லை?’ என்ற கேள்வி வேறு மனதை அறுத்தது. அவசரமாய் எழுந்து சென்றவள் கண்ணாடியைப் பார்த்தாள். மேலிருந்து கீழே தன்னைப் பார்த்தவளுக்கு தன்னுடைய தோற்றத்தில் குறை கூறும் அளவு எதுவும் இல்லை என்று தோன்றியது.

‘ஒருவேளை என்னுடைய செயல்களும், வாயாடித் தனமும் பிடிக்கவில்லையா?’ நினைத்தவளுக்கு ஆத்திரமாய் இருக்க, தலையணையை எடுத்து அவள் எறிய, அது சரியாய் அவளைப் பார்க்க உள்ளே வந்த வர்ஷித்தின் தலையில் அடித்தது.

அவன் பின்னோடேயே வந்த சம்யுக்தாவும் யாழ்மொழியை பாவமாகப் பார்த்தாள்.

நேராக வந்து வர்ஷித்தின் முன் நின்ற யாழ்மொழி, “ஏன் வர்ஷித் அவனுக்கு என்னை பிடிக்கல?” கேட்க, அவனும் பதில் அளிக்காமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

“நீயாவது பேசு. ஏன் அவனுக்கு என்னை பிடிக்கல. சம்யு அவனுக்கு என்னை மாதிரி பொண்ணை பிடிக்காதா” கூம்பிய முகத்துடன் இருவரிடமும் கேட்டவள், பின் என்ன நினைத்தாளோ, “நான் தனியா இருக்கனும்” என்றிட, அவளுக்கு தனிமை அளித்த இருவரும் வெளியே வந்தனர்.

தனது படுக்கையில் வந்து விழுந்தவள், அதையே நினைத்து அலட்டிக் கொண்டிருக்க, மேலும் மழையில் வேறு நனைந்திருக்க, அவளின் உடல் காலை நான்கு மணியளவில், நூற்றியிரண்டு டிகிரியில் கொதிக்கத் தொடங்கியிருந்தது. தலையைத் சரியாக துவட்டாததால் சளியும் வேறு பிடித்துக்கொள்ள, குளிரில் நடுங்கி போர்வைகக்குள் புகுந்து அனத்திக் கொண்டிருந்தவளை தேற்றுவார் யாரும் இல்லாமல் போனது.

அதுவும் பக்கத்து அறையில் இருந்த சம்யுக்தாவிற்கு எதுவும் தெரியவில்லை.

அடுத்த நாள் காலை வந்த சம்யுக்தா, யாழ் இன்னும் எழாததைக் கண்டு உள்ளே சென்றவள், அவளின் அனத்தலில் வேகமாய் அவளருகில் சென்று, கையை தோழியின் நெற்றியில் வைத்துப் பார்த்தவள் பதறித் துடித்துவிட்டாள்.

யாழ்மொழியிடம் சம்யுக்தா ஏதேதோ தட்டி எழுப்பிக் கேட்க, அவளால் பதில் அளிக்க முடியவில்லை.

அதுவும் யாழ்மொழியின் முனகல் மிகவும் தீனமாய் ஒலிக்க, அவளுக்கு அழுகையே வந்தது. உடனே வர்ஷித்துக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லியவள், யாழ்மொழியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றாள். யாழ்மொழியால் விழிகளையும் திறக்க இயலவில்லை. அதுபோல நடக்கவும் முடியவில்லை. சொல்லப்போனால் அவளுக்கு எங்கு இருக்கிறோம் என்ன ஏது என்றே புரியவில்லை.

அவளை பார்த்த மருத்துவர் அவளுக்கு ஊசியைக் குத்த, “அப்பா!” என்ற மெல்லிய குரல் மட்டும் வெளிவந்தது. அவளை சம்யுக்தா வெளியே அழைத்து வரவும் வர்ஷித் வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது.

வந்தவன் யாழை மற்றொரு பக்கம் தாங்க, ஒரு நிமிடம் வருணோ என்று நிமிர்ந்து பார்த்தவள், வர்ஷித்தைக் கண்டதும் அமைதியாய் எதுவும் பேசாமல் நடக்க, மூவரும் வெளியே வர, வித்யுத் காரின் மேல் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாய் மூவரையும் பார்த்தபடி நின்றிருந்தான்.

அரை மயக்கத்திலேயே அவனைப் பார்த்தவள், முகத்தைத் திருப்பிக் கொள்ள அவனும் திருப்பிக் கொண்டான். அவள் வரும்முன்னே ஒரு கேப்பை புக் செய்திருந்தவன், அவள் வந்ததும் முன்னே அமர்ந்துகொள்ள, யாழ்மொழியை நடுவே அமரவைத்து வர்ஷித்தும், சம்யுக்தாவும் இருபக்கமும் அமர்ந்துகொள்ள, யாழ்மொழியின் விழிகள் தன்னால் மருந்தின் வீரியத்தில் சொறுகியது.

சம்யுக்தாவின் தோளில் சாய்ந்தவள் சில நிமிடங்களிலேயே தூங்கியிருக்க, அவள் தூங்கியதை உறுதி செய்து கொண்ட வித்யுத் வருணன், ட்ரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லியவன் கீழே இறங்கி, “வர்ஷித் முன்னாடி வா” அவனை முன்னே வந்து அமரச் சொன்னவன் பின்னால் ஏறிக்கொண்டான்.

கார் கிளம்பியவுடன், யாழ்மொழியின் தோளை மென்மையாய் பற்றியவன் அவளைத் தன்னருகில் இழுத்து அவளின் தலையை தன் தோளில் அவள் தூக்கம் கலையாத வண்ணம் சாய்த்துக்கொள்ள, வர்ஷித்தும், சம்யுக்தாவும் அவனின் மனநிலை புரியாத நிலையில் இருந்தாலும், உள்ளுக்குள் ஒரு இதம்பரவ அவனுக்குத் தெரியாமல் சிரித்துக் கொண்டனர். அவளைத் தன் தோளில் தாங்கியவன் அவளின் கரத்தோடு கரம் கோர்த்து ஆதரவாய் கையைத் தட்டிக்கொடுத்தவன் அவள் முகம் பார்த்தான்.

முன்னுச்சி முடிகள் சிலது அவள் வதனத்தில் விழுந்து, காய்ச்சலால் விளைந்த வியர்வையில் அவள் முகத்தோடு ஒட்டியிருக்க, அவளின் முடிகளை ஒதுக்கிவிட்டவன், அவளின் முகத்தைத் துடைத்தும்விட்டான்.

வர்ஷித்துக்கோ, ‘டேய் டேய் போதும்டா’ என்றிருத்தது. அவனும் தான் காதலிக்கிறான். பார்ப்பது அரிது. பார்த்தாலும் பேசுவது கிடையாது. ஒரு ஃபோன் கிடையாது. இதில் தம்பி வேறு அவனை முந்திக் கொண்டு சென்றால் அவனுக்கு பொறாமை வராத என்ன?

சம்யுக்தா இருவரையும் விழி நிறைய பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து மனதுக்குள் குளிர்ந்து போனவள், மனநிறைவுடன் பார்வையை வெளியே திருப்பிக் கொண்டாள்.

இதையெல்லாம் உணரும் நிலையில் அவள் இருந்தால் தானே!

இருவரும் தங்கும் இடம் வந்திருக்க, யாழ்மொழியை எழுப்ப வந்த சம்யுக்தாவை உதட்டின் மீது கை வைத்து தடுத்த வருண், அவளைத் தன் இருகைகளாலும் ஏந்த, யாழ் எதையும் உணராத உறக்கத்தில் நன்கு ஆழ்ந்திருக்க, சம்யுக்தா வர்ஷித்தைப் பார்க்க, அவனும் புன்னகையுடன் சம்யுக்தாவைப் பார்க்க, சம்யுக்தா சென்று கதவுகளை அவன் வருவதற்கு ஏதுவாக திறந்து வைக்க, யாழின் அறையில் தன்னவளைக் கிடத்தியவன்,

“பீவர் 103 ஏறுற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க இரண்டு பேரும்” கடிய, சம்யுக்தா கேலியாய் அவனைப் பார்த்துச் புன்னகைத்தாள். வர்ஷித்தும் இரு கைகளையும் கட்டிக்கொண்டு, தமையனையே பார்த்துக் கொண்டிருந்தான். மகிழ்ச்சி கலந்த புன்னகையோடு!

இருவரின் பார்வையிலும், “ப்ச்” என்று சலித்தவன், இருவரும் தங்களுக்குள் கிசுகிசுத்தபடி வெளியே செல்ல, யாழ்மொழியின் முகத்தை நீண்ட நேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் விழிப்பதற்குள் சென்றுவிட வேண்டும் என்று, சம்யுக்தாவிடம், அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டியதை சொல்லிவிட்டுக் கிளம்பினான். முக்கியமாக அவளிடம் ஹாஸ்பிடலில் இருந்து வந்தது எதை பற்றியும் கூற வேண்டாம் என்று கட்டளையிட்டுவேறு விட்டுச் சென்றிருந்தான்.