யாழ்-13

IMG-20210214-WA0021-e45e43c3

யாழ்-13

அந்த பிரத்தியேக மாலில் உள்ள “காஃபி டே” வில் எதிரெதிரெ அமர்ந்திருந்தனர்
கீர்த்தியும் ஹர்ஷாவும். வந்ததில் இருந்து ஒரு மணி நேரமாக அப்படியே
உட்கார்ந்திருப்பவனைக் கண்டு கீர்த்திக்கு எரிச்சல் மண்டியது.

அவள் ஒரு காஃப்ச்சீனோவை முடித்து அடுத்த ஆர்டர் செய்த கோல்ட் காஃபியே வந்தது. “எவ்வளவு நேரம் ஹர்ஷா
இப்படியே உக்காந்திருப்ப” என்று தனது கோல்ட் காஃபியைக் குடித்தபடியேக்
கேட்டவளைக் கண்டு அவனுக்கு எரிச்சல் வந்தது.

“நான் இங்க பேசாம இருக்க.. இவ கொஞ்சம் ஆச்சு சமாதானம் பண்றாளான்னு பாரு.. எனக்கென்ன-னு
இருக்கா பாரு” என்று நினைத்தபடி காஃபியை உறிஞ்சிய படிக் கேட்க
கீர்த்தியை முறைத்தான்.

“ஏன் ஹர்ஷா முறைக்கற?” – என்று சாதாரணமாகக் கேட்டாள் கீர்த்தியோ.

“உன்னால எப்படி கீர்த்தி சாதரணமா இருக்க முடியுது” என்று வினவினான்
ஹர்ஷா.

“ஏன்?” – என்றவள் மீண்டும் ஒரு விடறு காஃபியை விழுங்கினாள்.

“இல்ல நீ பர்ஸ்ட் இதக் குடிச்சு முடி.. அப்புறம் பேசாலாம்” என்று நக்கலாக அவன் முறைத்துக் கொண்டே சொல்ல..

“ஓகே ஹர்ஷா” – என்று தலையை ஆட்டியபடியே அவள் காஃபியைக் குடிக்க..

“ஆண்டவா….” என்று மனதிற்குள் தலையில் அடித்துக் கொண்டான் ஹர்ஷா.

கடைசி சொட்டு வரைக் குடித்தவள் “ம்ம்… சொல்லு ஹர்ஷா” – என்றாள் கீர்த்தி.

“கீர்த்தி…” என்று பல்லைக் கடித்தவனுக்கு ஒரு பெருமூச்சை மட்டுமே விட முடிந்தது. அவனால் அவளைத் திட்ட முடியவில்லை.

“சொல்லு ஹர்ஷா.. ” என்றாள்
கைகளைக் கட்டியபடி.

“நேராவே கேக்கறேன்… உனக்கு நம்ம இரண்டு பேமிலிக் குள்ள நடந்தது
தெரியும் தானே.. நீ என்ன இவ்வளவு சாதாரணமா இருக்க.. அதாவது நடந்த
பிரச்சினை?” என்று நேரடியாகவே கேட்டான் ஹர்ஷவர்தன்.

“அதுக்கு என்ன?” – என்று கீர்த்தி கேட்க.. ஹர்ஷா ஒரு கையால் வாயைப்  பொத்தினான்.

“சரி அன்னிக்கு நடந்ததை பத்தி நீ என்ன நினைக்கற?” என்று கேட்டான்.

“அது என்ன நினைக்க.. என் அண்ணாக்கு உன் அக்காக்கு கல்யாணம் ஆச்சு.. இப்ப  கொஞ்சம் தகராறு ஆயிருக்கு.. ஆனா அதெல்லாம் சரி ஆகிடும்” என்று கீர்த்தி முடிக்க.. ஹர்ஷா இதுக்கு மேல் என்ன
பேச என்பதைப் போல இருக்கையில் பின்னால் சாய்ந்து வலது பக்கத்  தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான்.

“ஹர்ஷா…” என்று கீர்த்தி அழைக்க.. ஹர்ஷா அப்படியே தான் அமர்ந்திருந்தான். தலையில் கை வைத்து
யோசித்தபடியே அமர்ந்திருந்தான்.

“ஹர்ஷா இங்க பாரு” என்று மறுபடியும் கூப்பிட.. ஹர்ஷாவின் நிலை
மாறவில்லை.

“ஹர்ஷா….” என மறுபடியும் கீர்த்தி அழைக்க.. “டென்ஷன் பண்ணாத கீர்த்தி” என்று இரைந்தான் ஹர்ஷவர்தன்.
அவ்வளவு தான் கீர்த்திக்கும் கோபம் வந்துவிட்டது.

சிறிது நேரம் எதுவும் பேசாமல்
மௌனமாய் அமர்ந்திருந்தவளை ஏறிட்டுப் பார்த்தான். முட்டிக்கு கீழ் வரை
இருந்த நீ லென்த் ஆரஞ்ச் நிற
மேக்ஸியை அணிந்து மெழுகு பொம்மை போல அமர்ந்திருந்தவளைப்
பார்த்தவனுக்கு சிறிய முறுவல் பூத்தது. அதுவும் கோபமாக அமர்ந்திருப்பவளைப்
பார்த்தவனுக்கு அவளுடைய இயல்பான தன்மை பிடித்தது.

“கீர்த்தி…” என்று அழைக்க அவள் முகம் இறுகியது.

“கீர்த்தி..” என்று மறுபடியும் அழைக்க.. அவளோ கண்டு கொள்ளவே இல்லை..

ஒரு குறும்பான எண்ணம் உள்ளுக்குள் பரவ “ஓய் ஆரஞ்சு மிட்டாய்” -என்றழைக்க கீர்த்தி சட்டென்று திரும்பினாள்.

“வேணாம் ஹர்ஷா..கோவத்தக்
கிளப்பாத.. அப்புறம் அடிச்சி பறக்க விட்டிடுவேன் உன்ன” என்று கீர்த்தி முறைக்க.. அவளைப் போலவே அவளிடம்
முறைத்து பழித்தான் ஹர்ஷா.

“நான் போறேன் போ” என்று எழுந்து அவன் இருக்கையைக் கடந்து வெளியே செல்ல முயன்றவளை கையைப் பிடித்து நிறுத்தினான்.

அவன் கையைப் பிடிக்க கோபமாத் திரும்பியவள் “என்ன?” என்று முகத்தை உர் என்று வைத்தபடி வினவ..
ஹர்ஷாவோ அவளிடம் தான் மயங்கிக் கிடக்கும் அந்த இரு விழிகளை ஆழ்ந்து பார்த்து கண்களைச் சிமிட்டினான்.
அவனது செயலில் டக்கென்று சுற்றுப் புறம் மறந்து நின்றவள் அவனை முறைக்க முயன்று சிரித்தே விட்டாள்.

“சரி உக்காரு” என்றவன் தன்
அருகிலேயே அவளை அமர வைத்துக் கொள்ள.. கீர்த்தியும் எதையும் யோசிக்காமல் அமர்ந்தாள்.

“ஹர்ஷா.. உன்கிட்ட ஒண்ணு
சொல்லனும்” என்றவள்.. முன்னாடியே நடந்த ராக்கிங் பிரச்சனையை அவனிடம்
ஒப்பித்தாள். அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருந்தவன் “உன் அண்ணனுக்கு ஹெட்வெயிட் அதிகம் தான்” என்று ஏளனமாகக் கூறினான்.

“என் அண்ணா ஒன்னும் அப்படி இல்ல ஹர்ஷா..” என்று சண்டைக் கோழியாய்
அண்ணனிற்காக சிலிர்த்தாள் கீர்த்தி.

“ஒஹோ..” என்றவனிடம் எதுவும் பேசவில்லை கீர்த்தி.

பத்து நிமிடம் கழித்து ஆரம்பித்தாள். “ஹர்ஷா.. நடந்தது நடந்திருச்சு.. என்
அண்ணா என்ன உன் அக்காவ
கொடுமையா படுத்தப் போறாரு.. அது அவங்க லைஃப் ஹர்ஷா.. கொஞ்ச நாள்ல
எல்லாம் சரி ஆகிடும்.. கல்யாணம் இப்படி ஆகிடுச்சுனா அவங்க ஹாப்பியா இருக்க மாட்டங்களா சொல்லு.. நம்ம லைஃப்ல ஏன் அத நினைச்சு நம்ம சண்டை போடணும்” என்று அவள் தன் ஆரஞ்சு
சுளை மாதிரி இருந்த இதழ்களை வைத்து அழகாகப் பேச.. அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டு  இருந்தான். அதுவும் அவள் கடைசியாக “நம்ம லைஃப்” என்று சொன்ன அர்த்தத்தை அவன் உணர்ந்த போது
உடம்பு எல்லாம் அவனிற்கு சிலிர்த்தது. கீர்த்தியும் தன்னை அறியாமல் மனதில் நினைத்ததைப் பேசிவிட்டாள்.

அவன் பார்வையை உணர்ந்தவள் அப்போது தான் அவனுடம் கொஞ்சம் நெருக்கமாக அமர்ந்திருப்பதை உணர்ந்து திடீரென விலகி அமர்ந்தாள். ஏனோ அவளுக்கு அவனுடைய கையுடன்
வளைத்து உட்கார்ந்திருந்தது என்னவோ போல் ஆகிவிட்டது. அவனை நிமிர்ந்து பார்க்க ஹர்ஷாவோ “ஏன்டி பக்கத்துல
உக்கார பிடிக்கலையா?” என்று நேராகவே கேட்க அவளோ “பே”வென விழித்தாள்.

“ஏய் என்ன முழிக்கற” என்று அவள் முகத்தின் முன் கை ஆட்ட.. அவளோ கனவில் இருந்து எழுந்தது போல
தலையை சிலுப்பினாள்.

“ஒன்னு இல்ல ஹர்ஷா.. கிளம்பலாமா?” என்று பேச்சை மாற்றி எழுந்தாள் கீர்த்தி.

“கீர்த்தி.. என் அக்கா கொஞ்சம் பிடிவாதம் தான்.. ஆனா மனசுல எதுவும் வச்சிக்க
மாட்டா கீர்த்தி.. அவள கொஞ்சம் பாத்துக்கங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா  இருக்கு…” என்று அவன் சொல்ல அவனது முகமும் குரலுமே சொன்னது அவன் வேதனையை.

“கண்டிப்பா ஹர்ஷா.. நாங்க எல்லாம் இருக்கோம்.. டோன்ட் வொர்ரி” என்று உறுதி அளித்தாள் கீர்த்தனா ஆதர்ஷினி.

“ம்ம்” என்றவன் எழ.. அவனுடன்
இணைந்து நடந்தாள் கீர்த்தி. கார் பார்க்கிங் வரை வந்தவன் “அங்க பாரு உன் டிரைவர்.. அவன் வீட்டுல சொல்லிட்டா என்ன பண்ணுவ?” என்று
வினவ..

“சொல்ல மாட்டாரு அந்த அண்ணா..” என்றவள்.. “சரி பை ஹர்ஷா” என்றவளிடம்.. “ஒரு நிமிஷம்” என்றான்
ஹர்ஷா.

“என்ன ஹர்ஷா” – கீர்த்தி..

“இன்னிக்கு அழகா டால் மாதிரி இருக்க கீர்த்தி..” என்று சொல்ல கீர்த்தியின் முகமெல்லாம் குங்குமமாக
சிவந்துவிட்டது. யாரும் அவளிடம் அஸ்வினிற்கு பயந்தே பேசியது இல்லை..
அப்படி இருக்க அவன் தங்கை தான் என்று தெரிந்தும் ஹர்ஷவர்தன் தைரியமாகப் பேசியது அவளை ஏதேதோ
உணர்வுகளுக்கு இழுத்துச் சென்றது.

அவளை சீண்ட நினைத்தவன் “கீர்த்தி… இந்த ட்ரெஸ் கூட உனக்கு அழகா தான் இருக்கு.. க்யூட்டா இருக்க” என்று சொல்ல அதற்கு மேல் கீர்த்தி அங்கு நிற்க முடியாதவளாய் காரை நோக்கி நடக்க
ஆரம்பித்தாள். நடுவில் கீர்த்தி திரும்பிப் பார்க்க அவளின் விழிப் பார்வைக்காகவே
ஏங்கியவன் கண்களைச் சிமிட்ட.. கீர்த்தியின் கால்கள் வேகம் பிடித்து வந்து காரில் ஏறியது.

காரில் ஏறிய இருவருக்கும் இருவரின் நினைப்பும் மனதிற்குள் சில்லிட்டது.
ஹர்ஷாவுக்குக் கீர்த்தியை முதல் சந்திப்பிலேயே பிடித்துவிட்டது. ஆனால் அவளிடம் மற்ற பெண்களைப் போல அவனால் பழக முடியவில்லை. ஏனோ அவளின் விழிப் பார்வையாலேயே அவன்
கரைந்து விடுகிறான். அவளிடம் பேச வந்தது கூட அவ்வப்போது  மறந்துவிடுகிறது. கீர்த்திக்கும்
ஹர்ஷாவின் பார்வையிலும் கண் சிமிட்டலிலும் அவளது ஒவ்வொருசெல்களும் உருகிக் கொண்டு இருந்தது. ஆனால் இருவரும் இருவரின் மேல்
இருந்த ஆசையை சொல்லிக்
கொள்ளவில்லை. உள்ளுக்கள்ளேயே வைத்து பரிமாறிக் கொண்டிருந்தனர்.
நேற்று நடந்ததே மீண்டும் ஹர்ஷா கீர்த்தி மனதில் எழுந்தது..

நேற்று நடந்தது இதுதான்..

“என் நம்பிக்கைய அழிச்சிட்டுயே” என்று தன் தந்தை கத்த.. முதலில் புரியாமல் நின்றவளுக்குப பின் புரிந்தது.

“அப்பா….” என்று வாயைத்
திறந்தவளுக்கு வார்த்தை சிக்கியது. வெளியில் வரவில்லை.

“என்ன நடந்துச்சுனு தெரியாம.. ஏன் இப்படி பண்ற சக்திவேலு” என்று சிவக்குமார் தம்பியை அடக்க நினைக்க.. அவருக்கோ அதெல்லாம் தலையில்
ஏறவில்லை.

“இதுக்கு மேல என்ன நடக்கணும் அண்ணா.. நேத்து எவ்வளவு நம்புனேன்.. உங்க முன்னாடி தானே பேசினேன்..
பாத்திங்கள்ள.. அப்போ கூட எதுவும் வாயைத் திறக்கல.. இன்னிக்கு ப்ரஸ்கிட்ட குடுத்த பேட்டியைப் பாத்திங்கள?” என்று அவர் வினவ சிவக்குமார் மௌனமாய்
நின்றார்.

“அப்பா….” – என்று ராஷ்மிகா அழைக்க.. அவளின் கண்களிலோ அவ்வளவு
வெறுமை.. தந்தை தன்னை
நம்பவில்லையே என்ற ஏக்கம் கண்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

“அந்த வார்த்தை சொல்றக்கு இனி உனக்குத் தகுதி இல்ல…” என்று கர்ஜித்தவர்.. “என் கிட்ட எப்படி பொய் சொல்ல முடிஞ்சது உன்னால” என்று
கேட்டார் சக்திவேல். ராஷ்மிகா செய்த முதல் தவறு அஸ்வின் பற்றி அவரிடம் மறைத்தது. எல்லாவற்றையும் சொல்பவள் இதை ஏன் சொல்லவில்லை
என்ற எண்ணம் எழுந்ததில் அவரின் தவறில்லை. இரண்டாவது தவறு ஃபோட்டோ லீக் ஆன போது எதையும்
முழுதாக சொல்லாமல் மேலோட்டமாகச் சொன்னது.. அதுவே அவள் சொல்ல
வருவதை சக்திவேலைக் கேட்கவிடாமல் மூன்றாவது தவறாக ஆனது.

“இல்லப்பா… நான்.. நான்” என்று ராஷ்மி பேச முடியாமல் அழுகையை அடக்கித் திக்க.. அங்கிருந்த அனைவருக்கும் மனம் கனத்தது.

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. இனியும் என்ன சொல்லப் போற” என்று சீரியவருக்கு மகளிடம் துளி கூட கோபம்
குறையவில்லை. மகள் பிரஸிடம் குடுத்ததே அவரை நம்ப வைத்துவிட்டது.

“சக்திவேல் அடுத்து என்ன
பண்ணலாம்னு யோசிப்போம்” என்று சிவக்குமார் சொல்ல..

“நான் சொல்றதை மட்டும் எல்லாரும் கேளுங்க” – என்று அஸ்வினின் குரல் கேட்க எல்லோரும் அவனிடம் திரும்பினர்.

“இந்த கல்யாண சீதனம்னு
சொல்லுவாங்கள.. உங்க வீட்டுல இருந்து எனக்கு எதுவும் வேணாம்.. ஆனா”
என்றவன் சிவக்குமாரின் மேல்
பார்வையைப் பதித்து “கலெக்டர் சிவக்குமார் கிட்ட இருந்து எனக்கு சில
கையெழுத்து வேணும்” என்று அஸ்வின் சொல்ல.. கலெக்டர் சிவக்குமார் அவனை தான் ஆழ்ந்து பார்த்தார். ஆம் அவர் தான் பேக்டரி ஆக்ஸிடென்டில் பேக்டரியை இழுத்து மூடச் சொன்ன கலெக்டர் சிவக்குமார்.

“எங்க பேக்டரிய க்ளோஸ் பண்ணாம.. ரன்னிங்ல இருக்கலாம்னு சொல்ல ஒரே
ஒரு கையெழுத்து” என்றான் அஸ்வின் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி. ராஷ்மிகாவிற்கோ இவன் என்ன மனுஷனா இல்லே மிருகமா என்று இருந்தது.

“போடலைனா?” – என்று கேட்டார் சிவக்குமார்.

“உங்க பொண்ண இப்பவே கூட்டிட்டு போலாம்” – இரக்கமே இல்லாமல் பேச அனைவரும் அதிர்ந்தனர்.

“குமரா.. ” என்று தந்தை அழைக்க.. “அப்பா ப்ளீஸ்” என்றான்.

“என் அண்ணன் கையெழுத்து போட மாட்டாரு.. நாங்க யாரையும் இந்த வீட்டுல இருந்து கூட்டிட்டு போக மாட்டோம்” என்ற சக்திவேல் “அண்ணா.. வாங்க  கிளம்பலாம்” என்று சொல்ல சிவக்குமார் சிலையாய் நின்றார்.

ஐந்து நொடி யோசித்த சிவக்குமார் “கையெழுத்து எங்க போடணும்” என்று
கேட்க..

“பெரிப்பா…” என்று அதிர்ந்தாள்
ராஷ்மிகா. அவளுக்கு அவளது
பெரியப்பாவைப் பற்றி நன்கு தெரியும்.. அவரது நேர்மையைப் பற்றியும்.. அப்படி இருப்பவரை இப்படி மிரட்டி அஸ்வின் குமார் கையெழுத்து வாங்கப் போவது.. அதவும் தனக்காக என்று யோசிக்கும் போதே ராஷ்மிகாவிற்கு வேதனையைத் தந்தது.

“பெரிப்பா.. வேண்டாம் பெரிப்பா.. கையெழுத்துப் போடாதிங்க” என்ற ராஷ்மிகா சிவக்குமாரிடம் சென்று பேச..
அஸ்வின் குமார் சென்று ஒரு பத்திரத்தை எடுத்து வந்தான்.

“அண்ணா வேணாம்னா…” என்று சக்திவேலும் கெஞ்ச..

“பின்ன புள்ளைய கூட்டிட்டு போக சொல்றியா?.. நியூஸ் எல்லாம் வந்துடுச்சு சக்திவேலு.. புள்ள வாழ்க்கை தான் முக்கியம்” என்று அழுத்தம் திருத்தமாகச்
சொன்னவர் கையெழுத்துப் போட்டார்.

அதில் கையெழுத்திட்ட சிவக்குமார் அஸ்வினை முறைத்து “என் பொண்ண
வச்சு என்கிட்ட கையெழுத்து வாங்கிட்ட இல்ல” என்று கேட்க.. தோளைக் குலுக்கினான் அஸ்வின்.

“பாத்தியா உன்னால பாத்தியா” என்ற சக்திவேல் கையை ஓங்க.. அவரின்
கையைப் பிடித்தான் அஸ்வின்.

அனைவரும் அதிர “இனி நீங்க இவள அடிக்கறத என்னால அனுமதிக்க முடியாது” என்றவன்.. அவரின் கையை
விட்டு “நடந்து பிரச்சினைக்கு நான் தான் காரணம்” என்று கோயிலில் நடந்ததைக்
கூறினான்.

“உங்க பொண்ணு மேல எந்தத் தப்பும் இல்ல.. நான் சொல்லி தான் அவ அப்படி பேசுனா…” என்று அஸ்வின் சொல்ல..
சக்திவேலோ மகளை முறைத்தார்.

“அவன் சொன்னானா கேட்டிடுவியா நீ.. உனக்கு புத்தி இருக்குல.. அத்தனை பேர்
முன்னாடி உன்ன என்ன செஞ்சிட முடியும்.. இல்ல நாங்களாம் இல்லனு
நினைச்சிட்டியா?” என்று இரைந்தவர்.. “அத்தனை ப்ரஸ் கேமரா முன்னாடி உண்மையை சொல்ல முடியாதா என்ன? என் பொண்ணு தைரியமானாவன்னு நினைச்ச.. இப்படி பண்ண நீ இனி என்கிட்ட பேசாத.. என்ன வந்து பாக்காத” என்று ராஷ்மிகா நிலை அறியாமல்
பேசிக் கொண்டே போனவர் கிளம்பினார்.

“அப்பா…” என்று அழைக்கத் திரும்பியவர் மனைவியைப் பார்த்து “கல்யாணி கிளம்பு…” என்று அதட்ட.. மகளையும்
கணவரையும் மாறி மாறி அழுதபடி பார்த்துக் கொண்டிருந்த கல்யாணி
கணவனின் அதட்டலில் வாயில்லா பூச்சியாய் அவர் பின் சென்றார்.

தந்தை தன்னை நம்பாமல் செல்ல.. கண்களில் இருந்து கண்ணீர் வழிய “அப்பா” “அப்பா” என்று அழைத்துக்
கொண்டே ராஷ்மிகா அவர் பின்னே செல்ல.. அவரோ செவி இல்லாதவர் போல மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

அவர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய பின் ராஷ்மிகாவின் அழுகை
கேவலாக மாறி உருவெடுத்தது. ராஷ்மிகாவின் தோளைத் தொட்டு சிவக்குமார் அவளைத் திருப்ப “பெரிப்பா..
அப்பா என்ன நம்பலை பெரிப்பா.. என்ன நம்பாம போறாரே பெரிப்பா” என்று கதற ஆரம்பிக்க..

“அவன் அப்படித் தாண்டா அவசரக் குடுக்கை.. கொஞ்ச நாள்ல சரி ஆகிடும் ராஷ்மி.. அழாத டா.. இங்க பாரு” என்று
சமாதானம் செய்ய அவளது அழுகையோ நின்ற பாடில்லை. அங்கிருந்த அனைவருக்கும் ராஷ்மிகாவின் நிலை
பரிதாபத்தைத் தர.. அஸ்வினோ கல்லாய்
நின்றிருந்தான்.

“பெரிம்மா.. நான் உங்க கூடையே வரேன்.. என்ன கூட்டிட்டு போங்க” – என்று தன்
பெரியன்னை விஜயலட்சுமியிடம் கெஞ்ச..

“நீ எப்போ வேணாலும் அங்க வாடா.. ஆனா அவருதான் உன்ன கல்யாணம் பண்ணவரு.. அவர் கூட வா” – என்று நின்றிருந்த அஸ்வினைக் கை காட்டி
விஜயலட்சுமி ராஷ்மிக்கு புரிய வைக்க முயற்சி செய்ய..

“அம்மா அக்காவ கூட்டிட்டு போலாம்” – என்று ஹர்ஷா தன் அக்காவின் நிலை சகிக்க இயலாதவனாய் சொல்ல.. “நீ
சும்மா இரு ஹர்ஷா.. உனக்கு
இதெல்லாம் புரியாது” என்று மகனை ஒரு அதட்டு அதட்டினார் விஜயலட்சுமி.
ஹர்ஷாவிற்கோ அஸ்வினைப் பார்க்கப் பார்க்க சொல்ல முடியாத ஆத்திரம் எழுந்தது.

“அப்பா.. நீங்க ஒரு கலெக்டரா இருந்தும் எதுவும் பண்ண முடியலையா? இவன் இப்படி பண்ணி அக்காவ கல்யாணம்
பண்ணியிருக்கான்.. நாம இப்ப அக்காவ கூட்டிட்டு போலாம்” என்று கோபத்தில் இரைய..

“அவ உன் அக்காங்கிறத விட இப்போ என் வைஃப்…” என்றவன் “உன் இஷ்டத்துக்கு
எல்லாம் அவள நீ கூட்டிட்டு போக முடியாது…” என்று அஸ்வினும் திருப்பிக் கொடுக்க.. அங்கு அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
கீர்த்திக்கோ மனதில் பயம் பிடித்தது. அவளது எண்ணத்தை பொய்யாக்காமல் மேலே நடந்தது.

“நீ யாருடா.. என் அக்காவ கூட்டிட்டு போக கூடாதுன்னு சொல்ல.. நீ இன்னிக்கு
வந்தவன்.. அவ 20 வருசமா எனக்கு அக்கா தான்.. எங்க குடும்ப சந்தோஷத்தையே அழிச்சிட்டு நியாயம் பேசறியா” என்று ஆவேசமாய் பேசிய
ஹர்ஷா.. அஸ்வினின் சட்டையைப் பிடிக்க.. அங்கிருந்த அனைவரும்
அதிர்ந்தே விட்டனர்.

“ஹர்ஷா…” என்று சிவக்குமரோடு சேர்ந்து
கீர்த்தியும் அவனின் பெயரை கத்தியே விட்டாள். ஆனால் சிவக்குமாரின் குரலும்..
அனைவரும் இருந்த அதிர்ச்சிக்கும் யாரும் கீர்த்தி கத்தியதைக்  கவனிக்கவில்லை.. ஹர்ஷாவைத் தவிர.

“ஆமா.. அவ உனக்கு அக்கா தான்.. யாரு இல்லைன்னு சொன்னா.. நான் இன்னிக்கு வந்தவன் தான்.. ஆனா
எனக்கு இருக்க உரிமை அங்கீகாரம் எல்லாம் வேற..” – என்று கண்களில் திமிரோடு பேசிய அஸ்வின்.. தன் சட்டை
மேல் இருந்த ஹர்ஷாவின் கைகளை பிரித்து எடுத்து ஹர்ஷாவின் கையைத் திருக.. அதைத் தடுத்த ஹர்ஷா.. மீண்டும் அஸ்வினை அடிக்கவே போக.. அங்க நடக்க இருந்த கைகலப்பு சிவக்குமார்
மற்றும் நகேஷ்வரனின் குரலில் அடங்கியது. ஆனால் என்றுமே எனக்கு நீ எதிரி தான் என்பது போல நின்றிருந்தது
இரு துருவங்களும்.

ஒருவழியாக ராஷ்மிகாவை சமாதானம் செய்து இருக்க வைக்க.. “அவ சின்ன பொண்ணு பாத்துக்கங்க” என்று கிளம்பும் போது விஜயலட்சுமி தழுதழுத்த குரலில் பேச.. செல்வமணி “நான் பாத்துக்கறேன்.. நீங்க தைரியமா கிளம்புங்க” என்றார்.

நகேஷ்வரனோடு தனியே பேசிக் கொண்டு வந்த சிவக்குமாரும்.. முன் இருந்த குழப்ப ரேகை இல்லாமல் கிளம்ப.. ஹர்ஷா மட்டும் அஸ்வினை எதிரியாய்
பார்த்துவிட்டு அக்காவை பிரிய
மனமில்லாமல் ஒருவித இயலாமையோடு கிளம்பினான்.

தன் குடும்பத்தார் எல்லோரும் சென்ற பின் “ராஷ்மிகா” என்றழைத்த செல்வமணி குரலில் திரும்பினாள்
ராஷ்மிகா.

“ரெஸ்ட் எடுக்கணும்.. ட்ரெஸ் மாத்தணும்னா அந்த ரூம் போம்மா..” என்று அவர்
சொல்ல அஸ்வின் முன் நிற்கு
பிடிக்காதவள் வேறு வழியின்றி உள் அறைக்குள் சென்றாள்.

உள்ளே சென்று படுக்கையில் அமர்ந்த அவளுக்கு கண்ணீர் கண்களில் இருந்து சிந்தியது. தந்தை தன்னைத் திட்டிய
ஒவ்வொரு வார்த்தைகளையும் நினைவு கூர்ந்து பார்த்தவளுக்கு நெஞ்சம்
வலித்தது.

அவளது கண்ணை யாரோ துடைக்க.. ராஷ்மிகா நிமிர்ந்தாள்.. செல்வமணி
தான். “அழாதே ராஷ்மிகா.. உன் அப்பா கண்டிப்பா மறுபடியும் உன்கிட்ட
பேசுவாரு” என்று அவர் ராஷ்மிகாவின் கண்ணைத் துடைத்து விட்டுவிட்டு…

“இந்தா.. இது புது நைட் செட்.. கீர்த்திக்கு வாங்கியது தான்.. நீ போட்டுக்கோ.. நாளைக்கு எல்லாம் வாங்கிக்கலாம்”
என்று உடையைத் தந்துவிட்டு வெளியே நகர.. கதவைத் தாழிட்டு விட்டு உடையை
மாற்றினாள் கீர்த்தி.

“அஸ்வின்…” என்று வெளியே வந்த செல்வமணி மகனை அழைக்க.. “சொல்லுங்க ம்மா” என்றான் அவனோ.

“ராஷ்மிகாவ சாப்பிட கூட்டிட்டு வா” என்று செல்வமணி சொல்ல…

“அவளே வரட்டும் ம்மா.. சும்மா அவள தாங்காதிங்க” – என்று அஸ்வின் தாயுடன்
வாதாடினான்.

“இங்க பாரு அஸ்வின்.. அந்த பொண்ணு பாவம்.. பேசாம சொன்னதை செய்” – என்று செல்வமணி கட்டளையிட..

“அவளா பாவம்.. விட்டா ஏழு ஊரை வாயாலேயே சாப்பிட்டுருவா” – என்று அவன் பேச்சு வாக்கில் சொல்ல..

“முன்னாடியே தெரியுமோ ராஷ்மிகாவை” – என்று ஜக்கில் தண்ணீர் ஊற்றி வைத்தபடி செல்வமணி மகனிடம் வினவ..

“இல்ல வந்து.. அம்மா..” என்று
குழந்தையாய் தன் அன்னையிடம் விழித்தவன் “நான் போய் அவளைக்
கூட்டிட்டு வரேன்” என்று அவள் இருந்த அறைக்குச் சென்றான்.

கதவு தட்டும் சத்தம் கேட்ட ராஷ்மிகா “வாங்க…” என்று கதவைத் திறந்து விட்டு
செல்வமணி என நினைத்துச் சொல்ல.. உள்ளே நுழைந்த அஸ்வினைக் கண்டு அவள் மனம் உலைக்களமாய்க்
கொதித்தது.

“நீ நினைச்சதை சாதிச்சுட்டேள… என்ன
அழ வைக்கணும்னு நினைச்ச.. அதையும் சாதிச்சுட்ட” என்று ராஷ்மிகா கேட்க.. தோளைக் குலுக்கினான் அஸ்வின்.

“ஏன்டா.. நீ சரியான ஆம்பிளையா இருந்தா என் பெரியப்பா கிட்ட நேரா
மோதிருக்கணும்.. அத விட்டுட்டு இப்படி பின்னாடி அவர அடிக்கற..” என்று
ராஷ்மிகா அவனை இகழ்ச்சியாய் கேள்வி கேட்க.. வீட்டிற்கு வெளியே இருக்கும்
அஸ்வின் குணம் வெளியே வந்தான்.

“ஏய்…” என்று ஒரு நிமிடம் அவள் வார்த்தைகளில் குரலை உயர்த்தியவன் “நான் ஆம்பிளையா இல்லையான்னு
உன் கிட்ட ப்ரூப் பண்ண அவசியம் இல்ல.. ஏதோ ரொம்பத் தான் துள்ளற.. அப்ப உன் பெரிப்பன் சொல்ற வரைக்கும் உன் அழகுல மயங்கி தாலி கட்டுனேனு
நினைச்சியா?” – என்று ஏளனமாய்க கேட்டவன் “இந்த உலகத்துல நீதான் கடைசி பொண்ணா இருந்தாக் கூட.. நான் உன்னைத் தொட மாட்டேன் டி” என்று அவன் சத்தியம் போல் சொல்ல…

“நானும் அப்படித் தான்.. இந்த உலகத்துல கடைசி ஆம்பிளையா நீ இருந்தாக் கூட… உன் பக்கம் சாய மாட்டேன்” என்று ராஷ்மிகா சபதமிட.. இருவரும் சண்டைக்
கோழிகளாய் நின்றனர்.

“அஸ்வின் ராஷ்மிகாவ கூட்டிட்டு வா” – என்று வெளியில் இருந்த
செல்வமணியின் குரல் கேட்க.. ராஷ்மிகா அஸ்வினை முறைத்த படியே வெளியே
சென்றுவிட்டாள்.

சாப்பிட்டு முடிக்க… “ராஷ்மிகா நீ இங்க கீழ் ரூம்லையே இரண்டு நாள் இருடா..” என்று செல்வமணி சொல்ல.. தலையை ஆட்டியவள் அரை குறையாய் சாப்பிட்டு
முடித்து எழுந்தாள்.

எல்லோரும் உறங்கச் செல்ல தன் அறைக்குள் நுழைந்த கீர்த்தி.. ஃபோனை எடுத்து ஹர்ஷாவிற்கு அழைத்தாள்.
அவன் கட் செய்ய… “அட்டென்ட் மை கால் ஹர்ஷா” என்று வாட்ஸ் ஆப்பில் அனுப்பினாள்.

“நான் கோபத்துல இருக்கேன் கீர்த்தி.. ஐ வில் டாக் டு யூ லேட்டர்” என்று அவன் அனுப்ப..

“என் மேல கோபமா?” – என்று கீர்த்தி அனுப்ப..

“இல்ல…” – என்று அனுப்பினான் ஹர்ஷா.. பின் கீர்த்தி எதுவுமே அனுப்பவில்லை. சிறிது நேரம் கழித்து.. “காஃபி டே..
எக்ஸ்பிரஸ் அவென்யூ மால்.. மதியம் 2.00″ என்று அவன் அனுப்ப…

“சரி” என்று மட்டும் அனுப்பினாள் கீர்த்தி.
இருவரும் சந்தித்த போது கீர்த்தி தன்னையும் அறியாமல் “நம்ம லைஃப்” என்று சொன்னது ஹர்ஷாவிற்கு பனிச் சாறலாய் மனதில் விழுந்தது. கீர்த்திக்கு
ஹர்ஷாவின் பார்வையே போதும்.. மற்ற ஏதும் இந்த கோபிகையை அந்தக் கண்ணன்
சாய்க்க எடுக்கத் தேவையில்லை.