IMG-20210214-WA0021-2861d12b

யாழ்-15

ஒரு வாரம் கழித்து…

“இப்ப அதுக்கு என்னப்பா அவசரம்?” என்றான் அஷ்வின்.

“என்ன குமரா சொல்ற நீ? நாளப்பின்ன நம்ம வெளியில் போனா கேப்பாங்கப்பா. அதுவுமில்லாம ராஷ்மிகாதான் உன் மனைவின்னு எல்லாருக்கும் தெரியட்டும்” பிடிவாதமாகச் சொன்னார் நாகேஷ்வரன்.

அஷ்வின் கல்யாணம்தான் இப்படி நடந்துவிட்டது. ரிசப்ஷனைக் க்ராண்டாக வைக்க விரும்பினர் அஷ்வினின் பெற்றோர்.

“நீங்க அடுத்த வாரம்ன்னு சொல்றிங்களே. எவ்வளவு வேலை இருக்கு” அஷ்வின் யோசிக்க,

“என்ன குமாரா? எல்லா வேலையும் நீயா பாக்கப்போற. எப்படியும் ஆளுங்க தானே” நாகேஷ்வரன் மகனின் காலை வார,

“சரி, நம்ம சொந்தம் அப்புறம் ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் எப்படி ஒரு வாரத்துல சொல்லப்போறிங்க?” அவன் தந்தையிடம் கிண்டலாகக் கேட்க,

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ ஸ்டேஜ்ல நிக்க சம்மதிச்சா போதும்” என்றார்.

“சரிப்பா, எனக்கு ஓகே. உங்களுக்கு அலைச்சல் வேணாம்னு நினைச்சேன்” அஷ்வின் சொல்ல,

“ஹப்பாடா சூப்பர்ண்ணா. நீ நல்லவேளை ஓகே சொல்லிட்ட. நான்,

உன் கல்யாணத்துக்கு நிறைய ப்ளான் வச்சிருந்தேன்” மேலே கைகளைத் தூக்கிக் கீர்த்தி தட்ட தங்கையின் தலையைப் பிடித்து ஆட்டினான் அஷ்வின்.

ராஷ்மிகாவின் சிந்தனையோ வேறு பக்கமிருக்க,“உங்க வீட்டுலயும் சொல்லிடலாம்மா. அத நினைச்சு குழப்பிக்காத நான் பாத்துக்கறேன்” ராஷ்மிகாவின் மனமறிந்து பேசினார் நாகேஷ்வரன்.

“தாங்க்ஸ் அங்கிள்!” என்றவள், செல்வமணியின் முறைப்பைக்கண்டு “தாங்க்ஸ் மாமா!” என்றாள் நாக்கை கடித்துவிட்டு.

அவர்கள் பேச, எழுந்து வெளியில் வந்தவள் வீட்டின் முன் ஓரத்தில் இருந்த தாமரைக்குளம் அருகில் வந்து நின்றாள். அவளது திட்டம் பலிக்கப் போவதற்கு இங்குதான் பிள்ளையார்சுழி என்பதை உணர்ந்தாள் ராஷ்மிகா. அவளது மனம் கொஞ்சம் கொடூரமாய் யோசிப்பதை அவள் உணர்ந்தாலும், அவளின் குறிக்கோள் அஷ்வினை பழி வாங்குவதிலேயே இருந்தது.

“இங்க என்ன மேடம் பண்றிங்க?” காதின் அருகில் கேட்ட அஷ்வினின் குரலில் திடுக்கிட்டவள் பதறி விலக, கால் தட்டுத்தடுமாறி தாமரைக் குளத்தில் விழப் போனவளைப் பிடித்த அஷ்வின், ஒரு கையால் இடையையும் மற்றொரு கையால் தோளையும் பிடித்து ராஷ்மிகாவை நிறுத்தினான்.

“ச்சி, கையை எடுடா” அஷ்வினைத் தள்ள,

“ச்சி, உன்னையா தொட்டேன்? போய் சேனிட்டைசர் போடணும்” கையை உதறியபடி அவள் சொன்னதை அவளிற்கே திருப்பி அடித்தான் அஷ்வின்குமார்.

அவன் சொன்னதில் கடுப்பாகியவள், அங்கிருந்து நகர அஷ்வினோ அவளை நகரவிடாமல் அவள் முன்னே நின்றான். அவள் இடதுபக்கம் நகர, இடதுபக்கம் இவனும் நகர்ந்து முன்நின்றான். அவள் வலதுபக்கம் நகர, வலதுபக்கம் இவனும் நகர்ந்து முன்நின்றான்.

“நான் போகணும்” ராஷ்மிகா பல்லைக்கடிக்க,

“போ! நான் என்ன உன்ன பிடிச்சா வச்சிருக்கேன்?” அஷ்வின் நக்கலடிக்க,

“இப்படி எருமைமாடு மாதிரி நின்னுட்டே இருந்தா..” அவள் யாரிடம் பேசுகிறோமென்று தெரியாமல் வாயைவிட்டாள். அவ்வளவுதான்!

அவளது கன்னத்தை இருபக்கமும் அஷ்வின் அழுத்திப் பிடித்தான். அவளது உதடுகள் மட்டும் அவனது கைகளுக்குள் சிக்கி முன்னால் பிதுங்கியது.

“இந்த வாயிருக்கே.. இந்த வாய்” அவன் அழுத்த அவளுக்கு கன்னத்தில் வலியெடுத்தது.

“இந்த வாயை விட்டுத்தான்டி நீ, இப்படி என்கிட்ட சிக்கிட்டு முழிக்கற” என்றவன், அவள் வலிபொறுக்காமல் கண்களை சுருக்கியதில் அவளை விட்டுவிட்டு, “சரி போ” என்று விலகி நின்றான்.

அவன் விட, அவள் கன்னத்தைத் தேய்த்துக்கொண்டே போனவள், “சரியான மார்டனா இருக்குற காட்டான்” திட்டியபடியே வீட்டிற்குள் நுழைந்தவளை பார்த்துக்கொண்டே நின்றான் அஷ்வின்.

அடுத்த நாள் ராஷ்மிகா வீட்டில்..

வீட்டிற்கு வந்திருந்த நாகேஷ்வரன் செல்வமணியை உள்ளே அழைத்து உட்காரவைத்த கல்யாணி, முதலில் ஃபோன் செய்தது சிவகுமாருக்கு தான்.

விஷயத்தைச் சொன்னவர், “நான் அவருக்கு இப்ப ஃபோன் போட்டு சொல்றேன். நீங்க வந்திடுங்க. இல்லைன்னா அவர் ஏதாவது பேசிடுவாரு” கல்யாணி சொல்ல,

“சரி வரேன். ஒரு பத்து நிமிஷம் கழிச்சே, அவனுக்குக் கூப்பிடு. நான் வந்திடுவேன்” வைக்க கல்யாணி ஃபோன் செய்து கணவருக்கு அஷ்வினின் பெற்றோர் வந்திருப்பதைத் தெரிவித்தார்.
“அவரு இப்ப வந்திடுவாரு. நீங்க டீயா இல்ல காஃபியா?” கல்யாணி வினவ,

“அதெல்லாம் வேணாம்ங்க.. ராஷ்மிகா அப்பா வரட்டும்” என்றார் நாகேஷ்வரன்.

“அன்னிக்கு அவரு பேசுனதைத் தப்பா நினைச்சுக்காதிங்க. பொண்ணு மேல ரொம்பப் பாசம் அவருக்கு. ரொம்ப செல்லமும்கூட” என்றார்  கல்யாணி சங்கடமாக.

“அதெல்லாம் நாங்க ஒன்னும் நினைக்கலிங்க. ராஷ்மிகாவும் அப்பப்ப அவ அப்பாவ நினைச்சு ஒரு மாதிரி ஆகிடறா. ரொம்ப மனசுக்குள்ளேயே வச்சிருக்கா” செல்வமணி கூற,

மகளின் நினைவில் கண் கலங்கிய கல்யாணி, “அவ அப்பாவும் அப்படித்தாங்க. எதுவும் சொல்வமாட்டாரு. இப்பவும் மனசுல என்ன நினைக்கறாருன்னு தெரியல. அவளும் கொஞ்சம் அடம்பிடிப்பா. ஏதாவது தப்புன்னாகூட எடுத்து சொல்லுங்க. அவளுக்கும் இப்பதான் இருபத்தியொன்னு முடியுது” கல்யாணி மருகிக்கூற,

“கவலைப்படாதிங்க. ராஷ்மிகா எங்க பொறுப்பு” வாக்களித்தார் நாகேஷ்வரன். சிவகுமாரும் சக்திவேலும் ஒரே நேரத்தில் வந்திறங்க கல்யாணிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. உள்ளே நுழைந்த சிவக்குமார், “வாங்க” அவர்களை வரவேற்க சக்திவேலோ எதுவும் பேசவில்லை.

“வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா?” சிவகுமார் விசாரிக்க,
“எல்லாரும் நல்லா இருக்காங்க” பதிலளித்த நாகேஷ்வரன், “அடுத்த சனிக்கிழமை ஈவ்னிங் ஃபோர் டூ நைட் டென் குமரனுக்கும் ராஷ்மிகாக்கும் ரிசப்ஷன் வச்சிருக்கோம். நீங்களும் எங்களோட கலந்துக்கங்க” என்றார்.

‘வாங்க’ என்றழைக்காமல், ‘கலந்துக்கங்க’ என்றழைத்தார் நாகேஷ்வரன்.

“சரிங்க. கண்டிப்பா வர்றோம்” சிவகுமார் சொல்ல, சக்திவேலோ எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

“சக்திவேலு என்ன இது? வர்றேன்னு சொல்லு” சிவகுமார் சொல்ல, தொண்டையைச் செருமிக்கொண்டு ஆரம்பித்தார் சக்திவேல்.

“கடமைக்காக வேணா ரிசப்ஷனுக்கு வர்றேன். ஆனா, ஒரு அப்பாவா என்னால வந்து கலந்துக்க முடியாது” சொன்னவர், “வேணும்னா என் மனைவியை கூட்டிட்டுப்போங்க. ஏதாவது உங்க முறையில நாங்க வாங்கணும்னா, நான் செய்யத்தயார். நீங்க இவ்வளவு தூரம் வந்து கூப்பிடறீங்க. அந்த மரியாதைக்கு நான் வந்துதான் ஆகணும்” என்றார் இருவரையும் பார்த்து.

அவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிதென்று நினைத்தவர்கள், “சரிங்க வர்றோம்” என்று மூவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினர்.

வீட்டிற்கு வந்த செல்வமணி, “உங்க வீட்டுல வந்திடுவாங்க, ராஷ்மிகா” சொல்ல,

“நிஜமாவா அத்தை? அப்பா வர்றேன்னு சொல்லிட்டாரா?” கண்களை விரித்தபடி குஷியாக வினவ,

“ஆமா, உன் அம்மா நம்பர்தா ராஷ்மிகா. ரிசப்ஷன் புடவை நாளைக்கு எடுத்திட்டு வருவாங்க. இங்க வரச்சொல்லலாம்” என நம்பரை வாங்கினார்.

தந்தை வருகிறார் என்பதே ராஷ்மிகாவிற்கு ஆனந்தமாக இருந்தது. அடுத்தநாள் விஜயலட்சுமி, கல்யாணி வீட்டிற்கு வந்திருக்க கடையில் இருந்து ஆட்கள் கொண்டு வந்த புடவையை பார்க்க ஆரம்பித்தார்கள் பெண்படைகள்.

கீர்த்தி குஷியாக அண்ணன் வரவேற்பிற்கு, தன் வருங்கால மாமியாருடன் ஒட்டி உட்கார்ந்து சேலையைப் பார்க்க ராஷ்மிக்குத்தான், “அது என்னோட டெட்டிம்மா..” சொல்ல வேண்டும்போல இருந்தது.

கீர்த்தி வழவழவென இழுக்காமல் சீக்கிரம் தனக்காப் மெஜந்தா வண்ண லெஹங்காவைத் தேர்வு செய்ய, ராஷ்மிகாவோ கண்ணுமுழி பிதுங்க அமர்ந்திருந்தாள்.

அந்நேரம் எதற்கோ வீட்டிற்குவந்த அஷ்வினை,“குமரா, இங்க வா. ராஷ்மிகாக்கு ஏதாவது ஒரு புடவை செலக்ட் பண்ணு” செல்வமணி அழைக்க, வேறு வழியில்லாமல் சென்றமர்ந்தவன், பின் சுறுசுறுப்பாகப் புடவையில் தேடலை ஆரம்பித்தான்.

“இது” ஒரே நேரத்தில் அஸ்வினும் ராஷ்மிகாவும் வெவ்வேறு புடவையைத் தேர்வு செய்ய அங்கிருந்த அனைவருக்கும் முழி பிதுங்கியது. கீர்த்திக்கோ சிரிப்புதான் வந்தது.
கல்யாணியோ, “அட மாப்பிள்ளை சொல்றதே நல்லா இருக்கே” சொல்ல, விஜயலட்சுமியும், “ஆமா ராஷ்மி! இதே நல்லாயிருக்கு. இதையே எடுத்துக்க.” சொல்ல ராஷ்மிகாவோ யார் முன்னிலையிலும் எதுவும் பேசமுடியாமல், “சரி” என்று தலையை ஆட்டினாள்.

“மாப்பிள்ளை பாக்க நல்லா ஆளாத்தான் தெரியறாரு ராஷ்மி. கொஞ்சம் நீயும் மாற பாத்துக்க. நடந்ததையே நினைச்சிட்டு இருக்காத” மகளிடம் கல்யாணி அட்வைஸ் செய்ய, விஜயலட்சுமியும் அதையே கூறினார்.

“ம்ம்” ராஷ்மிகா தலையை மட்டும் ஆட்டினாள்.

“அப்பா ஏன் வரல?” ராஷ்மிகா ஏக்கத்துடன் கேட்க,

“வந்து ராஷ்மி..” கல்யாணி இழுக்க,

“அப்பா இன்னும் என்ன நம்பலையாம்மா?” கேட்டவளுக்கு மனம் கனத்தது. “அப்போ… அப்பா சனிக்கிழமை வரமாட்டாரா?” கேட்கும் பொழுதே ராஷ்மிகாவிற்கு நெஞ்சம் பிசைந்தது.

“அப்பா, உன்கிட்ட எப்படி ராஷ்மி பேசாம போவாரு. ரிசப்ஷன் வந்து கண்டிப்பா பேசுவாரு பாரு” உறுதியளித்தார் கல்யாணி.

ஆனால், அது நடக்குமோ?

ரிசப்ஷன் நாள்..

சென்னையிலுள்ள மிகப்பெரிய மண்டபத்தை நாகேஷ்வரன் பார்த்திருக்க, மண்டபமே அரசியல்வாதிகள், பெரிய பிசினஸ்மேக்கர்ஸ் மற்றும் சில சினிமா பிரபலங்களால் நிறைந்துகொண்டிருந்தது.

அஷ்வின் தனது ப்ராண்டட் டீப் நேவி ப்ளூ நிறக் கோட்சூட்டில் ரெடியாகியிருக்க, ராஷ்மிகா குங்குமநிற நெட் எம்பிராய்டர்ட் டிசைனர் புடவையில் ஜொலிக்க இருவரும் ஸ்டேஜிற்கு அழைத்து வரப்பட, இருவரின் ஜோடிப் பொருத்தத்தில் அங்கிருந்த அனைவரும் அவர்களை விட்டு தங்கள் விழிகளை எடுக்கவில்லை.

இருவரும் வந்து மாலையை மாற்றிக்கொள்ள, எல்லோரும் ஸ்டேஜிற்கு வந்து வாழ்த்து தெரிவித்து கிஃப்டைத்தர ஸ்டேஜே ஜொலித்தது.

ராஷ்மிகாவின் கண்கள்தான் தந்தையைத் தேடிக் கூட்டத்தில் அலைமோதிக் கொண்டிருந்தது. தேடிக்கொண்டே இருந்தவளின் பார்வையில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த தந்தை கண்ணில்பட, சொல்ல முடியாத சோகம் மனதைத் தாக்கியது.

“உன் கல்யாணத்தில் அப்பா ஒரு இடத்தில் நிக்கமாட்டேன் ராஷ்மி” ஒருநாள் தந்தை சொன்னது நினைவுவர மேடையில் இருந்து இறங்கி தந்தையின் அருகில் சென்று அமர்ந்து விடலாமா எனக்கூட தோன்றியது ராஷ்மிகாவிற்கு.

“உன் அப்பாவைப் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப இங்க வர்றவங்களை கவனி” சிரித்த முகத்துடனே குரலில் கடினத்தை வைத்து அஷ்வின் சொல்ல,

“இருடா உனக்கு இருக்கு” மனதில் கருவினாள் ராஷ்மிகா. அங்கே அப்படியென்றால் கீழே இருவர் வேறு மாதிரி.

லெஹங்காவில் மின்மினியாய் மின்னிக்கொண்டிருந்த கீர்த்தியின் மேலிருந்து பார்வையை எடுக்க முடியவில்லை ஹர்ஷவர்தனால். அவனும் ஹாஃப்கோட்டில் வசீகரமாய் இருக்க இவருரின் பார்வையும் சந்தித்து மீண்டது.

சரியாக கீர்த்தியை மணப்பெண் அறையில் யாருமில்லா சமயம் பார்த்து பிடித்தவன், “ஹே க்யூட்டி. இன்னிக்கு என்ன செம பியூட்டியா இருக்க:  குறும்புடன் ஹர்ஷா வினவ,

“அப்ப இவ்வளவு நாள் பியூட்டியா இல்லையா?” இடுப்பில் கைவைத்தபடி கீர்த்தி வினவினாள்.

“எப்போமே அழகுதான். ஆனா, இன்னிக்கு ஆளையே அசர அடிக்குற அழகு” என்றவன், அவனையே அறியாமல் அவள் எதிர்ப்பார்க்கா வண்ணம், அவள் கன்னத்தில் இதழைப் பதித்துவிட்டான்.

அவள் விலகப்பார்க்க அவளைப் பிடித்து ஹர்ஷா அணைக்க, கீர்த்தியும் அவனை உணர்ந்ததாலோ என்னவோ எதுவும் பேசவில்லை.

“ஹர்ஷா யாராவது வந்திடுவாங்க. போலாம்” அவன் கைக்குள் நின்றபடியே மெல்லியக் குரலில் சொன்னவள் அவனிடமிருந்து விலக, கைகளைத் தளர்த்தியவன், கீர்த்தியைப் பார்த்து கண் சிமிட்டினான். அவ்வளவு தான் அங்கிருந்து தப்பி, ஓடிவிட்டாள் கீர்த்தி.

சரண், சிவா, மான்சி, தேவா, அவனுடைய குடும்பமே வருகை தந்திருந்தது. ஆனால், யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை ராஷ்மிகா. அது, அவள் அருகில் இருந்தவனின் கோபத்தை கிளறிக் கொண்டு இருந்தது.

மேடையில் கல்யாணி, விஜயலட்சுமி, சிவகுமார் ஏற சக்திவேல் மட்டும் அதே மூலையில் அமர்ந்திருந்தார். முதலில் சிவகுமாரும், விஜயலட்சுமியும், ராஷ்மிகாவின் கல்யாணித்திற்காகவே சேர்த்தி வைத்திருந்த பதினைந்து பவுன் தங்கக் காசுகளைத் தர, அவர்கள் காலில் விழுந்து வணங்கினர் அஷ்வினும் ராஷ்மிகாவும்.

அடுத்து கல்யாணி ஒரு பெட்டியைத் தர, அதைப்பார்த்த ராஷ்மிகாவிற்கு என்னவென்று புரிந்தது. “எனக்கு கண்டிப்பா வைர நெக்லஸ் வேணும். என் கல்யாணத்துக்கு. என் புருஷனுக்கும் வைரமோதிரம் வேணும்” ஒருநாள் அவள் வீட்டில் பேசியது நினைவுவர, கீழே அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்தாள் ராஷ்மிகா.

அதுவரை மகளின் மேலேயே பார்வையைப் பதித்திருந்த சக்திவேல், அவளின் பார்வையை உணர்ந்து வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

மகள் முகம் வாடுவதற்குள், “ராஷ்மி, எல்லாரும் பாக்கறாங்க. சிரிச்ச மாதிரி இரு” கல்யாணி மகளின் காதில் ஓத முகத்தை மாற்றிக் கொண்டாள் அவள்.

முக்கால்வாசி கூட்டம் அனைவரும் கிளம்ப சில சொந்தங்களே இருந்தது.“ஸார், இந்த மாதிரி போஸ் குடுங்க” ஃபோட்டோகிராபர் அஷ்வினையும் ராஷ்மிகாவையும் மாறிமாறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.
“மேம்! இப்படி ஸாரைத் திரும்பி மட்டும் பாருங்க” அவன் சொல்ல, சொன்னபடி செய்தவள் அப்போதுதான் அவ்வளவு நெருக்கத்தில் அஷ்வினை முதல்முறையாகக் கண்டாள்.

தினமும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு இப்படி அருகில் நிற்க அவர்களுக்கே சிரிப்பு வந்ததுவிட்டது. அவர்கள் சிரித்த சமயம் உலகம் அதிசயம்தானே. அந்த ஃபோட்டோகிராபரும் படத்தை எடுத்து விட்டான்.

சக்திவேல் மண்டபத்தில் இருந்து கிளம்ப ராஷ்மிகாவை விட்டுவர சிவகுமார், விஜயலட்சுமி, கல்யாணி, ஹர்ஷவர்தன் என அனைவரும் அஷ்வின் வீட்டிற்கு கிளம்பினர்.

முறைப்படி சென்றவர்கள் கிளம்ப ராஷ்மிகாவின் முகமோ கூம்பியது.

“பேசாம இருந்துட்டு பொறுமையா கிளம்பலாமே?” செல்வமணி சொல்ல,

“ஹர்ஷா! நான், என் டிரைவரை வரச் சொல்லி போயிக்கரேன். நீ இருந்து, காலையில அம்மா, சித்திய கூட்டிட்டு வந்துடு” சொல்ல தலையை ஆட்டினான் ஹர்ஷாவும்.

“ராஷ்மிகா” என்றழைத்த செல்வமணியிடம் திரும்பினாள் ராஷ்மிகா.

“சொல்லுங்க அத்தை” என்றாள்.

“அந்த வைலட் கலர் புடவைக்கு ஜாக்கெட் வந்திடுச்சுல” கேட்க என்ன ஏதென்றே தெரியாத ராஷ்மிகா, ‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள்.

“சரி போய் ரெடியாகு ராஷ்மி” அவர் பணிக்க ராஷ்மிகாவிற்கு புரிந்து விட்டது. உள்ளே ‘திக்’ உணர்வோடு குளிர்பரவ முழித்துக்கொண்டு நின்றவளின் அருகே வந்த விஜயலட்சுமி,

“நீங்க மத்த வேலையைப் போய் கவனிங்க. நான் பேசிக்கறேன்” சொல்ல, செல்வமணி அங்கிருந்து அகன்றார்.

“ராஷ்மி ஏன் இப்படி முழிக்கற? போய் சேரி கட்டிட்டுவா” விஜயலட்சுமி சொல்ல, “பெரியம்மா..” இழுத்தாள்.

“சிலதை முறைப்படி செஞ்சுதான் ஆகணும்” விஜயலட்சுமி சொல்ல ராஷ்மிகாவால் பேசமுடியவில்லை.

நல்லநேரம் பார்த்து ராஷ்மிகாவை உள்ளே அனுப்பி விட்டு அனைவரும் உறங்குவதற்கு மணி பத்தரையைத் தாண்டிவிட்டது. கல்யாணி, விஜயலட்சுமி செல்வமணி எல்லாரும் ராஷ்மிகா முன்னே தங்கியிருந்த அறையில் படுத்திருக்க, ஹர்ஷாவோ இன்னொரு அறையில் ஃபோனை நோண்டியபடி படுத்திருந்தான்.

பன்னிரெண்டு மணிபோல் தண்ணீர் தாகமெடுக்க, சமையல் கட்டிற்குள் நுழைந்தவன் டம்ளரை எடுத்து தண்ணீரைப் பிடித்துக்குடிக்க, “ஹர்ஷா!” குரலை இறுகவைத்து அவன்காதின் பின்னிருந்து கீர்த்தி பேச, நம்ம பையன் பயந்தது உண்மைதான்.

“ஏ!” திடீரெனக் கேட்ட குரலில் ஜெர்க்குடுத்தவன், “அட நீயா? நான் கூட ஏதோ பேய் பிசாசுன்னு நினைச்சேன்” கிண்டல் செய்ய,

“எது? என் குரல் உனக்கு ஞாபகம் இல்ல?” முறைத்தபடி கீர்த்தி வினவ,

“இல்ல இல்ல.. சும்மா” என்றவன், அப்போதுதான் அவளை முழுதாக கவனித்தான். ஒரு மெரூன் கலர் நைட்-ட்ரெஸ் அவளைத் தழுவியிருக்க, சமையல் அறையின் மஞ்சள்நிற விளக்கின் அடியில், எந்த ஒப்பனையும் இல்லாமல் தேவலோக தேவதையாய் நின்றவளைக் கண்டவனுக்கு, ஹார்மோன்கள் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது.

ஆனால், பதினெட்டின் ஆரம்பத்திலிருந்த கீர்த்திக்கோ அவனின் உணர்வும் பார்வையும் மாறியதும் தெரியவில்லை.

“நானும் தண்ணி குடிக்கணும் ஹர்ஷா. நகரு” அவள் பாட்டுக்குப் பேச, ஹர்ஷாவின் கரமோ அவளின் கரத்தை மென்னையாகப் பற்றியது.

ஆனால், அவனின் பிடி உடும்பாக இருந்தது. வன்மையிலும் இத்தனை மென்மையா என்று உணர்ந்த கீர்த்தி நிமிர, அப்போதுதான் அவள் ஹர்ஷாவின் பார்வையை உணர்ந்தாள்.

“எ.. என்ன ஹர்ஷா?” அவனின் விழிவீச்சைத் தாங்க முடியாமல் கீர்த்தி திணற, ஹர்ஷாவோ எதுவும்பேசாமல் அவளருகில் வர கீர்த்தியோ பின்னால் நகர்ந்தாள். மேலும், ஹர்ஷா சில அடிகளை எடுத்துவைக்க தனது முட்டைக்கண்கள் விரிய இதயத்துடிப்பு அதிகரிக்க பின்னாலேயே நகர்ந்தவள் கடைசியில் சுவற்றில் முட்டி நின்றாள்.

இனிவிட்டால் இடித்து விடுவேன் என்ற நிலையில் அவளருகில் நின்ற ஹர்ஷா, அவளை நகரவிடாமல் இரு பக்கமும் கைஊன்றி நிற்க, கீர்த்திக்கோ இதென்ன உணர்வு என்றே தெரியவில்லை. ஹர்ஷா எதுவும் பேசாமல் நிற்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் கீர்த்தி.

அந்தக் கண்களில் உள்ள அழகையும் ஈர்ப்பையும் கண்டவன், “என்ன தாண்டி வச்சிருக்க இந்தக் கண்ணுல?” கேட்க,அவன் கேள்வியில் கீர்த்தி, கண்களைக் கூர்மையாக வைத்து ஒரு புன்னகையை வீச, அந்த விழி வீச்சில் தன்னை இழந்தவன், அவளது கன்னத்தைப் பற்றி அவள் இதழ் நோக்கிக்குனிய, அதை எதிர்பாராத கீர்த்தியோ சுதாரிப்பதற்குள் அவள் இதழில் தஞ்சம் அடைந்திருந்தான் ஹர்ஷவர்தன்.

இனி, கிடைக்கவே கிடைக்காத ஒன்று என நினைத்தோ என்னமோ ஹர்ஷா அவளுள் மூழ்கினான். முதலில் நகர நினைத்த கீர்த்திக்கோ சகலமும் அவன் இதழ் முத்தத்தில் கரைந்தது. கைகளை அவன் பின்னே கொண்டுசென்று அவனது சட்டையை கீர்த்தி இறுகப்பிடிக்க, அவளது கால்களோ பயத்தில் நடுங்கிக்கொண்டு இருந்தது.

அவளது நடுக்கத்தை உணர்ந்தவனோ அவளது இடையைப் பற்றி அவளை விழாமல் பிடித்து மேலும் அவளுடன் ஒன்றினான். அவனின் பிடியில் கண்களை இறுக மூடி இருந்த கீர்த்தியோ மூச்சிற்குத் தவித்து திணறித்தான் போனாள். எங்கிருந்தோ, டம்மென்ற சத்தம் வர இருவரும் விலகினர்.

கீர்த்திக்கு நெற்றியில் முத்து முத்தாய் வியர்த்திருக்க, ஹர்ஷாவோ மூச்சு வாங்கியபடி நின்றிருந்தான். நடுக்கம் இன்னும் தீர்ந்த பாடில்லை கீர்த்திக்கு. கை நடுக்கத்தைக் குறைக்க, தன் கால்சட்டையை இறுகப் பற்றியவள் எதுவும்பேசாமல் நிற்க, “கீர்த்தி” என்ற ஹர்ஷவர்தனின் குரலில் நிமிர்ந்தாள்.
அவள் நிமிர்வதற்காகவே காத்திருந்தவன், தன் இருவிழிகளையும் சிமிட்ட, அவன் அருகில் வந்து அவனைக்கொட்டியவள், ஒருநொடி கூட நிற்காமல் ஓடியே விட்டாள். அரும்பிய சிரிப்பை அடக்க முடியாமல் ஹர்ஷாவும், அரும்பிய வெட்கத்தை அடக்க முடியாமல் கீர்த்தியும் அன்றிரவு அவரவர் படுக்கையில் கிடந்தனர். இருவரின் காதலும் உள்ளுக்குள்ளேயே வளர்ந்து கெண்டிருந்தது.

ஆனால், அவர்கள் பிரிவதற்கு காரணமான சத்தம் எங்கிருந்து வந்தது என்று இருவருமே யோசிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!