யாழ்-2

IMG_20220303_084637-a50d5992

யாழ்-2

சோழவந்தான், மதுரை.

“பூஜா” என்ற வித்யுத்தின் அழைப்பில் திரும்பியவளிடம், “எத்தனை தடவை சொல்றது, புள்ளையை தோட்டத்துக்குள்ளார விடாதேன்னு. பாம்பு அதுஇதுன்னு சுத்திக்கிட்டே கிடக்கு” என்று திட்ட, பூஜா மகளை முறைத்தாள்.

“எதுக்குடி போன?” பூஜா மகளை மிரட்ட,

“டாடியை கூட்டிட்டு வர போனேன் ம்மா” என்று தனுஷ்யா வித்யுத்தின் தோளில் சலுகையுடன் சாய்ந்துகொண்டாள்.

தோளில் சாய்ந்திருக்கும் மகளின் அருகே லேசாக தலை சாய்த்தவன், “அப்ப அம்மா கூட்டிட்டு வர சொல்லலையா?” வினவ, “ம்கூம்” என்க,

“இது சொல்றதை நீயும் நம்பிட்டு ஏன் மாம்ஸ்” என்று வாண்டின் பம்மில் குட்டி அடிபோட்டாள் பூஜா.

அன்னை அடித்தது சிறிதும் வலிக்கவில்லை என்றாலும், “ஆஆஅ!” என்று தன் ஸ்பீக்கர் குழாயை திறந்தாள் அனைவராலும் செல்லம் கொண்டாடப்படும் அந்த வீட்டின் குட்டி ராணி.

“அடிக்கவே இல்ல.. அழறியா?” பூஜா வேண்டுமென்றே மகளை சீண்ட, “பேபேஏஏ!” என்று வாயைத் திறந்து அழ ஆரம்பித்தது அவளின் குட்டிசாத்தான்.

அவளின் அழுகையில், வித்யுத் மகளை சமாதானம் செய்ய முயல, அவளின் அழுகையோ நின்றபாடில்லை.

“டாடி அம்மாவை அடிக்கறேன். அழாதீங்க” வித்யுத் சமாதானம் செய்ய அழுகை நின்றால்தானே. வித்யுத் சொன்னதிற்கு தலையை ஆட்டிக் கொண்டே மேலும் அழுகையைத் தொடர, “என்னாச்சு?” என்றபடி வந்தாள் வித்யுத்தின் அன்னை திவ்யபாரதி.

மேலும் பேத்தியின் அழுகை தொடர, யார் வந்தால் அழுகை நிற்கும் என்று புரிந்துகொண்ட திவ்யபாரதி, “ஏங்க இங்க கொஞ்சம் வாங்க” என்று தன் கணவன் ஆதித்ய வெற்றிவேந்தனை அழைக்க, காதணி விழா என்பதால் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து, வக்கீலாக இருந்தவன் நீதிபதியாகி இருக்க, அதற்கே உண்டான கம்பீரத்தோடும், குடும்பத்தோடு இருப்பதால் வதனத்தில் தவழும் மெருகோடும் பெருமையோடும் வர, திவ்யபாரதியின் கண்கள் இந்த வயதிலும் கணவனை எப்போதும் போல ரசித்துப் பார்த்தது.

பேத்தியின் சத்தத்தில் வேகமாய் வந்த வெற்றி, “தனுமா” என்று மென்மையாக அழைத்து கையை நீட்ட, “தாத்தா!” என்று வித்யுத்திடம் இருந்து பாய்ந்து தாத்தனிடம் தாவியவள், அழுகையை நிறுத்திவிட்டு, வழிந்திருந்த கண்ணீருடனேயே,

“தாத்தா, இவங்க எல்லாரும் என்னை அழ வைக்கறாங்க.. எல்லாரும் பேட் தாத்தா” என்று அந்தர்பல்டி அடிக்க, வித்யுத், பூஜா, திவ்யபாரதி மூவரும் வாய் பிளந்து நின்றிருந்தனர். பின்னே யாரின் பேத்தி அவள்!

“அப்போ அப்பா குட்டிமா?” என்றபடி வந்த வர்ஷித் வருணனைக் கண்ட தனு, “நீங்களும் குட்தான் அப்பா” என்றாள் கைகளை ஒன்றாக கோர்த்துக் கொண்டு.

“அப்போ அத்தை?” என்றபடி வேதாபாரதி வந்து நிற்க, “நீயும் பேட்” என்றது தாத்தனின் கழுத்தில்  சாய்ந்துகொண்டு.

“இரு இரு.. அத்தை சாக்கி வேணும்னு வருவ இல்ல. அங்கன பாத்துக்கறேன் உன்னைய” என்று பொய்யாய் வேதா மிரட்டிய சமயம், மீண்டும் அழத் தயாரானாள் தனு.

“தாத்தாஆஆஅஅ” என்று பேத்தி கத்த, அனைவரையும் முறைத்த வெற்றி, “என் பேத்தியை வம்பு இழுக்கலைனா உங்க யாருக்கும் தூக்கம் வராதே” என்று திட்டியவன், “வாடா கண்ணம்மா. தாத்தா உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர்றேன்” வெற்றி பேத்தியை தூக்கிக் கொண்டு செல்ல,

“இதுக அலும்பு தாங்க முடியல அத்தான்” என்றாள் பூஜா கணவனிடம்.

“சின்ன வயசுல நீயும் இவனும் பண்ணதை விடவா டி?” என்று மனைவியையும், தம்பியையும் கேலி செய்த வர்ஷித் வருணன், தன் மனைவி பூஜாவிடம், “கொஞ்சம் ரூமுக்கு வா” என்று கணவனின் பார்வையில் சொல்லிவிட்டுச் செல்ல,

‘இத்தனை பேர் இருக்கையில எப்படி கூப்பிடறான் பாரு’ என்று நினைத்தவள் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் கணவனுடன் சென்றாள்.

திவ்யபாரதியும் எதையும் கண்டும் காணாமல் தனக்குள் சிரித்தபடி சென்றுவிட,”இதுக ரொமான்ஸ் தாங்க முடியலண்ணா” என்றாள் வேதா தனது இரண்டாவது அண்ணன் வித்யுத்திடம்.

தங்கையின் காதைப் பிடித்துத் திருகியவன், “ஏய் வாலு. போ போய் ஏதாவது வேலை இருந்தா பாரு” என்றவன் புன்னகையோடு வீட்டில் இருந்த உறவினர்களை கவனிக்கச் சென்றான்.

தனுவுக்கு எப்போதுமே வர்ஷித் வருணன் அப்பா. வித்யுத் வருணன் டாடி. சிறிய வயதில் இருந்து அவ்வாறே அழைத்துப் பழகியவளை யாரும் மாற்ற முயற்சிக்கவில்லை. வித்யுத்திற்கு மகளின் அழைப்பு அத்தனை இதமாய் இருந்தது.

ஆதித்ய வெற்றிவேந்தன் – திவ்யபாரதி இருவரின் காதலுக்கும் பிறந்த மூன்று ரத்தினங்கள் வர்ஷித் வருணன், வித்யுத் வருணன், வேதா பாரதி. திவ்யபாரதியின் அண்ணன் சதீஷிற்கும் வெற்றியின் தங்கை கவிநயாவிற்கும் பிறந்த ஒற்றை வைரம்தான் பூஜா.

அத்தை மகளை அறியா வயதில் இருந்து ஒரு தலையாய் காதலித்து வந்தான் வர்ஷித். சிறிய வயதில் வித்யுத்தும், பூஜாவும்தான் நெருக்கமே. சொந்தத்தைத் தாண்டி அவர்களுக்குள் அப்படி ஒரு நட்பு உருவாகி இருந்தது.

விடுமுறை தினங்களில் சோழவந்தான் வருபவள் அனைவருடனும் இருந்தாலும், “மாம்ஸ், மாம்ஸ்” என்று வித்யுத்துடனே திரிய, வர்ஷித்துக்குத் தான் வயிற்றில் பற்றி எரிந்தது. அதை மட்டும் ஊருக்குள் தந்திருந்தால் கேஸ் விற்கும் விலைக்கு எட்டு குடும்பம் நிம்மதியாய் உண்டு இருக்கும்.

அப்போது பதினொராம் வகுப்பு விடுமுறையில் இருந்தான் வர்ஷித். அதேசமயம் வித்யுத் ஒன்பதாம் வகுப்பு விடுமுறையிலும் இரு சிங்கங்களின் தங்கை வேதாபாரதி நான்காம் வகுப்பு முறையிலும் இருக்க, தன்னுடைய எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வை முடித்துக்கொண்டு விடுமுறைக்கு சென்னையில் இருந்து சோழவந்தான் வந்திருந்தாள் பூஜா.

அன்று மாலை மொட்டை மாடியில் வித்யுத், வேதாவுடன் விளையாடிக் கொண்டிருந்த பூஜா, வித்யுத் விளையாட்டில் தோற்காமல் ஆடிக் கொண்டே இருந்ததில், “டேய், மாம்ஸ்” என்று கடுப்பில் கத்தினாள். அதே நேரம் மாடிக்கு காற்று வாங்க வந்த வர்ஷித்துக்கு கடுப்பாக இருந்தது.

‘இவ ஒருத்தி எப்பப்பாரு இவனை மாம்ஸ் மாம்ஸ்னுட்டு’ என்று கடுப்பின் சிகரத்தில் இருந்தவன் ஒன்றும் பேசாமல் அங்கிருக்கும் சுவற்றில் சாய்ந்துநின்று, மூவரும் விளையாடுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

வித்யுத் தோற்காமல் போக்குக் காட்டுவதில் கோபம் கொண்ட வேதா, “அண்ணா! வந்து சின்ன அண்ணாவை ஔட் பண்ணுனா. ஔட்டே ஆக மாட்டிறாக” என்று கத்த,

வித்யுத்தின் அருகில் குடுகுடுவென்று ஓடிவந்த பூஜாவும், “அண்ணா வாங்க” என்று அழைக்க, மதுரை பாஷையில் சொல்லப்போனால் ‘அம்புட்டுதான்’ என்ற கதையாகிப் போனது. ஏற்கனவே வெடிக்கும் நிலையில் உள்ளுக்குள் அக்னி மலையாய் குமுறிக் கொண்டிருந்தவன், முழுவதுமாய் வெடித்துச் சிதறினான்.

“ஏய்!” என்று உறுமியவன் பூஜாவின் மணிக்கட்டை வன்மையாகப் பற்றினான்.

வர்ஷித்தின் உறுமலில் பூஜா மட்டுமில்லை சிறு பெண்ணான வேதாவுமே அரண்டு போய் நின்றுவிட்டாள். வித்யுத்தோ அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றிருந்தான். அண்ணன் மனதில் உள்ளதை அவன் எப்போதோ அறிவானே. அது வெளி வர அவன் காத்திருக்க, இன்று தன்னால் வெளி வந்ததிலும், பூஜா வர்ஷித்தை அண்ணா என்று விழித்ததிலும் சிரிப்பு வரப்பார்க்க சிரமப்பட்டு வாய்க்குப் பூட்டு போட்டிருந்தான்.

“அவன் மட்டும் உனக்கு மாம்ஸ் நான் உனக்கு அண்ணாவாடி” என்று சீறியவனைக் கண்டு பதிமூன்று வயது பாவைக்கு கண்கள் கலங்கியது.

“அண்ணா ஏன் பூஜாவை மிரட்டுறீக?” கீச்குரலில் கத்திக்கொண்டு வந்த வேதாவை, வர்ஷித் பார்த்த பார்வையில், அவள் பயத்தில் குடுகுடுவென்று ஓடி சின்ன அண்ணனின் இடுப்பை கட்டிக்கொண்டு நின்றுவிட்டாள்.

“சொல்லுடி நான் உனக்கு அண்ணாவா?” வர்ஷித் மீண்டும் பூஜாவிடம் பாய, அவளோ, ‘இல்லை’ என்பதுபோல தலையாட்டினாள்.

“அப்ப நான் உனக்கு யாரு சொல்லு?” வர்ஷித் கேட்க, பூஜாவோ மெதுவே, “மாம்ஸ்” என்றிட, வர்ஷித் பல்லைக் கடிக்கும் சத்தம் அவளுக்குக் கேட்க, மறுபடியும் அவனின் கோபம் எதற்கென்று புரியாமல் பேந்தபேந்த விழித்தாள் அந்தப் பாவை.

அவளோ பாவமாக வித்யுத்தைத் திரும்பிப் பார்க்க, அவனோ தனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லை என்னும் பாவனையில் வேடிக்கை பார்ப்பது போல் தலையைத் திருப்பிக்கொள்ள, ‘அடப்பாவி’ என்று உள்ளுக்குள் அவனைத் திட்டத் துவங்க, அவளின் கன்னத்தைப் பற்றி தன்னை நோக்கித் திருப்பினான் வர்ஷித்.

“அவனும் மாம்ஸ் நானும் மாம்ஸ் கிடையாது. ஸோ, ஒழுங்கா என்னை வேற ஏதாவது சொல்லி கூப்பிடு” என்றிட அவளுக்கோ யோசனை வரவில்லை.

“எ.. என்ன.. சொல்லி?” பூஜா தந்தியடித்த படிக் கேட்க, ஒற்றைப் புருவத்தை உயர்த்தி சிறிது நேரம் யோசித்தவன், “அத்தான்னு கூப்பிடு. விட்டறேன்” என்று குறும்புடன் சொல்ல, “சரி” என்று தலை ஆட்டியவளை முறைத்தான் வர்ஷித்.

நாக்கைக் கடித்துக் கொண்டவள், “சரி, அத்தான்” என்று நகரப் பார்க்க, வர்ஷித் விட்டால் தானே. அவளைப் பார்க்க பார்க்க அவளை சீண்டத் தூண்டியது அவனின் காதல் கொண்ட மனம்.

தன்னை கேள்வியாய்ப் பார்க்கும் பூஜாவிடம், “மாம்ஸ் கூட மட்டும் தான் விளையாடுவியா? அத்தான் கூட விளையாட மாட்டியா?” என்று மெதுவே வினவ, ‘அடேய்! உன்னை நல்லவன்னு வீட்டுல எல்லாரும் நம்புனா நீ என்னடா ஏதேதோ கேக்கற?’ என்று உள்ளுக்குள் நினைத்த வித்யுத், தலையைத் தாழ்த்திப் பார்க்க, அவனின் தங்கையோ எதுவும் புரியவில்லை என்றாலும், அண்ணனையும் பூஜாவையும் கவனித்துக் கொண்டிருக்க, வித்யுத்துக்கு சிரிப்பு வந்தது.

வர்ஷித் கேட்ட கேள்விக்கு பூஜா புரியாமல் நிற்க, வர்ஷித் வித்யுத்தை எட்டிப் பார்க்க, அவனோ தங்கையின் இரு செவிகளையும் அடைத்துப் பிடித்தபடி, ‘வேணாம்டா’ என்று எச்சரிக்க, குறும்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஆடவணின் மனம் கேட்டால் தானே.

“அப்பா அம்மா விளையாட்டு” என்று கண்களைச் சிமிட்டி வர்ஷித் கேட்க, அவனின் சொற்களில் பூஜாவின் இதயம் அலாரக் கடிகாரத்தைப் போல தடதடவென்று ஆடித் துடிக்க, கண்களில் பொலபொலவென்று கண்ணீர் வழிய, வர்ஷித் வருணன் திகைத்துப்போனான்.

“ஏய், அழாதே. விளையாட்டுக்கு சொன்னேன்டி.” வர்ஷித் சொல்வதைக் கேட்காமல் கண்ணீரைத் துடைத்தபடி ஓடியவள், மாடியில் இருந்து கீழே இறங்கும் கதவு வைத்த படிக்கு ஓட, அங்கு கைகளைக் கட்டியபடி நின்றிருந்த தன் அத்தை திவ்யபாரதியை கண்டவள் அப்படியே ஆடிப்போய் நின்றுவிட்டாள். அவளின் கால்கள் பயத்தில் தாமாக பின்னால் இரண்டு எட்டு நகர்ந்தது.

அவளை சமாதானம் செய்யும் பொருட்டு அவள் பின்னேயே ஓடிவந்த வர்ஷித்தும் அன்னையக் கண்டு அதிர்ந்து நின்றுவிட்டான். வர்ஷித் நிற்பதைக் கண்டு யாரோ வந்துவிட்டார்கள் என்று புரிந்துகொண்ட வித்யுத் தங்கையோடு வருவதற்குள் மூத்த மகனை, ‘பளார்’ என்று அறைந்திருந்தாள் திவ்யபாரதி.

அவனை அறைந்ததில், பூஜா அச்சம் பரவ சுவற்றோடு சாய்ந்து நிற்க, அவர்கள் அருகில் ஓடி வந்த இரண்டாவது மகனையும், மகளையும் முறைத்த திவ்யபாரதி, “வேதா!” என்று அழைக்க, அவளோ வித்யுத்தின் பின்னால் ஒழிந்துகொண்டாள்.

“வேதா, உன்னைக் கூப்பிட்டேன்” திவ்யபாரதி மீண்டும் அதிகாரத்துடன் அழைக்க, தங்கையை தன் பின்னால் இருந்து இழுத்த வித்யுத், “கீழ போ வேதா” என்று அனுப்பி வைக்க, அன்னையை ஓரக்கண்ணால் தன் முட்டைக் கண்களை வைத்துப் பார்த்தபடியே கடகடவென ஓடி மறைந்தாள் அந்த வீட்டின் கடைக்குட்டி.

மகள் சென்றபின் வர்ஷித்திடம் திரும்பிய திவ்யபாரதி, “உனக்கு என்ன வயசு வர்ஷித்?” என்று வினவ, அவனோ அன்னையின் கேள்வியில் பதில் அளிக்க முடியாமல் தலையை வேறுபக்கம் திருப்பி நின்றிருந்தான்.

“உன்னோட வயசு என்ன பூஜா?” கண்ணீருடன் நின்றிருந்த அண்ணன் மகளைப் பார்த்தவள் கேட்க, “ப.. பதிமூணு அத்தை” என்றாள் வெளியே வராத குரலில். பூஜாவின் பதிலில் அர்த்தம் பொதிந்த பார்வையை மகனின் மேல் திவ்யபாரதி வீச, வர்ஷித்தின் முகமோ கறுத்தது.

“அந்தந்த வயசுல அந்தந்த வேலையைப் பாருங்க. அதுஅது அப்பப்ப நடந்தா தான் சந்தோஷம். இப்ப மத்ததுல கவனத்தை செலுத்தீட்டு படிப்புல கோட்டை விட்டுட்டு நின்னா, யாரும் உங்ககூட நிக்க மாட்டாங்க” என்று இரு மகன்களிடமும் கண்டிப்புடன் உரைத்தவள், பூஜாவை அழைத்துக் கொண்டே கீழே செல்லத் திரும்ப, வெற்றி மகளுடன் மேலே வந்தான்.

“என்னாச்சு?” மகளை முறைக்கும் மனைவியிடம் வந்தவன் வினவ, பூஜாவிற்கு மாமன் வந்ததில் அவரும் வர்ஷித்தை அடித்துவிடுவாரோ என்ற பயத்தில், அழுகை கேவலாக மாறியது. எதற்கு அவனுக்காக அழுகிறோம் என்றெல்லாம் அவளுக்கு அந்த வயதில் புரியவில்லை. மேலும், அன்னை தந்தையின் காதுகளுக்கு இந்த விடயம் சென்றால் அடுத்த விடுமுறைக்கு இங்கு விடமாட்டார்கள் என்ற அச்சம் வேறு.

“வேதா! பூஜாவைக் கூட்டிட்டு கீழ போ” மகளுடன் பூஜாவை அனுப்பிய திவ்யபாரதி, பெண் பிள்ளைகள் சென்றபின் அனைத்தையும் கணவனிடம் ஒப்பிக்க, அவனோ அனைத்தையும் எந்த உணர்வும் இன்றி கேட்டுக் கொண்டிருந்தான்.

“வர்ஷித் லவ் பண்றான் ப்பா பூஜாவை. கவி அத்தையோட பொண்ணு தானே அவ. அவன் லவ் பண்றதுல என்ன தப்பு இருக்கு” என்று வித்யுத் சகோதரனுக்கு சார்பாக பேச, “இவனை..” என்று பல்லைக் கடித்த திவ்யபாரதி, அடிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று தேட, மனைவியை சமாதானம் செய்தான் வெற்றி.

மனைவிக்கும் இரண்டாவது மகனுக்கும் வரும் சண்டை அனைவரும் அறிந்த ஒன்றாயிற்றே. பாசமும், அன்பும் இருவருக்கும் பன்மடங்காய் இருந்த போதிலும், அதை இருவருமே வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். மூவரின் மேலும் அதீத அன்பைக் கொண்ட திவ்யபாரதிக்கு சின்ன மகனின் பிடிவாதமும், கோபமும் மட்டும் அறவே பிடக்காது. தன் கணவன் முதலில் இருந்ததைப் போலவே அவள் கண்களுக்கு இளைய மகனின் குணங்கள் தெரிய, திவ்யபாரதிக்கு அதை யோசிக்கும் போதெல்லாம் மனம் சிறிது பிசையும். என்ன கண்டித்தும், சிறிய வயதில் அடித்துப் பார்த்தும் அந்த குணம் மட்டும் அவனை விட்டு விலகவில்லை. வர்ஷித் அன்னையின் செல்லம் என்றால், வால் முளைக்காத வித்யுத்தும், வேதாவும் தந்தையின் செல்லங்கள்.

“பாரதி, நீ கீழ போ..” என்று அனுப்பி வைத்தவன், இரு மகன்களிடமும் பேசினான்.

“வர்ஷித், உனக்கு பூஜாவை பிடிச்சிருக்கா?” நேரடியாகக் கேட்டத் தந்தையின் கேள்வியில் அவன் உறைந்து போயிருக்க, “வாயைத் திறந்து சொல்லேன்டா” சகோதரனின் காதருகில் பேசினான் வித்யுத்.

“ஆமா ப்பா” வர்ஷித் தைரியத்தோடு கூறி முடிக்க, மகனுக்கு அரும்பியிருந்த மீசையைக் கண்ட வெற்றிக்கு உள்ளுக்குள் லேசாய் புன்னகை அரும்பியது.

“இங்க பாரு வர்ஷித். பூஜா சின்ன பொண்ணு. உனக்கு மட்டும் பூஜாவை புடிச்சா போதாது. அவளுக்கும் உன்னை புடிக்கணும். நமக்கு சொத்து நிறைய இருந்தாலும், நீ நல்லு படிச்சு உன்னோட ஸ்டான்டர்டை நிரூபிக்கணும். நம்ம என்னதான் லவ் பண்ணாலும் நம்பி வர பொண்ணை பாத்துக்கற அளவுக்கு நம்ம நிலை இருக்கணும்” என்று வெற்றி எடுத்துக்கூற வர்ஷித் தலையை ஆட்டினான். ஆனாலும், அவனின் கண்கள் சிறிது கலங்கியதுபோல இருந்தது.

வெற்றி கேள்வியாய் மகனைப் பார்க்க, “அம்மா பர்ஸ்ட் டைம் கை நீட்டிட்டாங்க ப்பா. நான் அவ்வளவு பெரிய தப்பா பண்ணேன்?” என்று கேள்வி கேட்ட மகனின் மனம் வெற்றிக்கு புரிந்தது. தன் இரு சிங்கங்களுக்கும் தைரியம் குறையாது இருந்தாலும், இருவரின் மனம் பற்றி தந்தையாய் அவன் நன்கு அறிவான். வர்ஷித்தின் இளகிய மனம் பற்றியும், வித்யுத்தின் இரும்பு மனம் பற்றியும்.

சிலதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் பெருமூச்சை விட்டவன், “உங்க அம்மா பொண்ணுங்க விஷயத்துல சின்ன வயசுல இருந்து உங்களுக்கு சொல்லி சொல்லி வளத்தது ஏன் தெரியுமா? ஒரு வயசு வந்ததுக்கு அப்புறம் பொண்ணுங்க கிட்ட இப்படி பேசணும், இப்படி நடந்துக்கணும், தப்பா பாக்கக் கூடாதுன்னு மந்திரம் மாதிரி உங்ககிட்ட சொல்லிட்டே இருப்பா.. அது ஏன்னு எப்பவாவது யோசிச்சு இருக்கீகளா?” வினவ இருவருமே அப்போதுதான் சிந்திக்கத் துவங்கினர்.

“உங்க அம்மாவை லவ் பண்ணி பாதில விட்டுட்டு வந்தேன் நான். அதுனால உங்க அம்மா அனுபவிச்ச வேதனை கொஞ்ச நஞ்சம் இல்ல. கிட்டத்தட்ட நாலு வருசம் நாங்க இரண்டு பேரும் டச்ல இல்ல. எங்க இருக்கோம்னு கூட தெரிஞ்சுக்காம இருந்தோம். அப்புறம் இந்த சினிமால வர்ற மாதிரி உங்க மாமனும்(திவ்யாவின் அண்ணன்), அத்தையும்(வெற்றியின் தங்கை) லவ் பண்ணி கல்யாணம் முடிவு பண்ணலாம்னு, இங்க அவங்க சோழவந்தான் வந்தப்ப தான் நாங்க இரண்டு பேரும் மறுபடியும் மீட் பண்ணோம். அவளைவிட மனசில்லாம கல்யாணம் பண்ணேன் ப்ளான் பண்ணி. ஆனா, உங்க அம்மா நான் அவளுக்கு பண்ண எதையும் மறக்கல. நான் பண்ணது அவ்வளவு பெரிய பாவம். அதுக்கு அப்புறம்தான் எல்லாம் சரியாகி நீங்க பொறந்தீங்க.

வர்ஷித், நீ உங்க அம்மா வயித்துல இருந்தப்பவே அவ என்கிட்ட சொல்லி இருக்கா. எனக்கு பையன் தான் வேணும்னு ஆசையா இருக்கு. ஏன்னா எனக்கு பையன் பிறந்தா பொண்ணுங்களை மதிக்கறவனா வளத்தணும்னு பெருமையா சொன்னா என்கிட்ட.

ஒரு தடவை நீ தவறிட்டன்னு வையேன். அது எந்த விஷயத்துலையா இருந்தாலும் சரி. அப்புறம் அவங்களை நீ தலை நிமிர்ந்து பார்க்கவே முடியாது. அவங்களை மட்டும் இல்லை. உன் அம்மா, தங்கச்சி, பாட்டி, பிரண்ட்னு யாரையுமே பாக்க முடியாது. அவங்க கேக்கற கேள்விக்கு பதிலும் சொல்லமுடியாது. அதனாலதான் சொல்றேன் உங்க அம்மாவோட நம்பிக்கையை என்னைக்கும் மீறிடாதீக. அப்படி எதுவும் நடந்தா அவ தாங்கிக்க மாட்டா. அப்படி உங்கனால அவ உடைஞ்சு போய் உக்காரதை நான் பாத்தா. என்னை பழைய வெற்றியா நீங்க பாக்க வேண்டியது வரும்” என்று முடித்த தந்தையின் குரலில் இருந்த கண்டிப்பிலும், வார்த்தைகளின் உக்கிரத்திலும், தந்தையின் கண்கள் உணர்த்திய எச்சரிப்பிலும் இரு மகன்களின் தொண்டையும் பயத்தில் சிறிது கவ்வத்தான் செய்தது.

“வர்ஷித், நீ படிச்சு முடிச்சு உன் சொந்தக் கால்ல நல்ல நிலைக்கு வர வரைக்கும் பூஜாகிட்ட லவ் அதுஇதுன்னு பேசக்கூடாது” என்று நீதிபதிக்கே உண்டான ஆளுமையுடன் மகனிடம் ஆணையிட,

“ஆர்டர்! ஆர்டர்! ஆர்டர்!” என்று வித்யுத் தந்தையை கலாய்க்க, வெற்றி மகனை தோளில் கை போட்டபடி, “ஸார் நீங்க ஏதாவது இப்படி..” என்று இழுக்க,

“ஐயோ.. ஆளைவிடுங்க. நான் ஜாலியா சிங்கிளா இருக்கேன்” என்றவன் தந்தையிடம் ஏதோ விழியால் காட்ட, வெற்றி மகன் காட்டும் திசையை நோக்கித் திரும்ப, பூஜா நின்று கொண்டிருந்தாள்.

“பூஜா, இங்க வா” வெற்றி மருமகளை அழைக்க, அழுது வடிந்த முகத்துடன் பூஜா வர, வர்ஷித் தாமாக எழுந்து கீழே சென்றான்.

அருகில் மருமகளை அமர வைத்தவன், “இதுக்கெல்லாம் அழுகலாமா பூஜாமா. அவன் ஏதோ விளையாட்டுக்கு சொல்லிட்டான். இதெல்லாம் ஸ்போர்டிவ்வா எடுத்துக்கணும். நீ காலேஜ் போனா இப்படி நிறைய ப்ரபோசல் வரும். அப்பவும் இப்படி அழுவியா. உன் அம்மா உன் அப்பாகிட்ட லவ்வை சொன்னப்ப அவரு ஓகே சொல்லலைன்னு நேரா அவங்க வீட்டுக்கே போனா. நீ என்னடான்னா..” என்று சொல்லும் போதே குறுக்கே புகுந்தாள் பூஜா.

“இல்ல மாமா. அத்தானை நீங்க அடிச்சிடுவீங்களோன்னு பயந்து தான் அழுதேன்” என்று சொல்ல, வெற்றிக்கு ஏதோ புரிவதுபோல இருந்தாலும், “சரிடா. இப்ப உங்க ஸ்டடிஸ் தான் முக்கியம். வேற எதுவும் இப்ப இருக்கக் கூடாது. அப்புறம் உன்னை நானே இங்க வர விடமாட்டேன்” என்று புன்னகைத்துக் கொண்டே எச்சரித்தவன் அத்தோடு அந்தப் பேச்சுக்கு அங்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான்.

நாட்கள் செல்லச்செல்ல, சொல்ல முடியாத காதல் இருவருக்குள்ளும் வளர, வர்ஷித் தன்னவளிடம் பேசமுடியாமல் தவித்துத்தான் போனான். வீட்டிற்கு வரும்போது அவள் ஏதாவது கேள்வி கேட்டால் கூட தந்தையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துவிட்டு கடந்துவிடுவான்.

அத்தையைப் போலவே டாக்டருக்குப் படித்தவன் மேற்படிப்பு முடித்து மகப்பேறு மருத்துவன் ஆனான். பூஜாவும் எம்.பி.பி.எஸ் முடித்ததோடு அரசு உத்தியோகம் வாங்கிவிட, மகன் சொல்வதற்கு முன் தானே சதீஷிடமும் தங்கை கவிநயாவிடமும் வெற்றி பேச, அடுத்த இரண்டு மாதங்களில் பெண்ணவள் அவளுடையவன் ஆகியிருக்க, அடுத்த வருடமே இருவரின் காதல் அடையாளமாய் தனுஷ்யா பிறந்தாள்.

வேதா தற்போது மூன்றாம் வருடம் இளங்கலையில் இருந்தாள். அன்னை எத்தனையோ வற்புறுத்தியும் வெளியில் சென்று படிக்காதவள், மதுரையையே தேர்ந்தெடுத்து தினமும் சென்று வருவதை வாடிக்கை ஆக்கியிருந்தாள். அதற்கு ஒரு காரணமும் உண்டு.

***

சென்னையிலிருந்து மதுரைக்கு காரிலேயே அஷ்வினின் குடும்பம் வந்தடைய, யாழ்மொழி எதுவும்பேசாமல் வெளியெ வெறித்தபடி வந்து கொண்டிருந்தாள். மகளை அவ்வப்போது கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டே வந்தாலும் அஷ்வின் எதுவும் பேசவில்லை.

ராஷ்மிகாவுக்கோ கண்களில் அவ்வப்போது குளம் கட்டும் கண்ணீர் நின்றபாடில்லை. மகள் இவ்வளவு பெரிய காரியத்தை செய்ததைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் இருந்த தன்னையே திட்டிக் கொண்டவளுக்கு, கணவனின் நிலையை எண்ணி துயரமாக இருந்தது.

மகளின் மேல் கணவன் வைத்திருக்கும் பாசமும், நம்பிக்கையும் எந்தவளவு என்பதை அறியாதளா அவனின் மனைவி. இதையே நினைத்து நினைத்து கலங்கியவளுக்கு மயக்கம் வருவது போல இருக்க, நெற்றியில் கை வைத்தவள், “ஏங்க தலை சுத்தற மாதிரி இருக்கு” என்று சொல்ல, காரை ஓரமாக நிப்பாட்டிய அஷ்வின் இறங்கி வந்து மறுபுறம் கார் கதவைத் திறந்துவிட, “அம்மா” என்று பதறிய யாழ், அன்னையைத் தாங்க வர, மகளின் கையைத் தட்டிவிட்ட ராஷ்மிகா கணவனின் வயிற்றில் முகம் புதைத்தாள்.

அன்னையின் உதாசீனத்தில் மனம் அடிப்பட்டுப் போக, கசங்கிய முகத்துடன் பின்னே நகர்ந்தவளுக்கு உதடுகள் துடித்து, கண்கள் கலங்கியது. கண்ணீர் வழிய நின்றிருந்தவள், தந்தையைப் பார்க்க, அஷ்வினோ வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை மனைவியின் முகத்தில் அடித்து, சிறிது அருந்தச் செய்தான்.

சற்று நிமிடத்தில் தெளிந்த மனைவியிடம், “எதுக்கு ராஷ்மி அலட்டிக்கறே? அவங்க அவங்க லைப் அவங்க கையில். நாம நம்ம கடமையை செஞ்சிட்டு இருந்துப்போம்” என்று மனைவியைக் கடிந்தவன் மீண்டும் காரை எடுக்க ஹர்ஷா அழைத்தான்.

ஃபோனை காதில் வைத்தவன், “நாங்க சோழவந்தான் போயிட்டு இருக்கோம் ஹர்ஷா. என்னனு பாத்துட்டு கூப்பிடறோம்” என்றவன் காரை எடுக்க, அடுத்து கார் நின்றது வெற்றியின் வீட்டில் தான்.

மாலை ஐந்தாகியிருக்க, அனைத்து சொந்தங்களும் கிளம்பிய பிறகு அப்போதுதான் வெற்றி அக்கடா என்று உட்கார, வீட்டிற்குள் நுழைந்த காரைப் பார்த்தவன் யோசனையுடன் எழ, வர்ஷித்தும், வித்யுத்தும் வெளியே வந்தனர்.

காரிலிருந்து இறங்கிய அஷ்வினைக் கண்ட வெற்றி, “வாங்க அஷ்வின்.. என்ன சோழவந்தான் வந்திருக்கீங்க..” என்று புன்னகையுடன் வரவேற்க, அஷ்வினுடன் இறங்கிய ராஷ்மிகாவின்  அழுத முகத்தையும், கூடவே இறங்கிய யாழ்மொழியின் கலக்கமான  முகத்தையும் பார்த்த வெற்றி யோசனையாய் அஷ்வினைப் பார்த்தான்.

அஷ்வினோ, “உங்களைப் பார்க்க தான் வந்தோம் வெற்றி” என்று புன்னகையுடன் கூற, எதேச்சையாக பார்த்த வெற்றியின் கண்களில், யாழ்மொழி யாரையோ வெறித்துக் கொண்டிருப்பது புரிய, திரும்பிப் பார்த்த வெற்றி ஸ்தம்பித்துப் போனான்.

இளைய மகன் வித்யுத், யாழ்மொழியின் பார்வையை தூசைத் தட்டுவதைப் போலவும், பற்றி எரியும் நெருப்பின் தகிப்புடனும், வானளவு உயர்ந்த சுனாமியின் சீற்றத்துடனும், இறுகிய முகத்துடனும் பார்த்துக்கொண்டு  நின்றிருக்க, வெற்றிக்கு ஏதோ சரித்திரம் திரும்பதைப்போல இருந்தது.

மகளின் பார்வையையும் மருமகனின் பார்வை பரிமாற்றங்களையும் புரிந்துகொண்ட அஷ்வின், “கலெக்டர் ஸார் விஷயமாதான் வந்திருக்கோம்” என்று தனக்குள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் கோபத்தை எளிதில் அடக்கி, உதடுகள் பிரித்து புன்னகைத்தபடிச் சொல்ல,

அஷ்வினின் ரேபான் கூலர்ஸைத் தாண்டி, அவனின் விழிகளில் தெரிந்த செய்தியை உணர்ந்த வெற்றி, விஷயம் புரிந்தவனாக முகத்தில் எதையும், அதாவது அஷ்வின் அளவிற்குக் கூட கண்களில் எதையும் காட்டாமல், கூலாக, “உள்ள வாங்க அஷ்வின்..” என்றவன், “நீங்களும் வாங்க” ராஷ்மிகா, யாழ்மொழி இருவரையும் வரவேற்க, யாழ்மொழி வலது காலை உள்ளே எடுத்து வைத்த சமயம், காரிருள் மேகங்கள் சூழ்ந்து, வானைக் கிழித்துக்கொண்டு அனைவரின் செவிப்பறைகளும் கிழிய, இடியுடன் பூமியில் விழுந்த பெரு நீர்த்துளிகள் மண்ணில் பட்டு சிதறியது.