IMG-20210214-WA0021-fc5d986b

யாழ்-20

மகளை அழைத்துக்கொண்டு சென்ற அஷ்விவிற்கு நான்கு வருடத்திற்குப் பிறகு அத்தனை ஆனந்தம். அதுவும் அவன் ஆசைப்பட்டது போல முதல் குழந்தை பெண்குழந்தை. அதில் அளவு கடந்த மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தான் ராஷ்மிகாவின் கணவன்.

“அப்பா, நாம எப்ப நம்ம வீட்டுக்குப் போவோம்?” சிக்னலில் நின்றபோது மகள் கேட்க

“இன்னும் கொஞ்ச தூரந்தாம்மா” என்றவன் தன் மடியில் அமர்ந்து, அவன் கையோடு ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டிருந்த மகளின் பிஞ்சுக் கைகளைப் பார்த்தான்.

பிறந்தபோது அந்தப் பிஞ்சுக்கைகள் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தவனுக்கு ஏக்கமாக இருந்தது, யாழ் பிறந்தபோது அவளுடன் இருக்க முடியவில்லையே என்று.

அதற்குக் காரணமான மனைவியின் பேல் கோபமும் ஆத்திரமும் வந்தது
அஷ்வினிற்கு. இதையெப்படி அவள் மறைக்கலாம் என்று நினைத்தவனுக்கு, இப்படி அவள் குழந்தையை மறைத்ததை, மன்னிக்க முடியுமா என்று தெரியவில்லை.

வழியில் மகளிற்கு, துணி, சாக்லேட்ஸ் என்று பிடித்த அனைத்தையும் வாங்கிக் குவித்தவன், “வேற ஏதாவது வேணுமா குட்டித் தங்கம்” என்று மகளின் குனிந்து கேட்க,

“இதுக்கும் மேலேயாப்பா” என்று யாழ் கண்களை விரித்துக் கேட்க அவளின் செயலில் அதிர்ந்துதான் போனான் அஷ்வின். இதே மாதிரி தான் ராஷ்மிகாவும் அவனிடம் கேட்டிருக்கிறாள். முகம்தான் அஷ்வினின் ஜாடை என்றால், பாதி செய்கைகள் அன்னையைப்போல இருந்தது.

“உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கடா” மகளின் கன்னங்களை பிடித்து கொஞ்சியபடி.

“போதும்பா. நம்ம வீட்டுக்கு போலாம்” யாழ்மொழி வீட்டிற்கு போகும் குறிக்கோளோடே சொல்ல, பொருட்கள் எல்லாவற்றையும் காரில் எடுத்து வைக்கச் சொன்னவன், மகளோடு சென்று காரில் ஏறினான்.

வீட்டை அடைந்தவன், “யாழ்மா! நம்ம பாட்டியை சர்ப்ரைஸ் பண்ணலாமா?” மகளின் காதருகே மெல்லிய ரகசியக் குரலில் அஷ்வின் கேட்க,

“எப்டி?” யாழ்மொழி தந்தையைப் போலவே அவனிடம் திரும்பி இரகசியம் பேதுவது போல மெதுவே கேட்டாள்.
“நீங்க மட்டும் உள்ள போங்க. பாட்டி உங்களைக் கண்டு பிடிக்கறாங்களானு பாப்போம். ஆனா, நீங்க யாருன்னு சொல்லக் கூடாது சரியா?” அஷ்வின் சொல்ல ,

“ஓகேப்பா” என்று சிரித்த மகளை கீழே இறக்கிவிட்டவன், உள்ளே அனுப்பி வைத்தான்.

மகள் சென்று நீண்ட நேரமாகியும், ‘என்ன ஒரு ரியாக்ஷனும் இல்ல!’ தாடையைத் தேய்த்தவன், உள்ளே செல்ல அங்கு செல்வமணியோ பேத்தியை மடியில் அமரவைத்து, எதையோ ஊட்டிக்கொண்டு இருந்தார்.

“பாட்டி! அப்பா வந்துட்டாங்க” என்று தந்தையைப் பார்த்த யாழ் கத்த, மகனை நிமிர்த்து பார்த்தவர் முகத்தில் அத்தனை நிம்மதி. இதைத் தானே அவர் இத்தனை வருடங்களாக எதிர்பார்த்தது, ஏங்கியது.

“எப்படிம்மா கண்டுப் பிடிச்சிங்க?” கேட்டபடி அன்னையின் அருகில் அமர்ந்தவன், அன்னைக்கும் மகளுக்கும் தட்டில் இருந்ததை எடுத்து ஊட்டிவிட்டான்.

“இது சொல்லித்தான் தெரியணுமா? அப்படியே உன்ன மாதிரியிருக்கா எம்பேத்தி” என்று பேத்தியைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டவர், திடீரென நினைவு வர, “ராஷ்மிகா எங்க?” என்று வினவினார்.

“அவ நாளைக்கு காலைல வந்திடுவா” என்றவன், “அப்பாவும் தர்ஷுவும் எங்கம்மா?”

“அவங்க ரெண்டு பேரும் கல்யாண புடவைக்கு ப்ளவுஸ் தைக்கக் குடுக்க போயிருக்காங்க” என்றார் செல்வமணி.

“ஓஓ!” என்றவன் மகளுடன் நிறையப்பேச, செல்வமணியும் இணைந்து கொண்டார். சின்னஞ்சிறு மழலையின் முக பாவனைகளிலும், அழகிய செப்பு இதழை விரித்துப் பேசியதிலும் அன்னையும் மகனும் இணைந்து கொண்டனர்.

“யார் இந்தக் குட்டிபாப்பா?” என்றபடி உள்ளே வந்த நாகேஷ்வரன், யாழின் முகத்தை உற்றுப்பார்த்தார். அடுத்து மகனின் முகத்தைப் பார்த்தார்.

அவர் மாறிமாறிப் பார்க்க, “நம்ம பேத்திதாங்க” என்று செல்வமணி, நாகேஷ்வரன் பார்வையை உணர்ந்தவராகச் சொன்னார். அவருக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. வாரிசு, வாரிசு என்றிருந்த பெரிய தம்பதியருக்கு இப்போது மகன் வழிப் பேத்தியைக் கண்டதில் எல்லை இல்லா ஆனந்தம். பேத்தியைத் தூக்கி கொஞ்சியபடியே திரிந்தனர் இருவரும்.

“நான் உங்களை பாத்திருக்கேன் அத்தை” யாழ்மொழி கீர்த்தியைப் பார்த்துச்சொல்ல,

‘அய்யய்யோ!’ மனதிற்குள் நினைத்த கீர்த்தி, “யாழ் வா. அத்தை நிறைய சாக்லேட் வச்சிருக்கேன்” என்று பேச்சை மாற்றி தூக்கிக்கொண்டு சென்றுவிட்டாள்.

யாழின் துறுதுறுப்பையும், பேச்சையும் கண்ட செல்வமணி, “முகம்
உன்ன மாதிரினா, குணம் அப்படியே ராஷ்மிகா. இல்ல குமரா?” அஷ்வினிடம் செல்வமணி வினவ, அவனோ வெற்றுப் புன்னகையை உதிர்த்தான். மகனின் செய்கையில் செல்வமணியின் மனம் பிசைந்தது. அவனின் கோபம் பற்றி அறிந்தவர் அல்லவா?

ஆனால், யாழ்மொழியால் அஷ்வினும் ராஷ்மிகாவும் சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது அவருக்கு. அன்றிரவு மகளுடன் அஷ்வின் அறையில் விளையாடிக் கொண்டிருக்க, உள்ளே வந்த செல்வமணி மகனின் முகத்தைக் கண்டு அதிசயத்துதான் போனார்.

அஷ்வின் சந்தோஷமாக சிரித்தே பலநாட்கள் ஆகி இருந்தது. வேலை, வேலை என்று சில சமயங்களில் வீட்டிற்கு வரமால் இருந்திருக்கிறான் ராஷ்மிகா வீட்டை விட்டு சென்றபின்.

இத்தனை ஆண்டுகள் கணவருடன் இல்லறம் நடத்தியவருக்குத் தெரியாதா, மனைவி இல்லாத வீட்டிற்கு அவனுக்கு வரப் பிடிக்கவில்லை என்று.

அப்படியிருக்க இன்று குழந்தையோடு சிறுபையனாக விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டவர், “குமரா! பாப்பா நைட் பால் குடிக்குமா? இல்ல வேற எதாவது பூஸ்ட் ஹார்லிக்ஸா?” என்று கேட்க, ‘பால்’ என்ற வார்த்தையில் தந்தையை வந்து க்கட்டிப்பிடித்த யாழ், 

“அப்பா, நோ” அவனின் கன்னத்தில் சாய்ந்து சிணுங்க, மகளின் செய்கையை ரசித்தவன், “நோ, ம்மா. யாழ்க்கு வேணாம்” என்றான்.

“சரி, இரண்டு பேருக்கும் குட்நைட்” மனம் நிறைய மகன் பேத்தியின்
முகத்தைப் பார்த்துவிட்டு அகன்றார். ஒரு வழியாக விளையாடி முடித்து அப்பாவும் மகளும் படுக்க, மகளை நெஞ்சின்மேல் போட்டு, தலையை நீவிக் குடுத்தபடியே உறங்க வைத்தான் அஷ்வின்.

அவனின் அகமும், மனமும் சொல்ல முடியாத அளவு நிறைந்து இருந்தது. அவனின் வலுவான கைகளோ மகளுக்கு வலிக்குமோ என்று பயந்து அத்தனை மென்மையாய் பற்றியிருந்தது.

மனைவியைப் போலவே, மகள் இதழ் பிரித்து உறங்குவதைக் கண்ட அஷ்வினிற்கு பெருமூச்சு ஒன்று வெளிப்பட, மகளை தட்டிக் கொடுத்தபடியே தானும் உறங்கிப் போனான்.

அடுத்தநாள் காலையிலேயே அலைபேசி அடிக்க, எழுந்த அஷ்வின் மகளின் தூக்கம் கலையாமல், அருகே படுக்க வைத்துவிட்டு பால்கனிக்கு எழுந்து வந்தான்.

“ஹலோ”

“நான் ராஷ்மிகா அம்மா பேசறேன்பா” கல்யாணி.

“சொல்லுங்க அத்தை”

“ராஷ்மி நைட்ல இருந்து அழுதுட்டே இருக்காப்பா. கண்ணு எல்லாம் சிவந்து பாக்கவேமுடியல அவளை” தழுதழுத்த குரலில் சொன்னவர்,

“அவளை எப்படியாவது வந்து சமாதானம் செய்து உங்ககூடவே கூட்டிட்டு போயிடுங்க” என்றார் கெஞ்சும் குரலில்.

“நான் யாழக் கூட்டிட்டு கிளம்பி வரேன் அத்தை” என்றவன் மகளை எழுப்ப மனமில்லாமல் எழுப்பி, கிளப்பி, தானும் கிளம்பிச் சென்றான்.

உள்ளே நுழையும்போதே ராஷ்மிகாவைக் கண்டுவிட்டான். காரை விட்டு இறங்கி மகளைக் கையில் தூக்கியபடி நிமிர்ந்த அஷ்வின் ராஷ்மிகாவைக் கண்டான். உதட்டிலிருந்த புன்னகை மறைந்து, கடினம் வந்து குடிகொண்டது அவனது முகத்தில்.

மகளைத் தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கி வந்த அஷ்வின், அவளின் சிவந்த கண்களையும், வீங்கிய முகத்தையும் கவனிக்கத் தவறவில்லை. அவளைக் கடந்து உள்ளே அஷ்வின் செல்ல, ராஷ்மிகா கோயிலிற்கு சென்று பத்து நிமிடத்தில் சாமியைக் கும்பிட்டுக்கொண்டு விரைவாக வீட்டிற்கு வந்தாள்.

உள்ளே நுழைய சிவகுமாரும் அஷ்வினும் ஏதோ பேசிக்கொண்டிருக்க, யாழ்மொழி தந்தையின் மடியில் அமர்ந்து, அஷ்வினின் நீண்ட விரல்களைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

ராஷ்மிகா வந்ததை கவனித்த யாழ்மொழியோ, “அம்மா!” என்று அஷ்வின் மடியில் இருந்து ஓடிவந்து, அவளது கையைப் பிடித்துக் கொள்ள அனைவரது பார்வையும் ராஷ்மிகாவின் மேல் விழுந்தது.

மகளைத் தூக்கி முத்தமிட்டவள், “சாப்பிட்டியா?” என்று வினவினாள்.

“ம்ம்.. பூரி சாப்பிட்டேன் ம்மா” என்று தலையை ஆட்டிஆட்டிச் சொன்னவள், “மணி பாட்டி சூப்பரா செஞ்சிருந்தாங்க” என்றாள் வயிற்றைப் பிடித்தபடி.

“அப்ப இனிமேல் அங்க பாட்டிகூட இருக்க ஓகேவா?” விஜயலட்சுமி பேத்தியின் கன்னத்தை வாஞ்சையாக தடவிக்கேட்க, “ஓஓஓ!” என்ற மகளின் பதிலில் ராஷ்மிகா, தன் பெரியன்னையை முறைத்தாள்.

“நான் யாழை எங்கேயும் அனுப்ப மாட்டேன்” ராஷ்மிகா அழுத்தமாக எல்லோருக்கும் கேட்கும்படி சொல்ல, “அதுதான் நீயும் அவகூட போன்னு சொல்றோம்” என்றார் விஜயலட்சுமி.

“நான் இங்கிருந்து போனா, அது டெல்லியாதான் பெரிம்மா இருக்கும்” என்றாள் ஆணித்தரமாக. எல்லோரும் அதிர்ந்து இருக்க, அஷ்வினோ மனைவியை நோக்கினானே தவிர வேறெதுவும் பேசவில்லை.

சிவகுமார் ஏதோ பேசவர, “மாமா, நான் கிளம்பறேன்” என்று அஷ்வின் எழ, ராஷ்மிகாவோ மகளை அழைத்துக்கொண்டு போய் விடுவானோ என்ற பயத்தில் யாழை இறுகப் பிடித்துக்கொண்டாள்.

அவளருகில் வந்த அஷ்வின், “பயப்படாத.. நீ அழறன்னு ஃபோன் வந்துச்சு. அதான் யாழைவிட வந்தேன்” என்றவன் தெளிவான குரலில், “என்னோட மனைவியா என் வீட்டுக்கு வரமாட்டன்னு தெரியும். ஆனா, யாழுக்கு அம்மாவா வருவேன்னு நினைச்சேன். இத்தனை நாள் நீங்க இல்லாமதான் இருந்தேன். அப்படியே இனியும் வாழப் பழகிக்கறேன்” என்று தனது கம்பீரம் குறையாத குரலில் சொன்னவன், யாழை பார்க்க மகளின் முகம் அழத்தயாராக இருப்பது தெரிந்தது.

“நான் கிளம்பறேன்” என்றவன் நகரப்பார்க்க, யாழின் கை அவன் கைச்சட்டையைப் பிடித்துக்கொண்டு, “அப்பா, நானும் வரேன்” என்றாள்.

அடுத்து ராஷ்மிகாவை நோக்கிய யாழ்மொழி, “அம்மா, ப்ளீஸ்மா. அப்பா கூட போலாம்” என்று அழ ஆரம்பிக்க, ராஷ்மிகாவோ அழுது விடுவோமோ என்ற பயத்தில் நின்றிருந்தாள்.

“அப்பா ஊருக்குப் போறேன். நாளைக்கு வந்திடுவேன்” அஷ்வின் மகளிடம் சமாளிக்க,

“இல்ல பொய். நீங்க ஊருக்குப் போனா வர மாட்டீங்க” என்று ராஷ்மிகா தந்தை வெளியூரில் இருக்கிறார் என்று முன்னால் சொன்ன பொய்யை அப்போது நம்பிய இளஞ்சிட்டு இப்போது கலங்கியது.

“இல்லடாமா” என்றவன் மகளின் கண்ணீரைப் பார்க்க முடியாதவனாய், அங்கிருந்து காதை செவிடாய் வைத்துக்கொண்டு, மகள் அழுகுரலை கேட்காமல் அகன்றான். காரில் வந்து ஏறிய அஷ்வினிற்கு, தன் உலகம் கையை விட்டு நழுவியது போலிருந்தது. காரை சீக்கிரமே எடுத்துக் கொண்டு கிளம்பியவன், எங்கு செல்கிறோம் என்றே தெரியாமலே காரை செலுத்தினான்.

அஷ்வின் சென்றபின் தான் ஹர்ஷாவில் இருந்து எல்லோரும் அங்கு இருந்ததைக் கவனித்தாள் ராஷ்மிகா. யாருக்கும் என்ன பிரச்சனை என்றே தெரியாது.

“என் அப்பா கடைசி வரை என்கிட்ட பேசாம போனதுக்கு இவன்தான் காரணம்” என்று காரணத்தைச் சொல்லி வைத்திருந்தாள். ஆனால்,
எதையும் யாரிடமும் சொல்லவில்லை ராஷ்மிகா. அழுதுகொண்டிருந்த யாழ்மொழியை, விஜயலட்சுமி ராஷ்மிகாவை முறைத்தபடி வாங்கிக் கொண்டு செல்ல, கல்யாணியோ மகளின் மேல் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தார்.

மகளின் அருகில் வந்தவர், “ஏன்டி, உன்னையும் உன் அப்பாவையும் பிரிச்சுட்டாரு அந்தப் பையன்னு சொல்லுவே இல்ல?” கூர்மையாகக் கேட்டவர்,

“நீ மட்டும் இப்ப என்னடீ பண்ணிட்டு இருக்க” என்று ஆவேசமாகக் கேட்ட கல்யாணி, “அவருக்குதான் நல்ல மனைவியா இல்ல. யாழுக்காவது நல்ல அம்மாவா இருக்கப்பாரு” என்று கல்லாய் நின்றிருந்த மகளின் மனதில் நான்கே வாக்கியத்தில் அவளை சுழற்றியடிக்கும் விதமாய் பேசினார்.

“இன்னும் யாழ்கிட்ட எவ்வளவு நாள் மறைக்க முடியும் உன்னால. இப்பவே அந்தப் பிள்ளைக்கு எல்லாம் புரிய ஆரம்பிச்சிருச்சு. இதுக்கு மேல என்னால உனக்கு புரிய வைக்க முடியாது” என்றுவிட்டு அகன்று விட்டார்.

சிவகுமார் எதுவும் பேசாமல் கிளம்ப, ஹர்ஷாவும் எதுவும் பேசவில்லை. அக்காவின் நிலையை மட்டுமே எண்ணிப் பார்த்தவன் இப்போது யாழ்மொழியின் எதிர்காலத்தை எண்ணினான். எல்லோரும் கிளம்ப தந்தை படத்திற்கு முன்னால் போய் நின்றவளுக்கு கண்ணீர்தான் அரும்பியது.

“அப்பா, அவன் இல்லாம, நான் மட்டும் சந்தோஷமா இருந்த மாதிரி எல்லோரும் நினைக்கறாங்களேப்பா”, மனதிற்குள் நினைத்தவளுக்கு
சிலநினைவுகள் வந்தது.

அவன் போனபின் அவளும் ஆனந்தமாக இல்லை. அதுவும் கருவுற்ற பிறகு அவனிடம் பகிர்ந்துகொள்ள நினைத்த மனதிற்கோ வேலியைப் போட்டாள். ஆனால், அதை அவனிடம் சொல்ல என்று உந்திய மனதை அடக்கத் தெரியாமல்தான் அன்னையிடம் சென்று அவள் கருவை கலைப்பதற்கு கேட்டது.

அஷ்வினை விவாகரத்து செய்வதானால் இதற்கு சரியென்று சிவக்குமார் சொல்ல, அவளால் எதுவும் பேசமுடியவில்லை. அவளிற்கு அஷ்வினிடம் செல்லவும் விருப்பமில்லை. அஷ்வினை இன்னொருத்தியிடம் விட்டுக் கொடுக்கவும் மனமில்லை.

அதுவும் ஒவ்வொரு மாதமும் ஏறிக்கொண்டே போய், குழந்தை அசையத் தொடங்கும்போது டெல்லியில் இருந்தவளுக்கு அஷ்வினிற்கு ஃபோன் செய்துவிடலாமா என்றும் தோன்றியது. ஆனால், தன்தந்தையின் உயிரை பறித்தவன் என்று ஞாபகம் வரும்போதெல்லாம் மனதில் கடினம் கூடியது.

அதுவும் வலி எடுத்து மருத்துவமனையில் அனுமதித்திருந்த போதும், அவனின் ஞாபகமே. நேரம் ஆகஆக குறுகிய நேரத்தில் வலி விட்டு விட்டு வர, அஷ்வினின் அருகாமையை அவளின் மனம் அதிகமாக நாடியது.

தன் கையைப்பிடித்து தைரியம் சொல்ல அவன் வேண்டுமென நினைத்து மனம் ஏங்கியவள் அழ ஆரம்பித்தாள். பிள்ளை பெறும் வலியைத் தாண்டி அவனை நினைத்தே அந்தக் கணங்களில் அழுதாள் ராஷ்மிகா. அலறலோடு அவள் யாழை பூமிக்கு கொண்டு வந்தபோது,
அவள் கொடுத்த சத்தம் அஷ்வினை மட்டும் எட்டியிருந்திருந்தால் அவன் ஈரக்குலை எல்லாம் நடுங்கியிருக்கும்.

“அஷ்வின்” முணுமுணுத்தபடி அவள் மயக்கத்திற்குச் செல்ல குழந்தையை சுத்தம் செய்தனர். கண் விழித்தவளுக்கு பெண் குழந்தை என்றதும், அஷ்வின் மால்தீவ்ஸில் வைத்து அவளிடம் ஆசை ஆசையாகக் கேட்டது நினைவு வந்து, அவளை துயரத்தில் ஆழ்த்த, இரண்டுநாள் காய்ச்சலிலேயே கிடந்தாள்.

பின் மருத்துவர் வந்து அதட்டி அறிவுரை தரவே சிறிது தெளிவடைந்தாள் ராஷ்மிகா.

பெயர் வைக்கும்போது வீம்பாக அவன் சொன்ன பெயரை வைக்ககீ கூடாது என்று வேறு பெயரை முடிவு செய்துகொண்டு கோயிலிற்கு கிளம்பியவள், கடைசி நேரத்தில் ஹர்ஷவர்தன் பெயரைக் காதில் சொல்லப் போகும்போது, “யாழ்மொழின்னு சொல்லு ஹர்ஷா” என்றாள்.

அவனை நினைத்து அவள் ஏங்காத நாளில்லை. அதுவும் யாழ்மொழி வளர வளர, “அப்பா” என்று கேட்கும் போதெல்லாம் அவளுக்கு அஷ்வினின் ஞாபகம் விடாமல் வந்துகொண்டிருந்தது.

சென்னை வந்தால் அவனது ஞாபகம் வரும் என்றுதான் அவள் வரவேயில்லை. யாழையும் கூட்டிவரவில்லை. அவன் அவளிடம் காட்டிய காதலில் நடிப்பே உள்ளது என்பதை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் தவியாய் தவித்தது. சில சமயம் தனிமையில் கண்ணீரும் விட்டிருக்கிறாள். அவளுக்கு டெல்லியில் இருந்த ஒரே ஆறுதல் யாழ் மற்றும் சரண் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்ததுதான்.

நட்பிற்கு எடுத்துக்காட்டு என்றால் சரணுடன் யாரும் மிகையாக முடியாது.அவ்வளவு பொறுப்பாக லஷ்மி அம்மாவை உடன் வைத்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டான். பிரசவ சமயத்திலும் விஜயலட்சுமி, கல்யாணி இருந்தபோதும் அவளுக்கு ஆபிஸ் காண்டினில் இருந்து செல்வதுபோல சத்தானது ஏதாவது போய்விடும்.

அதே சமயம் தோழியை யாரும் தவறாகப் பேசிவிடக் கூடாதென்று ஆபிஸில் தூரமாகவே இருந்தான். அஷ்வினைப் பற்றி அவன் கேட்டதும் இல்லை அவதூறு சொன்னதும் இல்லை.

“உன் முடிவு சரியான்னு யோசிச்சுக்க ராஷ்மி” என்று ஒருமுறை மட்டும் சொன்னவன், அதற்குமேல் பேசவில்லை. ஆனால், சரணுக்குமே அஷ்வின் மேல் தவறு இருக்காதென்ற நம்பிக்கையிருந்தது. தோழியை விட்டுக் கொடுக்கவும் அவனால் முடியவில்லை.

சரணின் நட்பிற்கு தனி இலக்கணமே உண்டு.

இந்த நான்கு வருடத்தில் எதையும் நினைக்காதவள் இன்று அஷ்வின் செல்லும்போது யாழைப் பார்த்துக்கொண்டு சென்ற பார்வையும், அஷ்வின் சென்றபின் அன்னை கேட்ட கேள்விகளும் மனதை சம்மட்டியால் அடித்தது போன்று வலித்தது.

எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டிருந்த ராஷ்மிகாவிற்கு தன் கையை யாரோ பிடிப்பதுபோலத் தோன்ற நடப்பிற்கு வந்தாள்.

யாழ்மொழி தான், அழுதுவடிந்து நின்றிருந்தாள். மகள் அழுவதற்கு தாம்தான் காரணமென்று எண்ணியவள் மகளைத் தூக்கி, கண்களைத்
துடைத்துவிட, “அம்மா, அப்பா கூட போலாம்” என்றவள், “என் ப்ரண்ட்ஸ் எல்லாம் எப்பவுமே அவங்க அப்பா கூடத்தான் இருக்காங்க” என்று குழந்தை ஏக்கத்தில் தேம்ப, ராஷ்மிகாவிற்கு, “இத்தனைநாள் வளர்த்தும் அவளது ஏக்கங்களை புரிந்து கொள்ளவில்லையே” என்று நினைக்கையில் அன்னை சொன்னது ஞாபகம் வந்தது.

“சரி, அப்பாகிட்ட போலாம்”, என்று மகளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட, யாழின் கண்ணீர் நின்றது என்றால், ராஷ்மிகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது கணவனை நினைத்து.

இருவரும் சேர்வதற்கான பிள்ளையார் சுழியை யாழ் அங்கே ஆரம்பித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!