யாழ்-21

IMG-20210214-WA0021-69fd9dfb

யாழ்-21

காரை எடுத்துக் கொண்டு சென்னைக்கு
வெளியே ஈசிஆர் ரோட்டில் காரை அதிவேகமாக செலுத்திய அஸ்வின்
கடைசியாகக் காரை நிறுத்தியது
கடற்கரையில். கொஞ்ச தூரம் மணலில்
நடந்தவன் ஒரு இடத்தில் கால்களை
மடித்து அமர்ந்தான். காலை நேரமே
என்றாலும் அதற்கு மாறாக சூரியனை
மேகங்கள் மறைத்து அன்று
மேகமூட்டமாக இருந்தது சென்னையில்.
அந்த இளம் தென்றல் அவன் முகத்தில்
பட.. அவனால் அதை அனுபவிக்கக் கூட
இயலவில்லை. மனம் எங்கிலும்
வெறுமை.

சிறிய வயதில் இருந்து அனைவரையும்
ஆட்டி வைத்து.. நினைத்ததை சாதித்து வெற்றி பெற்றவனுக்கு இந்த நான்கு
வருடங்களாக வெறுமையே.. அவள்
தந்தை இறந்த பிறகு கடைசியாக
அவனிடம் ராஷ்மிகா சொன்ன
வார்த்தைகள் அஸ்வின் செவியில் வந்து
அடித்தது.

“ஆமா டி.. நான் கொலைகாரன் தான்..”
என்று அவள் முன் கத்த வேண்டும் என்று
போல் இருந்தது அஸ்வினிற்கு.

மகளின் அழகான முகம் நியாபகம் வர
ஒரு நொடி இறுக கண்களை மூடியவன்
ஒரு பெருமூச்சை விட்டான். கையைத்
தூக்கி கடிகாரத்தைப் பார்க்க அதுவோ பதினொன்றைக் காட்டியது. எழுந்து
சென்று காரை எடுத்தவன் தான்
புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கும்
அம்யூஸ்மென்ட் பார்க்கின் வேலைகளை
கவனிக்க வர.. அவனின் நியாபகம்
மொத்தமும் மகளிடமே இருந்தது.
வேலையிலும் கவனம் செலுத்த
முடியாதவன் ஓஎம்ஆர் ரோட்டிலேயே
உள்ள தனது ஹெட் ஆபிஸிற்குச்
சென்றான்.

உள்ளே நுழையும் போதே அனைவரின்
மரியாதையை ஏற்றுக் கொண்டு
சென்றவன் அப்படியே நின்றான்.
ஹர்ஷவர்தன் தான் அஸ்வினைப் பார்க்க வந்திருந்தான். அஸ்வின் வீட்டிற்கு வந்து
சென்ற பின் ஹர்ஷாவால் தன் அக்கா
வாக்குமூலம் உண்மையாக இருக்குமா
என்ற சந்தேகம் எழுந்தது. அவன் யாழை
ராஷ்மிகாவிடம் விட்டுவிட்டு மகளையும்
மனைவியையும் ஏக்கமாகப் பார்த்து
விட்டு வந்தது.. ஒரு ஆண்மகனாய்
ஹர்ஷாவிற்கு புரிந்தது. அதனால் தான்
சிறிது நேரம் ஆபிஸில் இருந்தவன்
கிளம்பி வந்துவிட்டான் அஸ்வினைப்
பார்க்க.

ஹர்ஷா வந்ததைத் தெரிவிக்க
அங்கிருந்த பெண் அஸ்வினிற்குத்
தெரிவிக்க அழைக்கும் போதே அஸ்வினும் அங்கு வந்துவிட்டான். ஏனோ
எதிரெதிராய் நிற்கும் இருவருக்கும்
திடீரென பார்க்க எதுவும் பேச
வரவில்லை.

“உள்ள யாரையும் நான் சொல்ற
வரைக்கும் விட வேண்டாம் மிஸ்.மலர்”
என்று அங்கிருந்த பெண்ணிடம் பணித்த
அஸ்வின் ஹர்ஷாவிடம் திரும்பி “உள்ள
போலாம்” என்று அழைக்க.. ஹர்ஷாவும்
அஸ்வினும் அஸ்வினுடைய அறைக்குள்
நுழைந்தனர்.

“சொல்லுங்க ஹர்ஷவர்தன்.. என்ன
விஷயம்” என்று அஸ்வின் இன்முகத்துடனே கேட்டான். மச்சான்
என்பதை விட தங்கையின் கணவன்
என்ற எண்ணம் இப்போது அதிகமாக
இருந்தது அஸ்வினிற்கு.

“அக்காக்கும் உங்களுக்கும் அப்படி என்ன
தான் பிரச்சினை?” என்று வினவினான்.

“உங்கக் கிட்ட அவ இன்னும் சொல்லலை
போலயே..” என்று அஸ்வின் கேட்க..

“இல்ல அக்கா சொல்லலை..” என்றான்.
“அழுத்தக்காரி” என்று மனதிற்குள்
நினைத்த அஸ்வின்..

“உங்க அக்கா கிட்டையே நீங்க
கேட்கலாமே ஹர்ஷா..” என்று தன்
இருக்கையில் நன்றாக சாய்ந்தபடி
வினவினான் அஸ்வின்.

“எனக்கு அக்கா சொல்லாமையே ஒரு
அளவுக்குத் தெரியும்” – என்று ஹர்ஷா
கூற அஸ்வினின் கண்கள் இடுங்கியது.

“அக்கா நைட் சில டைம் உளறுவா” –
என்றான் ஹர்வா.

“அது தெரியும். என்ன உளறுனா?” என்று
வினவினான் அஸ்வின்.

“அக்கா எப்பவாவது தான் இந்த மாதிரி
உளறுவாள்.. நீங்க போன அப்புறம்
டெய்லியும் இருந்துச்சு இந்த மாதிரி..
நீங்க கடைசியா அக்கா கிட்ட பேசிட்டு
போன அப்புறம் நான் எப்பவும் அக்கா
ரூம்ல தான் இருப்பேன்.. அப்ப தான்
தெரிஞ்சுது..” என்றவன் ராஷ்மிகா
உளறியதை சொல்ல ஆரம்பித்தான்.

“ஏன் அஸு இப்படி பண்ணிங்க.. என்ன
லவ் பண்ற மாதிரி நடிச்சு என்
அப்பாவையும் கொன்னுட்டிங்களே அஸு..
அப்பாவையும் இழந்துட்டு உங்களையும்
தள்ளி வச்சிட்டு என்னால இருக்கவே
முடியல அஸ்வின்” ன்னு அழுவாள் என்று சொன்ன ஹர்ஷாவின் முகம்
இறுகி இருந்தது.

“ஆமா நான் கொலைகாரன் தான்
ஹர்ஷா..” என்று அஸ்வின் இரும்புக்
குரலில் சொல்ல நிமிர்ந்தவன்
அடுத்தடுத்து அஸ்வின் சொன்ன
விஷயங்களில் அதிர்ந்தான். அஸ்வின்
சொன்ன அனைத்தையும் கேட்டு
முடித்தவனுக்கு என்ன பேசுவது என்றே
தெரியவில்லை.

சிறிது நேரம் அமைதியாக இருந்த
ஹர்ஷா “நான் வேணா அக்கா கிட்ட
பேசட்டுமா மாமா?” என்று கேட்க..
“வேணாம் ஹர்ஷா.. ஒரு ரிலேஷன்சிப்ல
நம்பிக்கை ரொம்ப முக்கியம்.. அது
அவளுக்கா இருக்கணும்.. அவ என்னை
நம்பாம என் கூட இருந்தா கூட
ஏத்துப்பேன்.. ஆனா யாராவது என்னப்
பத்தி சொல்லித் தான் அவ என்னை நம்பி
என் கூட இருக்கணும்னா அவ வரவே
வேணாம்னு தான் நினைப்பேன்” – என்று
அஸ்வின் சொல்ல ஹர்ஷாவால் அவன்
சொற்களில் இருந்த உண்மையை புரிந்து
கொள்ள முடிந்தது.

“ம்ம் சரி மாமா” – என்று ஹர்ஷா சொல்ல
அப்போது தான் அவனது மாமா என்ற
அழைப்பை கவனித்தான் அஸ்வின்.

“சரி மச்சான்” – என்ற அஸ்வினின்
வார்த்தையில் அவனைப் பார்த்தவன்
அவனின் கேலியை உணர
இருவருக்குமே சிரிப்பு வந்தது.

“மாமா. அப்புறம் வீட்டுல பெரியவங்கள
தப்பா நினைக்காதிங்க.. யாழ்
உருவானப்பவே உங்க கிட்ட சொல்லக்
கூடாதுன்னு ரொம்ப பிடிவாதம் பண்ணித்
தான்.. அக்கா டெல்லி போனா” என்று
ஹர்ஷா சொல்ல..

“அவளைப் பத்தி எனக்குத் தெரியும்
ஹர்ஷா.. அவ தான் இந்த மாதிரி
ஏதாவது கிறுக்கி மாதிரி பண்ணி
இருப்பாள்னு நேத்தே நினைச்சேன்” –
என்று அஸ்வின் கோபத்தோடு சொல்ல..

“அக்காவுக்காக நான் ஸாரி கேக்கறேன்
மாமா” – என்றான் ஹர்ஷாவோ..
ஏனெனில் இனி எல்லாம் நன்றாகப் போக
வேண்டும் என்று அவனிற்குத்
தோன்றியது.

“நீ எதுக்கு ஹர்ஷா கேக்கற.. நான் தான்
கேக்கணும்..” என்று ஏதோ சொல்ல
வந்த அஸ்வின் எதுவும் பேசாமல் சொல்ல
வந்ததை விழுங்கிக் கொண்டான்.

சிறிது நேரம் இருவரும் பொதுவாக
பேசிக் கொண்டிருக்க “சரி மாமா. நான்
கிளம்பறேன்” என்று எழ…

“ஹர்ஷா. உன் அக்கா கிட்ட எதுவும்
சொல்லாதே” என்று அஸ்வின்
நினைவூட்ட..

“ம்ம்” என்று தலையை ஆட்டிவிட்டுக்
கிளம்பினான் ஹர்ஷா.

மாலை வரை வேலைகள் கழுத்தை
நெறிக்க எந்த சிந்தனையையும் நடுவில்
வர விடாமல் வேலைகளை செய்து முடித்த
அஸ்வின் இரவு வீட்டிற்கு கிளம்பினான். அன்னையிடம் என்ன சொல்லப்
போகிறோம் என்று நினைத்தபடியே
வீட்டிற்குள் அஸ்வின் நுழைய “அத்தை
அப்பா வந்துட்டாங்க” என்று மகளின்
குரல் கேட்க.. பிரமையோ என்னமோ
என்று நினைத்த அஸ்வின் நிமர.. யாழ்
தான் கீர்த்தியோடு உட்கார்ந்து ஏதோ
விளையாடிக் கொண்டிருந்தாள்.

தன்னையே நம்ப முடியாதவனாய்
அஸ்வின் நிற்க சமையல் அறையில்
இருந்து வெளியே வந்த ராஷ்மிகா “யாழ்
வா.. வந்து சாப்பிடு” என்று அழைத்தாள்.

“அப்பா தான் ஊட்டி விடணும்” என்று யாழ் கண்கள் மின்னக் கேட்டாள்.

அப்போது தான் திரும்பி வாயிலைப்
பார்த்த ராஷ்மிகாவிற்கு அஸ்வின்
வந்தது புரிந்தது. ஆம் யாழ் கேட்ட அடுத்த
இரண்டு மணி நேரத்தில் மகளுடன்
கிளம்பி அன்னைகளிடம் மற்றம்
சிவக்குமாரிடம் தெரிவித்தாள்.

“வந்து நான் விடட்டுமா?” என்று அவர
வினவ..

“இல்ல பெரிப்பா.. நானே போயிக்கறேன்”
என்றவள் ஒரு கேப்பை புக் செய்து வந்து
சேர்ந்தாள். மருமகளைப் பார்த்த செல்வமணிக்கு ஆனந்தம் என்றாலும்
சிறிது கோபம் இருந்தது. “என்ன
பிரச்சினை என்றாலும் என்னிடம்
சொல்லி இருக்கக் கூடாதா?” என்று
மகளைப் போல் பார்த்துக் கொண்ட
மருமகளின் மேல் கோபம் இருந்தது.

அதுவும் யாழ் பிறந்ததை மறைத்ததில்
இன்னும் இருந்தது. யாழைக்
கொஞ்சியவர் அவளிடம் கோபத்தையும்
காட்டவில்லை முதல் மாதிரியும்
பேசவில்லை. ஆனால் பேச வேண்டிய
அளவுக்கு மட்டுமே பேசினார்.

“டென் மினிட்ஸ் அப்பா குளிச்சிட்டு
வந்திடறேன் டா.. அப்புறம் வந்து ஊட்டி
விடறேன்” – என்றவன் விறுவிறுவென்று
சென்று குளித்து முடித்துக் கீழே வந்தான்.

கீழே வந்தவன் மகளைத் தூக்கிக்
கொண்டு “தர்ஷு சாப்பிட்டயா?” என்று
கேட்க “நான் என் அப்பா கூட
சாப்பிட்டேன்” என்று கீர்த்தி மிடுக்காகச்
சொல்ல..

“நானும் என் அப்பா கூட சாப்பிடுவேன்
அத்தை” – என்று மருமகள் சொல்ல..

“ம்கூம்” – என்று கீர்த்தி தலையைத் திருப்ப
யாழும் அத்தையைப் போலவே
தலையைத் திருப்பினாள்.

“இது என் அண்ணன்” – என்று கீர்த்தி
அஸ்வினின் கையைப் பிடித்துக்
கொண்டு சின்னவளை வெறுப்பு ஏற்ற..

“இது என் அப்பா” – என்று யாழ் அஸ்வின்
தோளைப் பிடித்துக் கொண்டு சொல்ல..
அத்தையும் மருமகளும் மாறி மாறி
சண்டையிட ஆரம்பித்தனர்.

“உங்க எல்லாருக்கும் முன்னாடி அவன்
என் புள்ளை” – என்றபடி அங்கு வந்தார்
செல்வமணி.

வாய்விட்டே சிரித்த அஸ்வின் “சரி சரி..
எல்லாரும் என் அப்பா.. என் அண்ணன்..
என் புள்ளைன்னு சொல்றிங்களே..
அவனுக்கு இப்ப வயிறு பசிக்குது
தெரியுமா?” என்று கேட்க..

“ராஷ்மிகா அஸ்வினிற்கு எடுத்து வை” –
என்றுவிட்டு செல்வமணி ஹாலில்
மகளுடன் வந்து உட்கார்ந்து கொண்டார்.

டைனிங் ஹாலில் வந்து மகளை மடியில்
வைத்தபடி உட்கார்ந்த அஸ்வின்..
ராஷ்மிகாவை நிமிர்ந்தும்
பார்க்கவில்லை. எதுவும் பேசவில்லை
கேட்கவும் இல்லை. மகளுடனே ஏதேதோ
பேசி சிரித்துக் கொண்டிருந்தான்.
எல்லாவற்றையும் பரிமாறிய ராஷ்மிகா
அவனை விட்டு ஒரு சேரில் பேசாமல்
அமர்ந்து கொள்ள.. அவனும் அவளை
சட்டை செய்யாமல் மகளுக்கு எடுத்து
ஒவ்வொரு வாயாக ஊட்டிக்
கொண்டிருந்தான். அழகாக மகள்
வாயைத் திறக்க முதல் இரண்டு வாய்
தடுமாறிய படி ஊட்டியவன் பின்
நிதானமாய் ஊட்ட மகளோ அவனுடன்
இருந்ததில் அன்று எப்போதும் சாப்பிடும்
அளவை விட அதிகமாக ஊண்டதை
ராஷ்மிகா உணர்ந்தாள்.

“போதும் பா” – என்று யாழ் தூக்கக்
கலக்கத்துடனே சொல்ல.. “சரி வாங்க”
என்று எழுந்தவன் மகளின் வாயைக்
கழுவித் துடைத்துவிட்டு மகளை மேலே
அறைக்குத் தூக்கிக் கொண்டு அஸ்வின்
செல்ல.. “இன்னும் அவன் சாப்பிடவே
இல்லையே” என்று நினைத்த ராஷ்மிகா
பின்னேயே சென்றாள். மகளைத் தன்
மேல் போட்டுக் கொண்டு படுத்து தட்டிக்
கொடுத்தவன் மகள் கண் அயறும் வரை
அவனும் கண் மூடி இருந்தான்.

யாழ்மொழி நன்றாகத் தூங்கிய பின்
மகளை அலுங்காமல் படுக்க வைத்தவன்
லைட்டை அணைத்துவிட்டுக் கீழே வர
ராஷ்மிகா மறுபடியும் அவன் பின்னேயே
வந்தாள். அதற்குள் கீர்த்தியும்
செல்வமணியும் உறங்கச்
சென்றிருந்தனர்.

கீழே வந்த அவன் டைனிங் டேபிளில்
அமர.. பரிமாற வந்த ராஷ்மிகாவைத்
தடுத்து “இத்தனை நாள் நான் தான்
பண்ணிட்டு இருந்தேன்.. நானே
பண்ணிப்பேன்” என்று சொல்லிவிட்டு
தனக்குத் தேவையானதை தானே எடுத்து
போட்டு உண்ண ஆரம்பித்தான்.

திடீரென நியாபகம் வந்தவனாக “நீ
சாப்பிட்டாயா?” என்று வினவ
ராஷ்மிகாவோ இல்லை என்பது போலத்
தலையை ஆட்டினாள்.

“நீயும் சாப்பிடு” – என்று அவளது பக்கம்
ஒரு ப்ளேட்டைத் தள்ளிய அஸ்வின்
உணவுகளை அவளுக்கு நகர்த்தினான்.
இருவரும் சாப்பிட்டு முடித்துக் கொண்டு
மேலே வந்தனர்.

அஸ்வினை வெறுத்தாலும் அவனின்
இந்த செயல்கள் ராஷ்மிகாவிற்கு
வெறுமையை அளித்தது. அதுவும்
எல்லோரும் என் அண்ணன் என் அப்பா
என் புள்ளை என்று சொல்லும் பொழுது
அவளையும் அறியாமல் “அஸ்வின் என்
புருஷன்” என்று அவளையும் அறியாமல்
அவள் மனம் கத்தியது.

அறைக்குள் வந்ததும் மகளின் அருகில்
சென்று படுத்தவன் கண்களை மூடிக்
கொண்டான். ராஷ்மிகாவிற்கு தான்
உணர முடியாத ஏதோ ஒரு உணர்வால்
மனம் கனத்தது. மகளின் இடது பக்கம்
அவன் படுத்திருக்க மகளின் வலது பக்கம்
சென்று படுத்தாள் ராஷ்மிகா. யாழ்
என்னும் காந்தம் இருவருக்கும் நடுவில்
இருந்து அவர்களை கொஞ்சம்
கொஞ்சமாக ஈர்க்கத் தயாராக இருந்தது.

அடுத்த நாளில் இருந்து கல்யாண
வேலைகள் இருவீட்டாரையும் நிற்க
விடாமல் நெறுக்க எல்லோரும் ஓடிக்
கொண்டிருந்தனர். கீர்த்தியிடம் ஹர்ஷா
ஒரு நாள் “உன் அண்ணன் மேல தப்பு
இல்ல கீர்த்தி” என்றான்.

“எனக்குத் தெரியும்” – கீர்த்தி கம்பீரமாக.

“நாங்க பேசிட்டோம் கீர்த்தி” – என்று
ஹர்ஷா சொல்ல.. “நிஜமாவா ஹர்ஷா”
என்று கண்களை உருட்டிக் கேட்டவளின்
அழகில் சொக்கித் தான் போனான் அவன்.

“ஆமா..” – ஹர்ஷா.

“அப்ப என்ன ஆச்சு?” – கீர்த்தி.

“அது மாமா யார்கிட்டயும் சொல்லக்
கூடாது சொல்லிட்டாரு” – என்று ஹர்ஷா
சொல்ல..

“மாமாவா..?” என்று இழுத்த கீர்த்தி.. “ஓ
என் அண்ணனை தான் மாமான்னு
சொன்னியா.. டேய் அவ்வளவு நல்லா
பேசிட்டிங்களா என்ன?” என்று
நிஜமாகவே அதிசயத்துக் கேட்டாள்
கீர்த்தி.

“ம்ம்” – என்ற கீர்த்தி.. “அப்ப இதுக்காகத்
தான் என்னை அவாய்ட் பண்ணி இருக்க
நீ” என்று ஒரு மாதிரிக் குரலில் கீர்த்தி
கேட்க.. அதையோ ஹர்ஷா
உணரவில்லை.

“வேணாம் கீர்த்தி அதை மறுபடியும்
ஆரம்பிக்காதே” என்று ஆட்டத்தை
ஆரம்பித்த அவனே கூற கீர்த்தி எதுவும்
பேசவில்லை.

அஸ்வின் ராஷ்மிகாவின் விரிசலிலோ
எந்த ஒட்டுதலும் இல்லாமல் இருந்தது.
கல்யாண நாளும் நெருங்கி
முகூர்த்தத்தின் முந்தைய நாளின்
ரிஷப்னும் வந்தது. மாப்பிள்ளைக்கே
உண்டான வசீகரத்துடன் ஷர்வானியில்
நிற்க.. அடர் பச்சை நிற முழு நீள
லெக்ங்காவில் கீர்த்தி அழகின் திரு
உருவமாய் விளங்கிக் கொண்டிருந்தாள்.

“ஏய் இவ்வளவு அழகா வந்து.. என்னை
டிஸ்ட்ராக்ட் பண்ற நீ” – என்று ஹர்ஷா
கீர்த்தியின் காதின் அருகில் கிசுகிசுக்க
“அஹான்ன்.. டேய் ஒழுங்கா நல்ல
பையனா நில்லு” என்று சொல்லிக்
கொண்டிருக்கும் போதே மேலே வந்த
அஸ்வின் ஹர்ஷாவின் கையில் ஒரு
டிஷ்யூவைத் தந்து “ரொம்ப வலியுது
மச்சான்” – என்று சொல்ல..

“அய்யோ மாமா.. உங்க தங்கச்சி தான்
பாருங்க என்ற சைட் அடிச்சிட்டே இருக்கா”
என்று அவன் காதின் அருகில் சொல்ல
கீர்த்தியோ ஹர்ஷாவைப் பொய்யாய்
முறைத்தாள். அஸ்வினும் ஹர்ஷாவும்
பேசி சிரித்துக் கொண்டு நிற்க கீழே
சிலரை வரவேற்றுக் கொண்டு வந்த
ராஷ்மிகாவை தம்பியையும்
கணவனையும் கண்டு “இது எப்ப?”
என்றபடி நின்றாள்.

அடுத்த நாள் காலை மஞ்சளில் கோர்த்த
பொன்னால் ஆனத் தாலியை கீர்த்தனா
ஆதர்ஷினியின் கழுத்தில் மூன்று
முடிச்சிட்டு கட்டி தன்னவளாக்கிக்
கொண்டான் ஹர்ஷவர்தன். எழுந்து
அக்னியைச் சுற்றி எல்லா
சத்தியங்களையும் அக்னியிடம்
சொன்னவன் கீர்த்தி எல்லாக்
கீர்த்தியுடனும் வைத்திருக்க வேண்டும்
என்று சபதம் எடுத்துக் கொண்டான்.
அஸ்வினோ பட்டு வேஷ்டி சட்டையில்
கம்பீரமாய் சுற்ற ராஷ்மிகாவின் கண்கள்
அவளையும் மீறி அஸ்வினை பார்த்தது
அவ்வப்போது. அவனோ தங்கை
கல்யாணத்தின் குஷியோடு மகள் வந்த
குஷியோடும் ஜம்மென்று வலம் வந்து
கொண்டு இருந்தான். யாழும் அவள்
சைஸிற்கு இருக்கும் குட்டி தாவணி
செட்டில் அஸ்வின் ராஷ்மிகா
தம்பதியரின் மகளிற்கே உரிய
மெச்சுதலோடு இருந்தாள்.

தம்பி கீர்த்தியின் முகத்தைப் பார்த்த
ராஷ்மிகாவிற்கு நிம்மதியாக இருந்தது.
தம்பியை விட கீர்த்தியை நினைத்த
அவளுக்கு பெருமையாக இருந்தது.
கடைசியில் பையனை ஒரு வழி பண்ணி
அவ வழிக்கு கொண்டு வந்துட்டாளே
என்று மனதிற்குள் பாராட்டினாள்
ராஷ்மிகா.

அவள் அங்கு நின்றபடி வேடிக்கை
பார்த்துக் கொண்டு நிற்க “ராஷ்மிகா..
எப்படி மா இருக்க?” என்ற குரலில்
திரும்பியவள்.. அங்கிருந்த குமரேசனைக்
கண்டு இன்ப அதிர்ச்சி ஆனாள்.

“அங்கிள் நீங்க எப்படி இங்க?” என்று
அதிசயமாய் வினவினாள். அவளது
தந்தையுடன் அவர் கடை ஆரம்பித்ததில்
இருந்து துணையாக இருந்தவர். தந்தை
இறந்த பிறகு பெங்களுரில் இருக்கும்
மகளுடன் சென்று விட்டார்.

“அஸ்வின் தம்பி தான்மா கூப்பிட்டாரு”
என்று அவர் பதில் அளிக்க..
ராஷ்மிகாவின் புருவமோ முடிச்சிட்டது.

“அங்கிள் அவருக்கு உங்களைத்
தெரியுமா?” – என்று ராஷ்மிகா வினவ..

“சக்திவேல் ஸாரைப் பார்க்க
வருவாரும்மா” என்று சொல்ல
ராஷ்மிகாவின் இதயமோ ஒரு நிமிடம்
தன் இதயத் துடிப்பை நிறுத்தித் துடிக்க
ஆரம்பித்தது.

“எதுக்கு அங்கிள்?” என்று கேட்டவள் அவர்
சொன்ன பதிலில் பனியில் நின்றவள்
போன்று உறைந்தாள்.

விறுவிறுவென்று ரிஷியைத் தேடிச்
சென்றவள் அவனைத் தனியே அழைத்து
சில விவரங்களைக் கேட்க.. ரிஷி
சொல்லச் சொல்ல ராஷ்மிகாவிற்கு தலை
எல்லாம் சுற்றி விட்டது.

அவள் அறியாமல் அஸ்வின் தந்தையிடம்
மட்டும் பேசினான் என்று நினைத்தால்
ரிஷி சொல்வதோ அவளின் உடல்
எல்லாம் நடுங்கச் செய்து விட்டது.