யாழ்-22
யாழ்-22
யாழ்-22
“சக்திவேல் ஸாரைப் பார்க்க வருவார்மா” குமரேசன் சொல்ல,
“எதுக்கு அங்கிள்?” விசாரித்தாள் ராஷ்மிகா.
“உனக்கு தம்பி அங்க வந்ததை எல்லாம் சொல்லலையாமா?” அவர் வினவ,
“இல்லையே அங்கிள்” என்றவள் நடுங்கும் அதரங்களை பற்களால் கடித்து அடக்கினாள்.
“உன்கூட ஸார் பேசாம இருந்தப்போ தம்பி வந்து பேசுனாரு. அதுவும், முதல்ல வந்தப்ப ஐயா பாக்க முடியாதுன்னு அவாய்ட் பண்ணிட்டாரு. தம்பி விடாம ஒரு பதினைஞ்சு தடவைமேல வந்து, ஒருநாள் நைட் வரைக்கும் இருந்து பாத்து பேசிட்டுதான் போனாரு” என்றவர்,
“சக்திவேல் ஸார்கூட அதுக்கு அப்புறம் கோபமெல்லாம் குறைஞ்சு இருந்த மாதிரி இருந்தாரு” என்று குமரேசன் கூறினார்.
ராஷ்மிகா தன் கால்களின் அடியில், பூமி நழுவுவதை உணர்ந்தாள். முகத்தை அவரிடம் மறைத்தவள், “சரி, அங்கிள். சாப்பிட்டிங்களா?” பேச்சை மாற்றியவள். அவரிடமிருந்து விடைபெற்று வந்து நேரே தேடிச்சென்றது ரிஷியை.
‘அப்போது அஷ்வின் மால்தீவ்ஸ் மற்றும் தன்னுடைய வீட்டில் ஃபோனில் பேசியது தன்னுடைய பிரம்மையோ’ உள்ளுக்குள் குழம்பினாள் ராஷ்மிகா.
ரிஷியைத் தேடி வெளியே வந்தவள், அவன் தன்னுடன் இருக்கும் காட்ஸிற்கு ஏதோ பணித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. சரியாக அங்கிருந்த ராஷ்மிகாவை ரிஷி கவனிக்க, “ரிஷி!” என்றழைத்தாள் ராஷ்மிகா.
“சொல்லுங்க மேடம்” மரியாதையாக வந்து நின்ற ரிஷியிடம்,
“உங்ககிட்ட ஒன்னு கேக்கனும் ரிஷி. ப்ளீஸ் டெல் மீ தி ட்ரூத்..” ராஷ்மிகா கேட்க, அவனோ யோசனையுடன் தலையை ஆட்டினான்.
“அவரு மால்தீவ்ஸ் அப்புறம் எங்க வீட்டில் இருந்துட்டு ஒரு கொலையை பத்தி பேசினாரு. என்ன அது? யாரை என்ன பண்ணிங்க?” ராஷ்மிகா கேட்க, ரிஷியோ வாயைத் திறக்கவில்லை.
“ரிஷி, உங்களை என் அண்ணனா நினைச்சு கேக்கறேன் சொல்லுங்க. எனக்கு ஏதோ நான், தப்பு பண்ணிட்ட மாதிரியிருக்கு. இதுனால தானே நாங்க பிரிஞ்சு இருக்கோம்” ராஷ்மிகா கண்களில் பதட்டத்தைத் தேக்கிக் கேட்டாள். அவளின், ‘அண்ணா’ என்ற அழைப்பிலும் தன்னுடைய முதலாளி மட்டுமில்லாமல், தன்னுடைய நலம் விரும்பியாக இருக்கும் அஷ்வினின் வாழ்க்கைக்காக, ரிஷி அனைத்தையும் கூற ஆரம்பித்தான்.
“உங்க அப்பாவை நாங்க எதுவும் பண்ணலைமா. ஆனா, உங்களுக்காக
ஸார், அவரோட வேலை எல்லாத்தையும் விட்டுட்டுப் போய் உங்க அப்பாவை பாக்கவே வெயிட் பண்ணாரு. டெய்லியும் சாயிந்திரம் போனாலும் உங்கப்பா முதல்ல மறுத்தாரு. ஸாரும் விடல. எனக்குத் தெரிஞ்சே ஒரு பதினைஞ்சு, இருபது தடவை போயிருப்பாரு” என்றவன்,
“சொன்னா நம்புவிங்களான்னு தெரியல. உங்கப்பா மறுபடியும் பாக்கனும்னு ஃபோன் பண்ணப்போ. இருபதுகோடி ரூபாய் ப்ராஜெக்டை உங்களுக்காக விட்டுட்டு ஓடுனாரு” ரிஷி சொல்லச் சொல்ல அஷ்வினுடைய காதலின் ஆழம் புரிய ஆரம்பித்தது ராஷ்மிகாவிற்கு.
பணத்தை விட அவனுக்குத் தொழில் மேல் இருக்கும் காதலும், ஒவ்வொரு முறையும் அவன் எடுக்கும் ப்ராஜெக்ட்டில் அவனுக்கு இருக்கும் ஆர்வமும் அவள் நன்கு அறிந்தது அல்லவா!
“அதே மாதிரி ஸார், உங்களை அவரோட பேக்டரிக்காக கல்யாணம் பண்ணலை. அன்னிக்கு அவரு கல்யாணம் பண்ண வந்த பொண்ணு நீங்கதான்” என்றவனை புரியாமல் பார்த்தாள் ராஷ்மிகா. ஒரே நாளில் அடுத்து அடுத்து அதிர்ச்சிகள் அவளுக்கு.
“மினிஸ்டர் பொன்னுரங்கம் பொண்ணு, ஸார் மேல ரொம்ப இன்ட்ரஸ்டா இருந்துச்சு. உங்க இரண்டு பேருடைய ஃபோட்டோஸ் லீக் ஆனப்ப, அந்தப்பொண்ணு லூசுத்தனமா சூசைட் அட்டென்ட் பண்ணிட்டா” என்று மேலே சொல்ல ஆரம்பித்தான் ரிஷி.
செல்லமாய் வளர்த்த ஒரே மகள் இப்படி ஹாஸ்பிடலில் உயிருக்குப் போராடி காப்பாற்றப்பட பொன்னுரங்கமோ தாம்தூம் என்று குதித்தார். அஷ்வினிற்கு நேராக ஃபோனை அடித்தார் அவர். “என்ன அஷ்வின்
எங்களை ஏமாத்தப் பாக்கறியா? உன்னால என் பொண்ணு செத்துப் பிழைச்சிருக்கா. மரியாதையா, என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க அடுத்த முகூர்த்தத்தில்” என்று மிரட்ட, அவர் ஒருமையில் பேசியது, அஷ்வினிற்கோ சுள்ளென்று ஏறியது.
‘தன்னிடம் ஒருவன் குரலை உயர்த்திப் பேசுவதா?’
“நான் என்னமோ, உன் பொண்ணை காதலிச்சு ஏமாத்துன மாதிரி பேசற. அவ பைத்தியக்காரத்தனமா பண்ணதுக்கு எல்லாம், நான் எதுவும் பண்ண முடியாது” என்று அஷ்வின் விட்டேத்தியாகப் பேசினான்.
“என்ன அஷ்வின்? உன் தொழில் எங்களை நம்பியும் இருக்கு மறந்துட்டியா” பொன்னுரங்கம் மிரட்ட,
“ஓஓஓ, ஐ சி. உன் போஸ்ட்டே எங்களை மாதிரி தொழிலதிபர்களை நம்பித்தான் பொன்னுரங்கம்” அஷ்வின் திருப்பியடிக்க அவரோ வாயடைத்துப்போனார்.
“அந்தப் பொண்ணுக்காகத் தானே, என் பொண்ணை ஏத்துக்க மாட்டிற? அவ உயிரோட இருந்தாதானே?” பொன்னுரங்கம் கோபத்தில் பேசிவிட்டு, ஃபோனை வைக்க அஷ்வினிற்கோ திக்கென்று இருந்தது.
அந்த நேரம் நாகேஷ்வரன் அஷ்வினிற்கு அலைபேசியில் அழைக்க, “அப்பா!” என்றான் ஃபோனை எடுத்த அஸ்வின்.
“சொல்லு அஷ்வின். அந்தப் பொண்ணுகிட்ட சாரி கேட்டியா?” என்று வினவினார்.
“இல்லப்பா” என்ற அஷ்வின் பொன்னுரங்கத்திற்கும் தனக்கும் நடந்த உரையாடலை தந்தையிடம் கூறினான்.
“அந்தப் பொண்ணுக்கு எதுவும் ஆகக்கூடாது அஷ்வின். அந்தப் பொண்ணு உன்னால தேவையில்லாம உள்ள வந்துட்டா. காப்பாத்த வேண்டியது உன் பொறுப்பு” என்றார் நாகேஷ்வரன்.
“என்னால காப்பாத்த முடியும்பா. ஆனா, ஒவ்வொரு தடவையும் அவகூட இருக்க முடியுமான்னு தெரியல. ஒண்ணு, அவ அலெர்ட் ஆகனும். இல்லைனா, என் நிழல்லயேதான் அவ இருக்கனும்” அவன் சொல்ல நாகேஷ்வரனிற்கு ஒரு யோசனை தோன்றியது. எப்படியும் மகனின் பெயரும் அந்தப் பெண்ணின் பெயரும் கெட்டுவிட்டது. அஷ்வினிற்கும் அதே தோன்றியதோ என்னமோ,
“அப்பா” அவன் பேச வர,
“அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்திடுப்பா” என்றார் நாகேஷ்வரன்.
“சரிப்பா” என்றவன் ஃபோனை வைத்துவிட்டான்.
அடுத்து ரிஷியை அழைத்த அஷ்வின், ராஷ்மிகாவைத் தான் மணக்கப்
போவதைக் கூறிவிட்டு, “நான் அந்தப் பெண்ணைத் தேடிப்போறேன். நீ, அந்தக் கலெக்டரோட பெண்ணைக் கடத்தி கலெக்டரை மிரட்டி கையெழுத்து மட்டும் வாங்கி அந்தப் பொண்ணை அவங்க கிட்டையே பத்திரமா விட்டுடு” என்ற அஷ்வின் அவனது காரில் ஏறிக் கிளம்ப ரிஷியும் அவனது காட்ஸுடன் புறப்பட்டான்.
ராஷ்மிகாவின் ஃபோனை எளிதில் ட்ராக் செய்து அவள் எங்கே இருக்கிறாள் என்று கண்டுபிடித்து, அஷ்வின் சென்று இறங்க, ரிஷியும் அவனுடைய ஆட்களோடு அங்கு இறங்கினான். அஷ்வினைக் கண்டதும் அவனை நோக்கி வந்த ரிஷி, “என்ன ஸார் இங்க? எனி ப்ராப்ளம்?” எனத் தன்னைத்தான் பார்க்க வந்திருக்கிறாரோ என்று ரிஷி கேட்டான்.
“அவ இங்கதான் இருக்கா ரிஷி” அஷ்வின் உள்ளே நுழைய, “அந்தக் கலெக்டர் பொண்ணும் இங்கதான் இருக்கு ஸார்” என்றபடி அஷ்வினுடன் உள்ளே நுழைந்தான் ரிஷி.
தேவாவை அஷ்வின் அழைத்திருக்க, “என்னடா விஷயம்? வரச் சொல்லியிருந்த?” அஷ்வினிற்காகக் காத்துக்கொண்டிருந்த தேவா, அவன் அருகில் வந்து வினவ, அங்கு நடக்கப் போகும் இரு விஷயத்தைப் பற்றியும் அஷ்வின் தேவாவிடம் கூறினான். அதற்கானக் காரணத்தையும் கூறினான்.
“கலெக்டருக்குப் பொண்ணா? நம்ம கலெக்டருக்கு பையன்தான் இருக்கு அஷ்வின்” தேவா, ஹர்ஷா மூலம் சிவகுமாரைத் தெரிந்தவனாகச் சொல்ல, அஷ்வின் ரிஷியைப் பார்த்தான்.
“இது, அவர் தம்பி பொண்ணு ஸார். ரொம்ப பாசம். நூறு பெர்சன்ட்
கியாரண்டி அவரு கையெழுத்துப் போடுவாரு” ரிஷி அசைக்க முடியாத நம்பிக்கையோடு சொல்ல,
“அது எப்படி அஷ்வின் முடியும்?” தேவா கேட்க,
“ஏன்?” அஷ்வின்.
“அன்னிக்கு என் நிச்சயத்துல பாத்த ராஷ்மிகாவைத்தானே கல்யாணம் பண்ணப் போற?” தேவா வினவ,
“ஆமா. அதான் சொன்னனே தெளிவா..” அஸ்வின் சொல்ல,
“அஷ்வின், நீ கல்யாணம் பண்ணப்போற பொண்ணுதான் நம்ம கலெக்டரோட தம்பி மகள்” தேவா உரைக்க அஷ்வினிற்கு, ‘இது என்ன கனெக்ஷன்டா’ என்றிருந்தது.
தனது வாட்ஸ்-அப்பில் வந்திருந்த புகைப்படத்தை அப்போதுதான் திறந்து பார்த்தான் ரிஷியும். ராஷ்மிகாதான் என்று உறுதியானதும், “ஆமா ஸார்” என்றான். அஷ்வினிற்கோ முன் வைத்தக் காலை, பின் வைக்கப் பிடிக்கவில்லை.
அப்போதுதான் சரண் மற்றும் சிவா உள்ளே வருவதைக் கவனித்த அஷ்வின், “ரிஷி, தேர் இஸ் நோ செகண்ட் சாய்ஸ். இது நடக்கத்தான் போகுது. நீ, அவங்களைக் கூட்டிட்டு போ” என்று சரண், சிவாவைக் கைகாட்டிச் சொன்னவன் திரும்ப, ராஷ்மிகா சரியாக பிரகாரத்தில்
கண்ணைமூடி நின்றிருந்தாள்.
இதுதான் சமயமென்று நினைத்த அஷ்வின் கம்பீரமான நடையுடன் சென்று கடவுளை ஒரு நிமிடம் கண்மூடி வேண்டி, அவரின் மீது இந்தச் சண்டிராணியை வாழ்க்கை முழுதும் சுமக்கப்போகும் சக்தியைக் கேட்டு தாலியை அணிவித்துவிட்டான். அதற்குப் பிறகுதான் அதை சாதகமாகப் பயன்படுத்தி, சிவகுமாரிடம் கையெழுத்தை வாங்கியது.
“அவர் நினைத்திருந்தால் நீங்க கலெக்டரோட தம்பி மகள்னு போயிருக்கலாம். நாங்களும் அப்படித்தான் பண்ணுவாருன்னு நினைச்சோம். ஆனா, ஸார் அன்னிக்கு அப்படி சொல்லுவாருனு நினைக்கல” என்ற ரிஷி ராஷ்மிகாவின் முகத்தைக் கண்டான். அவளின் முகமோ பாதி செத்திருந்தது. முகமும் மனதின் வலியை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
“உங்களை ஒரு பையன் காலேஜ்ல லவ் பண்ணான்தானே?” என்று வினவ, “ஆமாம்” என்று தலையாட்டினாள் ராஷ்மிகா.
“அவனை ஒரு தடவை கைநீட்டி அடிச்சிட்டிங்க இல்ல?” ரிஷி கேட்க ஆமென்று தலையை ஆட்டினாள்.
“உங்க ஃபோட்டோவை லீக் பண்ணது ஸாரோட பிசினஸில் பிரச்சனை பண்ண அஜய். அவன்தான் சாரோட டேப்பில் இருந்து, சில டீடெயில்ஸ் எடுக்க, அதை ஆள் வச்சுத் திருடினான். அதுலதான் அந்த ஃபோட்டோ இருந்திருக்கு. அவனுக்கு அது வசதியாப் போய் சோஷியல் மீடியாஸ்ல விட்டுட்டான். ஸார் அவனை சும்மா விடல…” என்றவன் அஜயைக் கடத்தி இவர்கள் செய்ததையும் சொன்னான்.
“அந்த அஜய்.. ஸாரை எப்படியாவது பழி வாங்கனும்னு சுத்திட்டு இருந்தான். அப்பதான் உங்களை ஃபாலோ பண்ணி உங்க பின்னாடி சுத்தி, அடி வாங்குன பையனை கண்டுபிடிச்சான்”
“அந்த பப்ல உங்க ட்ரின்க்ஸ்ல ஆல்கஹால் கலந்ததும் அவங்கதான். உங்களைப் ஃபாலோ பண்ணிட்டு பின்னாடியே வந்து உங்களை அசால்ட்(Assault) பண்ணதும் அவன்தான்”
“ஸாருக்கு தெரிஞ்சு, அவங்களை யாருக்கும் தெரியாம நோட் பண்ணாரு. அவங்க இரண்டுபேரோட ஃபோன் கால்ஸ் அண்ட் மெசேஜ் என எல்லாம் எங்களுக்கு வந்திடும்”
“ஸார், யூகே ப்ராஜெக்ட் போனப்ப, காலேஜ்ல கல்ச்சுரல்ஸ் வந்தது ஞாபகம் இருக்கா?” என்று வினவ ராஷ்மிகாவிற்கு நினைவு வந்தது.
அவர்கள் காலேஜில் வருடாவருடம் ஒரு ஜூனியர் சீனியரோடு ஆட வேண்டும். ராஷ்மிகாவின் கடைசி வருடம் என்பதால் அதில் ராஷ்மிகாவும் கீர்த்தியும்தான் ஆடினர்.
“இருக்கு” ராஷ்மிகா.
“நீங்களும் கீர்த்தியும் காஸ்ட்யூம் மாத்த போனப்ப அவங்க வீடியோ ரெக்கார்ட் பண்ணியிருக்காங்க” ரிஷி சொல்ல ராஷ்மிகா இதயம் தாறுமாறாகத் துடித்தது.
“அது ஃபோன் ரெக்கார்ட்ல, ஸாருக்கு தெரிஞ்சுதான். அவரு யூகேல
இருந்து சீக்கிரம் வந்தது”
“அவங்க பர்ஸ்ட் கீர்த்தியை டார்கெட் பண்ணாங்க. பட், கீர்த்தி காலேஜ் விட்டா வீடுனு இருப்பாங்க. நீங்கதான் காலேஜ் ப்ராஜெக்ட்னு அலைஞ்சுட்டு இருந்திங்க. ஸோ, உங்களை மிரட்டி அவங்க ஆசைக்கு பணிய வைக்க..” என்று ரிஷி சொல்லமுடியாமல் வாயை மூடினான்.
“இந்த மாதிரி எவன் பொண்டாட்டியை பண்ணாலும் அவனுக்கு கொலை வெறிதான் வரும். அவனுக எப்படியும் உங்களை கான்டாக்ட் பண்ணிடக் கூடாதுன்னு நினைச்சுதான் ஸார், உங்களை மால்தீவ்ஸ் கூட்டிட்டு போனாரு. அங்க இருந்துதான் எனக்கு ப்ளான் சொன்னாரு. நான்தான் அந்த நாய்களை லாரி ஏத்திக் கொன்னேன்” ரிஷி ஒவ்வொன்றாய் சொல்ல அப்போதுதான்,
“உன் மொபைல் ஸ்விட்ச் ஆப் பண்ணு ராஷ்மி” என்று அஷ்வின் மால்தீவ்ஸில் சொல்லிக்கொண்டே இருந்தது நினைவிற்கு வந்தது ராஷ்மிகாவிற்கு.
“உங்கப்பா உங்ககிட்ட பேசறன்னு சொல்லிட்டாரு. அதுக்குத்தான் உங்களை உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப்போனாரு. ஆனா, விதி வேறமாதிரி ஆகிடுச்சு”
“நீங்க போன அப்புறமும் ஸாரை, மினிஸ்டர் பொண்ணு ஷிவானி எப்படியாவது அடையனும்னு பாத்தா. பட், ஸார்கிட்ட அதெல்லாம் நடக்கல. அந்தக் கோபத்தில் இன்னும்வரை பொன்னுரங்கம் ஏதாவது பிரச்சனை தந்துட்டேதான் இருக்காரு”
“இவருக்கு இருக்க பணத்துக்கு எப்படி வேணாலும் வாழ்ந்து இருக்கலாம் நீங்க போன அப்புறம். ஆனா, அவரு எப்படி இருந்தார்னு எங்களுக்குத்தான் தெரியும். ஒரு அண்ணனா சொல்றேன்மா. அவரு கூட நல்ல மனைவியா வாழ ட்ரை பண்ணுங்க…” என்றுவிட்டு அங்கு கல்யாண வேலை பார்க்கக் கிளம்பிவிட்டான் ரிஷி.
ராஷ்மிகாவோ ஆணி அடித்தாற்போல நின்றுவிட்டாள். தனக்காக அஷ்வின் இவ்வளவு செய்தானா என்று. இவ்வளவு செய்தவன் ஒரு நாள்கூட சொல்லவேயில்லை. அவன் நினைத்திருந்தால் இதை எல்லாம் முன்னேயே சொல்லி அவனை நல்லவன்தான் என்று காட்டியிருக்கலாம். ஆனால், செய்யவில்லை. ராஷ்மிகாவிற்கு அஷ்வின் ஏன் தன்னை அன்றைய தினங்களில் எல்லாம் ‘வெளியே செல்ல வேண்டாம்’ மற்றும், ‘எங்கே சென்றாலும் உடன் வந்தான்’ என்று புரிந்தது.
பெரியப்பாவை தனியாக சென்று சந்தித்தது கூட அதனால் தான் அவன் ஏற்றக் கொள்ளவில்லையோ. தான்தான் அதைத் தவறாக எண்ணி.. என்று நினைத்தவளுக்கு உடலில் அனைத்து பாகங்களும் வெடவெடத்துப் போனது.
ராஷ்மிகாவிற்கு அவன் ப்ரபோஸ் செய்தது நினைவு வந்தது. இதெல்லாம் தெரிந்திருந்தால் ராஷ்மிகா அவனிடம் எதிர்த்துப் பேசியிருக்க மாட்டாள்தான். கோபம் கொள்ளாமல் கல்யாணத்திற்குப் பிறகு அவனிடம் கொஞ்சம் தணிந்துதான் சென்றிருப்பாள். ஆனால், அவன் அவளை அவளாகவே இருக்க வைத்து, அவளை தன் காதலிலும் விழ வைத்ததை, இப்போதுதான் அவள் மூளைக்கே எட்டியது.
அப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்துக் கொண்டவனைத் தானா அப்படிப் பேசினேன் என்று நினைத்த ராஷ்மிகா, ‘கடவுளே!’ என்று
தலையில் அறைந்து கொண்டாள்.
‘எவ்வளவு காயப்படுத்தி பிரிந்துவந்து.. யாழ் பிறந்ததையும் மறைத்து’ என்பதை நினைக்கும்போதே தவித்தவள் உள்ளே திரும்பி நடந்தாள்.
நெஞ்சமோ தன்னவனைத் தேடித் தவித்து கண்களை அலைய வைத்தது.
“அம்மா!” என்ற மகளின் அழைப்பில் ராஷ்மிகா திரும்ப, யாழ் அஷ்வினின் கையில் இருந்தபடி அன்னையை அழைத்தாள். மகள் அழைத்தது அவள் காதில் விழுந்ததோ என்னமோ அஷ்வினைப் பார்த்தவளின் கால்கள் தாமாக அங்குசென்றது.
ராஷ்மிகா அருகில் வர, “அம்மா நம்ம மூணு பேரும் ஃபோட்டோ எடுக்கலாம்” யாழ் சொல்ல, அவளின் கன்னத்தை இறுகப்பிடித்தவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். யாரையோ நினைத்து மகளிற்கு முத்தத்தை தந்தாள் என்பதுதான் உண்மை.
ஃபோட்டோகிராஃபர் மூவரையும் நிற்க வைக்க, ராஷ்மிகாவையும் அஷ்வினையும் அருகருகே நிற்க வைத்தவர் ஒரு பெரிய டேபிளை அவர்களுக்குப் பின்னால் போட்டு யாழை அதில் நிற்கவைத்தார்.
“பாப்பா, நான் சொல்ற மாதிரி நில்லுங்க. அப்பதான் போட்டோ அழகா வரும் சரியா” என்றவர் யாழ்மொழியின் வலதுகையை எடுத்து அஷ்வினின் தோளில் வைத்து இடது கையையெடுத்து ராஷ்மிகாவின் தோளில் போட வைத்தார்.
ராஷ்மிகாவின் தலைக்கும் அஷ்வினின் தலைக்கும் நடுவில் கையை வைத்துக்காண்பித்து, “இங்க வந்து தலையை வச்சு சிரிங்க” என்று சொல்ல யாழோ ஆர்வமாய் தலையை வைத்துப் பல்லைக் காண்பித்தாள்.
“3.. 2.. 1.. ஸ்மைல்” ஃபோட்டோ கிராப்பர் சொல்ல, யாழ் மட்டுமில்லை மகளின் அருகில் நின்றிருந்த அஷ்வினும் சிரிக்க ராஷ்மிகாவும் ரொம்பநாள் பிறகு தெளிந்த மனதிலும், தன்னுடைய அஸ்வினும் பொய்த்துப் போகவில்லை என்ற தெளிவிலும் சிரிக்க, தன் அப்பா அம்மாவுடன் நண்பர்களைப் போல ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்ற யாழின் நீண்ட நாள் கனவும் ஏக்கமும் நிறைவேறியது.
எல்லா சடங்குகளும் முடிந்து ஹர்ஷாவையும் கீர்த்தியையும் மணப்பெண் வீட்டிற்கு அழைத்து வர, ஆரத்தி சுற்றி வரவேற்றனர் இருவரையும். ஒரு குடத்தில் மோதிரத்தைப் போட்டு இருவரையும் எடுக்கச் சொல்ல இருவரும் நீயா நானா என்று விளையாட, கீர்த்தியே மூன்று முறையும் தங்கமோதிரத்தை எடுத்தாள்.
“கீர்த்தனா ஆதர்ஷினிகிட்டையே வா” அவள் ஹர்ஷாவிற்கு கேட்கும்படி சொல்ல, “ஹே, போடி.. போடி!” என்று நமது பையனோ கெத்தாய் சமாளித்தான்.
இரவு எட்டு மணிக்குமேல் ராஷ்மிகாவை விட்டு கீர்த்தியை தயார்படுத்த சொல்ல, ராஷ்மிகாவும் கீர்த்தியும் கீழேயிருக்கும் ஒரு அறைக்குள் நுழைந்தனர்.
“நானே ரெடி ஆகிக்கறேன் அண்ணி.. நீங்க உட்காருங்க” என்றவள் ஒரு புடவையை எடுத்துக்கொண்டு ட்ரெஸிங் ரூமிற்குள் புகுந்தாள்.
வெளியே வந்த கீர்த்தி தலையை சீவிக்கொண்டிருக்க, “என் மேல இன்னும் கோபம் போகலையா கீர்த்தி?” ராஷ்மி வினவினாள்.
“ஆமா, அண்ணி” என்றவள், “ஏன் அண்ணி? அண்ணன் மேல கோபமா இருந்தீங்க சரி. ஆனா, என் கிட்டையும் அம்மா கிட்டையுமாவது பேசியிருக்கலாம் இல்ல?” மனதிற்குள் இத்தனை நாள் வைத்திருந்ததைக் கேட்டே விட்டாள்.
“யாழ் பிறந்ததைக்கூட மறச்சுட்டிங்களே அண்ணி?” ஆதங்கத்துடன் கேட்டவள், “கோபம் அப்படின்னு சொல்றதை விட, வருத்தம்தான் அண்ணி. அம்மாக்கும் அப்படித்தான் அண்ணி“ சொல்லிவிட்டு தலையை வாரித் தயாரானாள்.
“என் சூழ்நிலை என் மனநிலை என்னை தப்பா யோசிக்க வச்சிடுச்சுக் கீர்த்தி” சின்னக்குரலில் தன் நிலையை விளக்கினாள் ராஷ்மிகா.
“என்ன அண்ணி சூழ்நிலை? என் அண்ணன்தான் உங்க அப்பாவைக் கொன்னாருன்னு நினைச்சிட்டு இருக்கிங்க தானே?” கேட்க ராஷ்மிகாவின் மனமோ கூனிக் குறுகியது.
“நினைச்சுட்டு இருந்தேன், இன்னைக்கு வரைக்கும்” என்றாள் ராஷ்மிகா. அவளின் பதிலிலேயே அவளுக்கு ஏதோ தெரிந்துவிட்டது என்பதை புரிந்து கொண்டாள் அஷ்வினின் தங்கை. ஸாரி.. ஸாரி.. ஹர்ஷாவின் மனைவி.
“அப்போ உங்களுக்கு இப்போ உண்மை தெரிஞ்சிடுச்சுதானே! அண்ணன் கொலை பண்ணாரு, அதுவும் உங்க அப்பாவை கொலை
பண்ணாருன்னு எப்படி நம்ப முடிஞ்து உங்களால” என்று தன் அன்னை குடுத்த நகையை இயல்பு போல அவள் அணிந்து கொண்டு கேட்க, ராஷ்மிகாவிற்கு தான், அவளின் ஒவ்வொரு வார்த்தையும் குத்தியது.
“உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?” ராஷ்மிகா வினவ, “நீங்க தூக்கத்துல உங்களையும் மீறி உளறி இருக்கிங்க அண்ணி” என்று தன் அலங்காரத்தை முடித்துக்கொண்டு எழுந்தாள்.
“நான் பேசுனது ஏதாவது ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி அண்ணி. நான் உங்க மேலையும் அண்ணன் மேலையும் இருக்க உரிமைலதான் பேசுனேன்” என்றவள் எழ, “பரவாயில்லை கீர்த்தி” என்ற ராஷ்மிகா வெளியேவந்து செல்வமணியிடம், பால்செம்பை வாங்கி வந்து கீர்த்தியிடம் தந்தாள்.
கீர்த்தியின் அறைவரை சென்று அவளை விட்டு, கீழே வந்த ராஷ்மிகா சோபாவில் உட்கார்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்த மகளைத் தூக்க, “இன்னிக்கு யாழ் எங்ககூட இருக்கட்டும். நீ போ” நாகரிகமாகவும் நாசுக்காகவும் செல்வமணி சொல்ல, தனிமையில் கணவனிடம் பேச வேண்டுமென்று நினைத்தவள், “ம்ம்” என்றுவிட்டு மாடிப்படியில் ஏறினாள்.
செல்வமணி யாழ்மொழியைத் தூக்கிக்கொண்டு கல்யாணி, விஜயலட்சுமியுடன் ஒரு அறைக்குள் நுழைய, மற்ற இரண்டு ஆண்களும் ஒரு அறையில் உறங்க ஆரம்பித்தனர். கணவனிடம் என்ன பேசுவது என்று விழித்தபடி மாடிப் படிகளில் ஏறிய ராஷ்மிகா தங்களுடைய அறைக்கு வந்து சேர்ந்தாள்.
கதவைத் திறந்துகொண்டு ராஷ்மிகா உள்ளே நுழைய பால்கனியில்
இருந்து, சோம்பலை முறித்தபடி வந்த அஷ்வின் இவளை மட்டும் கண்டு,
“யாழ் எங்க?” என்று வினவினான்.
“அத்தை இன்னிக்கு யாழை அவங்ககூட எடுத்துட்டுப் போயிட்டாங்க” ராஷ்மிகா பதில் சொல்ல அவனின் முகமோ யோசனைக்குச் சென்று அன்னை எதற்காக மகளை எடுத்துச் சென்றிருப்பார் என்று அடுத்து இறுகியது.
அன்னையை மனதிற்குள் கடிந்தவன், “சரி” என்று படுக்கப்போக, “நான் உங்ககூட கொஞ்சம் பேசனும் அ.. அஷ்வின்” என்றாள் ராஷ்மிகா. ஏனோ, அவன் பெயரை சொல்வதற்கே உரிமை இழந்தது போல உணர்ந்தது அவள் மனம்.
அவளைத் திரும்பிப் பார்த்த அஷ்வின், “ரொம்ப அவசியம்னா இப்ப பேசலாம். இல்லைனா நாளைக்கு பேசலாம்” அவன் சொல்ல, “இல்லை ரொம்ப முக்கியமான விஷயம் அஷ்வின்” என்றாள் ராஷ்மிகா.
“யாழ் பற்றியா?” மகளிற்கு தேவையானது ஏதாவதோ என்று அஷ்வின் கேட்க,
“இல்ல.. நம்மளைப் பற்றி” ராஷ்மிகா தன் பெருவிரலை உள்ளங்கையில் ஊன்றியபடி சொல்ல, அவள் கொடுத்த அழுத்தத்தில் அவள் விரல் நகம் விட்டால் உடைந்திருக்கும்.
“அது எப்பவுமே முக்கியமில்லாத ஒன்னு. அதைப்பத்தி பேச எதுவும் இல்லை” அஷ்வின் அவனுடைய பெட் ஷீட்டை எடுத்துக்கொண்டு விரித்தபடி சொல்ல, அவனுடைய வார்த்தைகளில் அமிலத்தை ஊற்றியது போலத் துடித்துப்போனாள் ராஷ்மிகா.
“அஷ்வின் ப்ளீஸ்..” அவன் கையைப் பிடித்தபடிக் கெஞ்ச, அவனோ அவளை முறைத்துவிட்டு, தன் கையின் மேலிருந்த அவள் கையின் மேல் பார்வையை பதித்தான். ராஷ்மிகாவின் கை, கணவனின் பார்வையில் தானாக விலகியது.
“ப்ளீஸ்!” என்று அவள் மறுபடியும் சின்னக்குரலில் கெஞ்ச, பெட்டில் இருந்து எழுந்த அஷ்வின் பால்கனி கதவுப் பக்கம் சென்று நின்று கொண்டு அவளை நேராகப் பார்த்து, “என்ன?” என்று கேட்டான்.
“ஸாரி, அஷ்வின்” என்ற ராஷ்மிகாவிற்கு கண்களில் நீர் அரும்பியது.
“எதுக்கு?”
“உங்களை இத்தனை நாளாய் தப்பா நினைச்சுட்டேன்” ராஷ்மிகா தலையைக் குனிந்து பல்லைக் கடித்தபடி.
“நீ எப்ப, என்னை நல்லவனா நினைச்சிருக்க? நீ என்ன தப்பா நினைச்சேட்டேன்னு சொல்றதுக்கு” அஷ்வின் ஊசி ஏற்றுவது போலக் குத்த அதற்கு மேல் முடியாதவளாய், “அஷ்வின்ன்ன்!” என்று கதறிய ராஷ்மிகா அவனைச் சென்று கட்டிக்கொண்டாள்.
“என்னை மன்னிச்சிடுங்க அஷ்வின்.. உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். ரொம்ப காயப்படுத்திட்டேன்” என்று அழுதவளை அவன் கைகள் அணைக்கவும் இல்லை ஆறுதலும் சொல்லவும் இல்லை.
“இன்னிக்கு குமரேசன் அங்கிள் வந்த அப்புறம்தான். ரிஷிகிட்ட கேட்டு எனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சது” ராஷ்மிகா அழ, அஷ்வினின் கரமோ ராஷ்மிகாவின் தோளை இரும்பாய்ப்பற்றி அவனிடமிருந்து பிரித்தது.
“ஓ! என்னை நம்ப அடுத்தவன் உன்கிட்ட வந்து சொல்லனும் இல்ல?” கண்கள் சிவக்கக் கேட்டவன்,
“அப்ப அவங்க சொல்லலைன்னா வாழ்க்கை ஃபுல்லா என்னை, உன் அப்பாவைக் கொன்ற கொலைகாரனா பாத்திருப்பதானே?” என்று வினவ ராஷ்மிகாவோ கணவனின் கேள்வியில், கூனிக்குறுகி நின்று கைகளைக் கோர்த்தபடி அழுது கொண்டிருந்தாள்.
“என்ன சொன்ன? அன்னிக்கு, நான் லவ் பண்ண மாதிரி நடிச்சு ஏமாத்துனேனா.. அதுலையும் நடிப்பியான்னுதானே கேட்ட?” என்று கேட்டவன்,
“நானும் நீயும் எத்தனை நாள் இந்த ரூம்ல தனியா இருந்திருக்கோம். நான் நினைச்சிருந்தா உன்னை என்ன வேணும்னாலும் செஞ்சிருக்கலாம்டி. என்னை எவனும் கேள்வி கேட்டிருக்க முடியாது. உன்னை எந்தத் தொந்திரவும் செய்யாம, நான் உனக்கு நல்லது மட்டுமே நினைச்சேன்ல. அதான், நீ அன்னிக்கு என்கிட்ட ‘உன்னைப் பாக்கபாக்க எனக்கே அருவருப்பா இருக்குன்னு’ சொன்ன”
“அன்னிக்கே நமக்குள்ள நடந்த தாம்பத்திய வாழ்க்கைய அசிங்கபடுத்திட்ட. நீ, என் லவ்வ புரிஞ்சிருந்தா அப்படி பேசியிருக்க மாட்டடி” என்று நான்கு வருடங்களாக மனதில் கனன்று கொண்டு இருந்ததை மனைவியின் மேல் அஷ்வின் வாரியிறைத்தான்.
‘உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்’ என்பதற்கேற்ப கணவனின் அத்தனை வார்த்தைகளையும் வாங்கிக் கொண்டிருந்தாள் ராஷ்மிகா.
“இதை எல்லாம் விடு. யாழ் பிறந்ததை உன்னால எப்படி மறைக்க முடிஞ்சது?” கேட்ட அஷ்வினின் குரல் கரகரத்தது. கணவனின் குரலில் அவள் நிமிர அவனின் கண்களலோ ஆயிரம் அர்த்தங்களைச் சொன்னது ராஷ்மிகாவிற்கு.
“அஷு!” அவள் ஏதோ சொல்ல அருகில் வர,
“நில்லு! பக்கத்துல வராதே” அவன் உறுமலில் விக்கியவள் அப்படியே பயத்தில் நின்றாள்.
“உன்னால ஸாரி கேக்கமுடியும். ஆனா, நான் என் பொண்ணுகூடத் தொலச்ச நாலு வருசத்த உன்னால திருப்பித் தர முடியுமா? அவ பிறந்தப்ப எப்படியிருந்தா, என்ன பண்ணா, எப்படி சிரிச்சா, என்ன வார்த்தை முதல்ல சொன்னா, இதெல்லாம் என்னால பாக்க முடியுமா? இதுக்கு மேல எனக்கு எத்தனை குழந்தை வந்தாலும் என்னோட முதல் உயிர் உருவானதைக் கேக்கற சந்தோஷம் மாதிரி வருமாடி” அஷ்வின் கேட்ட ஒவ்வொரு கேள்வியிலும் ராஷ்மிகா திருடனிற்குத் தேள் கொட்டியதைப் போன்று வாயை மூடி அழுதுகொண்டு நின்றாள்.
“நீ, என் சந்தோஷத்தை மட்டும் அழிக்கல. யாழோட சந்தோஷத்தையும் அழிச்சுட்ட. அவ அப்பா, அம்மாகூட சாதரணமா ஒன்னா ஃபோட்டோ எடுக்கிறதைக் கூட இத்தனை நாளா ஏங்கிக்கேக்கும்போது, நான் இருந்தும் என்ன ப்ரயோஜனம்னு இருந்துச்சு. இன்னும் இந்த மாதிரி எத்தனைக்கு அது ஏங்கிட்டு இருக்கோ..” என்று உடைந்துபோய் சொன்னான் அஷ்வின். ராஷ்மிகாவோ அவன் அருகில் செல்வதற்கே பயந்துகொண்டு நின்றிருந்தாள்.
தலைகுனிந்து வாய்பொத்தி அழுது கொண்டிருந்த ராஷ்மிகாவைப் பார்த்த அஷ்வினிற்கோ மனம் இறங்கவில்லை. மாறாக, கோபம்தான் வந்தது. “இதுல உனக்கு இங்க வர்றதுக்கு அவ்வளவு கஷ்டமில்ல?” என்று இறுகியக் குரலில் கேட்டவன்,
“போதும். இதுக்கு மேல பேசி நான் எதையும் கெடுத்துக்க விரும்பல. நான் யாழோட அம்மாவா உன்ன இங்க வரச்சொல்லி கூப்பிட்டேன். நீயும், நான் சொன்ன அப்புறம் அதுக்காகத்தானே வந்த..” என்று குத்திக் காட்டியவன்,
“நீ, எனக்கு மனைவியா எதையும் சகிச்சுகிட்டு பண்ணனும்னு அவசியமில்ல. நாம குடும்பம் நடத்தனும்னு அவசியமும் இல்ல.. எனக்கு அருவருப்பா இருக்கு.. இப்போ, நாம வாழ்ந்த வாழ்க்கைய நினைச்சா. அதுல நடந்த ஒரே ஒரு அழகான விஷயம் என்னோட பொண்ணு மட்டும்தான்”
“இனிமேல் நானும் நீயும் வெளில மட்டும்தான் புருஷன் பொண்டாட்டி. என் பொண்ணுக்கும் எதுவும் தெரியக்கூடாது” என்று எச்சரித்துக் கட்டளையிட்டான் அஸ்வின்.
‘இனிமேல் பேச எதுவுமில்லை’ என்று நினைத்தவன் தலையின்மேல் கையை மடித்து வைத்து படுத்துக்கொண்டான். அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதில் ஆழப்பதிந்து ராஷ்மிகாவை வேதனைக்கு அழைத்துச் சென்றது.
‘உன்னால அவனுக்கு நல்ல மனைவியா இருக்க முடியல. உன் பொண்ணுக்கும் நல்ல அம்மாவா இருக்க முடியல’ என்று ராஷ்மிகாவின் மனசாட்சி எடுத்துரைக்க, தான் செய்த தவறின் அளவு அவளிற்கு புரிந்தது.
பாத்ரூமிற்குள் புகுந்து சிறிது நேரம் அழுதவள் தேம்பியபடியே நின்றிருந்தாள். தனது அழுகை நிற்காது என்று அவளே உணர்ந்தவள் வாஷ்பேஷினைத் திறந்து முகத்தை அடித்துக் கழுவ, அவளது கண்ணீர் மணிகள் தண்ணீரோடு கலந்தது. அமைதியாக வெளியே வந்தவள் அஷ்வினைப் பார்க்க அவனோ தூங்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது அவளிற்கு.
பேசாமல் சென்று பெட்டின் மறுபக்கத்தில் படுத்தவள் தூங்கமுயற்சிக்க கண்களோ உறக்கத்தைத் தழுவவில்லை. அஷ்வின் சிறிதுநேரத்தில் கல்யாண அயர்வில் உறக்கத்தைத் தழுவ, ராஷ்மிகாவோ எதிரே தெரிந்த சுவரை வெறித்துக்கொண்டே இருந்தாள்.இங்கே இப்படி இருக்க, அங்கு கீர்த்தனா ஆதர்ஷினியோ இன்னொருவனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருந்தாள்.