யாழ்-25

IMG-20210214-WA0021-37ed211d

யாழ்-25

கொதித்துப் போய் உட்கார்ந்திருந்தார் அமைச்சர் பொன்னுரங்கம்.

‘அஸ்வினைப் பழிவாங்க முடியவில்லையே’ வயதில் சிறியவனிடம்
தோற்றுப் போனதை பெரிய அவமானமாகக் கருதினார் அவர்.
அவருள் பழிவாங்க வேண்டுமென்ற வெறி பாம்பின் விஷமாய் உள்ளே
இறங்கிக்கொண்டிருந்தது. என்னதான் பெரியமகள் ஷிவானிக்கு
இரண்டு வருடத்திற்கு முன்பு அவர் திருமணம் செய்து தந்தாலும்,
அஸ்வின் மகளை அவமானபடுத்தியது அவரை சும்மா இருக்க
விடவில்லை.

அதுவும் கீர்த்தியின் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடந்து
அதிலெடுத்த குடும்பப் புகைப்படங்கள் சில நாளிதழ்களில் வெளிவர,
அதிலிருந்த அனைத்துப் புகைப்படத்தையும் கண்டவருக்கு அதில்
இரண்டு புகைப்படம் இரத்த அழுத்தத்தை ஏற்றியது.

ஒன்று, கீர்த்தி, ஹர்ஷா மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள்களும்
ஒன்றாக நின்றிருந்தது. மற்றொன்று அஸ்வின், ராஷ்மிகா, யாழ்
மூவரும் சிரித்தபடி எடுத்திருந்த அழகிய புகைப்படம். மூவரின் முகமுமே
அதில் உண்மையான சந்தோஷத்தில் இருப்பதைப் பார்த்தவர்,
கோரமாக சிலசெயல்களை அரங்கேற்ற நினைத்தார்.

சில புது ப்ராஜெக்ட்களுக்கு டெண்டர் எழுதிக் கொண்டிருந்த
நிரஞ்சனிடம், அஸ்வின் எல்லா நுணுக்கமான விவரங்களையும்
தெரிவித்தபடி இருந்தான்.

“நிரஞ்சன் இது ரொம்ப சீக்ரெட்டா இருக்கனும். இந்த டெண்டர் என்
கையை விட்டுப் போகக்கூடாது” று அஸ்வின் கட்டளையிட, நிரஞ்சனும்
சரியென்று தலையசைத்தான்.

அஸ்வினின் ஃபோன் அலற முதலில் கட் செய்ய நினைத்தவன், வீட்டு
நம்பர் என்றதும் மகளாகதான் இருக்கும் என்று உறுதி செய்து
ஃபோனை எடுத்துக் காதில் வைத்தான்.

“குட்டிமா!” அஸ்வின் ஆரம்பிக்க,

“ப்பா!” மகளின் குரல் கேட்டதில் அவனோ முகத்தில் புன்னகையைத்
தவழவிட்டான்.

“யெஸ்… பாப்புக்கு என்ன வேணும்?” அஸ்வின் மகளிடம் அவளின்
வயதிற்கு மாறி வினவினான்.

“அப்பா… எனக்கு வரும்போது பானிபூரி வாங்கிட்டு வாங்க!”
டெல்லியிருந்து வந்த அப்புறம் சாப்பிடவே இல்லைப்பா. இந்த
அம்மாகிட்ட கேட்டா அப்புறம் அப்புறம் சொல்றாங்க” மகள் கோபமாய்ப்
பேச, அஸ்வின் மகளின் கோபத்தைக் கண்டு அசந்துதான் போனான்.

“ஓகே… ஓகே! நோ டென்ஷன், அப்பா வாங்கிட்டு வரேன். சரியா?”
“ஓகேப்பா. நான் வைக்கறேன்” பேச்சை முடித்துக்கொண்டு ஓடிவிட்டாள்
யாழ்மொழி.

ஃபோனை வைத்த அஸ்வின் திரும்பியவன் பார்வையில், அவனை
ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சன், தலைகுனிந்தான்.

“என்ன நிரஞ்சன்? ஏன் இப்படி ஒரு லுக்?”

“இல்ல ஸார் ஒன்றும் இல்ல”

“பரவாயில்லை சொல்லு!”

“இல்ல ஸார்… நீங்க இப்படி சிரிச்சுப் பேசி ரொம்பநாள் அப்புறம்
பாக்கறேன்… அதான்!” நிரஞ்சன் வெளிப்படையாகச் சொன்னான்.

“எல்லாமே நல்லா நடக்கிற சந்தோஷம்தான் நிரஞ்சன்” அஸ்வின்
புன்னைகையுடன் கூற, அடுத்து இருவரும் தங்கள் வேலைகளில்
மூழ்கிப் போயினர்.

மாலைநேரம் ஆபிஸில் அஸ்வின் நேரத்தை பார்த்துவிட்டு, “நிரஞ்சன்
அவங்களுக்கு டெண்டர் அமௌன்ட் ஈமெயில் பண்ணிட்டு யூ கேன் லீவ்”
என்று தன்னுடைய மற்ற வேலைகள் சிலதை கவனித்தான்.

ஏழுமணி போல் வேலைகள் அனைத்தும் முடிய, கைகளைத் தூக்கி
சோம்பலை முறித்து விட்டு எழ அஸ்வினின் ஃபோன் அலறியதில்,
அவனின் புருவம் சுருங்கியது. திரையில் தெரிந்த பெயரை
யோசனையுடனே பார்த்து அட்டென்ட் செய்து காதில் வைத்து, “ஹலோ”
என்றதும்,

“ஸார்… நான் சேகர் பேசறேன்!” என பொன்னுரங்கத்தின் பி.ஏ பேசினார்.

“ம்ம்… சொல்லுங்க” அஸ்வின் சொல்ல, அவரோ அனைத்தையும கூற
ஆரம்பித்தார்.

அஸ்வினைப் பழிவாங்க திட்டம் தீட்டிய பொன்னுரங்கம், “டேய் காளி…
இது அட்வான்ஸ்” இரண்டு பெட்டிகள் நிறைய பணத்தை எடுத்து
வைத்து, பதினைந்து வருடமாக இருப்பவனிடம் சொன்ன
பொன்னுரங்கம்,

“இதை சரியா முடிச்சா… இது மாதிரி இன்னும் இரண்டு பெட்டிபணம்
கிடைக்கும்” என்றார்.

“யாரைப் போடணும்ங்க ஐயா!” அவனோ விசுவாசமாகக் கேட்க,

“அஸ்வினைத் தவிர, அவன் குடும்பம் மொத்தமும்… அப்புறம் அவன் தங்கச்சியையும் விட்டிரு! அப்புறம் மூணுபேருடைய சாவு மட்டும் கொடூரமா இருக்கனும். மூஞ்சியைப் பாத்துக்கூட அழ முடியாத மாதிரி இருக்கனும்” என்றார் பொன்னுரங்கம்.

“யாரெல்லாம்?” காளி கேட்க,

“அவன் அப்பா, அம்மாவை சாதரணமா முடிச்சா போதும். அவன் தங்கச்சி புருஷனைக் கொன்னுடு. அப்புறம், அவன் பொண்டாட்டி, புள்ளை. இவங்க மூணுபேரு சாவும் கொடூரமா இருக்கனும். அவன் தங்கச்சி நிலைமையே அவனை கொல்லணும்…” இரக்கமேயில்லாமல் பொன்னுரங்கம் சொல்ல, பணத்திற்காக எதையும் செய்ய நினைக்கும் கொடூர மிருகங்களோ ஆளாளுக்குக் பிரிந்து கிளம்பிச் சென்றனர்.

இதை சேகர் கேட்டுவிட, அஸ்வினிற்கே முதலில் ஃபோன் செய்தார்.
மூன்று வருடத்திற்கு முன்னால் அஸ்வினின் விசுவாசியாக
பொன்னுரங்கத்திடம் வேலைக்குச் சேர்ந்த சேகரின் மூலமாகத்தான்,
பொன்னுரங்கத்தின் ஒவ்வொரு அசைவையும் அஸ்வின் அறிந்தான்.

அவர் சொன்னச் செய்தியைக் கேட்ட அஸ்வின் ஆடிவிட்டான்.
தொழிலில் பிரச்சினை செய்யும் பொன்னுரங்கம், கொலைவரை
செல்வான் என்று அஸ்வின் நினைக்கவில்லை. அதுவும்
தன்குடும்பத்தின் மேலேயே கை வைப்பான் என்று அஸ்வின்
நினைக்கவில்லை. அனைவரின் உயிர் மற்றும் தன்வாழ்க்கையிலும்
தங்கை வாழ்க்கையிலும் விளையாட நினைத்த பொன்னுரங்கத்தின்
மேல் கொலைவெறிக்கே சென்றான் அஸ்வின்.

ஆனால், இப்போது அங்கே கோபத்தைக் காட்ட நேரமில்லை என்பதை
உணர்ந்தவன் தனது ஆபிஸின் கீழ்தளத்தில் ரிஷியைத் தேடி ஓடினான்.

அஸ்வின் ஓடி வருவதைக் கண்டு, “என்ன ஆச்சு ஸார்?” கேட்டபடியே
ரிஷியும் அவனது ஆட்களும் பதட்டத்துடன் வந்தனர்.

பொன்னுரங்கத்தின் திட்டத்தைக் கூறிய அஸ்வின், “ரிஷி! நீ முதல்ல
வீட்டுக்குப் போ… எல்லாரையும் பாத்துக்க யாருக்கும் எதுவும்
ஆகக்கூடாது. நீ, போன கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்திடும்” என்று
திரும்பியவனிடம்,

“ஸார்… உங்ககூட யாராது வரோம்” ரிஷி முன்னே வந்தான்.

“இல்ல ரிஷி… ஹர்ஷாவை நான் பாத்துப்பேன்!” ரிஷியின் பதிலை
எதிர்ப்பார்க்காமல் அஸ்வின் ஓட, ரிஷியும் அவனது ஆட்களுடன்
அஸ்வினின் வீட்டிற்கு செல்லும் வழியில் ட்ராபிக்கில் மாட்டிக்
கொண்டனர்.

காரில் ஹர்ஷாவின் ஆபிஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த
அஸ்வின், மனைவிக்கு அழைத்து, “ஹலோ ராஷ்மி” என்றான்.

முதலில் தந்தைக்கு கூப்பிட எண்ணியவன், அவர் உடல்நலன் கருதியே
மனைவிக்கு அழைத்தான். எவ்வளவு முயன்றும் அவனையும் மீறி
அவனின் பதட்டக்குரல் வெளிவந்து ராஷ்மிகாவை அடைந்தது.

“என்னாச்சு அஸ்வின்” ராஷ்மிகா. கேட்க,

“ராஷ்மி! நான் சொல்றதைக் கேளு. முதல்ல வீட்டோட என்ட்ரன்ஸைப்
பூட்டு”

“ஏன்? என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி பேசறீங்க?” அவளுக்கும் பதட்டம்
தொற்றிக் கொள்ள, அவன் சொன்னதைச் செய்தாள் ராஷ்மிகா.

“வீட்டுல இருக்கு வேலை ஆள்களை எல்லாம் ஸ்டோர் ரூம்ல பூட்டு”
அஸ்வின் சொல்லியபடியே அனைவரையும் அடைக்க, அவர்கள் கேட்ட
கேள்வியை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை ராஷ்மிகா.

“ராஷ்மிகா என்ன பண்ற?” என்றபடி செல்வமணி வர,

“ராஷ்மி… அம்மா அப்பாவை அவங்க ரூம்ல வச்சு பூட்டிடு!” என்று
அஸ்வின் சொல்ல, மாமியார் மாமனார் கேள்விகளுக்கு, “அவருதான்
சொன்னாரு” கதவைச் சாத்தியபடியே சொன்னவள் கதவைப் பூட்டி
சாவிகளைத் தனது நைட்பாண்டில் போட்டாள்.

“ராஷ்மி, யாழ் எங்க?” அஸ்வின் கேட்க,

“ஹர்ஷா வந்திருந்தான், அவன் கூட போயிருக்கா” ராஷ்மிகா சொல்ல,

“வாட்!” அஸ்வின் கத்தியே சடன்ப்ரேக் போட்டுத் தனது காரை
நிறுத்தினான்.

உடலெல்லாம் நடுங்க ராஷ்மிகாவிடம், “ராஷ்மி… நம்ம ரூமல் போய்க்
கதவைப் பூட்டிட்டு உக்காரு. ரிஷி அண்ட் போலீஸ் வந்த அப்புறம்
கதவைத் திற! என்னோட பிஸ்டல் கன் ஒண்ணு என் ட்ரெஸ் அடில
கப்போர்ட்ல இருக்கு. தேவைனா யூஸ் பண்ணிக்க… நான் யாழ்
ஹர்ஷாவோட வரேன்” என்று ஃபோனை அணைத்தான்.

சிவகுமாருக்கு அழைத்து விவரங்களைச் சொன்னவன் அவரையும்
அவருக்கு தெரிந்த போலீஸ்களோடு அங்கு செல்லச்சொன்னான்.
வீட்டில் யாருக்கும் எதுவும் ஆகாதென்று அஸ்வினிற்குத் தெரியும்.

ஆனால், இப்போது ஹர்ஷா மற்றும் யாழ் அவன் கையில்.
வேகவேகமாக காரைச் செலுத்திய அஸ்வின், ஹர்ஷாவின்
ஆபிஸிற்குச் அவனை ஃபோனில் அழைத்துக் கொண்டேதான்
சென்றான். ஆனால் ஸ்விட்ச்டுஆப் என்று வந்தது. ஹர்ஷாவின்
ஆபிஸிற்குள் அஸ்வின் ஓட, அந்த அலுவலகத்தின் டைரக்டரே அவன்
எதிரில் வந்தார்.

“ஹாய் அஸ்வின் நீங்க எங்க இங்கே?” அவர் வினவ,

“ஹாய் நீங்க எங்க இங்க! ஐ நீட் எ ஹெல்ப்” அவரிடமே உதவிகேட்டான்
அஸ்வின்.

“நான் இங்கதான் டைரக்டரா இருக்கேன். என்ன ஹெல்ப் சொல்லுங்க?”

“இங்க ஹர்ஷவர்தனைப் பாக்கனும்” என்ற அஸ்வின் அனைத்தையும்
அவரிடம் கூறினார்.

“இங்க போய் தேட முடியாது. இங்க நிறைய ப்ளோர்ஸ் இருக்கு. வாங்க…
சிசிடிவி ரூமுக்கு போய் ஹர்ஷா எந்த ப்ளோர்ல இருக்காருன்னு பாத்து,
அங்கேயிருக்க ரிசப்ஷனிஸ்டிடம் சொல்லி சீக்கிரம் வர சொல்லலாம்”
அவர் அழைக்க அதுவும் சரிதான் என, அஸ்வின் அவருடன் சென்றான்.

அவர்கள் உள்ளே சென்று, சிசிடிவியில் முதலில் ஹர்ஷாவின்
கேபினைத்தான் பார்த்தனர். யாழ்மொழி அவனின் டேபிளில்
அமர்ந்திருக்க, எதையோ எடுத்த ஹர்ஷா மீண்டும் வெளியே வந்து
லிப்டை நோக்கி யாழ்மொழியைத் தூக்கியபடியே நடக்க ஆரம்பித்தான்.

“ஸார் ஃபோன் பண்ணி ஹர்ஷாவை அங்கயே இருக்க வைங்க”
அஸ்வின் அவசரமாகச் சொல்ல அந்த டைரக்டரும் ஃபோனை
எடுப்பதற்குள் லிஃப்டிற்குள் நுழைந்தான் ஹர்ஷா.

அக்கா மகளை, மாலை வேலை முடித்து வந்தவன் ரவுண்ட்
போகலாமென்று அழைத்து வர, அதற்குள் ஆபிஸில் முடிக்காத
வேலையொன்று ஞாபகத்திற்கு வந்து, குழந்தையுடன் அலுவலகம்
வந்தான். அக்கா மகளிடம் தன் வம்பை இழுத்தபடி
விளையாடிக்கொண்டே டாக்குமெண்ட்ஸை எடுத்து விட்டு மீண்டும்
கிளம்ப லிஃப்டிற்குள் புகுந்தான்.

சிசிடிவியில் லிஃப்ட் உள்ளே யாரோ நிற்பதைக் கூர்ந்து பார்த்த
அஸ்வினிற்கு அது யாரென்று தெரிந்துவிட, வெளியே ஓடினான். அவன்
பின்னாலேயே டைரக்டரும் வெளியே நின்றிருந்த செக்யூரிட்டியை
அழைத்துக் கொண்டு ஓடினார்.

ஒரு மணிநேரம் கழித்து வீட்டிலிருந்த கீர்த்திக்கு, அவளது தோழி கீதா,
ஃபோனில் அழைத்திருந்தாள்.

“ஹலோ கீத்து” கீர்த்தி ஆரம்பிக்க,

“தர்ஷினி என்ன ஆச்சு? எங்க இருக்க?” கீதா பதட்டமாக வினவ கீர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னடி பேசற, ஒன்னுமே புரியல?” கீர்த்தி கேட்க,

“ஹே… நியூஸ்பாரு தர்ஷினி. உன்…” என்றவள் வந்ததை சொல்ல
முடியாமல்,

“நியூஸ்பாரு ஃப்ரஸ்ட்” என்று லைனிலேயே இருந்தாள். டி.வியை ஆன்
செய்து, நியூஸ் சேனலை மாற்றிக்கொண்டே வந்த கீர்த்தி ஹர்ஷாவின்
முகம் வர ஃபோனைக் கட் செய்துவிட்டு செய்தியைக் கவனித்தாள்.

“தொழிலதிபர் அஸ்வின் மேலுள்ள கோபத்தில் அவரின் தங்கை
கணவர் தாக்கப்பட்டார்” என்று கீழே ஓட கீர்த்திக்கு நெஞ்சம் எல்லாம்
அதிர்ந்தது. இன்னொரு தொலைக்காட்சிக்கு கீர்த்தி மாற்ற, அதில்
நேரலை ஓடிக் கொண்டிருந்தது. அதில் அலுவலகத்தில் அமர்ந்து ஒரு
முதன்மை செய்தி வாசிப்பாளர் கேள்வி கேட்க ,சம்பவ இடத்திலிருந்த
ரிப்போர்ட்டர் பதிலை அளித்துக் கொண்டிருந்தார்.

“சொல்லுங்க கண்ணன் என்ன ஆச்சு?” செய்தி வாசிப்பாளர் கேட்க,

“தொழிலதிபர் அஸ்வினின் தங்கை கணவர் ஹர்ஷவர்தன் 7:50
மணிக்குக் கத்தியால் தாக்கப்பட்டிருக்கிறார். உள்ளே என்ன நடந்தது
என்று விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், யாரோ ஒருவருடைய
உடல் மட்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது
நந்தன்” ரிப்போர்ட்டர் பதிலையளிக்க, நின்றிருந்த கீர்த்தி ஷோபாவில்
அமர்ந்துவிட்டாள்.

அதே செய்தி திருப்பித்திருப்பி ஓட, அங்கு வந்த கல்யாணி செய்தியைப்
பார்த்துவிட்டு அதிர்ந்தார். அங்கே உட்கார்ந்திருந்த கீர்த்தி, ஏதோ
யோசனை வந்தவளாக ஃபோனை எடுத்து ஹர்ஷாவிற்கு அழைக்க
ஸ்விட்டுஆஃப். அண்ணனிற்கு அழைக்க அதுவோ அடித்துக்கொண்டே
இருந்ததே தவிர அவன் எடுக்கவில்லை.

கண்ணீரோடு திரும்பியவள் “அத்தை, மாமா எங்கே?” என்று வினவ,

“அவரு விஜி அக்காகிட்ட சொல்லிட்டு எங்கயோ கிளம்புனாரே!”
சொன்ன கல்யாணி, “விஜிக்கா!” என்றழைத்தபடி அவரை
நாடிச்சென்றார்.

கீர்த்தி மாமனாருக்குக் அழைக்க, சிறிதுநேரம் கழித்தே எடுத்த
சிவகுமார், “சொல்லும்மா” என்றார்.

“மாமா… ஹர்ஷாவுக்கு என்ன ஆச்சு? நீங்க, எங்க இருக்கிங்க?”
கேட்டவள் கைகள் நடுங்க நெஞ்சோடு சேர்த்து தனது தாலியை இறுகப்
பிடித்தாள். உதடுகள் நடுங்கியது அவளுக்கு.

“நான் கார் அனுப்பி இருக்கேன்மா. நம்ம ட்ரைவர் வருவாரு. நீ ,உங்க
அத்தைகளைக் கூட்டிட்டு உங்க வீட்டுக்கு வாங்க!” அவர் சொல்ல கீர்த்தி
அழுதேவிட்டாள்.

“ஹர்ஷா!” அழைப்பினை துண்டித்து விட்டு கணவனின் பெயரை
முணுமுணுத்துபடி கீர்த்தி அழ ஆரம்பிக்க, விஜியும் கல்யாணியும் அங்கு
வந்து விஷயத்தை அவளிடம் கேட்டு அறிந்தனர்.

கார் வர மூவரும் ஏறி கீர்த்தியின் வீட்டிற்கு அப்படியே கிளம்பினர்.
மூவருக்குமே எதுவுமே தோன்றவில்லை. கீர்த்தி சத்தம் போட்டு
அழவில்லை என்றாலும் கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்துகொண்டே
இருந்தது.

அஸ்வினின் வீட்டில் போலீஸ் கூட்டம், ரிஷி மற்றும் காட்ஸ் பத்திரிகைக்
கூட்டமென அனைவரும் கூடியிருக்க வாயிலின் முன்பு ஒரே கூட்டமாக
இருந்தது. அழுதுகொண்டே இறங்கிய கீர்த்தி நேரே சென்றது
மாமனாரிடம்தான். “மாமா, ஹர்ஷா எங்கே… ப்ளீஸ் சொல்லுங்க!” அவள்
கெஞ்சும் குரலில் கேட்க,

“எங்களுக்கும் எந்தத் தகவலும் இல்லைமா! அங்க ஏதோ ஜாமர் வச்சு
இப்ப லைவ் நியூஸ்கூட வரமுடியாத மாதிரி பண்ணி இருக்காங்க…
இங்க போலீஸ் டூ போலீஸே பேச முடியல!” சிவகுமார் சொன்னார்.

“அப்ப, ஜிஎச் கொண்டு போனது யாரை மாமா?” பதட்டத்துடன் கீர்த்தி கேட்டாள். ஏனென்றால் ஏதாவது ஆகி இருந்தால்தானே அங்கு எடுத்துச்
செல்வார்கள்.

“அதுதான்மா… நாங்களும் கால் பண்ண ட்ரை பண்ணோம். யாரும்
எதுவும் சொல்ல மாட்டிறாங்க!” கரகரத்த குரலில் பதிலையளித்தார்
அவர்.

மகன், பேத்தியை நினைத்து அவருக்கும் வேதனையிருந்தது. ஆனால்,
அவரும் உடைந்தால் பெண்களும் கலங்கக் கூடுமென்று அழுகையைக்
கட்டுப்படுத்தினார். உள்ளே கீர்த்தி எதுவும் பேசாமல் செல்ல, ராஷ்மிகா
கண்களை மூடி அப்படியே அமர்ந்திருந்தாள். செல்வமணி
பூஜையறையில் கடவுளிடம் கண்ணீர் விட்டபடி வேண்டிக்
கொண்டிருந்தார்.

சைரன் சத்தத்துடன் ஏதோ கேட்க, அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த யாரோ, “ஆம்புலன்ஸ் வருது” என்று பேசிக்கொள்ள.
ராஷ்மிகா அவசரமாக எழுந்து வெளியேஓட, பெண்கள் அனைவரும்
வெளியே ஓடினர்.

ஷோபாவில் கல்லாக காதைப் பொத்தியபடி அமர்ந்திருந்த கீர்த்தி, வந்த
ஆம்புலன்ஸையே கண்ணீருடன் வெறித்தாள். முதலில் ஆம்புலன்ஸில்
இருந்து இறங்கி, சிவகுமாரை அஸ்வின் கட்டிக்கொள்ள அவ்வளவுதான்!

கீர்த்தி காதை இறுகப் பொத்தி கண்களை மூடிக் கொண்டாள். அவளின்
அழுகை கேவலாக மாற, அதை கவனிக்கும் நிலையில் யாருமில்லை.
எல்லாரும் வாயிலிலேயே நின்றிருக்க உள்ளே அழுகையில் வெடித்துக்
கொண்டிருந்தவளை யாரும் கவனிக்கவில்லை.

அவளின் மனக்கண்ணில் கணவனுடன் இருந்த ஒவ்வொரு தருணமும்
வந்து சென்றது. அவள் காதில் ஆம்புலன்ஸ் கிளம்பும் சத்தம் மட்டும்
கேட்க, அப்போதும் கையை எடுக்காமல் அழுது கொண்டிருந்தாள்.
கணவனை அந்த நிலையில் பார்க்கும் சக்தி தனக்கு இல்லவேயில்லை
என்பதை முற்றிலுகமாக உணர்ந்தாள் கீர்த்தி.

“கீர்த்தி” என்ற கணவனின் தொடுகையிலும் குரலிலும் கண்களைத்
திறந்து நிமிர்ந்த கீர்த்தி, அவன் தன்முன் நிற்பதைக் கண்டாள்.

“ஹர்ஷா…” என்று கண்ணீர் விட்டவள், அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவனை தன் இருகண்களால் நிரப்பிக் கொண்டிருந்தாள் அவள்.

அவள் முன் மடிந்து அமர்ந்த ஹர்ஷா, அவளது கைகளைப் பற்றி,
“ஏன்டி அழற?” கண்களைத் துடைத்து விட்டபடிக் கேட்க, “ரொம்ப
பயந்துட்டேன் ஹர்ஷா” குழந்தைப் போல தலையை ஒருபக்கம் சாய்த்து,
தன் நெஞ்சின்மேல் கை வைத்துச் சொன்னவள், அவனை
முழுவதுமாகக் கட்டிக்கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

“சரி, சரி… அழாதே கீர்த்தி. எனக்கு எதுவுமில்ல!” மனைவியின் முதுகை
வருடிக் கொடுத்து, அவளை இறுக அணைத்தான். அதைப் பார்த்த
அஸ்வினிற்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

இல்லையென்றால் வாழ்நாள் முழுதும் அல்லவா தங்கையின் இந்தக்
கண்ணீரை பார்த்திருக்கக் கூடும். கணவனின் கையை வந்து பற்றிய
ராஷ்மிகா, “தேங்க்ஸ்” என்று அவன் எல்லோரையும் காப்பாற்றியதற்கு
சொல்ல, “ஸாரி” என்றான் அஸ்வின்.

இது எல்லாம் தன்னால்தானே நிகழ்ந்தது என்று நினைத்து. மனைவி
அழுது முடிக்கும்வரை காத்திருந்த ஹர்ஷா, அவளை விலக்கி, அவளின்
முகம் பார்த்து கண்களைச் சிமிட்ட, “ரொம்ப முக்கியம். ஏன்டா ஃபோனை
ஸ்விட்டு ஆப் பண்ணே?” ஹர்ஷாவை அடித்தவள் அப்போது தான்
அவன் உள்ளங்கையில் இருந்த பெரிய கட்டைப் பார்த்தாள்.

“என்ன ஆச்சு?” கீர்த்தி வினவ,

“ஒன்னுமில்ல சின்னதா ஒருஅடி” என்றவன் எழ, கீர்த்தியும் எழுந்தாள்.

“என்ன நடந்துச்சு? நீ ஏன் ஃபோனையே எடுக்கல அஸ்வின்?” நாகேஷ்வரன் வினவ, அஸ்வின் அனைத்தையும் சொல்ல
ஆரம்பித்தான்.

அங்கு சென்று சிசிடிவியில் பார்த்துக்கொண்டு ஓடியது வரை அஸ்வின்
சொல்ல, ஹர்ஷா மேலே சொன்னான்.

உள்ளே லிப்டிற்குள் நுழையும்போதே வித்தியாசமாக ஆபிஸ்
லிப்டிற்குள் ஒருவன் நிற்பதைக் கவனித்தபடியே உள்ளே சென்று அவன்
பின்னால் நின்றான். பின் ஏதோ யாழ் சொன்னதிற்கு பதிலளித்தவன்
அவனைக் கவனிக்க அவன் ஏதோ செய்வது தெரிந்தது. திடீரெனத்
திரும்பியவன் ஹர்ஷாவைக் கத்தியால் குத்த வர, அதிர்ந்த ஹர்ஷா
நகர அவன் குறிதப்பியது.

யாழ்மொழியோ பயத்தில அழுது கத்த ஆரம்பித்தாள். அவன் அடுத்து
மேலும் ஹர்ஷாவைத் தாக்கப் பாய, ஹர்ஷாவோ கத்தியை அப்படியே
தன்கைகளால் அழுத்தி உடும்புப்பிடி பிடித்து விட்டான். அவனால்
இழுக்கவும் முடியவில்லை, இறக்கவும் முடியவில்லை. கையில் இரத்தம்
வழிந்த போதும் ஹர்ஷா கையைத் தளர விடவில்லை.

யாழ்மொழியோ, ஹர்ஷா கையில் வழிந்த இரத்தத்தில் மயக்கத்திற்குச்
செல்ல, அவனோ இன்னொரு கையால் யாழ்மொழியைத் தாக்கவர,
ஹர்ஷா அவனது கால்முட்டியில் உதைத்து, அவனது காலை உடைத்து
விட்டான்.

வலியில் அலறியபடி அவன் கீழே விழ, கத்தியும் கீழே விழுந்தது. அதே
சமயம் லிப்ட்டும் திறந்தது. வெளியே நின்றிருந்த அஸ்வினைக்
கண்டவன் வெளியேவர, “மாமா… யாழ் பயத்துல மயங்கிருச்சு.
யாராவதைக் கூப்பிடுங்க” என்று பதற,

மகளைக் கையில் வாங்கிய அஸ்வின், “ஹர்ஷா இரத்தம் வருது பாரு.
கையை தொங்க போடாம மடக்கிப் பிடி!” என்றவாறே, மகளை
ஒருகையில் தாங்கிக்கொண்டு, ஹர்ஷாவின் கையையும்
பிடித்திருந்தான்.

யாருக்கோ டீம் டைரக்டர் ஃபோன் செய்ய, அடுத்த ஐந்து நிமிடத்தில்
டாக்டர்ஸ் வந்து யாழ்மொழியையும் ஹர்ஷாவையும் கவனித்தனர்.
அதற்குள் எல்லாவற்றையும் அஸ்வின் ப்ளான் போட்டுவிட்டான்.
வந்திருந்த டாக்டரிடம் சொல்லி லிப்டிற்குள் விழுந்து கிடந்தவனிற்கு
மயக்க மருந்து கொடுத்து, அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸில்
முகத்தை மூடி ஏற்றிச் சென்றனர்.

அங்கு போலீஸ், ப்ரஸ் என்று சூழ, விஷயம் அரசல்புரசலாக வெளியே
வந்தது. அது அஸ்வினிற்குச் சாதகமாகச் சென்றது. அடுத்து முழுதாக
எதுவும் வெளியே செல்லக் கூடாதென்று நினைத்த அஸ்வின்தான்
ஜாமரை வைக்கச் சொன்னது.

அதாவது பொன்னுரங்கத்திற்கு, அஸ்வின் எல்லோரையும் ஒரே
இடத்தில் பத்திரமாக வைக்கும் வரை எதுவும் வெளியே செல்லக்கூடாது
என்று நினைத்தான். யாழ்மொழி விழித்த பிறகு டாக்டர்கள்
பரிசோதனை செய்து விட்டுக் கிளம்ப, “தேங்க்ஸ் ஹர்ஷா!” என்றான்
அஸ்வின் மகளைப் பார்த்தபடி.

அவளிற்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றியதிற்கு. “ஸாரி ஹர்ஷா…
என்னாலதான்” என்று மன்னிப்பும் கேட்டான் அஸ்வின்.

“ஆமா எப்படிக் காப்பத்துன? எப்படி டக்குனு டிப்ண்ட் பண்ண?” அஸ்வின்
விசாரிக்க,

“மாமா,,, நான் கராத்தே ப்ளாக்பெல்ட்” ஹர்ஷா காலரைத் தூக்கிவிட,
அங்கு வந்த சில பெண்தோழிகள் அவனை அழுகை வராத குறையாக
விசாரித்து விட்டுச் சென்றனர். யாருக்கும் தெரியாமல் ஒரு
ஆம்புலன்ஸை வரவழைத்து மறைமுகமாக ஹர்ஷா ஆபிஸைத் தாண்டி
போய் ஏறினர் மூவரும்.

எந்த செய்தியும் வெளியே வராமலிருக்க அஸ்வின் அவ்வளவு
ஜாக்கிரதையாக இருந்தான். அப்போதுதான் காரிலேயே தனது ஃபோன்
இருப்பதை அஸ்வின் உணர்ந்தான்.

ஆம்புலன்ஸில் ஏறிய யாழ் தந்தை மடியிலிருந்து இறங்கி, “மாமா ப்ளட்
ஸ்டாப் ஆகிடுச்சா?” அக்கறையாக வினவினாள்.

“யெஸ் குஜிலி!” என்ற ஹர்ஷா அவளைத் தன்மடியில் அமர்த்திக்
கொண்டான். வீடு வந்ததும் அஸ்வின் முன்னால் இறங்கி சிவகுமார்
செய்த உதவிகளுக்கு அவரைக் கட்டிக் கொண்டான்.

அனைத்தையும் கேட்ட அனைவரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
“எல்லாம் திருஷ்டிதான்” என்ற செல்வமணி உள்ளே சென்று ஒரு
படியில் உப்பு மிளகாயை எடுத்து வந்து அனைவருக்கும் சுற்றித்
தனக்கும் சுற்றினார்.

வேலையாளிடம் தந்து அதை நெருப்பில்போட சொன்னவர் அங்குவர,
“எனக்கு ஒரு வேலையிருக்கு. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு
வரணும்” என்று எழுந்தான் அஸ்வின்.

அவனின் கையைப் பற்றிய ராஷ்மிகா, “வேணாம் அஸ்வின்… என்னப்
பண்ண போறேன்னு தெரியும். தயவு செஞ்சு வேண்டாம்!” அவனிற்கு
மட்டும் கேட்கும் குரலில் கெஞ்சினாள்.

“அவனை என்னால சும்மா விடமுடியாது ராஷ்மி” அஸ்வினின்
கோபத்தை உணர்ந்த ராஷ்மிகா, பொன்னுரங்கம் இவன் எதிரில்
நின்றால் என்ன ஆகும் என்பதையும் அறிந்தாள்.

“நம்ம செய்யறது நம்ம பொண்ணை பாதிக்கும் அஸ்வின்” ராஷ்மிகா
சொல்ல,

“ஆனா, அவனவன் பாவத்திற்கு தண்டனைனு ஒன்னு இருக்கே!”
அஸ்வின் கேட்க, ராஷ்மிகாவால் பதிலளிக்க முடியவில்லை.

நாகேஷ்வரனும் மகனை அறிந்தவராக, “அஸ்வின் இப்போதைக்கு
எதுவும் வேண்டாம்” என்று சொல்ல அஸ்வின் அமைதியாய் அமர்ந்தான்.

ரிஷி வந்து கார் சாவியையும் அஸ்வின் ஃபோனையும் தர, “ரொம்ப
தேங்க்ஸ் ரிஷி!” அவனைக் கட்டிப்பிடித்து அனுப்பினான்.

அன்று இரவு அனைவரும் அங்கேயே தங்க, போலீஸும் காட்ஸும்
அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தனர். அடுத்தநாள் காலை
பொன்னுரங்கம் இறந்துவிட்ட செய்தி அனைவரையும் எட்ட, சாப்பிட்டுக்
கொண்டிருந்த அஸ்வினை, ராஷ்மிகா பார்த்தாள்.

“ராஷ்மி, புதினா சட்னியை எடுத்து வை!” அஸ்வின் கேட்க, அவனுக்கு பரிமாறியபடியே, “நீதானே அஸ்வின்” காதருகில் வினவினாள்.

“எது?” எதுவும் தெரியாதது போல, கணவன் கேட்க,

“உனக்கு ஒன்னும் கேக்கலை பாரு…” அவன் காதைக் கடித்தவள், “ஐ
நோ அபௌட் யூ!” என்றபடி அவள் வேலையைப் பார்க்கச் சென்றாள்.

ஆம்! அஸ்வின்தான், அமைச்சரின் பி.ஏவை வைத்தே, நேற்று அவர்
அடித்த விஸ்கியில் பீபீக்கு போடும் டாப்லெட் டோஸை அதிகமாக கலக்க
செய்திருந்தான். இந்தளவு துணிந்தவன் அடுத்த தாக்குதலிற்கும்
தயாராக இருப்பான் என்றே அஸ்வின் அவ்வாறு செய்தது.

நல்லவனாக இருந்தால் அநியாயத்திற்கு நல்லவன். அவனின்
குடும்பத்தின் மீது கை வைத்தால் யார் என்றெல்லாம் பார்க்க மாட்டான்
அவன். இந்த இயல்புதான் அஸ்வின். அவனை அந்த விஷயத்தில்
அவனைப் படைத்தவனே மாற்ற முடியாது.

“அத்தை, நேத்து மாமா கையில அடி பட்டதுக்கு. ஒரு ஆன்ட்டி அழுதாங்க!”
யாழ் போட்டுவிட, “நீ திருந்தவே மாட்டியாடா?” லுக் விட்ட கீர்த்தி,
“வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் இருக்குடா உனக்கு” என்று பல்லைக்
கடித்தாள்.

இரண்டு வாரங்கள் கடந்தது. அஸ்வின் ராஷ்மிகா திருமண நாளும்
நெருங்கியது.