IMG-20210214-WA0021-de88eee7

யாழ்-24

அன்று மதியத்துக்கு மேலே ராஷ்மிகாவை டிஸ்சார்ஜ் செய்ய, அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டிற்கு வந்தவுடன் செல்வமணி சமையற்கட்டிற்குள் புக, அஷ்வின் மனைவியை கைகளில் அள்ளித் தூக்கியேவிட்டான்.

நாகேஷ்வரன் பார்த்தும் பார்க்காமல் தூங்கிக்கொண்டிருந்த பேத்தியை தன்னுடன் அறைக்குள் எடுத்துச்சென்றார்.

அஷ்வின் இரண்டு கையில் அவளை ஏந்த, ஒரு நிமிடம் அதிர்ந்தவள் அவனைப் பார்க்க அஷ்வினோ, அவளை அலுங்காமல் ஏந்திக்கொண்டு
தங்கள் அறைக்குச் சென்றான். அவளை அதேபோல் மென்மையாகப் படுக்கையில் கிடத்தியவன் தலையணையை முதுகிற்கு வைத்து உட்காரவைத்தான்.

அஷ்வின் எழுந்து சென்று கர்டனை அறைக்குள் வெளிச்சம் வர இழுத்து விட, செல்வமணி ஒரு பழச்சாறோடு உள்ளே வந்தார். அன்னை கையில் இருந்து டம்ளரை வாங்கிய அஷ்வின், “நானே குடுக்கறேன்மா” என்றான்.

“நல்ல ரெஸ்ட் எடு ராஷ்மிகா. நைட் இங்கயே டிபன் அஷ்வின்கிட்ட குடுத்து விடறேன்” என்றவர் அலுப்பாக இருக்க கீழேசென்றார்.

அன்னை சென்றபின், கதவை சாத்தியவன் ராஷ்மிகாவின் அருகில் ஜூஸைக் கொண்டுவர, “இல்ல… நானே குடிச்சிக்கறேன்!” அவள் ஜூஸை வாங்க, “சரி”யென்று அவளிடம் கொடுத்தவன், அவள் குடிக்கும் வரை அங்கேயே அமர்ந்திருந்தான். அவள் குடித்து முடிக்கும் நேரம், அஷ்வினின் ஃபோன் அலறியது.

“நிரஞ்சன், நான் இன்னிக்கு வரமாட்டேன். நீயே பேசிடு” என்றுவிட்டு வைக்க,

“எனக்காக இருப்பதா இருந்தா இருக்க வேண்டாம். நீங்க போங்க. நான் பாத்துப்பேன்” ராஷ்மிகா சொல்ல,

“நீயே நல்லா பாத்துக்கிட்டுதான் இப்படி உக்காந்திருக்கியா?” அஷ்வின் கேட்க, அவளோ அமைதியாய் தலைகுனிந்தாள்.
அதில் கடுப்பானவன், அவள் தாடையைப் பற்றி நிமிர்த்தி, “இது, நீ இல்ல ராஷ்மி. இந்நேரம் நான் பேசுனதுக்கு திருப்பி பேசற ராஷ்மிகா இது இல்ல. நீ, ஏன் இப்படி டிப்ரஸ்டா இருக்க. மயக்கம் போட்டு விழற அளவுக்கா உடம்பை வச்சிருப்பே?” அஷ்வின் அதட்ட,

“ஆமா, அஷ்வின். நான், நானாவே இல்ல. ஆனா, இப்போ இல்ல. இந்த நாலஞ்சு வருசமா நான் நானாவே இல்லை. உன்னைப் பாக்காம நான் மட்டும் என்ன சந்தோஷமாவா இருந்தேன்?”

“எல்லார்கிட்டையும் சிரிச்சு பேசுனனே தவிர, சந்தோஷமா இல்ல. யாழ் மட்டும்தான் சந்தோஷமா இருப்பா. அதுவும் அவ சிரிக்கும் போது, சாப்பிடும் போது தூங்கும் போது நடக்கும் போதுன்னு எல்லாமே நீயே தான். நான் உன்னை நினைக்காம இருந்த செகண்டே இல்ல அஷ்வின். அதுவும் யாழ் பிறக்கும்போது என்னால உன்னை கூப்பிடவும் முடியல. வீம்பா இருந்தேன்” என்று ஆதங்கத்தில் சொல்லச்சொல்ல அவளின் குரல் கலங்கியது.

“யாழ் வெளில வந்தப்போ கூட ‘அஷ்வின்’னு சொல்லிட்டுதான் மயங்கி இருக்கேன்” டாக்டர் அவளிடம் சொல்லிய ஞாபகத்தில் கணவனிடம் எல்லாவற்றையும் கொட்டினாள்.

“அன்னிக்கே என்னை ஒரு அறை விட்டு கூட்டிட்டு வந்திருக்கலாம்ல அஷ்வின். இல்ல என்கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருக்கலாம்ல. அதை விட்டுட்டு என்னை ஏன் அப்படியே விட்டுட்டு வந்த” என்றவள் அவன் தோளில் சாய்ந்தாள்.

தொண்டையை விழுங்கி அழுகையை அடக்கியவள், “என்னை மன்னிச்சு ஏத்துக்கக்கூட உன்னால முடியல அஷ்வின். நான்
வேணாம்னு சொல்லிட்டு நம்ம பொண்ணை மட்டும் நீ அப்படித் தாங்கறே. நான் இல்லாமலா யாழ் வந்துட்டா உனக்கு?” அவள் கேட்க அஷ்வினின் முகத்தில் புன்னகை அரும்பியது. பெற்ற மகளிடம் கூட தன்னை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் மனைவியை நினைத்து.

“என் மேலயும் நிறைய தப்பு இருக்கு ராஷ்மி. நீ அப்ப சின்னபொண்ணு. நான் சொல்லி புரிய வச்சிருக்கனும். நீ என்னை நம்பலையேன்ற கோபத்துல நானும் வந்திருக்கக் கூடாதுடி” என்றவன்,

“நீ யாழ்மொழின்னு பேர் வச்சிருக்கும்போதே தெரியும். நீ என்னை மறக்கலைன்னு..” அஷ்வின், தன் தோளில் சாய்ந்திருந்த மனைவியின் தோளை அணைக்க, அவ்வளவு நேரம் அழுகையை அடக்கி இருந்தவள் அவன் தோளில் புதைந்து அவனைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டாள்.

அவளின் தலையை ஆறுதலாய் தேய்த்தவன், “உடம்பு சரியில்லாமல் ஏன் அழறே?” கேட்டவன் அவளைத் தன்னிடமிருந்து விலக்கி, “பேசாம ரெஸ்ட் எடு” என்று கட்டிலில் இருந்து எழுந்தான்.

“சாப்டியா அஷ்வின்?” அவள் வினவ,

“இனி தான். எதையும் நினைக்காம தூங்கு” அவளைப் படுக்க வைத்து விட்டு அறையிலிருந்து வெளியே வந்தான்.

அதற்குள் செல்வமணி மகளிடம் சொல்லி ராஷ்மிகா மயங்கிய விஷயம் ஹர்ஷாவிற்குச் செல்ல, செய்தி அப்படியே நூல் பிடித்து அனைவரையும் எட்டியது. மாலையில் கண்விழித்த ராஷ்மிகா உடம்பு பரவாயில்லாமல்
இருக்க, கீழேயிறங்கி வந்தவள் மொத்த குடும்பத்தையும் கண்டு,

“இவங்களுக்கு சொல்லிட்டாங்களா?” மனதினில் நினைத்தவள் படி இறங்கினாள்.

“என்னடா உடம்பு இப்ப எப்படி இருக்கு?” சிவகுமார் கேட்க,

“நல்லா இருக்கு பெரியப்பா. ஏன் பெரியப்பா இதுக்காக கடையில வேலையை விட்டுட்டு ஓடி வந்திங்களா?” என்று கேட்டாள். சிவகுமார், தம்பி இறந்ததில் இருந்து அவருடைய கடையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

“வேலை எல்லாம் உனக்கு அப்புறம்தான்டா. ஏன் ஒழுங்கா சாப்பிடறது இல்லையா?”

“இல்ல பெரியப்பா”

“இந்தப் பொண்ணு இப்படித்தாங்க.காலேஜ்ல இருந்தே டயட் அது இதுன்னு இருக்கும். துணிக்கடைக்குப் போனா கண்ணாடி முன்னாடி நின்னு ஃபோட்டோ எடுத்துட்டு ஒல்லியா இருக்கேனான்னு கேக்கும்” என்று சிவகுமார் செல்வமணியிடம் சொல்ல, அஷ்வினின் பார்வையும் ராஷ்மிகாவின் பார்வையும் சந்திக்க, அஷ்வின் தனது சிரிப்பை தொண்டையில் வைத்து அடக்கிக்கொண்டிருந்தான்.

அவனிற்கு ராஷ்மிகாவிடம் இருந்து பிடுங்கிய மொபைலில் பார்த்த அவளது புகைப்படம் ஞாபகம் வர, ராஷ்மிகா அவனது மூளையைப் படித்துவிட்டாள். ‘அய்யோ கடவுளே!’ மனதினுள் நினைத்தவள் பேச்சின் திசையை மாற்றி வேறுபக்கம் கொண்டு சென்றாள்.

“மாமா, நாளையில இருந்து கீர்த்தி அவளுக்கு பிடிச்ச பிசினஸ் பண்ணட்டும். அது உங்க குரூப்ஸா இருந்தாலும் சரி” ஹர்ஷா சொல்ல, அனைவரும் அவனை வித்தியாசமாகப் பார்த்தனர்.

ஏனென்றால், அவன் முன்னால் போட்டிருந்த ரூல்ஸே வேறுதானே!

“இது யாருக்காகவும் எடுத்த முடிவு இல்ல. அவளுக்கு விருப்பம் என்னவோ அதையே அவள் பண்ணட்டும். நான் தலையிடமாட்டேன்” சாதரணமான இன் முகத்துடன் சொல்ல, எல்லோரும் அவனையே கண் இமைக்காமல் பார்த்தனர்.

“நைட் இங்கதான் எல்லோருக்கும் சாப்பாடு” நாகேஷ்வரன் சொல்ல, பெண்கள் சமையலில் இறங்க கீர்த்தியும், ராஷ்மிகாவும் சிறிய சிறிய உதவிகளைச் செய்து கொண்டிருந்தனர்.

எல்லோரும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்ப, ஹர்ஷா ஆபிஸில் இருந்து நேரே வந்ததால் தனது பைக்கை எடுத்தான். வரும்போது கல்யாணி, சிவகுமார், விஜயலட்சுமியோடு வந்த கீர்த்தி, ஹர்ஷாவின் பைக்கில் சென்று, “நான் உன்கூட வரேன்” என்றவள், அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவனது ராயல் என்ஃபீல்டில் ஏறினாள்.

வண்டியில் செல்லும் வழியில் சிறிதுநேரம் அமைதியாக இருந்தவள், “உண்மையாவே எனக்காகவா?” என்று கேட்டவளிடம்,
“ம்ம்” என்றான்.

‘பெரிய இவன். வாயைத் திறக்கமாட்டான்’ என்று முணுமுணுத்தவள் தலையைத் திருப்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

வீடு வர, முதலிலேயே வந்த இவர்கள், கீர்த்தி கையில் இருந்த சாவியை கொண்டு கதவைத் திறந்தனர். கீர்த்தி எதுவும் பேசாமல் உள்ளே செல்ல ஹர்ஷாவும் எதுவும் பேசவில்லை.

உள்ளே சென்றவள் திரும்பி “நீ வெளில நில்லு. நான் ட்ரெஸ் மாத்தணும்” என்றவள் கதவை மூட வர, “என் ரூமுக்குகூட என் கண்ணு இருக்கும்” ஹர்ஷா அவளை முழுதாக அளந்து கொண்டு சொல்ல,

“ரொமான்ஸ்கு ட்ரை பண்றியா? இன்னும் நல்லா வேற ட்ரை பண்ணு” கதவைச் சாத்திவிட்டாள்.

உள்ளே சென்றவள் வேண்டுமென்றே நேரம் செய்ய, பெரியவர்கள் வந்து சேர்ந்தனர். வெளியே நின்று கொண்டிருந்தவனை விசித்திரமாகப் பார்த்த விஜயலட்சுமி, “என்ன கதவுகிட்ட நின்னு என்ன பண்ற?” என்று வினவ,

“ஹிஹிஹி! சும்மாதான்மா” அசடு வழிந்தவனை பைத்தியத்தைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொண்டு போனார் விஜயலட்சுமி.

கீர்த்தி கதவைத் திறந்துவிட்டு அவன் முகம் பார்க்காமல் அவள்
பாட்டுக்கு உள்ளே செல்ல, “திமிரு உடம்பு எல்லாம் திமிரு” என்று நினைத்தவன், “பேபி!” என அழைத்தான் மனைவியை. அவளோ தூக்கிக் கொண்டையைப் போட்டவள் திரும்பவே இல்லை.

“பேபி!” மறுபடியும் அழைக்க, ‘ம்கூம்’ ஒரு ரெஸ்பான்ஸும் இல்லை.

“கீர்த்தி!” அழைக்கத் திரும்பினாள்.

“என்ன?”

“ஏன்டி எவ்வளவு டைம் கூப்பிடறேன்? நீ பாட்டுக்கு நின்னா என்ன அர்த்தம்” என்று அவளிடம் சென்று தோளைத் திருப்பிக் கோபமாகக் கொண்டான்.

“என் பேர் பேபி இல்லை. கீர்த்தினு அர்த்தம்” என்றாள் தன் மேல் இருந்த அவளின் கையை எடுத்தபடி.

“நான், உன்னை அப்படித்தானே கூப்பிடுவேன்?”

“அது முன்னாடி, அதை முன்னாடியிருந்த கீர்த்தி நம்புனா” என்று மேற்கொண்டு பேச வந்தவளின் வாயில், தன் ஆபிஸ் பேக்கில் இருந்த ஸ்வீட்டை எடுத்துவந்து அடைத்தான்.

அந்தச் அழகான உதட்டின் உள்ளே ரசகுல்லாவை திணித்தவன், அவள்
அனுமதியில்லாமல் அவள் இதழை நோக்கிக் குனிந்து அங்கு தன் வேலையைக் காட்ட, கீர்த்திக்கு அவனது அவசரச்செயலில் கண்கள் தாமாக மூடியது.

நான்கைந்து வருடத்திற்கு முன்பு எதை உணர்ந்தாளோ அதை இன்றும் உணர வைத்தான் ஹர்ஷவர்தன். ஆனால், இன்னும் வன்மையாக மென்மையுடன் கையாண்டு.

அவளிடமிருந்து விலகியவன் வாயில் ரசகுல்லா இடம் பெயர்ந்து இருக்க, அவன் செய்த வேலையில் கோபம் கொண்டவள், “எரும! எரும! உனக்கு வேற வேலையே இல்லையாடா?” அவனை சரமாரியாகத் தாக்கினாள் கீர்த்தனா ஆதர்ஷினி.

“இப்ப சொல்லு, உனக்கு என் மேல இருக்க லவ் குறைஞ்சிருக்கா? அன்னிக்கு இருந்த மாதிரியே தான் கீர்த்தி எனக்கு இன்னிக்கும் அதே ஃபீல் இருக்கு” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான்.

உடையை மாற்றிவிட்டு வெளியே வந்தவனின் கண், கீர்த்தியைத் தேட, அவளோ ரசகுல்லா டப்பாவையே மடியில் வைத்து ஒவ்வொன்றாக பெட்டில் அமர்ந்தபடி உண்டு கொண்டு இருந்தாள்.

“இந்நேரம் நான் கேட்டதுக்கு வேற எவளாவதா இருந்திருந்தா, நெஞ்சுல சாஞ்சு அழுதிருப்பா. நானும் அப்படியே ஒரு.டூயட் பாடியிருப்பேன்” ஹர்ஷா அலுத்துக்கொள்ள, அதையும் கேட்கும் கேட்காதது போல பாகில் ஊறிய ரசகுல்லாவை தன் வாயில் அழகாகத் தள்ளிக்கொண்டு இருந்தாள் கீர்த்தி.
‘இது சரி பட்டு வராது’ என்று நினைத்த ஹர்ஷா தலையணையில் தலையை சாய்க்க கடைசி ரசகுல்லாவைத் தவிர அனைத்தையும் உண்டு முடித்தவள்,

“ஆமா எதுக்கு ஸ்வீட்?” வினவ,

“ஆஆங்ங்! நான் இன்னொரு கல்யாணம் பண்ணப்போறேன். அதுக்கு..” என்றவனை கூர்ந்து பார்த்த கீர்த்தி வாய்விட்டுச் சிரித்தாள்.

“சரி, ஆல் தி பெஸ்ட்” கீர்த்தி சொல்ல எழுந்தமர்ந்தவன், “வர, வர.. ஓவரா போறடி நீ” என்று காய்ந்தான்.

“நீ சொன்னதுக்கு விஷ் பண்ணது ஒரு தப்பா?” உதட்டைப் பிதுக்கிக் கேட்டாள் அவனின் அருமை மனையாள்.

“அதெல்லாம் இல்ல. என்னோட நெக்ஸ்ட் கேமிங் இரண்டு வாரத்துல டென்மில்லியன் மெம்பர்ஸ் டவுன்லோட் பண்ணி மாஸிவ் ஹிட்” என்று தலையை ஸ்டைலாக தலையைக் கோதியபடி சொல்லியவன்,

“எல்லாரும் பொண்டாட்டி வந்த ராசின்னு சொன்னாங்க. அதிவும் உண்மைதானே” அவள் கீழுதட்டை அழகாகத் தன் விரல்களால் பிடித்து விட்டு, அவளது இதழைத் தொட்ட தன் விரல்களுக்கு முத்தமிட்டான்.

“நான் வந்த ராசிங்கறதைவிட, உன் திறமைதான்” என்றாள் கீர்த்தியோ மனதார.
“இல்ல..நீ எனக்கு ட்ரெஸ் வாங்கித்தர ஃபோன் பண்ண ஞாபகம் இருக்கா?” அவன் கேட்க அதில் என்ன என்பதுபோல் கீர்த்தி யோசித்தாள்.

“அன்னிக்குதான், நான் அந்தக் கேமிங்கை தர வேண்டியது. நீ கூப்பிட்டப்ப வந்துட்டேனா. அதுக்கு அப்புறம்தான், நைட் நான் இன்னொரு டைம் செக் பண்ணப்போ ஒரு பெரிய எரர் தெரிஞ்சிச்சு. அதுக்கு அப்புறம் எக்ஸ்ட்ரா ஆட் பண்ணி எரர் எடுத்தேன்” என்றவன் மனைவியின் முகத்தை கூர்ந்து கவனித்தான்.

“நீ என் பக்கத்துல இருந்தா, நான் நானா இருக்க முடியலடி. அதான் கிஸ் பண்ணேன் ஸாரி” என்றவன் திரும்ப, “டேய்!” என்ற அவளின் அதட்டலில் என்ன என்பது போலத் திரும்பினான் ஹர்ஷா.

கடைசியாக இருந்த ரசகுல்லாவை எடுத்து தன் வாயில் போட்டவள் ஹர்ஷாவின் அருகில் முட்டி போட்டபடி உட்கார்ந்து, அவனின் இதழை நோக்கிச் சென்றாள். ஆண்மகனே என்றாலும் மனையாளின் செயலில் அவனிற்குமே ஒரு அதிர்வு உள்ளுக்குள் எழுந்து உடலில் பரவியது.

அவனை தன் காதலில் மயங்கச் செய்ய, அவள் தந்த இதழ் முத்தம், இறுதியில் அவனால் தலைமை தாங்கப்பட, வெளியே இருந்து வந்த குளிர் காற்று இருவரையும் பார்த்து வெட்கியது.

நீண்டநேரம் கழித்து அவனிடம் இருந்து விலகியவள், “மூச்சு முட்டுதுடா!” என்று அவனைக் குத்தினாள்.

“அஹான்!” அவளின் கையைப் பிடித்து இழுத்தவன் அவளைக் கீழே
கிடத்தி, தன் அடுத்தக் கட்ட தேடலில் இறங்கினான். இருவரும் தங்கள் ஐந்து வருடக் காதலின் ஆசைகளையும் தேடல்களையும் காதலாய் ஆரம்பிக்க, அங்கு பேச்சுக்கு வேலையே நின்றது. கீர்த்தி ஹர்ஷாவிற்குள் காதலோடு பாகாய் உருகிக் கரைந்து கொண்டிருந்தாள்.

இங்கே

சமையலறையில் அன்றிரவு அட்டகாசம் செய்து கொண்டிருந்தான் அஷ்வின். சிறிது நேரத்திற்கு முன்பு மனைவி ஆரம்பித்ததுதான்.

“யாழ், இங்க வந்ததுல இருந்து பாலே குடிக்கல வா” ராஷ்மிகா ஆரம்பிக்க,

“நோ!” என்றவள் ஷோபாவில் உட்கார்ந்திருந்த அஷ்வினின் முதுகின் மேல் சாய்ந்து அவனைக் கட்டிக்கொண்டு, “அப்பா ப்ளீஸ்ப்பா, மில்க் வேணாம்” என்று சிணுங்க,

“நீ யார்கிட்ட சொன்னாலும் இன்னிக்கு நீ குடிக்காம தப்பிக்க முடியாது” என்று மகளிடம் ராஷ்மிகா வந்தாள்.

“நீ மட்டும் பாலே குடிக்க மாட்டிங்கம்மா” அன்னையிடம் மல்லுக்கு நின்றவள், “அப்பா. விஜிபாட்டி குடுக்கிற டம்ளரை அம்மா எப்பவுமே பின்னாடி போய் ஊத்திடுவாங்கப்பா” தந்தையிடம் போட்டுக்குடுத்தாள்.

“சரி, அப்பா வேற ஒரு எனர்ஜி ட்ரிங்க் தர்றேன். பாப்பா ரொம்ப
ஸ்ட்ரென்ந் ஆகிடுவிங்க. அது நான் நீங்க அம்மா மூணு பேரும் குடிக்கலாம்” அஷ்வின் சொல்ல,

“சூப்பர்பா! ஓகே.. ஓகே” என்று யாழ் குஷியில் குதித்தாள்.

சமையலறைக்குள் நுழைந்த அஷ்வின் எதையெதையோ செய்தான்.

“யாழ்குட்டி, நீங்க போய் நிலா எங்க இருக்குன்னு பாத்துட்டு வாங்க” அஷ்வின் சொல்ல மணியாய் தந்தையின் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஓடினாள் சிறியவள். மகள் சென்றபின் மடமடவென்று மூன்று க்ளாஸை எடுத்தவன், முன்னாடியே காய்ச்சி இருந்த பாலை டம்ளரை ஊற்றி அவன் செய்திருந்த கலவையை அதில் கலக்கினான். மகள் வந்துவிட யாழைத் தூக்கி சமையல் மேடையில் உட்கார வைத்தவன், ஒரு க்ளாஸை எடுத்து அவளிற்கு தந்து,

“இது குடிச்சா இனி ஸ்ட்ராங் ஆகிடுவிங்க” என்று மசாலா பாலைக் கொடுத்தான்.

எதுவும் அறியாத மகளோ அதைக் குடித்துவிட, ராஷ்மிகாதான் பாலை வைத்துக்கொண்டே முகத்தை சுளித்தபடி நின்றிருந்தாள். “இப்ப குடிக்காம பெத்த பொண்ணுகிட்டையே அசிங்கப்படப்போற” அஷ்வின் அவளை சீண்ட, அதில் ரோஷம் வந்தவள் ஒரேமூச்சில் பாலைக் குடித்து முடித்தாள்.

பாலைக் குடித்து முடித்தவள் பாலின் சுவை போக, அங்கிருந்த ஜக்கை எடுத்து தண்ணீரை வாயில் ஊற்றினாள்.
யாழ்மொழி குடித்து விட்டு டி.வியைப் பார்க்க ஓட, அஷ்வினோ மனைவியைப் பார்த்து நக்கலாய் சிரித்தான்.

அவனை பொய்யாய் அவள் முறைக்க லேசாய் குவிந்திருந்த உதட்டின் மேல் மசாலாபால் ஒட்டியிருந்த இடத்திற்கு அஷ்வினின் கண்கள் சென்றது. அவள் அருகில் சென்று குனிந்த அஷ்வினைக் கண்டவள் அதிர்ந்து லேசாகப் பின்னால் நகர,

“அடடா! ரொம்ப எக்ஸ்பக்ட் பண்ணாத. அந்த சீன்லாம் நான் இங்க வைக்கல” என்று அவளின் உதட்டின் மேலிருந்த பாலை தன் பெருவிரலால் துடைத்துவிட்டான்.

அவனின் வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தவள் திருப்பிக் கொண்டு போக பின்னாலேயே வந்தவன், “உனக்கு இப்ப நல்ல ஷேப் ராஷ்மி” என்று அவளது இடையைப் பார்த்துச் சொல்ல, நடந்து கொண்டிருந்தவள் விலுக்கென்ற உணர்வில் அப்படியேத் திரும்பி நின்றாள்.

அவளது முறைப்பை கண்டு கொள்ளாதவன், “ஆனா, நீ சப்பியா இருந்தப்பதான் அழகா இருந்த” என்று சாதரணமாக சொன்னவன் ஹாலிற்கு வந்து மகளைத் தூக்கிக்கொண்டு அறைக்கு நடக்க ஆரம்பித்தான்.

சில வேலைகளை முடித்துவிட்டு மேலே வந்த ராஷ்மிகாவிற்கு, அஷ்வினின் வயிற்றின் மேல் மகள் உட்கார்ந்து கொண்டிருந்ததைக் கண்டு மனம் சுருக்கென்றது. தன் தந்தையின் நினைவுவர மனதில் சிறியவலி ஏற்பட்டது அவளிற்கு.
அதேசமயம் மகளிடம் கூடக் கொஞ்சம் பொறாமை தோன்ற, அவளோ என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள்.

“அம்மா, வாம்மா.. விளையாடலாம்” யாழ் அழைக்க, “நீயே, உன் அப்பாகூட விளையாடு” கடுப்பில் சொன்னவளை,

“பேட் மம்மி!” என்றவள் தந்தையிடம் விளையாட்டைத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் யாழ்மொழி தூக்கத்தைத் தழுவ, தன்னை இறுகப் பிடித்துத் தூங்கிக்கொண்டிருந்த மகளை அழகாக விலக்கி பெட்டில் படுக்க வைத்த அஷ்வின் பால்கனியில் நின்று கொண்டிருந்த மனைவியை தேடிச்சென்றான்.

“ராஷ்மி” அவன் மெதுவாய் அழைக்க,

“அப்பா ஞாபகமா இருக்கு அஷ்வின்” என்றாள் ராஷ்மிகா. அவள் அழவில்லை. ஆனால், அது மனதைத் தாக்கியது.

அவளைத் தோளோடு அணைத்து உள்ளே அழைத்து வந்தவன், “நான் உனக்கு இருக்கேன் ராஷ்மி. எல்லாவுமா நான் இருக்கேன்” என்று அவளது நெற்றியில் இதழைப் பதித்தான்.

“என்னால யாழ்கிட்ட கூட உங்களை விட்டுக் குடுக்க முடியல அஷ்வின் ரொம்ப பொஸசிவ்வா இருக்கு” அவனை அணைத்து அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.
“யாழ் நம்ம பொண்ணுடி! பொண்ணு கிட்டையே பொறாமையா?” கேட்டு நக்கலடித்தவனை இன்னும் இறுக அணைத்தாள்.

அவளது அணைப்பே, ‘நீ எனக்கு மட்டும்தான் அஷ்வின்’ என்று சொல்லாமல் சொல்லியது. அவளை அணைத்து வந்து, தன் நெஞ்சில் சாய்த்து உறங்க வைத்தவன், இன்னொரு பக்கம் கையின் மேல் வைத்து மகளை அணைத்திருந்தான்.

மனைவி, மகள் இருவரின் கையும் நீயா நானா என்பதுபோல் அவனைப் பிடித்திருக்க, அவனுக்கு இரு குழந்தைகளையும் பார்த்து சிரிப்புதான் வந்தது.

அன்றைய இரவில் ராஷ்மிகா நிம்மதியோடு தூங்கினாலும் அவளை ஒன்று உறுத்தியது. அதை அஷ்வினும் அறிவான். அதற்கான சரியான நேரம் பார்த்து காத்திருந்தவன் அவர்களது திருமண நாள், வர இருப்பதை உணர்ந்து அன்றைய தினத்தைத் தேர்ந்தெடுத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!