யாழ்-27

யாழ்-27

வித்யுத்தின் கால்களும், அஷ்வினின் கால்களும் ஒருசேர செந்திலை நோக்கி அடியெடுத்து வைக்க, செந்திலின் இதயம் பயத்தில் பன்மடங்காகத் துடித்து, தொண்டைக் குழியில் வந்து அடைத்து நின்றது.

இருவரும் கன்னை லோட் செய்ய, “வேணாம். விட்ருங்க” என்று கத்தி அலறியவனால் காலில் அடிபட்டிருந்ததால் எழுந்து ஓடக்கூட முடியவில்லை.

“என் பொண்டாட்டிக்கும் குழந்தைக்கும் ஏதாவது ஆகியிருந்தா?”, “என் பொண்ணுக்கும் பேத்திக்கும் ஏதாவது ஆகியிருந்தா?” வித்யுத், அஷ்வின் இருவரும் ஒருசேர வினவி அவனின் இருபக்கங்களிலும், நெற்றியில் துப்பாக்கியை வைக்க, செத்தேவிட்டான் பயந்தாங்கொளி.

இருவரின் கால்களையும் பிடித்தவன், “ஐயோ விட்ருங்க. இனி உங்க குடும்பத்துல யாரு பக்கமும் திரும்பமாட்டேன். என்னை எதுவும் பண்ணிடாதீங்க” பயத்தில் அரண்டு கத்தியவன், இருவரின் கால்களையும் இருபக்கமும் பிடிக்க,

அதுவரை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த த்ரூவ், “ஜோக்கர்!” என்று உச்சரித்தவன் இதழ் பிரிக்காமல் சிரித்தான்.

அனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர், செந்தில் உட்பட. வாய்விட்டுச் சத்தமாக சிரித்தவன், “டாட்! ஹீ இஸ் எ கவோர்ட் ஜோக்கர். லைக் சும்மா ஊருக்குள்ள ரீல் விடற பார்ட்டி. லெட் திஸ் ஜோக்கர் கோ. இவன் பிஸ்டல் அளவுக்கு வோர்த் இல்ல. ஐ வில் ஹேன்டில் திஸ்” என்றிட, அவனோ த்ரூவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எழ, இரண்டு பிஸ்டல்களை தூக்கியிருந்த கரங்களும் கீழே இறங்கியது.

‘போ’ என்பதுபோல த்ரூவ் தன் ஒற்றை விரலை அவனைப் பார்த்து அசைக்க, அவன் ஓடியபிறகு, தம்பியிடம் ஓடிச்சென்று தோள்களில் யாழ் சாய்ந்துகொள்ள, “இந்த மாதிரி டைம்ல இப்படி ஓடி வரக்கூடாது” அவன் கடிய,

“என்னை பாக்க வர இவ்வளவு நாளா டா?” தலையை நிமிர்த்திக் கேட்டவளின் இதழ்கள் அழுகையில் பிதுங்க தயாராக இருந்தது.

‘அக்கா’, ‘அக்கா’ என்று அவளின் பின்னாடியே குழந்தையில் இருந்து சுற்றித் திரிந்தவன், அவளை முதல் முறையாக அவள் திருமண செய்தி கேள்விப்பட்டு திட்டி பேசாது இருந்தான். 

திருமணத்திற்கும் வரவில்லை. என்னிடம் சொல்லியிருக்கலாமே என்ற கோபம் அவனுக்கு.

குழந்தை உண்டானதை அவள் குறுஞ்செய்தியில் அனுப்ப, அவனும் குறுஞ்செய்தியிலேயே வாழ்த்தை அனுப்பியிருந்தான். திருமணத்திற்கான வாழ்த்தும் இப்படியே. அவ்வளவு தான் திருமணத்திற்கு பிறகான உரையாடல். அந்தத் கோபம் யாழிற்கும் இருந்தது.

“அதான் வந்துட்டனே” என்றவன் அவளின் பிதுங்கும் இதழ்களை, கன்னத்தில் கைவைத்து சரி செய்ய, அஷ்வின், “த்ரூவ் இவருதான் வித்யுத் வருணன். உனக்கு மாமா” அறிமுகம் செய்ய,

“தெரியும் ப்பா. ஃபோட்டோஸ்ல பாத்தேன்” என்றவன், “நான் த்ரூவ்” தன்னை அறிமுகம் செய்துகொள்ள, இருவரும் கைகளை குலுக்கிக் கொண்டனர்.

அனைவரும் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்ய, வித்யுத் வந்த காரின் கதவு உடைந்திருந்ததால், அவனும் அவர்களுடன் ஏறும்படி ஆனது. ஹர்ஷா மற்ற அனைவரும் அடுத்தநாள் வர இருந்தனர்.

தம்பியுடன் வளவளத்துக்கொண்டே வந்த யாழை, அஷ்வினுக்கு அருகே அமர்ந்திருந்த வித்யுத், பார்வையாலேயே கடித்துக் கொண்டு வர, அவள் வேண்டுமென்றே தம்பியுடன் அதிகமாக பேசத் தொடங்க, அவனும் அவள் பேசுவதை புன்னகையுடனே கேட்டுக்கொண்டு வந்தான்.

ஜூனியர் அஷ்வின் ஆயிற்றே. அதிகம் பேசமாட்டான். விழிகளாலேயே அனைவரையும் அடக்கி வைக்கும் ஆளுமையில் தந்தையையும் மிஞ்சிவிடுபவன். வெளியில் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் காட்டுபவன், குடும்பத்திடம் மட்டும் உருகும் பனிக்கட்டி தான்.

“அக்கா!” என்றவன் அவன் அலைபேசியில் இருந்த புகைப்படத்தை காண்பிக்க, அந்தப் புகைப்படத்தில் இருந்த பேரழகி வஞ்சியவளைக் கண்டவள் இரு புருவங்கையும் ஏற்றி, ‘யார்?’ என்பதுபோல ஆவலும், குறும்புமாக கேட்க, தந்தை தங்களை மிரர் வழியாக அவ்வப்போது கவனித்துக் கொண்டிருப்பதை, அவரை நிமிர்ந்து பார்க்காமலேயே உணர்ந்த த்ரூவ்,

“இது ஒரு தமிழ்நாடு ஐவரி(தந்தம்) சிலைக்கா. வாங்க போறேன். புக் பண்ணியாச்சு. அதுதான் உன்கிட்ட காமிக்கறேன்” அவன் இலகுவாக தன்னவளையும், சிலையையும் ஒப்பிட்டுச் சொல்லி தப்பிக்க, தம்பியின் சாமர்த்தியத்தில் வாயடைத்துப் போனாள் யாழ்மொழி.

“சூப்பரா இருக்குடா. ரொம்ப அழகா செதுக்குன சிலை. சீக்கிரம் வாங்கிடு” யாழ்மொழியும் அவனைப் போலவே சொல்ல, மகனின் வதனமும், வார்த்தைகளும் எளிதாக வெளிக்காட்டாமல் சமாளித்திருக்க, மகளின் வார்த்தை சமாளித்தாலும், அவளின் வதனம் குறும்பைக் காட்டி அஷ்வினுக்கு விஷயத்தை உடைக்க, அவனின் இதழோரங்கள் வரைந்து வைத்தது போல ஒரு இன்ச் புன்னகைத்துக் கொண்டது.

ராஷ்மிகாவோ அருகில் அமர்ந்திருந்தாலும், வித்யுத்திடம் ஏதோ பேசியபடி வந்துகொண்டிருக்க, அது அஷ்வினிற்கு பொறாமையை கிளப்பியது. (இந்த நாவல்ல எல்லாமே பொறாமை புடிச்சதுதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மை டியர் ரீடர்ஸ்)

“இவளுக்கு நான் இருக்கிறதே தெரியாதா?” நினைத்தவன், “ராஷ்மி, வாட்டர் பாட்டில் எடு, டிஷ்யூ எடு, பிஸ்கட் எடு, கர்ச்சீப் எடு” அவளை பேசவிடாது செய்து கொண்டேயிருக்க,

“எதுக்கு கர்ச்சீப். இந்த ஏசில உங்களுக்கு வேர்க்குதா? வேணும்னா கையை பின்னாடி நீட்டி எடுத்துக்கங்க” என்றவள் மீண்டும் மருமகனுடன் பேசிக்கொண்டே வர, மாமனாரின் எண்ணம் புரிந்தவன் அவனைப் பார்த்து நக்கலாய் புன்னகைத்துக் கொண்டு,

“அத்தை! உங்களுக்கு முடி கொஞ்சம்கூட நரைக்கல இன்னும். தலைக்கு என்ன போடுவீங்க” அஷ்வினின் காதோரம் இருந்த இரண்டு நரைமுடிகளைப் பார்த்தபடி வித்யுத் கேட்க,

“அது. சின்ன வயசுல இருந்து வீட்டுல காய்ச்சற எண்ணைதான் மாப்ள” என்ற ராஷ்மிகாவிற்கு தன் சிகையை நினைத்து பெருமையாக இருக்க, ‘கடவுளே இவளுக்கு எல்லா முடியும் சீக்கிரம் நரைக்கணும்’ வேண்டிக் கொண்டான் அஷ்வின்.

ராஷ்மிகா இரும, தண்ணீரை எடுத்துக் கொடுத்த வித்யுத், “யாரோ திட்டுறாங்க அத்தை” அஷ்வினைப் பார்த்தபடியே கொடுக்க, அவளும், “இவராதான் இருக்கும்..கர்சீப் எடுத்துக் கொடுக்கலனு திட்டியிருப்பாரு” என்றவளை அஷ்வின் கண்ணாடி வழியாக முறைக்க, அவனின் சீட்டிற்கு பின்னால் தலையை கொண்டு சென்று அமுக்குணியாய் மறைந்துகொண்டவள், மெதுவாய் மருமகனிடம் பேச்சைத் தொடர்ந்து கொண்டு வந்திருந்தாள்.

வீட்டிற்கு வந்திறங்கியவர்ளை அனைவரும் வரவேற்க, த்ரூவை கண்ட அனைவரும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘த்ரூவ் அஷ்வின்குமார்’

ஆறடிக்கு மேல் வளர்ந்து கவர்ச்சியாகவும், வசீகரமாகவும், சிவந்த நிறத்துடனும், ஜிம் சென்று கொண்டிருந்த காரணத்தால் அகன்ற தோளும், பரந்த மார்பும், ஒட்டிய வயிறுமாக வெள்ளை சட்டை அணிந்து, மேல் பட்டனின் மேலே ரேபான் கூலர்ஸை தொங்க விட்டிருக்க, கீழே அடர் நீல நிற ஜீன்ஸும், கையில் ரோலக்ஸ் வாட்சும், செழிப்பும், கம்பீரமாகவும் இருந்தவனை அங்கிருந்த அனைவரும் மேலிருந்து கீழாக பார்த்து ஒரு முறை ரசிக்க, அவன் அதற்கும் புன்னகைத்துக் கொண்டான்.

இரண்டு வருடம் கழித்து முழுதாக இந்தியா திரும்பியிருந்தவனை அவன் வீட்டினரே அப்படித்தானே பார்த்தனர். நிறைய நிறைய மாற்றங்கள் அவனிடம். ஏற்கனவே இங்கு ஆணழகனாய் இருந்தவன் அங்கு சென்று வந்து மிகவும் ஸ்டைலாக பார்ப்போரை, அந்த நொடி அடித்து வீழ்த்தும் வகைக்கு மாறியிருந்தான்.

அஷ்வின் மகனை அறிமுகப்படுத்த, அனைவரும் அவனை சூழ்ந்து கொள்ள, யாழ் மெல்லிதாய் சிரித்துக் கொண்டே அறைக்குச் சென்று உடையை மாற்றி வர, வித்யுத்தும் குளித்துமுடித்து கீழே வந்தான்.

“செம சர்ப்ரைஸ் பண்ணிட்ட டா” யாழ் கூற,

“நீயும் உன் ஹஸ்பன்ட்டும்தான் வயலன்ஸ் காட்டி என்னை சர்ப்ரைஸ் பண்ணிட்டீங்க?” அவன் சொல்ல, ‘வயலன்ஸ்’ என்ற வார்த்தையில் வித்யுத்தின் விழிகளும், யாழின் விழிகளும் சந்திந்து மீண்டது. அவர்களின் வயலன்ஸ் அவர்களுக்குத் தானே தெரியும்.

“உன் அக்காக்கு என்னோட வயலன்ஸ் ரொம்ப பிடிக்கும்” வித்யுத் சொல்ல அனைவரும் யாழை அப்படியா என்பது போல பார்க்க, அவன் சொல்லும் அர்த்தம் அவளுக்கு மட்டும்தானே புரியும்.

மொரிஷியஸில் நடந்த வயலன்ஸின் கிசுகிசுப்புகளும், அந்தரங்க பேச்சுக்களும், முனகல்களும் இன்றும் அவள் செவியில் கேட்பது போல இருக்க, செவியில் இருந்த ரோமங்கள் அவளுக்கு சிலிர்த்து. 

‘ஆண்டவனே’ நினைத்தவள், ‘இவனுக்கு எல்லாத்தையும் முடிஞ்சா மறக்கடிச்சிடு’ என்று வேண்டினாள்.

பேச்சை மாற்ற நினைத்தவள், பேச நினைக்கும் போதே அவளின் மகள் உள்ளிருந்து எட்டி உதைக்க, விடுக்கென அசைந்தாள். எப்போதும் இரவு எட்டி உதைத்து அன்னையை உறங்கவிடாமல் செய்பவள், இன்று மாலையே ஆரம்பித்துவிட, யாழ் வயிற்றில் கரத்தை வைத்து தட்டிக்கொடுக்க, அதைக் கண்ட வித்யுத்துக்கு புரிந்துவிட்டது, மகள் ஆரம்பித்துவிட்டாள் என்று. 

த்ரூவ், வித்யுத்திற்கு நடுவே அமர்ந்திருந்தவள், “பாப்பா உதைக்கிறா” என்று இருவரின் கரத்தையும் எடுத்து தன் வயிற்றின் மேல் வைக்க, தாய்மாமனின் முதல் தொடுகையையும், தந்தையும் தொடுகையையும் உணர்ந்த உள்ளிருந்த சேட்டைக்காரி, அசைந்து அசைந்து ஆட, த்ரூவின் விழிகள் அக்காளை இதழ் விரித்து சிரித்துப் பார்த்தது.

“அப்பா இங்க வாங்க” என்றவள் தந்தையின் கரத்தையும் எடுத்து வயிற்றில் வைக்க, சும்மா இருப்பாளா உள்ளே இருப்பவள்.

உள்ளே ஓட்டப்பந்தய வீராங்கனையைப் போல ஓட, மூவரின் கரத்தின் மேலும் தன் கரங்களை வைத்திருந்தவள், “ஆஆஅ.. அம்மா.. குறுகுறுன்னு இருக்கு..” உள்ளே கிச்சுகிச்சு மூட்டுவதுபோல இருக்க, அவளுக்கு பயங்கரமாக சிரிப்பு வந்தது.

“நானு நானு” ஓடிவந்து அவசரத்தில் த்ரூவின் மடியில் அமர்ந்த தனுஷ்யா, யாழின் வயிற்றில் தலை சாய்த்து காது வைத்துப் பார்த்து, “பாப்பா பேசுமா?” முட்டைக் கண்களை விரித்துக்கேட்க,

“ம்ம் பேசுமே. ஆனா கொஞ்சநாள் அப்புறம். இப்ப நீங்க பேசறது வேணா கேக்கும்” த்ரூவ் கூற, “அப்ப நான் கதை சொல்லட்டா?” கேட்டாள் வாண்டு.

“ம்ம் சொல்லு சொல்லு” த்ரூவ் சொல்ல, வயிற்றின் அருகே சென்ற வாண்டு, தனது இரண்டு கைகளையும் தன் இதழ்களுக்கு இருபுறமும் வைத்து, ரகசியமாக தன் தங்கைக்கு கதையைக் கூற, அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

அதே சமயம் தனுவின் சிகையைக் கோதிய யாழ், அவளின் தலையில் இதழ் பதிக்கக் குனிய, அவளின் மகள் விட்டால்தானே. பொறாமைக்காரனுக்கு பிறக்கப்போகும் பொறாமைக்காரி போல, அன்னையைக் குனிய விடாமல் தடுத்தாள். வயிறு இடித்து யாழால் குனிய முடியவில்லை.

அதைக் கண்ட வாண்டு, த்ரூவின் காலின் மீது ஏறி நின்று தன் தலையைக் காட்ட, அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவள், அவளைக் கொஞ்சி விளையாடிவிட்டு, தந்தை தம்பியுடன் அமர்ந்து பேச, நமது நாயகனுக்கோ சொல்ல முடியாத இடம் எல்லாம் பற்றி எரிந்தது.

அன்றிரவு தம்பியுடன் தனியே பேச வேண்டி வீட்டின் பின்புறம் இருவரும் செல்ல, “யாருடா அந்த பொண்ணு? எப்படித் தெரியும்?” அவள் வினவ,

“உனக்கு பர்ஸ்ட் அலையன்ஸ் கேட்டாங்கள ஷ்யாம்னு. அவரோட தங்கச்சி பிருந்தா” அவன் சொல்ல, “ஹோ அதுதான் ஸார் அவ்வளவு டென்ஷன் ஆனியா?” யாழ் கேலி செய்ய,

“அதெல்லாம் இல்ல. அவ அண்ணனுக்கு உன்னை பிடிச்சப்பவே அவ ஃபேஸ்புக்ல உன்னை தேடியிருக்கா, எப்படி இருக்கேனு பாக்க. நீ எல்லாமே ப்ரைவேட்ல போட்டுட்ட. ஸோ என்னோட அக்கவுன்ட் வச்சு உன்னை பாக்க வந்தவ.. அய்யாவோட அழகுல மயங்கிட்டா” ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி அவன் சொல்ல, அப்படியே தந்தையைப் பார்ப்பது போல இருந்தது யாழுக்கு.

அவள் சிறு பிள்ளைகயாக இருந்து போதெல்லாம் தந்தையும் அன்னையும் சில சமயங்களில் பேசும்போது, தந்தை ஏதாவது அன்னையின் காதில் சொல்லிவிட்டு, இதே போல ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்குவதைக் கண்டிருக்கிறாள்.

இப்போது தமையனும் அதையே செய்வதைப் பார்த்தவளுக்கு அது தான் கண் முன் வந்தது.

சகோதரியின் முகத்தின் முன் சொடக்கிட்டவன், “அக்கா இங்க இருக்கியா?” கேட்க,

அவனையே இமைக்காமல் பார்த்தவள், “அப்பா மாதிரியே இருக்க த்ரூவ்” கண்கள் மின்ன சொல்ல, அதில் அவனுக்கு எப்போதும் பெருமையே. சிறிய புன்னகையை அவன் இதழ்களில் தவழவிட,

“த்ரூவ் அவங்க வீட்டுக்குத் தெரியுமா? பிகாஸ் ஏற்கனவே என்னோட கல்யாணத்துல சங்கடம் ஆகியிருக்கும் அவங்களுக்கு” அவள் தயக்கத்துடன் சொல்ல, அவளின் தோளில் கைபோட்டவன்,

“இன்னும் தெரியாதுதான். உங்க கல்யாணத்துக்கு அப்புறம் அப்பா பிசினஸை கவுக்க ஷ்யாம் நிறைய பண்ணியிருக்கான். பட் எதிர்ல இருந்தது யாரு. தி கிரேட் அஷ்வின் ஆச்சே. எதுவும் பண்ண முடியல. பட் அப்பா திருப்பி ஒரு ஸ்டெப் எடுத்து வச்சிருந்தா எழவே முடிஞ்சிருக்காது”

“அதுவுமில்லாம அங்கிளும் அப்பாகிட்ட வருத்தப்பட்டாங்க போல. இனி இப்படி ஆகாதுனு. எங்க லவ்மேட்டர் அவ வீட்டுல எல்லாம் தெரியாதுக்கா. தெரிஞ்சா மட்டும் என்ன. அவ எனக்கு தான்” என்றவனின் கரத்தை சுற்றிப் பிடித்துக் கொண்டவள்,

“ஆல்வேஸ் ப்ரௌட் ஆஃப் யூ த்ரூவ்” என்று, அவனுடன் நிறைய நேரம் பேசிக் கொண்டிருக்க, அங்கு வந்ந திவ்யபாரதி, “யாழ்! ரொம்ப நேரம் பனில உக்காறாத டா. சளி பிடிக்கப்போகுது” என்க, இருவரும் உள்ளே எழுந்து வர, யாழ் தனது அறைக்கு ஏறினாள்.

உள்ளே வந்தவள், கணவனிடம் முகத்தை திருப்பிவிட்டு படுத்துக் கொண்டாள்.

“யாழ்” அவனழைக்க பதில்லை.

“வளைகாப்பு முடிஞ்சு உங்க வீட்டுக்குப் போய்டுவியாடி?”

“…..”

“ப்ச். பதில் சொல்லுடி. சென்னை கிளம்பறியா?”

“நான் எப்பவோ இங்கிருந்து போக தயாராகிட்டேன். அன்னிக்கு சொன்னதுதான்” என்றவள் அதற்கு மேல் பேசவில்லை. படுத்துக்கொண்டாள்.

“அப்புறம் ஏன்டி நீயா கையை எடுத்து இன்னிக்கு உன் வயித்துல வச்ச?”

“…”

“யாழ்!” அவன் கத்த,

“ஷ்ப்ஆ! எல்லாரும் ஏதாவது கேள்வி கேப்பாங்கனு போதுமா. சும்மா பேசிட்டு தூங்கவிடாம” சலித்தவள், தூங்கிப்போக, அவள் தூங்கியபிறகு மென்மையாக அவளை நேராக படுக்கவைத்தவன், அவள் மீது கை போட்டுக்கொண்டு உறங்கினான்.

இரண்டு நாளில் சென்னை கிளம்பப் போகிறவளை நினைத்து அவன் மனம் அடித்துக் கொண்டது. அவளை நினைத்த நேரம் சென்று பார்த்துவர முடியாத வேலையையும் நினைத்து கடுப்பானான் அவன்.
***
அன்றிரவு இரவு உணவை திவ்யபாரதியின் கையிலேயே முடித்தவர்கள், வீட்டிற்கு வர, வேதா துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொள்ள, படுக்கையில் விழுந்த மித்ரன் ஃபோனில் யூ ட்யூப் வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

உள்ளே குளித்துக் கொண்டிருந்தவள், துண்டை எடுக்கத் திரும்ப, துண்டின் மேல் ஒரு பாம்பு வளைந்து நெளிந்து கொண்டிருந்தது.

கால்கள் நடுங்க உடல் சில்லிட்டுப் போய், சுவற்றோடு ஒன்றி நின்றவளுக்கு, அச்சத்தில் குளிரெடுக்கத் துவங்கியது. இப்படியே நிற்க முடியாது என்று நினைத்தவள், “ஏங்க” என்றழைத்தாள்.

அனைத்து உடையும் ஹாங்கரில் இருக்க, கணவனை வெளியே கேட்காத குரலில் அழைத்தவள், மீண்டும் சத்தமாக, “ஏங்க” கத்த, அவளின் பதட்டக் குரல் கேட்டவன், “சொல்லு” என்றான்.

ஏதாவது மறந்து வைத்திருப்பாளோ என்றுதான் நினைத்தான் அவன்.

“உள்ள பாம்பு” என்றவுடன் எழுந்தவன், அவசரமாக வெளியே சென்று கட்டையை எடுத்துக்கொண்டு வந்து, கதவைத் தள்ள, கதவு தாழிட்டிருந்தது.

“கதவை திற வேதா” அவன் குரல் கொடுக்க, பயந்தபடியே கதவை எட்டி மெதுவாகத் திறந்தவள், ஓரத்தில் சென்று நின்றுகொள்ள, கதவை மித்ரன் திறந்த வேகத்தில், அரண்ட பாம்பு வந்த வழியே சரசரவென்று வேகமாக சென்றுவிட, அது செல்லும் வழியைப் பார்த்தவன்,

“இது வழியாதான் வந்திருக்கு. இதை அடச்சிட்டு பின்னாடி நாளைக்கு ஆளுகளை பாக்க சொல்றேன். நீ..” அவன் திரும்பும்முன் அவனை பின்னிருந்து அவள் கட்டிப்பிடிக்க, ஆடவண் உள்ளுக்குள் அதிர்ந்து போனான்.

பெண்ணவளின் உடலில் இருந்த நீர்மணிகள் அவனின் வெஸ்ட்டை நனைக்க, அவனின் கரங்களும், முதுகும் அதை சில்லென்று உணர,  பெண்ணவளின் முன் அங்கங்கள் மொத்தமும் காளையனின் உடலை தீண்டியிருக்க, அவன் உடலில் உள்ள நரம்புகள் சில வருடங்களுக்கு பிறகு உயிர்ப்பெற்று துள்ள ஆரம்பித்தது.

விழிகளை மூடியவன் தன்னவளின் அங்கங்களை உணர்ந்ததில் பெருமூச்சை விட்டுத் தன்னைக் கட்டுப்படுத்த, அவனை அணைத்திருந்தவளோ, “ப்ளீஸ் திரும்பாதீங்க. நான்..” என்றவள் எதுவும் பேசமால் அவன் நெஞ்சின் மேலிருந்த தன் விரலை எடுத்து ஹாங்கரை நோக்கிக் காட்ட, அவனுக்குத்தான் முடியாமல் போனது.

‘கடவுளே! சோதிக்கறியே’ நினைத்தவன், “ஓகே திரும்பல. கொஞ்சம் தள்ளி நிக்கறியா?” மோகத்தில் கரகரத்துப் போன குரலில் அவன் சொல்ல, கணவனின் காற்று வந்த குரலை உணர்ந்தவள், அவசரமாய் அவனிடம் இருந்து விலக, துண்டை எடுத்துத் திரும்பாமல் கொடுத்தவன் வெளியே வந்துவிட்டான்.

பார்க்கவில்லை! ஆனால் உணர்ந்திருந்தான். பார்த்திருந்தால் கூட இப்படி உணர்வுகள் எழுந்திருக்காதோ எண்ணவோ!

வெளியே வந்தவனுக்கு முதுகில் இருந்த ஈரத்தின் அச்சுகள் தன்னவளின் ஸ்பரிசத்தை உணர்த்த, உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பும் எதற்கோ அடிபோட, சன்னலின அருகே சென்று நின்றவன் அதன் கம்பியை பிடித்தபடி, நீண்ட நேரம் தன்னைக் கட்டுக்குள் வைக்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்தான்.

அதேசமயம் குளியலறைக்குள் இருந்தவளும் வெளியே செல்லவே தயங்கி நின்றிருந்தாள். ‘ஐயோ என்ன நினைச்சிருப்பாங்க. கடவுளே’ நீண்டநேரம் அப்படியே நின்றிருந்தாள்.

பின் ஒருவாறு தன்னை சமாதானம் செய்து, பிஸ்தா நிற நைட்டியை அணிந்து வெளியே வந்தவள் கணவனைப் பார்க்க, அவனின் நிலை புரியாதவள், அவனின் அருகே செல்ல, அவளின் கொலுசு சத்தத்தின் கீர்த்தனைகள் உணர்ந்தவனின் உடல் கட்டுப்பாட்டை மீறுவது போலாக, சன்னல் கம்பியை மேலும் இறுகப் பற்றிக்கொண்டான்.

அவனருகே வந்தவள், “வந்து தூங்கு..” அவள் முடிக்கும்முன் அவளின் அதரங்கள், அவள் கணவனின் முரட்டு அதரங்களுக்குள் அடங்கியிருக்க, முதலில் அதிர்ந்தவள் பின் தன்னால் அடங்கினாள்.

பள்ளியறை பாடங்களை செவி வழி அறிந்த மாணவியாக அவள் இருந்தாலும், முதல் முதலாக ஆணின் தொடுகையில், அதுவும் தன் காதல் கணவனின் தொடுகையில் தன்னிலை இழந்தவள் நிற்கமுடியாது தவிக்க, அவளின் நிலை உணர்ந்தவன், அவளின் இதழ் சுளைகளை தன் அதரங்களால் கவ்வி சுவைத்தபடியே லேசாய் புன்னகைத்து, பேதையவள் இடையைப் பற்றி தன் இடையோடு சேர்த்தியவன், அங்கிருந்த மேசையில் தூக்கி அவளை அமரவைக்க, கணவனின் இரும்புப் பிடியில் திண்டாடித்தான் போனாள் மித்ரனின் மனைவி.

மூச்சிற்கு சிரமப்பட்டவள், அவனிடம் இருந்து பிரிந்து விழிகளை மூடியபடி மூச்சையெடுக்க, “உப்ப்ப்ப்ப்” உதட்டைக் குவித்து ஊதியவள், அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அவள் மூச்செடுக்கும்போது ஏறி இறங்கிய அவளின் முன்னிருந்த அம்சமான  அழகுகளை பார்த்தவனுக்கு, சித்தம் நிலையில் இல்லாமல் தவிக்க, மன்மத விளையாட்டை விளையாடி பார்க்கச் சொன்னது அவனின் உணர்வுகள்.

மீண்டும் அவளை நெருங்கியவன் அவனை ஈர்த்த அழகில் தன் கரத்தை வைக்க, அவனின் நெஞ்சில் கை வைத்தவள், “இப்ப வேணாம்” என்றாள் கரகரக்கும் குரலில்.

அவளின் நாடியைப் பற்றி நிமிர்த்தியவன், “ஏன்? பிடிக்கலையா?” கேட்க,

‘இல்லை’ என்பதுபோல தலையாட்டியவள், “ஒரு மாதிரி நெருடலா இருக்கு. எனக்கு டைம் வேணும்” என்றவளின் இடையில் இருந்து கையெடுத்தவன், “ம்ம் சரி” என்றான் சாதரணமாக.

“கோபம் இல்லியே?” அவள் கண்களை மட்டும் நிமிர்த்தி வினவ, “ம்கூம்” என்றான் இருகைகளையும் கட்டியபடி.

அமைதியாக மேசையில் இருந்து குதித்து இறங்கியவள், அவளுக்கு சற்று உயரமான மேசையில் நொடிப்பொழுதில் தூக்கி அமர வைத்த கணவனின் தொடுகையையும், கரத்தையும் அதன் வலிமையையும் நினைத்து உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அச்சத்திலும், சிறிது வெட்கத்திலும் சில்லிட்டுப் போனது.

பாம்பு வந்த வழியை அடைத்துவிட்டு வந்தவனுக்கு, அன்றிரவு போர்வையை தலைவரை போர்த்திப் படுத்தவளைக் கண்டு சிரிப்பாய் வர, அவள் திரும்பிப் பார்க்கும்போது தூங்கிவிட்டது போல விழிகளை அமைதியாக மூடிக்கொண்டான்.

வளைகாப்பிற்கான வேலைகள் அடுத்தநாள் சிறப்பாக முடிய, அதற்கு அடுத்தநாள் காலை இன்னும் வைபவமாக விடிந்தது, வீட்டிற்கு இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் மகாராணியையும், அவளை சுமக்கும் சேட்டைக்காரியையும் ஆர்ப்பரிக்கும் பொருட்டு.