யாழ்-3

IMG_20220303_084637-60fcf025

யாழ்-3

மகள் விஷயத்தைப் போட்டு உடைத்தபின் வீட்டிலிருந்து மகளை அழைத்துச் சென்ற அஷ்வின், வழி நெடுகிலும் எதையும் பேசவில்லை. முகத்தில் எந்தவொரு உணர்வையும் காட்டாது வரும் தந்தையைக் கண்ட யாழ்மொழிக்கு குளிரெடுக்கத் துவங்கியது.

“ப்பா” என்று தந்தையை அழைத்தவள், அஷ்வினின் முகம் இறுகுவதைக் கண்டு வாயை மூடிக்கொண்டாள்.

அடுத்து காரை அஷ்வின் நிறுத்திய இடம், ஈசிஆரில் உள்ள ஜுகு பீச். மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்க, இங்கு அழைத்து வந்தவன் காரில் இருந்து இறங்கி, காரின் கதவு மீது சாய்ந்து நிற்கவும், யாழ்மொழியும் இறங்கி தந்தையின் பக்கம் சென்றாள்.

மகள் தன் எதிரில் வந்து தலைகுனிந்து குறுகியபடி நிற்பதைக் கண்ட அஷ்வின், “ஸ்டான்ட் அப் ஸ்ட்ரெயிட் யாழ்(Stand up straight yaazh)” என்று அதட்ட, தந்தையின் குரலில் பதறிப்போய் நிமிர்ந்தவளைக் கண்ட அஷ்வினுக்கு, மகளைத் தானே இப்படி அதட்டி உருட்டி மிரட்டும் நிலை வரும் என்று நினைக்கவில்லை. மகள் உள்ளுக்குள் உடைந்து இருக்கிறாள் என்று தெரிந்தும் தந்தையாய் அவன் கேட்டாக வேண்டிய கட்டாயம். பிறந்ததில் இருந்து எதுவும் சொல்லாத தன்னை, இந்நிலையில் நிற்க வைத்த மகளின் மீது கோபம் பன்மடங்காக எகிறியது.

இப்பொழுதுகூட மகள் செய்த காரியத்திற்கு மனைவியைப் போல் அறைய வேண்டும் என்றெல்லாம் அவனுக்குத் தோன்றவில்லை.

நான்கு வயதில் முதன் முறையாக, “ஐ! அப்பா வந்துட்டீங்களா?” என்று கேட்ட மகளின் மழலை முகம் நினைவு வர, அஷ்வினின் மனம் கோபத்திலும் பாசத்தில் தடுமாறியது. கோபத்திற்கும் பாசத்திற்கும் இடையில் சிக்கத் தவித்துக்கொண்டிருந்தான் யாழ்மொழியின் தந்தை. அஷ்வினாக இருந்திருந்தால் நினைத்ததை யோசிக்காமல் அதிரடியாக செய்வான். ஆனால், யாழ்மொழியின் தந்தையாக அவன் தடுமாறித்தானே செய்வான். மகள் அவனின் பலவீனம் ஆயிற்றே.

அனைத்தையும் கட்டுக்கள் கொண்டு வந்தவன், மகளின் வாழ்க்கைகாக அஷ்வினாக மாறி, “டெல் மீ வாட் ஹாப்பன்ட் என்டையர்டி” (Tell me what happened entirety) என்று கைகளைக் கட்டியபடி காரின் மேல் சாய்ந்துகொண்டு, மகளின் உள்ளத்தின் அடி ஆழம் வரை அலசிப் பார்க்கும் ஆராய்ச்சி பார்வையோடு கேட்க, தந்தையின் விழிகளைப் பார்த்த யாழ்மொழிக்கு அனைத்தும் வெளிவரத் துவங்கியது.

அனைத்தையும் கூறி முடித்த யாழ்மொழி உதடுகளை இறுக மூடியபடி நிற்க, அஷ்வினின் கோபங்கள் கட்டுக்கடங்காமல் உள்ளுக்குள் ஏறியது. பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை இருவரும் இப்படி குழப்பியிருக்கத் தேவையில்லை என்று நினைத்தான், மருமகனின் குணம் அறியாதவனாய். மகளின் மேல் ஒரு புறம் தப்பிருக்க, எதை நியாயப்படுத்துவது என்று அவனுக்குத் தெரியவில்லை.

விண்ணைப் பார்த்தபடி சிறிதுநேரம் நின்றவன் அனைத்தையும் கட்டுக்குள்கொண்டு வந்து, மகளைப் பார்க்க, யாழோ கடலை வெறித்துக்கொண்டிருந்தாள்.

“பிசினஸ்ல ஜெயிச்ச நான், ஒரு அப்பாவா தோத்துட்டேன்” இடையில் இரண்டு கைகளையும் கொடுத்து, தலையை இடமும் வலமும் வெறுமையாக ஆட்டியபடி சொன்னவன், காரில் ஏறப்போக, தந்தையின் கரத்தை தவிப்புடன் பற்றினாள் அவனின் மகள்.

“அப்பா.. அப்பா.. ஸாரிப்பா.. உங்ககிட்ட மறைக்கணும்னு இல்லப்பா. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலப்பா.. என்னோட சிட்சுவேஷன் புரிஞ்சிக்கங்க ப்பா. ப்ளீஸ்” என்று மன்றாட, மகளின் கரகரக்கும் குரல், அஷ்வினின் இதயத்தை இரண்டு துண்டாகப் பிளந்தாலும், அவன் மன்னிக்கத் தயாராக இல்லை.

தன் கரத்தைப் பற்றியிருந்த மகளின் கரத்தை எடுத்துவிட்டவன், “கெட் இன்சைட்” என்று காரில் ஏற, தந்தையின் செயலில், நிராகரிப்பில், அந்த நொடியில், தன்னை உயிருடன் யாரோ வதைப்பதைப் போல உணர்ந்தாள் அந்தப் பேதை.

****

வெற்றி வீட்டின் வரவேற்பறையே நிசப்தத்தைத் தத்தெடுத்திருந்தது. வெற்றியின் பெற்றோர் அன்றைய அயர்வில் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, வெற்றி, வர்ஷித், வித்யுத், பூஜா, வேதா, அந்த வீட்டின் இன்னொரு உறுப்பினன் இன்ப மித்ரன் அறையில் கூடியிருக்க, அஷ்வினோ, “வீடு அன்னிக்கு பாத்த மாதிரியே இன்னும் அழகா மெயின்டெய்ன் பண்றீங்க வெற்றி” என்று புன்னகைக்க, திவ்யபாரதி உள்ளே அனைவருக்கும் பழச்சாறு தயாரித்துக் கொண்டிருந்தாள்.

“எல்லாம் வீட்டுல பாத்துக்கறாங்க” என்ற வெற்றி, பொதுவாக சில விஷயங்களை பேச ராஷ்மிகாவிற்கோ கோபம் கோபமாக வந்தது. ‘வந்த விஷயமா பேசாம வீடு நல்லாருக்கு காடு நல்லாருக்குன்னு பேசிட்டு இருக்காரு. ச்சை” புகைந்த ராஷ்மிகா, நாவை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

வெளியே வந்த திவ்யபாரதி மூவருக்கும் ஜூஸைத் தர, யாழிடம் வந்தவள், “சின்ன வயசுல உன்னை பாத்தது. இப்ப இன்னும் ரொம்ப அழகா இருக்க?” வெள்ளை மனதுடன் எதார்த்தமாய் சொல்லிவிட, வெற்றியின் மனமோ, ‘ம்கூம். உன் மகன் அதுதான் ஏதோ வேலையை பாத்துட்டு வந்திருக்கான்’ உள்ளுக்குள் மனைவியை நினைத்து பயத்துடன் அமர்ந்திருந்தான்.

அனைவரும் பழச்சாறை கையிலேயே அருந்தாமல் வைத்திருக்க, திவ்யபாரதி, “பொண்ணுக்கு அலையன்ஸ் பாக்கறீங்களா?” என்று கேட்டு வைக்க, வித்யுத்தோ தெனாவெட்டுடன் ஒரு மெல்லிய கீற்றாக ஒரு புன்னகையை உதிர்க்க, அதைக் கண்ட யாழ்மொழிக்கு அவனை அறைய வேண்டும் போல இருந்தது.

திவ்யபாரதி கேட்ட கேள்வியில், அத்தனை நேரம் அமைதியாய் இருந்த ராஷ்மிகா, “உங்க மருமகளுக்கு நாங்க அலையன்ஸ் பாத்தா நீங்க ஒத்துப்பீங்களா?” வெடுக்கென கேட்டு வைத்து, வெற்றியின் ஒட்டு மொத்த குடும்பத்தின் தலையிலும் குண்டை வீச, அனைவரின் பார்வையும் நேராய் வித்யுத்திடம் சென்றது.

ராஷ்மிகா சொன்னது வித்யுத்தைத் தான் என்று அனைவருக்கும் புரியாமல் இல்லை.

திவ்யபாரதியோ மகனை அதிர்ச்சியும், கோபமும் கலந்து பார்த்து வைக்க, அஷ்வின் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மனைவியை பார்வையாலேயே எரித்தான். ‘இப்படித்தான் பேசுவதா?’ என்று அவனின் பார்வை இருக்க, ராஷ்மிகாவோ வாயை அடைத்துக் கொண்டாள்.

அனைவரின் பார்வையையும் பார்வையாலேயே அலட்சியம் செய்து ஓரம்கட்டிய வித்யுத், நேரே எழுந்து வந்து யாழ்மொழியின் கரத்தைப் பற்ற, அவனின் அதிரடிச் செயலில் அனைவரும் ஷோபாவில் இருந்து திகைப்புடன் எழ, அஷ்வின் மட்டும் எழாமல், மருமகனையே பார்த்திருந்தான்.

யாழ்மொழியின் கரத்தை வன்மையாகப் பற்றியவன் அவளைத் தரதரவென்று மேலே இருக்கும் தனது அறைக்கு இழுத்துச் செல்ல, யாழ்மொழியோ பயந்துபோய் தந்தையைத் திரும்பிப் பார்க்க, ஷோபாவில் நீட்டி கையை வைத்த அஷ்வின், கால்மேல் கால் இட்டு ஜம்மென்று அமர, “அப்பா..” என்றழைத்த அவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

அதுவரை அமைதியாய் இருந்த திவ்யபாரதி, “வித்யுத் என்ன பண்ற? அந்தப் பொண்ணு கையை விடு” என்று மகனை நோக்கி கர்ஜிக்க, படிகளில் ஏறிக்கொண்டிருந்தவன் ஒரு நொடி நின்று அன்னையை திரும்பிப் பார்த்தான்.

“அவ உங்களுக்கு மருமகன்னா எனக்கு என்ன உறவு?” என்று திமிராய்க் கேட்டவன், “உங்க எல்லாரையும் விட எனக்கு உரிமை அதிகம்” என்று இளக்காரமாகக் கூறிவிட்டு, “வா” என்று யாழின் கரத்தை இழுக்க, அவளின் கரமோ அவனின் அழுத்தத்தில் கன்றிச் சிவக்கத் துவங்கியது. அப்போதும் அவளை வாய் திறந்து தன் மனைவி என்று அவன் கூறவில்லை.

வித்யுத்தின் செயலில் அரண்டுபோன ராஷ்மிகாவும் மற்ற அனைவரும் அஷ்வினிடம் திரும்ப, அவனோ தன் கரத்தில் இருந்த பழச்சாறை ஒரு மிடறு அருந்திவிட்டு, அனைவரையும் அமரும்படி சைகை செய்ய, வெற்றி மனதுக்குள், ‘உங்க ஆட்டிட்யூட் இன்னும் குறையவே இல்ல அஷ்வின்’ என்று மனதுக்குள் மெச்சியபடி அமர, மேலே கதவு படீரென்று சாத்தப்படும் ஓசை காதை அடைத்தது.

“அவன் நம்ம பொண்ணு கையை பிடிச்சு இழுத்துட்டு போறான். என்ன பண்றீங்க நீங்க” கடித்த பற்களுக்கு இடையே மகள் திரும்பிப் பார்த்தபடி சென்றதையே பார்த்த ராஷ்மிகா, மனம் தாங்காமல் கணவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்க, “ஹஸ்பன்ட் அன்ட் வைஃப்புக்கு நடுவுல போறது தப்புனு உனக்குத் தெரியாதா?” என்று கேட்க, கணவனுக்கு மகளிடம் உண்டான விலகல் தன்மையில் கோபத்தில் பேசுகிறான் என்று நினைத்த ராஷ்மிகாவுக்கு உள்ளம் மகளை நினைத்துப் பதறியது. அதே சமயம் இருவரின் விலகலையும் நினைத்து மனம் பாரமாகக் கனத்தது.

ஆனால், அஷ்வினின் மனம் அப்படியா நினைத்தது?

இப்பொழுதாவது இருவரும் மனம் விட்டுப் பேசவேண்டும் என்றல்லவா நினைத்தது.

“என்ன நடந்துச்சுன்னு சொல்லித் தொலைக்கறீங்களா?” திவ்யபாரதி தலையும் புரியாமல் காலும் புரியாமல் கணவனிடம் சீற,

“எனக்கும் இப்பதான் தெரியும் பாரதி. நீ கொஞ்சம் டென்ஷன் ஆகாம இரு” என்று சமாதானம் செய்யமுயல, “டென்ஷன் ஆகாம இரா.. அவன் பாட்டுக்கு ஒரு பொண்ணு கையை புடிச்சு ரூமுக்கு இழுத்திட்டு போறான். நீங்க பாத்துக்கிட்டே இருக்கீங்க” கணவனைத் திட்டித் தீர்த்தவள் மூத்த மகனிடம் திரும்ப வர்ஷித்துக்கோ பகீரென்று இருந்தது.

“வர்ஷித், இது உனக்குத் தெரியுமா? உன்கிட்ட அவன் எதையும் மறைக்க மாட்டான்னு எனக்குத் தெரியும். உண்மையை சொல்லு” என்றிட, அன்னையிடம் பொய்யும் உரைக்க முடியாமல், சகோதரனை விட்டும் கொடுக்க முடியாமல் தள்ளாடிப் போனான் அவன்.

“அம்மா மேல சத்தியம் பண்ணி சொல்லு வர்ஷித்” கரதரத்த குரலோடு திவ்யா கேட்க, அதுவரை அன்னையின் முகத்தைப் பார்க்காமல் விழிகளைத் தாழ்த்தி இருந்தவன் அன்னையிடம் அனைத்தையும் கூறிவிட்டு, “ஆனா, உங்க மேல சாத்தியமா அவங்க கல்யாணம் பண்ணது எனக்குத் தெரியாது ம்மா” என்றான்.

“அப்ப அவங்க தான் மம்மியா?” பூஜாவின் கையிலிருந்த வாண்டு நேரம் காலம் தெரியாமல் வாயைத் திறக்க, மகளின் வாயை பொத்திய பூஜா, ‘ஹி.. ஹி..” என்று சிரித்து சமாளித்தாள்.

***

அறைக்குள் இழுத்து வந்தவளை உதறித் தள்ளிய வித்யுத் கதவை படீரென்று அடித்துச் சாத்த யாழ்மொழியோ அசையாது நின்றிருந்தாள். தந்தையிடம் தான் பயமும், பதட்டமும், கலக்கமும் அவளுக்கு. அதுவும் தவறு செய்ததால் விழைந்த ஒன்று. ஆனால், மற்றவரிடம் அவளுக்கு பயம் கொண்டதெல்லாம் அறவே கிடையாது. அந்தளவு அவளிடம் யாரும் நடந்துகொண்டதும் இல்லை. அது அவள் அஷ்வினின் மகள் என்பதால் கூட இருக்கலாம்.

கதவை சாத்தியவன் அதன் மேலேயே கைகளைக் கட்டி சாய்ந்து நின்று கொண்டு யாழ்மொழியை மேலிருந்து கீழ் பார்த்தவன், “கல்யாணம் மட்டும் தான் ஆச்சுன்னு சொன்னியா? இல்ல..” கேட்க வந்தவனை முறைத்தவள், “நடந்ததை மட்டும் தான் சொன்னேன்” என்றாள் கோபத்தோடு.

அவளின் பதிலில் வாய்விட்டே சிரித்தவன், அவளை நோக்கி அடியெடுத்து வைக்க, அவளின் பூவுடல் விலுக்கென்று வெளிப்படையாக தூக்கிவாரிப் போட்டது. அழுத்தமாக கூர் விழிகளை வைத்துக்கொண்டு தன்னை நோக்கி வருபவனின் கண்களில் இருந்த வெறுப்பையும், அதற்கு முரணாக அதரங்களில் படிந்திருந்த இளக்காரப் புன்னகையையும் கண்டவள் கண்களை மூடி அமைதியாய் நின்று கொண்டாள்.

அவன் அவளை அணைக்கவோ இல்லை காதல் வசனத்தால் குளிப்பாட்டவோ வரவில்லை என்பது அவளுக்கு நன்கு தெரியும். ஆனால், அவனின் கொடுஞ் சொற்களைத் தாங்க அவள் தயாராக இல்லை.

அவளருகே வந்தவன், அவள் வதனத்தில் தன் மூச்சுக்காற்று படும் இடைவெளியில் நிற்க, அவனின் மூச்சுக்காற்று அவனின் உஷ்ணத்தை உணர்த்த, தனது துப்பட்டாவை இறுக்கமாய் பிடித்துக் கொண்டவளின் செவியிடம் குனிந்தவன், “ஆனா, அன்னிக்கு கூப்பிட்டிருந்தா அதுக்கும் ரெடியா இருந்திருப்ப தானே?” என்று கேட்க, பெண்ணவளின் மூடியிருந்த விழிகளில் இருந்து சரசரவென்று கண்ணீர் வழிய, அவளின் கன்னத்திலிருந்து விழுந்த நீரானது, ஆடவணின் விரலில் விழ, அவளை நிமிர்ந்து பார்த்த அவனுக்கு மனம் சிறிதும் இறங்கவில்லை.

மாறாக கோபமும் வெறுப்பும் மட்டுமே ஓங்கியிருந்தது.

‘டக்’ என்ற ஓசை அந்த அறை முழுதும் பரவ, பெண்ணவளின் வதனத்தின் முன்னே சொடக்கிட்டவன், அவள் விழிகளைத் திறந்தவுடன், “இப்ப என்ன பண்றதா ஐடியா?” ஏதோ மூன்றாவது மனிதனிடம் கேட்பது போல கேட்டுவைக்க, பெண்ணவளின் நெஞ்சு பாரமாகக் கனத்தது.

முகத்தை அழுந்தத் துடைத்தவள், “என்னால எங்க அம்மா அப்பாகூட அவங்க பொண்ணா போகமுடியாது” என்றாள். பெற்றோருக்கு இருக்கும் கோபத்துக்கு அவர்கள் தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை அவளுக்குத் துளியும் இல்லை.

“இங்க இருந்தா நான் உன்னை என் பொண்டாட்டின்னு சொல்லிட்டு இருக்க மாட்டேன். அதாவது உனக்கான அங்கீகாரம் தரமாட்டேன்” என்று வாள்கொண்ட நாவால் கூற, யாழ்மொழியோ அவனை வெறுப்புடன் பார்த்திருந்தாள்.

“அப்ப என்னை உங்க வீட்டுல இருக்க வச்சுட்டு. என்னனு சொல்லுவீங்க?” அவள் கோபத்தில் வெடுக்கென்று கேட்டுவிட, “இதுக்கு நான் பதில் சொல்லிடுவேன். ஆனா, உனக்கு அது ரொம்ப அசிங்கம் பரவாயில்லையா?” தாடையை இருவிரலால் நீவியபடி வித்யுத் கேட்க, யாழ்மொழியின் நெஞ்சுக்கூடு பற்றி எரிய ஆரம்பித்தது.

வித்யுத்தின் முகத்தையே பார்த்தவளுக்கு, இவனா ஒரு காலத்தில் தன்னிடம் காதல் சொட்ட சொட்ட உயிராய் இருந்தான் என்று நினைக்கத் தோன்றியது. இப்போது உயிரை அட்டையைப் போல அல்லவா உறிஞ்சிக் கொண்டிருக்கிறான்.

“முடிவா என்ன சொல்ற?” உக்கிரமாகக் கேட்டவளைப் பார்த்து, உதடு குவித்து, “உப்ப்ப்.. ” என்று ஊதியவன், “நீ கிளம்புன்னு சொல்றேன். எனக்கு உன்னை பிடிக்கல. கீழ வந்து அதையே சொல்லு. ஏன்னா கண்டிப்பா என் விருப்பம் என்னனு யாரும் கேக்க மாட்டாங்க. சப்போஸ் நீ மாத்தி கீழ சொன்னா. நீ பண்ணதை யாருக்கும் சொல்ல தயங்க மாட்டேன்” என்று மிரட்டுவிட்டு கீழே செல்ல, யாழ்மொழி விக்கித்துப் போய் நின்றிருந்தாள்.

அவள் செய்த தவறுதான் என்ன? விதியின் சதியால் எல்லாம் குழம்பி இருக்க அவளால் தன் தவறை நியாயப்படுத்தவும் முடியவில்லை. ஆனால், அது அவளின் தவறு அல்லவே!

ஒரு முடிவை எடுத்தவளாய் கீழே சென்றவள், அங்கு கூடியிருந்த அனைவரையும் பார்க்க, அவளின் அருகே வந்து நின்ற வித்யுத்தோ, “சொல்லு” என்க, அமைதியாய் நின்றிருந்தவள், “நாங்க மேரேஜ் பண்ண டேட் நெக்ஸ்ட் வீக் ட்யூஸ்டே தான் வருது. நியூ இயருக்கு முந்துன நாள். அன்னிக்கே எங்க கல்யாணத்தை வச்சிடுங்க. அன்னிக்கு நாங்க ரெஜிஸ்டர் மட்டும் தான் பண்ணோம்” என்றவள் அமுக்கமாய் பூனை போல் சென்று திவ்யபாரதியின் அருகில் அமர்ந்துகொள்ள, வித்யுத் அவளை உறுத்து விழித்தான்.

அவளின் காதலில் அவனின் ஊனும், உயிரும் அப்போது உருகி கரைந்திருக்க, அவனின் காதலி அவனை உருக்கியேவிட்டிருக்க, அவளை முழுவதுமாய் வெறுத்தான் அவன். மனதில் இருக்கும் கோபம் இப்போதும் சிறிதும் குறைந்தபாடில்லை அவனுக்கு.

அவள் தன்னுடன் இருந்தால் கண்டிப்பாக அவளை உருக்குலைத்து விடுவான் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரியும். அதனால் தான் அவன் அவளை எச்சரித்தது. ஆனால், அதை செவியில் வாங்காமல் தெனவெட்டாய் தன் இஷ்டம் போல் பேசிவிட்டு அன்னையின் அருகில் சென்று அமர்ந்தவளின் சாமர்த்தியம் அவனுக்குக் கொலைவெறியைக் கிளப்ப, அவனின் கை முஷ்டிகள் இறுகி, கழுத்து நரம்புகள் எல்லாம் புடைத்து எழுந்து நின்றது.

அனைவருக்கும் இருவரின் செய்கை எரிச்சலைக் கிளப்பினாலும், ஒன்றும் செய்ய இயலாத நிலை. யாரையும் யார் முன்னும் கடிய முடியாத நிலை.

நடந்த அனைத்தையும் டிவி ஷோ போல ஜூஸை அருந்தியபடி பார்த்து முடித்த அஷ்வின் வெற்றியைப் பார்க்க, “கல்யாணத்தை மதுரைல வச்சிடலாம்” என்ற வெற்றி எழ, “ம்ம். எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல” என்றான் அஷ்வினும்.

“பாரதி, இவங்களுக்கு ரூம்ஸ் அரேன்ஞ் பண்ணித் தந்திடு. ரொம்ப டயர்டா தெரியறீக மூணு பேரும். ரெஸ்ட் எடுத்துக்கங்க” மென்மையாய் கூறிய வெற்றி, மகனை இறுகிய முகத்துடன் திரும்பிப் பார்த்துவிட்டுச் செல்ல, தந்தையின் பார்வையயை புரிந்து கொண்டவன், அவர் பின்னே செல்ல எழ, வர்ஷித்தும் உடன் சென்றான்.

சகோதரனின் முன் கோபத்தைப் பற்றி அறிந்தவன், பேச்சு வார்த்தை சண்டையில் முடிந்துவிடக் கூடாது என்பதற்காகவே இருவருடனும் செல்ல, ‘இத்தனை நாள் விஷயம் தெரிஞ்சும் நம்ம கிட்ட மறைச்சிட்டான் பாரு’ என்று பூஜா உள்ளுக்குள் புகைய, அப்போதுதான் பக்கத்தில் உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு வந்த தன் அன்னை, தந்தையைக் (சதீஷ், கவிநயா) கண்டவள், ‘ஷப்பாஆஆ! இனி இவங்களுக்கு ஒரு தடவை எல்லாத்தையும் சொல்லணும்’ என்று நினைத்துக்கொண்டே மகளை உறங்க வைக்க முதலில் சென்றாள்.

திவ்யபாரதி மூவரையும் அழைத்துக்கொண்டு சென்றவள், மருமகளுக்குத் தனி அறையையும், சம்மந்திக்கு தனி அறையையும் தந்திருந்தாள். குறிப்பாக யாழின் அறையை தங்களின் அறைக்கு அருகிலேயே கொடுத்திருந்தாள், மகனின் குணம் அறிந்தவளாக. தப்பாக நடக்கமாட்டான் என்ற எண்ணம் இருந்தாலும், முகத்தைப் பார்க்க நேர்ந்தால், மகன் தேளாக மருமகளை கொட்டுவான் என்று அவளுக்குத் தெரியாதா என்ன?

தேளாகக் கொட்டுவதில் அன்னையை நகல் எடுத்திருந்தானே அவன்!

அனைவரும் களைய யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட வேதா, உதட்டை குவித்து மென்மையாய் விசில் அடிக்க, வாசலை நோக்கி நடந்து கொண்டிருந்த இன்ப மித்ரனின் முகம் சிலிர்த்தாலும் முகம் இறுதியது.

அவளின் அழைப்பை அசட்டை செய்தவன் மேலே வெளியேற முயல, பாவடை தாவணியில் இருந்தவள், ஓடுவதற்கு ஏதுவாக தன் பாவடையை தூக்கிப் பிடித்துக்கொண்டு வெள்ளிக் கொலுசின் கின்கினி ஓசையோடு ஆசையாய் அவன் முன் சென்று வழியை மறித்து நின்றவள், “இன்னிக்கு நான் எப்படி இருக்கேன்?” இடமும் வலமும் திரும்பியபடிக் கேட்டாள்.

அடர் ரோஸ் நிற தாவணியிலும், பச்சை நிற பாவடையிலும் ரம்பையைப் போல தன் முன் நிற்பவளைக் கண்டு அவனின் மனம் மயங்கத் தான் செய்தது. ஆனால், அனைத்தும் ஒரு நொடியே.

முகத்தை கடுகடுவென வைத்தவன், “கேவலமா இருக்க” என்றான். ‘ஏன்டா இன்னிக்கு ஃபுல்லா அவளை சைட் அடிச்சிட்டு இப்படி மாத்தறியே. நியாயமா இது?’ அவனின் மனசாட்சி காறி உமிழ, முயன்றுத் தன்னைக் கட்டுப்படுத்தினான்.

ஐந்தடி இரண்டு இன்ச் உயரத்தில், அவனின் மார்பின் அளவுக்கு மட்டுமே இருப்பவளை பிடிக்கவில்லை என்று யாரேனும் சொன்னால் அவன் குருடாகத்தான் இருப்பான்.

வெள்ளை நிறமும் இன்றி சராசரி நிறமும் இன்றி சந்தன நிறத்தில், ஏற்ற எடையுடன், மயக்கும் இடையுடன் இருப்பவளின் குணமும் வெகுளித்தனமும், தேவையில்லாத சின்னச் சின்னக் கோபங்களையும் அவன் அறிவான். வில்லாய் வளைந்த புருவத்தின் கீழுள்ள அவளின் திராட்சை விழிகள், தன்னைப் பார்க்கும் போது மட்டும் காதலை குறையாமல் கொட்டுவதை அவனும் அறிவானே!

இறந்து போன தன் அன்னையின் சாயலில் இருப்பவளை மறுக்க நினைக்கும் போதே அவன் மனம் துணுக்குற்றது.

சிறிய வயதில் இங்குள்ள கோயிலுக்கு வந்த போது விபத்தில் அவனின் அன்னை தந்தை இறந்துவிட, அவனின் உறவினர்களும் சுமையாய் நினைத்து அவனைக் கைவிட்டனர். தனியாய் சின்னஞ்சிறு சிறுவனாய் இருந்தவனை வளர்க்கும் பொறுப்பை ஏற்று படிக்க வைத்தனர் வெற்றியும் திவ்யபாரதியும்.

என்னதான் அவர்கள் வீட்டிலேயே அவனை ஒருவனாக அனைவரும் பார்த்தாலும், அவனுக்கு மிகவும் இடம் எடுத்துக்கொள்ள விருப்பமில்லை. அதனாலேயே ஹாஸ்டலில் தங்கிப் படித்தவன், சென்னையில் படித்து முடித்து தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் அட்வோகேட்டாக இருக்கிறான்.

சோழவந்தானுக்கு படிப்பை முடித்துக்கொண்டு வந்தவனை எவ்வளவு வற்புறுத்தியும் வீட்டில் தங்காதவன், வீட்டின் பின்னுள்ள தற்போது சிறிது நவீன வசதிகளுடன் மாற்றியிருந்த மூன்று அறைகள் கொண்ட ஓட்டு வீட்டில் தங்கினான். அதுவும் திவ்யபாரதியின் பிடிவாதத்தால். இல்லையென்றால் வெளியே எடுத்திருப்பான்.

இப்படித் தன் மீது அதீத பாசமும், அன்பும் வைத்திருந்த வெற்றிக்கும் திவ்யபாரதிக்கும் துரோகம் புரிய அவனின் மனம் மறுத்தது. அவர்கள் வீட்டிலேயே அவர்களின் உப்பை உண்டவனுக்கு அவர்கள் அடி மடியில் கை வைக்க மனம் உறுத்தியது.

வேதாபாரதி மேல் மலையளவு ஆசை அவளைப் பார்க்கும் போது பெருகிக் கொண்டிருந்தாலும், கடலளவு நம்பிக்கை கொண்ட அவன் தெய்வம்போல் நினைக்கும் இருவருக்கும் மித்ரனால் துரோகம் செய்ய முயலவில்லை.

“நான் கேவலமா இருக்கனா?” என்று இடுப்பில் கை வைத்து குறும்பாய்க் கேட்டவள், “ஆனா, எனக்கு உங்களை தான் புடிச்சிருக்கே?” என்று கொஞ்சும் குரலில் பேச, அவனுக்கோ எரிச்சலாக இருந்தது.

“ஏய் உன் வயசு என்ன என்னோட வயசு என்ன?” என்று சீறியவன், “எனக்கும் வர்ஷித்துக்கும் ஒரே வயசு. கிட்டத்தட்ட உனக்கும் எனக்கும் ஏழு டு எட்டு வருஷம் வித்தயாசம். உனக்கே இதெல்லாம் தெரியாதா?” என்று வினவ,

“ஹையோ. இதான் பிரச்சனையா? அதெல்லாம் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்” என்றவளை எரிப்பதைப் போலப் பார்த்தவன், “எவ்வளவு சொன்னாலும் திருந்தாத ஜென்மம்” முணுமுணுத்துக் கொண்டே அவளைத் தாண்டிச் செல்ல, வேதாவோ புன்னகை மாறாமல் நின்றிருந்தாள்.

அவளைத் திட்டிக்கொண்டே வந்தவனுக்குத் தெரியும் அவள் இதை நிறுத்தமாட்டாள் என்று. அவனின் ஆழ்மனமும் அதை விரும்பியது தானே உண்மை.

“ராட்சசி. இவளை யாரு என்னை லவ் பண்ண சொன்னது. இப்ப எனக்குல சிரமமா இருக்கு” என்று நினைத்துக்கொண்டே வண்டியைக் கிளப்ப, வேதா ஒரு புன்னகைப் பெருமூச்சுடன் தன் அறைக்குச் சென்றாள்.

***

“உங்க இரண்டு பேருக்குள்ள என்ன நடந்துச்சுன்னு கேட்டு உன்னை சங்கடப்படுத்த விரும்பலை வித்யுத். நான் உன்கிட்டையும் சரி உன் அண்ணன்கிட்டையும் சின்ன வயசுல ஒண்ணு சொன்னேன். உங்க அம்மா நம்பிக்கையை காப்பாத்துங்கன்னு. ஆனா, நீ பண்ணி வச்சது என்னனு பாரு”

“அஷ்வின் பொறுமையான ஆளு தான். ஆனா, அந்தப் பொறுமைக்கு பின்னாடி ஏதோ இருக்கு. இல்லைனா பொண்ணு விஷயத்துல இவ்வளவு கூலா இருக்க மாட்டாரு. அதுவும் நீ கையை பிடிச்சு அந்தப் பொண்ணை இழுத்துட்டு போகும்போதும்9 இருந்த இடத்துல இருந்து அசையல. ஏன் கோபத்துல முகம் கூட மாறல. எல்லாம் அவரு பொண்ணுக்காக” என்ற வெற்றி,

“உங்க இரண்டு பேர் பிரச்சினைக்கு உள்ள யாரும் வர மாட்டாங்க. அதே மாதிரி நீயும் கல்யாணத்தை நிறுத்த யோசிச்சறாதே. உன்னைப் பாத்தாலே எனக்குத் தெரியுது உனக்கு இதுல விருப்பம் இல்லனு” வெற்றி தனது அறைக்குள் வித்யுத்திடம் பேசிக் கொண்டிருக்க, அறைக்குள் வந்த திவ்யபாரதி மகனை முறைக்க, வித்யுத்தோ தோளைக் குலுக்கினான்.

“பாருங்க இந்தத் தைரியமும், திமிரும் தான் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி விட்டுட்டு வர அளவுக்கு வச்சிருக்கு இவனை” திவ்யபாரதி ஆத்திரத்துடன் கணவனிடம் சீற, வித்யுத்துக்கு நடந்தது என்னவென்று தெரியாமல் பேசும் அன்னை தந்தையின் மீது கட்டுக் கடங்காமல் கோபம் வந்தது.

முன் கோபமும், வெட்டி வீம்பும், வரட்டுப் பிடிவாதமும் உள்ளவன் அவன். சொல்லவா வேண்டும்?

“இது என்னோட பர்சனல்” என்று ஒற்றை வரியில் அன்னையிடம் எதிர்வினைத் தெரிவிக்க,

“வித்யுத்” என்று உறுமலாக வந்தது வெற்றியின் குரல். மனைவியை தானே அதட்டாதவன், மகன் சொன்னால் பார்த்துக் கொண்டு இருப்பானா?

“அவ உன் அம்மா அதை மனசுல வச்சிட்டு பேசு. உன் இஷ்டப்படி ஆடிட்டு உன்னோட பர்சனல்னு சொல்ற. ஒரு கலெக்டர் பண்ற வேலையைவா பண்ணி வச்சிருக்க. அவ்வளவு வீம்பு பாக்கறவன், இது எங்க காதுக்கு வராம நீ பாத்திருக்கணும். உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா இல்ல? அவளை நினைச்சிருந்தா ஒரு பொண்ணை இப்படி விட்டுட்டு வந்திருப்பியா?” மனதிற்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பு அனலாய் வெற்றியின் வாயில் இருந்து வர, வர்ஷித்தோ வித்யுத் எதுவும் பேசும்முன் அவனை அழைத்துச் செல்ல முற்பட, அனைத்தும் தோற்றது.

“இதை நீங்க சொல்றீங்களா ப்பா. அம்மாவை ஏமாத்தி விட்டுட்டு வந்த உங்களுக்கு இந்த கேள்வி கேக்கற அருக..” அவன் சொல்லி முடிக்கும் முன், ‘பளார்’ என்ற ஓசை அந்த அறையை நிரப்பியது.

வளர்ந்த மகனை கை நீட்டுவது தவறு என்று இத்தனை நேரம் ஆத்திரத்தைக் கட்டுக்குள் வைத்திருந்த, திவ்யபாரதியின் கரம் கணவனை சொன்னவுடன், தன் கையை மீறி இருந்தது.

“உங்க அப்பாவை சொல்ற உரிமை உங்களுக்கு இல்ல மிஸ்டர்.வித்யுத் வருணன். நீங்க சொல்ற மாதிரி அது எங்க பர்சனல். அப்படியே கேள்வி கேக்க நினைச்சாலும் அதோட உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு.”

“உன்னை இப்பவும் உங்க அப்பா எதுவும் கேட்காம, நிக்க வச்சு பேசிட்டு இருக்காரு பாரு, அவரை சொல்லணும். என் கண்ணு முன்னால நிக்காத வெளிய போடா” கர்ஜித்த திவ்யபாரதி கணவனிடம் திரும்ப, வெற்றியின் முகத்திலோ அடிபட்ட வலி.

“நீங்க எதுக்கு இப்படி நிக்கறீங்க. நம்மளை பத்தி இவனுக்கு என்ன தெரியும். நீங்க வெரசா போய் கல்யாணத்துக்கு ஆக வேண்டியதைப் பாருங்க” என்று கணவனிடம் பேசத் துவங்க, வர்ஷித் படாதபாடு பட்டு சகோதரனை வெளியே இழுத்து வந்தான்.

“வித்யுத், யாரோ மேல இருக்க கோவத்தை ஏன்டா அப்பா அம்மா மேல காட்டற.. நடந்தது நடந்திடுச்சு. இது கண்டிப்பா ஒரு நாள் பிரச்சனையா வரும்னு உனக்கே தெரியும். அதை சமாளிக்க நீ அப்பவே ரெடி ஆகியிருப்ப. அதை மட்டும் பாரு. யாழ் உனக்கு பொண்டாட்டி மட்டும் இல்ல. ஷீ இஸ் மை பிரண்ட். எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கங்க. ஆனா, இன்னொரு தடவை அம்மா அப்பாவை உன் வாய் தவறி பேசுன.. உனக்கு அண்ணன்னு ஒருத்தன் இல்லனு நினைச்சுக்க” என்றுவிட்டுச் செல்ல, வித்யுத்திற்கோ செய்த தவறு மண்டையில் உரைக்க, தந்தையின் அறைக்குள் நுழைந்தான்.

திருமண விஷயமாக பேசிக் கொண்டிருந்த இருவரும் மகனின் அரவத்தில் அவனைத் திரும்பிப் பார்க்க, “ஸாரி ப்பா” வித்யுத் தந்தையை அணைத்துக் கொள்ள, அந்த அணைப்பு தந்த இறுக்கத்திலும், அது உணர்த்திய செய்தியிலும், வெற்றியின் கரமும் மகனின் முதுகைத் தட்டியது.

ஏனோ இருபத்தாறு வயதிலும் மகனை குழந்தை போலவே நினைக்கத் தோன்றியது வெற்றிக்கு. அவனின் முன் கோபமும், வீம்பும், பிடிவாதமும் வெற்றி அறிந்தாலும், அதற்குப் பின்னே இருக்கும் கள்ளம் கபடமற்ற பாசத்தையும், தூய்மையான அன்பையும் தந்தையாய் இருந்து அறியாதவனா அவன். கணவனின் தோளில் சாய்ந்து இருக்கும் மகனை திவ்யபாரதி முறைக்க, அவனும் தந்தையின் தோளில் சாய்ந்திருந்தபடியே அன்னையை முறைத்தான்.

***

மகளை தங்கள் அறைக்கு அழைத்திருந்த ராஷ்மிகா, “உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்” என்றிட, அவளோ எங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள்.

மனைவி என்ன கேட்கப்போகிறாள் என்று அறியாத அஷ்வின் இருவரையும் பார்த்தபடி அமர்ந்திருக்க, அடுத்து மனைவி கேட்ட கேள்வியில், அவனின் ரத்த ஓட்டம் அதிகரித்து படீரென்று படுக்கையில் இருந்து எழுந்தான்.

“நீ இன்னும் எங்க பொண்ணாதான் இருக்கியா?” ராஷ்மிகா கேட்டதில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்த யாழ், அன்னையின் கேள்வியில் அதில் உள்ள அர்த்தம் உணர்த்திய வீரியத்தில், தலையில் யாரோ பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டது அன்னையை திகைத்துப் பார்க்க,

“ராஷ்மி” என்று கர்ஜனையுடன் வந்தது அஷ்வினின் குரல்.

“நீங்க கொஞ்சம் சும்மா இருக்கீங்களா.. ஒரு அம்மாவா எனக்கு இதைக் கேக்க உரிமையும் இருக்கு. கடமையும் இருக்கு” என்று கணவனை ராஷ்மிகா அடக்க, யாழ்மொழியின் கண்களில் இருந்து அருவியாய் வழிந்தது கண்ணீர்த் துளிகள்.

மனமோ பச்சை ரணமாய் வலிக்கத் தொடங்கியது.

எத்தனை பேரிடம் இருந்துதான் அவள் குத்தீட்டிப் பேச்சுக்களை வாங்குவாள். அதுவும் அன்னையின் கேள்வியில், ‘அந்த அளவுக்கு என் மேல நம்பிக்கை இல்லாம போயிடுச்சா’ என்ற எண்ணமே அவளின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

“சொல்லு. நீ இன்னும் எங்க பொண்ணா தான் இருக்கியா?” என்று கண்ணீருடன் கேட்க, உதடுகள் துடித்து, அழுகை கேவலாத மாறி, கோபமும் சேர்ந்து கொள்ள, “இன்னும் உங்க பொண்ணாதான் இருக்கேன் போதுமா. உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லைனா நான் ஹாஸ்பிடல் வர்றதுக்கு கூட தயார்” என்று இயலாமையுடன் கத்திவிட்டு அறையை விட்டு வெளியே வர, வித்யுத் நின்றிருந்தான்.

தன் அறைக்கு வந்தவனின் செவிகளில் யாழ் மொழியின் வார்த்தைகள் விழுந்திருக்க, அவளிடம் கேட்கப் பட்டிருக்கும் கேள்வி அவனுக்கு என்னவென்று புரிந்தது. எங்கோ மனதின் ஓரத்தில், ‘சுருக்’ என்ற வலியும் எழுந்தது.

அவளை ஏதோ உயிரற்ற பொருளைப் பார்ப்பது போல உணர்வில்லாது பார்க்க, “இப்ப உனக்கு நிம்மதியா. எந்த வீட்டுலையும் கேக்க கூடாத கேள்வியை என்னைப் பாத்து கேக்க வச்சிட்டியே” என்று கோபத்தோடு சீறியவள், தன்னறைக்குள் சென்று மறைய, வித்யுத்தோ தோளைக் குலுக்கிவிட்டு தன் வேலைகளைப் பார்க்கச் சென்றான்.