யாழ்-3

IMG-20210214-WA0021-c844701c

யாழ்-3

“ம்மா, என்னோட சாக்ஸ் எடுத்து வச்சிட்டியா?” என்று கேட்டபடி வந்த மகளைக் கண்டு கேலியாகச் சிரித்த ராஷ்மிகா,

“மேடம், சென்னைல எல்லாம் குளிராது சரியா. அதெல்லாம் அங்க தேவைப்படாது” உதட்டை வளைத்து சிரித்துச் சொல்ல,

“ம்கூம்…” எனத் திருப்பிக்கொண்டு போனாள் மகள். எல்லாம் அவளால்தான். யாழ்மொழியை பிறந்ததிலிருந்து சென்னைக்கு ராஷ்மிகா கூட்டிச் செல்லாததே அவளின் இந்த அறியாமைக்குக் காரணம்.

“ம்மா, அப்பா அங்க வருவாங்களா?” யாழ்மொழி மறுபடியும் அறைக்குள் ஓடிவந்து ஆர்வமாய்க் கேட்க,

“அப்பா அங்க வரமாட்டாருடா. நம்ம இங்க டெல்லி வந்த அப்புறம் வந்திடுவார்” ராஷ்மிகா சொல்ல, மீண்டும் சந்தோஷத்தில் சிட்டாய் பறந்தாள் வெளியே.

“ம்மா!” மறுபடியும் யாழ்மொழி உள்ளே ஓடிவர,

“அட என்னடி!” ராஷ்மிகா சலித்துக்கொள்ள, “சரண் அங்கிள் வந்திருக்காங்கம்மா!”

“சரி போ. டூ மினிட்ஸ்ல வந்திடறேன்” என்று பெட்டிகளை எடுத்தாள் ராஷ்மி.

“வாடா சரண்” என்றபடி வெளியே ராஷ்மிகா வர, அவனும் “வரேன் மேடம்” என்றான்.

சரண், பத்தாம் வகுப்பிலிருந்து ராஷ்மிகாவுடன் படித்து வருபவன். அவளின் உயிர்நட்பு. கல்லூரிப் படிப்பையும் ஒன்றாய் முடித்தனர். தற்போது சரணுடைய டெல்லியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் தான் வேலைபார்த்து வருகிறாள் ராஷ்மிகா. ராஷ்மிகா வந்து அமர, சரணுக்கு டீயை எடுத்து வந்தார் லஷ்மியம்மா.

“நல்லா இருக்கீங்களா ஆன்ட்டி?” சரண்,.அவரிடம் விசாரிக்க, “நல்லா இருக்கேன் தம்பி!” இருவரும் பரஸ்பரம் விசாரித்துக்கொண்டனர்.

“சரண் ஒன்வீக் லீவ்…உனக்கு ப்ராப்ளம் இல்லையே?” விசாரித்தாள் ராஷ்மிகா.

“அடடா! மேடம் ரொம்ப ஃபீல் பண்றீங்களா?“ கேலியாய் சரண் கேட்க, அதில் சீண்டப்பட்டவள், “ஃபீல் எல்லாம் ஒன்னுமில்ல. நீயே என் வேலையை சேர்த்து செய்டா. அந்த ரூம்ல சும்மா உட்கார்ந்து, உன்கிட்ட வேலை செய்ற பொண்ணுகளை சைட் அடிச்சிட்டு தானே இருக்க?” பட்டென்று வாயாடினாள் ராஷ்மிகா.

“உலகத்துலயே எம்.டிகிட்ட வேலை சொல்லிட்டு போற கொடுமை எனக்கு மட்டும்தான் நடக்கும்” சரண், தலையை தட்டிக்கொள்ள, அங்கே வந்த யாழ்மொழி,

“சரண் அங்கிள்! எனக்கும் இந்த சம்மர் லீவ்ல அசைன்மெண்ட் இருக்கு. அதையும் முடிச்சு வச்சிடுங்க!” சொல்லிவிட்டு ஓட, ராஷ்மிகாவோடு சேர்ந்து அங்குவந்த லஷ்மியம்மாவும் சிரித்துத் தள்ளினர்.

“இனி அடுத்து லஷ்மி ஆன்ட்டியும் எனக்கு வேலைத் தர்ரதுக்குள்ள கிளம்பிடுவோம்” சரண் போலியான பயத்துடன் அலற,

“அந்த பயம்” என்று மிரட்டியவள், “சரிஇரு! லக்கேஜை எடுத்துட்டு வரேன்” உள்ளே சென்ற ராஷ்மிகா, ட்ராலியை தள்ளிக்கொண்டு வந்தாள்.

“பை லஷ்மிம்மா! பத்திரமா இருங்க. ஏதாவது வேணும்னாலும் ஃபோன் பண்ணுங்க” என்ற ராஷ்மிகா அவருக்கு ஒரு தொகையை, அவர் கையில் மறுக்கமறுக்க கொடுத்தாள். மூவரும் ஏர்ப்போர்ட் கிளம்பினர்.

“ராஷ்மி சென்னைல ஏதாவது வேணும்னா கேளு” சரண் சொல்ல,

“அதான் பெரியப்பா, தம்பி இருக்காங்களே சரண். பட் ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா கண்டிப்பா கேக்கறேன். உன்னை நிம்மதியா விட்டா எனக்குத் தூக்கம் வராது” கண்களை உருட்டிக் கூறினாள் ராஷ்மிகா.

“சரி சரண். பை, நீ கிளம்பு!” அவன் வேலைகளை அறிந்தவளாய் விடைகொடுத்தாள் ராஷ்மிகா.

“சரி ராஷ்மி, பை. டேக் கேர். எல்லாரையும் கேட்டதா சொல்லு” சொன்ன சரண், யாழ்மொழியிடம் குனிந்து, “பை குட்டி!” என்று கன்னத்தைத் தட்டினான் செல்லமாக.

“ஓகே அங்கிள்..” சரணின் கையைப்பிடித்த யாழ்மொழி,“அங்கிள் அசைன்மென்ட மறக்காம பண்ணிடுங்க” என்று சொல்ல ராஷ்மிகா உதட்டை மடக்கி கேலியாக சிரிக்க,

அவளை முறைத்த சரண், “கண்டிப்பா யாழ். உன் அம்மாக்கு பண்ணமாட்டேன். ஆனா, உனக்கு கண்டிப்பா பண்ணிடுவேன்” என்றான் தோழியை பொய்யாய் முறைத்தபடி

அவனின் பதிலில் முறைத்த ராஷ்மிகா, “பை!” என்று திருப்பிக்கொண்டு யாழ்மொழியைக் கூட்டிக்போக, “இன்னும் மாறவே இல்லை இவ!” நினைத்து சிரித்தவன் கார்ப்பார்க்கிங்ஐ நோக்கி நடந்தான்.

அதேநாள் காலை சென்னையில்.

ஹர்ஷவர்தன் செல்பேசி அலறியது. இன்று அக்காவையும் அவனின் செல்ல குஜிலியையும் அழைத்து வரவேண்டிய முதல்வேலை அவனுக்கு. அழைத்து வர வேண்டுமென்று நினைத்திருந்தவன், செல்பேசியின் அழைப்பில் லேட்டாகி விட்டதோ என்று பதறியடித்து எழுந்தான்.

எழுந்து மணியைப் பார்க்க அதுவோ ஆறைத்தான் காட்டியது. இந்த அதிகாலை நேரத்தில் யாரென்று ஃபோனைப் பார்க்க, ஏதோ புதுநம்பர் தெரிய எடுக்கலாமா என்று அவன் யோசிப்பதற்குள் அது நின்றுவிட்டது. சரி தேவையென்றால் அவர்களே கூப்பிடுவார்கள் என நினைத்து மறுபடியும் அவன் பெட்டில் தலைசாய்த்த அடுத்தநொடி ஃபோன் அலறியது.

“அட யார்ராரா அவன் காலங்காத்தால..” முணுமுணுத்தபடியே ஃபோனை எடுத்தவன், எரிச்சலோடு “ஹலோ!” என்றான் தூக்கக் கலக்கத்திலேயே.

“ஹலோ!” எதிர்முனையில் வந்த குரலில் தூக்கம் கலைந்து சிலையாகி உட்கார்ந்தான் ஹர்ஷவர்தன்.

“என்ன பேச்சையே காணோம்?” நக்கலாக எதிர்பக்கமிருந்து குரல் வர,

“உனக்கு என்னடி வேணும்?” ஹர்ஷவர்தன் வெறுப்புடன் கேட்டான்.

“நீதான்டா வேணும்…” யோசிக்காமல் பதில்வந்தது அவளிடமிருந்து.

“கீர்த்தி!” பல்லைக்கடித்தான் ஹர்ஷவர்தன்.

“சொல்லு ஹர்ஷா” கூலாக வந்தது கீர்த்தியிடமிருந்து.

“எனக்கு உன்னைப் புடிக்கல கீர்த்தி” முகத்தில் அறைந்தாற்போல பதில் சொன்னான் ஹர்ஷவர்தன்.

“பொய் சொல்லாத ஹர்ஷா” கீர்த்தி இப்போது பல்லைக்கடித்தாள்.

“நான் ஏன் பொய் சொல்லணும்?” நக்கலாக ஹர்ஷா கேட்க,

“அப்போ நீ என்ன லவ் பண்ணலையா ஹர்ஷா?” கீர்த்தியின் குரல் கம்மியது.

“இல்லையே..” எழுந்துவந்து பால்கனியில் நின்றபடி சொன்னான்.

“அப்போ ஏண்டா என்கூட பழகுன? நீ என்கூட பேசுனது எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு ஹர்ஷா. நீ எனக்கு குடுத்த ஹோப் எல்லாமே. இத்தனை நாளா நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு உனக்கும் தெரியும்” அவள் பேச, அவனிடம் எந்தவித பதிலுமில்லை.

“ஹலோ டேய்ய், லைன்ல இருக்கியா?” கீர்த்தி அழைக்க அவனின் சிரிப்போ சத்தமாகக் கேட்டது.

“இங்க பாரு கீர்த்தி. நான் இதை உன்கிட்ட மட்டுமில்ல. பல பொண்ணுங்ககிட்ட சொல்லியிருக்கேன் போதுமா. இந்தமாதிரி பேசுன பொண்ணெல்லாம், நான் கல்யாணம் பண்ணிக்கனும்னா இந்நேரம் வீடு ஃபுல்லா என் பொண்டாட்டிங்கதான் இருந்திருப்பாங்க” என்றவன்,

“நீயே சொல்லு. இடைல உனக்கு வேற பையன் எவனும் கிடைக்கவே இல்லையா?” அழுத்தம் கொடுத்துக் கேட்க,

“கிடைச்சாங்க ஹர்ஷா. ஆனா, எல்லாரும் எனக்கு ஃப்ரண்ட்ஸா கிடைச்சாங்க. உன் இடத்துல வேற யாரையும் நான் வச்சது இல்ல” என்றவளின் குரலில் அத்தனை வேதனை.

சத்தமாக சிரித்த ஹர்ஷா, “என்ன நேத்துநைட் ஏதாவது நல்ல சென்டிமெண்ட் மூவிஸ் பாத்துட்டு வந்தியா?” நக்கல் வழிந்தோடக் கேட்டவன்,

“ஓகே ஓகே, ஜோக்ஸ் அப்பார்ட். இங்கபாரு கீர்த்தி. எனக்கு வேற பொண்ணு கூட கல்யாணம் ஃபிக்ஸ் ஆகப்போகுது. நீ வேற நல்லபையனா பாத்துக்கோ. நமக்கு செட் ஆகாது” என்றுரைக்க கீர்த்தியின் குரல் கோபமாய் வந்தது.
“ஏமாத்துறக்கு எதுக்குடா என்னை லவ் பண்?” கத்தினாள்.

ஏமாற்றத்தினால் வந்த கோபம்!

“ஏமாற்றது உன் தப்புடி. அதுவுமில்லாம நான் எப்போவாது உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லியிருக்கேனா?” கேலி கொப்பளிக்க கேட்க, கீர்த்திக்கு பழைய நினைவுகள் எழுந்தது.

எவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டான்?

‘அனைத்தும் பொய்யாய்?’ என்று நினைத்தவளுக்கு வலியின் வேதனை ஆக்ரோஷமாக மாறியது.

“உன்னை சும்மா விடமாட்டேன்டா” என்று வைத்துவிட்டாள்.

ஃபோனைக் கட்செய்தவன் சிறிதுநேரம் யோசனையாய் நின்றுவிட்டு, மணியைப் பார்க்க அது ஏழைக்காட்டியது. டீயைக் குடிக்கக் கீழே சென்றவன், “சித்தி டீ” என்று நியூஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு உட்கார்ந்து அதில் மூழ்கினான்.

ஹர்ஷா சென்னையில் உள்ள கம்பெனியில் வீடியோகேம் டெவலப்பராக இருக்கிறான். அவனின் திறமைக்கும் திறனிற்கும் சிறந்த சம்பளமே கிடைக்கிறது. குணத்தில் நல்லவன்தான். ஆனால், பெண்களிடம்தான் கொஞ்சம் பழக்கம் அதிகம். பழக்கமென்றால் சில்லாக ஊர் சுற்றுவான். போனில் அதிகநேரம் பேசுவான். ஆனால், எல்லையைத் தாண்டமாட்டான். இதுதான் அவன். அவனிற்கென்று ஒரு
எல்லையுண்டு. அதில் யாரையும் அனுமதிக்கமாட்டான். அவனும் அதை மீறமாட்டான்.

“இந்தாப்பா டீ” தனது சித்தி கல்யாணி எடுத்து வந்து டீயைக் குடித்தவன்,

“சித்தி, அக்கா கிளம்பிட்டாளா அங்க?” என்று கேட்க,

“கிளம்பிட்டன்னு சொன்னா ஹர்ஷா. நீ கிளம்பி வந்து சாப்பிட்டு போனா கரெக்டா இருக்கும்” கல்யாணி சொல்ல எழுந்து சென்று கிளம்பத் தயாரானான்.

****

“ஐஐ மாமா!” 3/4த்ஜீன் அண்ட் சர்ட்டில் அழகாக துள்ளலுடன் ஓடிவந்த அக்கா மகளைத் தூக்கிக்கொண்டான் ஹர்ஷவர்தன்.

“ஏய் குஜிலி எப்படி இருக்க?” இரண்டு தடவை மேலே தூக்கித்தூக்கி வீசிப்பிடித்தபடி அவன் கேட்க, “நான் நல்லா இருக்கேன் மாமா. தாத்தா பாட்டி எங்கே?” தனது திராட்சைக் கண்களை வைத்துத் தேடினாள் யாழ்மொழி.

“அவங்க வீட்ல குஜிலி. நாம இப்போ வீட்டுக்குப் போலாம்” என்றவன் ட்ராலியைத் தள்ளிக்கொண்டு வந்த அக்காவிடம், “வாக்கா!” என்று வரவேற்றான்.

“இவ்ளோ வெயிலா சென்னைல” வாயைப் பிளந்தபடி அன்னையின் மடியில் அமர்ந்து சென்னையை அளவெடுத்தபடி வந்தாள் யாழ்மொழி.

“அதான் நான் ஸ்வெட்டர், சாக்ஸ் எல்லாம் வேணாம்ன்னு சொன்னேன்” ராஷ்மிகா மகளை அணைத்தபடி சொன்னாள்.

“குஜிலி, மாமாக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்க?” என ஆரம்பித்தான் ஹர்ஷவர்தன். மகள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலோடு ராஷ்மிகா பார்க்க,

“இரண்டு மாடு பார்சல் வரும் மாமா” யாழ்மொழி சொல்ல, ராஷ்மிகா அடக்கமாட்டாமல் சிரிக்க ஹர்ஷவர்தனும் சிரித்துவிட்டான்.

“எப்பா, உன் பொண்ணு இப்படித் திருப்பி அடிக்கறாளே” ஹர்ஷவர்தன் சொல்ல,

“பின்ன என் மகள் ஆச்சே” தனது காலரில்லா குர்தாவை தூக்கிவிட்டாள் ராஷ்மிகா.

அண்ணா நகரிலுள்ள தங்கள் வீட்டிற்கு வர, “தாத்தா!” என்று அழைத்தபடி வாசலில் தங்களை எதிர்பார்த்திருந்த தாத்தா சிவக்குமாரிடம் ஓடினாள் யாழ்மொழி.

விஜயலட்சுமி, சிவக்குமார், கல்யாணி மூவரும் வரவேற்க உள்ளே வந்தமர்ந்த அனைவரும் ஒவ்வொருவரின் முகத்தை நிம்மதியாய் பார்க்கவே சிலநிமிடங்கள் பிடித்தன. உள்ளே சென்ற விஜயலட்சுமி கையில் ஒரு கின்னத்துடன் வந்து,

“ரொம்பநாள் அப்புறம் வந்திருக்க ராஷ்மி. முதல்ல இதை வாய்ல போட்டுக்க” ஒரு குலோப் ஜாமூனை ஊட்டிவிட்டார் ராஷ்மிகாவிற்கு.

“எனக்கு…?” யாழ்மொழி சிணுங்கி இழுக்க,

“குஜிலிக்கு பிடிக்குமேன்னு ஸ்பெஷலா ரசகுல்லா..” ஹர்ஷவர்தன் சொல்ல, கல்யாணி வந்து ரசகுல்லாவை எடுக்க அழகாக “ஆ” காட்டியது அந்த சின்னவாய். கல்யாணியே பேத்திக்கு ஊட்டிவிட ‘லொபக்’என்று இரண்டு ரசகுல்லா உள்ளே போனது.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க, “இது தான்மா ஹர்ஷாக்கு பாத்திருக்க பொண்ணு” சிவக்குமார் ராஷ்மிகாவிடம் பெண்ணின் ஃபோட்டோவைக் காட்டினார்.

“நல்ல அழகா இருக்கா பெரியப்பா” சொன்னவள், ஹர்ஷாவிடம் திரும்பி, “உனக்கு பிடிச்சிருக்குல ஹர்ஷா?” கேட்க அவனோ, “ம்ம், அக்கா” என்றான் யாழ்மொழியை மடியில் அமர்த்தி ஏதோ விளையாடியபடி.

“ராஷ்மி, இன்னிக்கு ஈவ்னிங் போயி உனக்கு நிச்சயதார்த்தம்-க்கு புடவையும் யாழுக்கு பட்டுப்பாவடையும் எடுத்துட்டு வரலாம்” என்றார் கல்யாணி.

“அதெல்லாம் எதுக்குமா? இருக்கறதே போதும்” என்றவளை விஜயலட்சுமியின் குரல் கலைத்தது.
“என்ன ராஷ்மி பேசற நீ? நம்ம வீட்டு விஷேசத்துக்கு வேணாம்ன்னு சொல்றியே” என்று அதட்ட,

“அதுக்கில்ல பெரிம்மா. நான் வெளில எங்கேயும் வரலை. வேணா யாழைக் கூட்டிட்டு போங்க. எனக்கு நீங்களே எடுத்திட்டு வந்திடுங்க” ராஷ்மிகா முடித்துவிட்டாள்.

“சரி, ராஷ்மியைத் தொந்திரவு பண்ணாதீங்க. ரெஸ்ட் எடுக்கட்டும்” என்ற சிவக்குமார் ராஷ்மிகா அறியாவண்ணம், வீட்டுப்பெண்களிடம் எதுவும் பேசவேண்டாம் என்பதுபோல ஜாடை செய்தார்.

மாலை எல்லோரும் கிளம்ப யாழ்மொழி வேலையைக் காட்ட ஆரம்பித்தாள்.

“ம்ஹூம்! அம்மா வராம நான் வரமாட்டேன்” என்று குளித்து முடித்து விட்டு உடையைப் போடாமல் அடம்பிடிக்க ஆரம்பித்தாள். கல்யாணியும் விஜயலட்சுமியும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருந்த மகளைக் கண்டு கோபம் வந்தது ராஷ்மிகாவிற்கு.

“யாழ் என்ன இது? பெரியவங்க சொன்னாக் கேக்க மாட்டியா? இதான் ஸ்கூல்ல போய் கத்துகிட்டு வரியா?” என்று அதட்ட சிறுமியின் முகம் அன்னையின் குரலில் தொய்ந்தது.

மகள் பேசாமல் இருப்பதைக்கண்ட ராஷ்மிகா, “நீ ஒன்னும் போக வேண்டாம். என்கூட இரு!” என்று சத்தம்போட, கண்களின் ஓரம் நீர் துருத்திக்கொண்டு அழும் நிலைக்கு ஆனாள் யாழ்மொழி.

எப்போதுமே அம்மா, மகளுக்கு சண்டை வருவதுதான். ஆனால், அதில் ராஷ்மிகாவின் பேச்சே வேறுமாதிரி இருக்கும். ஆனால், இன்று அன்னையின் பேச்சுத் தொணியைக் கண்ட யாழ்மொழிக்கு கண்கள் கரிக்க ஆரம்பித்தன.

அதற்குள் அங்குவந்த சிவக்குமார், “அடடா! பட்டுக்குட்டியை யார் என்ன சொன்னா?” கேட்டபடியே தூக்கிக்கொள்ள, நடந்த அனைத்தையும் அன்னையை முறைத்தபடியே சொல்லி முடித்தாள் யாழ்மொழி.

“ஏம்பா, நீதான் பாப்பா கூப்பிட்டா வர வேண்டியதுதானே. இப்படித்தான் நீயும் போகவேணாம்னு சொல்லுவியா?” லேசாகக் கடிய இப்போது ராஷ்மிகாவின் முகம் கூம்பியது. அவரவர் பெற்றோர் அதட்டும்போது எத்தனை வயதானாலும் அனைவரும் குழந்தைதான் போல.

“அதான் பெரியப்பா சொல்றாருல. வரலாம்ல” கல்யாணியும் மகளை அதட்ட, தலையை ஆட்டினாள் ராஷ்மிகா. அனைவரும் பாண்டிபஜார் கிளம்பினர்.

விலை அதிகமுமில்லாமல், கம்மியுமில்லாமல் நடுத்தர விலையிலேயே சேலையைப் பார்த்தாள் ராஷ்மிகா.

ஏனெனில், முதல்தடவை வந்திருப்பதால் கண்டிப்பாக யாழிற்கு நிறைய வாங்கிக் குவிப்பார்கள் என்று நினைக்க அதுவே நடந்தது. ஏற்கனவே நிச்சயம் அதுஇது என செலவு என்று நினைத்தவள் நடுத்தர விலை பட்டுசேலையையே எடுத்தாள்.

அவர்களும் வசதியில் குறைவானவர்கள் இல்லை. லோவர் ஹை-க்ளாஸ் வாழ்க்கையே. இருந்தாலும்,இருபத்தியாறு வயதாகியும் அவர்களின், பணத்தில் அதிகம் வாங்க அவளுக்கு பிடிக்கவில்லை.

“மாமா, ஐஸ்க்ரீம் வேணும்” தனக்கு பட்டுப்பாவாடை எடுத்தவுடன் யாழ்மொழி ஹர்ஷவர்தனின் காதைக் கடிக்க,

“சரி, நீங்க எல்லாம் எடுத்துட்டு வாங்க. நானும் குஜிலியும் கொஞ்சம் வெளியில போறோம்” அக்கா மகளைக் தூக்கிக்கொண்டு வெளியே வந்தவன், யாழ் கேட்ட ஐஸ்கிரீமை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவள் நெற்றியில் முன் விழுந்த முடிகளை ஒதுக்கிவிட்டபடி நின்றான்.

“ஹர்ஷா” என்ற குரலில் யாழ்மொழியுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டபடியே பேசிக்கொண்டிருந்தவன் திரும்ப அதிர்ந்தான்.

மனதிற்குள் மின்னலென தோன்றித் தாக்கிய அதிர்ச்சியை மறைத்து, “எஸ், யார் நீங்க?” என்றான்.

“சும்மா நடிக்காதடா. காலையில தான பேசுன?” கீர்த்தி குரலைத் தாழ்த்தி பல்லைக்கடித்துப் பேசினாள்.

“காலையில ஏதோ சும்மா விடமாட்டேனு சொன்ன. இப்ப என்ன?” இளக்காரமாய் கேட்க,

“கோவத்துல சொல்லிட்டேன் ஹர்ஷா. சாரி! உன் மனசத்தொட்டு சொல்லு. நீ என்னை லவ் பண்ணலன்னு. எனக்கு அதுக்கு மட்டும் உண்மையை சொல்லு ஹர்ஷா” கீர்த்தி கேட்க,
“உனக்கு ஒருதடவை சொன்னாப் புரியாதாடி. சும்மா இங்க பப்ளிக் ப்ளேஸ்ல ஃபாலோ பண்ணிட்டு வந்து சீன் க்ரியேட் பண்ணிட்டிருக்க.” ஹர்ஷவர்தன் சீற,

“நான் ஒன்னும் ஃபாலோ பண்ணிட்டு வரல ஹர்ஷா. நான் ஷாப்பிங் பண்ண வந்தேன்”அவள் சொல்ல அவனோ இகழ்ச்சியாய் சிரித்தான்.

“அதான் பாரு. உனக்கு ஃபீலே இல்ல. இப்படியே தினமும் ஷாப்பிங் போனா. நானெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கமாட்டேன்” கூலாக ஹர்ஷவர்தன் அறிவுரைத் தர, வந்த கோவத்தை அடக்கியவள் வாயில் வந்த வார்த்தையை அடக்கிவிட்டு சென்றுவிட்டாள்.

அவள் சென்றவுடன் திரும்பியவன், அப்போதுதான் அக்கா மகளை கவனித்தான். ‘அய்யய்யோ அக்கா மகளை மறந்துட்டனே. காதுல விழுந்திருக்குமோ’ மனதிற்குள் பகீரென்று இருக்க யாழை ஊன்றிப் பார்த்தான்.

ஆனால், அவளோ ஐஸ்கிரீமை தனது அன்னத்தால் நக்கி, அதன் குளுமையை அனுபவித்து சவைத்து விழுங்கிக்கொண்டிருந்தாள்.

‘அப்பாடா, பாக்கலபோல’ நினைத்தவன் அன்னைக்கு ஃபோன் செய்து, “எவ்வளவு நேரம் பண்ணுவீங்கம்மா?” என்று சிடுசிடுத்தான்.

“அட பில் போட்டாச்சு இருடா. வந்துட்டோம் பாரு, வெளில” விஜயலட்சுமி சொல்ல, வெளியேதான் வந்துகொண்டிருந்தார்கள். வெளியே வந்த ராஷ்மிகாவின் முகமோ வெளிறியிருந்தது.

காரில் ஏறியவளிடம், “ஏன் ராஷ்மி ஒரு மாதிரி இருக்க?” கல்யாணி கேட்க, தலைவலியென்று சொல்லி சமாளித்தாள்.

இரவு உணவை அனைவரும் முடித்தவுடன் ‘எங்கே போனாள்?’ என்று கல்யாணி மகளைத்தேட, ராஷ்மிகாவோ ஐந்துவருடங்களுக்கு முன்னால் மறைந்த, தந்தை படத்தின் முன்னால் நின்றிருந்தாள்.

“ராஷ்மி” என்றுத் தோளைக் கல்யாணி தொட, திரும்பிய ராஷ்மிகாவின் முகத்தில் வெறுமை.

“ஏன்டா ஒருமாதிரி இருக்க?” மகளின் தலையை அக்கறையுடன் வருடியபடிக் கேட்க,

“என்னால அப்பா இல்லாததை இன்னும் ஜீரணிக்க முடியலம்மா” கண்களை இறுகமூடினாள். அழுவது என்று அவளுக்கு பிடிக்காத ஒன்று. அதனாலேயே அழுகையை அடக்கி உள்ளே வைத்தாள்.

மகளின் வேதனையை உணர்ந்தவர், “நடந்ததை எதையும் மாத்த முடியாது ராஷ்மி. எல்லாத்தையும் கடந்து வரணும் நாம. மறக்க முடியாது தான். ஆனா, நான் உன் அப்பாக்கூட நாம இருந்த நல்ல சந்தோஷமான தருணத்தை மட்டும் இப்போ வச்சிட்டு வாழறேன்” மகளை அணைத்து ஆறுதல் படுத்தியவர்,

“போ, பால் காய்ச்சி வச்சிருக்கேன். நீயும் குடிச்சிட்டு பாப்பாக்கும் குடு” கல்யாணி சொல்ல அங்கிருந்து அகன்றாள்.

“ஏய்! அடம் பண்ணாம இங்க வந்து பாலைக் குடிச்சிட்டு போடி” மகளின் பின்னாலேயே சென்றாள் ராஷ்மிகா.

“மாட்டேன். நான் மாட்டேன்” யாழ் நடக்க, அவளின் பின்னேயே நடந்து கொண்டிருந்தவள், ஒரு வழியாய் அவளைப் பிடித்து கெஞ்சிக் கொஞ்சி பாலைக்கொடுத்தாள் ராஷ்மிகா.

“நீ பால் குடிச்சியா ராஷ்மி?” விஜயலட்சுமி கேட்க,

“ஆச்சு பெரியம்மா” யாழைத் தூக்கிக் கொண்டு குடு குடுவென தன் அன்னையின் அறைக்குள் சென்று புகுந்துகொண்டாள்.

ராஷ்மிகாவிற்கு பாலே பிடிக்காது. அதனாலேயே விஜயலட்சுமி கேட்டார். ஆனால், ராஷ்மிகாவோ யாழிற்கும் மேல். அவளிற்கு வைத்ததை வீட்டின் பின்னாலிருக்கும் ஒரு பூனைக்கு வைத்துவிட்டாள்.

அன்னையின் பக்கத்தில் மகளுடன் சென்று படுத்தவள், பல நாளிற்கு பிறகு கண்களை விரைவாக மூடினாள். அடுத்து வரப்போகும் கலக்கத்தை அறியாமல் குடும்பமே சிறிது நிம்மதியில் தூங்கியது.