யாழ்-31(3)

யாழ்-31(3)

பத்து வருடங்களுக்கு பிறகு!!

பதிமூன்று வயது பருவ மங்கையாய் தனுஷ்யா நாற்காலியில் அமர்ந்திருக்க, அவளுக்கு சீர் நடந்து கொண்டிருந்தது.

வேதா அத்தை முறையில் அனைத்து சீர்களையும் மனம் நிறைய செய்து கொண்டிருக்க, வெற்றி, அஷ்வின், ஹர்ஷா, சதீஷ் நால்வரும் ஒரு பக்கம் பட்டு வேஷ்டி சட்டையில் ஜொலித்துக் கொண்டிருக்க, ராஷ்மிகா, திவ்யபாரதி, தர்ஷினி, கவிநயா ஒருபுறம் தங்களுக்குள் பேசியபடி சிரிப்பும் கலகலப்புமாக உறவினர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, தனுஷ்யாவோ அன்னையின் அழகையும், தந்தையின் வசீகரத்தையும் கொண்டு பொம்மையாய் அமர்ந்து கொண்டிருந்தாள்.

அவளுக்கு தன் தம்பி தங்கைகள் மட்டும் விளையாடிக் கொண்டிருக்க, தான் உட்கார வேண்டிய நிலையை எண்ணி அலுத்துக் கொண்டிருந்தாள்.

பூஜா, யாழ், பிருந்தா ஒரு பக்கம் அழகு நிலாக்களாய் உலா வந்து கொண்டிருந்தனர்.

வித்யுத், வர்ஷித், மித்ரன் ஒரு பக்கம் நின்றிருக்க, தனது மூன்று வயது சிங்கக் குட்டியை தூக்கியபடி வந்த த்ரூவ், “மாமா! ஆதிஷா எங்க?” கேட்க, சுற்றியும் முற்றியும் பார்த்த வித்யுத், அங்கு வந்த அபிஜித்தை அழைத்து,

“மொழியாழும், ஆதிஷாவும் எங்க?” கேட்க அவனோ சித்தியிடம் ஓடிச் சென்று எதையோ சொல்ல, அவனை அழைத்துக் கொண்டு , வீட்டிற்கு பின்னே சென்றாள் யாழ்.

“உன் மண்டையை உடைக்காம விடமாட்டேன்டா” ஆதிஷா அத்தை மகன் (வேதா மகன்) அக்ஷயை அடிக்கச் செல்ல, அவன் வாயில் விட்ட குத்தில், வாயை மூடிக் கொண்டவள், கல்லை எடுத்து அவன் மேல் வீச, இருவரையும் தடுத்துக் கொண்டிருந்த வருணமொழியாழ் மீது அதுபட்டது.

ஓடிச்சென்று ஆதிஷாவை இழுத்த யாழ், “அப்படியே விட்டேன்னா.. ஆளையும் சைஸையும் பாரு.. மண்டையை உடைக்கிறாளாம்..” என்றவள் அக்ஷயிடம், “என்ன தங்கம் பண்ணா இந்த ரௌடி உன்னை” என்றவள் பெரிய மகளுக்கு காயம் ஆனதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எப்ப பாரு. அவனுக்கு சப்போர்ட் பண்ற. இரு தாத்தாகிட்ட சொல்றேன்” கை கால்களை உதைத்துக் கொண்டு ஆதிஷா செல்ல, “பர்ஸ்ட் அவரை தான் நாலு விடணும்” யாழ் சொல்ல, அபிஜித், மொழியாழ், அக்ஷய் மூவரும் சிரித்தனர்.

மொழியாழ் எப்போதுமே அமைதி. அன்னையும் தந்தையும் இருப்பதற்கு, அவள் அப்படியொரு அமைதி. விதியின் செயல்தான் அது! 0

அபிஜித், அனைவருக்கும் பாசக்கார அண்ணனாகிப் போனவன். என்ன சண்டை நடந்தாலும் முதலில் அவன் செல்வது சித்தியிடமே. ஏனெனில் இவர்களுக்குள் இருக்கும் சண்டையை தீர்க்கவே முடியாது என்பதை இந்த வயதிலேயே புரிந்து வைத்த கெட்டிக்காரன்.

அக்ஷய் பிறந்து இரண்டு வருடம் கழித்து, வித்யுத் யாழ்மொழிக்கு பிறந்த இரண்டாவது புதல்வி ஆதிஷா. மொழியாழுக்கு கொடுக்காத அத்தனை குறும்பையும், வாயையும் கடவுள் இவளுக்கு கொடுத்திருப்பான் போல.

அதனாலேயே அக்ஷயுக்கும் அவளுக்கும் முட்டிக்கொள்ளும்.

அஷ்வினிடம் சென்று அவள் கீச்குரலில் குற்றப்பத்திரிகை வாசிக்க, “சரிடா குட்டி. நாம அம்மாவை திட்டலாம்” என்று சமாதானம் செய்து கொண்டிருக்க, அங்கு வந்த யாழ் இரண்டாவது மகளை கொட்டிவிட்டுச் செல்ல, “தாத்தா! இந்த அம்மா எனக்கு வேணாம்” கத்த, வித்யுத்தோ, “டபுள் ஓ.கே” மகளிடம் சொல்ல, வித்யுத்தின் தலையிலும் கொட்டுக்கள் விழுந்தது.

ஆனால் கொட்டியது அபிஜித், அக்ஷய், மொழியாழ். மூவரும் அவனை மிரட்டிவிட்டுச் செல்ல, “டேய் ஏன்டா எங்கப்பாவை கொட்டுனீங்க. இருங்கடா வர்றேன்” என்று ஆதிஷா துள்ள, அஷ்வினுக்கு பேத்தியை அடக்க பெரும்பாடு ஆகிப்போனது.

அங்கிருந்த அனைவரும் அதில் சிரிக்கத் துவங்க, தந்தையை குனிய சொல்லி அவனின் தலையை தேய்த்துவிட்டவள், “வலிக்குதா ப்பா” கேட்டாள். “இல்லடா தங்கம்” அவன் சொல்ல, தந்தையின் தலையில் நங்கென்று கொட்டியவள், “உன்னை நான் மட்டும் தான் அப்பா கொட்டுவேன்” என்று ஓட, அங்கிருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

‘நான் பெத்தது எல்லாம் அவ அம்மா பக்கமதான் நிக்குது’ என்று புலம்பியபடி தலையைத் தேய்த்தவன், தன்னை கேலியாக்ப் பார்த்துக் கொண்டிருந்த மாமனாரை முறைத்தான்.

அன்றிரவு இருகுடும்பமும் வெற்றி வீட்டின் வரவேற்பறையில் பேசிச் சிரித்துக் கொண்டு படுக்க, ஆதிஷா அக்ஷயை கிள்ளி வைத்துவிட்டு கண்ணை மூடிக்கொள்ள, அவனோ அவளைக் கொட்டிவிட்டு அன்னையை அணைத்துக் கொண்டு படுக்க, மகளின் வம்பை பார்த்த யாழ், அவளைத் தன் பக்கம் திருப்பிப் படுக்க வைத்தாள்.

அனைவரும் ஒவ்வொன்றாய் பேசி, கதைகள் கதைத்து, பழைய நினைவுகள் பேசித் தூங்க, அவ்வீட்டின் இளம் வாரிசுகளும், அவர்களின் பெற்றோர்களும் பெரியவர்களின் மனதை நிரைத்து நிறைந்திருக்க, தூக்கமில்லா பேசும் இரவுகள் கூட, அவர்களுக்கு சொர்க்கமாய். புரிந்து கொண்ட ஒவ்வொரு உறவுகளும், ஒவ்வொரு உறவையும் அழகாய் பார்த்துக்கொள்ள, பாசத்தின் இருப்பிடமாய இருந்தது இரு குடும்பமும்.

*முற்றும்*