யாழ்-4
யாழ்-4
யாழ்-4
புதன்கிழமை வந்தது.
நிச்சய வேலைக்கு எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது. மாப்பிள்ளை வீட்டிலேயே நிச்சயத்தை வைத்துக்கொள்ளலாம் என்று இருவீட்டாராலும் முடிவு செய்யப்பட்டிருக்க, ஹர்ஷவர்தன் வீட்டிலேயே எல்லா ஏற்பாடுகளும் ஆனது.
பட்டுபாவாடையில் மானாகத்துள்ளி அட்டகாசம் செய்துகொண்டு இருந்தாள் யாழ்மொழி.
“யாழ்! ஒரு இடத்துல உக்காரு. சும்மா விளையாடிட்டே இருக்காத” ராஷ்மிகா சொல்ல, “போம்மா” அன்னையை விரட்டியவள்,
“போர் அடிக்குதும்மா” என்றவளை, “சரி போய் மாமா என்ன பண்றான்னு பாத்துட்டுவா” என்று மகளுக்கு வேலையைக் கொடுத்து அனுப்பினாள் ராஷ்மிகா.
ஹர்ஷவர்தன் அறைக்குள் யாழ் நுழைய, தலையை சீவிக்கொண்டு இருந்தவன், “ஹே! புது ட்ரெஸ் க்யூட்டா இருக்கு குஜிலி” மாப்பிள்ளைக்கே உண்டான உடையுடன் வந்தவன், யாழ்மொழியைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தான்.
“ஹர்ஷா, அவளை இறக்கி விடு. உன் சட்டை கசங்கிடும்” ராஷ்மிகா சொல்ல யாழ்மொழி சிணுங்கினாள்.
“அச்சோ! அக்கா பாரு, உன் பொண்ணு என்னைக் கட்டிக்க முடியலன்னு அழறா! கவலைப்படாத குஜிலி. இப்பவே உன்னக் கல்யாணம் பண்ணிக்கறேன்” ஹர்ஷா சொல்ல,
“என்னடி என் தம்பிய கட்டிக்கறியா?” ராஷ்மிகா கேட்க,
“ஐய்யய்யோ! நான் மாட்டேன் போ” தன் சிறிய கரங்களால் ஹர்ஷவர்தனின் கன்னத்தில் ஒரு குத்துவிட்டாள் யாழ். அதற்குள் பெண் வீட்டார் வர, “வாங்க” என்றபடி முன்னால் வரவேற்க சென்றார் சிவக்குமார்.
உள்ளே நுழைந்த அனைவரையும் எல்லோரும், “வாங்க!” என்று வரவேற்றனர். ஏற்கனவே பெண்ணைப் பார்த்திருந்ததால் ஹர்ஷாவும், “ஹாய்” என்று ஒரு பிட்டைப்போட்டான் அந்தப் பெண்ணிடம்.
நல்லநேரம் வர, பையன் பெண் இருவரையும் அழைத்து மோதிரத்தை மாற்ற சொன்னார் பெண் வீட்டிலிருந்து வந்த பெரியவர். விஜயலட்சுமி மோதிரத்தை எடுத்து மகன் கையில் தந்துவிட்டு, அடுத்த மோதிரத்தை எடுத்து பெண் கையில் தரும்முன், “இந்த நிச்சியத்தை நிறுத்துங்க!” என்ற அழுத்தமான குரலில் அந்த திசையை நோக்கித் திரும்பினர் அனைவரும்.
ஆம்!
வந்திருந்தவள் ஹர்ஷவர்தனால் ‘கீர்த்தி’ என்று அழைக்கப்படுபவள் தான்.
கீர்த்தனாவைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைய,“யாரம்மா நீ?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.
“நான் யாருன்னு இதோ, இங்க நிக்கறானே இவனைக் கேளுங்க”
ஹர்ஷாவைக் கைகாட்டிச் சொல்ல, ஹர்ஷாவோ அசராமல் அவளைப் பார்த்தபடி நின்றான். அவளும் சளைக்காமல் அவனை முறைத்துத் தள்ளினாள்.
“என்னம்மா? என்ன விஷயம்? நல்ல விஷேசம் நடக்கிற இடத்துல வந்து என்ன பேசற நீ” பெரியவர் கேட்க,
“இவன் என்ன லவ் பண்ணி ஏமாத்த பாக்கறான். நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு பேசிப்பாத்துட்டேன். அதான் இன்னிக்கு எல்லாரையும் வச்சுப் பேசனும்னு வந்துட்டேன்” கீர்த்தி குற்றம்சாட்ட,
“கீர்த்தனா! எங்க வந்து என்னப் பேசற? என் தம்பிய பத்தி தப்பா” ராஷ்மிகா முடிப்பதற்குள்,
“நீங்க உங்க வேலையை மட்டும் பாக்கறீங்களா? உங்க வாழ்க்கைக்கு உள்ள நான் தலையிட்டா சும்மா இருப்பீங்களா? பர்ஸ்ட் அத சரி பண்ணி உங்க புருஷனோட வாழ ட்ரை பண்ணுங்க” கோபத்தில் கீர்த்தி பல்லைக் கடிக்க, ராஷ்மிகாவைப் பேசியதில் ஹர்ஷாவின் பொறுமை காற்றில் பறந்தது.
“ஏய்ய்ய்!” என்று அவளை நோக்கி ஆக்ரோஷமாக கையை ஓங்கிய ஹர்ஷவர்தன், தந்தை சிவக்குமாரின் தீப்பார்வையில் கையை தானாக கீழே இறக்கினான்.
கீர்த்தனாவின் பேச்சில் தலைகுனிந்த ராஷ்மிகா வேதனையை அடக்க, யாழ்மொழி வந்து அவளது காலைக் கட்டிக்கொண்டாள்.
மகளின் முகத்தைப் பார்க்க முடியாத ராஷ்மிகா கண்களை மூடிக் கொண்டு நின்றுவிட்டாள். எதையும் புரிந்து கொள்ளும் கற்பூர புத்தி கொண்ட மகள், கீர்த்தனா சொன்னதையும் புரிந்திருப்பாள் என்று நினைக்கும்போதே குன்றலாக இருந்தது ராஷ்மிகாவிற்கு.
மனம் சுணங்கி சுருங்கியது.
“அம்மா, மாமா இந்த ஆன்ட்டிகூட அன்னிக்கு ட்ரெஸ் எடுக்க போனப்ப பேசுனாங்க. நான் பாத்தேன்” யாழ் அனைவரின் முன்னால் குட்டைப் போட்டு உடைக்க அதற்கு மேலும் பெண்வீட்டார் அங்கு இருப்பார்களா என்ன?
அவர்களுக்குள் சலசலப்புடன் பேசியவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினர்.
அதுவே பெரிய அவமானமாய் அனைவரும் உணர, கீர்த்தனா மட்டும், “நான் கிளம்பறேன்” என்று திரும்ப, அவளின் கையைப்பிடித்து முரட்டுத் தனமாய் திருப்பிய ஹர்ஷா “எங்கடி போற?” என்று அடிக்குரலில் உறுமினான்.
“இங்க வந்து சீன் கிரியேட் பண்ணிட்டு இப்போ போறியா?” சத்தம்போட அமைதியாய் நின்றாள் அவள்.
“நான் சீன் க்ரியேட் பண்ணல. நீ, என்னை பண்ண வச்சுட்ட” சொன்ன கீர்த்தி அவனை எரிக்குப் பார்வையோடு முறைத்தாள்.
“ஹர்ஷா! அந்தப் பொண்ணு வீட்டுக்குக் கூப்பிட்டு எல்லாரையும் வரச்சொல்லு” சிவக்குமார் இரும்பை விட உறுதியான குரலில் கட்டளையிட
“அப்பா!”, “பெரியப்பா!” என்று ஹர்ஷவர்தனும் ராஷ்மிகாவும் ஒருசேர அதிர்ந்தனர்.
“இதுதான் என் முடிவு ஹர்ஷா. இன்னிக்கு இந்த நிச்சயதார்த்தம் நடந்தே ஆகணும்” திட்டவட்டமாய்க் கூறினார்.
“இல்ல. நான் போகணும்” குரலை தாழ்த்தியபடி கீர்த்தனா சொல்ல,
“ஏன்மா? வந்து எல்லார் முன்னாடியும் சொல்லத் தெரிஞ்சுதுல” என்றவர், “நான் உங்க வீட்டுல பேசியே ஆகணும். வரச் சொல்லுமா!” உத்தரவிட்டு உட்கார்ந்துவிட்டார்.
அவரின் குரலில் சிறிது பதட்டம் வந்தது கீர்த்தனாவிற்கு. அவர் நிச்சியம் என்கிறாரே. அவள் இதை எதிர் பார்க்கவில்லையே.
கீர்த்தனாவை முறைத்த ஹர்ஷவர்தன், “அதான் சொல்றார்ல. ஃபோன் பண்ணி உங்க வீட்டுல வரச்சொல்லு” அதட்ட, வேறுவழியில்லாமல் ஃபோனைப் போட்டாள் கீர்த்தி.
அவளுக்கு வீட்டில் சொல்ல பயமென்று எதுவுமில்லை. ஆனால், ஹர்ஷாவின் அப்பா, ‘இன்றே.. இந்த நிச்சியம் நடக்க வேண்டும்’ என்பதுதான் திக்கென்று இருந்தது.
அவள் ஃபோன் பேச வெளியே செல்ல, அதற்குள் யாழ்மொழியின் அழுகுரல் வீறிட்டுக் கேட்க எல்லோரும், ‘என்னாச்சு’ என்றபடி சத்தம் வந்த அறையை நோக்கி ஓடினர்.
“சொல்லு. இனிமேல் வாயைத் திறப்பியா?” கையில் கிடைத்த ஒரு க்ளாஸ் ஸ்கேலை வைத்து யாழ்மொழியை அடித்துக் கொண்டிருந்தாள் ராஷ்மிகா.
தேவையில்லாமல் மகள் பேசியதைக் கேட்டுவிட்டு பெண்வீட்டார் சென்றதை நினைத்த ராஷ்மிகாவிற்கு கோபம் கோபமாக வந்தது. அதை மகளின் மேல் காட்டினாள்.
“சொல்லு இனி வாயைத் திறப்பயா?” என்று அடிக்க, வேகமாய் வந்த ஹர்ஷவர்தன், “அக்கா லூசா நீ. இப்ப எதுக்கு தேவையில்லாம யாழை அடிக்கற” என்றவன் கையிலிருந்த ஸ்கேலைத் தூக்கி எறிந்தான்.
“பின்ன? தேவையில்லாம இவ பேசுன வாயால என்னாச்சு பாத்த இல்ல? எங்க என்ன பேசணும்னு தெரில” கோபமாய் பேசிய ராஷ்மிகாவின் கண்ணில் கண்ணீர் கீற்று உருவாக, ஹர்ஷா தலையை அழுந்தக் கோதினான்.
“நாலுவயசு குழந்தையை இருபதுவயது பொண்ணு மாறி பண்ணச் சொல்லாதக்கா. இங்க சிலதுக்கு எல்லாம் வயசாகியும் அறிவில்லாம இருக்குங்க” என்று ஃபோன் பேசிவிட்டு வந்த கீர்த்தனாவைப் பார்த்து ஹர்ஷா சொல்ல, அவளோ தலைகுனிந்தபடி நின்றாள்.
குழந்தையைத் தூக்கிக்கொண்ட விஜயலட்சுமி, “இப்ப எதுக்கு நீ
பிள்ளையை அடிக்கற? எங்கயோ இருக்கற கோபத்த, பிள்ளை மேல காட்டுவியா நீ?” என்று ராஷ்மிகாவைத் திட்டினார்.
எல்லாவற்றையும் பார்த்த சிவக்குமார் அமைதியாகவே நின்றார். எதையும் பேசும் நிலையில் அவரில்லை.தொண்டையைச் செறுமியவர் கீர்த்தனாவைக் கண்டு, “வீட்டுல சொல்லிட்டியாமா?” என்று கேட்டார்.
“சொல்லிட்டேன் அங்கிள்” என்றவள் மௌனமாய் விஜயலட்சுமி தோளில் சாய்ந்து விக்கியபடி அழுத குழந்தையைக் கண்டாள்.
அருகில் சென்று குழந்தையைப் வாங்கப்போக அவளின் கையைப் பற்றிய ஹர்ஷா, அவளது மணிக்கட்டு கன்றும் அளவிற்கு முரட்டுத் தனமாக, அவளைத் தரதரவென்று ஹாலிற்கு இழுத்துபோக, அவனிடம் இருந்து கையை உருவ, அவனைவிடக் கோபத்தோடு கையை இழுக்க முயற்சி செய்ய, அவனிடம் அது செல்லுபடி ஆகவில்லை.
அவனின் முரட்டுத்தனைத்தைக் கண்ட அவனின் குடும்பத்தாருக்குமே பயமாக இருந்தது. கீர்த்தியை அழைத்து வந்து நடுஹாலில் நிறுத்தியவன், “எங்க வீட்டுக்குள்ள கண்டதை விடமாட்டோம். நீ, உன் வீட்டுல இருக்கவங்க வர்ற வரைக்கும் வெளில நில்லு!” வேண்டும் என்றே அவமானப்படுத்த, கற்சிலைபோல நின்றாள் கீர்த்தனா.
அவன் வார்த்தைகளை எல்லாம் அவள் மனதில் பதித்துக்கொண்டே இருந்ததை அவன் அறியவில்லை. அதற்கான கேள்வி வரும்போது என்ன பதில் சொல்வான் என்பதையும் அவன் அறியவில்லை.
“ஹர்ஷா!” அனைவரும் அதட்ட எல்லோரையும் கையுர்த்தி அமர்த்தியவன், “இந்த விஷயத்துல யாரும் தலையிடாதீங்க!” என்றான்.
அவள் அப்படியே நிற்க தரதரவென்று வெளியே இழுத்துச் சென்றவன் அசையாமல் நின்றான். காரணம் கீர்த்தனாவுடைய குடும்பம் வந்து விட்டது.
காரில் இருந்து இறங்கியவர்கள் வரும் போதே ஹர்ஷவர்தன், கீர்த்தனாவை இழுத்து வந்ததைக் கண்டுவிட்டனர். அவர்கள் வந்ததை உணர்ந்த சிவக்குமார், “ராஷ்மி! பாப்பாவ கூட்டிட்டு உள்ள போ” என்று சொல்ல, அவர் எதற்கு சொல்கிறார் என்று புரிந்து கொண்டவள், யாழ்மொழியைத் தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்குள் சென்று விட்டாள்.
காரிலிருந்து கோபத்துடன் வேங்கையாய் இறங்கிய அஷ்வின், நேராக வந்து ஹர்ஷவர்தன் சட்டையைப் பிடிக்க, மகனை அறிந்த நாகேஷ்வரனும் செல்வமணியும், “குமரா என்ன பண்ற? விடு!” என்று வர,
கீர்த்தனாவும், “அண்ணா… வேணாம்ண்ணா!” என்று கெஞ்சினாள்.
ஆம்! கீர்த்தனாவின் முழுப்பெயர், ‘கீர்த்தனா ஆதர்ஷினி’.
ஆனால், ஹர்ஷவர்தனோ அசராமல் அவனை நோக்கித் தன் நேரான இளக்காரப் பார்வையை வீச, அஷ்வினும் சலிக்காமல் நின்றான். என்றுமே சேராத இரு துருவங்கள் எதிரெதிராய் சீறிக்கொண்டு அருகில் கர்ஜனைகளோடு நின்றது. அஷ்வின் வந்து ஹர்ஷவர்தன் சட்டையைப் பிடிக்க எல்லோரும் வெளியே ஓடி வந்தனர்.
“வாங்க” என்று ஒலித்த கல்யாணியின் குரலில், அஷ்வினின் கை தன்னால் ஹர்ஷவர்தனின் சட்டையிலிருந்து தளர்ந்தது.
“இங்க எதுக்குடி வந்த?” செல்வமணி, கீர்த்தனா ஆதர்ஷினியிடம் அழுத்தமானக் குரலில் முறைத்தபடி வினவினார்.
“நான் ஏன்மா வரக்கூடாது?” கேட்ட தர்ஷினியை அனைவரின் முன் முறைக்க மட்டுமே முடிந்தது.
“உள்ள வாங்க” சிவக்குமார் வரவேற்க, அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.
“இங்க வந்து, நீ என்ன சொன்னியோ. அதை இப்போ இவங்க முன்னாடி சொல்லுமா” இறுகிய குரலில் சொன்னார் சிவக்குமார்.
தலைகுனிந்து அமர்ந்திருந்த மகளைக் கண்ட நாகேஷ்வரன், “தர்ஷினி, அமைதியா இருந்தா மட்டும் என்ன ஆகிடப்போவுது” என்றவர், மகள் மேலும் அமைதியையே கடைப்பிடிக்க,
“இப்ப சொல்லப்போறியா இல்லியா?” என்று மகளை அதட்ட, அதுவரை அமைதியாக இருந்த கீர்த்தனா ஆதர்ஷினி, தான் வந்தது சொன்னது என அனைத்தையும் கூறினாள்.
மகள் சொன்னதைக் கேட்டு ஆத்திரம் தலைக்கேற, செல்வமணி மகளை அடிக்கச் செல்ல அவரின் கையைப்பிடித்து நிறுத்தினான் அஷ்வின்.
“அம்மா, ஏமாத்தப் பாத்தது அவன். நீங்க என்ன தர்ஷுவை அடிக்க வர்றீங்க?” தங்கைக்கு சப்போர்ட் செய்து ஹர்ஷவர்தனை குற்றம் சாட்டினான் அஸ்வின்.
“நீ இவளுக்கு குடுக்கிற செல்லம்தான் குமரா. இவளை இங்க நிறுத்தி இருக்கு. இங்க வந்து இவங்கள அசிங்கப் படுத்தி, நம்ம மானத்தையும் கெடுத்து வச்சிருக்கா” கோபத்தில் பேசியவர் கண்களில் கண்ணீர் கரைபுரண்டது.
அருகிலிருந்த சோபாவில் தலையில் கையை வைத்து அமர்ந்தவர், “எனக்கு ஏற்கனவே இருக்க போராட்டம் பத்தாதுன்னு, இத வேற பண்ணி வச்சிருக்கயே தர்ஷு” என்று புலம்பினார்.
அறையின் உள் இருந்த ராஷ்மிகாவிற்கு செல்வமணியின் வார்த்தையில் மனம் வேதனையில் நடுங்கிப் படபடத்தது.
மனைவியின் மனக்குமுறல்களை அறிந்த நாகேஷ்வரன், “என் பொண்ணு பண்ணது தப்புதான். இனி உங்க மகன் வாழ்க்கையில தலையிடாம பாத்துக்கறோம்” என்றுவிட்டு எழ அஷ்வின் தந்தையின் அருகில் வந்தான்.
“அப்பா என்ன பேசறிங்க நீங்க? இவன் பண்ணதுக்கு நம்ம தர்ஷுவ அவனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க. இல்லை லீகல் ஆக்ஷன் எடுங்க. நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கறிங்க?” தங்கையின் வாடிய முகத்தைக் காண இயலாதவனாய் தந்தையிடம் வாதாடினான்.
“உன் தங்கச்சி பண்ணது கரெக்டா? நம்மகிட்ட சொல்லாம இங்க நேரா
வந்து என்ன பண்ணி வச்சிருக்கானு பாத்தல” என்றவர், “போதும் குமரா. உன்னாலயே அவங்க ரொம்ப பட்டுட்டாங்க!” என்று சொல்ல, அஷ்வின் முகம் கன்றி நின்றான். மனமோ எரிமலையாய் சீற்றம் கொண்டு இருந்தது.
கீர்த்தனாவிடம் திரும்பிய நாகேஷ்வரன், “வா கிளம்பலாம்” என்று கட்டளையிட, இத்தனை நேரம் வராத கண்ணீர் அவள் கண்களில் குளமாய்க் கட்டி நின்றது.
பேசாமல் அழுத்தமாய் அமர்ந்திருந்த மகளிடம் வந்து கையைப்பற்றி எழுப்பிய நாகேஷ்வரன், “போகலாம்னு சொன்னேன்” என்று உறுமினார்.
அவர்கள் வெளியே செல்லத் திரும்ப, “ஒரு நிமிஷம்” என்று வந்தது சிவக்குமாரின் குரல்.
“நான் இங்க வரச்சொன்னது கீர்த்தியை உங்ககிட்ட நடந்ததை சொல்ல மட்டுமில்லை. உங்களுக்கு சம்மதம்னா இன்னிக்கே ஹர்ஷாக்கும் கீர்த்திக்கும் நிச்சயம் வச்சிடலாம்” என்று சொல்ல அனைவரும் அதிர்ந்தனர்.
“என்னங்க!” ஏதோ சொல்லவந்த விஜயலட்சுமி, கணவரின் பார்வையில் அடங்கினார். விஜயலட்சுமிக்குத் தெரியும் கணவர் ஒரு முடிவெடுத்தால் அதில் எந்த மாற்றமும் இருக்காதென்று.
“அப்பா..” ஹர்ஷவர்தன் ஆரம்பிக்க, “நீ கீர்த்திகூட பழகலன்னு மட்டும் சொல்லு பாக்கலாம் ஹர்ஷா?” என்று கேட்க முகம் இறுகி நின்றான்.
அவனால் அதை மறுக்க முடியாதே!
மனதில் உள்ள காதலை புதைத்து அல்லவா வைத்திருக்கிறான். இருந்தாலும் அவனின் ஈகோ அவனைத் தடுத்தது.
“அப்பா, என்னை எதுவும் கேக்காம எப்படிப்பா. நான் அவளை இதுவரைக்கும் லவ் பண்றன்னு அவகிட்ட சொன்னதில்லை” ஹர்ஷா சொல்ல,
“சரி, அப்படியே வச்சிப்போம் ஹர்ஷா. ஆனா, நீ, எங்க முன்னாடி பேசாம, தனியா தானே கீர்த்திகிட்ட பேசிட்டு இருந்திருப்ப. உன் மனசுல அந்த எண்ணம் இல்லாமலா யாருக்கும் தெரியாம பழகியிருப்பீங்க” மகனை பதில் பேச முடியாதபடி செய்தார்.
நாகேஷ்வரனிடம் திரும்பிய சிவக்குமார், “எங்களுக்கு சம்மதம். உங்களுக்கு சம்மதம்னா இப்பவே மோதிரத்தை மாத்திக்கலாம்” என்று சொல்ல, அஷ்வினின் வீட்டில் எல்லோருக்கும் சம்மதமே.
“ராஷ்மிகா வரலையா?” செல்வமணி ஆரம்பிக்க அவசரமாக இடையில் புகுந்த சிவக்குமார், “இல்ல ராஷ்மி வரல” என்று சொல்ல எல்லோரும் எதுவும் பேசவில்லை.
கீர்த்தனா உட்பட.
அஷ்வினின் குடும்பத்தார், இன்று அண்ணாநகரில் உள்ள ஒரு திருமணத்திற்கு வந்திருந்தனர். அஷ்வின் அப்படியே கன்ஸ்ட்ரக்ஷன் செல்ல இருந்ததால் அவன் தனிக்காரில் வர, நாகேஷ்வரன் செல்வமணி கீர்த்தனா அனைவரும் வேறொரு காரில் வந்திருந்தனர்.
இன்று அவனுக்கு நிச்சயதார்த்தமென்று நினைக்க நினைக்க வேதனை அதிகரித்தது கீர்த்திக்கு. நேரம் ஆகஆக வேதனை, கோபமாக மாறி அவளின் மூளை, அவளை வேறுமாதிரி செய்யச் சொன்னது.
பின்விளைவு எதைப்பற்றியும் யோசிக்காதவள் உடனே அன்னையிடம் மட்டும் ப்ரண்ட் ஒருத்தியை பார்த்து வருகிறேன் என்று வந்தவள் பண்ணிய வேலைதான் அனைத்தும். கல்யாணத்திற்கு வந்தவள் சேலையை அணிந்து கொண்டுவர, நிச்சயத்திற்கு இப்போது சரியாக இருந்தது. சொல்லப்போனால் அவள் பெண்ரூபத்தில் இருக்கும் பாதி அஷ்வின்குமார்.
அஷ்வினின் பிடிவாதமும் எதையும் விட்டுக்கொடுக்காத தன்மையும் அவளிடமும் இருக்கும். அஸ்வினிடம் கருணை இருக்காது. கீர்த்தியிடம் இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். இன்றும் அவனின் நிச்சியத்தை நிறுத்தத்தான் வந்தாளே தவிர, அவனிடம் வாழ்க்கைப் பிச்சைக் கேட்டு அவள் நினைக்கவில்லை.
“முதல்ல நீ போடு ஹர்ஷா” விஜயலட்சுமி மோதிரத்தைத் தர, அதை வாங்கி கையை ஹர்ஷா, கீர்த்தனாவிடம் நீட்ட அவளோ தரையை வெறித்து நின்றிருந்தாள்.
சிறிது பொறுத்தவன் கையைத்தானே எடுத்து மோதிரத்தை அணிவித்து விட்டான். பின் கீர்த்தனாவிற்கு மோதிரம் தர அவன் முகம் பார்க்காமல் அவனுக்கு அணிவித்துவிட்டாள் கீர்த்தி.
மோதிரத்தை மாற்றிவிட்டு அனைவரும் அமர்ந்தபோது.“நான் கீர்த்தி கிட்ட தனியா பேசணும்” என்றான் ஹர்ஷவர்தன்.
“எதுக்கு?”மகனை அறிந்தவராக சிவக்குமார் கேட்டார்.
“என்னப்பா, எதுக்கு பேசுவாங்க?” சலித்தவன், “நான் கீர்த்திகிட்ட பேசணும் ஸார்” என்றான் நாகேஷ்வரனிடம்.
“தர்ஷு” தந்தை அழைக்க கீர்த்தி எழுந்தாள். இருவரும் அருகிலிருந்த அறைக்குச் செல்ல, அறையின் நடுவில் திமிராக நின்றவன், “நினைச்சதை சாதிச்சுட்டீல” என்றான் அழுத்தமான பார்வையோடு.
“உண்மையைத்தான் சொன்னேன்” என்றாள் அதே அழுத்தத்தோடு. அவளைச் சாதாரணமாக எடை போட்டதை எண்ணியவன், இப்போது அதை நினைத்து நினைத்து வெற்று புன்னகையை உதிர்த்தான்.
“அக்கா இங்க இருக்கிறத உன் அண்ணன்காரன்ட சொல்லாத” என்றான் எங்கோ பார்த்தபடி.
“நான் சொல்லலைனாலும் என் அண்ணாக்கு தெரியாம இருக்காது. கண்டிப்பா தெரிஞ்சிடும்” என்றவளை முறைத்தவன்,
“உண்மைதான்! ஆனா, அதுவரைக்கும் என் அக்கா சந்தோஷமா இருப்பால்ல” ஹர்ஷா சொல்ல, கீர்த்தியின் பீபி எகிறியது.
“என் அண்ணன் ஒன்னும், உன் அக்காவை எதும் செஞ்சிடமாட்டார். எல்லோரும் அவர் நிம்மதியைக் கெடுத்திட்டு…” கீர்த்தி ஆரம்பிக்க, அவளருகில் வந்து கையைப் பிடித்துத் திருப்பிய ஹர்ஷா,
“ஏய்! யாரு நிம்மதிய யார் கெடுத்தது? இன்னொரு தடவ இப்படி சொன்ன, நான் கொலைகாரன் ஆகிடுவேன்!” என்று உறுமியவன், “அப்போ இருந்து, இப்போ வரைக்கும் எங்க நிம்மதியைக் கெடுத்தது நீங்கதாண்டி” என்று அவளை உதறித்தள்ளினான்.
“எனக்கிருக்க கோவத்துக்கு, உன் அண்ணன்ன கொலை பண்ற அளவுக்கு வெறில இருக்கேன். என் அக்கா மூஞ்சிக்காகத்தான் சும்மா இருக்கேன், ”.கோபத்தை அடக்கி உள்ளுக்குள் வைத்தவன், “சரி சொல்லாத. அவ்வளவுதான்” என்றான்.
“அந்த குழந்தை யாரோடது?” கீர்த்தி கர்வத்தின் சொந்தக்காரியாய்க் கேட்டாள்.
“என் அக்கா குழந்தை” என்றான் அவளுக்கு சளைக்காத அதே கர்வத்தோடு.
“அப்போ எங்க வீட்டு வாரிசு. அப்படித்தானே?” மதர்ப்பான சிரிப்போடு அவள் கேட்க, அவனோ அவளை எரித்து விடுவதைப்போலப் பார்த்தான்.
“சரி! சொல்லமாட்டேன். ஆனா..” இழுத்தவள், ஹர்ஷா அவளின் முகம் நோக்க, “நீ, நான் சொல்றதை கேளு” என்றாள். ஆனால், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“தொலைக்கறேன்” தலையில் அடித்துக்கொண்டவன் வெளியே வரும் போதே ஒரு முடிவுடன் வந்தான்.
ஹர்ஷா சபையில் நின்று தொண்டையைச் செறும, “எனக்கு ஒரு கண்டிஷன்” என்று சொல்ல அஷ்வினின் புருவமோ முடிச்சிட்டது.
“கல்யாண சீர்னு உங்க வீட்டுல இருந்து, இங்க எதுவும் வரக்கூடாது!” தன்மானம் உள்ளவனாய் சொன்னவன், அஷ்வினை ஒரு பார்வைப் பார்க்க, அஷ்வினுக்குப் புரிந்தது. ஹர்ஷா தான் செய்ததிற்கு இப்போது வேண்டுமென்றே செய்கிறான் என்று.
“இரண்டு. எங்க வீட்டு எக்ஸ்பண்ஸ்க்கு தகுந்த மாதிரிதான் கீர்த்தி இங்க இருக்கணும்” என்று சொல்ல,
“அவளோட படிப்புக்கு உங்ககிட்ட கைநீட்ட மாட்டா” அஷ்வின் சொற்களை எறிய,
“அதேதான் அவ எங்க வேணாலும் வேலைக்குப் போகட்டும். ஆனா, உங்க ஆபிஸ்ல வொர்க் பண்ண, நான் அனுமதிக்கமாட்டேன்” ஹர்ஷா முடிக்க, அஷ்வினுக்கு உடம்பில் கோபங்கள் தீப்பிழம்பாய் ஏறியது.
முகத்தில் எதையும் காட்டாமல் அனைத்தையும் சடுதியில் மறைத்து கோபத்தை அடக்கினான்.
அதில் அவன் சகலகலா வல்லவன் ஆயிற்றே!
தங்கைக்காக அவன் எதுவும் பேசவில்லை. இல்லையென்றால் தென்னிந்தியாவில் அனைத்து இடத்திலும் கால் பதித்தவனுக்கா தெரியாது ஹர்ஷவர்தனைக் கையாள.
ஹர்ஷவர்தனுக்கும் தெரியும் அஷ்வின்குமார் எப்படியென்று. அதனால் தான் அவனை அடக்கும் வழியறிந்து இப்படியெல்லாம் பேசினான்.
“சரி. அது உங்க இஷ்டம் மாப்பிள்ளை. ஆனா, கல்யாணத்தை நாங்க க்ராண்டாதான் நடத்த முடியும். அதை வேணாம்ன்னு மட்டும் சொல்லிடாதிங்க!” நாகேஷ்வரன் சொல்ல,
“உங்க பொண்ணா இருக்கறவரைக்கும் என்ன வேணா பண்ணிக்கங்க. பட், கல்யாணத்துக்கு அப்புறம், நான் சொன்னதுதான் நடக்கணும்” முடித்துக் கொண்டான் ஹர்ஷவர்தன்.
அனைவரும் கிளம்பிச் செல்ல, ஹர்ஷவர்தன் வீட்டில் இருக்கப் பிடிக்காதவனாய் தனது பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான். மற்ற அனைவரும் ராஷ்மிகாவை தேடிச் சென்றனர்.
யாழ்மொழி அப்போதே தூங்கியிருக்க, ராஷ்மிகா ஜன்னல் பக்கம் நின்று வெளியே வெறித்துக்கொண்டிருந்தாள். மனமும் முகத்தைப் போல் வெறுமையாய் இருந்தது.
“ராஷ்மி” சிவக்குமார் அழைக்க, திரும்பிய ராஷ்மிகாவின் முகத்தை வைத்து எதையும் அவரால கண்டுபிடிக்க முடியவில்லை.
“உனக்கு பெரியப்பா மேல கோவம் இல்லையேம்மா?” தலையை வருடிவிட்டபடி கேட்டார் சிவக்குமார்.
“எதுக்கு பெரியப்பா கோபம்? அதெல்லாம் எதுவுமில்ல. எனக்கு உங்க எல்லார் சம்மதம்தான் பெரியப்பா முக்கியம்” என்றவள், “பெரியப்பா, நான் நாளைக்கு டெல்லி கிளம்பறேன் பெரியப்பா” என்று சொல்ல, கல்யாணிக்கு கோபம் வந்தது.
“இப்ப, நீ போய் என்ன பண்ணப்போற?” கோபமாய்க் கேட்க,
“எனக்கு ஆபிஸ் வேலை இருக்கும்மா” என்றாள்.
“இங்க பாரு ராஷ்மி” ஆரம்பித்தவரை, “நீங்க இருங்க. நான் பேசிக்கறேன்” என்ற சிவக்குமார், “ஏண்டா? ஏன் போறேன்னு சொல்ற?” என வினவினார்.
மகன் எந்தவளவு அவருக்கு முக்கியமோ. மகளும் அவருக்கு முக்கியம். தம்பி மகளாய் இருந்தாலும் அவரின் செல்ல மகள் தானே அவள்.
“இல்ல பெரியப்பா. எனக்கு” ஆரம்பித்தவள் அப்படியே நிறுத்தினாள்.
‘என்ன சொல்லப் போற. அவன் இருப்பான். அதனால இருக்க முடியாது
என்றா? அதுக்கு, தம்பி கல்யாணத்துக்கு வராம இருந்திடுவியான்னு
கேப்பாங்க. நீ நினைச்சாலும் உன் தம்பி கல்யாணத்துக்கு வராம
இருக்க முடியுமா உன்னால’ ராஷ்மிகாவின் மனசாட்சி கேட்க,
மௌனமாய் நின்றாள். ஆனால், உள்ளுக்குள் எத்தனை வேதனை என்று அவளுக்குத்தானே தெரியும்.
எதுவும் பேசாமல் துயரத்தை முகத்தில் தாங்கி நின்றிருந்தவளின் மனதில் ஓடியது சிவக்குமாருக்குப் புரியாமல் இல்லை.
“ராஷ்மி இங்க பாருடா. இந்தக் கல்யாணம் உன் தம்பியோடது. நீ இருந்துதான் ஆகணும். உனக்கு சிலது பிடிக்கலனாலும் இந்த பெரியப்பாக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா” என்று ஐம்பத்தி நான்கு வயது குழந்தையாய் அவர் கெஞ்சும் தொணியில் கேட்க அவளுக்கோ துக்கம் தொண்டையை அடைத்தது.
“சரி பெரியப்பா” என்றாள் சிரமப்பட்டு தன் துன்பத்தை விழுங்கிக் கொண்டு.
அவளது பிரச்சனை என்னவென்று அவள் விளக்குவது?
அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை இவர்கள் ஏற்றுக் கொள்ளவார்களா என்றும் இருந்தது.
இங்கேயே இப்படியென்றால் அங்கே கீர்த்தனா ஆதர்ஷினியோ, ஹர்ஷாவோடு நடந்த உரையாடலை மனதுக்குள் அசைபோட்டபடி வந்தாள்.
ராஷ்மிகா வந்த விஷயத்தை சொல்லலாமென்று எண்ணியவள், ‘அங்க மறைஞ்சு நிக்கற அளவுக்கு அண்ணா என்ன பண்ணிட்டார்?’
‘எத்தனை நாள் மறைஞ்சு இருக்காங்கன்னு பாக்கலாம்’ என்று மனதிற்குள் சூளுரைத்தவள் வீடு வந்ததும் யாரிடமும் பேச மனம் இல்லாமல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அன்றிரவு தூக்கத்தை தொலைத்த அனைவரும், கடந்த காலத்திற்குள் அவரவர் ஞாபகங்களுக்குள் சென்றனர்.