யாழ்-5

IMG_20220303_084637-c64ce743

யாழ்-5

“வர்ற வர்ற அடிக்கடி அப்பா, அம்மா விளையாட்டு விளையாடறீங்க அத்தான்” வர்ஷித்தின் மார்பிலிருந்து எழுந்த பூஜா கட்டிலில் அமர்ந்துகொண்டு, நேற்றைய இரவின் சோம்பலை முறிக்க,

“இந்த விளையாட்டு சலிக்கவே மாட்டீதுடி அத்தை மகளே. அதுவும் இப்பதான் அழகு ஏறிட்டே போகுது உனக்கு” மனையாளின் கரத்தை பற்றி இழுத்து அவளின் இதழில் தன் இதழை அவன் பதிக்க, “ம்ம் ம்ம்” அவனிடமிருந்து திமிறி விலகியபடி, அவனின் மணவாட்டி போராட இறுதியில் வென்றது என்னவோ வர்ஷித் தான்.

கணவனிடம் இருந்து மூச்சு வாங்க பிரிந்தவள், “வரவர உங்க சேட்டை அதிகம் ஆகிடுச்சு.. இனி பாருங்க.. இனிமேல் டெய்லி நைட் தனுவை நம்ம ரூம்லதான் தூங்க வைக்கப்போறேன்.. அத்தை, மாமா ரூம்ல இனி தனுவை விடமாட்டேன். அதுதான் எனக்கு சேஃப் போல” கணவனை உள்ளுக்குள் சிணுங்கியபடியே திட்டியவள், அவசர அவசரமாக குளித்து முடித்துத் தயாராக, வர்ஷித்தும் தயாராகி முடித்தான்.

மதுரையில் இருந்த மிக பிரம்மாண்டமான திருமண மண்டபம் அது!

மண்டபத்தின் அனைத்து இடங்களிலும் உள்ள ஏசியும், ஒளிரும் மஞ்சள் விளக்குகளும், அலங்காரங்களும் சொல்லாமல் சொன்னது அதன் செழுமையை.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய பிசினஸ் மேனின் பணமும், மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியின் பணமும் அங்கு கொட்டிக் கிடந்தது.

ஒரே வாரத்தில் ஹர்ஷா, வர்ஷித், மித்ரன் செய்த ஏற்பாடு அனைத்தும்.

உறவுகள், நண்பர்கள் கூட்டம் அமர, வசதியான முறையில் வெள்ளை பட்டுக்களால் நாற்காலிகளில் உடை உடுத்தி, அதன் மேலே சிவப்பு நிற துணி இதய வடிவில் சுற்றியிருக்க, அனைவரும் நீண்ட நாட்கள் கழித்து பார்த்த மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் கதைத்துக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் இரு குடும்பத்தாலும் உபசரிப்புகள் விமர்சையாக நடந்து கொண்டிருந்தது.

திருமண மேடை முழுதும், மஞ்சள் நிற விளக்கின் ஒளியின் சுடர், அங்கு சுற்றியிருந்த வெள்ளைநிற பட்டுத் துணிகளில் பட்டு தெறித்துக் கொண்டிருக்க, மஞ்சள் நிறமும் வெள்ளை நிறமும் சிவப்பு நிறமும் கலந்து, மேடையை அலங்கரிக்கப்பட்ட மலர்கள், புது மலர்ச்சியுடன் மலர்ந்து மணத்துக் கொண்டிருக்க, கீழே சிவப்புப் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டு, அதன் மேலே மணமகன், மணமகள் அமர மணை தயாராக வைக்கப்பட்டிருக்க, குருக்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

***

பச்சை நிற காஞ்சிவரம் பட்டுப் புடவையிலும், பட்டு வேஷ்டி சட்டையிலும் வர்ஷித்தும், பூஜாவும் ஜோடிப் பொருத்தத்தில் மின்ன, இருவரும் நின்றபடி தங்களது ஃபோனில் செல்பிகளை எடுத்துக் கொண்டவர்கள் வெளியே வர, அந்த அறையின் கதவைத் திறக்க, திருமணமண்டபத்தில் வேலைகள் அனைத்தும் சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தது.

யாரும் பார்க்கும் முன் மனைவியின் கன்னத்தில் முத்தமிட்ட வர்ஷித், “இன்னிக்கு முழுசா நம்மளை வேலை முழுங்கிடும். அதுதான்.” என்றவன் மற்றொரு கன்னத்திலும் இதழைப் பதித்துவிட்டுச் செல்ல, கணவன் செல்லும் திசையையே காதலுடன் பார்த்திருந்தவள், மகளை தேடிச் சென்றாள்.

அடுத்த அறைக்குள் நுழைந்தவளின் செவியில், “அத்தை.. நீ மட்டும் இதெல்லாம் போத்திருக்க.. எனக்கு போடு” மகளின் மழலை சிணுங்கல் விழ, சிரித்தபடியே உள்ளே சென்றவள், “நீ போய் ரெடியாகு வேதா. நான் இவளை கிளப்பி கூட்டிட்டு வரேன்” என்றிட, வேதாவோ ஆளுயரக் கண்ணாடியின் முன் சென்று நின்றாள்.

டீப் ஆரஞ்சு வண்ண பட்டுப்புடவையில், ப்ளூ வண்ணக்கரை வைத்திருக்க, புடவையை உடலோடு ஒட்டி உரசியபடிக் கட்டியிருந்தவளின் அழகை, மேலும் அழகேற்றியிருந்தனர் பிரத்தியேக பார்லரில் இருந்து வந்த பெண்கள்.

‘ப்ரிட்டி ஹாலோ ப்ரெய்ட்’ ஹேர் ஸ்டைலில் இடைவரை இருந்த கூந்தல் நெளிய, கழுத்திலும், காதிலும், கரத்திலும், இடையிலும் தங்க ஆபரணங்கள் அவளுடன் போட்டி போட எண்ணி, பொலிவுகளை தங்கள் சக்திக்கு மீறி பெண்ணவளுக்கு ஈடாய்க் காட்டிக் கொண்டிருக்க, தன்னை மேலும் கீழும் ஒருமுறை கண்ணாடியில் பார்த்துத் திருப்திப்பட்டவள், பூஜாவிடம் சொல்லிக்கொண்டு வெளியே வரவும், வெற்றி எதிரே வரவும் சரியாக இருந்தது.

“அப்பா! எப்படி இருக்கேன்?” வேதா தந்தையின் முன் நின்படிக் கேட்க, கிட்டத்தட்ட பாதி மணப்பெண் கோலத்தில் நின்ற மகளைக் கண்டு, வெற்றிக்கு ஆனந்தக் கண்ணீரே வரப்பார்த்தது. அதுவும் மனையாளின் அச்சாய் இருப்பவளைக் கண்டு, அவனின் மனம் தன்னையும் அறியாது மகளின் தலையை வருடி, “உன் அம்மாவை கல்யாணத்தப்ப பாத்த மாதிரியே இருக்கடா” என்றிட,

“ஹை! அப்ப சூப்பரா இருக்கேனா ப்பா?” வினவிய மகளின் வெகுளித் தனத்தில் லயித்தவன்,

“ம்ம்.. அம்மாவை விடவே அழகுதான் நீ” என்ற வெற்றியைக் கண்டு வாயின் மேல் கைவைத்து கேலிச் சிரிப்பு சிரித்தவள், “அம்மா கேட்டுக்கோங்க” என்றுவிட்டுச் சென்றுவிட, திரும்பாமலேயே மனைவி பின்னால் நிற்பதை உணர்ந்து கொண்டவன், அசடு வழிய திரும்ப திவ்யபாரதியோ, ‘தி ரியல் பாரதியாய்’ நின்றிருந்தாள்.

“அவ என்னைவிட அழகா இருக்காளா?” திவ்யபாரதி இருகைகளையும் கட்டிக்கொண்டு வினவ, “அம்மாவும் பொண்ணும் இரண்டு பக்கமும் இடிச்சா நான் என்னதுக்கு ஆகறது” வெற்றி பம்ம,

“அப்படியே பயந்து நடுங்குற மாதிரிதான்” நொடித்துக் கொண்ட திவ்யபாரதி திரும்ப எத்தனிக்க, அருகிலிருந்த மறைவிற்குள் மனைவியை வன்மையாக இழுத்த வெற்றி, மனைவியின் முதுகைச் சுற்றிப்போட்டு அணைக்க, திவ்யபாரதிக்கோ திக்கென்று ஆனது.

“ஏங்க யாராவது பாத்தா என்னாகிறது? இன்னும் வயசு பையன்னு நினைப்பா? பேத்தி வந்து முடி சைட்ல நரைக்க ஆரம்பிச்சிடுச்சு, ஞாபகம் இருக்கா?” என்று வினவியபடியே திமிற முயற்சிக்க, முடிந்தால் தானே?

இன்றும் அன்று பிடித்த அதே இறுக்கம்?

திவ்யபாரதி கணவனை ஏறிட்டுப் பார்க்க, “சொல்லுடி. புடிச்சிருக்க புடி, முடி நரைச்சதை சொல்லுதா?” மீசையை முறுக்கியபடி விஷமத்தோடு வினவ, திவ்யபாரதியின் காதல் மனம் அதில் மங்கினாலும், சுற்றம் உணர்ந்து கணவனிடம் இருந்து பிரிந்தவள்,

“பையனுக்கு கல்யாணத்தை வச்சிட்டு..” பற்களை கடித்தபடி செல்லமாய் புன்னகைத்துக் கொண்டே கணவனின் மீசையைப் பிடித்து இழுத்தவள், மறைவான இடத்தில் இருந்து வெளியே வரவும், அஷ்வின் அங்கு வரவும் சரியாக இருந்தது.

சம்மந்தியைக் கண்டவுடன் தூக்கிவாரிப் போட திவ்யபாரதி நின்றுவிட, மனைவியின் பின்னோடேயே வந்த வெற்றியும் அஷ்வினைக் கண்டு ஜெர்க்கடித்து நின்றுவிட்டான்.

இருவரின் முகத்தையும் பார்த்தே கணித்த அஷ்வின், இதழை சிறிது இறுக்கி புன்னகைத்தபடி, “இளமை திரும்புதே வா வெற்றி?” என்று கலாய்க்கத் துவங்க, திவ்யபாரதியோ இருவரையுமே நிமிர்ந்து பார்க்காமல் வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

வெற்றியோ, “எல்லா வயசுலையும் காதல் காதல் தானே” அஷ்வினிடம் வசனம் அடிக்க, தலை சாய்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்தி யோசித்தவன், அழுத்தமாக, “தப்பே இல்ல வெற்றி” என்றவன் நேராய்ச் சென்றது மனைவியைத் தேடி.

மண்டபத்தில் உள்ள தங்களின் அறைக்கு பல் வரிசை தெரிய அழகாய் சிரித்தபடி உள்ளே நுழைந்த அஷ்வினின் புன்னகை மறைந்து போனது. ராஷ்மிகா தயாராகி கண் கலங்க அமர்ந்திருந்த விதம், அவனின் எதற்கும் அசையாத மனதைக் கூட அசைத்தது.

பெருமூச்சுடன் கதவைத் தாழிட்டவன் மனைவியின் அருகே செல்ல, கணவனின் வருகையை அஷ்வினின் மனையாள் உணர்ந்தாலும் தலை நிமிரவில்லை. மனைவியின் கன்னங்களை பிடித்து நிமிர்த்திய அஷ்வின், “ம்கூம்” என்று இருபுறமும் தலையசைத்து மனைவியின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை, அருகில் இருந்த டிஷ்யூ கொண்டு துடைத்துவிட, ராஷ்மிகாவோ முடியாமல் உடைந்தாள்.

“ராஷ்மி, என்ன இது?” மனைவியின் அருகே அமர்ந்த அஷ்வின் அவளை சமாதானம் செய்ய முயல,

“அவ்வளவுதானே அஷ்வின். இனி யாழ் நம்ம வீட்டுப் பொண்ணு இல்ல. இன்னொரு வீட்டுப் பொண்ணு. மிஸ்.யாழ்மொழி அஷ்வின்குமார் போய் மிஸஸ்.யாழ்மொழி வித்யுத் வருணன்” ராஷ்மிகா கண் கலங்க மகளைப் பிரியப் போகும் தவிப்புடன் சொல்லும் போதே, அஷ்வினின் மனம் மகளின் பிரிவை எண்ணி கதறத் துவங்கியது. அவனின் கண்ணீரில்லா கதறல் மிகவும் ரணமாய் இருந்தது. அதை அவன் மனைவியால் கூட பார்க்க முடியாது.

“அவ சின்ன வயசுல பொறந்ததுல இருந்து எதுமே அடம்பிடிச்சது இல்ல. அழுதது இல்ல. சிணுங்குவா அவ்வளவு தான். அதுவே அதட்டி சொன்ன கம்முனு இருந்திடுவா. நீங்களும் நானும் பிரிஞ்சு இருந்தப்ப. அப்பா அப்பானு கேட்டு எல்லாம் அவ அழுதது இல்ல தெரியுமா. அந்த வயசுலயே அவ்வளவு பக்குவம். நான் சொன்னதை நம்பிட்டு நீங்க வெளிய இருக்கீங்கனு நினைச்சிட்டு இருந்துச்சு அப்ப”

“உங்களைப் பாத்தோன என்னை மறந்து உங்ககிட்ட சாஞ்சுட்டா. அவ எல்லாத்தையுமே உங்ககிட்ட தானே அஷ்வின் முதல்ல சொன்னா. சின்ன விஷயத்துல ஆரம்பிச்சு அவ ஏஜ் அட்டென்ட் பண்ணப்ப கூட உங்ககிட்ட தான் பயந்து ஓடிவந்தா. அவளோட தைரியம், அழுத்தம், சிந்தனை எல்லாத்துலையும் உங்கள பாத்திருக்கேன் அஷ்வின். உங்களுக்கும் சரி அவளுக்கும் சரி. இரண்டு பேரோட பலம், பலவீனம் நீங்கதான். அவ இதை நம்ம கிட்ட மறைச்சதுல மட்டும் என்னை பாக்கற மாதிரி இருக்கு..” என்றவளின் குரல் தழுதழுத்தது.

“அன்னிக்கு அவளை நான் அப்படி ஒரு கேள்வி கேட்டிருக்க கூடாது அஷ்வின். ஒரு அம்மாவா என்னால கேக்காம இருக்க முடியல. என் பொண்ணு மேல நம்பிக்கை இருந்துச்சு தான். ஆனா, கோபம் என் கண்ணை மறச்சிடுச்சு” என்றவள், “நாம இன்னிக்கே கிளம்பனுமா?” என்று உதடுகள் துடிக்கக் கேட்க, அஷ்வினோ மெல்லியதாய் புன்னகைத்தான்.

அன்பிற்கும், கோபத்திற்கும் இடையே தள்ளாடும் மனையாளின் மனம் அவனுக்குப் புரியாமல் இல்லை.

“நீ வேணா இங்க இரு ராஷ்மி. நான் போயிட்டு சண்டே விருந்துக்கு வந்திடறேன்” என்றவன்,

“ஒண்ணு புரிஞ்சுக்க ராஷ்மி. என்னதான் ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி, இன்னொரு வீட்டுக்கு போனாலும், அவங்க மனசுல நம்ம இடம் குறையாது. அவ மிஸஸ்.யாழ்மொழி வித்யுத் வருணன்னு நீ சொல்ற. ஆனா, நான் அடிச்சு சொல்றேன். என் பொண்ணு அவ இனிஷியல்ல மாத்த மாட்டா. வித்யுத் மேல டன்ஸ் அன்ட் டன்ஸ் லவ் இருந்தாலும் எப்பவுமே யாழ்மொழி அஷ்வின்குமாரா தான் இருப்பா. இந்தக் கல்யாணத்துக்கு அப்புறம்தான் நமக்கும் யாழுக்கும் இன்னும் ஸ்ட்ராங் ரிலேஷன்ஷிப் உருவாகும்” என்று கம்பீரமாய் உரைத்தவன், மனைவியிடம் சீண்டலாய்,

“ஏய் நான் ரொமான்ஸ் பண்ணலாம்னு வந்தா நீ என்னடி அழுதிட்டு இருக்க? அங்க நம்ம சம்மந்திக சந்துல இருந்து வந்தாங்க தெரியுமா?” சிரிப்பை அடக்கிக்கொண்டு அஷ்வின் நடந்ததைக் கூற, ஆவென வாய் பிளந்த ராஷ்மிகா பின் கிண்டலாய், “அதான் அவங்களுக்கு மூணு பேர் போல. அதுவும் வர்ஷித் வித்யுத்துக்கு ஒண்ணே முக்கால் வருஷம் தான் வித்தியாசமாம் தெரியுமா?” என்று சிரித்தபடியே கணவனிடம் சொன்னாள்.

தலையை சற்றுத் தூக்கி யோசித்த அஷ்வின், “மகாராணி அவர்களே! ஆக்சுவலி நமக்கும் மூணு வந்திருக்கும் நீங்க ஓகே சொல்லி இருந்தா.. நீங்க ஆனா என்ன பண்ணீங்கன்னு ஞாபகம் இருக்கா?” என்ற கணவனின் வாயை அடைத்த ராஷ்மிகா, “வரவர சேட்டை அதிகம் உங்ககிட்ட” என்றவள், “வாங்க கீழே போலாம்” என்று எழ, இருவரும் ஒன்றாய் கீழே இறங்க வேலைகளும், உபசரிப்புகளும் அவர்களை பிடித்துக் கொண்டன.

****

“வேதா! அண்ணன் ரெடியான்னு பாரு?” திவ்யபாரதி மகளை அனுப்பி வைக்க, அவளோ ஈஈஈயென சகோதரனின் அறைக்குச் சென்றாள். தன்னவன் அங்கு இருக்கும்போது அங்கு செல்ல அவளுக்குக் கசக்குமா என்ன?

மணமகன் அறைக்கு விரைந்தவள், “அண்ணா! அம்மா ரெடியான்னு கேக்க சொன்னாங்க?” கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் வேதா கேட்க,

“ம்ம்” என்ற கம்பீரக்குரலோடு திரும்பியவன் தோரணையில் சிறிய வயதில் தந்தையைக் கண்டதைப் போலவே இருந்த வேதா, “ஆஅஅ”வென நின்றுவிட்டாள்.

“ண்ணா!” என்றவளுக்குப் பேச்சே வரவில்லை.

பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரம் என்னும் கவசத்தோடும், வசீகரம் என்னும் இலக்கணத்தோடும், ஆணிற்கே உரிய இலட்சனத்தோடு இறுகிய புஜங்களும், அகன்ற மார்பும் அவனை பட்டு வேஷ்டி சட்டையில் மேலும் மதுரை மண்ணிற்கே உரிய வீரனாய்க் காட்ட, வெற்றியின் இளையவன், நம்பிக்கையின்(அஷ்வின் பெயர் அர்த்தம்) கலைமகளை சாஸ்த்திரங்கள் படி, தன்னவளை தன் சரிபாதி ஆக்கிக்கொள்ள தயாராய் நின்றிருந்தான்.

“வித்யுத், உன்னை அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்க” உள்ளே வந்த வர்ஷித் சகோதரனை அழைக்க இருவரும் வெளியே சென்றவுடன், சரியான நேரம் பார்த்த வேதா கதவை அடைத்துச் சாத்தினாள்.

இத்தனை நேரம் உள்ளுக்குள் அவளை அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்த இன்ப மித்ரன், பெண்ணவளின் திடீர்ச் செயலில் உள்ளுக்குள் ஆடிப்போனான் என்றுதான் சொல்ல வேண்டும்.

“ஏய், கதவை எதுக்குப் பூட்டுன?” மித்ரன் கர்ஜிக்க,

“அப்புறம் ஓடிட்டிங்கன்னா?” என்றவள் அவனருகே செல்ல, ஆடவணுக்கோ அடிவயிற்றில் இருந்து ஏதோ எழுந்து அடித் தொண்டையில் வந்து நிற்க, அதை சிறிதும் முகத்தில் காட்டாமல், பெண்ணவள் தன்னை உரசாதபடி பின்னே நகர்ந்து நின்றான்.

“நான் எப்படி இருக்கேன்? உண்மையை சொல்லுங்க?” அவள் தலை கவிழ்க்கவும் முடியாமல் நிமிரவும் முடியாமல், தன்னவன் சென்றுவிடுவானோ என்ற பதட்டத்தோடு, அவனை அடைத்துக் கொண்டு கேட்க, இன்பமித்ரனுக்கோ இன்ப அவஸ்தையாய் இருந்தது.

பெரிய அண்ணனின் திருமணத்தில் பாவாடை தாவணி அணிந்து இருந்தவள், இன்று எதற்கு புடவை அணிந்திருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியாதா? அதுவும் அன்று அத்தனை பேர் சொல்லியும் புடவை எடுக்காதவள் இன்று கட்டிய காரணம் அறியாதவனா அவன்?

அவனை மேலும் நெருங்கி நூலளவு இடைவெளியில் நின்றவள், “இன்னும் நான் சின்னப்பொண்ணா தெரியறேனா?” என்று வினவ, அவளின் குரலில், ‘எங்கு இன்றும் தன்னை நன்றாக இல்லை’ என்று சொல்லிவிடுவானோ என்ற அச்சமும், வதனத்தில் அவனிடம் காதலை யாசித்தபடி நின்ற விழிகளையும் கண்ட, கடினமான இரும்பு நெஞ்சம் கொண்டவனும் தடுமாறித்தான் போனான்.

அனைத்தும் ஒரு நொடியே!

அன்னை, தந்தை போல பார்த்துக்கொண்ட வெற்றி, திவ்யபாரதியின் முகம் நினைவிற்கு வர, “ப்ச், இதையெல்லாம் எதுக்கு என்கிட்ட கேக்கறே?” அவன் முகத்தைத் திருப்ப,

“எதுக்கு என்னை அவாய்ட் பண்றீங்க?” கேட்டேவிட்டாள்.

நேரான வினாவில், அவன்தான் தடுமாறிப்போனான்.

“லவ்வு லவ்வுன்னு உனக்கு மட்டும் என்னை பிடிச்சா போதுமா? எனக்கு பிடிக்க வேணாமா?” வராத எரிச்சலை வரவழைத்து அவள் மேல் காட்ட, “உங்களுக்கு சும்மா கூட என்னை பிடிக்காதா?” என்று கேட்டவளின் குரலில் அலையாய் எழுந்தது அத்தனை ஏக்கம். அடிபட்ட வலி விழிகளில்.

அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் சற்று கலங்கி இருந்தது.

இன்னும் சிறிதுநேரம் இங்கிருந்தால் தன்னை வெளிப்படுத்தி விடுவோம், இல்லை யாராவது வந்து விடுவார்கள் என்று எண்ணியவன், அவளுக்கு பதிலளிக்காமல் அவளைத் தாண்டிச் சென்று கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்ல, சிறிது நேரம் கழித்து முகத்தை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.

****

மணப்பெண் அறை!

நிலைக்கண்ணாடியின் முன் அமர்ந்திருந்த பெண்ணவள் முகம் கலங்கியிருந்தது.

கவர்ந்திழுக்கும் மாம்பழ நிற காஞ்சிப்பட்டில் பச்சை நிற கரையிட்டிருக்க, பெண்ணவளின் மேனி பட்டு, பட்டும் அவளின் மென்மையை உணர்ந்தது. தலையில் இருந்து கால் வரை தங்கத்தால் தந்தையின் பணம் அவளை அலங்கரித்திருக்க, தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஸ்டைலிஸ்ட் வந்து, அவளின் அலங்காரத்தை கவனித்து, அழகுக்கு அழகு கூட்டியிருக்க, பொற்சிலையாய் அமர்ந்திருந்தாள் இன்னும் சற்று நேரத்தில் வித்யுத்தின் மனைவியாகப்போகும் அஷ்வினின் மகள்.

ஆம்! சிலை தான்!

உணர்வில்லாத சிலையாய் அமர்ந்திருந்தாள். கலையாத ஓவியமாய் அமர்ந்திருந்தவளின் வதனத்தில் சிறிதும் சிரிப்பில்லை. எதையோ நினைத்து கலங்கிய மனமும், முகமும் இறுகியது. உள்ளே நுழைந்த தர்ஷினி (அஷ்வினின் தங்கை : ஹர்ஷாவின் மனைவி) நிலைக் கண்ணாடியை வெறித்தபடி அமர்ந்திருந்த அண்ணன் மகளைக் கண்டு ஆறுதலாய் அருகில் சென்றாள்.

யாழின் தோளில் கை வைத்தவள், “யாழ்” என்றழைக்கத் திரும்பிய யாழின் முகத்தில் அத்தனை வலி.

“அவ்வளவு தான அத்தை? பொண்ணுக கல்யாணம் ஆகிட்டா பொறந்த வீட்டுக்கே விருந்தாளியா போகணும்னு சொல்லுவாங்க. ஆனா, எனக்கு அதுவும் கிடைக்காதுல?” என்றவளின் குரலில் வெளிப்பட்ட வலியை உணர்ந்த தர்ஷினியின் மனம் அதிர்ந்தது.

சிறிய பெண்ணாய் கையில், தான் தூக்கித் திரிந்தவள், இப்போது பெரிய பெண்ணாய் பெரிய மனுஷிபோல பேசுவதைக் கேட்டு அவளின் தொண்டை அடைத்தது.

தன்னைக் கட்டுப்படுத்தியவள், “எல்லாம் கொஞ்ச நாள்ல சரி ஆகும்” தைரியமூட்ட, விழிகளை எட்டாத புன்னகையை உதிர்த்தவள் தன் மனதில் இருந்ததை யாரிடமும் கொட்ட விரும்பாமல், செயற்கையாக ஒரு புன்னகையை தவழவிட்டபடியே கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு எழுந்தாள்.

அத்தை ஏதோ சொல்ல வருவதை உணர்ந்தவள், “போலாம் அத்தை எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க” என்றிட, அவளின் கை பிடித்து தர்ஷினி அழைத்துச் செல்ல, மணமகள் அறையில் இருந்து வெளியே வந்தவளின் மேலிருந்து யாரும் பார்வையை அகற்றவில்லை.

மங்கையவளின் மணக்கோலம் குமரியாய் அனைவருக்கும் குறையாமல் பெண்ணவளை ஓவியமாய் காட்ட, பெண்கள் சூழ அவர்களுக்கு நடுவே, அன்ன நடையில் வரும் தன்னவளைப் பார்த்த வித்யுத் வருணன், மந்திரத்தை உச்சரித்தபடியே தன்னவளைப் பார்த்திருந்தான். ஆனால், அது காதலைச் சிந்தவில்லை என்பது தலை குனிந்து வரும் பெண்ணவளுக்கு நன்கு தெரியும்.

மேடை ஏறியவள், சபைக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, தன்னவனின் அருகில் அமர, அவனோ சிறிது விலகியது போல தோன்றியது அவளுக்கு.

கன்னியாதானம் செய்ய யாழ்மொழியின் பெற்றோரும், வித்யுத்தின் பெற்றோரும் முன்னே வர, மணமகன், மணமகள் இருவரும் எழுந்து நின்றனர். சங்கற்பம் செய்து அஷ்வினும், ராஷ்மிகாவும் வெற்றிக்கும், திவ்யபாரதிக்கும், அதேபோல வெற்றியும், திவ்யபாரதியும் அஷ்வினிற்கும், ராஷ்மிகாவிற்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்து முடிக்க, யாழ்மொழியின் கையில் தங்க நாணயத்தை வைத்து,

அஷ்வினை மகளின் கரத்தைப் பிடிக்க வைத்து, குருக்கள், மணமகளின் மூன்று தலைமுறை பெயர்களையும், மணமகனின் மூன்று தலைமுறை பெயர்களையும் உரிய மந்திரத்துடன் சொல்லி முடித்து, இரு குடும்பத்தின் வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் பெற்றும், எல்லாவித செல்வமும் என் மகளை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக்கொள்ள சொல்ல, விழிகளை மூடித் திறந்த அஷ்வினின் விழிகள் உணர்ச்சிகளில் தத்தளிக்கத் தொடங்கி சிவந்து காணப்பட்டது.

வித்யுத் முறைப்படி யாழின் பெற்றோரிடம் சம்மதம் தெரிவிக்க, ராஷ்மிகா மகளை நீர் விட்டுத் தாரை வார்க்க, வித்யுத்தின் கரங்களில் மகளின் கரத்தை ஒப்படைத்த அஷ்வினின் விழிகள் வாழ்க்கையில் முதன்முதலாய் சிவந்து கலங்கியது. தந்தை இன்னும் கரத்தை விலக்காமல் இருப்பதை உணர்ந்த யாழ் தந்தையைப் பார்க்க, தந்தையின் கண்ணீரைப் பார்த்த மகளின் வலது விழியில் இருந்து கண்ணீர் வழிந்தது.

மனதைரியத்தில் பெண்களை விட இங்கு பல ஆண்கள் சில இடங்களில் தோல்வியையே தழுவுகின்றனர்.

மணமக்களை அமர வைத்து, குருக்கள் சந்தனம், குங்குமம் சாத்தி தீபம் காட்டி, சம்பாதஹோமம் முடித்து சுற்றியிருப்போர் கைகளில் அட்சதையைக் கொடுக்க, யாழ்மொழியின் வயிறு பிசையத் துவங்கியது. பதட்டமா, கலக்கமா, இல்லை அனைவரும் தங்களையே பார்ப்பதாளா என்று தெரியவில்லை. ஆனால், முகம் செயற்கை புன்னகையை மீறிய, சிறு தவிப்பில் துடித்துக் கொண்டிருந்தது.

“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்சிவசரதசதம்” குருக்களின் குரல் மண்டபத்தின் வெளிவரை எதிரொலிக்க, பெண்ணவளின் கழுத்திற்கு அருகே வரை மங்கள் நாணை எடுத்து வந்த வித்யுத்தின் கரங்கள், கட்டாமல் அப்படியே நிற்க, அனைவருக்கும் திக்கென்று ஆனது.

சட்டென்று அனைவருக்கும் முன் சுதாரித்த பூஜா, வித்யுத்தின் அருகே குனிந்து, புன்னகைத்தபடி, “வித்யுத்!” என்று உணர்த்த, அடுத்த நொடி, யாழ்மொழி விழி சிமிட்டுவதற்குள், மங்கள் நாணால் மூன்று முடிச்சிட்டு யாழ்மொழியை தன் மனைவியாக்கி இருந்தான் வித்யுத் வருணன்.

இரு குடும்பமும் தங்களை அறியாமல் நிம்மதிப் பெருமூச்சு விட, மங்கையவளோ தன்னவன் சொன்ன வாக்கியத்தில் சிலையாகி, மாங்கல்யத்தை கட்டும்போது பிடித்தபடியே இன்னும் அதிலிருந்து வெளிவராமல் அமர்ந்திருந்தாள்.

“இனி நான் யாருன்னு உனக்கு காட்டுறேன்டி” என்றவனின் குரலில் கொப்பளித்த குரோதத்தில், மனதிலிருந்து வெளிப்பட்ட வன்மத்தில் யாழ்மொழியின் நா வறண்டு, தொண்டைக் குழி உலர்ந்து, வயிர் உள்ளே இழுப்பது போன்று இழுக்க, மாங்கல்யத்தைப் பார்த்திருந்த அவளின் விழிகள் அழுத்தமாகியது.