யாழ்-6

IMG_20220303_084637-1cd5562a

யாழ்-6

‘ஏமாளியாக ஏமாந்தவர்களின்
வலியை விட
இரக்கத்தால் ஏமாந்தவர்களின்
வலியே ஏராளம்’
-யாழ்மொழி.

‘ஒருமுறை மறைந்துவிட்டால் 
மீண்டும் அதே
வலிமையோடு உதிக்காது
நம்பிக்கை’
-வித்யுத் வருணன்.

விழிகளை ஈரப்படுத்தாத
கண்ணீர் மணிகளுக்கு எல்லாம்
அதீத காதலென்றே பெயர்!
-வருணமொழியாளி(ழி)ன் காதல்.

காலச் சுழற்சியில் இருவரின் திகட்டாத காதல் மோதலாய் மாறியிருக்க, இரு அன்புகொண்ட நெஞ்சங்களின் இதயங்களும் எப்போதோ வெடித்து ஆறாத ரணங்களாக ஆயிரக்கணக்காய் சிதறியிருந்தது.

வரமென வந்த காதல் சாபமென மாறிய நினைவுகள் மறந்திடுமா? சொர்க்கமாய் கழிந்த ஒரு திங்கள் ஒற்றை நாளில் நரகமாய் மாறிப்போன நாள் அழிந்திடுமா? நினைவுகள் எவ்வளவு அழகாக இருந்து என்ன பயன்?

நிதர்சனம் வெறுமையாக அல்லவா இருக்கிறது.

“அண்ணி! இதுதான் என்னோட பெஸ்ட் பிரண்ட் பல்கிஸ். அதோ அங்க அண்ணாகூட (அஷ்வின்) உக்காந்து பேசிட்டு இருக்காரே அவங்கதான் அவரோட (வெற்றி) பெஸ்ட் பிரண்ட் அமர்ஷா” திருமணம் முடிந்து மதியம்போல உறவினர்கள் கலைந்தபின், அனைவரும் அமர்ந்த சமயம் திவ்யா ராஷ்மிகாவிடம் அமர்ஷா-பல்கிஸை அறிமுகம் செய்து வைத்தாள்.

“இவங்க இப்ப துபாய் செட்டில்ட். மொதல்ல இங்க தான் இருந்தாக. அங்க பூஜாகூட வர்றாங்க பாருங்க. அவங்க இவங்களோட பொண்ணுக. ட்வின்ஸ்” என்றவள் ராஷ்மிகாவிடம் பழைய கதைகளை சொல்லத் துவங்க, அவளோ சுவாரஸ்யமாய் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள். கூடவே மதுரைக்குச் சென்று செட்டில் ஆகியிருந்த வாசு-ஸ்ருதி தம்பதியினரும் திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களின் மகள் அதீதியும் தன்னுடைய கணவன் மற்றும் ஐந்து வயது மகளுடன்.

“அப்ப உங்களுக்கு முதல்லயே வெற்றி அண்ணாவை தெரியுமா?” ராஷ்மிகா விழிகளை அதிர்ச்சியில் விரித்தபடி வினவ, திவ்யபாரதிக்கோ, ‘அய்யோ அதை மட்டும் மறைக்கலாம்னு நினைச்சா. எங்கையோ உளறிட்டோம் போல. சரி சமாளிப்போம்’ யோசித்தவள்,

“முதல்லையே தெரியும். அப்புறம் சின்ன சண்டைல பிரிஞ்சு மறுபடியும் எங்க அண்ணா கல்யாணத்துல ஒண்ணு சேந்தோம்” திவி சமாளித்து வைக்க, ராஷ்மிகா நன்கு அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை தூரத்திலிருந்து கண்ட அஷ்வின்,

‘இந்த குண்டுஸ்கு யாராவது கிடைச்சா போதும் அரட்டைக்கு. என்னையவே மறந்திடுவா’ நினைத்தவன் வெற்றி, அமர்ஷா, வாசு, ஹர்ஷா அனைவரும் பேசிக்கொண்டிருக்க, மணமகள் அவள் அறையிலும், மணமகன் அவன் அறையிலும் தங்கள் யோசனைகளில் இருந்தனர்.

தனது அறையில் இருந்த வித்யுத் வருணனுக்கோ ஆத்திரம் எல்லையை மீறிக் கொண்டிருந்தது. மாங்கல்யத்தை மூன்று முடிச்சு தானே கட்டியிருந்தவனுக்குள் அத்தனை ஆவேசம். ‘எப்படி இவளால் எதுவுமே நடக்காதது போல சபையினர் முன் முகத்தை வைத்துக்கொள்ள முடிகிறது?’ என்று.

‘பாவி! கொலைகாரி! உன்னால ஒரு உயிர் நடுரோட்டுல என் மடில போச்சுடி’ மனதுக்குள் கோடி முறையாக தன் மனையாளை திட்டிச் சபித்தவன், “இத்தனைக்கும் பிறகு என்னோட வாழணும்னா வந்திருக்க? இருக்குடி உனக்கு. யூ ஆர் கோயிங் டு ஸீ தி ஹெல் அலைவ்(You’re going to see the hell alive)” வாய்விட்டே முணுமுணுத்தவன், கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான்.

“வித்யுத்! அரைமணி நேரத்துல நல்லநேரம். ஸோ ரெடியா இரு” திரும்பிய வர்ஷித், பின், மறந்தவனாக யோசனையுடன் திரும்பியவன், “டேய், பர்ஸ்ட் நைட்டுக்கு எப்படி ரூம் அரேன்ஞ்..” கேட்டு முடிக்கவில்லை, வித்யுத்தின் விழிகள், எரிமலையாய் வெடித்து அக்னியைக் கக்கியதில், வர்ஷித்தின் கேள்வி அதற்கு மேல் வெளிவரவில்லை.

சகோதரனின் மனநிலை அவன் நன்கு அறிவான். அவனை யோசிக்கக் கூட விடாமல் தந்தை எடுத்த முடிவில், மிக முக்கியமாக அவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவன் இருந்ததில், அவனால் எதையும் செய்ய இயலவில்லை. அவன் பதவிவேறு இன்னொரு முக்கிய காரணம். அதைக் கூட தூக்கி எரியத் துணியும் அஞ்சா நெஞ்சன் தான். ஆனால், அதற்குப் பின் அவனின் அன்னை?

வித்யுத் எதையும் எதிர்க்காததுக்கு முதல் காரணம் திவய்பாரதி.

தந்தை இருவரின் கடந்த காலத்தை மேலோட்டமாய் சிறு வயதில் சொன்னபோது, மனதில் ஊறிப்போன வீம்பு அது. அன்னையின் வளர்ப்பில் சிறிதும் வழி தவறிவிடக்கூடாது என்று. அன்னையின் நம்பிக்கையையும், அன்னை தந்தையிடம் இட்ட சொற்களையும் பொய்யாக்கக் கூடாது என்று ஒரு பிடிவாதம் அவனுக்குள். அதனால் தான் அண்டத்தையே அழிக்கும் ஆவேசத்தில் அன்று ருத்ரமூர்த்தியாக இருந்தவன், யாழ்மொழியை எதுவும் செய்யாமல் வந்தது.

இல்லையெனில் என்ன நடந்திருக்கும் என்று அவனை பெற்றவளுக்கே தெரியாது?

வித்யுத்தின் அருகில் சென்ற வர்ஷித், “வித்யுத்! கோபத்தை கொஞ்சம் அடக்குடா. இவ்வளவு கோபம் ஆகாதுடா. இந்த கோபம் யாழ்மொழி மேல திரும்பாம பாத்துக்க. அதுதான் உனக்கு நல்லது” சகோதரனாய் இல்லாமல் நண்பனாய் வர்ஷித் எச்சரிக்க,

“பிரண்ட் மேல ரொம்ப கரிசனமோ?” கேலியாய் வந்தது வித்யுத்தின் கேள்வி.

“உன்னோட நல்லதுக்கும்தான் சொல்றேன்” வர்ஷித்.

“அவ அவ்வளவு பெரிய ஆள் இல்ல. நீ ஓவரா பில்ட் அப் குடுக்காம இருடா” என்று சொல்லிக் கொண்டிருக்க, “மாம்ஸ்!” என்று வித்யுத்தை அழைத்தபடி உள்ளே வந்தாள் பூஜா.

அவளின், ‘மாம்ஸ்’ என்ற அழைப்பில் பொசசிவ்நஸ்ஸில் வர்ஷித் மனையாளை முறைக்க, வேண்டுமென்றே தோள்களை குலுக்கியவள், “நல்ல நேரம் வந்து முடியறதுக்குள்ள கிளம்பணும். ஸோ சீக்கிரம் வாங்க” என்றுவிட்டு கணவனை கண்டுகொள்ளாமல் செல்ல அவனோ உள்ளுக்குள், ‘இன்னிக்கு நீ செத்தடி. என் மகளைவிட்டு உன்னை என்ன பண்றேன் பாரு’ என்று கறுவிக்கொண்டான்.

***

மணமகளின் அறையில் அமர்ந்திருந்த யாழ்மொழி தனது மாங்கல்யத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு பெண்ணும் மங்கள நாணை தன் கழுத்தில் தன் மனம் கவர்ந்தவன் கரத்தால் வாங்கும்போது, பெரியோர்களின் ஆசிர்வாதங்களும், மங்கள் வாத்தியங்களின் சத்தங்களும், சக வயதுடைய உறவினர்கள், நண்பர்களின் கேலிகளும் செவியில் விழ, நாணமும், வெட்கமும் போட்டி போட்டு எழும் நினைவுகளும், அதற்கு நேர்மாறாக தனக்கு நடந்ததையும் எண்ணிப் பார்த்தவளுக்கு மனம் கலங்கியது.

தன் மாராப்பின் மேல் அமைதியாய் தொங்கிக் கொண்டிருந்த தாலியைப் பார்த்தவளுக்கு, “இனி நான் யாருன்னு உனக்கு காட்டுறேன்டி” என்ற கணவனின் குரோதம் நிறைந்த குரல் கொப்பளித்தது. என்ன மாதிரியான வார்த்தை அது. அதுவும் அவனின் குரலில் தெரிந்த உஷ்ணமான வஞ்சத்தை அவளால் மறக்க முடியுமா?

அவளைச் சுற்றி சிலர் இருந்தும் அவளின் சிந்தனை யாவும் வேறெங்கோ இருந்தது. அடுத்து தன் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தவளுக்கு சுற்றியும் தடுப்பாக உள்ளது போல் தோன்றியது. தந்தையுடன் சேர்ந்து அனைத்து தொழிலையும் பார்த்தவள் தான். ஆனால், அதில் வந்த லாபங்களை அஷ்வின் அப்படியே மகளிடம் தந்தபோது கூட அவள் அனைத்தையும் மறுத்துவிட்டாள். இப்போது அவளது கையில் சேமிப்பு என்று எதுவும் இல்லை. இன்னொருவரிடம் கை நீட்ட வேண்டுமோ என்று நினைத்தபோதே அவளின் உடல் கூசிப்போனது. சிறு வயதில் இருந்து தந்தையின் இளவரசியாய் எதையும் நினைத்து கலங்காமல் வாழ்ந்து வந்தவளுக்கு இப்போது அனைத்தும் காடாய்த் தெரிந்தது.

உள்ளே நுழைந்த திவ்யபாரதி, “யாழ்! கிளம்பலாமா?” என்று வினவ, யோசனையில் இருந்தவளோ தலையை மட்டும் ஆட்டினாள்.

மாப்பிள்ளை, பெண்ணை வெளியே அழைத்து வர, வித்யுத் வருணன் எதுவும் பேசாமல் தனது காருக்குச் செல்ல, அனைவருக்கும் திக்கென்று இருந்தது. கட்டிய மனைவியை கை பிடித்து அழைத்துச் செல்லவில்லை என்றாலும், ஒரு கண்ணசைவில் ஆவது அழைத்திருக்கலாம். ஆனால், அவனின் தன்னங்காரம் தான் அவனை விடாதே. அதுவும் வஞ்சத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பவனிடம் ஏதாவது செல்லுபடியாகுமா? பேசவில்லை, முகம் காட்டவில்லை, திட்டவில்லை. ஆனால், அமைதியாய் அன்று அதிகாலை, கட்டிய மஞ்சளின் ஈரம் காய்வதற்குள் நெருங்கியவர்கள் முன் தன்னவளை அவமானப்படுத்தி இருந்தான்.

இதற்கு மேல் யாரால் ஒரு பெண்ணை தலைகுனிய வைக்க முடியும்.

திவ்யபாரதி கணவனைப் பார்க்க, வெற்றி அழைப்பதற்குள் வித்யுத்தின் அரைக் கோடி மதிப்புள்ள கருப்பு நிற ஜீப் வ்ராங்கலர் சீற்றத்துடன் மண்டபத்தை விட்டுக் கிளம்பியது.

அனைவரும் யாழ்மொழியை பரிதாபப் பார்வை பார்க்க, அவளோ யாரின் பார்வையையும் சந்திக்கவில்லை. குறிப்பாய் தந்தையின் புறம் அவள் மறந்தும் திரும்பவில்லை. இது ஒன்றும் அவள் மனதை பாதிக்கவில்லை. கடந்த ஒருவாரத்தில் அவள் அனைத்தையும் எதிர்பார்த்து, எதிர்காலத்தில் அனைத்திற்கும் தன்னை தயார்படுத்தி இருந்தாள்.

அனைவருக்கும் முன் சுதாரித்த வெற்றி, “பாரதி, நான் நம்ம காரை எடுக்கறேன். நீ யாழை கூட்டிட்டு வா” என்று முன்னே செல்ல, வெற்றி சென்று தனது பார்ச்யூனரை எடுத்து வர, மாமியாருடன் சென்றவளுக்கு, திரும்பி தன் குடும்பத்தைப் பார்க்க உந்திய மனதை அடக்கியவள், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு முன்னே சென்றாள். மனதில், ‘சோழவந்தான் வருவார்களா அல்லது சென்னை கிளம்புகிறார்களா?’ என்ற எண்ணம் வேறு ஒருபக்கம் மனதை அறுத்தது.

காரின் பின்பக்கம் மாமியாருடன் ஏறி அமர்ந்தவளின் வதனம் தன்னையும் மீறி கசங்க, உதட்டைக் கடித்துக்கொண்டு உணர்வுகளை கட்டுக்குள் வைத்து அமர்ந்துவிட்டாள். அவளுடைய தன்மானம் அனைத்தும் இப்போது வீம்பாய் மாறியது. ‘கடமையை முடிக்க வந்தவங்க தானே’ உள்ளுக்குள் அழுகையும் கோபமுமாக குமுறியவள், அதை சிறிதும் முகத்தில் காட்டாமல் அமர்ந்திருக்க, அவளின் மனவோட்டம் அனைத்தும் தெளிவாக புரிந்த திவ்யபாரதி, அவளின் கரத்தை ஆறுதலாக தட்டிக்கொடுக்க, மாமியாரின் கரிசனத்தில் ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

வெற்றி, திவ்யபாரதி, யாழ், வேதா நால்வரும் முன்னே செல்ல, மற்ற அனைவரும் மதுரையில் இருந்து அவர்களை சோழவந்தானுக்குத் தொடர்ந்தனர்.

சில மணிநேரங்களில் சோழவந்தான் வந்தடைந்தவர்கள் காரை விட்டு இறங்க, “வேதா, போய் ஆரத்தி வாங்கிட்டு வா” என்றிட, ஓடிச் சென்றவள் ஆரத்தி தட்டுடன் வர, கையில் வாங்கிய திவ்யபாரதி மருமகளுக்கு மட்டும் சுற்றிமுடித்து திருஷ்டி கழித்தார்.

மகளிடம் தட்டை கொடுத்து அனுப்பியவர் அடுத்தடுத்து உள்ள சம்பிரதாயங்களுக்கு மகனை அழைக்க எண்ணி, கணவனைப் பார்க்க, புரிந்துகொண்ட வெற்றி, மேலே சென்று என்ன கூறினானோ தெரியவில்லை, சிறிது நேரத்தில் வித்யுத்தும் அவனது அறையில் இருந்து வெளிப்பட்டான்.

மணமக்களை அழைத்து பால் பழம் கொடுக்க, வேண்டா வெறுப்பாய் தன்னருகே அமர்ந்திருக்கும் வித்யுத்தின் தலையில், பால் டம்ளரை கவுத்துவிடலாம் என்று கூடத் தோன்றியது யாழ்மொழிக்கு. அத்தனை கடுப்பில் இருந்தாள் அவள்.

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து அனைவரும் ஓய்வாக வரவேற்பறையில் அமர, “வெற்றி, அப்ப நான் கிளம்பறேன். ராஷ்மிகாவும், அம்மா, அப்பாவும் இங்க இருக்கட்டும். நாங்க போயிட்டு சண்டே விருந்துக்கு வர்றோம்.” சொல்லியபடி அஷ்வின் எழ, அவனைத் தொடர்ந்து எழுந்தனர் ஹர்ஷா, தர்ஷினி, வைபவ் மற்றும் தியாஸ்ரீ.

அனைவரிடமும் விடைபெற்ற அஷ்வின், மருமகனிடம் விடைபெற, மாமனாரின் செயல் மனதை உறுத்தினாலும், வித்யுத், “வாங்க” என்று இருகரத்தையும் கூப்பி அனுப்பி வைத்தான் தனது மாமனாரை. பின்னே அசுர அதிரடியாய் இருப்பவனின் அமைதி அனைவரையுமே சிந்திக்க வைத்தது.

அவனின் அமைதிக்குப் பின்னுள்ள ஒரே காரணம், அவனின் மகள் என்று அனைவரும் நினைத்திருக்க, அதுதான் இல்லை. இப்போது கூட விஷயத்தை உடைக்க அஷ்வினிற்கு அரை நொடியாகாது. ஆனால், அவனின் அமைதிக்குப் பின் இருப்பது அவனின் மணவாட்டி அல்லவா. ராஷ்மிகாவை விஷயம் எட்டினால், அவள் தாங்கமாட்டாள் என்று அவள் கணவன் அறிவான். அதுவும் இப்படியொரு குற்றச்சாட்டு என்றால், மகளை இப்போது கூடவே அழைத்துச் செல்லக் கூட தயங்கமாட்டாள் என்றும் அவனுக்கு உறுதியாகத் தெரியும். அவனும் அதைத்தான் முதலில் நினைத்தது.

ஆனால், “என்னால அவனை மறக்கவே முடியலப்பா” என்று மகள் அன்று கடற்கரையில் வைத்துச் சொன்னபோது, அவளின் மனதின் கதறலை உணர்ந்தவனுக்கு, வேறு யாருக்கும் மகளை மறுமணம் புரிந்து வைக்கக்கூட முடியாது என்று அவனின் மகள் நன்கு புரிய வைத்திருந்தாள். வித்யுத் மேலான அவளின் காதலையும் தந்தையின் மனதில் பதிய வைத்திருந்தாள்.

அதற்காக மகளின் மேல் உள்ள கோபம் தீரவில்லை என்றில்லை. அதை அஷ்வினே மறந்தால்தான் உண்டு.

அனைவரிடமும் விடைபெற்றவன் மகளின் புறம் திரும்பியும் பார்க்காமல் வெளியே வர, அவனின் மகளும் அதை அறிந்தவளாய் எங்கோ பார்வையை பதித்து அமர்ந்திருந்தாள். அவனுக்கே அவ்வளவு வீம்பிருந்தால், அவனின் உயிர்நீரில் உருவாகி அவனின் போதனைகளில் வளர்ந்தவளுக்கு எத்தனை வீம்பிருக்கும்.

தந்தை சென்ற அடுத்த நிமிடம் யாழ்மொழி தனக்குக் கொடுக்கப்பட்ட அறைக்குள் புகுந்துகொள்ள, ராஷ்மிகாவோ மகளிடம் கதைக்க எண்ணி மகளின் பின்னேயே சென்றாள். உள்ளே நுழைந்த அன்னையைக் கண்ட யாழ் அணிந்திருந்த நகைகளைக் கழட்ட ஆரம்பிக்க,

“யாழ், அன்னிக்கு நான் உன்கிட்ட கேட்ட கேள்வி தப்பு. உன்கிட்ட அமைதியா பேசி இருக்கணும். ஒரு பொண்ணோட அம்மாவா இருந்தா உனக்கு என் நிலை புரியும். அந்த கேள்வி உன்னை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்னு எனக்கு புரியுதுடி. உன்னை இப்படி பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால முடியல. அதுவும் அந்த.. மாப்பிள்ளை உன்னை மண்டபத்துல..” ராஷ்மிகா முடிக்கவில்லை, அன்னையின் அருகில் ஒரு பெட்டியுடன் வந்த யாழ்மொழி,

“இதுல நீங்க போட்ட நகை எல்லாம் இருக்கு. கடமைக்காக செஞ்சது எதுவும் எனக்கு வேணாம். இதையெல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணியிருந்தா நான் வித்யுத்தை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணியிருக்க மாட்டேன். இதை நீங்களே வச்சுக்கங்க” இறுகிய முகத்துடன் அன்னையின் கையில் அந்த பெட்டியை வைத்தவள், பேச்சு முடிந்தது போல குளியலறைக்குள் புகுந்துகொள்ள, ராஷ்மிகா சிலையென நின்றுவிட்டாள்.

‘கணவனின் அதே தேள் கொட்டும் நாக்கு’ நினைத்த ராஷ்மிகாவின் மனம் சிலிர்த்து அடங்கியது.

***

இன்ப மித்ரனும், வர்ஷித்தும் வித்யுத்தின் அறையை முதல் இரவுக்கு தயார் செய்துகொண்டிருக்க, வித்யுத்தோ இருவரையும் விட்டால் வெட்டிவிடும் எண்ணத்தில் இருந்தான்.

“இப்ப எதுக்கு இரண்டு பேரும் இத்தனை அலங்காரம் பண்ணிட்டு இருக்கீங்க. இட்ஸ் இரிட்டேட்டிங்” என்று எரிச்சலைக் காட்டியவன், தனது பால்கனியில் சென்று நின்றுகொள்ள, “இவன் எல்லாம் ஒரு நைன்டீஸ் கிட். விட்டா பாயற நிலைமைல இருக்கானுக பசங்க. இவனை பாரேன்” சகோதரனுக்குக் கேட்காத வண்ணம் வர்ஷித் இன்பமித்ரனிடம் குறைபட, அவனோ வாய்விட்டுச் சிரித்தான்.

“நீயெல்லாம் இருக்கிறதுக்குப் பாஞ்சிடுவேல்ல மாப்ளே?” வர்ஷித் மித்ரனிடம் வினவிய சமயம், வேதா உள்ளே வந்தாள். கையில் பழத் தட்டுடன்.

உள்ளே வந்த தங்கையைக் கண்ட வர்ஷித், “உன்னை யாரு இங்க வர சொன்னாங்க?” என்றான் சிறு அதட்டலுடன்.

“அண்ணிதா ண்ணா தட்டு வைக்க சொல்லி அனுப்புனாங்க” வேதா சொல்ல, ‘லூசு. கல்யாணம் ஆகாத பொண்ணை அனுப்பியிருக்கா பாரு’ மனதுக்குள் மனைவியைத் திட்டியவன், “சரி, வச்சிட்டு போய் சீக்கிரம் தூங்குடா.” என்றிட, தட்டை வைக்க மித்ரனின் எதிரே அவனைத் தாண்டிச் சென்றவளின் விழியும், அவனின் விழியும் சந்தித்துக் கொள்ள, அவளின் குண்டுக் கன்னங்கள் இரண்டும் நாணத்தில் ரோஸ் நிறத்தில் சிவந்து போனது. தட்டை வைத்தவள் அலங்காரங்களைக் கவனித்தபடி தன்னவனை ஓர விழிகளால் பார்க்க, அவனும் அவளின் பார்வையையும் வெட்கத்தையும் உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தான்.

சொல்லப்போனால் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் அவளின் பார்வையில் அவனுக்கு சிறகடிக்கத் துவங்கியது. ‘லூசு அவ அண்ணன் முன்னாடி எப்படி பாக்கறா பாரு. மூணும் ஒரு தினுசா தான் இருக்குங்க’ அவன் மனதுக்குள் நினைத்துக்கொண்டிருக்க, “வேதா, இங்க என்ன பண்ற?” பால்கனியில் நின்றிருந்த வித்யுத்தின் குரலில், “கிளம்பிட்டேன் ண்ணா” என்றவள் ஓடிவிட, அவள் சென்றபின், ‘லூசுடி நீ’ மெல்லிய புன்னகையை உதிர்த்தான்.

கட்டிலின் நான்கு கால்களையும் பிடித்துப் பார்த்த வர்ஷித், “ஸ்ட்ராங் கட்டில்” கமெண்ட் அடித்தபடி நிமிர, வித்யுத்தோ, “என் நிலைமை தெரிஞ்சும் ஏன் வர்ஷித்?” சலிப்புடன் கேட்டான்.

“நான் இல்லப்பா. அப்பத்தா தான் எல்லாம் ரெடி பண்ண சொல்லுச்சு” தந்தையின் அன்னை விசாலாட்சியை மூத்தவன் காட்டிக் கொடுக்க, தலையில் அடித்துக் கொண்டான் இளையவன்.

***

வேறு புடவைக்கு மாறியிருந்த மருமகளின் கூந்தலில் மல்லிகை சரத்தை சூடிய திவ்யபாரதி, விசாலாட்சியிடம் ஆசிர்வாதம் வாங்க வைத்து, தையல்நாயகியின் படத்தின் முன்பு நிற்க வைத்தும் மருமகளை வணங்கச் செய்தாள்.

தையல்நாயகியின் படத்தைக் காட்டி, “இவங்க உங்க மாமாவோட (வெற்றி) அப்பத்தா. எனக்கும் இவங்களுக்கும் செம ஃபைட் நடக்கும். எனக்கு அப்புறம் உன் புருஷன் தான் எப்பப்பாரு அவங்க கூட சண்டை போடுவான்” திவ்யபாரதி சிரித்த முகத்துடன் சொல்ல, “சொல்லியிருக்கான்” என்ற யாழின் விழிகளிலும் சிறிது புன்னகை எட்டிப் பார்த்தது.

பூஜாவுடன் யாழை இளைய மகனின் அறைக்கு திவ்யபாரதி அனுப்பி வைக்க, தையல்நாயகி படத்தின் முன்பு நின்றவள், “எல்லாம் நல்லதாவே நடக்கணும். அவங்க எப்ப அவங்க வாழ்க்கையை ஆரம்பிச்சாலும் சரி. ஆனா, நல்ல முறைலையே ஆரம்பிக்கணும்” என்று வேண்டியவள் சோர்வாய் அமர்ந்திருந்த ராஷ்மிகாவிடம் வந்து, “எல்லாம் ஒரு நாள் சரியாகும். எதையும் இந்த வயசுல நாம குழப்பிக்கக் கூடாது” என்று அன்று ராஷ்மிகாவுடன் உறங்கச் சென்றாள்.

யாழை வித்யுத்தின் அறையின் முன் விட்ட பூஜா, புன்னகையுடன் சென்றுவிட, உள்ளே நுழைந்தவளுக்கு, கணவனைப் பார்க்க சிறிதும் பிடிக்கவில்லை. நாற்பது பேர் முன்னிலையில் தன்னை அவமதித்து வந்தவனின் மேல் அவளுக்கு ஆத்திரம் எழுந்தது.

‘அன்றும் இப்படித்தான் விட்டுவிட்டுச் சென்றான்’ யாழின் மனம் பழைய நினைவில் அடிபட்டுப் போக, அமைதியாய் சென்று பால் டம்ளரை அங்கிருந்த தேக்கு மர மேசையில் வைத்தவள், தாலி, தோடு, ஒரு வளையல் தவிர மாமியார் அணிவித்துவிட்ட அனைத்தையும் கழட்டி அங்கிருந்த கப்போர்டில் வைத்தாள்.

வைத்துவிட்டு அவள் திரும்பியதுதான் தாமதம், அவள் முகத்தின் மேல் வந்து பாய்ந்தது ஒரு தலையணை. தன் முகத்தில் பட்டு கீழே விழுந்த தலையணையைப் பார்த்தவள், கோபமாக அவனை நிமிர்ந்து பார்க்க, “இனிமே இந்த ரூம்ல இதுதான் உன்னோட நிலை. இங்க என்கூட சமமா பெட்ல படுக்கற அளவுக்கு உன்னுடைய தரம் இல்லை. என்னை பொறுத்தவரை நீ என்னைக்குமே லாயக்கு இல்லாதவ. எனக்கு மனைவியா இருக்கக் கூட” என்றவனின் வார்த்தையில் கொதித்து எழுந்தவள்,

“அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ண? நான் கேட்டனா?” வெடுக்கென்று கேட்க,

எள்ளலாகச் சிரித்தவன், “என் வீட்டுல சொன்னதுக்காக. இல்லைனா உன்னை வேலைக்காரியா கூட இங்க வைக்க யோசிக்கறவன் நான். அன்ட் மோர் ஓவர் எனக்கும் இந்த வயசுல வர்ற பீலிங்ஸ் இருக்கு. அதைத் தீத்துக்கவும்” என்றவனுக்குத் துளியும் அந்த எண்ணம் இல்லை. ஆனால், அவளை காயப்படுத்த வேண்டும் என்றே நினைத்தவனிற்கு வார்த்தைகள் பாம்பின் விஷமாய் கொட்டிக் கொண்டிருந்தது.

அவனின் பேச்சில், முகத்தைச் சுளித்தவள், அடுத்து செய்த காரியம் அவனின் இரத்த அழுத்தத்தை சுனாமியாய் அதிகரித்து, உஷ்ணத்துடன் பாய்ந்து ஓடச் செய்தது.