யாழ்-7

IMG_20220303_084637-07bd2da1

யாழ்-7

கணவனின் பேச்சில் அவனை கேவலமாக ஒரு லுக் விட்டவள், “பெரிய ஆன்ட்டி ஹீரோனு நினைப்பு. இருக்க கலெக்டர் பதவிக்கு பேசற பேச்சை பாரு. வயசு பீலிங்ஸாம். அதுதான் பாத்திருக்கனே. பக்கத்துல போனாவே உச்சா வருதுன்னு சொன்னவன்லாம் வயசு பீலிங்ஸ் பத்தி பேசறான்.” வாய்க்குள் தெளிவாக முணுமுணுத்தபடி அங்கிருந்த பெட்ஷீட்டை எடுத்து தரையில் விரித்தவள் கண்மூடி படுத்துக்கொள்ள, வித்யுத்தோ மனைவியின் பேச்சில், அவளின் கிண்டலில் கோபத்தின் உச்சிக்குச் சென்று வெடித்துவிடும் நிலையில் இருந்தான்.

வந்த கோபத்தை கைகளை முறுக்கி அடக்கியவன், விளக்கை அணைத்துவிட்டு அமைதியாக சென்று கட்டிலில் படுக்க, அவனின் விழிகளை நித்திராதேவி ஆட்கொண்டால் தானே?

மனதில் ஆயிரம் கோபங்களும், கவலைகளும் பேயாய் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, யாழ்மொழியை பார்க்கும் போதெல்லாம் எழும் ஆங்கார உணர்வை அவனால் அடக்க முடியவில்லை. சில சமயம் அந்த இடத்திலேயே அவளின் கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என்ற வெறிகூட அவனுக்கு எழுந்திருக்கிறது. அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டிருந்தது அவனின் அன்னையின் வளர்ப்பு.

தலையைத் திருப்பி ஒருக்களித்து படுத்தவன், இரவு விளக்கின் ஒளியில் கீழே படுத்திருக்கும் மனைவியைக் கண்டான். தலையில் இருந்து பாதங்கள் வரை, அதுவும் புடவைக்குள் சிக்கி இருந்த இடை சிறிது தெரிய படுத்திருந்தவளின் உடல் அழகில் அவன் மனம் தொலைவது போல் இருந்தாலும்,

“வித்யு..” என்ற அவனின் சம்யுக்தா விழிப்பும், குரலும் அவனை சிரிப்புடன் அழைத்து, அவளின் புன்னகை பூக்கும் மலர் வதனம் கண்முன் தோன்ற, பதறியடித்து எழுந்தவனுக்கு, அவளின் இழப்பு, அதுவும் தன் மடிமீது அவளின் உயிர் பிரிவு, இன்னமும் அவனை உயிருடன் கொன்று கொண்டிருந்தது.

வித்யுத் பதறியடித்து எழுந்தவுடனே அவனின் பதட்டத்தில் எழுந்த யாழ், தன்னையும் மறந்து, “வருண்! என்னாச்சு?” அவனின் தோளை சிறிது உலுக்க, இறுதி மூச்சு வாங்கிய சம்யுக்தாவின் ரத்தம் நிறைந்த முகமும், கண்ணீருடனான இறுதி நிகழ்வும் அவனின் மனக்கண்ணில் தோன்ற, வெறிகொண்டவனாய் தன்னவளை உதறித் தள்ளிவிட்டு எழுந்தவன்,

“எனக்கு உன்னைப் பாக்கக்கூட புடிக்கலடி. அசிங்கமா இருக்கு. உன்னை உன் அம்மா என்னால ஒரு கேள்வி கேட்டாங்கனு சொன்னியே. உன் அம்மாக்கு இல்லாத நம்பிக்கை எனக்கு இப்பவும் இருக்கு. அதாவது என்கூட பழகுன யாழ்மொழியை வச்சு இருக்கு. ஆனா, என்னோட நம்பிக்கைக்கு நீ உண்மையா இருக்கியா?” வாள் கொண்டு அவன் கேள்வியை வீச, அமிலத்தை தன் மேலே ஊற்றியது போல் துடிதுடித்துப் போனவள், அவனின் உயிர்க்கொள்ளி வார்த்தையில் அரண்டு போனவள், அவனின் சட்டையை ஆவேசமாய்ப் பிடித்து, “என்னை பாத்தா உங்க எல்லாருக்கும் எப்படித் தெரியுது. டூ ஐ லுக் லைக் எ ப்ராஸ்ட்டியூட்?” நம்பிக்கை உள்ளது என்று சொல்லிவிட்டு அவன் கேட்ட கேள்வியில் புயலாய் உருமாறிக் கத்தியேவிட்டாள்.

அன்னையிடம் இருந்தும் கணவனிடம் இருந்தும் வரக்கூடாத கேள்விகள்!

தந்தையின் மனதிலும் இப்படி ஏதாவது இருக்குமோ என்று அவளின் மனம் யோசிக்கும்போதே, இரண்டாய் தன்னை யாரோ வெட்டிப் போடுவது போல பெண்ணவளுக்கு வலிக்கத் துவங்கியது.

அவளின் கரத்தை தன் சட்டையில் இருந்து எடுத்துவிட்டவன், அவளைத் தாண்டிச் செல்லப் பார்க்க, கோபம் போய் அழுகை வரப் பார்க்க, தன்னைக் கட்டுப்படுத்தியவள், “ஏன் எல்லாரும் என்கிட்ட இதையே கேக்கறீங்க? பேசாம நாளைக்கு என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ வருண். உன்னோட டவுட் தீந்திடும்ல” வேதனை நிரம்பிய குரலில் அவனிடம் சொல்ல, அவனின் உடலோ அவளின் வேதனை சொட்டிய சொற்களிலும், திரும்பாமலேயே மனைவியின் வதனம் கசங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்துகொண்டு விறைக்க, அங்கு நிற்க விரும்பாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்ல, இயலாமையோடு நின்றிருந்தவள், தரையில் அப்படியே மடங்கி அமர்ந்தாள்.

வெளியே வந்து தோட்டத்திற்குள் நடக்க ஆரம்பித்தவனுக்கு வரவர தன் பேச்சுக்கள் அவளைக் காயப்படுத்த கீழ்த்தரமாக இறங்குவதை உணர்ந்தான். அதுவும் இன்று அவன் பேசிய வார்த்தைகளுக்கு அவள் மருத்துவமனை செல்லலாமா என்று கேட்ட விதத்தில், அவனின் இதயத்தில் யாரோ குத்திக் கிழிப்பதைப் போலிருந்தது.

இதற்குத் தானே அவன் அவளை விட்டு வந்தது. என்னதான் அவனின் ஆழ்மனம் அவனறியாமல் இன்னும் அவளைக் காதலித்துக் கொண்டிருந்தாலும், கோபமும் வீம்பும் ஆத்திரமும் அவனின் கண்களை மறைத்தது.

“ச்சி இந்தக் கருமத்துக்குத் தான்டி உன்னை விட்டுட்டு வந்தேன்” என்று வாய்விட்டு முணுமுணுத்தவன் தலையை அழுந்தக்கோதி கோபத்தை அடக்கமுயற்சி செய்தான்.

என்ன முயன்றும் அவனால் சம்யுக்தாவின் இறப்பை மறக்க முடியவில்லை. மறக்கும் விஷயம் அல்லவே அது. அதுவும் அவளின் இறுதி சொற்கள். அவளின் இறப்பு அவனுக்கு மரண வலியைத் தந்து கொண்டிருந்தது. யாரும் இல்லாமல் அனாதையாக வளர்ந்தவளின், வாழ்வு செழிக்கும் சமயம் அவளின் வாழ்வில் அப்படியொரு சம்பவம் நடந்திருக்கத் தேவையில்லை, அதுவும் யாழ்மொழியால். அந்த தேவதையின் நினைவில் அவனின் விழிகள் ஈரமாகியது.

வீட்டிற்குள் செல்லாமல் கிணற்று மேடையில் ஏறிப் படுத்தவனுக்கு பழைய நினைவுகளில் சொல்ல முடியாத துயரம்.

அதே சமயம் அறைக்குள் படுத்திருந்த யாழின் விழிகள் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கை தொலைந்தது போன்ற உணர்வு அவளுக்கு, கணவனின் சம்மட்டியால் அடித்துப்போட்ட ஒரே கேள்வியில். அழுகை கூட அவளுக்கு வரவில்லை. வாழ்க்கை இருண்ட காடாகத் தெரிந்தது அவளுக்கு.

அதேநேரம் அவளின் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வர எடுத்துப் பார்த்தவளின் விழிகளில் இருந்து நீர் வடிந்து, அவளின் கன்னத்து வழியாக கழுத்துக்குச் சென்றது.

“ஸாரி க்கா அன்ட் ஹாப்பி மேரீட் லைஃப்” த்ரூவ் சகோதரிக்கு அனுப்பியிருக்க, பார்த்தவளின் கண்ணீர் மணிகள் இருண்ட அறையில் அலைபேசியின் வெளிச்சத்தில் வைரமாக பளபளத்தது.

“ஸாரி அன்ட் தேங்க்யூ” என்று திருப்பி அனுப்பியவள், அலைபேசியை வைத்துக்கொண்டு கண்களை மூட, “மொழி!” என்ற சம்யுக்தாவின் அழைப்பில் தூக்கிவாரிப்போட எழுந்த யாழ்மொழிக்கு, மெய்யாகவே அவளை சம்யுக்தா அழைப்பது போலத் தோன்றியிருக்க, பயத்தில் அவளுக்கு வியர்க்கத் தொடங்கியது.

“சம்யு..” என்று முணுமுணுத்தவளுக்கு அவளின் ஞாபகங்கள் பசுமையாய் மனதில். “ஸாரிடி.. நான் உன்னை சந்தேகப்பட்டிருக்க கூடாது” என்றவள் இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு கதற ஆரம்பிக்க, அவளைத் தேற்றுவார் யாரும் இல்லாமல் போனது அந்த அர்த்த ஜாமத்தில். தரையில் படுத்து அழுது கொண்டிருந்தவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அழுதழுது தொண்டை உலர்ந்து, கண்ணீர்க் கரைகள் கன்னங்களில் படிந்திருக்க, அதிகாலை எழுந்து வந்த வித்யுத் வருணனுக்கோ மனைவி தரையில் படுத்திருந்த நிலை மனதை பிசைந்தது.

தந்தையின் வளர்ப்பில் எப்படி வளர்ந்தவள், இவனைவிட ஏகபோக சொத்துக்களுக்கு அவள் வாரிசு என்பதையும் அவன் நன்கு அறிவான். தன் வீட்டில் தந்தையின் இளவரசியாய், வெயில் படாமல், வளர்ந்தவள் இன்று தன்னால் தரையில் படுத்திருப்பதை பார்த்தவனுக்கு மனம் என்னவோ போல ஆனது. தன்னைக் கெட்டவனாகக் காட்ட முயற்சி செய்து கொண்டிருக்கும் நல்லவன் அவன். அனைவருக்கும் நல்லவனாய் இருப்பவன் தன்னவளிடம் மட்டும் கெட்டவனாகிப் போனான்.

சிறிது நேரம் நின்றபடி தன்னவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சம்யுக்தாவின் முகம் நினைவில் வர, முகம் இறுக தோளைக் குலுக்கிவிட்டு குளியல் அறைக்குள் புகுந்தான். குளித்து முடித்து வெளியே வந்தவன் அப்போதும் அவள் எழாததை கண்டு, அருகில் சென்றவன், அங்கிருந்த ஜக்கில் இருந்த தண்ணீரை மொத்தமாய் எழுத்து அவள் மேல் ஊற்ற, பதறியடித்து எழுந்தவள் முகத்தைத் துடைத்துக்கொண்டு சுற்றியும் முற்றியும் பார்த்தாள். கணவனின் அறையில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளவே அவளுக்கு சிறிதுநொடிகள் பிடித்தது.

கணவனின் செயல்தான் என்று உணர்ந்தவள், எதுவும் பேசாமல் குளியலறைக்குள் புகுந்துகொள்ள, அவனுக்கோ அவளின் செய்கை விசித்திரமாய் பட்டது. வயலட் நிற பார்மல் சர்ட்டும், சந்தன நிற பாண்டும் அணிந்தவன், அலுவலகத்துக்கு கிளம்பத் தயாராக, அப்போது தான் முகத்தை கழுவிவிட்டு வெளியே வந்த யாழ்மொழி, கீழே சென்றாள்.

முதலில் தான் தங்கியிருந்த அறைக்குச் சென்றவள், தனது லாங் சல்வாரை எடுத்துக்கொண்டு, அங்கேயே குளித்து முடித்து தயாராகி வெளியே வர, வித்யுத் சாப்பிட்டு முடித்து கைகளைக் கழுவிக் கொண்டிருந்தான்.

“புடவை கட்டலாம்லடா?” வித்யுத்தின் அப்பத்தா வந்து கேட்க, “அவளுக்கு என்ன புடிக்குதோ அதைப் போட்டுக்கட்டும் அத்தை” சமையல் அறைக்குள் இருந்து வெளியே வந்த திவ்யபாரதி மாமியாரிடம் சொல்ல, அவரோ நொடித்துக்கொண்டு போனார்.

ராஷ்மிகா மகளிடம் ஏதோ சொல்ல, அன்னை தன்னிடம் பேச வருவதை உணர்ந்தவள், விலகிச் சென்று மாமியாரோடு நின்று கொள்ள, ‘ம்கூம் இப்ப வந்த மாமியார் பெருசாம் இவளுக்கு. இருடி உன் வாயுக்கு உன் மாமியா கையில இடி வாங்கிட்டு வருவே இல்ல, அப்ப பாத்துக்கறேன்’ என்று நினைத்தவள், தனது மாமியார் செல்வமணியுடன் சென்று அமர்ந்துகொண்டாள்.

சாப்பிட்டு முடித்துவிட்டு, வர்ஷித்திடம் எதையோ பேசிக் கொண்டிருந்த வித்யுத், சிறிது நேரத்தில் அலுவலகத்திற்கு, கிளம்ப, அவன் செல்லும் காரும் தயாராக ஓட்டுனருடன் நின்றிருந்தது. பாண்ட் பாக்கெட்டில் இருந்த தனது வாட்சை எடுத்துக் கட்டிக்கொண்டு வெளியே செல்பவனையே பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும், அவன் யாழிடம் சொல்லிக்கொண்டு போகவில்லை என்ற கவலை. ஆனால், கவலைப்பட வேண்டியவளுக்கோ, ‘தயவு செஞ்சு போடா. நீ இல்லாம நிம்மதியாவாது இருப்பேன்’ என்ற மனநிலை.

“மாப்பிள்ளையை அனுப்பி வச்சுட்டு வாடா” செல்வமணி பேத்திக்கு எடுத்துச் சொல்ல,

“இத்தனை நாள் நான் அனுப்பி வச்சா போயிட்டு இருந்தான்” வெடுக்கென்று யாழ்மொழி கேட்க, விசாலாட்சிக்கோ(வித்யுத்தின் அப்பத்தாவுக்கோ), “சரியான ராங்கியா இருப்பா போலயே. இவ கையுல எம்பேரன் எம்புட்டு கஷ்டப்பட போறானோ” நினைத்துக் கொண்டவரின் முகத்தில் அது அப்பட்டமாய் தெரிய, பேத்தியைத் தனியே அழைத்துச் சென்ற செல்வமணி அவளிடம் பொறுமையாக பேசத் தொடங்கினார்.

“இங்க பாருடா. உன் கல்யாண விஷயம் கேள்விபட்டபோ, எனக்கு உன்மேல கோபமே வரல. என் பேத்தி தப்பு செய்யவேமாட்டா அப்படின்னு ஒரு நம்பிக்கை. ஆனா, அதை வெளில காட்ட முடியுமா சொல்லு. அதுவும் உன் அப்பன் முன்னாடி காட்டுனா அம்மானு கூட பாக்காம குதறிடுவான்” செல்வமணி மகனுக்கு பயந்தபடி சொல்ல, யாழ்மொழிக்கோ பாட்டியின் பேச்சில் சிறிது சிரிப்பு எட்டிப்பார்த்தது.

“உனக்கு எப்படி கல்யாணம் ஆச்சு எதையும் நான் கேக்க மாட்டேன். ஆனா, அந்த பையனை பாத்தா நல்ல பையனா இருக்காரு. முறைக்காத அதான் உண்மை. உங்களுக்குள்ள என்ன சண்டை இருந்தாலும் உக்காந்து பேசுங்க. அதேமாதிரி உங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை இருந்தாலும் இப்படி அடுத்தவங்க முன்னாடி எடுத்தெறிஞ்சு பேசுனா, அடுத்தவங்க என்ன நினைப்பாங்க சொல்லு. அதுவும் அந்த பையன் பதவிக்கு நீ அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்க வேணாமா?” செல்வமணி பேத்தியின் தாடையை பிடித்துக் கேட்க,

தலை கவிழ்ந்தவள், “ஸாரி பாட்டி” என்றாள்.

“இதுதான் எங்க யாழ்” என்று பேத்தியைக் கொஞ்சியவர் அவளுடன் பேசியபடி வந்து வெளியே அமர, தனு ஓடிவந்து விசாலாட்சியின் முதுகில் ஏற, “ஆத்தேதேஏஏஏ” என்று அவர் கத்தத் துவங்க,

“ஏய் அப்பத்தா மேல இருந்து இறங்குடி” என்றபடி வந்து மகளின் பம்மில் வழக்கம் போல அடிபோட்ட பூஜா, மகளை சாப்பிட இழுக்க, “நோநோஓஓ!” என்று கத்தியவள் வாயில் பூஜா சமயம் பார்த்து உணவைத் திணிக்க, “உவ்வே” என்று தொடங்கிய மகளை பூஜா முறைக்க, அன்னையின் முறைப்பில் உணவு தானாக உள்ளே செல்லத் துவங்கியது சின்னவளுக்கு.

சாப்பிட்டு முடித்தவள் வீட்டில் யாராவது கிடைப்பார்களா என்று தேட, அமர்ந்து வேதாவிடம் பேசிக்கொண்டிருந்த யாழ்மொழி அவளின் கண்ணில் பட்டாள்.

யாழ்மொழியின் அருகே ஓடியவள், “நீங்க என்கூட விளையாட வர்றீங்களா மம்மி?” என்று வினவ அவளின் பிஞ்சுக் கரங்களைப் பிடித்தவள், “என்ன விளையாட்டு?” வினவினாள் புன்னகை மாறாமல்.

“என்கூட வாங்க” என்றழைத்துச் சென்ற சின்னவள், கீழே இருக்கும் ஒரு அறைக்குள் இழுத்துச் செல்ல, யாழ்மொழி வாய்பிளந்து நின்றுவிட்டாள். இங்கு வந்ந தினத்தில் இருந்து அறைக்குள்ளலேயே அடைந்து இருந்தவள் இந்த அறையை எல்லாம் கவனிக்கக்கூட இல்லை.

கதவின் முன்னே, “தனு’ஸ் ப்ளே ரூம்” என்ற தலைப்பைத் தாங்கிய பிங்க் நிற பலகை வேறு.

“இதுதான் என்னோட ப்ளே ரூம்” சின்னவள் கைகளைச் சுற்றி பெருமையாக யாழிடம் சுற்றிக் காட்ட, “சூப்பரா இருக்கு உங்க ரூம்” என்றவளுக்கு எங்கு திரும்பினாலும் அனைத்து பொம்மைகளும் கண்களை பறித்தது.

விரல் சைசில் ஆரம்பித்து தன் உயரம்வரை இருந்த பொம்மைகளை பார்த்த யாழ்மொழி, அதை ரசனையுடன் வருடிக்கொடுக்க, அவள் முகத்தில் அவளறியாமல் ஒரு புன்னகை. “பிடிச்சிருக்கா அண்ணி?” வேதா அவளின் பின் நின்றபடி கேட்க,

“எல்லாமே அழகா இருக்கு” யாழ்மொழி சொல்ல, தனுவின் முகத்திலோ அத்தனை ஒரு பெருமை.

“எல்லாம் சின்ன அண்ணாதான் வாங்கி அவரே ரூம் டிசைன் பண்ணது” வேதா சொல்ல, அடுத்த நொடி முகத்தில் நெளிந்திருந்த யாழ்மொழியின் புன்னகை ஓடோடி மறைந்தது. “ம்ம்” என்றுமட்டும் உரைத்தவள் மேலே எதுவும் பேசவில்லை.

“வாங்க என்னோட கிட்சனுக்கு கூட்டிட்டு போறேன். டாய்ஸுக்கு எல்லாம் பசிக்கும்” தனு யாழின் கரத்தை பற்றி இழுத்துச் செல்ல, அவளுடன் சென்றவள், அங்கு சிறியவளின் உயரத்திற்கு ஏற்ப ப்ளாஸ்டிக்கில் இருந்த சமையல் மேடையோடு கூடிய பொருட்களை கண்டு மீண்டும் புன்னகை பூத்தாள்.

மஞ்சள் நிற ப்ளாஸ்டிக் மேடைக்கு கீழே சிவப்பு வண்ண ப்ளாஸ்டிக் சிலிண்டர், மற்றும் அருகில் இருந்த ப்ளாஸ்டிக் செல்ஃபில், ப்ளாஸ்டிக் பாத்திரங்கள். யாழைத் திரும்பிப் பார்த்தவள், “பர்ஸ்ட் எல்லாருக்கும் பால் தரணும்” என்று ப்ளாஸ்டிக் லைட்டரை எடுத்து அடுப்பை கற்பனையில் பற்ற வைத்து, பாலை காய்ச்ச, இடுப்பில் கை கொடுத்துக் கொண்டு சின்னவள் வியர்ப்பது போல பாவனை செய்து கொண்டு சமையல் செய்த அழகில், யாழ்மொழிக்கு அவளைத் திகட்ட திகட்ட கொஞ்ச வேண்டும்போல இருந்தது.

சிறியவளை அருகில் இழுத்து அழுந்த கன்னத்தில் யாழ் முத்தமிட, “பால் பொங்குது” பெரிய மனுஷியைப்போல பேசிய சிட்டு, அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி அனைவருக்கும் பால் கப்பை பரிமாறியது. கூடவே யாழுக்கும், வேதாவுக்கும்.

இல்லாத டம்ளரை வாயில் வைத்து சின்னவளை குஷியேற்றிய இருவரும் சிறிதுநேரம் அவளுடன் விளையாடிக் கொண்டிருக்க, மதியம் போல வீட்டிற்கு வந்த வர்ஷித், “வேதா, தனுவை தூக்கிட்டு வெளிய போ” என்றான்.

இத்தனை நாள் கேட்க முடியாமல் தவித்தவன், “என்கிட்ட கூட ஏன் மறைச்ச?” அவன் வினவ, யாழ்மொழி தலைகுனிந்து எதுவும் பேசாமல் நின்றாள்.

“நான் அவ்வளவு வேண்டாதவன் ஆகிட்டேனா?” வர்ஷித் வினவ,

“யாருக்கும் நான்தான் வேண்டாதவ ஆகிட்டேன். நான்தான் தப்பானவ ஆகிட்டேன்” என்றவள் அங்கிருந்து விறுவிறுவென வெளியே வர, அவளை அழைத்த திவ்யபாரதி, அவளை மதிய உணவை சாப்பிட வைத்த பிறகேவிட்டாள்.

***

அலுவலகத்தில் இருந்த வித்யுத்தின் அலைபேசி சிணுங்க, மீட்டிங்கில் இருந்து அப்போதுதான் வந்து சாப்பிட அமர்ந்தவன், அன்னை என்றதும் அதைஏற்று, “ம்ம்” என்றான்.

அங்கு அன்னை சொன்ன செய்தியில் அணுஉலை போல கோபத்தோடு கொதித்தபடி அவன் எழ, அவன் எழுந்த வேகத்தில் அவன் அமர்ந்திருந்த சுழற் நாற்காலி, சுவற்றில் சென்று அதிர்வுடன் இடித்து நின்றது.

சாப்பிட அமர்ந்திருந்தவன், அழுத்தமாகக் கண்களை மூடித் திறந்து, தனது ஷூவின் ஓசை தரையில், ‘டக்’, ‘டக்’ என்று கேட்க, அவன் கோபத்தில் வைத்த எட்டுக்களில், அவனின் ஷூ எழுப்பிய ஓசையில் அனைவரும் அவனைத் திரும்பிப் பார்க்க, நேராய் அவன் காருக்குச் செல்ல, அவனுக்குக் கதவைத் திறந்துவிட்ட காரோட்டி, காரை எடுக்க, இடத்தைச் சொன்னவன், “சீக்கரமா போங்க” என்றான்.

அன்னை சொன்ன இடத்திற்கு விரைவாகச் சென்று வித்யுத் இறங்க, திவ்யபாரதியும் அதேநேரம் அங்கு வந்து இறங்கி இருந்தாள். மகனுடன் திவ்யபாரதி உள்ளே நடக்க, எதிரே தனக்கு அழைத்த பெண்ணை பார்த்த திவ்யபாரதி, “எங்கே?” என்று கேட்க அப்பெண் சொன்னது தான் தாமதம் வித்யுத் வருணன் புயலாய் அந்த மருத்துவரின் அறைக்குள் ஆவேசமாய் அனுமதியின்றி நுழைந்தான்.

***

சாப்பிட்டு முடித்த யாழ் அனைவரும் ஓய்வெடுக்கச் சென்ற சமயம், வர்ஷித் வெளியே கிளம்ப புடவைக்கு மாறி வந்தவள், “நான் கொஞ்சம் வெளிய போகணும். ட்ராப் பண்ண முடியுமா?” கேட்க, “ம்ம் ஓகே. வந்து விட்டுட்டு போயிடறேன்” என்றவனிடம் மறுத்தவள்,

“இல்ல நானே வந்துக்கறேன். பிரண்ட் ஒருத்தியை பாக்கணும். லேட் ஆகும்” என்றிட, “அதென்ன யாரோகிட்ட பேசற மாதிரி பேசற. மாமா முறை தானே ஆகும் அத்தான் உனக்கு” பூஜா கேட்க, மெல்லியதாக புன்னகைத்தவள், “ட்ரை பண்றேன்” என்றுவிட்டு வர்ஷித்துடன் கிளம்பினாள்.

மருத்துவமனைக்கு முன் நிறுத்தச் சொன்னவள், “இங்கதான்” என்றிட, “இங்க யாரு இருக்காங்க உன் பிரண்ட்?” வினவியவனிடம், “இங்க ஸ்கூல் பிரண்ட் இருக்கா மாமா. இங்க ஜாய்ன் பண்ணியிருக்கா” என்றிட, யோசனையுடன் அவளைப் பார்த்தவன், “முடிச்சிட்டு அம்மாக்கு கால் பண்ணு யாழ். அம்மா கார் அனுப்புவாங்க. தனியா போயிடாதே” என்றவன் கிளம்பினான்.

யாழ் செய்த தவறு வர்ஷித் மருத்துவன் என்பதை மறந்தது. அவனுக்கு தன் ஊருக்குள் தெரியாத மருத்துவர்களா?

இப்போது அவளை இறக்கிவிட்டு வந்த மருத்துவமனை கூட அவனுடைய நண்பனுடையது. சென்ற வாரம் கூட வந்து சென்றவன் யாரையும் புதிதாக சந்திக்கவில்லை. அப்படியிருக்க யாழ்மொழி சொன்னது அவனுக்கு முரணாக இருக்க அன்னைக்கு அழைத்தவன், விஷயத்தை தெரிவிக்க, திவ்யபாரதி தனக்கு தெரிந்த பெண் அங்கு செவிலியராக பணிபுரிய, அழைத்தவள், விஷயத்தைக் கேட்டு ஆடிவிட்டாள்.

உடனே மகனிற்கு அழைத்த திவ்யபாரதி, “கே.எல் ஹாஸ்பிடலுக்கு வா” என்றழைக்க, “ம்மா உங்க விருப்பத்துக்கு வரமுடியுமா? என்ன விஷயம் சொல்லுங்க” பற்களைக் கடிக்க,

“யாழ் விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க அங்க போயிருக்கா. இப்ப வர்றியா இல்ல நானே போய் கூட்டிட்டு வரட்டா?” பற்களைக் கடித்தபடியே திவ்யபாரதி மகனிடம் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, வித்யுத்தின் விதிர்விதிர்த்துப் போய் கிளம்பினான். மனதுக்குள் அத்தனை ஆத்திரமாக இருந்தது. அது யார் மேல் என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை.

மருத்துவமனைக்கு வந்த யாழ்மொழியை அந்த செவிலிப்பெண் சில காரணங்கள் சொல்லி திவ்யபாரதி வரும்வரை தடுத்துப் பார்த்தும், மருத்துவர் வந்ததால் அவளை வேறு வழியின்றி உள்ளே அனுப்பி வைக்க யாழ்மொழி, தயக்கத்துடன் உள்ளே சென்றாள்.

அங்கிருந்த அறைக்குள் அழைத்துச் சென்ற பெண் மருத்துவர் அவளை அங்கிருந்த பெட்டில் படுக்கச் சொல்ல, ஏறிப் படுத்தவளின் வலது விழியில் இருந்து ஈரம் கசிந்தது. இப்படியொரு கணம் தன் எதிரிக்குக் கூட வரக்கூடாது என்று எண்ணியவளின், மனம் பாரமாகக் கனக்க, தொண்டை அடைக்க, விழியில் கசிந்த நீரோடு படுத்திருந்தவளைப் பார்க்க மருத்துவருக்கே பாவமாக இருந்தது.

“ஆர் யூ ஓகே?” கேட்டவரிடம், “ம்ம்” என்று கண்களை மூடித் திறந்தாள். மருத்துவரும் பார்த்திருக்கிறாரே சிலர் பெண்களை சந்தேகத்துடன் அழைத்து வருவதை. சிட்டியில் வளர்ந்தாலும் வெளிநாட்டில் படித்து வந்தாலும், சில ஆண்கள் இப்படி பெண்களின் கற்பை சந்தேகப்படுவதை நினைத்தவருக்கு வெறுப்பாக இருந்தது.

யாழ்மொழியின் புடவையில் கை வைத்தவர், டெஸ்ட்டிற்கு தயாராக, தனது கரங்களில் க்ளவுஸை அணிந்த சமயம் சூறாவளியாய் உள்ளே வந்த வித்யுத் வருணனைக் கண்ட மருத்துவரும் சரி, யாழ்மொழியும் சரி ஒருசேர அதிர்ந்தனர்.

கணவனின் அதிரடி வருகையில் திகைத்தவள் உடையை சரி செய்து திடுக்கிட்டு எழுந்து அமர, ஏற்கனவே மருத்துவருக்கு வித்யுத்தை தெரியும் என்பதால், “ஸார், நீங்க இங்க வரக்கூடாது. வெளிய வெயிட் பண்ணுங்க” கடுப்பை அடக்கிக்கொண்டு அவர் பேச,

“மிஸ்… வாட் எவர். எனக்கு மறந்திடுச்சு. கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க. ஷீ இஸ் மை வைஃப்” என்றவனின் சொற்கள் மருத்துவரிடம் இருந்தது என்றால், பார்வை கால்களை தொங்கவிட்டபடி இன்னும் பெட்டிலேயே அமர்ந்திருக்கும் தன் மனைவியின் மேல் இருந்தது. அவனின் பார்வையை உணராதவளோ தலை கவிழ்ந்தபடி அமர்ந்திருந்தாள்.

அவனின் சொற்களில் யாழ்மொழியை ஒரு கணம் திரும்பிப் பார்த்த மருத்துவர் அறையைவிட்டு வெளியே செல்ல, மனைவியை உக்கிரமாக கூர் விழிகளால் துளைத்தெடுக்கும் பார்வையில் பார்த்தபடி திரும்பியவன், “லூசாடி நீ” என்று கேட்க, அதுவரை அமைதியாக இருந்தவளின் மௌனம் உடைப்பெடுத்து, அழுகை கேவலாக மாறியது. நேற்றிலிருந்து அவனின் கேள்வியில் உடலும் மனமும் துடித்துக் கொண்டிருந்தவள், நேற்று இரவே இப்படியொரு முடிவை எடுத்திருந்தாள். காதல் தன்னை இத்தனை பலவீனமாக்கும் என்று அவள் நினைத்துக்கூட பார்த்ததில்லை.

அவளின் அழுகையை, கேவலை, வெறுமையாக பார்த்திருந்தவன், கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருக்க, அவளது அழுகை நின்றபாடில்லை. அலைபேசி அழைக்க எடுத்துப் பார்த்தவன், “விஷ்ணு! நான் அப்புறமா கூப்பிடறேன். வைங்க” என்று வைத்துவிட்டான்.

“எனக்கு நிறையா வேலை இருக்கு. கிளம்பறியா?” அவன் அடிக்குரலில் அதட்ட, “நீ போ. நான் டெஸ்ட் எடுத்திட்டு வரேன்.” என்றவளின் வாக்கியத்தில், அவனின் பொறுமை கற்பூரமாய்க் கரைய, கையை ஓங்கியேவிட்டான். ஏற்கனவே அழுது ஓய்ந்திருந்தவளின் தோற்றம் அவனின் மனதை வேறு அசைக்க, கரத்தை இறக்கியவன்,

“இங்க பாரு. லூசு மாதிரி பண்ணிட்டு இருக்காதே. கிளம்பு” என்றிட, அவளோ பதலளிக்காமல் கண்ணீருடன் தரையை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“உன்கிட்ட தானடி பேசிட்டு இருக்கேன்” அவன் இருக்கும் இடம் மறந்து கத்த அவளின் கன்னங்களை ஒற்றைக் கையால் இருபக்கமும் அழுத்தியபடி பிடித்து தாடையை நிமிர்த்திக் கேட்க, அவனை ஏறிட்டுப் பார்த்தவளின் விழிகளில் அப்படியொரு வேதனை.

“என்மேல உன..க்கு சந்தேகம் இருக்கு..தானே?” தேம்பியபடி கேட்டவள் முகத்தை மூடிக்கொண்டு அழ, “நாளைக்கே நமக்கு குழந்தை பிறந்தா..” என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை.

“அப்பவும் நீ இதே கேள்வியை கேட்டனா கண்டிப்பா செத்திருவேன் அதை நினைச்சு நினைச்சே. அதுக்கு இதுவே எவ்வளவோ பெட்டர்ல?” விக்கியவளின் கரத்தைப் பற்றியவன், “ஏதோ கோபத்துல உன்னை கஷ்டப்படுத்தனும் பேசுனேன். உன்னை அழ வைக்கணும்னு தான் பேசுனேன். நீ இந்தளவுக்கு வருவேனு தெரியாது” என்றவன் அவளின் இடையைப் பற்றி வலுக்கட்டாயமாக தரையில் இறக்கியவன், அவளின் கரத்தை பற்றி வெளியே இழுத்து வர, வெளியே நின்றிருந்த திவ்யபாரதியைக் கண்ட யாழ்மொழி தலை குனிந்துகொள்ள, “நீ முன்னாடி போய் நம்ம கார்ல உட்காருடா” என்றிட, மருமகள் முன்னே சென்றபின் மகனிடம் திரும்பினாள் திவ்யபாரதி.

“அவ இங்க வந்ததுக்கு யாரு காரணம் வித்யுத்?” திவ்யபாரதி மகனிடம் கேட்க,

“நான்தான்” என்றவனை பார்வையாலேயே எரித்தாள் அவள். மகனிடம் இப்படியொரு பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. என்ன சொன்னால் எப்படி சொன்னால் மகன் அடங்குவான் என்று பெற்ற தாய்க்குத் தெரியாதா என்ன?

“ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி தப்பு பண்ணால இல்லையானு அவ விர்ஜினிட்டி டெஸ்ட் தான் முடிவு பண்ணும்னா. உன் அம்மா நானே தப்பானவ தான் வித்யுத். வாட்எவர் ஒரு பொண்ணோட கற்பை ஒரு இன்ச் சதை முடிவு செய்யாது. இது நிறைய முட்டாள்களுக்கு இங்க புரியாது. படிச்ச முட்டாள்களும் அப்படித்தான் இருக்கீங்க” என்றவள் மகனை திரும்பியும் பார்க்காமல் முன்னே நடக்க, அன்னை செல்லும் திசையையே பார்த்திருந்தவன், தனது அலுவலகத்திற்குக் கிளம்பினான்.

வெளியே வந்து காரை எடுத்த திவ்யபாரதி, “ஒருத்தன் உன்னை சந்தேகப்பட்டா.. அது உன் புருஷனா இருந்தாலும்.. நீ யாருக்கும் உன்னை நிரூபிக்கனும்னு அவசியம் இல்ல. யூ.எஸ்ல படிச்ச பொண்ணு மாதிரி இரு யாழ். என்னோட மருமகளா இருக்க நான் எந்த தகுதியும் எதிர்பாக்க மாட்டேன். ஆனா, தைரியம் ரொம்ப முக்கியம்” என்றவள் காரை எடுக்க, யாழ்மொழி தலைகுனிந்தபடியே அமர்ந்திருந்தாள்.

வீட்டிற்கு வந்து அறைக்குள் தரையில் படுத்தவளுக்கும் சரி அலுவலக்கத்திற்கு சென்றவனுக்கும் சரி கடந்தகாலம், அவர்களின் வசந்தகாலம், இருவரின் கண்முன் வந்து படமாக ஓடத் துவங்கியது.