யாழ்-8

IMG_20220303_084637-b221cbe6

யாழ்-8

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா! (UNITED STATES OF AMERICA)

பலாயிரம் ஏக்கர்களுக்கு மத்தியில் மிகப்பிரம்மாண்டமாக, பார்ப்போர் அனைவரையும் ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் தலைநிமரச் செய்யும், பல நாட்டு மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் அது. பல நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகம் ஒரு கனவு, ஆசை, ஏக்கம், ஏன் காதல் என்று கூட சொல்லலாம். அப்படிப்பட்ட புகழ்பெற்ற பழமைவாய்ந்த பெயர்போன பல்கலைக்கழகம்.

பல்கலைக்கழகத்தின் வெளியே லாலிபாப்பை தன் இரு அதரங்களுக்குள் அடக்கியபடி நின்றிருந்த யாழ், “சம்யு! எப்ப வர்ஷித் வரும்?” வினவ, அவளருகில் நின்றிருந்த சம்யுக்தா தோழியின் சிணுங்கலான சலிப்பைக் கண்டு புன்னகைத்தாள்.

சம்யுக்தா. களையான முகமும், கனிவான நிறமும் சேர்ந்து எப்போதும் அடுத்தவரிடம் அன்பை மட்டுமே காட்டும் காரிகை அவள். மதி முகத்தில் பிரம்மன் வரைந்திருந்த இரு அடர் புருவங்களும், அதற்குக் கீழ் சாந்தம் வழியும் அகண்ட விழிகளும், முகத்திற்கு எடுப்பான நாசியும், ரோஸ் கோல்டை உருக்கி இழைத்தது போன்ற அதரங்களும் கொண்டு எதிரில் இருப்பவரை நொடியில் சரித்து வீழ்த்தும் அழகு வாய்த்த சாதுமிக்க பட்டுப்பெண் அவள்.

அழகை கடவுள் அள்ளிக் கொடுத்ததால் என்னமோ, அவளுக்கு ஒரே ஒரு குறை, பெற்றவர்கள் இல்லை. வெற்றி-திவ்யபாரதி மற்றும் அவளின் தந்தை வழி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவள், இப்போது தன் படிப்பாலும், திறமையாலும், அவர்களின் உதவியாலும் இன்றோடு இங்கு வந்து இரு மாதங்கள் ஆகியிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் அவளது பாட்டியும் தவறியிருக்க, இப்போது சம்யுக்தாவின் பொறுப்புகள் அனைத்தும் வெற்றி, திவ்யபாரதியின் கைகளிலேயே.

ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு இப்பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்த வர்ஷித் வருணன், இந்த வருடம் தனது படிப்பை இன்னும் இரண்டு மாதங்களில் முடிக்கப்போகிறான். சம்யுக்தா தாங்கள் வளர்த்த பெண் என்றாலும், அவளின் பாதுகாப்பு கருதி வெற்றியும் திவ்யபாரதியும், வர்ஷித் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் அவளை வெளிநாட்டு வாசத்திற்கு படிப்பிற்காக அனுப்பி வைத்தனர். மகன் இந்தியா திரும்புவதற்குள் அவள் அங்கு பழகிக்கொள்வாள் என்ற நம்பிக்கையோடு.

“ஹே சம்யு. கால் வலிக்குது” யாழ் அங்கிருந்த ஒரு பெரிய உருண்டை கல்லின் மேல் அமர, “இரு யாழ். உள்ள ஏதாவது வொர்க் இருக்கும்” கூறியவள் புன்னகை மாறாமல் நிற்க, யாழ்மொழிக்கு, ‘இவளுக்கு கோபமே வராதா? வந்து அரைமணி நேரம் ஆச்சு. நானா இருந்தா கிளம்பி இருப்பேன். பொறுமை அதிகம் இந்த சம்யுக்கு’ மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், லாலிபாப்பை சலிப்பில் கடக்முடக் என்று சாப்பிடத் தொடங்கினாள்.

கருப்பு நிற ஜீன்ஸ், கருப்பு நிற டாங்க் டாப் அணிந்து, அதற்கு மேல் லைட் பீச் நிற ஜாக்கெட்டை அணிந்து, லூஸ் ஹேரில் இருந்தவளை பார்த்த சம்யுக்தாவிற்கு பாவமாக இருந்தது. ‘காலை வகுப்பில் தூங்கியதிற்கு ப்ரொபசர் அவளை அதட்டியதில் இருந்தே ஒரு மாதிரியாகத் தான் தெரிகிறாள். பாவம்’ என்று நினைத்துக்கொண்டாள்.

ஆனால், அதுதான் இல்லை. அவள் காட்டுப் பசியில், வயிற்றில் அமிலம் சுரந்து, ‘இர்ர்ர்’ சத்தம் போடும் அளவிற்கு பசியில் இருந்தாள். அவளின் காட்டுப் பசிக்கு ஒற்றை லாலிபாப் போதுமா?

வீட்டில் அனைவரின் செல்லங்களிலும், கொஞ்சல்களிலும் தினமும் அன்னை, பாட்டி செய்து தருவதில், சப்புக்கொட்டி ரசித்து ருசித்து சாப்பிட்டு வளர்ந்தவளுக்கு ஒற்றை லாலிபாப் எந்த மூலைக்கு பத்தும்.

“யாழ்! அண்ணா வந்துட்டாங்க” சம்யுக்தா சொல்ல, எழுந்தவள் இரு பக்கமும் கைகளை கொடுத்தபடியே வர்ஷித்தை முறைக்கத் துவங்கினாள். தனது ஏப்ரானை கழற்றியபடியே வந்தவன் இருவரிடமும், “ஸாரி, ஸாரி மங்கிஸ். இன்னிக்கு கொஞ்சம் காம்ப்ளிக்கேடட் கேஸ். அதான் லேட்” கூற,

“அப்ப இன்னிக்கு எனக்கு நெய் தோசைக்கு நீதான் பே பண்ணனும்” யாழ்மொழி கைகளைக் கட்டிக்கொண்டு கூற, இருவரும் சிரித்துவிட்டனர்.

“இதெல்லாம் ஒரு விஷயமா? இன்னிக்கு என் ட்ரீட் தான்” அவன் சொல்ல, இரு பெண்களின் முகத்திலும் பிரகாசமாய் பல்ப் எரிய ஆரம்பித்துவிட்டது. அங்கு விற்கும் இந்திய உணவின் விலைக்கு ட்ரீட் என்றால் இருக்காதா?

“என்ன ரொம்ப ஹாப்பியா இருக்க மாதிரி இருக்கு?” யாழ் சம்யுவின் தோளில் ஒரு கரத்தை மடக்கி வைத்தபடி வினவ, வெட்கச் சிரிப்பு சிரித்தவனோ முன்னால் செல்ல, அவனின் முன் சென்று வழி மறித்தவள் கால்களை பின்னால் வைத்தபடி நடந்துகொண்டே, “சொல்லு வர்ஷித். ப்ளீஸ்” கெஞ்ச,

“இன்னிக்கு லேபர்ல இருந்தப்ப. திடீர்னு ஒரு இன்ட்யூஷன். இன்னிக்கு என்ன குழந்தை பிறக்குதோ அதுதான் எனக்கும் பூஜாக்கும் பர்ஸ்ட் குழந்தைனு. பர்ஸ்ட் பெண் குழந்தை” கண்கள் இரண்டும் வெட்கத்தில் சுருங்கச் சொன்னவனை வாயடைத்துப் பார்த்த யாழ்,

“ஹே சம்யு. உன்னோட ப்ரோ ஒண்ணும் சின்னப் பையன் இல்ல. இனிமேல் என் ப்ரோ இன்னசென்ட்னு புகழாரம் பாடுனே..” போலியாய் மிரட்டியவள், “என்ன மாதிரியே வாலு மாதிரி ஒரு பொண்ணு பிறக்கும் வர்ஷித் உனக்கு” அவள் இனிமையான சாபத்தை அவனுக்கு விட்டுவிட்டுச் செல்ல, வர்ஷித்தோ,

“இது சாபம் இல்ல. வாழ்த்து ட்யூட்” என்றான் யாழ்மொழியின் தலையில் கொட்டியபடி. அதுதான் பழிக்கப்போகிறது என்பதை அறியாமல்.

“ஆஹ்!” வலியில் முனகியவளின் தலையை சம்யுக்தா தேய்த்துவிட, “உனக்கு என்னை மாதிரி பொண்ணு வேணும்னா. எனக்கு நம்ம சம்யு மாதிரி பொண்ணு வேணும்” என்றிட, இருவரும் விசித்திரமாய் அவளைப் பார்த்தனர்.

“ஹே! ஹே! ரிலாக்ஸ். ரொம்ப எமோஷனலா போயிடாதீங்க. பிஜிஎம் போடகூட இங்க யாரும் இல்ல. நான் ஒரு வாயாடி. என் அம்மாவும் அப்படி தான் இருந்திருக்காங்க. ஸோ அடிக்கடி சண்டை வரும். பாவம்ல என் அம்மா. அதனால நான் என்னை மாதிரியே ஒரு வாயாடி கூட, சண்டைபோட விரும்பலப்பா” என்றபடி சம்யுக்தாவின் நாடியை கொஞ்சுவதுபோல் பிடித்தவள், “ஸோ, எனக்கு நம்ம சம்யு பேபி மாதிரி ஒரு பொண்ணு போதும்” என்று சொல்ல,

“உன்னை மாதிரி எனக்கு பேரண்ட்ஸ் கிடைக்கத்தான், இந்த ஜென்மத்துல எனக்கு அந்த ஆண்டவன் அம்மா அப்பா இல்லாம பண்ணி இருக்காரோ என்னமோ” சம்யுக்தா அதரங்களில் புன்னகையை தவழவிட்டபடி கூறினாலும், அவளின் விழிகள் அவளயறியாமல் ஏக்கத்தை கொட்டியது. அவளின் அதரங்கள் தன்னையும் அறியாமல் இவ்வார்த்தைகளை ஆழ்மனதில் இருந்து கொட்ட, அங்கிருந்த மூவருமே எதையும் உணரவில்லை.

தோழியின் மனதின் ஆழம் நன்கு அறிந்தாலும், நொடியில் அவளின் மனதை மாற்றி எண்ணி, யாழ், “ரொம்ப கனவுக்கு போக வேணாம் சம்யு. உன்னை மாதிரி கொழந்த என்னை எப்படி சமாளிக்கப் போகுதோ. அதுவும் என்னோட பொலம்பல்ஸ் அன்ட் ப்ளா ப்ளா” யாழ் இரு கைகளையும் தலையில் வைத்துவிட்டுச் சொன்ன விதத்தில், இருவரும் சத்தமாக சிரிக்க, யாழோ இருவரையும் முறைத்து,

“என்னோட கஷ்டம் சிரிப்பா இருக்கா?” என்றவள் தனது ஸ்லிங் ஹான்ட் பேக்கால் இருவரையும் அடித்து வைத்தாள்.

ஒருவழியாய் யாழின் வாயாடலைக் கேட்டபடியே மூவரும், “தி இந்தியன்” ரெஸ்டாரென்டை அடைய, உள்ளே நுழைந்ததும் புடவையில் இருந்த அமெரிக்க இளம்பெண் மூவரையும் பன்னீர் தெளித்து வரவேற்க, மூவரின் வதனமும் புன்னகையைத் தத்தெடுத்தது.

ரெஸ்ட்டாரென்டில் உள்ள ரூஃப் டாப்பிற்கு சென்றவர்கள், அங்கு சென்று அமர, நியூ யார்க் நகரின் இளம் தென்றல் அவர்களின் மேல் இதமாய் வீச, மூவரும் அச்சூழலின் அமைதியையும், தனிமையையும் நன்றாக அனுபவித்தனர். வுட்டனால் செய்யப்பட்ட சிறு சிறு வீட்டின் மேல் கூரை போன்று அமைத்திருந்த அமைப்பின் கீழே மூவரும் அமர்ந்திருக்க, பந்து போல் அமைத்திருந்த டெக்கரேஷன் லைட்ஸின் அடர் மஞ்சள் ஒலி மூவரின் மீதும் அழகாய் படர்ந்து, மூவரின் வதனத்தின் எழிலையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

“நல்லா அடியில இருந்து எடுத்த ஒரு மட்டன் பிரியாணி, சுடச்சுட ஒரு நெய் ரோஸ்ட், அதுக்கு சிக்கன் மசாலா நல்ல காரமா. அடுத்து நல்ல க்ரீன் அன்ட் ரெட் சாஸ் கலந்த ஹாப் ஹாட் தந்தூரி சிக்கன். அதுக்கு லெமன், ஆனியன் மறக்காம” யாழ் ஆர்டரை செய்துவிட்டு, வர்ஷித்திடம் மெனுவை நீட்ட, அவனோ,

“அப்ப இதெல்லாம் நம்ம மூணு பேருக்கும் இல்லியா?” வர்ஷித் சீரியஸான முகத்துடன் கேலி செய்ய, யாழ்மொழி முறுக்கிக் கொள்ள, “கண்ணு வைக்காதீங்க ண்ணா” என்ற சம்யுக்தா, “அவ ஏற்கனவே ஜிம் ஜிம்னு சுத்திட்டு இருக்கா. இப்படி சாப்பிட்டாதான் வொர்க் அவுட் பண்ண முடியும்” என்றிட, யாழும் பாவமாய் தலையாட்டினாள், ஆனால் கேலியுடன்.

“ஓஓ.. தோழமைமைஐஐ” இழுத்த வர்ஷித் தனக்கு உண்டான ஆர்டரை தெரிவித்துவிட்டு இருவரிடமும் பேச, அவர்கள் ஆர்டர் செய்த அனைத்தும் வர, மூவரும் பாரபட்சம் பார்க்காமல் உண்ண, மூவரின் வயிறும், ‘டேய் கேப் விடுங்கடா’ என்னும் அளவிற்குச் சென்று கதறியது.

சாப்பிட்டு முடித்த யாழ், “ஐயோ! என்னால அசையவே முடியலையே!” என்று எழப்பார்க்க, ‘உகூம்’ முடிந்தால் தானே.

பில்லை செலுத்திய வர்ஷித், ஒரு பக்கம் யாழை எழுப்பிவிட, மற்றொரு பக்கம் சம்யுக்தா சிரிப்புடனே தோழியை எழுப்பினாள். அவர்கள் தங்கியிருக்கும் இடம்வரை சென்று இருவரையும் பத்திரமாக விட்டவன், இருவரும் உள்ளே சென்றபின்னே கிளம்பினான்.

யாழ்மொழி நியூ யார்க் வந்தபோது, அவளுக்கு அடித்த சலிப்புக்கும், தனிமைக்கும் அளவே இல்லை. வீட்டில் சுற்றி அத்தனை பேர் இருக்க இருந்தவளுக்கு தன்னந்தனியாக இருப்பது ஏதோ காட்டுக்குள் இருப்பது போன்று தோன்றியது. அப்படி ஒரு வாரம் யாழிற்கு கழிந்திருக்க, அதன் பிறகு வந்து சேர்த்தவள் தான் சம்யுக்தா.

யாழ்மொழியின் துறுதுறுப்பிலும், வாயாடித் தனத்திலும் ஈர்க்கப்பட்டவள், அவளிடம் பேசத் துவங்க, ஏற்கனவே பேச்சுத் துணைக்கு யாருமின்றி காய்ந்து கிடந்தவளுக்கு சொல்லவா வேண்டும்? அதன் பிறகு ஒரே ஒரு வாரம் தான் இருவருக்கும் தேவைப்பட்டது, இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறிக்கொள்ள.

சம்யுக்தாவுடன் வெளியில் செல்லும்போது யாழிற்கு பழக்கமானவன் தான் வர்ஷித். இருவரையுமே ஏனோ ஒன்று நட்பு ரீதியில் ஈர்க்க, அதுவும் அவளின் வாயாடித்தனத்தில் வர்ஷித் அவ்வப்போது தன் தங்கையையும், அன்னையையும் அவளிடம் உணர, விவரிக்க முடியாத உறவு இருவருக்கும் உருவாக, மூவரும் பெவி ஸ்டிக் போட்டது போன்று ஒட்டிக்கொண்டனர்.

அவ்வப்போது ஏதாவது பேசி வர்ஷித்திடம் கொட்டு வாங்கிக் கொள்வதை வாடிக்கையாக்கி இருந்தாள் யாழ்மொழி. அமைதியே உருவாக இருக்கும் சம்யுக்தா கூட அவ்வப்போது யாழை செல்லமாய் கன்னத்தில் தட்டுவது உண்டு. சேட்டைத் தனத்தில் அப்படி அனைவரையும் தன்னோடு சேர்த்திக் கொண்டிருந்தாள் அந்த மாயக்காரி, அவளைவிட இருமடங்கு சேட்டைக்காரன் அவளிடம் தன் சேட்டையை காட்ட நியூ யார்க் நகரம் வரப்போவதை அறியாமல்.

அடுத்த நாள் காலை கண் விழித்த யாழ், அவசரமாக பல்லை விலக்கிக் கொண்டு, ஜிம்மிற்குக் கிளம்பினாள். ஸ்போர்ட்ஸ் ப்ராவிலும், மேல் தொடையை கவ்வி பிடித்திருந்த ஷார்ட்ஸிலும் அனைவரும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க, ஸ்லீவ்லெஸ் டி சர்ட்டிலும் முட்டி வரை இருந்த ஷார்ட்ஸிலும் சென்ற யாழை பார்த்து சிலர் புன்னகைத்துக் கொண்டனர்.

என்னதான் இங்கு வரும்முன்னே குடும்பத்தோடு வெளிநாடுகளுக்கு சுற்றுலா வந்து, ஒரு மாதக்கணக்கில் தங்கியிருந்தவள் என்றாலும், உடை விஷயத்தில் அவளின் மனமே மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்த உடைக்கே அவளுக்கு வரும் இந்திய பயிற்சியாளர் தன்னை ஒரு மாதிரி பார்ப்பதை அவள் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறாள். கேட்கலாம் தான். தனக்கு இருக்கும் வாய்க்கு கேட்டு, அது ஒரு பிரச்சனையாக வெடித்தால், அது மேலும் தந்தைவரை சென்றால், இவனின் கதி அவ்வளவு தான் என்று நினைத்தவள் அமைதியாக இருக்கின்றாள்.

‘ஜிம்’ என்பதே தந்தையின் சொல்லுக்காக செல்ல ஆரம்பித்தவள், காலப் போக்கில் அதை தன் இஷ்டமாய் மாற்றிக்கொண்டாள். மனைவியும், அன்னையும் செய்யும் அறுசுவை உணவால், இப்படியே இருந்தால் மகள் வெடித்துவிடுவாள் என்று நினைத்தானோ என்னவோ அவளின் தந்தை. மகளை பதினாறு வயதில் இருந்து வீட்டின் முன் ஒரு மணி நேரம் நடக்கச் சொல்லி வற்புறுத்தி இருந்தான் அஷ்வின்.

“நான் நிறைய சாப்பிட்டு குண்டா இருக்கேனா ப்பா” ஒருநாள் நடந்து முடித்தபின், மகள் மூச்சு வாங்கக் கேட்க, அவனின் இதயமோ மகளின் கேள்வியில் கனத்தது. தன் மனைவியை பலமுறை குண்டூஸ் என்று கேலி செய்தவன் தான், செல்லமாக. ஆனால், இப்போது மகள் தாழ்வு மனப்பான்மையை முகத்தில் தேக்கிக் கேட்டது, அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

மகளுடன் சென்று வீட்டின் முன் இருந்த பூங்காவின் கல் மேடையில் அமர்ந்தவன், உடல் எடை கூடினால் வரும் பிரச்சனைகள், பாதிப்புகள் அனைத்தையும் கூறி, “நீ எவ்வளவு சாப்பிட்டாலும் அப்பா கேக்கமாட்டேன். ஆனா, சாப்பிடறதுக்கு ஈக்குவலா எக்ஸசைஸ் பண்ணிக்கோ. தட்ஸ் ஆல்வேஸ் குட் ஃபார் ஹெல்த்” தன்மையாய்க் கூற, பதினெட்டு வயதுவரை வாக்கிங் சென்றவள், அதற்குப் பின் ஜிம் சென்று பிட்னஸ் ப்ரீக்காக மாறிப்போனாள். ஆனால், சாப்பாடு மட்டும் குறைந்த பாடில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலையிலேயே குளித்து முடித்து, வந்தவள், முட்டிக்கு கீழ் வரை இருந்த ஸ்கை ப்ளூவும், வெள்ளையும் கலந்த வி நெக் மேக்ஸி கவுனை அணிந்து, வழக்கம் போல லூஸ் ஹேரில் சம்யுக்தாவுடன் வர்ஷித்தின் தங்கியிருக்கும் வீட்டை நோக்கிச் சென்றாள். வர்ஷித் வருணன் சமையலின் இரு பெண் ரசிகைகள் இருவரும்.

வழக்கம்போல் வர்ஷித்தின் வீட்டிற்குள் நுழைந்தவள் நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவனின் பின், பூனை போல நடந்து சென்று, அவனின் விழிகளை இரு கரத்தையும் வைத்து மூட, அவனோ அசையாது புன்சிரிப்புடன் அமர்ந்திருக்க, அவனுக்கு முன் சென்று நின்ற சம்யுக்தாவும், அவனையே இமைக்காமல் புன்னகையுடன் பார்த்திருக்க,

“ஏய் லூசு என்ன பண்ற?” என்றபடி படுக்கை அறைக்குள் இருந்து வந்த வர்ஷித்தை பார்த்த யாழ், படக்கென்று தன் கைகளை அகற்றிக்கொள்ள, சம்யுக்தாவோ வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க, வாய்விட்டுச் சிரித்த வர்ஷித்தின் அருகில் வந்து அவனின் தோளில் கை போட்ட வித்யுத் வருணன், “யாருடா இந்த லூசு?” என்று வினவ, யாழ்மொழிக்கு வந்ததே கோபம். பின்னிருந்து பார்க்க சகோதரர்கள் இருவரும் ஒரே போல் இருப்பதால் வந்த வினை. அதுவும் இன்று காலை சகோதரனைப் சர்ப்ரைஸாக பார்க்க வந்தவன், வர்ஷித்தின் உடையை வேறு அணிந்திருக்க, அதில் குழம்பிப் போனாள் அஷ்வினின் மகள்.

“ஹே! நான் லூசா?” கேட்டவள், அவனின் மேல் இருந்த கோபத்தில், வர்ஷித்தை அடித்து வைக்க, வித்யுத்தோ அவளின் கரம் அடுத்த முறை தன் சகோதரனை அடிக்கும் முன் வன்மையாகப் பற்றியது. அவளின் பூக்கரம், அவனின் முரட்டுக் கரங்களுடன் சிக்கி நடுங்கத் துவங்கியது.

“ஷ்ஷ்! வலிக்குது” யாழ்மொழி வர்ஷித்திடம் கசங்கிய முகத்துடன் கூற,

“வித்யுத் பாவம்டா. விடு” சகோதரனின் சொல்லில் விட்டானோ என்னவோ, யாழ்மொழியின் முகம் போன போக்கிலேயே அவளின் கரத்தை விட்டான். விளையாட்டிற்காகத் தான் அவன் அவளை சீண்ட நினைத்தது. மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் அவனிடம் இல்லை.

சிவந்திருந்த தனது கரத்தை நீவி விட்டவள், “இடியட்” என்று முணுமுணுக்க, “போடி லூசு” என்றான் அவன் சத்தமாகவே.

அவனின், ‘லூசு’ என்ற வார்த்தையில் அவள் கோபமும், கசங்கிய முகமுமாக வர்ஷித்தை பார்க்க, “அவனை விடு யாழ். நீ உள்ள வா. உனக்கு புடிச்ச பணியாரம் செஞ்சிருக்கேன்” அவளின் தோளில் அவன் கைபோட்டு அழைத்துச் செல்ல, சமையலறை வாயில் வரை வர்ஷித்துடன் அமைதியாக சென்றவள், திடீரென வித்யுத்தை திரும்பிப் பார்த்து, தனது வலது கரத்தின் நடுவிரலை தூக்கி அவனிடம் ஆத்திரத்துடன் காட்ட, “ஏய்!” என்று உறுமியபடி வந்தவனை வர்ஷித் தடுக்கப்படாதபாடு பட, அவளோ தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்பதுபோல, சமையல் அறைக்குள் சென்றவள் வர்ஷித் செய்திருந்த குண்டுப் பணியாரத்தை சுடச்சுட எடுத்துப்போட்டு சமையல் மேடையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்துவிட்டாள்.

பொது இடங்களில் நடுவிரலை காட்டுவது என்பது மேற்கத்திய கலாச்சாரத்தில் ஆபாசமான சைகை ஆகும். நடுவிரலை காட்டுவது என்பது கோபத்தை வெளிப்பாடு என்றாலும் அதற்கு பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன. அதிலும் ஒரு பெண் ஆணை நோக்கி நடுவிரலை காட்டுகிறார் என்றால் அதற்கு மேற்கத்திய கலாச்சாரத்தில் மிகவும் ஆபாசமான ஒரு செயலை அர்த்தமாக கூறுகின்றனர்.

அவன் விளையாட்டாக ஆரம்பித்ததை இவள் வினையாக முடித்திருந்தாள்.

“விடுறா. திமிரைப் பாரேன். பொண்ணா இது. பஜாரிஇஈஈ” கர்ஜித்தபடியே திட்டியவனை, “வித்யுத்” என்ற சம்யுக்தாவின் ஒற்றை அழைப்பு அமைதியாக்கியது.

“அவ கோபத்துல பண்ணிட்டா. வேணும்னே பண்ணல. கூல்டா” சம்யுக்தா நண்பனின் தோளில் கை வைத்து அவனை அமைதிப்படுத்த முயல, நம் சண்டைக்காரி விட்டால் தானே?

“வேணும்னே தான் பண்ணேன்” தெனவெட்டாய் சொன்னவளின் தொணியில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மதுரை மைந்தனுக்கு பிறந்த மதுரை வீரன், சகோதரனை தள்ளிவிட்டு உள்ளே புயலென நுழைந்து, அவளின் தட்டை ஆவேசம் பொங்க தட்டிவிட, பணியாரம் கீழே விழுந்து உருண்டு ஓடியதில் வெகுண்டெழுந்தவள், “டேய்!” என்று தொண்டை கிழியக் கத்த, “ஏய்! அறைஞ்சேன்னா” கையை ஓங்கியபடி சொன்னவனின் வார்த்தையின் ஆத்திரத்திலும், அழுத்தத்திலும் அவளின் குரல் உள்ளே ஓடிச்சென்று ஒழிந்தது.

வர்ஷித்தும், சம்யுக்தாவும் செய்வதறியாது நின்றிருந்தனர்.

அவள் அவனை முறைத்தபடி கிட்சன் மேடையிலேயே அமர்ந்திருக்க, “வெளிய போடி” என்றான் சொடக்கிட்டு.

அவனின் வார்த்தையில், அதுவும் அவன் சொடக்கிட்டு சொன்ன விதத்தில் அவமானத்தில் தலை குனிந்தவள், கைகளை கழுவச் செல்ல, அதுவரை அமைதியாக இருந்த சம்யுக்தா, “வித்யுத்!” என்றாள் சிறிது கோபத்தோடு.

தோழியின் அழைப்பில் திரும்பியவன், அவள் அடுத்து சொல்ல வருவது புரிந்துகொண்டு, “உனக்கு என் பிரண்ட்ஷிப்பை விட, இவ முக்கியமா?” கேட்க, சம்யுக்தா, “இப்படி பேசாத வித்..” அவள் முடிப்பதற்குள் கைகளை கழுவிவிட்டு வந்த யாழ்மொழி, தனது வாலட்டை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல, வர்ஷித்தோ தலையில் கை வைத்துக் கொண்டு, “யாழ்! யாழ்!” கத்தியபடி அவளிடம் ஓடினான்.

“யாரு இவ? இவளுக்கு என்ன இவ்வளவு சப்போர்ட் பண்றீங்க?” வித்யுத் சீற, சம்யுக்தாவோ, “அமைதியா இருடா” என்றபடி வர்ஷித்தின் பின்னேயே சென்றாள்.

யாழின் கரத்தைப் பற்றி நிறுத்திய வர்ஷித், “யாழ், அவன் என் தம்பிடி. ஏதோ கோபத்துல..” அவன் முடிப்பதற்குள்,

“பரவாயில்ல. நீங்க எல்லாம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. என்னால ஸ்பாயில் பண்ணிக்க வேண்டாம்” என்றவள் அவமானத்தால் ஏற்பட்ட வலியை மறைத்து புன்னகையுடனே சென்றுவிட, சம்யுக்தாவோ கலங்கிய விழிகளோடு வர்ஷித்தை பார்க்க, வித்யுத்துக்கு எரிச்சலாக வந்தது.

“நீ எதுக்கு இப்ப ஓவர் ரியாகட் பண்ற?” வித்யுத் சம்யுக்தாவை அதட்ட,

“இப்படித்தான் அடுத்தவங்கள ஹர்ட் பண்ணுவியாடா?” கேட்டவள், கிளம்ப, “சம்யு! உன்னையும் இவனையும் பாக்க ஆசையா வந்திருக்கேன். இப்படி மூஞ்சியை தூக்கிட்டு போனா என்ன அர்த்தம்?” அவன் கோபத்துடன் வினவ,

“அவ பாவம்டா. இப்படி யாராவது வந்தவங்கள அனுப்புவாங்களா சொல்லு. நான் ஈவ்னிங் வர்றேன். பை” இருவருக்கும் சொல்லிவிட்டு அவள் கிளம்ப எத்தனிக்க, சம்யுக்தாவின் அலைபேசி அலறியது. யாழ்தான்.

“சம்யு. நான் தெரிஞ்சவங்க வீட்டுக்கு போறேன். ஈவ்னிங் பாக்கலாம்” அவளின் பதிலை எதிர்பார்க்காமல் யாழ் வைத்துவிட அவளுக்குத் தெளிவாக புரிந்தது. அவள் தனியாக இருப்பதற்கே அவ்வாறு கூறுகிறாள் என்று. மேலும் அங்கு சென்று அவளை சங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்று எண்ணியவள், வித்யுத்தை பார்த்தபடியே அலைபேசியை அணைத்துவிட்டு வர்ஷித்திடம் யாழ் பேசியதை கூற, அவனும் பெருமூச்சுடன் சகோதரனைப் பார்த்தான்.

“என்ன லுக் இது? அப்படி அவ முக்கியம்னா சொல்லுங்க. ஐ வில் லீவ் டுடே” வித்யுத் கூற, இருவருக்கும் யாரை முதலில் சமாதானம் செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கியது.

முதலில் வர்ஷித்தை சமாதானம் செய்ய எண்ணிய சம்யு, “கோவப்படாத வித்யுத். பர்ஸ்ட் சாப்பிடு” சம்யுக்தா இருவரையும் உள்ளே அழைத்துச் செல்ல, சற்று நேரத்திற்கு முன் வித்யுத் தட்டிவிட்ட யாழின் தட்டு, கீழே உணவுடன் சிதறிக் கிடந்து, மூவரையும் பார்த்து சிரித்தது.

சம்யுக்தா சென்று அதை சுத்தம் செய்ய முயல, அவளுடன் உதவி செய்ய வந்த வித்யுத்தை தடுத்தவளுக்கு மனம் யாழின் மேலேயே இருந்தது. எந்தளவிற்கு சுட்டித்தனமும், வாயாடித் தனமும் அவளிடம் இருக்கிறதோ, அதே அளவு சென்சிட்டிவ்வும் கூட அவள்.

சிறுவயதில் இருந்து தன்னை வளர்க்கும் வெற்றி திவ்யபாரதி மேல் அதிகபட்ச மரியாதையை வைத்திருப்பவளுக்கு, அதே அளவுக்கு வர்ஷித்தும், வித்யுத்தும், வேதாவும் முக்கியம். வர்ஷித்திடம் சகோதரனைப் போன்ற பாசம் என்றால், வித்யுத்திடன் தோழனிடம் உள்ள பாசம்.

இரண்டு மாதங்கள் கழித்து பார்ப்பவனை திட்டவும் அவளால் முடியவில்லை. இரண்டு நட்புக்கு இடையே லாரி டயரின் நடுவே சிக்கிய எலி போல ஆனது அவளின் நிலை.

மாலைவரை மூவரும் ஒன்றாக இருக்க, வித்யுத், “வெளில போய் காஃபி சாப்பிடலாமா?” கேட்க, மூவரும் வெளியே கிளம்பிச் சென்றனர். போகும் வழி நெடுகிலும் இருவரையும் தன் பக்கம் இழுத்து யாழையே அவன் மறக்கடித்திருக்க, சம்யுக்தா தங்கியிருக்கும் அறைக்கு அருகே உள்ள கஃபேவிற்குள் புகுந்தனர்.

தனக்கு ஒரு டபுள் எக்ஸ்பிரஸோவை ஆர்டர் செய்தவனிடம், “வித்யுத், இங்க ஒரு ஷாப் இருக்கு. நான் சம்யுக்கு காமிச்சிட்டு வர்றேன்” வர்ஷித் சம்யுக்தாவை அழைத்துச் செல்ல, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள் ஒரு பக்கம் நிலை குத்தி நின்றது.

யாழ்மொழி தான்.

கண்ணாடித் தடுப்பின் வழியே அவன் பார்க்க, நேர் எதிரே இருந்த சுற்றியும் கண்ணாடித் தடுப்பினால் ஆன, “இன்னர் க்ளோ ஜூஸரி” என்ற கடையில் யாழ்மொழி தனியாக, கடையின் கடைசியில் உள்ள இருக்கையில் தனியாக, தன்முன் வைக்கப்பட்டுள்ள ப்ளூபெர்ரி டிளைட்டுடன் அமர்ந்திருந்தாள்.

வான நீல நிறமும், வெள்ளை நிறமும் கலந்த மேக்ஸியில், எங்கோ உம்மென்ற முகத்துடன் கையிலிருந்த போர்க் ஸ்பூனை டிளைட்டில் கோலமிட்டபடி, வேடிக்கை பார்த்துக்கொண்டு, தன் முன் இருந்த ப்ளூபெர்ரி டிளைட்டை அளந்து கொண்டிருந்தாள். அவளை யாரும் இது போல் அவமானப்படுத்தியது இல்லை. அதுவும் அவன் சொடக்கிட்டு சொன்னவிதம் அவளுக்கு முகத்தில் அடித்தாற் போல் ஆயிற்று.

இதில் தனியாக வந்து அமர்ந்தவளுக்கு அன்னை, தந்தையின் ஞாபகம் வேறு திடீரென வந்து தொலைத்து, அவர்களை பார்க்க வேண்டும் என்று மனது ஏங்க, கண்கள் கலங்குவது போல இருந்தது மறவோளுக்கு. சுற்றியும் சிலர் இருக்க, தன்னைக் கட்டுப்படுத்தியவள், காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருப்பதால் ப்ளூபெர்ரி டிளைட்டை உள்ளே ஒரு வாய் தள்ளினாள்.

அதேநேரம் சரியாக அவளை அஷ்வின் அலைபேசியில் அழைக்க, “அப்பா” என்று திரையில் ஒளிர்ந்ததைக் கண்டே அவளுக்கு கண்கள் கலங்க, “கால் யூ லேட்டர்” என்ற மெசேஜை அனுப்பி வைத்தவள், முகம் சுண்ட, சாப்பிடப் பிடிக்காமல் எழுந்தாள். ஏதோ ஒன்று அவளின் தொண்டையை அடைத்தது.

வெளியே வந்தவளுக்கு, அருகிலிருந்த பூங்காவிற்கு செல்லலாம் போலிருக்க, அந்த திசையில் அவளின் கால்கள் நடக்கத் துவங்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்த வித்யுத் வருணனோ, எழுந்து அவளறியாமல் பெண்ணவளைப் பின்தொடர ஆரம்பித்தான்.