யாழ்-9

IMG_20220303_084637-22db21a8

யாழ்-9

குழந்தைகள் விளையாடும் அழகிய பூங்கா அது!

அங்கிருந்த மரத்தின் கீழ் நின்றிருந்தாள் யாழ்மொழி. பழுப்பு நிற இலைகள் அவ்வப்போது பெண்ணவளின் மென்மையே தோற்றுப் போகும் வதனத்திலும், உடலிலும் பட்டுக் கீழே விழுந்துகொண்டிருந்தது.

மனம் கனக்க இங்கு வந்தவளுக்கு, குழந்தைகள் ஆங்காங்கே சிதறி சிரிப்புடனும், இரைச்சலுடனும் விளையாடுவதைக் கண்டு மனம் லேசாக இருக்க, அவர்களுடன் இணைந்து விளையாடவும் ஏக்கமும், ஆசையுமாக இருந்தது. சிறியவயதில் விளையாடியது தொடங்கி, அமெரிக்கா வரும்முன் தம்பியுடன் விளையாடியது அனைத்தும் கண்முன் வர, அவளின் வதனம் மென் புன்னகையை அழகாய் சிந்தியது, தன் பின்னால் ஒருவன் நிற்பதைக்கூட அறியாமல்.

அவள் பின் நின்றவனுக்கு, உச்சிமுதல் பாதம்வரை இருந்த அவளின் உடல் அழகு போதையை ஏற்ற, அவனின் விழிகளில், பெண்ணவளின் முட்டிகளின் இரு இன்ச்களுக்கு கீழ், மேக்ஸிக்கு வெளியில் தெரிந்த இரு வெண் கால்கள் பட, அவனுக்கோ அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. மேலும், பல ஆபத்தமான விஷயங்களும் அவன் மனதில் தோன்ற, அவனின் கண்கள் அவளின் இடைக்கும், தொடைக்கும் இடையே உள்ளே பகுதியை ரசித்தது. தலை கிறுகிறுத்துப் போய் மூளை கலங்கி வெறிகொண்டிருந்தவன், அங்கு தன் கரத்தை வைத்து பரிசோதித்துப் பார்க்க கையை அங்கு கொண்டு சென்றான். அடுத்த நொடி எழுந்த அலறல் சத்தத்தில், அங்கிருந்த குழந்தைகள், அவர்களை அழைத்து வந்த குழந்தைகளின் அன்னைகள், மேலும் சில காதலர்கள் அனைவரும் இங்கு திரும்பினர்.

“ஏய் என்ன பண்ற? விடு” யாழ் வித்யுத்தின் கரத்தை இழுக்கப் பார்க்க, அதுவோ இரும்பாய், மேலும் தன் பிடியை இறுக்கியது. பெரிய வீட்டின் வாரிசு என்றாலும் சிறிய வயதிலிருந்து அனைத்து வேலைகளையும் தோட்டத்திலும் வயலிலும் பார்த்த கரம். மேலும், சிலம்பாட்டம், கராத்தே என நிறைய கற்று இருந்தவனின் கரத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்.

யாழ் முகம் கசங்க, “ப்ளீஸ் விடு” என்று கெஞ்ச, அவளை எரிப்பது போலப் பார்த்தவன் கோபமாக,

“விரலை தூக்கி காமிச்சா மட்டும் பத்தாது..” என்றவன் தன் விரல்களோடு விரல் கோர்த்திருந்தவனின் கரத்தை மேலும் மறுபக்கம் மடக்கித் திருப்ப, அவனோ வலியில் துடிதுடித்துக் கத்தி அலற, யாழ்மொழியோ பயந்து போனாள்.

அவளின் ஜிம் ட்ரெயினர் அல்லவா அவன்!

“ப்ளீஸ். பிரச்சனை வேணாம். விடு” யாழ்மொழி வித்யுத்தை பிடித்து இழுக்கப் பார்க்க, அவனின் சட்டையை மட்டும்தான் அவளால் இழுக்க முடிந்தது, முறுக்கேறிய புஜங்களும், இறுகிய தசைக் கோளங்களும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவன் சிறிதும் அசைந்தான் இல்லை. இனி விட்டால் அவன் சட்டை மட்டும் அவள் கையில் கிழுந்து சென்றுவிடும் என்ற நிலையில் இருந்தது.

யாழ்மொழியின் இழுப்பில் ஆத்திரம் எழ, ருத்ரமான அவளைத் தன் கூர் விழிப் பார்வையால் சில்லிட வைத்தவன், “என்கிட்ட இத்தனை வாய் பேசுன இல்ல? இப்ப இவனை விடனும்னா இவனை ஓங்கி அடி. விட்டுடறேன்” என்றிட, பெண்ணவளுக்கோ கிடைத்த சான்ஸை விட மனமில்லை தான்.

ஆனால்..?

அவளை தயங்க வைத்தது. பயம் என்று நினைத்தால் அதுதான் இல்லை. தேவையில்லாத பிரச்சனை எதற்கு என்ற எண்ணமே அவளுக்கு.

“எதுக்கு தேவையில்லாத ப்ராப்..” அவள் சொல்லும் முன்னே அவளை முறைத்தபடியே வித்யுத் ட்ரெயினரின் கரத்தை மேலும் முறுக்கி, “இவன் எங்க கை வைக்க வந்தான் தெரியுமா?” வினவியவன், காமூகன் கை வைக்க வந்த இடத்தை சொன்ன அடுத்த நொடி, யாழ்மொழி அவன் செவிப்பறை கிழிய அறைந்து தள்ள, அங்கு மூவரையும் பார்த்து நின்றிருந்த அனைவரின் விழிகளும் ஒரு நொடி மூடித் திறந்தது, யாழ்மொழி கொடுத்த விலுக்கென்ற உணர்வில்!

அவள் அவனை அறைந்த நொடி, அவனின் கரத்தை வித்யுத் விட, கீழே விழுந்தவனை துச்சமென பார்த்தவள், முன்னே நடந்து செல்ல, பார்வையாலேயே கீழே விழுந்து கிடந்தவனை எச்சரித்தவன், யாழ்மொழியின் பின்னே சென்றான்.

கோபமும், வெறுப்புமாக முன்னே, ‘தங்’, ‘தங்’ என்று செல்பவளின் பின்னேயே சென்றவன், “உனக்கு அவனை முன்னமே தெரியுமா?” வித்யுத் வினவ,

திரும்பிப் பார்த்தவள், “என்னோட ஜிம் ட்ரெயினர்” என்றவளின் அருகே சென்று அவளுடன் நடக்கத் தொடங்கியவன், “அவன் பார்வையே சரி இல்ல. கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. வேற ஜிம் போயிக்க” என்றான்.

“ஐ நோ (I KNOW)” என்ற அமர்த்தலான குரலில், பக்கவாட்டில் அவளைத் திரும்பிப் பார்த்தவனுக்கு எரிச்சலாக இருந்தது.

“இங்க பாரு. உன்னோட சேஃப்டிகாக சொல்றேன். நான் சொல்றதுக்கு திருப்பி ஏதாவது சொல்லணும்னு இல்லமா. யோசிச்சுக்க” நடந்தபடியே அவன் அவளைக் கடிய, இருவரும் பேசியபடியே கஃபேவின் அருகே வர, “டேய் எங்கடா போயிருந்த? எவ்வளவு நேரம் தேடறது?” என்றபடி வர்ஷித் வந்தான். கூடவே சம்யுக்தாவும் அவனைத் தேடி களைத்துப் போய்.

“இதோ இங்க கேளு..” யாழைக் கை காட்டியவன், சம்யுக்தாவின் தோளில் கைபோட்டு உள்ளே அழைத்துச் செல்ல, வர்ஷித்திடம் யாழ் அனைத்தையும் சொல்ல, வர்ஷித்தும் அவளை சிறிது கடிந்தான், ஒருவன் பின்னால் நிற்பது கூடவா தெரியாது என்பது போல.

“எல்லாரும் என்னையே திட்டுங்க..” கூம்பிய முகத்துடன் உரைத்தவள், கோபமும், காலையில் இருந்து உணவு உள்ளே செல்லாததால் சோர்வுமாக நகரப் பார்க்க, அவளின் கரத்தைப் பற்றியவன், “சாப்பிட்டியா?” வினவினான், அமைதியான குரலில்.

அவனின் அமைதியான முகமும், அக்கறையான கேள்வியிலும் அவளுக்கு கோபம் பன்மடங்காக ஏற, “நீங்க போய் உங்க தம்பிகூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. என்னை அவன் வெளிய போடின்னு கழுத்த புடிச்சு தள்ளாத குறையா பிஹேவ் பண்றான். நீங்க யாராவது அவனை ஏதாவது கேட்டீங்களா, ‘ஏன்டா அவளை இப்படி சொல்றன்னு?’. என்னை வந்து கன்சோல் பண்றீங்க. எனக்கு அவ்வளவுதான் அங்க இடம் இல்ல?” கேட்டவளின் நுனி நாசி மிகளாய் நிறத்தில் சிவந்திருக்க, விழிகளோ கண்ணீர் ரேகையை கோபத்தோடு தாங்கியிருந்தது.

“ஸாரி யாழ். எனக்கு நீங்க இரண்டு பேரும் டக்கு டக்குன்னு சண்டை போட்டதுல என்ன பண்றதுனே தெரியல ஒரு நிமிஷம். மனசுல எதுவும் வச்சுக்காத. தயவு செஞ்சு உள்ள வா. இப்ப நீ போனா சம்யுவும் ஒரு மாதிரி ஆகிடுவா” சமாதானம் செய்தவனிடம்,

“அவளுக்கு அவ பிரண்ட் இருக்கான். பாரு.. இரண்டும் அரட்டை அடிச்சு சிரிச்சிட்டு இருக்காங்க” உள்ளே பார்த்தபடி யாழ் கூற, “அவ அவனை நேக்கா உள்ள கூட்டிட்டு போயிருக்கா. நான் உன்கிட்ட பேசி உள்ள கூட்டிட்டு வருவேன்னு. ப்ளீஸ் யாழ். நான் இன்னும் டூ மன்த்ஸ் தான் இங்க இருக்கப்போறேன்” என்றவனின் இறுதி வரிகள் யாழ்மொழியை அசைத்துப் பார்க்க, அமைதியாக நின்றவளை தன்னுடன் அழைத்துச் சென்றவன், இருவரின் எதிரே அமர்ந்துகொள்ள யாழ்மொழி மறந்தும் வித்யுத்தின் பக்கம் திரும்பவில்லை.

“யாழ்! ஆர்டர் சம்திங்” சம்யுக்தா மெனுவை நீட்ட, வாங்கியவளுக்கு வித்யுத்தின் முன் அதிகம் ஆர்டர் செய்யவும் சங்கடமாக இருந்தது.

‘சும்மாவே ஏதாவது சொல்றான். இதுல இருக்க பசிக்கு நிறைய சொன்னோம். அவ்வளவு தான். குடுகுடுப்புக் காரன் மாதிரி சொன்னதையே சொல்லுவான்’ மெனுவை பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் உரைக்க, வர்ஷித்திடன், எதுவாக இருந்தாலும் சரி என்று மெனுவை நீட்டினாள். அவளின் முகத்தை வைத்தே அவளின் சங்கடத்தை உணர்ந்தவன் மௌனமாக புன்னகைத்துக் கொண்டே, அவளுக்கு பிடித்த மூன்று ஐட்டங்களை ஆர்டர் செய்துவிட்டு, மற்றவர்களுக்கு பிடித்ததையும் ஆர்டர் செய்தான்.

ஃபெட்டுஸைன் அல்ஃப்ரீடோ சிக்கன் பாஸ்டா, வேகன் பர்கர், டிகேடன்ட் சாக்லேட் ஷேக் என யாழின் பிடித்தம் அனைத்தும் டேபிளிற்கு வர, காலையில் இருந்து காலி வயிற்றில் இருந்தவளுக்கோ, பசியில் நாவில் எச்சில் ஊறத் தொடங்கி, அவள் வயிற்றில் இருந்த ஒவ்வொரு அணுக்களும் உணவிற்கு கெஞ்சத் துவங்கியது.

அடுத்து பெப்பர் பொட்டடோஸ், மெக்ஸிகன் எக் ரோல்ஸ், லாம்ப் சாப்ஸ், ப்ளாட் ப்ரெட் பீட்சா, மாக்டெயில்ஸ் அனைத்தும் எடுத்து வரப்பட, அதுவரை கடுப்பில் இருந்தவளுக்கோ உலகம் அனைத்தும் மறந்து, வயிரே உலகமாய்த் தோன்றியது.

பாஸ்டாவை எடுத்தவள் உள்ளே தள்ளத் துவங்க, சம்யுக்தா புன்னகைத்துக் கொண்டாள். உணவு வந்தவுடன் நொடிப் பொழுதில் மாறிய அவளின் வதனத்தைக் கண்டு, அவளின் மனம் புன்முறுவல் பூத்தது.

பாஸ்டாவை விரைவாக முடித்து, வேகன் பர்கரை எடுத்தவள் அதை முடித்துவிட்டு சாக்லேட் ஷேக்கை எடுக்கும் சமயம், வித்யுத் சாக்லேட் ஷேக்கை எடுத்து, மேலே மிதந்து கொண்டிருந்த சாக்லேட் ஸ்கூப்பை சுவைத்துப் பார்க்க, யாழ் அவனை அக்னி மலையின் மறு உருவமாய் கோபமாய் எரித்தாள்.

“டேய்!” கோபமாய் கர்ஜித்தவள், “இங்க பாரு வர்ஷித்” அவனிடம் முறையிட, அதை சட்டை செய்யாதவன் வேண்டுமென்றே, “சம்யு.. செம டேஸ்ட். டேஸ்ட் பண்ணி பாரேன்” சம்யுக்தாவிற்கும் ஊட்டிவிட, அவனின் மாக்டெயிலை எடுத்தவள் ஒரே வாயில் ஊற்றி முடித்துவிட்டு பில்ஸ்னர் க்ளாஸை டேபிளில் கோபத்துடன், ‘தங்’கென வைக்க, மூவரும் கண்ணிமைக்காமல் அவளையே பார்த்திருந்தனர்.

வித்யுத் கேலியாய் உதடுகளை மடக்கி சிரிப்பை அடக்க, “வாட்?” என்று வினவினாள்.

“குடிகாரி” அவன் சம்யுக்தாவிற்கு பொட்டடோஸை ஊட்டிவிட்டபடி சொல்ல, பெண்ணவளோ, ‘ஙே’வென விழித்தவள், “வர்ஷித்! இது மாக்டெயில் தானே. இவன் என்ன சொல்றான்?” என வினவினாள். ஏனெனில் சுவையில் கூட அவளுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே.

“மாக்டெயில் தான். பட் கொஞ்சம் ஆல்கஹால் மிக்ஸ்ட்” அவன் சொல்ல, திருதிருவென முழித்தவளைக் கண்டு மூவரும் வாய்விட்டுச் சிரிக்க, டேபிளின் அடியில் இருந்த, வித்யுத்தின் காலை ஓங்கி மிதித்தாள் யாழ்மொழி.

“அம்மாஆ” வலியில் சிறிது அலறியவன், “பஜாரிஈ” அழுத்தமாகக் கூற, “போடா” என்று அசட்டை செய்தாள் அதே அழுத்தத்துடன். ஆனால், அவளுக்கோ உள்ளுக்குள் பயமாக இருந்தது.

“வர்ஷித்! எனக்கு ஏதாவது போதை ஆகிடுமா?” பதட்டத்துடன் வினவ, “லைட்டாஆ” அவன் சொல்ல அவளின் விழிகள் விரிந்து கொண்டது.

‘ஐயோஓஓ’ மனதுக்குள் கத்தியவளை, ராஷ்மிகா அலைபேசியில் அழைக்க, அலைபேசியை ஏற்றவள், “அம்மா! நான் தெரியாம ஆல்கஹால் குடிச்சிட்டேன்” என்று சொன்னவளைக் கண்டு வித்யுத் திடுக்கிட்டுப் போனான். திடீர் திடுக்கிடலில் அவனிற்கு புறை ஏறிவிட்டது.

தலையைத் தட்டியபடி யாழைப் பார்த்தவன், ‘இவ என்ன ஏதோ ஐஸ்கிரீமை திண்ண மாதிரி சொல்லிட்டு இருக்கா. அதுவும் வீட்டுல’ நினைத்தவன் சம்யுக்தாவைப் பார்க்க, அவளோ, “யாழ் எப்போமே அப்படித்தான் வித்யு. வீட்டுல எப்போமே எல்லாத்தையும் சொல்லிடுவா” என்க, “ஓஹ்” என்றவன் வேறெதுவும் மேலே பேசவில்லை. உணவில் அவன் கவனம் இருந்தபோதிலும், செவியும் மனமும் யாழ்மொழியிடம் நிலைத்திருந்தது.

“அப்பா!” என்று சிணுங்கியவள், “நான் எடுத்து குடுக்கற வரைக்கும் அமைதியா இருந்திட்டு அப்புறம் சொல்றாங்க ப்பா இவங்க” மூவரையும் பொய்யாய் முறைத்தபடி புன்னகையுடன் தந்தையிடம் பேசியவள் பின் வாய் ஓயாமல் பேசிவிட்டே அலைபேசியை வைத்தாள்.

“யாருடா?” அஷ்வின் வினவினான். இரண்டு மாதங்களாக வெளிநாட்டில் தொழில் விஷயமாக இருந்தவன் நேற்றுதான் சென்னை வந்தது. இத்தனை நாட்களில் சிலநிமிடங்கள் மட்டுமே மகளிடம் பேசியிருந்தவன் இன்று பொறுமையாக அனைத்தையும் பேசத் தொடங்கினான்.

“சம்யுக்தா, வர்ஷித், வித்யுத் ப்பா” என்றவளிடம்,

“கம் அகைன்?” அஷ்வின் மீண்டும் கேட்டான்.

யாழ் மீண்டும் சொல்ல, “வர்ஷித் வருணன், வித்யுத் வருணன்?” அஷ்வின் வினவ, “எஸ் எஸ்” என்றவளிடம் சிறிதுநேரம் பேசியவன் அலைபேசியை வைக்க, அடுத்த நொடி அஷ்வினிடம் இருந்து வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி, யாழ்மொழிக்கு. கூடவே ஒரு செய்தியுடன்.

அது ஒரு புகைப்படம்!

புகைப்படத்தை திறந்து பார்த்தவள், அருகிலிருந்த வர்ஷித்தை பார்க்க அவனும் அவளின் அலைபேசியை எட்டிப் பார்க்க, இருவரின் முகத்திலும் திகைப்பும், தித்திப்பும் கலந்த உணர்வுகள். புன்னகையும், முறைப்புமாய் வித்யுத்திடம் திரும்பியவள், அந்த வேலையை செய்ய முயல, அவள் திரும்பியதையும், பார்வையையும் வைத்தே அவள் செய்யப் போகும் காரியம் அறிந்த வித்யுத்தின் சகோதரன், சேட்டைக்காரியை தடுக்க முயல, அதற்குள் வித்யுத்தின் முன்னுச்சி முடியைப் பற்றியவள், அவனின் இடது காதை பிடித்து ஜவ்வாய் இழுத்து திருகிவிட்டே அமர்ந்தாள்.

அவளின் செயலில் வித்யுத் ஆடிப்போய் அமர்ந்திருந்தான். வலியுடன்!

தன் அலைபேசியை அவனிடம் காண்பித்தவள், “உனக்குக் கூட என்னை ஞாபகம் இல்லியாடா?” வினவ, அப்புகைப்படத்தைப் பார்த்தவனோ தலையை தேய்த்தபடியே, “ஏய் சின்டெக்ஸூ நீயாடி?” அதிர்ச்சியும் கேலியுமாக வினவினான்.

“அடிங்.. நான் என்ன சின்டெக்ஸா?” அவள் சண்டையிட,

“பின்ன சின்டெக்ஸ் டான்க் மாதிரி இருந்த நீ, இப்ப இப்படி இருந்தா எனக்கு எப்படி அடையாளம் தெரியும்?” வினவியவன், அவளின் காதைப் பற்ற அதிரடியாக எழ, வர்ஷித்திடம் அவசரமாக ஒன்றியவள், “நோ நோ. நோ டச்சிங்” என்று மிரட்ட, டேபிளில் எட்டி விழுந்து, ‘டங்’ சத்தத்தோடு அவளின் தலையில் கொட்டியவன் அமைதியாக அமர்ந்துகொள்ள, தலையைத் தேய்த்தவளிடம்,

“எங்களுக்கு எதுவுமே புரியல. இது எப்படி?” சம்யுக்தாவும், வர்ஷித்தும் ஒரு சேர இருவரிடமும் வினவினர்.

அஷ்வினின் கன்ஸ்ட்ரக்ஷன் மேல் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட, போலியான ஆதாரங்கள் வெகு தீவிரமாய் இருக்க, தனது நண்பர் ஒருவரின் மூலம், வெற்றியை சந்தித்திருந்தான் அஷ்வின்.

வெற்றியைப் பற்றி அற்றைத் திங்கள் மழைத்துளி கதை படித்தவர்களுக்கு சொல்ல வேண்டுமா?

வெற்றிக்கு அனைத்திலும் வெற்றிதான்!

வழக்கு வெற்றி பெற்றதில், வெற்றியை அஷ்வின் குடும்பத்துடன் விருந்திற்கு வற்புறுத்தி அழைத்திருக்க, அப்போது யாழ்மொழிக்கு வயது ஏழுதான். குழந்தைகளை எதற்கு அழைத்துச் சென்றுவிட்டு என்று நினைத்த திவ்யபாரதி கணவனிடமும் அதையே கூற, “நீ என்கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ண நினைக்கறையோனு எனக்கு தோணுதுடி” நிலைக்கண்ணாடியின்முன் சிகையை அழகாகக் கோதியபடி வெற்றி கூற, கணவனை பின்னிருந்து அணைத்த திவ்யபாரதி, “கிடைக்கற சான்ஸை விடக்கூடாது ஆதி” என்றாள் இன்றும் குறையாத காதலோடு. கூடவே குறும்புடனும்.

“இந்த மூணையும் வச்சிட்டு பின்ன என்ன பண்றது ஆதி. அதுவும் உங்க சின்ன மகன் இருக்கானே. ஹப்பாபாஆஆ” பெருமூச்சு விட்டவளின் கரத்தைப் பிடித்து முன்னிழுத்து அணைக்க, சரியாய், “அம்மா” அழைத்தபடி அவர்கள் பெற்ற மூன்றும் ஒன்றாய் வர, கேலிச் சிரிப்புடன் மனைவியை விட்டு வெற்றி விலக, திவ்யபாரதி கணவனை முறைத்தாள்.

மூவரையும் இருவரும் கழட்டிவிட்டு போகலாம் என்று திட்டம் தீட்டியிருக்க, நடந்தால்தானே. சென்னை வந்தபின் சதீஷ்-கவிநயாவின் இல்லத்தில் பூஜாவைப் பார்த்துவிட்டு, வர்ஷித்தும், வேதாவும் அவளுடன் விளையாட இருந்துகொள்ள, அன்னை தந்தையிடம் அடம்பிடித்து இருவருடனும் கிளம்பியிருந்தான் ஒன்பது வயது வித்யுத் வருணன்.

அங்குதான் முதன்முதலில் அவன் யாழ்மொழியைக் கண்டது. மூன்று அடி உயரத்தில், வெள்ளைப் பணியாரத்தைப் போல் புசுபுசுவென துருதுரு விழிகளுடன், கழுத்திற்கு சிறிது கீழ்வரை இருந்து முடியை போனி டெயில் இட்டு, ஆரஞ்சு வண்ண ப்ராக்கில் அரிசிப் பல் தெரிய புன்னகையுடன் இருந்தவளை, பார்த்த மாத்திரத்தில் திவ்யபாரதிக்கு பிடித்துப்போனது.

அனைவரையும் வரவேற்ற அஷ்வின் வீட்டார், மூவருக்கும் தடபுடலாக விருந்தைப் பரிமாற, வருங்கால சம்மந்திகளின் முதல் சந்திப்பு எதார்த்தமாய் இனிமையாய் அமைந்தது. சாப்பிட்டு முடித்தபின் தூங்கி எழுந்த இரண்டுவயது த்ரூவை திக்கத்திணறி தூக்கி வந்த யாழ்மொழி திவ்யபாரதியிடம், “இதுதான் என் குட்டித்தம்பி த்ரூவ். தான் மிரட்டுனா அழவேமாட்டான் தெரியுமா?” விகற்பம் இன்றி, பெரியவளைப் போல பேசிய யாழின் கரத்தில் இருந்து சின்னவனை வாங்கிய திவ்யபாரதி ராஷ்மிகாவுடன் கதைத்தபடி த்ரூவை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

வித்யுத்தோ கடுப்பில் இருந்தான். அவனது அன்னை, அவனின் அன்னை, அவனுக்கு மட்டுமே உரிமையான அவனின் அன்னை, யாழ்மொழியைக் கொஞ்சியதில் புகைந்து கொண்டிருந்தான். அதுவும் சாப்பிடும்போது வெற்றியின் அருகே சிரித்தபடி அமர்ந்து சாப்பிட்டவளைக் கண்டு அவனுக்கு பொசசிவ்நஸ் உச்சத்தைத் தொட்டது.

மூன்று சிறியவர்களும் ஒன்றாய் விளையாடச் சென்றிருக்க, யாழ், “தம்பி சின்ன பையன் தான். அவனுக்கு ரூல்ஸ் வைக்க வேணாம்” தம்பிக்கு அக்காவாய், அவனுக்கு பெரியவளாய் வித்யுத்திடம் பேச, “நீயே சின்ன பொண்ணுதான்” என்றிருந்தான் அவன் சூடான குரலில்.

“நான் சின்ன பொண்ணு இல்ல” யாழ்மொழி தலையை சிலுப்ப, “யூ ஆர் எ ஸ்மால் கேர்ள். வெர்ரி ஸ்மால். லைக் மஷ்ரூம்” வித்யுத் கரத்தை தரையில் வைத்து அவளின் உயரத்தை மட்டம் தட்ட,

“போடா மங்கி” என்றாள் கோபமாக.

“யாருடி மங்கி. நீதான் சின்டெக்ஸ் டான்க் மாதிரி இருக்க” வித்யுத் அவளை சீண்ட, அங்கிருந்த மேஜையில் இருந்த ஹைடெக் கையடக்கக் கேமிராவை எடுத்த த்ரூவ் நோண்டி விளையாட ஆரம்பித்திருந்தான்.

“யாருடா சின்டெக்ஸ். நீதான்டா மங்கி, பிக், சிம்பான்ஸி” யாழ் அவன் தன் உடல் எடையை வைத்து கேலி பேசியதில், அழுகையுடன் தன் கீச் குரலில் அவனைத் திட்டுத் தீர்க்க, வித்யுத் அவளை முறைத்தான்.

“என்னடா முறைக்கிற?” கோபமாக அவனின் உச்சி முடியை அவள் தன் இரு கரங்களால் பிடித்து இழுக்க, த்ரூவ் தெரியாமல் கேமிராவை நோண்டியதில் இருவரின் முதல் புகைப்படம் அவளின் சகோதரனின் கையால், அவனின் வருங்கால மச்சினனின் கையால் அழகாய் பதிந்தது.

அங்கு வந்த ராஷ்மிகா இதைக் கண்டு ஓடிவந்து இருவரையும் பிரித்து, வித்யுத்தின் தலையை தேய்த்துவிட்டவள், மகளை முறைத்துவிட்டு வித்யுத்தை உடன் அழைத்து சென்றாள். அவளும் சரி அவனும் சரி இருவரிடமுமே இதைப்பற்றி மூச்சுவிடாமல் இருக்க, இருமாதங்களுக்கு பிறகு, கேமிராவை எடுத்த அஷ்வின் இதைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்து மனைவியிடம் காட்ட, “உங்க மக பண்ணது தான். பாவம் அந்தப் பையன். வேற குழந்தையா இருந்திருந்தா கத்தி அழுது..” ராஷ்மிகா அன்றைய நினைவில் சொல்லிக் கொண்டிருக்க அதைத் தன் அலைபேசிக்கு அப்போதே மாற்றி இருந்தான் அஷ்வின். தெளிவிற்கு மறுபெயர் போன அஷ்வினையே விதி அன்று எதையும் யோசனை செய்யவிடாமல் அலைபேசிக்கு புகைப்படத்தை மாற்றச் செய்திருந்தது.

பழைய நினைவில் இருந்து வெளியே வந்த யாழ், “பர்ஸ்ட் மீட்டிங்லயே என்னை அழ வச்சவன் இவன்” வித்யுத்தைப் பார்த்துக் கூற, “இவ அப்பவே என்னை அடிச்சிருக்கா. அதுக்கு சாட்சி இந்த ஃபோட்டோ தான்” என்றான் அவள் கரத்தில் இருந்த அலைபேசியை சுட்டிக்காட்டி. அதில் அவள் நொடித்துக்கொள்ள, இவனும் தோளைக் குலுக்கிக்கொண்டான்.

வர்ஷித்திடம் சண்டையிட்டு தானே பில்லை செலுத்தியவள், சம்யுக்தாவுடன் கிளம்ப, “நாளைக்கு ஜிம் போகாத யாழ். நம்ம ஜாக்கிங் போகலாம். நாங்க இங்க வந்திடறோம்” என்றவனிடம் தலையை மட்டும் ஆட்டியவளுக்குத் தெரியவில்லை, அது வித்யுத்தின் மூலம் வந்த செய்தி என்று.

“ஏன்டா அப்படி சொல்ல சொன்ன?” நடந்து வந்தபடியே வர்ஷித் வினவ,

வித்யுத், “அவன் பார்வை சுத்தமா சரியில்லை. அவன் பார்வையும், அவன் அவ மேல கை வைக்க போனப்ப, அவன் முகம் போன போக்கையும் பாத்த எனக்கு தெரியும். அவன் ஒரு வெறி புடிச்சு நாய்னு” என்றான் பற்களைக் கடித்துக்கொண்டு.

“லவ் பண்றியா யாழை?” வர்ஷித் கேட்க, அவனை முறைத்தவன்,

“எது அவளையா? அவளை லவ் பண்ணி நான் இருபத்தி நாலு மணி நேரமும் தந்தூரி அடுப்புல உக்காந்த கணக்காவே இருக்கவா?” வித்யுத் இருபுருவங்களையும் தூக்கி தலை வலிப்பது போன்று சைகை செய்து தலையை சிலுப்பியவன், சகோதரனின் தோளில் கை போட்டபடி நடக்க,

“அப்ப சம்யு மாதிரி பொண்ணு வேணுமா?” வர்ஷித் விடாமல் நடந்தபடியே வினவினான்.

“நோ. சம்யு மாதிரி பொண்ணுங்க இஸ் லைக் பிரண்ட், சிஸ்டர் டா. எனக்கு..” இழுப்பது போல யோசித்தவன் பின் சீரியஸான முகத்துடன், “என் மாமன் பொண்ணு பூஜாகூட ஓகேதான்” என்றான் ஓரக்கண்ணால் தமையனைப் பார்த்தபடி.

தம்பியின் பதிலில் ப்ரேக் போட்டது போல நின்றவன், “டேய்! என் வாழ்க்கைல ஏன்டா உள்ள வர்றே?” என்றவன் சகோதரனின் கழுத்தை கரத்தால் சுற்றி இழுத்து விளையாட்டாய் அவனை அடிக்க, சிரித்தபடியே அண்ணனின் அடிகளை வாங்கியவன், “எனக்கு வர்றவ எப்படி இருந்தாலும் பரவாயில்லை டா. ஆனா, இப்ப ஒல்லியா இருக்க இந்த சின்டெக்ஸ் வேணாம்டா.” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

***

தங்கியிருந்த இடம் வந்த இருபெண்களும் அவரவர் அறைக்குள் புகுந்து கொள்ள, உடையை மாற்றிவிட்டு வந்த சம்யுக்தா, யாழ்மொழி உறங்குகிறாள் என்பதை உறுதி செய்துகொண்டு, அலைபேசியுடன் குளிலறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே சென்று பத்து நிமிடங்கள் கழிய, ‘இச்’, ‘இச்’ என்ற சத்தம் மட்டும் வெளியே கேட்டது. ஏதோ உணர்வில் விழித்த யாழ், சம்யுக்தாவின் அறைக்கு வர, வந்த சத்தத்தில் சிறிது விழித்த யாழ், தூக்கக் கலக்கத்துடன் சம்யுக்தாவின் படுக்கையில் அமர, ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தாள் சம்யுக்தா.

வெளியே அமர்ந்திருந்த யாழைக் கண்டு அவள் திகைக்க, தூக்கக் கலக்கத்தில் அவளின் படுக்கையில் படுத்திருந்தவளோ எதையும் உணரும் நிலையில் இல்லை.

கண்களை மட்டும் சிறிது திறந்தவள், “சம்யு! எனக்கு தனியா படுக்க ஒரு மாதிரி இருக்கு. டுடே ஐ வில் ஸ்லீப் வித் யூ” என்றவள், போர்வைக்குள் புகுந்து பெட்டில் சுகமாய் புதைந்துகொள்ள, அப்போதுதான் சம்யுக்தாவிற்கு மூச்சே வந்தது.

ஒரு புன்னகையை உதிர்த்தவள், யாழின் பாதங்கள் வரை நன்றாக இழுத்து போர்த்திவிட்டு, மறுபக்கம் வந்து படுத்துக்கொள்ள, திவ்யபாரதியின் முகம் கண்முன் வர அவளின் மனம் உறுத்தத் தொடங்கியது.