யாழ்-10

IMG_20220303_084637-47a9525e

யாழ்-10

“யாழ்! வர்ஷித் அண்ணா வரதுக்குள்ள ஒரு தடவை உனக்கு ப்ரெசன்ட் பண்ணி காமிக்கறேன். ஓகேவான்னு சொல்லு” என்ற சம்யுக்தா தன்னுடைய ப்ரெசன்டேஷனை மூன்றாவது முறையாக யாழிடம் விளக்கம் செய்ய, அவளது டென்ஷன் நன்கு புரிந்தது யாழ்மொழிக்கு.

“ஹே சம்யு கூல். நல்லாதான் இருக்குனு சொல்றதைவிட பெஸ்டாவே இருக்குடி. டென்ஷன் ஆகாம பண்ணு” எழுந்த யாழ் சம்யுக்தாவை அணைத்தபடி சொல்ல, தோழியை ஒருதரம் இறுக்கி அணைத்த சம்யுக்தா, “நீயும் வந்திருக்கலாம்” என்றாள்.

“எனக்கு இதுல இன்ட்ரஸ்ட் இல்ல சம்யு. இல்லனா ஃபார் ஷ்யூர் வந்திருப்பேன்” என்றவள், “ஏன் இரண்டு நாளா ஒரு மாதிரியாவே இருக்க?” வினவ, ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்த சம்யுக்தா, படுக்கை அறைக்குள் நுழைந்து தனது உடைகளை அடுக்கத் தொடங்கினாள்.

“நான் கேட்டுட்டே இருக்கேன். நீ பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்?” யாழ் கோபத்தோடு சம்யுக்தாவின் தோளைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினாள்.

பட்டுப் பெண்ணின் விழிகள் கலங்கியிருந்தது!

“ஏய் ஏன் அழுகற?” அவளின் கண்ணீர் மனதை ஏதோ செய்ய, பதட்டத்துடன் யாழ்மொழி வினவினாள்.

“அழுகாத சம்யு. என்னாச்சு?” யாழ்மொழி வினவ, தோழியை அணைத்து அவளின் தோழில் ஆறுதலாய் சாய்ந்த சம்யுக்தா, கண்ணீரை மட்டுமே பதிலாய் கொடுக்க, அவளின் முதுகை ஆதரவாய் வருடிக் கொடுத்தவளுக்கு, ஏன் இந்தக் கேள்வியை கேட்டோம் என்றிருந்தது.

“அழுகாத சம்யு. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. என்னாச்சுனு சொல்லு” யாழ் கேட்க, அவளிடம் இருந்து விலகியவள், தலை கழிந்தபடி நிற்க, அவளின் தாடையைப் பற்றி நிமிர்த்திய யாழ், “எனக்கு இருக்க பொறுமைக்கு நீ இப்படி பேசாம நிக்கறியே?” உள்ளுக்குள் இருக்கும் அஷ்வினின் குணம் சிறிது தலைதூக்க அதட்டினாள்.

“எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு யாழ்” என்றாள் கலங்கிய விழிகளுடன்.

“எதுக்கு கில்டியா இருக்கு?” கைகளைக் கட்டிக்கொண்டு அதிகாரத் தோரணையுடன் யாழ் கேட்க, தொண்டையை விழுங்கியவள்,

“நான் தப்பு பண்றேன்னு தோணுது யாழ். திவ்யா ம்மாவை நினைச்சா மனசு உறுத்துது. அவங்க சொல்லி சொல்லி வளத்தது எல்லாம் மறந்துட்டு..” என்றவளுக்கு மேலே பேச முடியவில்லை.

யாழ்மொழிக்கு எதுவும் புரியவில்லை. திவ்யா என்பது மட்டும் அவளுக்கு யார் என்று தெரிந்தது. ஏழு வயதில் திவ்யாவைப் பார்த்த ஞாபகம் யாழுக்கு. அந்த மென்மையான வதனத்தை யாராலும் மறக்க இயலாதே.

சம்யுக்தா எதையோ நினைத்து கலங்குகிறாள் என்று நினைத்தவள், “ஐ திங்க் சம்யு உனக்கு ப்ரீ மென்சுரல் சின்ட்ரோம்னு நினைக்கறேன். டோன்ட் வொர்ரி. அதுதான் நீ எதை எதையோ நினைச்சு ஸ்ட்ரெஸ் ஆகிட்டு இருக்க. மூணு நாள் போய் என்ஜாய் பண்ணிட்டு வா. அதுதான் வர்ஷித் அண்ணாகூட வர்றாங்கள” என்றவள் சம்யுக்தாவுடன் அவளின் உடைகளை அடுக்கி வைக்க உதவினாள்.

யாழ்மொழி மட்டும் சிறிது அழுத்திக் கேட்டிருத்தால் சம்யுக்தாவிடம் இருந்து விஷயத்தை வாங்கியிருக்கலாம். ஆனால், சிறிய வயதில் இருந்தே யாரின் விஷயங்களிலும் அவள் அவ்வளவு எளிதில் தலையிட்டது கிடையாது. அவரவர் பிரச்சனை அவரவருக்கு பெரிது என்று விட்டுவிடுபவள் அவள்.

ஆனால், சம்யுக்தாவை அவள் அப்படி விட்டுவிட நினைக்கவில்லை. ப்ரெசன்ட்டேஷனுக்குச் செல்பவளை எதுவும் தோண்டித் துருவி மேலும் கஷ்டப்படுத்த விரும்பாதவள், அவள் வந்தபிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று இப்போதைக்கு விட்டிருந்தாள். இருவருக்கும் அதில்தான் குழி தோண்ட விதி மிகப்பெரிய பாதையை வழி வகுக்க அமைந்து போனது.

“பை சம்யு, பை வர்ஷித்” இருவரையும் அனுப்பி வைத்தவள், அறைக்குள் வந்து தனது லேப்டாப்புடன் அமர்ந்தாள்.

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இருந்தது சம்யுக்தா கலந்து இருந்த ப்ரெசன்ட்டேஷன். அதுவும் நூற்றைம்பது கி.மீ தொலைவில் இருந்த மற்றொரு நகரத்தில். சம்யுக்தாவைத் தனியே அனுப்ப மனமில்லாத வர்ஷித், அவளுடன் தானே சென்று வருவதாக முடிவெடுக்க, வித்யுத் தான் செல்வதாக கூறியும், “உனக்கு இங்க கொஞ்சம தெரிஞ்சாலும். கரெக்டா டைமுக்கு போகனும்டா. சம்யு பத்தி தெரியும்ல. கரெக்டா டான்னு இருப்பா. கடைசில ஏதாவது லேட் ஆனா டென்ஷன் ஆகி எல்லாத்தையும் மறந்திடுவா” என்றவன் தானே கிளம்பி இருந்தான்.

சம்யுக்தாவின் அலைபேசி சிணுங்கிக்கொண்டே இருக்க, வர்ஷித்தின் முன் அணைத்துக்கொண்டே இருந்தாள். வர்ஷித் கண்டுபிடித்தால் அவ்வளவுதான் என்ற சிறிது பயம் அவளுக்கு. விஷயம் வெற்றி-திவ்யபாரதிக்கு போய்விடும் என்ற மற்றொரு எச்சரிக்கை உணர்வு வேறு.

“ஏன் சம்யு எடுத்து பேசலாம்ல?” வர்ஷித்.

“இல்லண்ணா.. அர்ஜென்ட் கால் இல்ல. அங்க போய் பேசிக்கலாம்” என்றவள் அலைபேசியை அணைத்து வைத்தாள்.

***

அறைக்குள் பல பொசிஷனில் மாறி மாறி படுத்துக் கெண்டிருந்தாள் யாழ்மொழி. தோழியை அனுப்பிவிட்டு கும்பகர்ணியைப் போல மதியம் உறங்கியிருந்ததால் தூக்கம் வேறு வர மறுத்தது பெண்ணவளுக்கு.

‘ஐயோ இப்படி போர் அடுக்குதே. பேசாம சம்யு கூட போயிருக்கலாமோ’ மனதுக்குள் நொந்து கொண்டிருந்தாள்.

இருவரும் தங்கியிருக்கும் இடம் பேயிங் கெஸ்ட் போன்ற வீடு. கீழே ஐந்து அறைகள் மேலே ஐந்து அறைகள் என்றிருக்க, இருவரும் மேலே இருக்கும் கடைசி அறையில் இருந்தனர். யாரிடமாவது பேசலாம் என்று எண்ணியவள் படியில் கீழே இறங்கிய சமயம், வீட்டின் காலிங் பெல் அடிக்கப்பட்டது.

யோசனையுடன் சென்று கதவின் வழியாக யாரென்று பார்த்தவள், நின்றிருந்த வித்யுத் வருணனைக் கண்டு கதவைத் திறந்தாள்.

“ஹே! நீ என்ன இங்க?” யாழ் கதவின் மீது சாய்ந்தபடியே கேட்க,

“தனியா இருப்பனு வந்தேன். எனக்கும் போர் அடிக்குது” என்றவன் அவளை இடித்துவிட்டு உள்ளே நுழைய, தோளைத் தேய்த்துக்கொண்டே, ‘இடிபாடு’ மனதுக்குள் அவனைத் திட்டியவள்,

“பர்ஸ்ட் சொன்னது நம்பற மாதிரியில்ல. செகன்ட் சொன்னது வேணா நம்பலாம்” என்றவள், “ரூம் மேல” என்று அவனை தன்னுடன் அழைத்துச் சென்றாள்.

“உன்கிட்ட நெட் ப்ளிக்ஸ் இருக்குஉ?” வித்யுத் வினவ, கதவை அடைத்துவிட்டு வந்தவள், “இருக்கு” என்றாள்.

“சீரீஸ் பாக்கலாமா?” அவன் கேட்டதுமே இருவரும் ஒரு தொடரில் அமர்ந்தனர்.

இருவரும் நீண்ட நேரம் நெட் ப்ளிக்ஸில் ஒரு காதல் சொட்டும் தொடரில் அமர்ந்திருக்க, அதில் நாயகியோ நாயகனிடம் காதலைச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஷோபாவில் இரு ஓரத்தின் குஷ்ஷனிலும் இருவரும் சாய்ந்து அமர்ந்து, தொடரில் மூழ்கியிருக்க, இரவு விளக்கின் ஒளி மட்டும் அந்த அறையில் அழகாய் பாந்தமாய் கசிந்திருந்தது.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் நாயகி, நாயகியின் நெருக்கமான காட்சி வர வித்யுத்துக்கோ தூக்கிவாரிப் போட்டது. நியாயமாக பெண்ணவளுக்குள் நடந்து இருக்க வேண்டிய பூகம்பம். ஆனால், இங்கு அனைத்தும் தலைகீழ் தானே?

நாயகன் நாயகியின் கழுத்து வளைவில் வாசம் பிடித்து, நாசியை வைத்து அங்கு தீண்டி, நாயகியின் இதழில் தஞ்சமடைய வித்யுத்துக்கோ சங்கோஜமாய் போனது.

முத்தம் என்றால் சாதா முத்தம் இல்லை. ஆங்கிலத் திரைப்படம், தொடர்கள் பார்த்தவர்கள் மட்டுமே அறிவார்கள், இதழ்களை மென்று தின்றுவிடும் அளவுக்கு அவர்கள் பகிர்ந்துகொள்ளும் உணர்ச்சிகரமான இதழ் முத்தங்களின் பற்பல வகைகளை.

இங்கு நாயகனும், நாயகியும் நீயா நானா என்ற போட்டியில் தங்கள் இதழ்களை அடுத்தவரின் இதழில் புதைத்துக் கொண்டிருக்க, இருவரின் அன்னங்களோ சண்டையிட்டுக் கொள்ள, நாயகன் அடுத்த கட்டத்திற்காக, அவனின் காதலியின் உடையில் கை வைக்க, வித்யுத்தின் இதயம், அதிர்ந்து அதிர்ந்து துடித்தது.

இது அனைத்தையும் யாழ்மொழி சாதரணமாக பார்த்துக் கொண்டிருக்க, வித்யுத்தோ நெளிந்து கொண்டிருந்தான். வேறு எந்த உணர்வும் அவனை ஆட்கொள்ளவில்லை. தனியறையில் ஒரு பெண்ணுடன் அமர்ந்து இம்மாதிரிக் காட்சிகள் பார்க்க அவனுக்கு சங்கடமாக இருந்தது.

“இப்ப எதுக்கு நீ நெளிஞ்சிட்டு இருக்க?” யாழ்மொழிக்கு பச்சையாக அவனின் அசௌகரியம் புரிய, அவனை சீண்ட வேண்டும் என்ற எண்ணத்துடன், அடக்கப்பட்ட சிரிப்புடன் வினவினாள்.

“ஒண்ணுமில்ல” என்றவன் படத்தையும் பார்க்க இயலாமல், பெண்ணவளின் முகத்தையும் பார்க்காமல் சிறிது நாணிய முகத்துடன் தடுமாற, யாழ்மொழியின் மனமோ அவளறியாமல் அவனின் சங்கோஜத்தையும், அவன் வதனம் வெட்கத்தில் சிவந்திருப்பதையும் கண்டு, ‘க்யூட்ஆ இருக்கான்’ என்றது.

ஆண்களின் வெட்கத்தைப் பத்தி கவிதை படித்தவளுக்கு அதை நேரில் காணும்போது தான் தெரிந்தது, கம்பீரமும், அழகும், வசீகரமும், தெளிவும் வெட்கத்துடன் இணைந்தால் எவ்வாறு இருக்கும் என்று. அவனின் வெட்கத்தில் பெண்ணவளின் மனம் முழுதும் ஒரு அதிர்வு பரவி, அது அவள் நாடி நரம்புகளில் எல்லாம் ஓடி, உடலில் ஐஸ் கட்டியை வைத்ததுபோன்று ஜிவ்வென்று பாய, தன்னை அறியாமல், ஏன் என்றே தெரியாமல் வெட்கம் கொண்டாள் வதுகை.

சிவந்த முகத்தை வெளிக்காட்டாமல் எளிதில் கட்டுப்படுத்தியவள், “கிஸ் சீன் பர்ஸ்ட் டைம் பாக்கறியா?” படத்தில் விழியை வைத்துக்கொண்டு கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்தவனுக்கோ மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.

இரவு விளக்கின் ஒளியில், முட்டிவரை இருந்த ஷார்ட்ஸிலும் டி சர்டிலும் இருந்தவளை, முதன் முதலாக ஊன்றி கவனித்தான். அவளின் நிறத்தோடு டிம் மஞ்சள் நிற ஒளி போட்டியிட, அவளின் விழிகள் படத்தில் இருந்தாலும், அவளின் மனக்கண்ணிலும், மனதின் கண்ணிலும் வேறொன்று ஓடிக் கொண்டிருப்பதை, அவளின் நடனமாடும் துறுதுறு விழிகளை வைத்து உணர்ந்து கொண்டவனுக்கு அவனையும் மீறி உள்ளுக்குள் ஏதோ செய்ய ஆரம்பித்தது.

மனதில் சில்லென்ற உணர்வு!

அது காதலா என்றெல்லாம் அவன் ஆராயவில்லை. ஆனால், அவனுக்கு அது பிடித்திருந்தது.

“பதிலே காணோம்?” யாழ்மொழி வினவ, “அப்படியில்ல” என்றான்.

“அப்புறம் ஏன் நெளிஞ்சிட்டு இருக்க?” என்றவள் அவனைப் பார்த்தபடி ஒரு காலை ஷோபாவில் வைத்து, மற்றொரு காலை தரையில் வைத்தபடி அமர்ந்து வினவ, “உன்னை மாதிரி ஒரு பையன் கூட உக்காந்து பாக்க முடியல” அவன் அவளை கேலி செய்ய, அருகிலிருந்த குஷ்ஷனை எடுத்து அவனை விலாசியவள், “நான் பையனா?” என்றாள் கோபமாக.

“பின்னே இல்லியா?” என்றிட, கோபமாக தொடரில் அமர்ந்து கொண்டாள் யாழ்மொழி.

வர்ஷித்தும், வித்யுத்தும் சேர்ந்து பார்க்காத வேலைகள் இல்லை. அண்ணனும், தம்பியும் இணைந்து கண்ட கதைப் புத்தகங்களை பருவ வயதில் படித்து, வெற்றியிடம் சிக்கியும் இருக்கின்றனர்.

வித்யுத்தின் அறையில் இருந்த வர்ஷித்தின் புத்தகத்திற்குள் இருந்த 18+ புத்தகத்தைப் வெற்றி பார்த்திருக்க, சகோதரர்கள் இருவரும் அன்று அஞ்சி நடுநடுங்கிப் போய்விட்டனர். வர்ஷித்தை கதவை அடைக்க சொன்ன வெற்றி, “இங்க வாங்க. இரண்டு பேரும்” இருவரையும் அருகில் அழைத்தான்.

“இந்த புக்லாம் உங்க வயசுல நானும் படிச்சிருக்கேன். எனக்கும் கண்ட கண்ட எண்ணம்லாம் வந்திருக்கு. இல்லைனு சொல்லல. ஆனா, இது எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கிறது தான். நீங்க தப்பா பாக்கற ஒவ்வொரு பொண்ணோட உறுப்பும் தாய்மையோட கூட பாக்கலாம். நீங்க பர்ஸ்ட் சாப்பிட்டது உங்க அம்மாகிட்ட தான். உங்க அம்மாவோட தொப்புள்கொடில தான் உலகத்தைப் பாக்கறதுக்கு முன்னாடியே உங்களுக்கு எல்லாம். உங்க அம்மா கொஞ்ச நஞ்ச வலியை தாங்கல உங்களை இந்த உலகத்துக்கு கொண்டு வர்றதுக்கு. உங்க அம்மாவோட பிறப்புறுப்பு வலியா தான் வந்தீங்க. இப்படி பாத்தா எல்லாமே தாய்மையா தெரியும். இந்த வயசுக்கு எல்லா பசங்களுக்கும் வர்றது தான். பட் தறிகெட்டு எண்ணம் போயிடக்கூடாது” என்றிருக்க, இரட்டைச் சிங்கங்களும் தங்களது கற்பையும், தங்களது அந்தரங்க எண்ணங்களையும், கனவுகளையும் தங்கள் மனைவிக்காகவே சேமிக்கத் துவங்கி இருந்தனர்.

அத்தொடர் முடிய இரவு இரண்டு மணி ஆகியிருக்க, அவள் முறுக்கிக் கொண்டே திரிய, அவளைப் பிடித்து நிறுத்தியவன், “சும்மா சீன் போடாத” என்றான்.

“நான் சீன் இல்ல. பட் உன்கிட்ட நானும் எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ணல. பிகாஸ் ஐ நோ உனக்கு என்னை அவ்வளவா பிடிக்காதுனு” என்றாள். அவன் வந்ததில் இருந்து மனதில் பல நாட்களாக வைத்திருந்த ஒன்று, இப்போது வெளியே வந்திருந்தது. பலர் அவளிடம் டாம் பாய் போன்று இருக்கிறாய் என்று கூறி இருந்தாலும், வித்யுத் கூறியது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

“எனக்கு உன்னை பிடிக்காதா? யாரு சொன்னா?” வித்யுத் வினவ,

“பாத்தாவே தெரியுது. என்னை ஏதாவது சொல்லிட்டே இருப்ப” என்றாள்.

“உன்கிட்ட உரிமையா விளையாட நினைச்சேன் அவ்வளவு தான். நீயும் அதுக்கு திருப்பி சண்டை போடுவ. எனக்கு அது ரொம்ப பிடிக்கும். உன்னையும் பிடிக்கும். இல்லைனா வித்யுத்தோட பிரண்ட்ஸ் அத்தனை பேர் அங்க இருக்கும்போது நான் ஏன் இங்க வரப்போறேன்” என்றவன், அவள் விழிகளுடன் தன் விழிகளை கலக்கவிட்டு, “எனக்கு உன்னோட பெஸ்ட் ப்ரென்டா இருக்கணும்னு ஒரு விஷ்” என்றான்.

“உண்மையா என்னை பிடிக்குமா வருண் உனக்கு?” அவள் வினவ,

மேலும் கீழும் தலையை ஆட்டியவன், “ஏன்டி உன்னை பிடிக்காம போகப்போகுது” என்றவன், “அதென்ன வருண்?” வினவினான்.

“எல்லாரும் உன்னை வித்யுத் சொல்றாங்க. ஆனா, எனக்கு வருண்னு தான் சொல்லத்தோனுது” என்றவள், அவனது சிறிய வயது நிகழ்கவுகள் தொடங்கி படிப்பு அனைத்தையும் கேட்டறிந்தாள்.

“மேல என்ன பண்ண போற?” யாழ்.

“பாக்கலாம். நிறைய ப்ளான்ஸ் இருக்கு. பட் ஏதாவது ஒண்ணுல ஸ்டான்டர்டா உக்காரணும்” என்றவனுக்கு உண்மையிலே நிறைய திட்டங்கள் மனதில் இருந்தது. தந்தையுடன் இணைந்து விவசாயத்தில் முழுதாக இறங்கவும், அல்லது சொந்த தொழில் தொடங்கலாம் இல்லை அரசாங்க வேலைக்கு படிக்கலாம் என்றே நினைத்திருத்தான். சொல்லப்போனால் இப்போது தங்களது தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு ஊர் சுற்றும் வாலிபனாய் இருந்தான் வெற்றியின் வெற்றிப் புதல்வன்.

“நீ என்ன ப்ளான்?” வெற்றி வினவ, “அப்பாகூட பிசினஸ் தான்” என்றாள்.

இருவரும் விடிய விடிய பேசிக்கொண்டிருக்க, யாழ்மொழியின் அலாரம் அடித்தது. “நாலு மணிக்கே எந்திரிச்சிருவியா?” வித்யுத் வினவ,

“இல்ல இல்ல. டான்ஸ் ப்ராக்டிஸ் இருக்கு. அதுக்கு வச்ச அலாரம்” என்றவள் அதை அணைத்துவிட்டு எழ, “என்ன டான்ஸ்?” என்றான்.

“நெக்ஸ்ட் வீக் எங்க காலேஜ்ல. ஸோ பரதநாட்டியம்”

“என்னது பரதநாட்டியமா? உனக்கு ஆட வருமா?” வித்யுத் அவளை சீண்டத் துவங்க, ஒற்றைப் புருவத்தை உயர்த்தி மிதப்பாக அவனை ஒரு பார்வை பார்த்தவள், “நெக்ஸ்ட் வீக் காலேஜ் வந்து தெரிஞ்சுக்க” என்றாள் கெத்தாக. பின்னே, பதினாறு வயதில் தொடர்ச்சியாக பதினைந்து மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தவளுக்கு பெருமை இருக்காதா என்ன?

“அவ்வளவு எதுக்கு? இப்ப என் முன்னாடியே ப்ராக்டிஸ் பண்ணு” அவன் கூற,

“அஹான். நான் சம்யுவுக்கே நேர்ல பாத்துக்கோன்னு சொல்லிட்டேன்” என்றவள் உள்ளுக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள, வித்யுத்துக்கோ, ‘போடி’ என்பதுபோல் இருந்தது.

பாடல் கூட வெளியே கேட்கக்கூடாது என்று எண்ணியவள், ஏர் பாட்ஸில் பாடலை ஓடவிட்டபடி நடனத்தை ப்ராக்டிஸ் செய்ய, வெளியே ஷோபாவில் படுத்திருந்த வித்யுத் தன்னையறிமால் தூங்கிவிட்டான். வியர்வை அருவியாய் பெருக்கெடுத்து அவளின் அங்கங்களில் வழிய வழிய இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடி பயிற்சியை முடித்தவள், ஏர்பார்ஸை அகற்ற, அவள் உடையோ வியர்வைத் துளிகளை தங்களுக்குள் புதைத்திருக்க, குளித்து முடித்து வந்தவள், முதல் வேளையாக இருவருக்கும் டீயை வைத்தாள்.

இரண்டு அழகிய சிவப்புநிற பீங்கான் கப்பில் டீயை ஊற்றியவள், அதை எடுத்து வந்து டீபாயில் வைத்துவிட்டு, வித்யுத்தை எழுப்பினாள். கண்களை சோம்பலாக திறந்தவனிடம், “டீ” என்று சுட்டிக் காட்டியவள் தன்னுடைய கப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்துகொள்ள, எழுந்து சென்று காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வந்தவன், டீயை அருந்தினான்.

“பரவாயில்ல. நல்லாதான் இருக்கு” கேலி செய்தவனை முறைத்தவள், “ஆல் க்ரெடிட்ஸ் கோஸ் டு வர்ஷித்” என்றாள்.

“ஓஹோ” என்றவன், “வர்றியா தோசை சாப்பிட போலாம்” என்றான் இதழ் விரிக்காத புன்னகையுடன் டீயை அருந்தியபடி.

“நீ வாங்கி தர்றனா சொல்லு” விளையாட்டாக அவள் தொடங்க,

“அதெல்லாம் நீ வர்ஷித்கிட்ட கேட்டுக்க. நான் இப்ப ரூம்ல செய்யப் போறேன்” அவன் சொல்லி முடித்ததுதான் தாமதம், “நிஜமாவா?” கண்கள் விரிய வழக்கம் போல் கேட்டவள், அடுத்த பத்து நிமிடத்தில் தயாராகி வந்தாள்.

“என்னடி ட்ரெஸ் இது. எப்ப பாரு முட்டிக்கு மேல போட்டுட்டு” அவன் கடிய, இடுப்பின் இருபக்கமும் கரத்தை வைத்தவள், “பூமர் பூமர் பூமர்” மூன்று முறை அவனைப் பார்த்துக் கூற, அவளின் காதைப் பிடித்துவிட்டான் அவன்.

“நான் பூமரா?” அவளின் காதைப் பிடித்து திருகியவன், “உன் பேன்ட் இங்க கிழிஞ்சிருக்கு. அதுக்கு இன்டைரக்டா சொன்ன…” அவளின் காதைப் பிடித்து அவன் ஆட்ட, அவளின் மொத்த தலையும் ஆடியது.

“ஸ்ஸ்ஸ்ஆஆஆ வலிக்குதுடா” கத்தியவள் அப்போதுதான் அந்த பேன்ட் கிழிந்திருப்பதைக் கண்டாள்.

“ஹிஹிஹி.. இரு” என்றவள் உள்ளே சென்று மீண்டும் வெளியே வரும்போது வித்யுத்தின் விழிகள் அவளை காந்தமாய் ஈர்த்து, உள் வாங்கிக் கொண்டது.

பெர்ரிவின்க்கில் வண்ணத்தில் இடைவரை இறுக்கிப் பிடித்து, அதற்கு கீழே சென்டர் ஸ்லிட் வைத்து லுசாக இருந்த சல்வாருக்கு, பொருத்தமாக ஸ்ட்ரெயிட் கட் பேண்ட்டும், துப்பட்டாவும் அணிந்து லூஸ் ஹேர் விட்டிருந்தவளின் முகம் அத்தனை இலட்சணமாய் இருந்தது.

ஆனால், திடீரென அவனின் புருவங்கள் சுருங்க, “வேறென்ன?” என்றாள் தன் செப்பு அதரங்களைச் சுருக்கிக்கொண்டு.

“பொட்டு எங்க?” அவன் கைகளைக் கட்டிக்கொண்டு அதட்டலாக வினவ, ஒரு நிமிஷம் உள்ளே சென்றவளுக்குத் தெரியவில்லை, ‘ஏன் அவன் சொன்னதை எல்லாம் செய்கிறோம் என்று?’ அவனிற்கும் தெரியவில்லை, ‘ஏன் அவளிடம் இத்தனை எதிர்பார்க்கிறோம் என்று?’

“வித்யுத், ஓகேவா?” தனது துப்பட்டாவை சரிசெய்து கொண்டு வந்தவளின் நெற்றியில் மினுமினுப்பாய் ஒளிர்ந்த கல்பொட்டை பார்த்தவன், தன்னையும் மீறி, “அழகா இருக்க” என்றிட, யாழ்மொழிக்கோ அவனின் பார்வையிலும், அவன் அதரங்கள் முணுமுணுத்ததிலும், அவளின் கன்னங்கள் இரண்டும் நாணத்தில் சிலிர்த்து சிவந்துபோனது.

இருந்தும் தன்னை காட்டாமல் மறைத்தவள், “நான் அழகா இருக்கேன்னு எனக்கு அல்ரெடி தெரியும். இருந்தாலும் தாங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட்” கழுத்தை நொடித்துக் கொண்டு சொல்ல, ‘தலையெழுத்துடா சாமி’ நினைத்தவன் அவளுடன் அறைக்குப் புறப்பட்டான்.

வழி நெடுகிலும் அனைவரும் யாழ்மொழியை வித்தியாசமாகவும், அதே சமயம் அவளின் ஓவிய அழகை இரசனையாகவும் பார்த்து வைக்க, யாழ்மொழியோ, வெட்கமும் சங்கோஜமும் விழியில் வழிய, உடலில் நளினம் பொங்க வித்யுத்தின் கரத்தைப் பிடித்து அவனுடன் ஒன்றியபடி நடக்க, அவனுக்கு சிரிப்பாக இருந்தது.

“சிரிக்காதடா” என்றவள் வீட்டிற்குள் வருவதற்குள் ஒரு வழியாகி விட்டாள்.

உள்ளே நுழைந்ததும்தான் தாமதம், யாழ், “தோசை..” என்று தொடங்க, “பரக்காத பரக்காத பன்னிக்குட்டிஈஈ” ராகத்தோடு பாடியபடியே வித்யுத் சமையல் அறைக்குள் நுழைய, அவன் பின்னேயே ஓடியவள் அவனின் முதுகில் சளாரென ஒரு அடி வைத்தாள்.

அவளின் படீரென்ற அடியில் அவனுக்கு வலி சுள்ளென்று பிடிக்க, “அடிங்ங்ங்..” என்று திரும்பியவன், அவளை அடிக்க ஓட, அவள் நிற்பாளா?

அவளைத் துரத்தியபடிச் சென்றவன் அவளின் துப்பட்டாவைப் பிடித்துவிட, திடீரென வேகமாய் ஓடிக் கொண்டிருந்தவளுக்கு துப்பட்டா இழுக்கப்பட்டதில் கீழே விழப்பார்க்க, அவனையும் பெண்ணவள் பிடிக்க, இருவரும் ஒன்றாக தரையில் தொப்பென்று விழுந்தனர். அப்போதும் வித்யுத்திற்கு புத்தியில் எதுவும் உரைக்கவில்லை.

ஆனால், பெண்ணவள்?

உடலோடு உடல் உரச ஒரு ஆண்மகனோடு அவள் தரையில், அதுவும் அவனுக்கு கீழே, அவனின் நெஞ்சில் உள்ள ரோமங்கள் வதனத்தில் உரசியபடி கிடக்க, பெண்ணவளின் இதயத்திலோ பேரண்டத்தில் உள்ள ஆயிரம் பேரிடிகள் தன்னை தாக்குவதைப் போல உணர, அவளின் இதயத்துடிப்பை அவளால் கேட்க முடிந்தது.

அவளுடன் விழுந்தவன், “என்கிட்டையே உன் வேலையை காட்டிறியா?” என்றபடி அவளின் தலையில் கொட்டுக்கள் வைத்து, தனக்குக் கீழ் இருந்த அவளின் முகத்தைப் பார்க்க, சரியாக பெண்ணவளின் முகத்தில் இருந்த பாவனைகளையும், அவளின் துருதுரு விழிகள் எழுப்பிய பல வித உணர்வுகளையும் கண்டவன் ஸ்தம்பித்துவிட்டான்.

முதன் முதலாக ஒரு பெண்ணுடன் இவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறான். பெண்ணவளுக்கும் அப்படித்தான்.

அவளின் மேனியில் இருந்து வந்த நறுமணமும், அவள் உபயோகப்படுத்தும் ப்ரான்டட் சென்ட்டும், அவனை ஏதோ செய்ய, அவனுக்கு கிறுகிறுத்துப் போனது. அவள் கழுத்து வளைவு இருந்த அழகிலும், அது இருந்த பளீரென்ற தெளிவிலும், அவனுக்கு அங்கு முகம் புதைக்க ஆசையாய் இருக்க, மறவோனின் பார்வை பயணிக்கும் இடத்தை உணர்ந்த பெண்ணவள், “வ.. ருண்” என்று வெளிவராத குரலில் முனக, அவளின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்தவன், அது புத்தியில் அடிக்க, விருட்டென அவளின் மேலிருந்து அவன் எழ, அவளின் துப்பட்டாவும் அவனின் சட்டையில் மாட்டி அவனோடு வர, அவன் எழுந்தவுடன் தலை குனிந்தபடியே எழுந்தவள், துப்பட்டாவிற்காக கரத்தை நீட்ட,

‘என்ன?’ என்பதுபோல பார்த்தவனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. அவளின் விழிகள் பயணித்த இடத்தைப் பார்த்து புரிந்து கொண்டவன், அவளிடம் துப்பட்டாவை நீட்ட, வாங்கி அமைதியாய் கழுத்தில் போட்டுக் கொண்டவளிடம், “நான்.. கி..ட்சின் போறேன்” தட்டுத் தடுமாறி சொன்னவன் உள்ளே நுழைந்துகொள்ள அப்போதுதான் அவனுக்கு மூச்சே வந்தது.

கைகள் நடுங்க தோசையை கரண்டியில் எடுத்தவன், அதை ஊத்துவதற்குள் படாதபாடுபட்டான். ‘ச்சை என்ன இது?’ தன்னைத் தானே கடிந்தவன் சரியாக வராத தோசையை தான் உண்டபடியே அவளுக்கு மொறுமொறுவென தோசையை ஊற்றிக் கொடுத்தான்.

தோசையை ருசித்தபடி அமைதியாய் உண்டு முடித்தவள், “நல்லா இருக்கு” என்றாள் புன்னகையுடன்.

அவளின் முகத்தைப் பார்க்கவே சிரமப்பட்டவன், “ம்ம்” என்றிட, ‘இப்ப எதுக்கு இவன் புதுப்பொண்ணு மாதிரி வெக்கப்படறான்’ நினைத்தவள், தண்ணீரை அருந்திவிட்டு, “பர்ஸ்ட் நைட்டுக்கு வந்த பொண்ணு மாதிரி ஏன் தலை குனிஞ்சுட்டே இருக்க?” வினவ, அவளின் கேள்வியில் சளாரென நிமிர்ந்தவனுக்கு வெட்கம் பிடுங்கித் திங்க,”ச்சி போடி” என்று அவளின் தலையில் தட்டிவிட்டு உள்ளே சென்றான்.

சிறிதுநேரம் கழித்து, வர்ஷித்தின் லேப்டாப்பில் ஒரு இந்தி மொக்கை படத்தை ஓடவிட, வித்யுத்திற்கோ விழிகள் சுழற்றத் தொடங்கியது. அவனின் விழிகள் தூக்கத்திற்கு ஏங்க, தூக்க மயக்கத்தில் ஷோபாவில் தலை சாய்த்தவன், சிறிது நேரத்தில் யாழ்மொழியின் மேல் சாய்ந்துவிட, ஒரு நிமிடம் திடுக்கிட்டவள், அவனைத் திரும்பிப் பார்க்க அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

அவனுடன் நகர்ந்து அமர்ந்தவள், அவன் தூங்குவதற்கு ஏதுவாக தன் தோளை வைத்துக்கொண்டாள்.

‘ஏன் இவ்வாறு செய்கிறாய்?’ அவளின் மனசாட்சி கேட்க, ‘தெரியல. பட் பிடிச்சிருக்கு’ என்றாள்.

‘ஓஹோ! ஒண்ணுமே இல்லாமதான் தோள்ல சாச்சுக்கறியா?’ அவள் மனசாட்சி கேலிசெய்து கேள்வி கேட்க,

‘ஆமா, ஒண்ணுமே இல்லதான்’ என்றாள். ஆனால், ஆரம்பத்தில் இருந்த உறுதி முடிவில் அவளிடம் இல்லை.

‘இதே வேற யாராவது உன் மேல இப்படி விழுந்திருந்தா?’ அவளின் மனசாட்சி அவளை மீண்டும் துருவ, அவளிடமோ பதில் இல்லை. வேறு யாராவது என்றால் நிச்சயமாக தள்ளி விட்டிருப்பாள். அவனை ரசிக்கவிட்டு வேடிக்கை பார்த்திருக்கமாட்டாள். அப்படிப்பட்ட வளர்ப்பும் இல்லை அவள்.

‘அப்ப அவனை லவ் பண்றியா?’ மனசாட்சி கேட்க,

‘இல்ல இல்ல. எனக்கு என் அப்பாதான் முக்கியம். அவர் சொல்ற பையனைதான் நான் கல்யாணம் பண்ணுவேன்’ யாழ்மொழி மறுக்க,

‘அப்ப ஏன் அவனை தோள்ல தாங்கிட்டு இருக்க?’ அவளின் மனசாட்சி கேட்ட கேள்வி குறி தவறாமல் அவளின் இதயத்தை அடித்தது.

‘அ.. அது..’ என திக்கியவள், ‘எனக்கு அவனை பிடிக்கும்.. ஆனால்,.. ” என்றவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

‘ஆனா..?’ இழுத்த மனசாட்சியை விரட்டி அடித்தவள் தன் தோளில் சாய்ந்திருந்த வித்யுத்தின் முகத்தைப் பார்த்தாள்.

நல்லவன் தான். ஆனால், கோபம், வீம்பு, பிடிவாதம் அனைத்தும் மிக அதிகம் என்பதை அவனுடன் பழகிய இந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டவள், அவனுக்கும் தனக்கும் ஒத்துப்போகுமா என்று யோசித்தாள்.

‘லவ் பண்ணலைன்னு சொன்ன? அப்புறம் ஏன் இப்படி யோசிக்கறே?’ அவளின் மனசாட்சி திடீரென வெளியே வர, தலையை சிலுப்பி மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தவளுக்கு, ‘பர்ஸ்ட் இவனுக்கு என்னை பிடிக்குமா?’ கேள்வி எழுந்து, அவளின் மனதை கவலை என்னும் கரையான் அரிக்கத் துவங்க, தயக்கதுடன் தன் ஒற்றை விரலால் அவனின் வதனத்தை மென்மையாய் தொட்டுப் பார்த்தாள்.