ரகசியம் 02 💚

eiZ5BMR90432-608368c9

வீரஜின் வார்த்தைகளில் ‘அவனை என்ன செய்தால் தகும்?’ என்றிருந்தது ராகவனுக்கு.

இருவரும் இருவேறு ஊரைச் சேர்ந்தவர்கள். மேல்படிப்புக்காக நகரத்தில் கல்லூரியொன்றில் இருவரும் சந்தித்துக்கொள்ள, அப்போது பழகியவர்கள்தான், கல்லூரி வாழ்க்கை முடிந்தும் நட்பை தொடர்கின்றனர்.

பல விடயங்களில் வீரஜின் செயல்களை வியந்துப் பார்த்திருக்கும் ராகவன், அவனுடைய பண பேராசைக் குணத்தில் மட்டும் எகிறிவிடுவான். ஆனால், நண்பனின் கோபத்தையெல்லாம் கண்டுக்கொண்டால் அவன் வீரஜ் அல்லவே!

இன்றும் ராகவனின் கிராமத்தில் கொஞ்சநாட்களை கழிக்கவென நேற்றிரவே வீரஜ் வந்திருக்க, இப்போது நண்பனை அழைத்துக்கொண்டு ஊரைச் சுற்றிக் காட்டிக்கொண்டிருந்தான் ராகவன்.

அப்போதே வீரஜ் பேசியதில் அவனை முறைத்தவன், அடுத்து ஜீப்பில் வைத்து அவன் சிகரெட்டை பற்ற வைத்ததும், “வீரா…” என்று கத்தியேவிட்டான்.

ஒரு கையால் ஜீப்பை செலுத்திக்கொண்டு மற்ற கரத்தால் வீரஜின் உதட்டிலிருந்த சிகரெட்டை பிடுங்கி எறித்தவன், “கொஞ்சமாச்சும் அறிவிருக்காடா? அப்பா யாராச்சும் பார்த்தா என்னாகுறது? ஊருல எனக்குன்னு ஒரு நல்ல பெயர் இருக்கு, கொடுத்துவிட்டுறாதா!” என்று பொறுமித்தள்ள, ‘ச்சே!’ சலித்துக்கொண்டவாறு பார்வையை திருப்பிய வீரஜின் விழிகளில் சிக்கியது அந்த பாரம்பரிய வீடு.

அதைப் பார்த்தவனுடைய விழிகள் மின்ன ஆரம்பித்தன. “வாவ் ராகவ்! இந்த வீடு செம்மையா இருக்குடா, அப்படியே பேலஸ் மாதிரி. வாழறதுன்னா இப்படி ஒரு வீட்டுல வாழணும். ஆமா… யாரோட வீடு இது? அவங்ககிட்ட சொல்லி வை! இந்த வீட்டுமேல நான் ஒரு கண்ணு வைச்சிட்டேன்னு” அந்த வீட்டையே விழிகளில் ஆர்வத்தோடு பார்த்தவாறு வீரஜ் கேட்க, அவனை ஒற்றை புருவத்தை தூக்கிய தோரணையில் பார்த்தவன், “இது மட்டும் மிஸ்டர்.பார்த்திபனுக்கு தெரிஞ்சது உன் கண்ணை மட்டுமில்ல என் கண்ணையும் சேர்த்து பிடுங்கிடுவாரு” எரிச்சலாகச் சொன்னான்.

அதில் வீரஜின் புருவங்கள் கேள்வியாக ஏறி இறங்க, அவனுடையை பார்வையை உணர்ந்து, “இந்த கிராமத்துல ரொம்ப பெரிய மனுஷன் அவரு. ஏகப்பட்ட தோட்டம், வயல், குளங்களுக்கு சொந்தக்காரரு. அவரோட வீடுதான் இது. கிராமத்துக்காரருன்னு மட்டமா நினைச்சிறாத! ஆள் பலம், பண பலம் ஜாஸ்தி. ஒவ்வொரு விஷயத்துலேயும் அதிகமா பாரம்பரியம் பார்ப்பாரு. அதான், சொந்த ஊரை விட்டு போக மனமில்லாம இங்கேயே இருக்காரு” பேசிக்கொண்டேச் சென்ற ராகவனுக்கு அடுத்து தன் நண்பன் கேட்ட கேள்வியில் ‘அய்யோ!’ என்றிருந்தது.

“அங்கிளுக்கு பொண்ணு கிண்ணு ஏதாச்சும் இருக்கா?” ஏற்கனவே ராகவன் சொன்னதில் ஆர்வமான வீரஜ், ஏதோ ஒரு எதிர்ப்பார்த்த திட்டத்தோடு இந்த கேள்வியை கேட்டு வைக்க, “ஊரை விட்டு உயிரோட போகுறதுக்குள்ள உன்னோட சேர்த்து என்னையும் இந்த மண்ணுக்குள்ள புதைக்கணும். அப்போதான் நீ அடங்குவ, அப்படிதானே!” என்று முறைத்தவாறு கேட்டான் ராகவன்.

“அதுல என்ன தப்பு?” வீரஜ் கோலரை தூக்கிவிட்டுக்கொள்ள, “இந்த பணத்தாசை உன்னை விட்டு போகவே போகாதா? ஏன்தான் இப்படி இருக்கியோ? எல்லாம் குடும்பநோய், அதான்” ஆரம்பத்தில் சத்தமாகத் திட்டி இறுதியில் அவன் முணுமுணுப்பாக முடிக்க, “என்ன சொன்ன? என்ன சொன்ன?” அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டான் வீரஜ்.

“ஹிஹிஹி… சும்மா லுல்லுல்லாய்க்கு” ராகவன் தன் நண்பனை சமாளித்து முடிக்கவில்லை, அதற்குள் ஜீப் சட்டென்று நின்றுவிட, இறங்கி என்ன பிரச்சனையென்று ஆராயத் தொடங்கினர் இருவரும்.

ராகவனோ என்னவென்றுப் பார்க்க, சற்றுநேரம் தன் நண்பனோடு இணைந்து சரி செய்துக்கொண்டிருந்தவனின் காதில் விழுந்தது அந்த சிரிப்பொலி. சத்தம் கேட்டதுமே அத்திசையை நோக்கி வேகமாகத் திரும்பியவன், செய்துக்கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு “வீரா… வீரா…” என ராகவன் கத்துவதைக் கூட பொருட்படுத்தாமல் சத்தம் வந்த மாந்தோப்புக்குள் நுழைந்தான்.

அங்கு மரத்திற்கு கீழ் ஒருத்தி வாய்விட்டு சிரித்துக்கொண்டு நிற்க, சட்டென “ஷ்ஷ்… வாய மூடு! அந்த ஐயாவுக்கு தெரிஞ்சது அம்புட்டுதான்” என்றொரு குரல். அவனோ குரல் வந்த திசையைப் பார்க்க, ஐந்தடி உயரத்தில் கையில் தன் உயரத்தை விட பெரிய கம்பொன்றை தூக்கிப் பிடித்து தலையில் துணியால் முண்டாசுக் கட்டி மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தாள் அந்த தாவணிப்பெண்.

புறங்கையால் உதட்டுக்கு மேல் பூத்திருந்த வியர்வையை துடைத்துவிட்டவள், மீண்டும் கம்பை தூக்கிப் பிடித்து மரத்திலிருந்த மாங்காய்களை குறிப்பார்த்து அடிக்க, அந்த கம்பில் பட்டு இரண்டு மூன்று மாங்காய்களும் தரையில் அடுத்தடுத்தென விழுந்தன. அவள் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட தேஜஸ்!

“ஏ கயலு! சூப்பருடி, வந்ததுக்கு இதாச்சும் கிடைச்சதே… ஆனா, எனக்கு ஒரு டவுட்டு! உன் அப்பாவுக்கு சொந்தமா இல்லை இல்லை உன் பெயருலயே ஏகப்பட்ட தோப்புதொரவு இருக்கு. அப்றம் எதுக்குலே உனக்கு இந்த திருட்டு புத்தி?” பக்கத்திலிருந்த அவள் தோழி தேன்மொழி மாங்காயை சுவைத்துக்கொண்டே சந்தேகமாகக் கேட்க, தலையில் கட்டியிருந்த முண்டாசைக் கழற்றி துணியால் நெற்றி வியர்வையைத் துடைத்துவிட்டவாறு, “ஊரான் வீட்டு மாங்காய் டேஸ்ட்டு சொந்த வீட்டு மாங்காய்ல கிடைக்குமா தேனு?” என்று கேட்டாள் கயல்விழி பளிச்சென்று சிரித்துக்கொண்டு.

அவளுடைய குண்டு கன்னத்தை கிள்ளிவிட்டு திரும்பிய தேனு எதிரே நின்றிருந்தவனைப் பார்த்து உறைந்துப்போய் நிற்க, கன்னத்தைக் கிள்ளியதில் உண்டான வலியில் முகத்தை சுருக்கிக்கொண்டு திரும்பிய கயலும் வீரஜை பார்த்து விழி விரித்து, அலைபேசியில் தங்களை அவன் படமெடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து திகைத்தேவிட்டாள்.

“ஏங்க, என்ன பண்றீங்க?” தேனு மாங்காய்களை தொப்பென்று கீழே போட்டு முறைத்தவாறுக் கேட்க, அலைப்பேசித் திரையிலிருந்து பார்வையை விலக்கி தலையை சரித்தவாறு வீரஜ் குறும்பு விழிகளோடு அவர்களை ஒரு பார்வைப் பார்க்க, அவனையே பார்த்துக்கொண்டிருந்த கயலுக்கு அந்த பார்வையில் உள்ளுக்குள் குறுகுறுவென இருந்தது.

இளம்வயது வேறு! இது போன்ற தடுமாற்றம் நடப்பது இயல்புதானே!

“பார்த்தா தெரியல, ஃபோட்டோ எடுத்தேன்” வீரஜ் சாதாரணமாகச் சொல்லி எடுத்த புகைப்படத்தைக் காட்ட, தேனுவின் விழிகளில் தோன்றிய மின்னல் கயலின் விழிகளிலும் தோன்றியது.

வீட்டில் அதிகப்படியான கட்டுப்பாடுகளினால் வளர்ந்த அந்த பதினெட்டு வயது பெண்களுக்கு ஏனோ வீரஜின் கடித்த ஆப்பிள் அலைப்பேசியையும் அதில் தெளிவாக படமெடுக்கப்பட்டிருந்த தங்களின் புகைப்படத்தைப் பார்த்ததும் ஆர்வம். அதில், அவன் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கின்றானே என்ற கோபம் கூட காற்றில் கரைந்து போனது.

ஒருவரையொருவர் விழிகளில் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டு, “இது நான்தானா?  இம்புட்டு அழகா இருக்கேன். அண்ணே, இந்த ஃபோட்டோவ எங்க அக்கா மொபைலுக்கு அனுப்ப முடியுமா?” தேனு வெகுளியாய் கேட்க, கோபமாய் உருவெடுத்து பின் சடாரென சிறுபிள்ளை போல் தேன்மொழி நடந்துக்கொண்டதில் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன், “ஷூவர்” என்றான், அவளுடைய அக்காவின் அலைப்பேசி எண் கிடைக்குமென்ற ஆர்வத்தோடுச் சேர்த்து.

ஆனால், கயலோ எதுவுமே பேசவில்லை. ஜீன்ஸ் டீஷர்ட் என்று உடலை இறுக்கிப் பிடித்த ஆடையில் வேறு ஊரிலிருந்து வந்திருக்கும் இளம் ஆண்மகன், கண்ணை பறிக்கும் வசீகரச் சிரிப்பு என்பன அவளின் வயதின் கோளாரைப் பயன்படுத்தி அவளிடம் ஒரு ஆர்வத்தை உண்டாக்க, ஓரக்கண்ணால் அவனைப் பார்ப்பதும் அவன் பார்க்கும் போது திரும்புவதுமாக இருந்தாள்.

இந்த விளையாட்டை வீரஜ்ஜும் கவனிக்காமலில்லை.

அவளைப் பார்த்தவாறே கீழே விழுந்திருந்த மாங்காயை கையிலெடுத்தவன், “கன்னம் ரொம்ப அழகா இருக்கு” என்றுவிட்டு அர்த்தம் பொதிந்த பார்வையோடே மாங்காயை ஒருவாய் கடிக்க, குப்பென்று சிவந்த கன்னங்களை மறைக்க பாடுபட்டவாறு, “தேனு, போகலாம்டி. யாராச்சும் பார்த்தா அப்பாவுக்கு தெரிஞ்சிடும்” என்றுவிட்டு விறுவிறுவென முன்னே செல்ல, “மகாராணி என்கிட்ட எல்லாம் பேச மாட்டாங்களோ?” அவள் கண்டுக்கொள்ளாது போவதில் எரிச்சலாகக் கேட்டான்.

“நீங்க நம்பலன்னாலும் எங்க கயலு மகாராணியாக்கும்” என்று பெருமையடித்துவிட்டு தேன்மொழியும் கயலின் பின்னால் ஓடிவிட, மாங்காயை கடித்தவாறு தன்னை அடிக்கடி பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டுச் செல்லும் கயலை புருவத்தைச் சுருக்கிப் பார்த்தான் வீரஜ்.

சரியாக, அவனருகில் அவனை முறைத்தவாறு வந்து நின்ற ராகவன், “அடங்க மாட்டல்ல நீனு? அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசியில சொன்ன மாதிரி கண்ணு வச்சிட்ட. ஏதோ பேச்சுக்கு சொல்றன்னுல்ல நினைச்சேன்” பொடி வைத்துப் பேச, “புரியல” என்றான் அவன், கேள்வி தாங்கிய பார்வையுடன்.

“வர்ற வழியில ஒரு வீட்டை அம்புட்டு ஆர்வமா பார்த்தியே, அந்த வீட்டுக்குச் சொந்தக்காரியே இவதான். பார்த்திபன் ஐயாவோட ஒரே பொண்ணு”  என்ற ராகவன், “கூடவே அடிஷினல் இன்ஃபோர்மேஷனும் தர்றேன். அவரோட பொண்ணு பக்கம் உன் பார்வை போச்சு… கிம் ஜாங் ஹூன்ன விட ரொம்ப பொல்லாதவரகிடுவாரு, பார்த்துக்க!” மிரட்டும் தோரணையில் சொல்ல, ஒருகணம் அதிர்ந்து தன் நண்பனை பார்த்தான் வீரஜ்.

ராகவனோ ‘அப்பாடா! பையன் பயந்துட்டான்’ என்று நிம்மதிப்பெருமூச்சு விடப் போக, அதற்குள் அவனோ, “ஆமா… பொண்ணு பெயரென்ன?” என்றொரு கேள்வியை கேட்டு வைத்தான்.

ராகவனுக்கு பக்கென்றானது. ‘ஒருவேள அலெர்ட்டா இருக்க கேக்குறானோ?’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு, “கயல்விழி” பதட்டமாகச் சொல்ல, “ஓஹோ! அந்த ஃப்ரெஷ் ஆப்பிளா?” நீட்டி முழக்கி கேட்டவாறு கையிலிருந்த மாங்காயை கயல் சென்ற திசையை பார்த்துக்கொண்டு கடித்த வீரஜ், “இரண்டு பொண்ணுங்க இருந்தாங்கல்ல, பொண்ணு மிஸ் ஆகிற கூடாதே, அதான்” என்றுவிட்டு அவன் பாட்டிற்கு முன்னே சென்றான்.

ஆனால், ராகவனுக்குதான் தலையே சுற்றிவிட்டது. அவனுக்குதான் தெரியுமே தன் நண்பனைப் பற்றி.

இங்கு வீரஜ்ஜோ கையில் கிடைத்த பொக்கிஷத்தை எண்ணி விஷம சிரிப்பு சிரித்துக்கொண்டான். திட்டங்கள் வேறுவிதமாய் மனதில் ஓட, “கயல்விழி” மாங்காயைச் சுவைத்தவாறு அவனிதழ்கள் மெல்ல முணுமுணுத்தன.

அவனுடனான முதல் சந்திப்பை நினைத்துப் பார்த்த கயலுக்கு அன்றைய தருணத்தை நினைத்து தன்னை நினைத்து இப்போதும் லேசாக கோபம் துளிர்விட்டது. எத்தனை பெரிய முட்டாள்தனம்!

தனக்குத்தானே, ‘வயதுக்கோளாறு’ என்றொரு காரணத்தை சமாளிக்க வைத்தாலும், மனக்கட்டுப்பாடு எந்த வயதிலும் இருக்க வேண்டுமென்ற உண்மை அவளுக்கு உரைத்துக்கொண்டே இருந்தது. அவள் செய்த முட்டாள்தனம் அவளுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப்போட்டது.

அவன்மேல் அளவு கடந்த காதலுள்ளவள் அவள்! ஆனால், அவன் செய்த காரியம் எந்தவொரு பெண்ணாலும் ஜீரணிக்க இயலாதது.

கீழுதட்டைக் கடித்து கயல் தன்னுணர்வை அடக்கிக்கொள்ள, சரியாக போர்டிகாவில் கார் நிறுத்தப்பட்டது. காரிலிருந்து இறங்கி கையிலிருந்த பையோடு அந்த வீட்டை வெறித்துப்பார்த்தாள் அவள்.

உள்ளே நுழைந்ததும் விழிகளை சுழலவிட்டு சுற்றும் முற்றும் வீட்டை நோட்டமிட்டவள், எதிரே சோஃபாவில்  அமர்ந்திருந்தவரை புருவத்தைச் சுருக்கிப் பார்த்தாள். அவளெதிரே அந்த வீட்டைச் சேர்ந்த பெண்மணி ரேவதி அலைப்பேசியை நோண்டியவாறு அமர்ந்திருந்தார்.

கயலோ அவரை பார்த்தவாறு அப்படியே நின்றிருக்க, ரேவதியின் இதயத்துடிப்பு வேகமாக அடித்துக்கொண்டது. என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு!

முகம் சாதாரணமாக இருந்து பார்வை அலைப்பேசி திரையிலிருந்தாலும் உள்ளுக்குள் நடக்கும் மாற்றத்தை அவர் மட்டுமே அறிவார். ஏதோ ஒரு மன உந்துதலில் மனதின் கட்டளையின்படி வேகமாக நிமிர்ந்தவர், எதிரே தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளை கேள்வியாக நோக்கியவாறு எழுந்து நின்றார்.

இமைக்க கூட மறந்து கயலை பார்த்துக்கொண்டே அவளெதிரே வந்து நின்ற ரேவதிக்கு ஒருசில முகங்கள் மனதில் வந்து போக, எச்சிலை விழுங்கி அதை ஒதுக்கி, “யார் நீ?” அழுத்தமாகக் கேட்டார்.

ஆனால் கயலுக்கு, ரேவதிக்கு உண்டான பதட்டம், நினைவுகள் போல் இல்லை போலும்! சாதாரணமாக “அது… சீதாம்மா அனுப்பி விட்டாங்க” கயல் சொல்ல, அப்போதுதான் ஞாபகம் வந்தவராய் தலையசைத்து, “என் கூட வா!” என்றுவிட்டு முன்னே நடந்தார் ரேவதி.

ஒரு பெரிய அறைக்குள் ரேவதி நுழைந்து கயலை அழைக்க, அவர் பின்னாலேயே வந்தவளின் விழிகளில் சிக்கியது, அங்கு கட்டில் மெத்தையில் ஒரு புகைப்படத்தை கையில் வைத்து விழிகள் கலங்கி அமர்ந்திருந்த சத்யா அம்மாள்.

“அன்னி…” ரேவதி அழைத்ததுமே, கையிலிருந்த புகைப்படத்தை தலகாணிக்கு அடியில் வைத்தவர், விழிகளை வேகமாக துடைத்துவிட்டு ரேவதியை கேள்வியாக பார்த்துவிட்டு கயலை புரியாது நோக்கினார்.

அவரும் சத்யா அம்மாளின் பார்வையை உணர்ந்து, “இந்த பொண்ணதான் சீதா அக்கா அனுப்பியிருக்காங்க, உங்கள கவனிச்சிக்குறதுக்காக” ரேவதி சொல்ல, “நான் இதெல்லாம் கேட்டேனா, தேவையே இல்லாதது. ச்சே!” சலித்துக்கொண்ட சத்யா, பின் உதட்டை பிதுக்கிக்கொண்டு “அபி வந்தானா?” என்று கேட்டார் தழுதழுத்த குரலில்.

“இந்தியாவுக்கு வந்து மூனு நாளாச்சு” ரேவதியின் வார்த்தைகள் எரிச்சலாக வெளிப்பட, “அப்போ ஏன் இன்னும் வீட்டுக்கு…” என்று சத்யா கேட்டு முடிக்கவில்லை, “என்ன அன்னி பேசுறீங்க? உங்களுக்கு நல்லாவே தெரியும், அவன்…” என்று கோபமாக அவர் ஏதோ சொல்ல வர, கை நீட்டி பேச விடாது தடுத்தார் சத்யா.

“எத்தனை தடவைதான் சொல்லுவீங்க அன்னி? ஆனா, என்னால ஏத்துக்க முடியல. எனக்கு தெரியுது, ஆனா புரிய மாட்டேங்குது” சத்யா அம்மாள் தேய்ந்த குரலில் சொல்ல, இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் கயல்.

அவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. அவள் மனமோ ‘சீதாம்மா சொன்னாங்கல்ல, அவரோட மகன் வருவாருன்னு. ஆனா, ஊருக்கு வந்தும் உடம்பு முடியாம இருக்குற அம்மாவ பார்க்காம வராம இருக்காரே…’ என்று அதிருப்தியாக அந்த ஒருவனைப் பற்றி நினைத்துக்கொண்டது.

கயல் அவளுடைய யோசனையிலிருக்க, சட்டென திரும்பி அவளை கவனித்த ரேவதி, “இப்போ போ, நாளையிலிருந்து உன்னோட வேலைய ஆரம்பி!” என்று சொல்ல, தலையசைத்துவிட்டு வெளியேறப் போனவள், மீண்டும் “ஏய்…” என்ற ரேவதியின் அழைப்பில் நின்று திரும்பிப் பார்த்தாள்.

“உன் பெயரென்ன?” அவர் அவளை கூர்மையாகப் பார்த்தவாறு கேட்க, “கயல்விழி” என்ற அவளின் பதிலில் ரேவதியோடுச் சேர்த்து சத்யா கூட சற்று விழிகளை விரிக்கத்தான் செய்தார். ஆனால், அவருடைய திகைப்பை விட ரேவதியுடைய அதிர்ச்சி அதிகம் போலும்!

‘ஒருவேள, இவ…’ உள்ளுக்குள் நினைத்தவர், ‘இல்லை வாய்ப்பில்லை. அதுக்கு வாய்ப்பேயில்லை’ பதறியபடி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கயலையே பார்த்தவாறு நிற்க, அதேநேரம் அணிந்திருந்த வெள்ளை ஷர்ட்டுக்கு ஏற்ப அடர்ந்த கேசம் காற்றில் ஆட, சிகரெட் புகையை ஊதித்தள்ளிக்கொண்டு கடலலைகளை வெறித்தவாறு நின்றிருந்தான் அவன்.

அவனுடைய விழிகளில் கோபம், ஆத்திரம், பயம், சோகம், ஏக்கம் என எல்லாம் கலந்த உணர்வு. ஓடி வரும் அலைகளால் கூட அவன் மனதின் தீயை அணைக்க முடியவில்லை.

சரியாக, அவனுக்கொரு அழைப்பு வர, திரையில் தெரிந்த ‘சத்யாம்மா‘ என்ற பெயரைப் பார்த்தவன், அழைப்பை ஏற்கவில்லை. அது ஒருகட்டத்தில் ஓய்ந்துவிட, அணைந்திருந்த திரையில் தன் முகத்தைப் பார்த்தவனுக்கு தன்னை நினைத்து அத்தனை வெறுப்பு!

கோபம் தலைக்கேற, “ஆஆ…” என்ற கத்தலோடு அலைப்பேசியை கடலலைகளின் நடுவே தூக்கியெறிந்த அபிமன்யுவின் சிவந்த விழிகளிலிருந்து விழிநீர் கடல் மண்ணைத் தொட்டது.