ரகசியம் 05 💚

eiAV2KA14974-a0ed0d2e

ரகசியம் 05 💚

“கண்ணை என்ன பிடறியில வச்சிருக்கியா? எப்போவும் நேரா பார்த்து போய் பழக மாட்டியா?” நிறுத்தி நிதானத்துடன் கூடிய அழுத்தத்துடன் அபிமன்யு கேட்க, அவனின் பிடியில் நின்றிருந்த கயலுக்கு பயத்தில் கைகால்கள் உதற ஆரம்பித்துவிட்டது. கூடவே, அதிர்ச்சியும்.

‘எப்போவுமேவா? என்ன கேக்குறாரு இவரு!’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவளுக்கு அவனின் அழுத்தமான பிடியில் வலியும் எடுக்க, “அது நான்… நான் வந்து…” என்று தடுமாறியவள், பயத்தில் உதடுகளை நாவால் ஈரமாக்கிக்கொண்டாள். இத்தனைநேரம் கோபமாக அவளை பார்த்திருந்தவனின் கோபம் சட்டென மறைய, அபியின் பார்வை கயலுடைய இதழின் மீது படிந்தது.

அவளுடைய இதழை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவளின் விழிகளை பார்த்திருந்தவனின் விழிகளில் இப்போது வேறொரு உணர்வு! அவன் விழிகளையே பார்த்திருந்த கயலுக்கு கோபம் மறைந்து அவன் விழிகள் உணர்த்தும் குறுஞ்செய்தி என்னவென்பதை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.

‘இந்த கண்ணு என்கிட்ட எதையோ சொல்ல முயற்சிக்குற மாதிரி இருக்கு’ அவளுடைய மனம் அவளுக்கு உணர்த்த, அபிமன்யுவும் விழிகளால் உணர்த்திய செய்தியை நாவால் சொல்லவென உதடுகளை அசைக்கப் போக, அதற்குள், “அண்ணா, கயல விடுங்க!” கத்தியவாறு அபிமன்யுவை பிடித்திழுத்தான் யுகன்.

“அண்ணா, என்ன பண்றீங்க? கயல் ஒன்னும் வேணும்னே…” பேசிக்கொண்டேச் சென்ற யுகனின் வார்த்தைகள் அபி விழிகளை அழுந்த மூடித் திறந்து அவனை பார்த்த பார்வையில் அப்படியே நின்றது. கயலுக்கு கூட அபி காயப்படுத்தியும் அவன் சொல்ல வந்ததை சொல்ல விடாது தடுத்த யுகனின் செயலில் கடுப்பாக, அபியின் முகத்தை பார்த்த ரேவதிக்குதான் மனதில் குழப்பம் சூடிக்கொண்டது.

‘கயல பார்க்கும் போது இவனோட பார்வை ரொம்ப வித்தியாசமா இருக்கு. என்னவா இருக்கும்?’ உள்ளுக்குள் நினைத்தவாறு அபியை சந்தேகமாகப் பார்த்துக்கொண்டிருந்தவர், எதுவும் பேசாது நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார்.

தன் அண்ணனின் பார்வையில் திணறிய யுகன், “அது இல்லை அண்ணா… கயல்மேல தப்பு கிடையாது. அதான்…” என்று தடுமாற, அதற்குமேல் அபி அங்கு நிற்கவில்லை. கயலை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அங்கிருந்து விறுவிறுவென வெளியேறியிருக்க, “கயல், அண்ணாவுக்காக நான் உன்கிட்ட சோரி கேக்குறேன்” என்ற யுகனின் வார்த்தைகள் அவள் காதில் விழவேயில்லை.

போகும் அபிமன்யுவையே பார்த்திருந்த கயலின் நினைவுகள் தன்னவனுடனான நிகழ்வுக்குச் சென்றது.

அன்று பார்த்திபன் பேசிய பிறகு அவனை சந்திக்கக் கூடாதென கயல் எடுத்த முடிவு அடுத்தநாளே காற்றில் கரைந்த கற்பூரம்தான்.

அடுத்தநாள், ஒருவாரமாக தேனுவிடம் கற்றுக்கொள்ளும் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டுவதும் தடுமாறி நிறுத்துவதுமாக தேனுவின் வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்த கயலுக்கு, “எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்க, இப்போ வரைக்கும் சைக்கிள் ஓட்ட தெரியல. எல்லாம் உன் அப்பா மீசைக்காரரை சொல்லணும், சின்னவயசுலயிருந்து பொண்ணோட கால்ல தரையில பட விடாம கார்லயே கூட்டிக்கிட்டு அலைஞ்சு ஒன்னுமே தெரியாம வளர்த்து வச்சிருக்காரு” என்ற தேனுவின் திட்டுக்கள்தான் ஞாபகத்திற்கு வந்தன.

அதை நினைத்து சிரித்துக்கொண்டே சென்றவள், சைக்கிள் டயர் பெரிய கல்லில் தடுக்கவும், சமநிலைபடுத்தத் தெரியாது அப்படியே பாதையோரமாக குப்புற விழுந்துவிட்டாள்.

“ஆங் அப்பா…” விழிகள் கலங்கி விழிநீர் வெளிவர, வலியில் தந்தையை அழைத்து உதட்டை பிதுக்கிய கயல், முழங்கையில் உண்டான  காயத்தைப் பார்த்து அழுதேவிட, அதேநேரம் “ஹ்ர்ம் ஹ்ர்ம்… கண்ணை என்ன பிடறியில வச்சிருக்கியா? என்ட், சேதாரம் ரொம்ப பலமோ?” என்று பின்னாலிருந்து ஒரு ஆண்குரல்.

அதில் திடுக்கிட்டுத் திரும்பியவள், ஒவ்வொரு பொறிஉருண்டையாக வாயில் போட்டு சப்பியவாறு அங்கிருந்த ஒரு மரத்தில் சாய்ந்து நின்றிருந்த வீரஜை பார்த்து விழி விரித்து பின் முகத்தை திருப்பிக்கொண்டாள். ‘கடவுளே! ஏன் என்னை சோதிக்குற?’ உள்ளுக்குள் புலம்பியவாறு அவனை கண்டும் காணாததுபோல் செல்லப் போக, அவன் அவளை விட்டால்தானே!

“ஓய் பாப்பா!” கத்திக்கொண்டே அவளை நோக்கி அவன் வர, அவனின் கத்தலில் கயலுக்குதான் தூக்கி வாரிப்போட்டது. சுற்றி முற்றி பதறியபடி பார்த்துக்கொண்டவள், உதட்டில் விரல் வைத்து கத்த வேண்டாமென சைகை செய்ய, அவனோ அதையெல்லாம் புரிந்துக்கொள்ளாது “என்னை கண்டுக்காம போகுற அளவுக்கு மேடமுக்கு அப்படி என்ன அவசரம்?” மீண்டும் கத்திக்கொண்டே அவளருகில் வந்து நின்றான்.

சுற்றியிருந்த சிலரின் பார்வைகள் வீரஜின் கத்தலிலேயே அவர்களின் புறம் திரும்ப, ‘அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சது நான் செத்தேன்’ உள்ளுக்குள் அரண்டவள், அடுத்தகணம் கொஞ்சமும் யோசிக்காது அவனை அங்கிருந்த பெரிய மரத்தின் பின்னால் இழுத்துச் சென்றாள்.

“ஏய் என்ன பண்ற? ஆமா… எதுக்கு என்னை கண்டுக்காம போன பாப்பா?” வீரஜ் சற்று கோபமாகக் கேட்க, “ஏங்க, ஏன் இப்படி பண்றீங்க? உங்க சத்தத்துல எல்லாரும் நம்மளதான் பார்க்குறாங்க” கயல் பதறியபடிச் சொல்ல, “சோ வாட்?” அலட்சியமாக கேட்டவனின் மனமோ, ‘ரொம்ப ஓவராதான் பண்றா’ எரிச்சலாக நினைத்துக்கொண்டது.

“என் அப்பா பார்த்தா அவ்வளவுதான். தயவு செஞ்சி இனிமே இப்படி பண்ணாதீங்க. அப்றம் உங்களுக்குதான் சேதாரம்” கோபமாக பேச வரவில்லையென்றாலும் வார்த்தைகளை அழுத்தமாகச் சொல்லிவிட்டு அந்த மென்மையான பாவை அங்கிருந்து நகர போக, அவள் கரத்தைப் பற்றி போக விடாது தடுத்தவன், “எனக்கு உன்கூட கொஞ்சம் பேசணும். இன்னைக்கு நைட் கோயிலுக்கு பக்கத்திலிருக்குற குளத்து பக்கம் பார்க்கலாம்” அதிகாரத் தோரணையில் சொன்னான்.

அதில் சாரசர் போல் விழிகளை அதிர்ச்சியில் விரித்து, “என்..என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க நீங்க? என்னால வர முடியாது. நீங்க அளவுக்கு மீறி…” பேசிக்கொண்டேச் சென்ற கயலின் வார்த்தைகள் அடுத்தகணம் அவளின் கரத்தில் சட்டென முத்தமிட்ட வீரஜின் செயலில் திகைத்துப்போய் நின்றன.

உடல் சிலிர்த்துப் போக, சிலை போல் இமைசிமிட்டாது அவனையே பார்த்துக்கொண்டு அவள் நிற்க, “நீ வர்ற அவ்வளவுதான்” அழுத்தமாகச் சொன்னவன், உள்ளுக்குள் விஷமமாக சிரித்தவாறு அங்கிருந்து மறைந்திருக்க, தன்னை சுதாகரித்துக்கொள்ளவே கயலுக்கு நேரம் தேவைப்பட்டது.

சில கணங்கள் கழித்து, ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்தியவள், “கூப்பிட்டா போயிருவேனா? நான் போக மாட்டேன். போகவே மாட்டேன்” வாய்விட்டு அந்தநொடி மறுத்து சொல்லிக்கொண்டாள்.

ஆனால், காலையில் எடுத்த சபதம் மாலையில் மாயமானது போல் அன்றிரவு வீட்டின் பிள்வளாகத்திலிருந்து தாவணி முந்தானையால் முகத்தை மறைத்துக்கொண்டு வீட்டிலிருந்து திருட்டுத்தனமாக வெளியேறினாள் அவள்.

அவளது வீட்டிலிருந்து ஆட்களைத் தாண்டி வெளியேறுவது ஒன்றும் அவ்வளவு இலகு அல்ல. எப்போதாவது தனிமை பிடிக்காது அம்மாவின் ஞாபகம் வரும் போது இரவில் தேனுவோடு சென்று நெற்கதிர்களுக்கு மத்தியில் இரவு நேரத்தில் அமர்ந்துக்கொள்வாள். அப்போது கிடைக்கும் நிலவின் வெளிச்சத்தோடு சேர்ந்த அமைதி கயலுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

ஆனால், இன்று வீட்டிலிருந்து வெளியேறியது அந்த சுகத்திற்காக அல்ல. தன்னவனை சந்திப்பதற்காக.

எப்படியோ வீட்டின் பின்வழியாக வெளியேறியவள், கோயிலுக்கு பக்கத்திலிருக்கும் வீரஜ் சொன்ன குளத்திற்கருகேச் செல்ல, அங்கோ யாருமில்லை. ‘என்ன, யாரையுமே காணோம். ஒருவேள, அவர் விளையாட்டா சொன்னதை நான்தான் உண்மைன்னு நினைச்சிக்கிட்டேனா? கடவுளே…’ சுற்றி முற்றி பதறியபடி வீரஜை தேடியவாறு அவள் உள்ளுக்குள் புலம்ப, “பாப்பா…” எங்கிருந்தோ கேட்டது அவனின் குரல்.

‘என்ன சவுண்டு மட்டும்தான் வருது. ஆனா, ஆளையே கணோம். ஒருவேள…’ பேயோ என திகைத்துப் போய் நின்றிருந்தவளுக்கு பயத்தில் முகம் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.

வந்த வழியே ஓடிவிடுவோமென அவள் ஒரு அடி வைக்கப் போக, “பயந்துட்டியா கயலு?” கேலியாக கேட்டவாறு அங்கிருந்த புதருக்கு பின்னாலிருந்து வெளியே வந்த வீரஜ், வியர்த்து விறுவிறுத்து போயிருந்த கயலின் முகத்தைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்க, பயம் மறைந்து கோபமாக அவனை நோக்கினாள் கயல்.

ஆனால், அவனோ அப்பட்டமாக அவளை மேலிருந்து கீழ் பார்த்தான். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவாறு அவனை விடாது முறைத்துக்கொண்டு நின்றிருந்த கயலின் தோற்றம் ஏனோ ஒரு ஆண்மகனாக வீரஜிற்கு மயக்கத்தைக் கொடுத்தது. ‘கண்ணா! இரண்டு லட்டு திண்ண ஆசையா? பணமும், பாவையும் எனக்கே எனக்கு’ குதூகலமாக நினைத்துக்கொண்டது அவனது உள்ளம்.

அவளை ரசித்தவாறு அவளருகே வந்தவன், “என்னை ரொம்ப தேடினியா பாப்பா?” வரவழைக்கப்பட்ட காதல் குரலில் கேட்க, “நான் ஒன்னும் உங்கள தேடி வரல சார். இப்படி வீட்டுக்கு தெரியாம நடுராத்திரியில வாரது ஒன்னும் எனக்கு புதுசும் கிடையாது. இது அடிக்கடி…” அவள் பேசிமுடிக்கவில்லை, “ஓஹோ! அப்போ… எனக்காக நீ வரல, அப்படிதானே?” கேலியாக கேட்ட வீரஜ், அவளை மேலும் நெருங்கி நின்றிருந்தான்.

“அது நான்… நான் தேனுவதான்…” அவனின் நெருக்கத்தில் பதறியவளுக்கு வார்த்தைகள் தந்தியடிக்க, அதுவே அவளின் மனதை அவனுக்கு அப்பட்டமாக எடுத்துரைக்கவும் இதழுக்குள் சிரித்துக்கொண்டான் அவன். அவள் வயது அவனுக்கு சாதகமாகிப் போக, இந்த பதினெட்டு வயதுப்பெண் அவனிடத்தில் பேதையாகித்தான் போனாள்.

அவளையே கூர்மையாக சிலநொடிகள் நோக்கியவன், “உட்கார்ந்து பேசலாமா?” என்றுகேட்டு குளத்திற்கருகிலிருக்கும் படிகளைக் காட்ட, கைகளை பிசைந்தபடி தலையசைத்தவளுக்கு ஏன் அவனின் வார்த்தைகளுக்கு மறுப்பு கூற மனம் இடம் கொடுக்குதில்லையென்று சுத்தமாக தெரியவில்லை.

அவன் அமர்ந்து அவளை அமரும்படி விழிகளால் சொல்ல, அவனின் விழியசவைவில் சொக்கிய கயல், அவன் அமர்ந்திருந்த நீளமான படிக்கு கீழேயுள்ள படியில் அமர்ந்துக்கொண்டாள்.

அதன்பிறகான நொடிகள் மௌனம்தான். வீரஜோ அமைதியாக அவள் பேச காத்திருக்கும் சாக்கில் அவளின் அங்க வளைவுகளை விழிகளாலேயே கொள்ளையடிக்க, அவளோ பெண்மைக்கே உரித்தான வெட்கத்தில் அவன்புறம் திரும்பாது குளத்துநீரை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள்.

“கயல்விழி” அவள் பெயரை வீரஜ் அழுத்தமாகச் சொல்லிப் பார்க்க, அதில் மென்மையாக இதழ் விரித்தவள், பின் அரண்ட முகத்தோடு “அப்பாவ தவிர நான் இதுவரைக்கும் எந்த ஆம்பிளைங்க கூடவும் தனிமையில இப்படி பேசினது கிடையாது. ரொம்ப பயம்.” பயந்த குரலில் சொல்லி, “முருகா! என்னை இந்த நிலைமையில யாரும் பார்த்துற கூடாது” என்று தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு வேண்டுதல் வைத்தாள்.

அவளுடைய வார்த்தைகளை கூர்மையாக கேட்டவன், ‘அப்போ இது நிஜமாவே கைப்படாத பால்தான் போல!’ என்று விஷமமாக நினைத்துக்கொண்டாலும் முட்டை  விழிகளை உருட்டி உருட்டி அவள் பேசும் விதத்தை ரசிக்கத்தான் செய்தான். கூடவே, அவளின் சிறுபிள்ளைத்தனமான செய்கைகளில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

வேண்டுமென்றே, “உன் அப்பா என்ன பெரிய கொம்பாட்டக்காரரோ? ஊருக்குள்ள புகுந்ததுலயிருந்து  ரொம்பதான் பண்றானுங்க” வீரஜ் சலித்துக்கொள்ள, அதில் உதட்டை பொய்க் கோபத்தோடு சுழித்தவள், “ஏங்க, என் அப்பா எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா? இந்த ஊருக்குள்ள மட்டுமில்ல வெளியூருல கூட அவருக்கு அம்புட்டு மரியாதை. ஏன், இந்த கோயில கூட எங்க அப்பாதான் கட்டினாராக்கும். இன்னும் நிறைய ஊருக்காக இலவசமா பண்ணிக் கொடுத்திருக்காரு. அத்தனை பேரும் அவரை பார்த்தாலே பம்முவாங்க” படபடவென பேசி நொடிந்துக்கொண்டாள்.

‘வாட்! இருக்குற விலைவாசில ஒரு கோயில கட்டிக்கொடுக்குற அளவுக்கு சொத்தா? இவ வேற இன்னும் நிறையன்னு சொல்றாளே… அப்போ எவ்வளவு சொத்து இருக்கணும்!’ உள்ளுக்குள் வேகவேகமாக ஏதேதோ நினைத்துக்கொண்ட வீரஜ், கிட்டதட்ட கயலை புதையலைப் பார்ப்பது போல் ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

அவளோ அவன் பார்வையின் அர்த்தம் புரியாத வெகுளியாக அவனின் நகரத்து தோற்றத்தை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்க, சட்டென எழுந்து அவளருகில் வந்தமர்ந்துக்கொண்டான் வீரஜ்.

கயலோ அதிர்ந்து விழிக்க, அவளை ஆழமாக நோக்கியவன், “ஆமா… காதல பத்தி என்ன நினைக்கிற பாப்பா?” ஹஸ்கி குரலில் கேட்க,, அவனுடைய குரலால் தன்னுடலில் உணர்ந்த சிலிர்ப்பை மறைத்து, வெட்கத்தில் பார்வையை தாழ்த்திக்கொண்டு, “எனக்..எனக்கு தெரி..யாது” திக்கித்திணறிச் சொன்னாள் கயல்.

“ஏன் டென்ஷன் ஆகுறடீ? ரிலாக்ஸ்! சும்மாதானே கேட்டேன்” பேசும் போக்கில் அவன் டீ என்று அழைத்து பேச, அதுவும் அந்த சிறுபெண்ணுக்கு ஏனோ உள்ளுக்குள் வேறு விதமான எண்ணங்களை தோற்றுவித்தது. அவளுடைய பார்வையிலேயே அவளுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்தவன், “பாப்பா…” கிறக்கமான குரலில் அழைத்தவாறு அவளிதழில் பார்வையை பதிக்க, “நான் போ..போறேன்” மனம் எச்சரிக்கவும் அங்கிருந்து  எழப்போனாள் அவள்.

ஆனால், அவள் மனதை கலைப்பது ஒன்றும் அவனுக்கு சிரமமாக இருக்கவில்லை. வேகமாக அவள் கரத்தைப் பற்றிய வீரஜ், “லவ் யூ” என்றுவிட்டு அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு அவள் மூச்சுக்காற்றுடன் தன் மூச்சுக்காற்றை  கலக்கும் தூரத்தில் அப்படியே இருக்க, சிலவிநாடிகளில் நடந்த சம்பவத்தில் கயலோ திகைத்துப் போய்விட்டாள்.

அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. பதட்டம் அதிகரிக்க, எப்போதும் போல் மூச்சுக்கு சிரமப்படுவது போல் அவளுக்கு தோன்றியது. ஒரு அந்நிய ஆண்மகனிடமிருந்து கிடைத்த முத்தம். இதுவரை அவள் உணர்ந்திராத உணர்வு!

முகமெல்லாம் வியர்த்துப்போய் இமை சிமிட்டாது அமர்ந்திருந்தவளை பார்த்த வீரஜிற்கு ஏனோ உணர்ச்சிகள் தாறுமாறாக பெறுக்கெடுத்தது. ஆனால், அவன் அவனுக்கு கொடுத்த முத்தத்திலோ அல்லது இப்போது உணரும் உணர்ச்சியிலோ வெறும் காமம் மட்டுமே. காதல் கொஞ்சமும் இல்லை.

உணர்ச்சிகளின் பிடியில் அவள் மறுக்காததையும் தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு அவளிதழை அவன் நெருங்க, சட்டென பின்னால் காலடிசத்தம். அதில் இருவருமே நடப்புக்கு வந்து திடுக்கிட்டு திரும்பினர்.

இருவரது விழிகளிலும் சுற்றிலும் யாரெனத் தேட, அங்கோ யாருமில்லை. வீரஜ் ‘அப்பாடா!’ என நிம்மதி பெருமூச்சுவிட்டுக்கொண்டு மீண்டும் விட்ட வேலையை தொடரவெனத் திரும்ப, ஆனால்  கயலோ அடித்து பிடித்து பயத்தில் எழுந்துக்கொண்டாள். அதற்குமேல் அவள் அங்கு நிற்கவில்லை. அவன் கூப்பிடுவதை கொஞ்சமும் காதில் வாங்காது வேகவேகமாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் அவள்.

அடுத்தநாள்,

“என்னடி சொல்ற? அந்த அண்ணே உனக்கு முத்தம் கொடுத்தாரா? இப்போ கொஞ்சநாளாதானே கயலு அவர நமக்கு தெரியும்” தன் தோழி சொன்ன விடயத்தை நம்ப முடியாது தேனு கத்த, அவள் வாயை வேகமாக பொத்தினாள் கயல்.

“ஏன்டீ கத்துற? நானே இதை மனசுல வைச்சு அடக்க முடியாம உன்கிட்ட சொல்லிட்டேன். நீ கத்தியே என்னை காட்டிக் கொடுத்துருவ போல!” அவள் படபடவென பொரிய, “எனக்கு ஏதோ சரியா படல கயலு. அவர பத்தி ஒன்னுமே தெரியாது. அதுவும், இந்த விஷயம் மட்டும் மீசைக்காரருக்கு தெரிஞ்சது அவங்கள கொன்னுடுவாங்க” தேனுவின் வார்த்தைகளில் கயலுக்கே குளிரெடுத்தது.

“நீயும் ஏன் தேனு இப்படி பேசுற? எனக்கு பயமா இருக்கு” கயல் குழந்தைபோல் உதட்டைப் பிதுக்க, அவள் தோழிக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்திருக்க வேண்டும். சிலநொடிகள் எதுவும் பேசாது கயலையே யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தவள், “உனக்கும் அவர பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் மெதுவாக.

ஏனோ அந்த கேள்வியில் கயலின் மனக்கண் முன் வீரஜின் விம்பம் தோன்ற, உள்ளுக்குள் எழுந்த புதிய காதல் உணர்வுடன் “அது தேனு… அப்படிதான் நினைக்கிறேன்” என்று கயல் சொல்லிமுடிக்கவில்லை, “கயல்…” என்ற பார்த்திபனின் அழைப்பு.

இரு பெண்களுமே திடுக்கிட்டு அறையிலிருந்து வெளியேறி ஹோலுக்குச் செல்ல, அங்கு பார்த்திபன் சொன்ன செய்தியில் தேனு அதிர்ந்துப்போய் கயலைப் பார்த்தாள் என்றால், கயலோ மொத்தமாக நொறுங்கிப்போய் நின்றிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!