ரகசியம் 06 💚

eiC7TMP42075-6b461cab

பார்த்திபனின் அழைப்பில் அறையிலிருந்து ஹோலுக்குச் சென்ற கயலும் தேனுவும் சோஃபாவில் அமர்ந்திருந்தவரை கேள்வியாக நோக்க, தன் கையிலிருந்த கோப்பை பார்த்துவிட்டு பக்கத்தில் நின்றிருந்தவனை பார்த்திபன் அடித்த அடியில் இரு பெண்களுக்கும் அடி வயிறு கலங்கிவிட்டது.

‘ஆத்தாடி ஆத்தா!’ உள்ளுக்குள் அரண்டவாறு தேனு அங்கிருந்து ஓடப் போக, “எங்க போற?” அவளை பார்க்காமலேயே கோப்பில் பார்வையை பதித்தவாறு கர்ஜிக்கும் குரலில் கேட்டார் அவர்.

அப்போதுதான் தேனுவை கவனித்த கயல் ‘துரோகி’ இதழுகளுக்கிடையில் முணுமுணுக்க, “ஹிஹிஹி… ஒன்னுஇல்லை ஐயா, சும்மா…” அப்பட்டமாக தேனு அசடுவழிய, “உன் ஃப்ரென்டோட வாழ்க்கையில ரொம்ப முக்கியமான தருணத்தை பத்தி பேசும் போது நீ இல்லாம எப்படி தேனு?” பொடி வைத்து சொன்னார் அவர்.

இரு பெண்களுக்கும் எதுவும் புரியவில்லை.

ஒரு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு கோப்பை ஓரமாக வைத்தவர், “கயல், நீ ரொம்ப சின்னப்பொண்ணு. உன் வாழ்க்கையில எது நல்லது கெட்டதுன்னு அப்பாவுக்கு தெரியும். அது உனக்கும் தெரியும். அப்பா பேச்சை எப்போவும் மீற மாட்ட. அதுமட்டுமில்ல, இந்த வயசு ரொம்பவும் ஆபத்தான வயசு. மனசு ரொம்ப அலைப்பாயும். அதான், குடும்ப கௌரவத்துக்காக என் பொண்ணோட நல்லதுக்காக நான் ஒன்னு முடிவு பண்ணியிருக்கேன்” ரகசியத்தோடு பேச்சை முடிக்க, கயலுக்கு பக்கென்றானது.

அவளால் சில விடயங்களை யூகிக்க முடிந்தது. படபடக்கும் இதயத்தோடு பார்த்திபனையே அவள் பார்த்திருக்க, “மனோகர் என் பிஸ்னஸ் பார்ட்னர் மாதிரி. அவன் பையனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சி போச்சாம். நம்ம சாதிதான். அதான், அடுத்த வாரம் உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்க. அப்பா எது பண்ணாலும் அதுல ஒரு நல்லது இருக்கும். வெளியில போகாம வீட்டுலயே இரு. புரியுதாம்மா?” என்றுவிட்டு அங்கிருந்து  நகர்ந்திருந்தார்.

தேனுவோ பக்கத்திலிருந்த தன் தோழியை பாவமாக பார்க்க, கயலின் நிலையை சொல்லவா வேண்டும்? விழிகள் கலங்க துடிக்கும் இதழ்களோடு அதே இடத்தில் உறைந்துப்போய் நின்றிருந்தாள்.

அதேநேரம் ராகவனோடு வீட்டுக்குள் நுழைந்த வீரஜ்ஜை கவனித்த வைகுண்டம், “கொஞ்சம் இருங்கப்பா” என்றவாறு கையிலிருந்த பத்திரிகையை மடித்து மேசையில் வைக்க, இரு இளைஞர்களும் மாடிக்கு  செல்வதற்காக படிகளில் ஏறச் சென்று அவரின் அழைப்பில் அப்படியே நின்றனர்.

வீரஜ்ஜை முறைத்துப் பார்த்தவர், அவனிடமிருந்து பார்வையைத் திருப்பி “உன் ஃப்ரென்டுக்குதான் இந்த ஊரைப்பத்தி தெரியல. உனக்குமா ராகவா? வீட்டை தேடி வந்து பார்த்திபன் ஐயா மிரட்டிட்டு போகுற அளவுக்கு வச்சிட்டான் அவன்” அத்தனைக் கோபத்தோடுச் சொல்ல, ராகவ்வோ சடாரென தன் தோழனைத்தான் ‘என்னடா பண்ணி தொலைச்ச?’ என்ற ரீதியில் ஒரு பார்வைப் பார்த்தான்.

ஆனால், வீரஜ்ஜோ எதுவும் பேசவில்லை. அவனுக்கு அவர் கூறுவது புரிந்துப் போனது.

“வீட்டுக்கு வந்த விருந்தாளிய இப்படி சொல்லக் கூடாதுதான். ஆனா, என்னால அவர பகைச்சிக்க முடியாது. இவனால என் மகன் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துற கூடாது. அதனால, சீக்கிரம் உன் ஃப்ரென்ட இங்கயிருந்து போக சொல்லு, இது அவனுக்காகவும் சேர்த்துதான் சொல்றேன்” அவர் கறாராகச் சொல்ல, வீரஜ்ஜோ அவரின் வார்த்தைகளை கண்டுக்கொள்ளாதது போல் மாடிப்படிகளில் ஏறிச் சென்றான்.

ராகவனோ வீரஜ்ஜையும் தன் தந்தையையும் மாறி மாறிப் புரியாதுப் பார்த்து “என்னாச்சுப்பா?” பதட்டமாகக் கேட்க, வீரஜ் சென்ற விதத்தில் சலிப்பாக இருபக்கமும் தலையாட்டிய வைகுண்டம், நடந்ததைச் சொல்லி முடிக்க, முதலில் அவர் சொன்னதில் திகைத்தவன், அடுத்தகணம் தன் நண்பனைத் தேடி வேகமாகச் சென்றான்.

அங்கு வீரஜ் அறைக்குள் கூட இல்லாது வெளியில் வைத்தே சிகரெட்டை ஊதித் தள்ளிக்கொண்டிருக்க, அதைப் பார்த்த ராகவனுக்கு மேலும் ஆத்திரம் பெருகியது. வேகமாக வந்து அவன் கையிலிருந்த சிகரெட்டை பிடுங்கி ஜன்னல் வழியே வெளியே தூக்கியெறிந்தவன், வீரஜ்ஜை இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்று கதவை சாத்திய அடுத்தநொடி மொத்தக் கோபத்தையும் கொட்டினான். அடிக்காத குறைதான்.

“என்னடா பண்ணி வச்சிருக்க பைத்தியக்காரா? ஏதோ விளையாட்டா பண்றன்னு நினைச்சேன். ஆனா, நேத்து ராத்திரி அந்த பொண்ணு கூட குளத்தங்கரையில உனக்கென்னடா வேலை? பார்த்திபன் ஐயா வீடு வந்து மிரட்டிட்டு போகுற அளவுக்கு வச்சிட்ட வீரா. ச்சே!” கோபமாக பொறிந்துக்கொண்டேச் சென்ற ராகவன், “அப்பா சாமி! தயவு செஞ்சி ஊரை விட்டு போயிரு. இதுக்குமேல என்னால வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்க முடியாது” என்றுவிட்டு வீரஜுடைய பையில் துணிகளை அடுக்க ஆரம்பித்தான்.

ஆனால், அடுத்தநொடி அவனால் கரத்தை அசைக்க முடியவில்லை. தன் கரத்தை அழுத்தமாக பற்றியிருந்த தன் தோழனை ராகவன் கோபப்புருவ முடிச்சுக்களோடு திரும்பி முறைத்துப் பார்க்க, “போறேன். அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்றான் வீரஜ்  குரலில் அழுத்தத்தோடு.

“இதுக்குமேல…” ராகவன் அப்போதும் மறுத்து எதையோ பேச வர, ஆனால் அதை கேட்க வீரஜ் அங்கு இருந்தால் தானே! அவன் பாட்டிற்கு அங்கிருந்து விறுவிறுவென வெளியேறியிருக்க, போகும் அவனை பார்த்திருந்தவனுக்கு ‘இவனை என்ன செய்தால் தகும்?’ என்றிருந்தது.

அன்று தன் தந்தை சொன்னதை நினைத்துப் பார்த்த கயலுக்கு இப்போது இதழில் விரக்திப் புன்னகை. அப்போது அவனை இழந்துவிடுவோமோ? என்று உணர்ந்த சமயம் உணர்ந்த வலியை விட கொமையான வலியை இப்போது தன்னவனை மொத்தமாக இழந்து அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் அவள்.

விழிகளை அழுந்த மூடித் திறந்தவள், உணர்ச்சிகளின் பிடியில் அதற்குமேல் அங்கு நிற்காது விறுவிறுவென அறைக்குள் ஓடியிருக்க, அவளையே பார்த்திருந்த ரேவதிக்கு ஏனென்று தெரியாது அவளின் கண்ணீரைப் பார்த்ததும் மனதில் சுள்ளென்ற வலி.

அதேநேரம், அபிமன்யுவோ அறையிலிருந்த மொத்தப் பொருட்களையும் தூக்கிப் போட்டு உடைத்துக்கொண்டிருந்தான். அத்தனை ஆத்திரம் அவனுக்குள். இந்த வலியை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவனால்.

டீபாயின் மேல் பழங்களோடு இருந்த கத்தியைப் பார்த்தவன், வேகமாக அதையெடுத்து கழுத்தில் வைத்து கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக்கொண்டான். ஆனால், தற்கொலை செய்துக்கொள்ளும் தைரியம்தான் அவனிடமில்லை.

இது ஒன்றும் முதல்தடவை அல்ல. பல தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்துவிட்டான். ஆனால், நோக்கத்தை செயல்படுத்தவிடாது தடுத்தது அவனவளின் முகம். இப்போதும் புடவையில் நெற்றிவகுட்டில் குங்குமத்தோடு நின்றிருந்த அந்த நிலாமுகம் அவன் மனக்கண்ணில் தோன்ற, கட்டுப்படுத்த முடியாத கோபத்தோடு கத்தியை சுவற்றில் விட்டெறிந்தான் அபிமன்யு.

அளவுகடந்த கோபம் அவனுக்கு அழுகையைதான் வரவழைத்தது. அப்படியே தரையில் முட்டிப் போட்டு அமர்ந்த அந்த ஆண்மகனின் விழிகளிலிருந்து விழிநீர் தரையைத் தொட, தரையிலேயே அழுதவாறு சுருண்டு படுத்துக்கொண்டான். தன்னறையில் கயலும் அதே நிலையில்தான்.

சொல்லப்போனால், கயல், அபி இருவருக்குமே ஒரே மனநிலைதான். மனதில் கடந்த காலத்தை வைத்து மருகுகின்றவர்களுக்கு அதை வெளிப்படையாகச் சொல்லி அழுது ஆறுதல் தேட கூட துணையில்லை. ஆனால், இருவரும் உணராத ஒன்று இருவருக்குமிடையேயான மறைக்கப்பட்ட பந்தம். அது இருவரில் ஒருவருக்கு தெரிய வரும் போது இருக்கும் இருவரின் மனநிலையையும் அதன் விளைவுகளையும் அந்த கடவுளே அறிவார்.

இவ்வாறு சிலநாட்கள் கடக்க, இந்த இடைப்பட்ட நாட்களில் வியாபாரத்தை கவனிக்கவென நிறுவனத்திலேயே அடைந்துக்கிடந்த அபிமன்யு, வீட்டு பக்கம் வருவதே அரிதாகிப் போனது. கயலும் கிட்டதட்ட அவனை மறந்தே போயிருந்தாலும், அவன் அருகாமையில் அவள் உணர்ந்த அந்த உணர்வு இப்போது  அடிக்கடி அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது. அபிமன்யு பற்றி குழப்பமும் வீரஜின் நினைவுமாக அவளின் நாட்கள் கடந்தன.

ஆனால், மீண்டும் இருவரும் சந்திக்கும் நாளும் வந்தது. அன்றிரவு,

தனதறை ஜன்னல் வழியே தோட்டத்தில் புதிதாக வைக்கப்பட்ட ஊஞ்சலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் கயல்விழி.  அவளுடைய சிந்தனைகள் குழப்பத்தின் மத்தியில் கிடந்தன.

இப்போது அவள் நினைவுகளை ஆக்கிரமித்திருந்தது அவளுடைய தந்தை பார்த்திபனின் நினைவுகள்தான். ஜாதி, மதம் என சிலவற்றிற்கு அவர் முன்னுரிமை கொடுத்தாலும் அவள் மேல் அவர் வைத்த பாசம் அளவு கடந்தது. அதை நன்கு அறிந்தவள் அவள்.

அன்று அவள் வீரஜிற்காக அவரை காயப்படுத்திய போது கூட தன் மகளின் வசதிக்காக செய்ய வேண்டிய கடமையில் தவறவில்லை பார்த்திபன். அன்று தந்தையை காயப்படுத்தி அவனுக்காக மொத்தமாக அவள் வந்த அடுத்த ஒவ்வொரு நாட்களும் கயல் வருந்தாத நாளில்லை. கூடவே, அதற்கு தண்டனையாக அவள் பார்த்திபனின் இறுதி நாட்களில் அவர் முகத்தை கூட பார்க்க முடியாது அனுபவித்த வலிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அதுவும், இன்று அவள் பார்வையிலிருக்கும் ஊஞ்சல் அதே ஊஞ்சல் போன்ற அமைப்பு. அவளுக்காக பார்த்திபன் பரிசளித்தது. விழிகள் கலங்கியிருந்தாலும் அதில் ஒரு ஆர்வம்.

வேகமாக அறையிலிருந்து வெளியேறி தோட்டத்திற்குச் சென்றவள், ஒவ்வொரு அடியாக வைத்து அந்த ஊஞ்சலை நெருங்கினாள். அவளுடைய விரல்கள் அந்த ஊஞ்சலின் இரும்புக்கைப்பிடியை வருட, அவளுடைய நினைவுகளோ அன்று தன் தந்தை பரிசளித்த ஊஞ்சலில் அவள் ஆர்வமாக அமர்ந்ததையும், அது பொறுக்க முடியாது ஏன்ஜல் என்ற பெயரிலிருந்த அந்த ராட்சசி தள்ளி விட்டதையும், அதை தன்னவன் கண்டும் காணாதது போல் சென்றதையும் ஞாபகப்படுத்தின.

விழிநீரை வெளிவர விடாது விழிகளை அழுந்த மூடித் திறந்தவள், அந்த ஊஞ்சலில் அமர்ந்து விளையாட ஆரம்பித்தாள். கால்களை மடக்கி, நீட்டி என மெல்ல வேகத்தை கூட்டி கயல் விளையாட அவளுடைய பார்வை நட்சத்திரங்கள் நிறைந்திருந்த வானில் பதிந்தன. இதயத்தில் சுள்ளென்ற வலி. இப்போது அவளது நினைவுகள் வீரஜ்ஜை தழுவின.

ஒரு காலை தரையில் ஊன்றி ஊஞ்சலின் ஆட்டத்தை நிறுத்தியவள், வலியுடன் கூடிய ஒரு பெருமூச்சை விட்டு வேகமாக எழுந்து மீண்டும் அறைக்கே செல்லத் திரும்ப, அவளெதிரே அபிமன்யு.

அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வந்திருப்பான் போலும்! பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு இறுகிய முகமாக அவன் நின்றிருந்த விதத்திலும் அவனின் கழுகுப் பார்வையிலும் அவளுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது.

தலை குனிந்து கைகளை பதட்டத்தில் பிசைந்தவாறு, “அது… நான் தெரியாம… மன்னிச்சிருங்க ஐயா” வார்த்தைகளைக் கோர்த்து தட்டுத்தடுமாறி பேசியவள், அவனைத் தாண்டி வேகமாகச் செல்லப் போனாள். ஆனால், அடுத்தகணம் “போய் உட்காரு” என்ற அபியின் அழுத்தமான கட்டளையில் முதலில் புரியாது விழித்த கயல், பின் அவனின் விழிகளில் தெரிந்த அழுத்தத்தில் விழி விரித்தாள்.

என்ன செய்வதென தெரியாது அவள் அப்படியே அசையாது நிற்க, “உன்னை உட்கார சொன்னதா நியாபகம்” மீண்டும் அவன் வார்த்தைகளில் கொடுத்த அதிகாரத்தில் அவளுடைய கால்கள் தானாக நகர, ஊஞ்சலில் பயத்தோடே அமர்ந்துக்கொண்டாள்.

அணிந்திருந்த சட்டை கையை முழங்கை வரை ஏற்றிவிட்டவாறு ஊஞ்சலை நெருங்கிய அபி, பின்னாலிருந்து ஊஞ்சலை ஆட்டிவிட ஆரம்பிக்க, அவளுக்கோ ‘என்னடா நடக்குது இங்க?’ என்றுதான் நினைக்கத் தோன்றியது.

எச்சிலை விழுங்கிக்கொண்டு அவள் எதுவும் செய்யாது ஊஞ்சல் போன போக்கிற்கு ஆட, அபியின் வேகமோ அதிகரித்துக்கொண்டே சென்றது. ‘கடவுளே! ஏன் இவர் இப்படி பண்றாரு? எனக்கு பயமா இருக்கு. காப்பாத்து பிள்ளையாரப்பா!’ ஒரு கட்டத்தின்மேல் அவனுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது உள்ளுக்குள் வேண்டியவாறு  விழிகளை அழுந்த மூடி தலையை குனிந்து கயல் பயத்தில் விம்ம ஆரம்பித்துவிட, அதை அபியும் உணரத்தான் செய்தான்.

அவனுடைய முகம் சிவந்து இறுகிப்போய் இருக்க, கைகளை இழுத்துக்கொண்டவன், ஊஞ்சல் தானாக நிற்கும் வரை மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்தவாறு நிற்க, ஊஞ்சலின் வேகம் குறைவதை உணர்ந்து பட்டென்று விழிகளை திறந்த கயல், அது நிற்கும் முன்னே கால்களை ஊன்றி அதிலிருந்து தாவி குதித்தாள்.

‘இதற்குமேல் இங்கு இருக்காதே!’ அவள் மூளை எச்சரிக்க, அவனை திரும்பியும் பார்க்காது அவள் ஓடப் போக, அவன் விட்டால்தானே!

அவளின் கரத்தை அவன் பிடித்திருந்த இரும்புப் பிடியால் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. திகைத்த விழிகளோடு கயல் அவனை திரும்பிப் பார்க்கப் போக, அதற்குள் அவளை இழுத்து தன் முகத்துக்கு நேராக கொண்டு வந்திருந்த அபி, அவளின் தாடையை இறுகப்பிடித்து கடித்துக் குதறாத குறையாக அவளை வெறித்தனமாக நோக்க, கயலுக்கு மயக்கமே வந்துவிட்டது.

பேசுவதற்கு நா எழவில்லை. அவனை தள்ளிவிட கைகளை அசைக்க முடியவில்லை. அவளுடைய விழிகள் அவன் விழிளையே பயத்துடன் நோக்கின. ஆனால், அந்த மான்விழிகளைப் பார்த்தும் அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

“கயல்விழி வீரஜ்” அத்தனை அழுத்தத்தோடு அவள் பெயரை உச்சரித்தவன், “என் பார்வையிலிருந்து ஒழிய நினைக்காத!” மிரட்டும் தோரணையில் சொல்ல, அவன் பெயரை சொன்ன விதத்தில் அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

‘இவனுக்கு எப்படி?’ அவள் மூளை திகைப்போடு யோசிக்க, அவளை சிந்திக்கவிடாது அபிமன்யுவோ அவளை ஆழமாக நோக்கியவன், தாடையில் மேலும் இறுக்கத்தை அதிகரித்தவாறு “என் முன்னாடி நீ மறுபடியும் வந்திருக்க கூடாது கயல். தப்பு பண்ணிட்ட” இறுகிய குரலில் சொன்னான்.

அடுத்தகணம் மொத்த பலத்தையும் சேர்த்து அவன் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டவள், அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடியிருக்க, போகும் அவளையே பார்த்திருந்த அபியின் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன.

இங்கு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியவளுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று சுத்தமாக புரியவில்லை. ‘நான் என்ன பாவம் பண்ணேன்? அவருக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? ஒன்னுமே புரியல்லையே…’ மூச்சு வாங்கியவாறு தனக்குத்தானே கேட்டுக்கொண்டவளுக்கு இப்போது ‘கயல்விழி வீரஜ்’ என்ற அபிமன்யுவின் அழைப்புதான் மனதில்.

அவளுடைய நினைவுகளோ அவனுடன் தன் வாழ்வை தொடங்கிய நாட்களுக்குச் சென்றது.

பார்த்திபன் நிச்சயதார்த்தம் பற்றி சொன்னதிலிருந்து கயலால் நிலைக்கொள்ளவே முடியவில்லை. வீரஜிடம் உண்டான மயக்கத்திலிருந்து விடுபட முடியாது திணறிக்கொண்டு அவளிருக்க, வீட்டிலேயே இரண்டு நாட்களாக அடைந்துக்கிடந்தவளை வழுக்கட்டாயமாக சந்தைக்கு இழுத்துச் சென்றாள் தேனு.

அங்கு வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த பூக்கடையில் மல்லிகைச் சரங்களை தீவிரமாக ஆராய்ச்சி செய்தவாறு தேனு நின்றிருந்தாள் என்றால், கயலோ முகத்தில் மருந்துக்கும் சிரிப்பின்றி தரையை வெறித்தவாறு நின்றிருந்தாள்.

சரியாக, அவள் காதோரமாக ஒரு சூடான மூச்சுக்காற்று. அவள் கரத்தை உரசிய கரத்தின் ஸ்பரிசத்தில் அது யாரென்று அவளுக்கு நன்றாக புரிந்துப் போனது.

விழி தெறித்துவிடுமளவிற்கு விழிகளை விரித்த கயல், பக்கவாட்டாகத் திரும்பி பின்னால் நோக்கும் முன் பூக்களை பார்ப்பது போல் அவளை மேலும் நெருங்கிய வீரஜ், “கோயிலுக்கு பின்னாடி வா! நீ வர்ற அவ்வளவுதான்” ஹஸ்கி குரலில் சொல்லிவிட்டு மறைந்திருந்தான்.

கயலுக்கு இதயம் படபடவென அடித்துக்கொண்டது. தேனுவை பார்த்தவள், அவளின் கவனம் இங்கு இல்லை என்பதை உணர்ந்த அடுத்தநொடி வேகவேகமாக வீரஜ் சொன்ன இடத்திற்குச் சென்றிருக்க, அங்கு சிகரெட்டை ஊதித்தள்ளியவாறு அவளுக்காக காத்திருந்தான் அவன்.

அதைப் பார்த்ததுமே “அய்யோ! இங்கயிருந்து சிகரெட் பிடிக்குறது ரொம்ப தப்பு” கயல் பதற, ‘இப்போ இது ரொம்ப முக்கியம்’ உள்ளுக்குள் கடுப்பாக நினைத்துக்கொண்டு சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதித்தவன், “சொல்லு பாப்பா, என்னை காதலிக்கிறியா? காதலிக்கிற அப்படிதானே!” வரவழைக்கப்பட்ட காதல் குரலில் கேட்டான்.

முதலில் அதிர்ந்தவள், பின் கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கியவாறு “அது நான்…” என்ன சொல்வதெனத் தெரியாது தடுமாற, “நான் நாளைக்கு ஊருக்கு போறேன்” பட்டென்றுச் சொன்னான் வீரஜ்.

அவனை பொருத்தவரைக்கும் கயல் அவனுக்கு கிடைத்த தங்கப் புதையல். பணமும், அழகுப் பதுமையும் ஒருசேர கிடைக்கப் போகின்றதென கனவில் மிதந்தவனுக்கு அது கனவாகே போய்விடுமோ என்ற பதட்டம் உண்டாக, அவளின் வெகுளி குணத்தை வைத்து கயலை தன்வசமாக்கிக்கொள்ள முயன்றான்.

ஆனால், அவனை நேசிக்கும் அந்த சிறுபெண்ணுக்கு அவன் செல்வதாக சொன்னதுமே இதயம் வலிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வயதிற்கே உரித்தான சில ஹார்மோன்களின் விளையாட்டு அவள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தன.