ரகசியம் 09 💚

eiE167W45412-672e8ce1

காலையில் திருமணம் நடந்ததோடு சரி அதன்பிறகு கயல் தன் கணவனை பார்க்கவேயில்லை. காலையில் திருமணம் நடந்ததற்கான திருமணக்கலை கொஞ்சமும் வீட்டில் இல்லை. சாப்பிட மட்டுமே கயலை அழைத்தவர்களுக்கு மற்றநேரங்களில் வீட்டிற்கு வந்த புது மருமகள் அவளென்று கொஞ்சமும் எண்ணமில்லை.

இப்போது கூட இரவு பதினொரு மணியாகிவிட்டது. வீரஜ் வீட்டிற்கு வரவேயில்லை. ஏனோ காலையிலிருந்து ஹோல் சோஃபாவிற்கும் அவளுக்கென கொடுத்த அறைக்கும் மாறி மாறி அலைந்துக்கொண்டிருந்த கயலுக்கும் அப்போதுதான் தயக்கம் விடுத்து பேச தோன்றியது போலும்.

தன் கணவனை பற்றி அவள் கேட்கவுமே, “அதெல்லாம் அவன் வருவான். நீ போய் அவனோட அறையில இரு” ருபிதா அலட்சியமாகச் சொன்னாலும் ஏதோ தன்னவனின் அறையை காட்டிவிட்டார்கள் என்ற சந்தோஷத்தோடு அறைக்குள் நுழைந்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

சுவர் முழுக்க சினிமா கதாநாயகிகளின் புகைப்படங்கள். சிலது அரைகுறை ஆடைகளுடன். “பிள்ளையாரப்பா!” அதிர்ந்து கத்தியவளுக்கு, சுவற்றிலிருந்த மொத்தப் படங்களையும் பிய்த்தெடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு கட்டிலில் அமர்ந்த பிறகுதான் ‘அப்பாடா!’ என்றிருந்தது.

ஆனாலும், இன்னும் கணவனை காணாத ஏக்கம் அவளுக்குள். ஏதாவது முக்கியமான வேலையாக இருக்கக் கூடுமென தனக்குத்தானே அவள் சமாதானம் செய்துக்கொண்டாலும் புதிதாக திருமணமான ஒருவன் நடந்துக்கொள்ளும் முறையா இது?

நேரம் செல்வது கூட தெரியாது அவள் யோசனையில் மூழ்கியிருக்க, சரியாக கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தது ஒரு உருவம். அந்த அரவத்தில் பதறியடித்துக்கொண்டு கயல் எழுந்து நிற்க, உள்ளே வந்து கதவை தாளிட்டு கதவில் சாய்ந்து நின்றிருந்தான் வீரஜ்.

கயலுக்கோ இப்போதுதான் நிம்மதியுடன் கூடிய சந்தோஷம். கண்ணை கட்டி அவளை விட்ட காட்டில் அவளுக்கு தெரிந்த ஒருவன் அவளவன்தான். இப்போது அவனும் வந்துவிட, அவனை நோக்கிச் செல்லப்போனவளின் உற்சாகம் மொத்தமும், விழிகளைச் சுருக்கி அவளை சிலநொடிகள் பார்த்துவிட்டு அவன் கேட்ட கேள்வியில் வடிந்துப் போனது.

“யார் நீ?”

கயலுக்கு ஒன்றுமே புரியவில்லை. காலையில் திருமணமானவன் சொந்த மனைவியை யாரென்று கேட்கிறான். அதே இடத்தில் அசையாது அதிர்ந்து நின்றிருந்த கயலுக்கு, கட்டிலை நோக்கி நடந்து வந்து அப்படியே மல்லாக்காக படுத்த வீரஜ்ஜின் நடையிலிருந்த தள்ளாட்டத்திலும் அவன் நெருங்கியதும் உணர்ந்த மதுநெடியிலுமே எல்லாமே புரிந்துப்போனது.

‘இவர் குடிப்பாரா?’ அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி அவளுக்கு. அவள் வீட்டில் இது போன்று அவள் பார்த்ததுமில்லை. அவள் பழகிய ஆட்கள் அப்படியுமில்லை. ஆனால் அவளவன்?

ஏனோ கயலுக்கு இப்போதுதான் மனம் யோசனைக்குத் தாவியது. திருமணமாகி ஒருநாள் கூட முழுதாக முடியவில்லை. அதற்குள் அவளைப் பற்றிய கொஞ்சமும் சிந்தனையில்லாது விட்டுச்சென்ற கணவன். தன்னை நாடி அவன் இனிமையாக கழிக்க வேண்டிய இரவில் மதுவை நாடி கழித்துவிட்டு வந்திருக்கிறான்.

‘தவறு செய்துவிட்டேனோ?’ திருமணமான அந்தநாளே நினைத்துவிட்டாள். ஆனால், மேலும் யோசிக்க அவள் மூளை இடம் கொடுக்கவில்லை. இரண்டு நாட்கள் வீட்டை பற்றியும் திருமணத்தை பற்றியும் நினைத்து தூங்காது நாட்களை கழித்ததில் இப்போது விழிகள் சொக்க, ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு மதுவாடை பிடிக்காது நிலத்தில் படுத்துக்கொண்டாள் கயல்.

அந்த பந்தத்திற்கான சிறப்பை கயல் மட்டுமே உணர்ந்தாளே தவிர அவளவன் கொஞ்சமும் உணரவில்லை. அன்று திருமணமென்ற பெயரில் நடந்தததை நினைத்துப் பார்த்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. விரலிலிருந்த மோதிரத்திற்கு அழுகையுடன் முத்தமிட்டவளுக்கு இப்போது அபிமன்யுவின் வார்த்தைகளில் மனம் முழுக்க குழப்பம்.

அடுத்தநாள் காலை,

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்

உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்

உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்

உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்

அலந்தேன் அடி யேன அதி கைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே.

அந்த இனிமையான குரலில் அறையிலிருந்த எல்லாருமே வெளியில் வந்தனர். அங்கு பூஜையறையில் விழிகளை மூடி கைக்கூப்பி அமர்ந்திருந்தாள் கயல்விழி. சொல்லப்போனால், தான் இழந்ததற்கு கடவுளையே காரணமாக்கி கடவுளை வணங்காதவள், பல வருடங்கள் கழித்து இன்றுதான் பூஜையறைக்குள் நுழைந்திருக்கின்றாள்.

எல்லாருமே அவள் குரலில் மெய்மறந்திருக்க, இறுகிய முகமாக மாடியிலிருந்து அவளையே பார்த்திருந்தான் அபி. அவளும் அவனது பார்வை வீச்சை உணர்ந்தாள் போலும்! விழிகளை மெல்ல திறந்து மனம் சொன்ன அபி இருக்கும் திசை பக்கம் அவள் பார்வைச் செல்ல, அவள் பார்வை அவனைத் தழுவியதுமே விரக்தியாக சிரித்துக்கொண்டான் அவன்.

அந்த சிரிப்பில் கயலுக்கு உள்ளுக்குள் இனம்புரியா வலி. புருவத்தை குழப்பத்தில் யோசனையோடு நெறித்துக்கொண்டாள். ஆனால், அவளுடைய சில சந்தேகங்களுக்கு சத்யா அம்மாளிடமிருந்து அந்தநாளே விடை கிடைத்தன.

அன்று தன் வேலைகளை முடித்துவிட்டு பெரியவருக்கான வேலைகளை கயல் செய்துக்கொண்டிருக்க, மேசையில் அவருக்கான உணவுகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளையே சிறிதுநேரம் கவனித்துக்கொண்டிருந்த சத்யா அம்மாள், “ரொம்ப அழகா பாடுற. சின்னவயசுல கத்துக்கிட்டியோ?” ஆர்வத்தோடுக் கேட்டார்.

கயலுக்கு ஆச்சரியம். எப்போதும் கயலின் தனிப்பட்ட விடயங்கள் பற்றி அவர் கேட்டதே கிடையாது. இன்றுதான் முதல்தடவை. “ஆங்..ஆமா சத்யாம்மா, பாட்டு மட்டுமில்ல பரதநாட்டியம் கூட அப்போ கத்துக்கிட்டேன். உங்களுக்கு ஒன்னு தெரியுமா, எங்க கோயில் திருவிழால கூட நான் ஆடியிருக்கேன். அப்பாவுக்கும் ரொம்ப பிடிக்கும்” உற்சாகமாக அவள் சொல்லிக்கொண்டே போக,

அவளையே பார்த்திருந்தவர் சிறு சிரிப்போடு, “உனக்கு கயல்விழின்னு பெயர் ரொம்ப பொருத்தமா இருக்கு” என்றார் சட்டென்று. அந்த வார்த்தைகளில் விழி விரித்தவளுக்கு ‘ஆளுக்கு பொருத்தமான பெயரு’ என்ற வீரஜின் வார்த்தைகள்தான் ஞாபகத்திற்கு வந்தன. அதோடு அவளுடைய உற்சாகம் மொத்தமும் வடிந்துவிட்டது.

அப்போதுதான் அவளுடைய விழிகளுக்குள் சிக்கியது பெரியவர் எப்போதும் அவருடனே வைத்திருக்கும் புகைப்படம். தலகாணிக்கு பக்கத்திலிருந்த படத்தை கையிலெடுத்தவள், ஒருநிமிடம் அதிலிருந்த அபிமன்யுவின் சிரிப்பில் உறைந்தே போயிட்டாள்.

அபிமன்யு சத்யா அம்மாளையும் யுகன் அவர்களின் அப்பா தேவராஜையும் அணைத்தது போன்ற புகைப்படம் அது. அதில் பெரியவரின் தோளில் சாய்ந்த வண்ணம் அணைத்திருந்த அபியின் முகத்தில் பளிச்சென்ற புன்னகை. குறும்பு விழிகள். புன்னகை தாவிய முகம். ஆனால், இப்போது?

இந்த மலர்ந்த முகத்தையும், இப்போது அவளெதிரே இருக்கும் அபிமன்யுவின் இறுகிய முகத்தையும் ஒருகணம் ஒப்பிட்டுப் பார்த்தாள் கயல். எத்தனை பெரிய வித்தியாசம்?

அவள் சிந்தனையில் உழன்றுக்கொண்டிருக்க, அவள் கையிலிருந்த படத்தை அவளிடமிருந்து எடுத்தவாறு, “என்னம்மா யோசிக்கிற? நாலு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த ஃபோட்டோ இது. அபி ரொம்ப அழகா சிரிக்குறான்ல?” என்று கேட்டார் பெரியவர்.

சற்று அதிர்ச்சியுடனே ஆமென கயல் தலையசைக்க, அந்த புகைப்படத்தை சிரிப்புடன் பார்த்திருந்தவரின் விழிகளிலிருந்து விழிநீர் கசிந்தது. அவருடைய நினைவுகள் இந்த புகைப்படமெடுத்த நாளுக்குச் சென்றது.

ஏங்க சீக்கிரம் வாங்க, அந்த தம்பி எம்புட்டு நேரம்தான் இப்படியே நின்னுட்டு இருப்பாரு? அவர் முகத்தை பார்க்கவே பாவமா இருக்கு” மொத்த குடும்பம் செய்யும் அலுச்சாட்டியத்தில் சோர்ந்துப்போய் நின்றிருந்த புகைப்படக்கலைஞரைப் பார்த்து சத்யா சொல்ல, மீசையை முறுக்கிவிட்டு அணிந்திருந்த கோட்டை சரிசெய்தவாறு வேகநடையுடன் வந்தார் தேவராஜ்.

வயதானாலும் குறையாத தன்னவரின் கம்பீரத்தில் உள்ளுக்குள் கணவனை ரசித்தவர், “ரசிச்சது போதும், பசங்கள கூப்பிடு!” என்ற தேவராஜின் குரலில் சுதாகரித்து வெட்கப்பட்டவாறு, “அபி… யுகா…” என்று குரல் கொடுக்க, எப்போதுபோல் பூனை எலியுமாக சண்டைப் போட்டுக்கொண்டே மாடியிலிருந்து இறங்கினர் அந்த இளைஞர்கள்.

இந்த வோட்ச்ச நான்தான்டா போட்டுப்பேன். இது என்னோடது. ஹவ் டேர் யூ டச் மை திங்க்ஸ்?” அபி கத்த, “ஒருநாள் நான் போட்டுக்கிட்டா ஒன்னும் நீ குறைஞ்சி போயிர மாட்” பதிலுக்கு சிறுபிள்ளைப்போல் சண்டையிட்டான் யுகன்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த தேவராஜோ வாயைப் பொத்திச் சிரிக்க, இடுப்பில் கைக்குற்றி மகன்கள் இருவரையும் மாறி மாறி முறைத்த சத்யாவுக்கு அவர்களை என்ன செய்தால் தகும் என்றிருந்தது.

இருவரின் காதுமடல்களையும் பிடித்து திருகியவர், “கொஞ்சம் கூட வயசு தராதரமே இல்லாம சண்டை போட வேண்டியது. மொதல்ல ஃபோட்டோ எடுத்துட்டு சண்டை போட்டுக்கோங்கடா” அதட்டி உருட்டி மிரட்டி புகைப்படத்தில் நிற்க வைத்தார்.

அதிலும் அபி அம்மாவை சட்டென்று அணைத்துக்கொள்ள, அதையெட்டிப் பார்த்த யுகன் சட்டென்று அப்பாவை அணைத்துக்கொண்டு பளிச்சென்று புன்னகைத்தான். அப்போது சரியாக எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.

அப்போது நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தவருக்கு அழுகை தொண்டையை எடுத்தது. கயலோ அவரையே கண்ணிமைக்காது பார்த்திருந்தாள்.

“அபி ரொம்ப சுட்டிம்மா, ஒரு இடத்துல இருக்க மாட்டான். எப்போவும் துறுதுறுன்னு ஓடிக்கிட்டே இருப்பான். நான் அவன பெறாத தாயா இருந்தாலும், அவன் எப்போவும் என்னோட குழந்தைதான்” சத்யா சொல்ல, கயலுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி!

“சத்யாம்மா” அதிர்ந்து அழைத்தவள், “என்..என்ன சொல்றீங்க? புரியல” திக்கித்திணறிக் கேட்க, வழியும் கண்ணீரை துடைக்கக் கூட மனமில்லாது, “ஆமாம்மா, அபி ஆசிரமத்தை சேர்ந்த குழந்தை. ஆசிரமத்துலயிருந்து அவன நான் தத்தெடுக்கும் போது அபிக்கு வெறும் ஆறுமாசம்தான். உனக்கொன்னு தெரியுமா, அபிக்கு ஒரு ட்வின் ப்ரதரும் இருந்தான். ஆனா, நாங்க அபிய மட்டும்தான் தத்தெடுத்தோம். இரண்டு பேருமே ரொம்ப குட்டியா இருந்தாங்க. அவன பெத்தவளுக்கு நிஜமாவே மனசுல ஈரம் இல்லை. இப்படிபட்ட பையனை பொறந்ததுமே தூக்கியெறிஞ்சிருக்காளே, ஆனா, அபி” என்று நிறுத்தி, “போயும் போயும் அவன் வேணாம்னு விட்டுப்போன பெத்த அம்மாவ தேடிப்போய்…” அதற்குமேல் பேச முடியாது வார்த்தைகளை நிறுத்திக்கொண்டார்.

கயலோ ஆடிப் போய்விட்டாள். ‘என்ன சொல்றாங்க இவங்க? கடவுளே!’ எச்சிலை விழுங்கிக்கொண்டவள், “நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்காதீங்க, எந்த ஆசிரமம்னு சொல்ல முடியுமா?” சற்று பயத்தோடேக் கேட்டாள். அதில் புருவத்தைச் சுருக்கி சற்றுநேரம் யோசித்த சத்யா அம்மாள், “அது ஆங்… ராமர் அனாதை இல்லம்” என்க, அவ்வளவுதான், கயலுக்கு தலையே சுற்றிவிட்டது.

அவளுக்கோ நான்கு வருடங்களுக்கு முன் ஒளிந்திருந்து தான் கேட்ட சிலபேரின் உரையாடல்கள் ஞாபகத்திற்கு வந்தன. ‘ஒருவேள, இருக்குமோ? அதனாலதான்’ உள்ளுக்குள் மிரட்சியாக நினைத்தவளுக்கு தலை வலிக்க, “அம்மா, ரொம்ப தலை வலிக்குது. நீங்க சாப்பிடுங்க, நான் இதோ வர்றேன்” என்றுவிட்டு வேகமாக தனதறைக்கு ஓடினாள் கயல்.

போகும் வழியில் எதிரே வந்தவனின் மீது மோதியவள், “அய்யோ! என்னை மன்னிச்சிருங்க” படபடவென சொல்லிவிட்டு தான் மோதியவனின் முகத்தைக் கூட நிமிர்ந்துப் பார்க்காது அவள் வேகமாகச் சென்றிருக்க, “கயல்…” என்ற யுகனின் அழைப்பு கூட அவள் காதுகளில் விழவில்லை.

போகும் அவளையே புரியாதுப் பார்த்தவனுக்கும் சரியாக அந்தநேரம் ஒரு அழைப்பு வர, அதைப் பார்த்தவனுக்கு ‘கயலு நம்மள நெருங்க போல சரியா கால் பண்றாளே, என்ன ஒரு வேவ்லென்த்து?’ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

அழைப்பைத் துண்டித்தவன், பெருமூச்சுவிட்டு நிமிர, எதிரே அபியும் கயல் ஓடிய திசையைதான் யோசனையோடு பார்த்திருந்தான். யுகனின் பார்வை தன் மீது படிந்ததை உணர்ந்தவன் போல் அவனைப் பார்த்த அபிமன்யு, அறைக்குள் சென்று அடைந்துக்கொள்ள, யுகனுக்கு இப்போது மனதில் ஒரு ஏக்கம்.

இங்கு, கதவில் சாய்ந்து நின்றிருந்தவளுக்கு மனதில் பல யோசனை. மனதின் படபடப்பு அதிகரிக்க, அவளுக்கு மூச்சுத்திணற ஆரம்பித்துவிட்டது. வேகமாக இன்ஹலரை உபயோகித்த கயல்,  தலையை பின்னால் சாய்த்து சிறிதுநேரம் தன்னைத்தானே அமைதிப்படுத்திக்கொண்டாள்.

ஆனால், அபியிடம் தீர்க்க வேண்டிய அவளுடைய கேள்விகள்தான் மனதில் அதிகரித்துக்கொண்டேச் சென்றன.

அடுத்தநாள், பால்கெனியில் தோட்டத்தை வெறித்தவாறு புகைப்பிடித்துக்கொண்டிருந்தான் அபி. சரியாக, அவனுடைய அறைக்கதவு தட்டப்பபட, சிகரெட்டை வேகமாக தூக்கியெறிந்தவன், ஸ்விங்கத்தை வாயில் போட்டு மென்றவாறு அறைக்கதவைச் சென்று திறக்க, எதிரே கயல்.

அவளைப் பார்த்ததுமே சற்று அதிர்ந்தவன், அடுத்தகணமே முகப்பாவனையை மாற்றிவிட்டு ஒற்றை புருவத்தைக் கேள்வியாக ஏற்றி இறக்க, “நான் உங்க கூட பேசணும்” திக்கித்திணறி சொன்னாள் அவள்.

அவனும் அவளை புருவ முடிச்சுகளோடு வெறித்துவிட்டு சற்று நகர்ந்து நிற்க, உள்ளே நுழைந்ததுமே சிகரெட் வாடையை உணர்ந்துவிட்டாள் கயல். ‘இவர் சிகரெட் பிடிப்பாரா? அய்யே!’ முகத்தைச் சுழித்தவாறு அவள் அவனை நோக்க, ஏனோ அவளின் மனதை படித்தவன்போல் அவளின் பாவனையைப் பார்த்தவனுக்கு இதழில் லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“உங்களுக்கும் என் வீருக்கும் என்ன சம்மந்தம்? என்னோட வாழ்க்கையில நடந்ததை எப்படி உங்களால சரியா சொல்ல முடியுது? இதையெல்லாம் விட சத்யாம்மா உங்கள தத்தெடுத்த ஆசிரமம், இதையெல்லாம் யோசிக்கும் போது என் தலையே வெடிக்குது. தயவு பண்ணி சொல்லுங்க” அவள் தன் கேள்விகளை அடுக்க, அபியோ விழியசைக்காது கயலையே பார்த்திருந்தான்.

அவனிடத்தில் மௌனம்தான். அவனுடைய அமைதியில் அவளுக்கோ கோபம் தாறுமாறாக எகிறியது.

“இப்போ நீங்க சொல்ல போறீங்களா, இல்…” உண்டான கோபத்தில் கத்திக்கேட்ட கயலின் வார்த்தைகள்  பக்கத்திலிருந்த டீபாயின் மேலிருந்த அலைப்பேசி திரை குறுஞ்செய்தியில் சத்தத்தோடு ஒளிர்ந்ததில் நின்று, அவள் பார்வை அதன்புறம் திரும்பியது. ஆனால், அடுத்தநொடி அவளின் பார்வை அத்திரையிலேயே நிலைக்குத்தி நின்றது.

அலைப்பேசியையே உற்றுப் பார்த்தவாறு அதை நோக்கிச் சென்றவளின் சுருங்கிய விழிகள், திரை ஒளிர்ந்ததுமே அதிலிருந்த அவளின் புகைப்படத்தைப் பார்த்ததும் சாரசர் போல் விரிந்தன. நெற்றி வகுட்டில் குங்குமத்தோடு அரக்குநிற சேலையில் பார்த்திபன் அவளுக்காக பரிசளித்த வீட்டிற்கு வீரஜின் குடும்பத்தோடு சென்ற நாளன்று அவள் வீட்டிற்குள் நுழையும் போது அவளிருந்த தோற்றமது.

இப்படியொரு புகைப்படமிருப்பது இப்போது அபியின் அலைப்பேசியில் பார்க்கும் வரை கயலுக்குத் தெரியாது. “இது… இது எப்படி உங்ககிட்ட?” அதிர்ந்துப்போய் கயல் அவனிடம் கேட்க, இப்போது இறுகிப் போயிருந்தது அபிமன்யுவின் முகம்.

கோபமாக அவனெதிரே வந்து நின்றவள், “இதுக்குமேல நீங்க எதையும் மறைக்க முடியாது. நீங்க யாரு?” அவள் வார்த்தைகளில் அத்தனை அழுத்தத்தைக் கொடுத்துக் கேட்க, ‘எங்கு உண்மையை சொல்லிவிடுவேனோ?’ என்று அந்த ஆடவனும் பயந்தான் போலும்! அதற்குமேல் அவனுடைய பொறுமையும் காற்றில் பறந்துப்போக, அவள் முழங்கையைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து அறையிலிருந்து தள்ளிவிட்டு கதவடைத்துக்கொண்டான் அபி.

அவனின் இச்செய்கையில் அவள் அதிர்ந்துப்போய் நின்றது சிலநொடிகள்தான். சுதாகரித்தும் விழியிலிருந்து கசிந்த விழிநீரை துடைத்தெறிந்தவள், அங்கிருந்து நகர, இத்தனைநேரம் நடந்ததை கவனித்துக்கொண்டிருந்த ரேவதிக்கு சந்தேகம் குடிகொண்டது.

இங்கு தோட்டத்திற்கு வந்த கயலிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவளுடைய பார்வை அங்கிருந்த ஊஞ்சலில் படிய, தந்தையின் அரவணைப்பை தேடும் குழந்தைப்போல் அதனிடம் ஓடிச் சென்றவள், அதில் அமர்ந்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

அவளுடைய நினைவுகள் திருமணத்திற்கு பிறகான நிகழ்வுகளுக்குத் தாவியது.

திருமணம் நடந்த அடுத்தநாள் காலை  தரையில் படுத்திருந்த கயல், முகத்தில் விசிறியடிக்கப்பட்ட நீரில் அலறியடித்துக்கொண்டு எழுந்தாள்.