ரகசியம் 12 💚

ei83IPM35903-c0c2e2b4

புதிய வீட்டுக்கு வந்து மூன்றுநாட்கள் ஆகிவிட்டது. வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் பார்த்திபனே செய்துக்கொடுத்திருந்தாலும் வீரஜ் குடும்பத்தினரின் வியாபாரப் பொருட்களை இந்த வீட்டுக்கு மாற்றுவதற்கே இரண்டு நாட்கள் தேவைப்பட்டது.

இதற்கு நடுவில் அறைக்காக கலவரம் வேறு. மகளிற்காக அந்த வீட்டிலேயே பெரிய அறையொன்றை தெரிவு செய்து கயலுக்கு பிடித்த நிறத்திலேயே அலங்காரம் செய்து பார்த்திபன் ஏற்பாடு செய்திருக்க, கயல் அந்த அறைக்குள் செல்ல கூட இல்லை. அதற்குள் அதை கேட்டு சண்டையிட ஆரம்பித்துவிட்டாள் ஏன்ஜல்.

“இது அப்பா எனக்காக…” கயலின் வார்த்தைகளை யாரும் கேட்கவில்லை. இதில், “கொடுத்தாதான் என்னவாம்?” என்ற ருபிதாவின் முணங்கல்கள் வேறு. கயலின் பார்வையோ வீரஜை தழுவ, அவனோ அதையெல்லாம் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.

‘நமக்காக எதுவும் பேச மாட்டாரா?’ உள்ளுக்குள் நினைத்தவாறு வெறுமை நிறைந்த பார்வையொன்றை தன்னவன் மீது பதித்திருந்தவள், ஒருகட்டத்தில் முடியாமல் “நீங்களே எடுத்துக்கோங்க” என்றுவிட்டு  ஒதுங்கி நின்று, வீரஜ் நுழைந்த அறைக்குள்ளேயே தன்னை புகுத்திக்கொண்டாள்.

ஏனோ கயலால் அவர்களின் குணத்தை இப்போது நன்றாகவே யூகிக்க முடிந்திருந்தது. அதனாலேயே வாதாடுவது வீணென்று நினைத்தாள் போலும்! அதுவும், கணவனாவது பரிந்து பேசுவானென்று பார்த்தால், இந்த பத்து நாட்களில் ‘சாப்பிட்டியா?’ என்று கூட கேட்டதில்லை அவன். இப்போது யோசித்து என்ன பயன்?

மூன்று நாட்கள் கழிந்திருக்க, பழைய வீட்டிலிருந்து பொருட்களை மாற்றிய களைப்பில் காலை பத்துமணி தாண்டியும் அடித்துப் போட்டதுபோல் தனதறை கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான் வீரஜ். சரியாக, அவன் காதில் ஒலித்தது “என்னங்க என்னங்க…” என்ற அழைப்பு.

அரைக் கண்களை மட்டும் திறந்து அவன் நோக்க, எதிரே கடல் நீலநிற சேலையில் தலைமுடியிலிருந்து நீர் சொட்ட சொட்ட நின்றிருந்தாள் கயல். ஆனால், அவனுக்கோ ‘தேவதையா இது?’ என்ற சந்தேகமே அவளின் தோற்றத்தில் எழுந்துவிட்டது.

அவளின் மஞ்சள் முகத்தையே அவன் இமைக்காது பார்த்துக்கொண்டிருக்க, “வீர்…” என்ற கயலின் சற்று குரலை உயர்த்திய அழைப்பில் அடித்து பிடித்து எழுந்தமர்ந்தான். அவன் எழுந்த விதத்தில் கயல் இரண்டடி பின்னால் நகர்ந்து அதிர்ச்சியோடு நோக்க, நெற்றியை நீவி விட்டவாறு ஓரக்கண்ணால் அவளை மேலிருந்து கீழ் அளவிட்டவனுக்கு ஒரு ஆண்மகனாக உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பித்தன.

‘என்ன காலையிலேயே இப்படி இருக்கா? கொல்றாளே…’ உள்ளுக்குள் புலம்பியவாறு அமர்ந்திருந்த வீரஜ், “ஏங்க, என்னாச்சு? பத்து மணி ஆகிருச்சுல்ல, அதான் எழுப்பினேன். சீக்கிரம் குளிச்சிட்டு வந்தீங்கன்னா சூடா சாப்பிடலாம்” என்று கயல் சொன்னதும், எதுவும் பேசாது வேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்தான்.

உள்ளே கண்ணாடியின் முன் நின்றிருந்தவனுக்கு தன்னை நினைத்தே அசிங்கமாக போய்விட்டது. ‘த்தூ… பொண்டாட்டிய உரிமையா ரசிக்காம என்னடா ஓரக்கண்ணால ரசிச்சிக்கிட்டு அசிங்கமா பண்ணிக்கிட்டு இருக்க. அய்யோ! நான் பார்க்குறதை அவ பார்த்திருப்பாளோ? அப்படியே பார்த்தாலும் என்னடா? உன் பொண்டாட்டி வீரா அவ’ தன்னைத்தானே சமாதானம் செய்துக்கொண்டவன், குளித்து முடித்து வெளியே வர, அலுமாரியில் உடைகளை அடுக்கிக்கொண்டிருந்தாள் அவனவள்.

அவளை இப்போது உரிமையாகவே பார்க்க ஆரம்பித்தான் வீரஜ். அவனின் பார்வையை உணர்ந்தவள் போல் சட்டென்று திரும்பியவள், விழிகளைச் சுருக்கி அவனை நோக்க, அந்த பார்வையில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

“ஆளுக்குகேத்த பெயரு, கயல்விழி” குறும்புச் சிரிப்போடு அவளின் விழிகளை ரசித்தவாறு சொல்லிக்கொண்டே வீரஜ் அவளை நெருங்கி, அவளுடன் மூச்சுக்காற்றை கலக்கும் தூரத்திற்கு நிற்க, அவளுக்கோ முதல்முறை திருமணத்திற்கு பின்னரான அவனுடைய நெருக்கத்தில் முகமெல்லாம் வியர்த்து கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

தன்னவனின் விழிகளை காண முடியாது பார்வையை தாழ்த்திக்கொண்டவாறு, “வீர், ஏதா..ஏதாச்சும் வேணுமா?” கயல் பயத்தோடுக் கேட்க, “ம்ம்… வேணும்தான். கிடைக்குமா?” கிறக்கமான குரலில் கேட்டவாறு சேலையினூடாக தெரிந்த அவளின் வெற்றிடையில் வீரஜ் கரத்தை வைக்க, விழிகளை மூடிக்கொண்டாள் கயல்.

எப்போதும்போல் தன்னருகாமையில் தன்னவள் மயங்கியதில் கர்வமாகச் சிரித்துக்கொண்டவன், மெல்ல நெற்றியில் இதழை ஒற்றி மூக்கு வழியாக இதழுக்கு வருடிக்கொண்டே வர, அந்த மயக்கத்தில் கயலும் அவன் மேலேயே கிட்டதட்ட சரிந்துவிட, “ஏய்…” என்று கத்திக்கொண்டே கதவை திறந்துக்கொண்டு வேகமாக வந்தாள் ஏன்ஜல்.

இருவரின் நிலையைப் பார்த்ததும் முதலில் திகைத்தவள், அப்போதும் வெளியில் செல்லாது ஒருவித பொறாமையில் கயலை முறைத்துக்கொண்டே நிற்க, அரவம் உணர்ந்து தன்னவனின் மார்பில் கைவைத்து தள்ளிய கயல், பதட்டமாக நின்றுக்கொண்டாள்.

‘அய்யய்யோ! பார்த்துட்டாங்களே…’ என்ற வெட்கம் கலந்த சங்கடம் அவளுக்குள் என்றால், வீரஜிற்கு அத்தனை எரிச்சல்!

“கல்யாணம் ஆனவதானே? உள்ள வரும் போது கேட்டுட்டு வரணும்னு தெரியாதா உனக்கு, அறிவில்லை?” வீரஜ் மாயவலை அறுந்த எரிச்சலில் ஏன்ஜலுக்கு கத்த, ‘கல்யாணமாகிருச்சா?’ இப்போதுதான் தான் அறிந்த புதிய செய்தியில் ஏன்ஜலை கயல் அதிர்ந்துப் பார்த்தாள் என்றால், ஏன்ஜலுக்கோ வீரஜ் முகத்திற்கு அடித்தாற்போல் பேசியதில் அதுவும் கயலினெதிரே பேசியதில் ஒரே அவமானமாகப் போய்விட்டது.

வேகமாக அங்கிருந்து அவள் வெளியேறிவிட, அடுத்தநொடி “அவங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?” என்ற தன் சந்தேகத்தைதான் பட்டென்று கேட்டாள் அவள். அவனோ சலிப்பாக தலையாட்டியவன், “அதெல்லாம் ஆச்சு. ஆனா, இரண்டு வருஷத்துலேயே இவங்களுக்குள்ள ஏதோ பிரச்சினை. அவன் விட்டுட்டு போயிட்டான்” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.

ஆனால், இங்கு ‘அய்யோ பாவம்! என்னதான் மாப்பிள்ளை பொண்டாட்டிக்குள்ள சண்டையா இருந்தாலும் இப்படி விட்டுட்டு போயிருக்க கூடாது’ என்று ஏன்ஜலை பாவமாக நினைத்த கயல் அறியவில்லை, உலகத்தை பார்க்காத சிசுவை அழகுக்காக ஏன்ஜல் கலைத்ததிலேயே அவள் கணவன் விட்டுச் சென்றதென்று.

அடுத்து கயல் பரிமாறிய காலையுணவை அரைமணி நேரத்தில்  முடித்துவிட்டு வீரஜ் கைகழுவச் செல்லப்போக, “வீரா…” என்ற நெளிந்துக்கொண்டு அழைத்தவாறு வந்து நின்றார் மனோஜன்.

அவனோ கேள்வியாக நோக்க, “இல்லைப்பா, நான் முன்னாடியே சொல்லியிருந்தேன், அதான் பொண்ணுங்க உபயோகிக்குற க்ரீம் சாமான் வியாபாரம், என் ஃப்ரென்ட் சைனாலயிருந்து அனுப்பி வைக்கிறான்னு சொல்லியிருந்தேனே! நிறம் கூடுதுன்னா எந்த பொண்ணுதான் வேணாம்னு சொல்லுவா? ஆனா என்னன்னா, அந்த வியாபாரத்துக்கு நாம மூலதனமா கொஞ்சம் பணம் போடணும். பணத்துக்கு ஏற்பாடு பண்ணேன்னா…” மனோஜன் இழுக்க, அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான் வீரஜ்.

தட்டிலேயே கையை கழுவி துணியால் துடைத்தவாறு, “ஹ்ர்ம் ஹ்ர்ம்… நான் இதை பத்தி உங்ககிட்ட முன்னாடியே சொல்லியிருந்தேன். ஆமா, உண்மைதான். நிறம் கூடுதுன்னா சில பொண்ணுங்க வேணாம்னு சொல்ல மாட்டாங்க. அதுக்காக எல்லாம் அந்த வியாபாரத்தை பண்ண நான் விட மாட்டேன். அந்த க்ரீம் அது உற்பத்தியாகுற நாட்டுலேயே தடை பண்ணிட்டாங்க. தப்பான மூலப்பொருள வச்சி அதை உற்பத்தி செய்றதா கேள்விப்பட்டேன். பல பொண்ணுங்க யூஸ் பண்ணி ஸ்கின் கேன்சர் வந்திருக்கு. நான் நல்லவன்னு என்னை சொல்லிக்க மாட்டேன். ஆனா, கொலைக்காரன் கிடையாது. புரியும்னு நினைக்கிறேன்” தீர்க்கமாகச் சொல்ல, கயலோ தன்னவனை வியந்து பார்த்திருந்தாள்.

வெறும் தோற்றத்தில் அவன்மேல் ஆரம்பத்தில் காதலில் விழுந்தவள் அவள். திருமணத்திற்கு பிறகு தவறு செய்துவிட்டோமோ என்று யோசித்த கயல், ஏனோ இன்றுதான் தன் கணவனை தோற்றத்தை தாண்டி மனதால் புதிதாகப் பார்த்தாள்.

வீரஜோ சொல்லிவிட்டு நகர போக, அப்போதும் மனோஜன் விட்டபாடில்லை.

“இல்லைப்பா, இதுல நிறைய இலாபம் இருக்கு அதான்…” அதிக பணத்தை ஈட்டும் இந்த வியாபாரத்தை விட மனமில்லாது மனோஜன் மீண்டும் ஏதோ சொல்ல வர, பக்கவாட்டாகத் திரும்பி வீரஜ் பார்த்த பார்வையில் அவருக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது.

“அதான் வேணாம்னு சொல்றேன்ல!” வார்த்தைகளை அழுத்தி நிதானமாகச் சொன்னவன், விறுவிறுவென்று வெளியேறியிருக்க, இங்கு மனோஜனின் மனக்கண்முன் மீண்டும் அதே முகம். “வரதராஜன்…” அந்த பெயரை அவரையும் மீறி அவரிதழ்கள் பயத்தோடு அசைக்க, தன்னைத்தானே சுதாகரித்துக்கொள்ளவே சிலநொடிகள் தேவைப்பட்டது அவருக்கு.

பின் மனோஜனும் வேகமாக தன் மனைவியை தேடிச் சென்றுவிட, அடுத்து தன் அத்தையாரின் கட்டளையை அறிந்து உணவு மேசையிலிருந்த பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கயலே சமையலறைக்குள் நுழைய போனாள்.

ஆனால், அங்கு கேட்ட ருபிதாவினதும் மனோஜனினதும் உரையாடலை முதலில் கண்டுக்கொள்ளாது நகரப் போனவள், அடுத்து அவர்கள் வீரஜ் என்று பேசிய தன்னவனின் பேச்சில் அப்படியே நின்று கேட்க ஆரம்பித்தாள்.

“ஏன்டீ உனக்கு நான் சொல்றது புரியுதில்லையா? வரதா கூடவே வளர்ந்தவன் நான். வீராவோட பார்வையும் பிடிவாதமும் எனக்கு அவனதான் நியாபகப்படுத்துது. இது முதல்தடவையில்லை ருபி” மனோஜன் பதட்டமாகச் சொல்ல,

“ஆனா, அது எப்படிங்க சாத்தியம்? நாமதான் அவங்கள அன்னைக்கே…” என்று நிறுத்திய ருபிதா, “வீராவுக்கும் அவங்களுக்கும் சம்மந்தம்னு இருக்கும்னு எனக்கு நம்பிக்கை கிடையாது. ஏன்னா, வீரா பொறந்த ஆறு மாசத்துல நாம அவனை தத்தெடுத்தோம். அப்போ எப்படி?” புரியாதுக் கேட்டார்.

“நாம வீராவ தத்தெடுக்கும் போது அந்த விபத்து நடந்து ஆறோ ஏழோ மாசம். இதை வச்சி பார்க்கும் போது…” அவர் பயத்தோடு நிறுத்த, ருபிதாவே ஒருநிமிடம் ஆடிப்போய்விட்டார்.

“என்னங்க சொல்றீங்க?” அவர் இதயம் படபடக்க கேட்க, ஆழ்ந்த பெருமூச்செடுத்து “இப்போ நம்மளால எதுவும் முடிவு பண்ணிற முடியாது. நம்ம கேள்விக்கான விடை வீராவ தத்தெடுத்த அந்த இடத்துலதான் இருக்கு. ராமர் அனாதை இல்லம்” மனோஜன் சொல்லி முடிக்க, இங்கு வெளியில் கேட்டுக்கொண்டு நின்றிருந்த கயலுக்கு தூக்கி வாரிப்போட்டது.

‘அப்போ இவங்க வீரோட சொந்த அம்மா அப்பா இல்லையா? இது வீருக்கு தெரியுமா?’ அதிர்ந்துப்போய் அதே இடத்தில் நின்றிருந்தாள் அவள்.

தான் அன்று கேட்டதை நினைத்துப் பார்த்த கயலுக்கு இன்று அபியின் கடந்த காலத்தை யோசிக்கும் போது வெறும் குழப்பங்களே மனதில் சூழ்ந்துக்கொண்டன.

அவள் ஊஞ்சலில் நடந்ததை யோசித்துக்கொண்டு அமர்ந்திருக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்றொரு செறுமல். கயலோ திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, ஊஞ்சலில் அவள் பக்கத்தில் புன்னகையோடு அமர்ந்திருந்தான் யுகன்.

“எப்போவும் ஏதாச்சும் யோசிச்சிக்கிட்டேதான் இருப்பியா? க்ரேவிட்டிய கண்டுபிடிச்ச நியூட்டன் கூட இம்புட்டு யோசிச்சிருக்க மாட்டாரு” யுகன் கேலியாகச் சொல்ல, தன் யோசனை விடுத்து அவனை முறைக்க முயன்றவளுக்கு தன்னை மீறி சிரிப்பு வந்துவிட்டது.

பலநாட்கள் கழித்து அவனுடைய கேலியில் வாய்விட்டுச் சிரித்தவள், “அபி அய்யாவோட தம்பிதான் நீங்கன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க” சிரித்தவாறுச் சொல்ல, யுகனின் புன்னகை முகமோ சட்டென இறுகியது. ஆனால், கயல் அதை கவனிக்கவில்லை.

“ஆனா ஒன்னு, சத்யாம்மாவுக்கு இந்த சிகரெட் பிடிக்குறது, தண்ணியடிக்குறது  எதுவும் பிடிக்காது. அன்னைக்கு கூட அம்மாவோட கார் ட்ரைவர் இருக்காரு சந்தீப் அண்ணா… அவருக்கு குடி பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சு தாறுமாறா திட்டிட்டாங்க” கயல் பேசிக்கொண்டே போக, “வெயிட் வெயிட்!” அவளை இடைவெட்டி பேச்சை நிறுத்தியவன், “இப்போ எதுக்கு இதை சொல்ற?” புரியாமல் கேட்டான்.

“உங்க அண்ணா ரூம்குள்ளயே சிகரெட் பிடிக்குறாரு. உங்களுக்கும் இப்படியெல்லாம் பழக்கம் இருக்கோன்னு நினைச்சுதான்” அவள் சாதாரணமாகச் சொல்ல, யுகனின் விழிகள் சாரசர் போல் விரிய, “கயல்விழி, பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்க! அபி அண்ணாவுக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லை. இன்ஃபேக்ட், அவர் கண் முன்னால அவரோட ஃப்ரென்ட்ஸ் கூட சிகரெட் பிடிக்க பயப்படுவாங்க” அடக்கப்பட்ட கோபத்தோடு அவனுடைய வார்த்தைகள் வந்தன.

கயலுக்கு ஒன்றும் புரியவில்லை. சிகரெட் புகை தெரியாத அளவுக்கு அவள் ஒன்றும் குழந்தை அல்லவே!

“இல்லை ஐயா, அபி ஐயாவோட ரூம்ல சிகரெட் ஸ்மெல் வந்திச்சு. எனக்கு நல்லா தெரியும்” அவள் மீண்டும் உறுதியாகச் சொல்ல, “வாய்ப்பேயில்லை கயல், அண்ணாவ பத்தி எனக்கு தெரியும். இந்த விஷயத்தை என்னால சுத்தமா ஏத்துக்க முடியல. எனிஹவ், எதுவும் யோசிக்காம வேலைய பாரு” என்றுவிட்டு யுகன் அங்கிருந்து நகர்ந்து ஒரு ஐந்து அடிகள்தான் வைத்திருப்பான். சரியாக, அவனுக்கொரு வாட்ஸப் அழைப்பு.

அலைப்பேசியை எடுக்கவென பாக்கெட்டுக்குள் கைவிட்டவனுக்கு திக்கென்றானது. காரணம் ஊஞ்சலில் அலைப்பேசியை வைத்திருந்தவன், மறந்துப்போய் எழுந்து வந்திருந்தான். அதை உணர்ந்த அடுத்தநொடி வேகமாக அவன் திரும்ப, அவனின் அலைப்பேசி கயலின் கரங்களில்.

திரையை அதிர்ந்துப்போய் பார்த்தவாறு அவள் அமர்ந்திருக்க, ‘சிக்கிட்டியே சிவனான்டி!’ பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டான் அவன்.

திரையைப் பார்த்தவாறு எழுந்து நின்றவள், “தேனு…” திரையில் தெரிந்த அழைப்போடு வந்த கர்ணாவை அணைத்தது போலிருந்த தேனுவைப் பார்த்து அழுகையோடு தன் தோழியின் பெயரை அழைக்க, பதட்டத்தில் இதழை ஈரமாக்கிக்கொண்ட யுகன், மெல்ல அவளெதிரே வந்து அலைப்பேசியை கையிலெடுத்து அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

“நான் பண்றேன்னோ இல்லையோ, நீங்க நல்லா பண்ணிடீங்க. உங்கள அப்றம் கவனிச்சிக்கிறேன்” கோபத்துடன் கூடிய அழுத்தத்தோடு சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன், “ஹிஹிஹி… இது என் ஸ்கூல்மெட்” இழித்தவாறுச் சொல்ல, கயலோ ஒரு கேள்விதான் கேட்டாள்.

“தேனுவுக்கு நான் இங்க இருக்குறது தெரியுமா?”

பெருமூச்செடுத்து, “ம்ம்…” என்று  மெல்லிய சிரிப்பு சிரித்தவன், “பார்த்தி மாமாவ நீ விட்டுட்டு போயிருக்க கூடாது” என்றான் குற்றம் சாட்டும் பார்வையில். அந்த கேள்வியில் கயலுக்கு தூக்கி வாரிப்போட்டது.

“அப்போ உங்களுக்கு…”  தடுமாற்றத்தோடு இழுத்த கயல், “ஆல் டீடெய்ல்ஸ் ஐ க்னோ” என்ற யுகனின் வார்த்தையில், “இது அந்த பொம்பளைக்கு தெரியுமா?” என்று கோபமாகக் கேட்டாள்.

“அப்போ உனக்கும் தெரிஞ்சிருக்கு. என்ட், பொம்பளை கிம்பளன்னா அத்தைப்பொண்ணுன்னு கூட பார்க்காம பல்லை உடைப்பேன். அவங்க உன் அம்மா” யுகன் கிட்டதட்டக் கத்த, “அம்மான்னு வார்த்தைக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவங்க” என்ற கயல் விரக்தியாக புன்னகைத்துக்கொண்டாள்.