ரகசியம் 17 💚

eiK1G4Y43202-5eb1c059

“நான் லண்டன் போக போறேன்” வீரஜ் சொல்ல, அதிர்ந்துவிட்டாள் கயல்.

“அப்போ நான்?” அவள் கேட்க, சட்டென்று அவளைவிட்டு விலகி நின்றவன், “நீ எதுக்கு?” என்றொரு கேள்வியை கேட்டு வைக்க, அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

“அது எப்படிங்க, என்னை தனியா விட்டுட்டு போவீங்க? நான் எப்படி நீங்க இல்லாம…” என்ன சொல்வதென்று தெரியாது அழுகை தொண்டையை அடைக்க அவள் அழும் குரலில் கேட்க, ‘ச்சே’ எரிச்சலாக சலித்துக்கொண்டவன், “இங்க பாரு கயல், இது என்னோட ரொம்ப வருஷ கனவு. ரொம்பநாள் ட்ரை பண்ணி இப்போதான் போக வாய்ப்பு கிடைச்சிருக்கு. தேவையில்லாம சீன் க்ரியேட் பண்ணி என்னை டென்ஷன் படுத்தாத!” வீரஜ் கத்த, அவளுக்கு அழுகைதான் வந்தது.

அவனை நம்பி வந்தவள் அவள். இப்போது சட்டென்று அவன் செல்வதாக சொன்னதும் அவளால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும், அத்தையென்ற பெயரிலிருக்கும் அவள் மாமியாரிடமும் ஏன்ஜலென்ற பெயரிலிருக்கும் அந்த ராட்சசியிடமும்  தனியாக சிக்கிவிடுவோமோ என்ற பயம் வேறு. ஏற்கனவே, அவர்களின் குத்தல் பேச்சுக்களிலிருந்து அவளுக்கு ஒரே ஆறுதல் வீரஜ்தான். காலையிலிருந்து அவர்களிடம் படும் அவஸ்தைக்கு இரவில் வீரஜின் முகத்தை பார்த்ததும்தான் அவளுக்கு ஆறுதலாக இருக்கும்.

இப்போது அவனும் வெளிநாடு செல்வதாக சொன்னதும் அவளுக்கு  ஏன்தான் இந்த வாழ்க்கை என்ற எண்ணமே வந்துவிட்டது. ஆனால், அவளின் மனநிலை எதையும் வீரஜ் கண்டுக்கொள்ளவில்லை போலும்!

அவன் பாட்டிற்கு முன்னே சென்றவன், என்ன நினைத்தானோ? சட்டென்று நின்று திரும்பிப் பார்த்து, “பாப்பா…” என்றழைக்க, அவளோ கலங்கிய விழிகளோடு அவனை கேள்வியாக நோக்கினாள்.

“அது வந்து… ஹேப்பி பர்த்டே பாப்பா, உனக்கு என்ன கிஃப்ட் வேணும்னு சொல்லு” வீரஜ் புன்னகையோடுக் கேட்க, கயலுக்கு ஆச்சரியம். இருந்த கவலையில் அவன் இவ்வாறு கேட்டதே அவளுக்கு மனம் லேசானது போலிருந்தது.

“எனக்கு எதுவும் வேணாம். ஆனா, ஒவ்வொரு வருஷமும் அப்பா கூட எங்க டவுன்லயிருக்குற ஆசிரமத்துக்கு போய் அங்கயிருக்குற பசங்களுக்கு மிட்டாய், ட்ரெஸ்னு அப்பா வாங்கி கொடுப்பாரு. ஆனா இப்போ…” என்று நிறுத்தியவள், “அந்தளவுக்கு கொடுக்கணும்னு இல்லை. என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு. ஊருலயிருந்து வரும் போது நான் கொண்டு வந்தது. அங்கயிருக்குற குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கி கொடுப்போமோ?” ஆர்வமாக கயல் கேட்க, இப்போது ஆச்சரியப்படுவது வீரஜின் முறையாயிற்று.

எப்போதும் வெகுளியாக சிலநேரங்களில் முட்டாள் பெண்ணாக அவளை நினைத்திருந்தவனுக்கு கயலின் நல்ல குணங்கள் வியக்கதான் வைத்தது. அதுவும் அவளின் நிலையை வீரஜ் கண்டும் காணாதது போலிருந்தாலும் அவனுக்கு தெரியாதா என்ன? அப்போதெல்லாம் அவளின் பொறுமையை கண்டு பலதடவை வியந்திருக்கிறான்.

இப்போது கயல் இவ்வாறு சொல்ல, மெல்ல புன்னகைத்தவன், “மொதல்ல காயத்துக்கு மருந்து போடு, அப்றம் போகலாம்” என்க, கயலின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. “நிஜமாவா?” விழிகள் விரிய கயல் அதிர்ச்சியாகக் கேட்க, “ஆமா” என்றுவிட்டு வீரஜ் வெளியேறியிருக்க, காயத்தினால் உண்டான வலி கூட மறந்து போயிருந்தது அவளுக்கு.

அறைக்குச் சென்று காயத்துக்கான மருந்தையிட்டவள், வீரஜ் வரும் வரை காத்திருக்க, அவனும் ஒருமணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

வேகமாக அறைக்குள் நுழைந்து “ஆசிரத்துல நாங்க வர்றதை பத்தி பேசிட்டேன். சீக்கிரம் வா! முக்கியமா பணத்தை மறக்காம எடுத்துட்டு வா!” பணம் விடயத்தில் எச்சரிக்கையாக குணம் மாறாது பேசிவிட்டு அவன் வெளியில் காத்திருக்க, அடுத்தகணம் வேகவேகமாக தயாராக ஆரம்பித்தாள் கயல்.

இங்கு வெளியில் நின்றிருந்த வீரஜிற்கு அப்போதுதான் மனோஜனின் ஞாபகமே வந்தது. காலையிலிருந்து மனோஜன் இல்லாததை உணர்ந்தவன், “அப்பா எங்க?” ருபிதாவிடம் கேட்க, “அது… அது வந்து தெரியலடா. வெளியில எங்கேயாச்சும் போயிருப்பாரா இருக்கும்” அவர் தடுமாறியபடிச் சொல்ல, அவரின் தடுமாற்றம் அவனுக்கு புதிதாக இருந்தது.

யோசனையோடு தலையசைத்தவன், கயலுக்காக காத்திருக்க, அவளும் உடை மாற்றி, “என்னங்க…” என்றவாறு ஓடி வந்தாள். அவனும் வண்டியிலேறி வண்டியை உயிர்ப்பிக்க, கயல் கஷ்டப்பட்டு தடுமாறி அவன் பின்னே அமர்வதை பார்த்துக்கொண்டிருந்த ருபிதாவும் ஏன்ஜலும் ஒருவரையொருவர் புரியாமல் பார்த்துக்கொண்டனர்.

“ஏய், எங்க போற?” ருபிதா கேட்க, “அது… இவர் கூட…” கயல் தன்னவனைப் பார்த்தவாறு தடுமாற, “உங்களுக்கு எதுக்கு?” கயலைக் குறிக்கிட்டு பதிலுக்குக் கேட்டான் வீரஜ். ருபிதா கேட்ட விதத்தில் அவனுக்கே சற்று எரிச்சலாகிவிட்டது.

“இல்லைப்பா, வீட்டுல வேலையிருக்கு. இந்த நேரம் வெளியில கூட்டி போனீங்கன்னா எப்படிப்பா? அந்த வேலையெல்லாம் யாரு பண்ணுவா? அதான் ஹிஹிஹி…” அவர் அசடுவழிந்தவாறுச் சொல்ல, ஏன்ஜலோ இருவரையும் வயிரெறிய பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நீங்களும் பண்ணலாமே! இல்லைன்னா, இதோ இருக்கா ஃபோன நோண்டிக்கிட்டு, இவக்கிட்ட கூட கொடுக்கலாம். கயலேதான் பண்ணணுமா?” அலட்சியமாகக் கேட்டுவிட்டு வீரஜ் வண்டியை வேகமாகச் செலுத்த, போகும் அவனைப் பார்த்திருந்த இருவருக்கும் கோபம் உச்சத்தை தொட்டது என்றால், பின்னால் அமர்ந்திருந்த கயலுக்கு அதிசயத்தின் உச்சக்கட்டம்.

திருமணமான இத்தனை நாட்களில் இன்றுதான் அவளுக்காக பேசியே இருக்கின்றான் அவள் கணவன். பின் ஆச்சரியப்படாமலா இருப்பாள்!

சில நிமிடங்கள் கழித்து வண்டி ஆசிரமத்தின் முன் நிற்க, ஏற்கனவே வரும் வழியில் வாங்கிய இனிப்புக்களை தூக்கிக்கொண்டு நுழைந்த வீரஜ், அங்கு பொறுப்பாக இருப்பவர்களுடன் பேசி பிள்ளைகளுக்கு கொடுக்க, தன்னவனின் பக்கத்தில் நின்று அவனையே ரசித்துப பார்த்திருந்தாள் கயல்.

திருமணமான நாளிலிருந்து அவன் சிரித்து என்ன அவனை பார்ப்பதே அரிதாகிதான் போனது. காலையில் அலைப்பேசியை நோண்டியவாறு உணவை முடித்து வெறியேறுபவன், இரவு நண்பர்களுடன் கூத்தடித்துவிட்டுதான் வீடு திரும்புவான். அவன் வரும் நேரம் கயல் தரையில் தூங்கியேவிட்டிருப்பாள்.

இன்று வீரஜையே அவள் பார்த்திருக்க, இனிப்புக்களை கொடுத்து முடித்து, “அப்பாடா! யூ ஹேப்பி, உன் காசை எடுத்துதான் நான் வாங்கினேன்னு ரொம்ப அசிங்கமா நினைச்சிடாத! எனக்கு கொஞ்சம் செலவு இருக்கு. ஒருவேள, நான் லண்டன் போயிட்டேன்னா இதெல்லாம் சல்ப மேட்டராக்கும். அப்போ, ஐயாவோட ரேன்ஜ்ஜே வேறம்மா” என்றவாறு கோலரை தூக்கிவிட்டுக்கொண்டவன், பின் “ஆனா, இந்த குழந்தைங்க ரொம்ப பாவம்ல பாப்பா, அம்மா அப்பா இல்லாம வளர்ந்திருக்காங்க. அந்த விதத்துல நாம இரண்டு பேரும் ரொம்ப லக்கி. நம்மள பெத்தவங்க கூடவே இருக்கோம். அவங்க பக்கத்துலயே வளர்ந்திருக்கோம்” என்றுவிட்டுச் செல்ல, கயலின் புருவங்களோ இப்போது யோசனையில் முடிச்சிட்டன.

‘என்ன சொல்றாரு இவரு! இவர் ஆசிரமத்துலயிருந்து தத்தெடுத்த குழந்தைன்னு அவங்க பேசிக்கிட்டாங்களே! ஆனா, இவர் பேசுறதை பார்த்தா…’ அவள் நின்ற இடத்துலேயே யோசித்துக்கொண்டிருக்க, எதேர்ச்சையாக அவள் பார்வை ஒரு இடத்தில் திரும்பி நிலைக்குத்தி நின்றது.

அங்கு சுவருக்கு பின்னால் மறைந்திருந்து எட்டிப் பார்த்த மனோஜன் சரியாக அவள் விழிகளுக்கு சிக்கியிருந்தார். அவரைப் பார்த்ததும் அதிர்ந்தவள், ‘இவர் இங்க என்ன பண்றாரு? எதுக்கு எங்க முன்னாடி வராம மறைஞ்சிருக்காரு’ சந்தேகமாக நினைத்துக்கொண்ட கயல், வீரஜ் அழைக்கவும் அவனை நோக்கிச் சென்று, பேசிவிட்டு மீண்டும் மனோஜனை தேடி அத்திசைக்குத் திரும்ப, அங்கோ அவரில்லை.

கயலுக்கு குழப்பம்தான் சூடிக்கொண்டது. அப்போதுதான் ஏதோ ஞாபகம் வந்தவளாக ஆசிரத்தின் பெயரை கூர்ந்து கவனித்தாள் அவள். ‘ராமர் அனாதை இல்லம்’ அந்த பெயரைப் பார்த்ததும் சாரசர்போல் விரிந்தன அவள் விழிகள்.

அதேநேரம் வீட்டிற்கு வந்த மனோஜனுக்கு அத்தனை படபடப்பு. மனைவி நீட்டிய தண்ணீரை மடமடவென குடித்தவர், “அவ பார்த்திருப்பாளா?” தலையும் வாலுமில்லாமல் ஒரு கேள்வியை கேட்டு வைக்க, “எவ?” பதிலுக்குக் கேட்டார் ருபிதா.

“அதான் உன் மருமக” அவர் எரிச்சலாகச் சொல்ல, ருபிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “புரியல, என்னதான் சொல்ல வர்றீங்க?” அவர் காதல் மனைவி கிட்டதட்ட கத்த, நடந்ததை சொல்லி முடித்த மனோஜன், “வீராவோட காதுக்கு போய் சின்னதா சந்தேகம் வந்தாலும் நமக்குதான் ருபி ஆபத்து” பயந்த குரலில் சொல்ல, “வாய்ப்பில்லைங்க, அந்த பைத்தியக்காரி அந்தளவுக்கு ஒன்னும் தெளிவில்லை. ஆனா, வீராவோட காதுக்கு போச்சு நானே அவளை கொன்னுடுவேன்” பற்களைக் கடித்துக்கொண்டார் ருபிதா.

பின் ஆழ்ந்த மூச்செடுத்தவர், “போய் விசாரிச்சீங்களா, என்னாச்சு?” ஆர்வமாகக் கேட்க, “விசாரிச்சதுல வீராவ நாம தத்தெடுத்த ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் ஆசிரமத்துல வீராவ சேர்த்திருக்காங்க. வீராவோட அம்மாவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்தான் ஆசிரத்துல சேர்த்துவிட்டதா சொல்றாங்க. டாக்டர்.பிரபாகரன், அவரை சந்திச்சா எல்லாம் தெரிஞ்சிடும்” மனோஜன் சொல்ல, ருபிதாவோ எரிச்சலாக நீவி விட்டுக்கொண்டார்.

“சீக்கிரம் வீராவோட ரகசியத்தை தெரிஞ்சிக்கணும். நாம நினைக்கிறது மாதிரி இல்லாம இருந்தாலே சந்தோஷம்தான்” அவர் சொல்ல, “நானும் அதைதான் ஆசைப்படுறேன் ருபி” என்ற மனோஜன், ஒரு கோப்பை நீட்டி, “இதை ரொம்ப கவனமா வச்சிக்கோ! ரொம்ப முக்கியமான பேப்பர்ஸ். அன்னைக்கு கிழிச்சி போடாம விட்டது எவ்வளவு நல்லதா போச்சு. இல்லைன்னா, ஆசிரமத்துல வீராவ பத்தி சொல்லியிருக்க மாட்டாங்க. உண்மை தெரிஞ்சதுக்கு அப்றம் இதை அடியோட அழிச்சிடலாம். வீராவோட கண்ணுல சிக்காம பார்த்துக்கோ!” என்றுவிட்டு நகர்ந்தார்.

தன் கையிலிருந்த வீரஜை தத்தெடுக்கும் போது ஆசிரமத்துக்கும் வீரஜிற்கும் இடையேயான தொடர்பை காட்டும் ஆவணங்கள் உள்ளடங்கிய அந்த கோப்பை வெறித்துப் பார்த்தார் ருபிதா.

அடுத்து வந்த நாட்கள் எப்போதும்போல் வேகமாக ஓட, அன்று தலையில் இடி விழுந்ததுபோல் சோஃபாவில் வந்தமர்ந்திருந்தான் வீரஜ். கயலை தவிர மற்றவர்கள் எவரும் அவனை கண்டுக்கொள்ளாது தத்தமது வேலைகளில் இருக்க, கயல்தான் தன்னவனின் வியர்த்து சோர்ந்து போன முகத்தை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

தன்னவனின் நிலையை உணர்ந்தவள், முதுகெலும்பு உடைய காலையிலிருந்து செய்துக்கொண்டிருந்த ருபிதாவின் வேலையையும் அப்படியே போட்டுவிட்டு வீரஜை நோக்கி ஓட, இதில் அலைப்பேசியை நோண்டியவாறு அமர்ந்திருந்த ருபிதாவோ பட்டென்று நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்தார்.

கயலோ தன்னவனிடம் ஓடியவள், “ஏங்க என்னாச்சு, ஏன் ஒருமாதிரி இருக்கீங்க? ஏதாச்சும் பிரச்சினையா? என்னன்னு சொல்லுங்க” என்று பதட்டப்பட, ‘அவன பத்தி தெரியாம பாப்பா போய் சீன் போடுதே!’ உள்ளுக்குள் ஒன்றை நினைத்து ஏன்ஜல் சிரித்துக்கொள்ள, “என்னை தனியா விடு! ஒன்னுமில்லை” என்றான் வீரஜ் இறுகிய குரலில்.

“இல்லைங்க, உங்க முகமே சரியில்லை. கொஞ்சம் இருங்க, நான் தண்ணி கொண்டு வர்றேன்” என்றுவிட்டு வேகமாக அவனுக்காக குளிர்ந்த நீரை எடுத்து வந்தவள், “ஏங்க, வெளியில போயிட்டு வந்திருக்கீங்க. ரொம்ப பதட்டமா வேற இருக்கீங்க. மொதல்ல தண்ணீ குடிங்க” என்றவாறு குவளையை நீட்ட, “வேணாம் கயல், என்னை கொஞ்சம் யோசிக்க விடு!” எரிச்சலாக வெளிப்பட்டன வீரஜின் வார்த்தைகள்.

“அது எப்படிங்க, நீங்க இப்படி இருக்கும் போது நான் கண்டுக்காம விடுறது? என்னாச்சுன்னு சொல்லுங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஏதாச்சும் பெரிய பிரச்சினையா?” அவள் அப்போதும் விடாதுக் கேட்க, ‘அய்யோ பாவம்! பட்சி வசமா சிக்கிருச்சு’ ருபிதா உள்ளுக்குள் சிரித்துக்கொள்ள, நெற்றியை எரிச்சலாக நீவி விட்டுக்கொண்டான் வீரஜ்.

“இங்கயிருந்து போன்னு சொன்னேன்” அவன் அழுத்தமாகச் சொல்ல, கயலோ விட்டபாடில்லை. “முடியாதுங்க, இப்படியொரு நிலைமையில எப்படி உங்கள விட்டுட்டு என் வேலைய பார்ப்பேன்? நீங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க, என்னால முடியும்னா…” அவள் பேசிமுடிக்கவில்லை, அவளின் கையிலிருந்த தண்ணீர் குவளையை சுவற்றில் விட்டெறிந்தான் அவன்.

கயலோ சிதறிக் கிடந்த தண்ணீரை அதிர்ந்து பார்த்துவிட்டு தன்னவனை நோக்கி திரும்ப, அதற்குள் அவள் கன்னத்தில் பளீரென அறைந்திருந்தான் வீரஜ். ‘அதானே, இன்னும் எதுவும் ஆகலன்னு பார்த்தேன். நல்லா வேணும்டி உனக்கு’ விஷமமாக நினைத்தவாறு ருபிதாவும் ஏன்ஜலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, கயலோ அறைந்த கன்னத்தை பொத்திக்கொண்டு தன்னவனை திகைத்துப் பார்த்தாள்.

“என்னடீ நினைச்சிக்கிட்டு இருக்க உன் மனசுல? அதான் போ, வேணாம்னு சொல்றேன்ல, அப்போவும் சொல்லுங்க சொல்லுங்க என்னங்கன்னு நொய்யு நொய்யுன்னு எரிச்சல கிளப்பிக்கிட்டு இருக்க. ரொம்தான் மேடமுக்கு பாசமோ? வந்து ஒட்டிக்கிட்டு என் உயிரை வாங்குற. ச்சீ… போடி” அவன் தாறுமாறாக நாக்கில் விஷத்தைத் தடவி கத்திவிட்டு அறைக்குள் சென்று கதவடைத்துக்கொள்ள, கயலுக்கு நெஞ்சிலிருந்து தொண்டை வரை ஏதோ அடைப்பது போன்ற உணர்வு.

இதயத்தை கசக்கி பிழியும் உணர்வு. மேலும் குத்திக் கிழிப்பது போல், “அவன் கோபமா பதட்டமா இருக்கும் போது யாராச்சும் போய் பேசினாங்கன்னா அந்த கோபம் மொத்தத்தையும் அவங்க மேல கொட்டிடுவான். இதனாலதான் நாங்களே நாங்க உண்டு எங்க சோலி உண்டுன்னு இருந்தோம். மேடமுக்கு பெரிய அன்னை திரேசான்னு நினைப்பு! அறை வாங்கினதுதான் மிச்சம். வா வந்து வேலைய பாரு! இன்னைக்கு நூறு பேக்கட்தான் உன் தலையில கட்ட நினைச்சேன். ஆனா, புருஷன கண்டதும் ஓடினல்ல, இன்னைக்கு இருநூறு பேக்கட் சாமானுங்கள நீதான் கட்டணும். சீக்கிரம்” ருபிதா சொல்ல, அழுகையோடே வேலையை பார்க்க ஆரம்பித்தாள் கயல்.

வீட்டில் பிறந்தது முதல் மகாராணிபோல் பார்த்திபனின் செல்லப்பெண்ணாக வளர்ந்தவள் அவள். இங்கு அக்கறையில் நலன் விசாரித்ததற்கு கூட அறை வாங்க வேண்டியிருக்கிறது. என்ன வாழ்க்கை இது?

நிமிர்ந்தும் பார்க்காது வேலை மொத்தத்தையும் ருபிதாவின் திட்டுக்களுக்கு மத்தியில் செய்து முடித்தவள், அறைக்குள் நுழைய, அங்கு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான் அவளவன்.

அவனை சிறிதுநேரம் வெறித்துப் பார்த்தவள், அவனுக்கு பக்கத்தில் வந்து படுத்துக்கொள்ள, வேலையில் உண்டான களைப்பில் தன்னவனை அழுதவாறு பார்த்துக்கொண்டே உறங்கியிருந்தாள் அவள்.

சிலமணிநேரங்கள் கடக்க, முதலில் விழித்தது வீரஜ்தான். மெல்ல கண்விழித்தவன், நெற்றியை தடவிக்கொண்டே பக்கவாட்டாகத் திரும்ப, அவன் விழிகளில் சிக்கியது கன்னம் சிவந்து கண்ணீர் கோடுகளோடு படுத்திருந்த அவன் மனைவிதான். அப்போதுதான் அவன் செய்த காரியமே அவனுக்கு புரிந்தது போலும்!

‘ஷீட்!’ எரிச்சல்பட்டுக்கொண்டவன், மெல்ல நகர்ந்து வந்து அவள் கன்னத்தை வருடினான். அவனுக்கே அவளைப் பார்த்து பாவமாக இருந்தது. விழிகளில் பரிதாபத்தோடு காயத்தின்மேல் அவன் வருட, அதில் உண்டான எரிச்சலில் பட்டென்று விழித்த கயல், வீரஜை அருகே பார்த்ததும் பதறியடித்துக்கொண்டு பயந்தபடி எழுந்தமர்ந்தாள்.

அவளின் தன்னை நோக்கிய பயத்தைப் பார்த்ததுமே அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவள்மேல் அவனுக்கு காதல் இல்லைதான். ஆனால், ஒரு பெண்ணை இப்படி அறையுமளவிற்கு மோசமாகிவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி அவனுக்கு.

அவளிடமிருந்து விலகியமர்ந்து எதுவும் பேசாது வீரஜ் செல்லப் போக, அவன் கையை, “வீர்…” என்று இறுகப் பற்றினாள் அவனவள்.