வீரஜோ எதுவும் பேசாது நகரப் போக, “வீர்” என்றழைத்தவாறு அவன் கையை கயல் இறுகப் பற்றவும், புருவத்தை நெறித்து தன்னவனை கேள்வியாக நோக்கினான் அவன்.
“வீர், நான் மறுபடியும் கேக்குறேன்னு கோபப்படாதீங்க. என்னாச்சுன்னு சொல்லுங்க. உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சினையோன்னு பதட்டமா இருக்கு” மீண்டும் அடித்துவிடுவானோ என்ற பயத்தில் கயல் பயந்தபடிக் கேட்க, அவனோ சில நொடிகள் அவளை வெறித்துப் பார்த்தவன், பின் எங்கோ வெறித்தபடி “என்னை ஏமாத்திட்டாங்க” இறுகிய குரலில் சொல்ல, அதிர்ந்துப் பார்த்தாள் கயல்.
“லண்டன் போகணும்னு இரண்டு வருஷமா ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இப்போ என் ஃப்ரென்ட் சுஜீப் மூலமா வாய்ப்பு கிடைச்சிச்சு. இதுக்கான்னு பணம் வட்டிக்கு கடனா எடுத்தேன். இப்போ அவன் மொத்த பணத்தையும் சுருட்டிட்டு போயிட்டான். என்ன பண்றதுன்னு தெரியல” வீரஜ் சொல்ல, திகைத்து விழித்த கயலுக்கு சிறிதுநேரம் என்ன சொல்லி சமாதானப்படுத்துவதென்றே தெரியவில்லை.
ஏதோ யோசித்தவள், வேகமாகச் சென்று பார்த்திபன் திருமணத்திற்கு பின் கர்ணாவின் கையில் கொடுத்தனுப்பிய அவளுடைய தங்க டோலரை எடுத்து வீரஜின் கையில் கொடுக்க, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இதை அடகுவச்சி இல்லைன்னா வித்தாவது கடனை அடைங்க வீர்” அவள் சொல்ல, வீரஜிற்கோ தூக்கி வாரிப்போட்டது. அவனால் அவளின் குணத்தை யூகிக்கவே முடியவில்லை. இதுவரை கயல் போன்ற பெண்ணை அவன் பார்த்ததும் இல்லை.
‘இவளுக்காக நான் என்ன பண்ணேன்னு எனக்காக எல்லாமே பண்றா’ அதிர்ந்துப்போய் அவளையே பார்த்திருந்தவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. மனதில் இதுவரை அவள் விடயத்தில் தோன்றாத ஒரு அழுத்தம்.
“இல்லை, வேணாம் கயல்” மனதில் உண்டான குற்றவுணர்ச்சியில் தயங்கியபடி வீரஜ் மறுக்க, விடாப்பிடியாக டோலரை அவன் கையில் திணித்த கயல், “கடன் ஒரு மனுஷனுக்கு ரொம்ப பெரிய பாரம். அது உங்களுக்கு வேணாம். மொதல்ல கடனை அடைங்க, அப்றம் இதை மீட்டுக் கொடுங்க” புன்னகையோடுச் சொல்லிவிட்டு நகர போக, அவனோ அவளையே இமை மூடாது பார்த்திருந்தான்.
“பாப்பா…” சட்டென்று வீரஜ் அழைக்க, “என்னாச்சுங்க?” என்று கேட்டவாறு கயல் புரியாமல் திரும்பிப் பார்க்க, அவளே எதிர்ப்பார்க்காது வேகமாக அவளை நெருங்கி இறுக அணைத்திருந்தான் அவன். கயலோ விழி விரித்து சிலைப்போல் நிற்க, “தேங்க்ஸ் பாப்பா” என்றவன் அடுத்தகணம் தான் அறைந்த கன்னத்தில் அழுந்த முத்தமிட்டிருந்தான்.
அவள் உணர்வுகளை விளக்கவா முடியும்? சந்தோஷத்தில் கலங்கிய விழிகளை அழுந்த மூடிக்கொண்டவள், இப்போது மூடிய விழிகளை திறக்க, எதிரே அவளவன் இல்லை.
நினைவுகளிலிருந்து நடப்புக்கு வந்தவளுக்கு மனதில் பாரமேறிய உணர்வு. பக்கவாட்டாகத் திரும்பி அபியை அவள் நோக்க, அவனோ இறுகிய முகமாக வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தான்.
“என்னோட கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லை” கயல் குற்றம் சாட்டும் குரலில் சொல்ல, “உன் கேள்விகளுக்கான பதிலை நீயே தேடிக்கோ! என்கிட்ட கேட்டேன்னா மௌனம்தான் பதில்” அழுத்தமாகச் சொன்னவன், அவளை கொஞ்சமும் திரும்பிப் பார்க்கவே இல்லை.
சில மணி நேரங்கள் கடந்து கயலின் வீட்டிற்கு இவர்கள் வந்து சேரவே இரவாகிவிட்டிருந்தது.
அங்கு தேனுவோ கண்ணிமைக்காது தன்னவனின் பார்வைக்காக ஏங்கி யுகனையே பார்த்துக்கொண்டிருக்க, அவனோ அவளின் அதிரடியான கேள்விகளுக்கு பயந்து கர்ணாவின் பின்னாலேயே சுற்றிக்கொண்டு அவரோடே வளவளத்துக்கொண்டிருந்தான்.
அவளுக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்திருந்தால் அவன் அவளை தவிர்ப்பதற்கு விழிகளாலேயே எரித்திருப்பாள். ஆனால், யுகனோ அவள் கோபத்தையெல்லாம் கண்டுக்கொள்ளவே இல்லை.
சரியாக நாள் முழுக்க அலைந்த களைப்பில் கயல் அரைத் தூக்கத்தில் உள்ளே நுழைய, “சரி, அப்போ நாங்க கிளம்புறோம், விடிஞ்சதுமே போனவங்கள இன்னும் வீட்டுக்கு காணோம்னு அம்மா பதட்டமா இருப்பாங்க. எங்க போறோம்னு சொல்ல கூட இல்லை மாமா” உள்ளே வந்ததும் வராததுமாக அபி சொல்ல, கயலுக்கு ‘அய்யோ!’ என்றாகிவிட்டது.
யுகனோ ‘அப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டு “ஆமா ஆமா, அம்மா என்னை தேடுவாங்க. நான் வீட்டுக்கு போகணும். இப்போ போனாதான் காலையில வீட்டுக்கு போய் சேர முடியும்” படபடவென சொல்லிக்கொண்டு காரை நோக்கிச் செல்ல, உதட்டைப் பிதுக்கிக்கொண்ட கயல், உள்ளே சென்ற வேகத்தில் அப்படியே திரும்பி உட்காரக் கூட விடாத எரிச்சலில் அபியை முறைத்துக்கொண்டே காரில் சென்றமர்ந்தாள்.
கயல் சென்று காரில் அமர்ந்தும் கர்ணாவோடு ரகசியமாக எதையோ பேசிக்கொண்ட அபி, அவர் ஆறுதலாக முதுகில் ஏதோ சொல்லி தட்டியதும் புன்னகைத்துக்கொண்டே கயலோடு பின்சீட்டில் அமர்ந்துக்கொண்டான். யுகனுக்கோ இருந்த சந்தேகங்கள் நீங்கியதால் அவன் அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், கார் கண்ணாடி வழியே அவனை கவனித்துக்கொண்டிருந்த கயலுக்கு, ‘சித்தப்பா கூட இவ்வளவு நெருக்கமா பேசுற அளவுக்கு இவரை அவருக்கு தெரியுமா?’ மனதில் சந்தேகமாக நினைத்துக்கொண்டாள்.
இரவு பலமணி நேரங்கள் பயணம் செய்து நடுநிசியில் மூவரும் வீடு வந்து சேர, அபியோ முதல் வேலையாக வீட்டிற்குள் நுழைந்ததும் பெரியவரின் அறைக்குதான் ஓடினான். அவரோ உறங்கிக்கொண்டிருக்க, மெல்ல சத்தம் எழுப்பாது கதவை சாத்தியவாறு, “இப்போ போய் தூங்குங்க. அம்மா காலையில எழுந்ததும் பேசிக்கலாம்” என்றுவிட்டுத் திரும்பிப் பார்க்க, கயல் அங்கு நின்றிருந்தால்தானே!
இருக்கும் தூக்க களைப்பில் எப்போதே அங்கிருந்து அவளது அறைக்கு ஓடிவிட்டிருந்தாள்.
அடுத்தநாள், “அன்னி…” என்றழைத்தவாறு சத்யாவின் அறைக்குள் நுழைந்த ரேவதி, கொஞ்சமும் அங்கு கயலை எதிர்ப்பார்க்கவில்லை. நேற்று அபி அவளின் கையை இறுகப்பற்றி இழுத்துக்கொண்டு செல்வதை அறையிலிருந்து வெளியே வரும் போது பார்த்திருந்தவர், நாள் முழுக்க மூவருக்காக பெரியவரோடு சேர்ந்து காத்திருந்தார்.
நேற்று மூவரும் இரவு தாமதமாகி வந்தது கூட அறியவில்லை அவர். இப்போது கயலை பார்த்தவர், வாயில் வார்த்தைகள் வராது அப்படியே நிற்க, கயலோ பெரியவரின் தலையை பின்னலிட்டுக்கொண்டிருந்தவள், விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்துவிட்டு மீண்டும் குனிந்துக்கொள்ள, சத்யாவோ ரேவதியை கேள்வியாக நோக்கினாள்.
“அது அன்னி… நான் உங்கள பார்க்கதான்… சாப்பிட்டீங்களான்னு கேக்க… சரி நான் அப்றம் வரேன் அன்னி” திக்கித்திணறி பேசிவிட்டு ரேவதி அங்கிருந்து வேகமாக வெளியேறியிருக்க, பெரியவரோ கயலைதான் பார்த்தார். அவளோ மென்மையாக புன்னகைத்தவள், “அத்தை, எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு. சீக்கிரம் வந்துடுறேன்” என்றுவிட்டு அவரின் அனுமதிக்காக அவர் முகத்தையே பார்த்திருந்தாள்.
அவளின் அத்தையென்ற அழைப்பிலேயே அவருக்கு புரிந்துவிட்டது அவளின் மனநிலை. சந்தோஷத்தில் கலங்கிய விழிகளோடு அவர் புன்னகைக்க, இங்கு அறைக்குள் நுழைந்த ரேவதியோ வாயைப் பொத்தி அழ ஆரம்பித்தார். சரியாக, “அம்மா…” கயலின் குரல். அதில் தூக்கி வாரிப்போட திகைத்து விழித்தார் அவர்.
சட்டென்று திரும்பி எதிரேயிருந்த கயலை அவர் கண்ணீர் கன்னம் தொட்டு ஓட அதிர்ந்துப் பார்த்துக்கொண்டிருக்க, மீண்டும் கயல் அழுகையோடு “பெத்த பொண்ணுக்கிட்ட பேசுறதுல ஏன் இத்தனை தயக்கம்?” என்று கேட்டதும்தான் தாமதம், அப்படியே தரையில் முட்டிப்போட்டு அமர்ந்து முகத்தை மூடி அழ ஆரம்பித்துவிட்டார் ரேவதி.
“என்னை மன்னிச்சிடும்மா, அம்மா என்ற வார்த்தைக்கே நான் தகுதியில்லாதவ, பெத்த பொண்ண தவிக்கவிட்ட பாவிடா நான். என்னை மன்னிச்சிடு கண்ணம்மா” ரேவதி குற்றவுணர்ச்சியில் அழ, ஓடிச் சென்று அவரை அணைத்துக்கொண்ட கயலும் பெற்ற தாயிடம் சேர்ந்த உணர்ச்சியில் விம்மி விம்மி அழுதாள்.
“இல்லைம்மா, நான்தான் உங்கள அப்படி பேசியிருக்க கூடாது. ஏதோ ஒரு சூழ்நிலை, உங்கள அப்படி ஒரு முடிவு எடுக்க விட்டிருச்சு. நீங்க என்னை மன்னிச்சிடுங்கம்மா” கயல் அழுதுக்கொண்டேச் சொல்ல, “கண்ணம்மா!” சந்தோஷம் கலந்த ஆச்சரியத்தில் அழைத்தவர், “நீ அம்மாவ மன்னிச்சிட்டியா? அம்மாவ புரிஞ்சிக்கிட்டியாடா?” விழிகள் மின்ன கேட்டார்.
அவருக்கு தன் மகள் தன்னை அணைத்து அம்மா என்றழைத்து அழுவதை நம்பவே முடியவில்லை.
கயலின் முகத்தைத் தாங்கி முகமெங்கும் அழுதவாறு முத்தமிட்டவர், “உன்னை பார்க்கும் போதே எனக்கு சந்தேகம் இருந்துச்சுடா, ஆனா நம்ப முடியல. ஆனா, என் கண்ணம்மா என்கிட்டயே சேர்ந்துட்டா. என்னை புரிஞ்சிக்கிட்டா. யுகா.. யுகா… இங்க வா டா! என் பொண்ண பாருடா! அன்னி… அபி…” அளவு கடந்த சந்தோஷத்தில் கத்த, அவரின் முகத்தையே பார்த்திருந்தாள் கயல்.
சரியாக செய்தி கிடைத்து யுகன் அங்கு வர, அபியும் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி கதவு நிலையில் சாய்ந்தவாறு தாயையும் மகளையும் பார்த்திருந்தான். ஆனால், இப்போது கயலுக்குள் ஒரு பயம். அதற்கு ஒரே காரணம் பார்த்திபன்.
“யுகா, இங்க பாருடா, என் கண்ணம்மா என்னை புரிஞ்சிக்கிட்டா. என்னை கட்டிபிடிச்சு அம்மான்னு கூப்பிட்டா, என் பொண்ணு எனக்கு கிடைச்சிட்டா” ரேவதி அத்தனை சந்தோஷத்தோடு பேச, கயலின் பார்வையோ பயத்தோடு அபியைதான் நோக்கின. அவள் விழிகளில் தெரியும் தவிப்பு அவனுக்கு புரிந்தது போலும்!
விழிகளை அழுந்த மூடித் திறந்து சமாதானப்படுத்தியவன், “அத்தை அது… பார்த்தி மாமா…” ஏதோ சொல்ல வர, அடுத்து ரேவதியின் வார்த்தைகளில் மூவருக்குமே அதிர்ச்சி!
“பார்த்தியோட ஆத்மா இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கும். அன்னைக்கு அவர் சொன்ன மாதிரி நீ என்கிட்ட வந்து சேர்ந்துட்ட. இப்போ அவரு ரொம்ப நிம்மதியா இருப்பாரு” ரேவதி பேசிக்கொண்டேப் போக, கயலோ அதிர்ச்சியில் அபியையும் அம்மாவையும் மாறி மாறி விழி விரித்து நோக்கினாள்.
“அத்தை உங்களுக்கு…” யுகன் அதிர்ச்சியில் கேட்க, “அப்போ அம்மா…” அதற்குமேல் பேச முடியாது கயல் நிறுத்த, ரேவதியை பார்த்து நின்றிருந்த அபிக்கு ஏதோ மனதில் பாரம் குறைந்த உணர்வு.
மென்மையாகப் புன்னகைத்தவர், “உன் அப்பாவ பிரிஞ்சி இருக்கேன்னு அவர்மேல எனக்கு காதல் இல்லாம இருக்குமா என்ன? என்னை விட அவரை யாராலேயும் காதலிக்க முடியாது. அதுவும் கர்ணாவோட மனைவி ஜெயசுதா மாதிரி ஒருத்தங்க எனக்காக இருக்கும் போது எப்படி என் பார்த்திய பத்தி தெரியாம இருப்பேன். ஆனா, இப்போ அவங்களும் உயிரோட இல்லை. என் பார்த்தியும் இல்லை” ரேவதி தேய்ந்த குரலில் சொல்ல, “தேனுவோட அம்மாவா?” அதிர்ந்துக் கேட்டவளுக்கு, ‘இப்படியெல்லாம் கூட நடந்ததா?’ என்ற ஆச்சரியம்.
“உனக்கொன்னு தெரியுமா, பார்த்தி கர்ணாகிட்ட எதையும் மறைச்சது இல்லை. ஒரு விஷயத்தை தவிர” அடுத்து ரேவதி சொன்ன இந்த வசனத்தில் மூவருமே ஆர்வமாக அவரை நோக்க, தன்னவரின் நினைவுகளில் உண்டான புன்னகையுடன், “பார்த்தி இறக்குறதுக்கு ஒருநாள் முன்னாடி என் கூடதான் பேசினாரு. அவர் இறந்த செய்தியை சொன்னது டாக்டர்.பார்த்திபன், உன் அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் பார்த்த டாக்டர். என்னோட ஃப்ரென்ட்” என்க, இப்போது நடந்தது மூவருக்கும் புரிந்துப் போனது.
“நான் இதை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கல. நான் உங்கள உங்க ஃபேமிலி கூட சேர்த்து வைக்கணும்னு நினைச்சப்போ கூட நீங்க சொல்லல்ல” யுகன் உதட்டைச் சுழித்த வண்ணம் சொல்ல, “எனக்கு சொல்ல தோனல யுகா. எனக்கப்றம் கண்ணம்மாவுக்கு துணையா இருன்னு சொன்ன அவரோட வார்த்தை எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு. நான் கயல் கூட சேரணும்னு நினைச்சாரு. ஆனா, கண்ணம்மா எங்க இருக்கான்னு சொல்லாம விட்டுட்டாரு. அதான் உன்னை அவரை தேடி போக வச்சு கயலை பத்தி தெரிஞ்சிக்க நினைச்சேன்” ரேவதி சொல்ல, தன் தந்தையின் நினைவில் அழ ஆரம்பித்தாள் கயல்.
தன் மகளை அழுத்தமாகப் பார்த்தவர், “நான் பண்ண தப்பை நீயும் பண்ணியிருக்க கூடாது. என் சூழ்நிலை வேற கயல், ஆனா நீ அவரோட கடைசி நிமிஷத்துல கூட…” அன்று கடைசி வார்த்தைகளாக தன் மகளுக்காக ஏங்கி பார்த்திபன் பேசிய வார்த்தைகளை நினைத்துப் பார்த்து குற்றம் சாட்டும் குரலில் பேசி நிறுத்த, கயலுக்கோ அவர் விழிகளை நேருக்கு நேர் காண முடியவில்லை.
“அப்பாவ ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ம்மா. ஆனா, அவரோட கடைசி நிமிஷத்துல நான் என்னோட சுயநலத்துக்காக அப்பாவ கஷ்டப்படுத்தணும்னு எதையும் பண்ணலம்மா. எல்லாம் என் விதி! அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னா…” ஏதோ சொல்ல வந்து கயல் பேச்சை நிறுத்த, அபியோ இறுகிய முகமாக அவளையே பார்த்திருந்தான். அவன் முகம் சிவந்துப் போயிருந்தது.
“எதுவும் சொல்லாத கண்ணம்மா, வாழ்க்கையில பண்ண ஒரு தப்புக்காக நீ ரொம்ப அனுபவிச்சிட்ட. உன் வாழ்க்கை சரியா இல்லை. ஏதோ ஒரு கோபம், அதான் இப்படி பேசிட்டேன்” என்றுவிட்டு கயலின் நெற்றியில் அழுந்த முத்தமிட்ட ரேவதி, அவளை ஆறுதலாக அணைத்துக்கொள்ள, தன் தாயின் தோளில் சாய்ந்தவாறு அபியைப் பார்த்தவளுக்கு அவனின் விழிகளில் தெரிந்த ஏக்கத்தில் குழப்பம்தான் சூடிக்கொண்டது.
அன்று மதியம், எல்லாருமே ஒன்றாக உணவு மேசையில் அமர்ந்திருக்க, “சீதா, எப்போடீ இங்க வர்ற? உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும். நீ பண்ண காரியத்துக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல” சத்யா அம்மாள் தன் தோழியிடம் ஆர்வமாக கயலைப் பார்த்தவாறு பேச, “என்ன விஷயம் சத்யா?” தனக்கே தெரியாது என்னவாக இருக்குமென்று புரியாதுக் கேட்டார் வெளிநாட்டிலிருக்கும் சீதா.
“நீ மொதல்ல வா! அப்றம் தெரியும்” சத்யா சொல்லவும், “இன்னும் ஒரு வாரத்துல நான் அங்க இருப்பேன்” என்ற சீதாவின் பதிலில் சத்யாவோடுச் சேர்ந்து கயலும் குதிக்க ஆரம்பித்துவிட்டாள். நான்கு வருடம் அவளை தெய்வம் போன்று காத்தவர் அவர். அவரின் பிரிவு பல நாட்களாக அவரையும் வாட்ட, இப்போது அவளுக்கு சந்தோஷம் தாளவில்லை.
ஆனால், சீதாவின் வருகையின் போது நடக்கவிருக்கும் சம்பவத்தை கயல் கொஞ்சமும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டாள்.
பல நாட்கள் கழித்து சிரித்துப் பேசி அனைவரும் உண்டு முடிக்க, அதிலொருத்தன் மட்டும் விதிவிலக்கு. வேறு யாரு, நம் நாயகன்தான். எந்த பேச்சிலும் கலந்துக்கொள்ளாது தட்டில் முகத்தை சாப்பிட்டு முடித்தான். கயலில் பார்வை கூட ரேவதியுடன் பேசியவாறு அவன் மேல்தான் படிந்து மீண்டது. ஆனால், அவனோ நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
சாப்பிட்டுவிட்டு ரேவதியின் கட்டளையில் அவருடன் உறங்கவென ரேவதியின் அறைக்கு கயல் சென்றுக்கொண்டிருக்க, தீடீரென ஒரு வலிய கரம் அவளை அறைக்குள் இழுத்தெடுத்தது. முதலில் பயத்தில் விழிகளை மூடிக்கொண்டவள், பின் விழிகளைத் திறந்து தன்னெதிரே இருந்தவனிடம், “என்ன பண்றீங்க?” பற்களைக் கடித்துக்கொண்டு கேட்டாள்.
ஆனால், அவளை முழுதாக பேசி முடிக்ககூட அவன் விடவில்லை. பட்டென்று அவளிதழில் அழுந்த முத்தமிட்டு, “தேங்க்ஸ்” என்றுவிட்டு அபி அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்திருக்க, நடப்புக்கு வரவே கயலுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
முயன்று சுதாகரித்து பிடிக்காத முத்தத்தில் வெளிவந்த கண்ணீரை அழுந்தத் துடைத்தெறிந்தவள், அங்கிருந்து நகரவென ஒரு அடி வைக்க, தரையில் விழுந்துக்கிடந்தது கைப்பையில் வைக்கக்கூடிய அளவிலான சிறிய புகைப்படம்.
சந்தேகத்தோடு அதையெடுத்து பார்த்த கயலுக்கு அதிலிருந்த இருவரின் முகத்தைப் பார்த்ததும் அதிர்ச்சி. அவள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத ஒன்று. எச்சிலை விழுங்கிக்கொண்டவள், அப்படியே உறைந்துப் போய்விட்டாள்.