ரகசியம் 19💚

eiKLHQK76838-56163e4f

தன் கையிலிருந்த புகைப்படத்திலிருந்த இருவரின் முகத்தை வெறித்துப் பார்த்த கயலின் நினைவுகளோ, அதே முகங்களை முதல் தடவை பார்த்த தருணத்திற்குச் சென்றது.

அன்று ருபிதாவின் அறைக்குள் நுழைந்த கயல் முதல் வேலையாக கதவை சாத்திவிட்டு தொப்பென்று கட்டிலில் அமர்ந்து முகத்தில் பூத்திருந்த வியர்வையை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.

இதை மட்டும் அவளின் அத்தையார் பார்த்தால் அவ்வளவுதான். கயலுக்கு சொந்தமான வீட்டிலேயே கயலுக்கு அறை இல்லாமல் போயிருக்கும். ஆனால், மகாராணிபோல் வளர்ந்தவளுக்கு இவர்கள் கொடுக்கும் வேலையை செய்தே வாழ்க்கை வெறுத்துவிட்டது.

அதுவும், தன் கணவனிடம் தன்னிலையை சொல்வோமென கையில் பட்டிருந்த தீக்காயங்களைக் காட்டி, “என்னங்க, இன்னைக்கு பதறிக்கிட்டு சமைக்கும் போது காயமாகிருச்சு. ரொம்ப வலிக்குது. ஆனா, அத்தை அப்போவும் என்னை வேலை வாங்கினாங்க” கயல் மெல்ல சொல்ல, அவனோ அலைப்பேசியில் விளையாடியவாறு, “அதுக்கு, இப்போ உன் வேலைய நானா பண்ண முடியும்? காயத்துக்கு மருந்தை போட்டுட்டு அடுத்த வேலைய பார்த்துட்டு போகாம, என்கிட்ட கம்ப்ளைன் பண்ணிக்கிட்டு இருக்க” அலட்சியமாகச் சொன்னான்.

அவனின் வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்கு சப்பென்றாகிவிட்டது. அதிலிருந்து அவனிடம் ஆறுதலை அவள் எதிர்ப்பார்த்ததே இல்லை.

இன்றும் காலையிலேயே ஒரு பெரிய ஆர்டர் கிடைத்திருக்க, பொருட்களை தயார் செய்வதில் கயலை படாத பாடுபடுத்திவிட்டார் ருபிதா. ஆனால், கயலின் பக்கம் காற்று வீசியதோ என்னவோ ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எடுக்கச் சொல்லி தனதறைக்கு பீரோவின் சாவியைக் கொடுத்து அனுப்பி வைக்க, கயலுக்கோ ஒரே உற்சாகிமாகிவிட்டது.

சிறிதுநேரம் கட்டிலில் அமர்ந்திருந்தவள், மீண்டும் ருபிதா “ஏய், என்னடீ பண்ணிக்கிட்டு இருக்க? பணத்தை எடுத்துட்டு வர உனக்கு இம்புட்டு நேரமா?” என்று கத்தவுமே, வேகமாகச் சென்று பீரோவை திறந்தாள். உள்ளே ஒரு சிறிய லோக்கர் போன்ற அமைப்பு. அதை திறந்தவள், அங்கிருந்த ஒரு கட்டு பணத்தையெடுத்து திரும்பப் போக, அவள் விழிகளில் சிக்கியது ஒரு புகைப்படம்.

‘இதுக்குள்ள என்ன ஃபோட்டோ வச்சிருக்காங்க?’ உள்ளுக்குள் யோசித்தவாறு அதையெடுத்தவள், அதிலிருந்த முகங்களை கூர்ந்து கவனித்தாள். மனோஜன் ருபிதாவுடன் இன்னும் இரண்டு புதிய முகங்கள் முத்துப்பற்கள் தெரிய சிரித்துக்கொண்டு நிற்க, அந்த புதிய ஆணின் முகத்தை உற்றுப் பார்த்தவளுக்கு வீரஜை சற்று பெரிய மீசையுடன் பார்ப்பது போன்ற உணர்வு.

வீரஜின் முகஅமைப்பு அப்படியே இந்த முகத்தோடு பொருந்த கயலுக்கு ஆச்சரியம். யோசனையோடு அந்த முகங்களையே பார்த்தவாறு அவள் நிற்க, சரியாக கதவு பிடியை அழுத்தி திறக்கும் சத்தம். உடனே புகைப்படைத்தை உள்ளே போட்ட கயல், பணத்தை எடுத்து திரும்பவும் ருபிதா பதட்டமாக உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

ருபிதாவின் பதட்டத்திற்கான காரணம் கயலுக்கு சுத்தமாகத் தெரியவில்லை. “என்னாச்சு அத்தை?” அவள் புரியாமல் கேட்க, வேகமாக வந்ததின் விளைவாக மூச்சு வாங்கியவாறு, ‘ச்சே! உள்ள ஃபோட்டோ இருக்குறதை மறந்து இவள அனுப்பிட்டேனே! பார்த்திருப்பாளா? இல்லை இல்லை வாய்ப்பில்லை’ தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தார் அவர்.

அவரை நடப்புக்கு கொண்டு வந்தது கயலின் சத்தம்தான். “அத்தை…” அவள் கத்தவுமே, மலங்க மலங்க விழித்தவர் பின் உடனே முகபாவனையை மாற்றி, அவள் கையிலிருந்த பணத்தைப் பறித்துவிட்டுச் செல்ல, ‘அப்பாடா!’ எச்சிலை விழுங்கிக்கொண்டவள், அவர் பின்னாலே அமைதியாகச் சென்றாள்.

இருவரும் ஹாலுக்கு வர, வீட்டிற்குள் வேகமாக நுழைந்த வீரஜ், “பாப்பா, சீக்கிரம் ரெடி ஆகு! வெளியில போகலாம்” என்க, கயலோ விழி விரித்து அவனை நோக்கினாள். அவளால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. சிலநேரங்களில் தீயாய் சுடுபவன், சிலநேரங்களில் அவளே எதிர்ப்பார்க்காது குளிர்வித்தால் அவளால் நம்ப முடியுமா என்ன?

அதிர்ந்து சிலைபோல் அப்படியே நிற்க, சொடக்கிட்டு அவளை நடப்புக்கு கொண்டு வந்த வீரஜ், “பெக்கபெக்கன்னு என்ன முழிச்சிக்கிட்டு இருக்க? மனசு மாறிட போறேன். சீக்கிரம்” சிரிப்புடன் சொல்ல, ருபிதாவை கயல் பார்க்க, அவரோ எதுவும் சொல்ல முடியாது இருவரையும் முறைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்துக்கொண்டார்.

இப்போதெல்லாம் வீரஜிடம் வாயே திறப்பதில்லை அவர். அவருடைய பயம் அவருக்கு!

ஆனால் தன் கணவன் அழைத்தானென ஆசையாசையாக தயாராகிக்கொண்டிருந்தவள் அறியவில்லை, அவளின் விரலிலிருக்கும் மோதிரத்திற்கு அவன் போடும் திட்டம். அடுத்த சில நிமிடங்களில் கயலும் தயாராகி வர, சைட் கண்ணாடி வழியாக அவளின் அழகை தன்னை மீறி ரசித்தவாறு வண்டியைச் செலுத்தினான் வீரஜ்.

‘எப்படி இவக்கிட்ட ஆரம்பிக்குறதுன்னு தெரியல்லையே… மொதல்ல ஒரு இடத்துல இவளோட செட்ல் ஆகுவோம். அப்றம் பேச்சை ஆரம்பிப்போம். ஆமா… இப்போ எங்க போறது? ஹோட்டலுக்கு போனா காசு தண்ணீ மாதிரி செலவாகும. இங்க பக்கத்துல ஸ்ட்ரீட் ஃபுட்னு பேருல ஒன்னு திறந்து ஆஃபர் கொடுத்திருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அங்க போகலாம்’ தனக்குள்ளேயே பல கணக்குகளை போட்டவாறு தான் நினைத்த இடத்திற்கு அவன் கொண்டு சென்று வண்டியை நிறுத்த, கயலோ தெருவோரமாக போடப்பட்டிருந்த கடைகளையும் கூடியிருந்த ஆட்களையும் புரியாதுப் பார்த்தாள்.

“பாப்பா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” வீரஜ் சொன்னவாறு முன்னே நடக்க, யோசனையில் புருவத்தைச் சுருக்கியவள், “என்னங்க?” என்றாள் கேள்வியாக அவனுடன் சேர்ந்து நடந்தவாறு.

“அது வந்து கயல்… அன்னைக்கு நீ கொடுத்த டோலரை ஈடு வச்சி கடனை அடைச்சிட்டேன். அது லண்டன் போகணும்னு நான் எடுத்த கடன். ஆனா, இப்போ ஒரு புது பிரச்சினை” அவன் சொல்ல, கயல் எதுவும் பேசவில்லை. அமைதியாக அவனையே பார்த்திருந்தாள்.

வீரஜின் பார்வையோ கயலின் விரலிலிருந்த மோதிரத்தின் மீது விஷமமாகப் படிந்தது. அதுவும் பார்த்திபன் தன் மகளுக்காக கொடுத்துவிட்ட மோதிரம்தான். தொண்டையை செறுமிக்கொண்டவன், “அது கயல் என்னன்னா… இரண்டு மாசத்துக்கு முன்னாடி ஒருத்தன்கிட்ட சின்ன அமௌன்ட் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தேன். அந்த வட்டி குட்டி போட்டு இப்போ பெரிய கணக்கா என் தலைமேல நிக்குது. நீதான் ஏதாச்சும்…” பேசிக்கொண்டேச் செல்ல, இங்கு கயலின் பார்வையோ வேறு எங்கோ படிந்திருந்தது.

அவளின் சிந்தனையும் இப்போது தன்னவனின் மீதில்லை. ஒரு திசையையே அவள் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, சரியாக வீரஜிற்கு ஒரு அழைப்பு. திரையைப் பார்த்தவன், கயலிடமிருந்து மெல்ல நகர்ந்து “ஏன்டா அவசரப்படுற. அதான் என் பொண்டாட்டிக்கிட்ட கேட்டுட்டு இருக்கேன்ல. கண்டிப்பா பணம் கிடைக்கும். பொறுமையா இரு!” யாருக்கோ கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டு திரும்ப, இப்போது அவனருகே அவனவளில்லை.

தலைமேல் கை வைத்தவன், ‘அய்யோ! இவ எங்க போனா? ஓ மை கருப்புசாமி! இவளுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுன்னா இவ அப்பன் முறுக்குமீசை என்னைதானே வெட்டுவான். ஷீட்!’ வாய்விட்டே புலம்பியவாறு, “பாப்பா… கயல்…” என்று கத்திக்கொண்டு வீரஜ் தன்னவளைத் தேட, கயலோ ஓரிடத்தில் மறைந்திருந்து காரில் சாய்ந்து நின்று இருவர் பேசிக்கொள்ளும் உரையாடலைதான் காதுகொடுத்து கேட்டுக்கொண்டிருந்தாள்.

அது இருவர் வேறு யாருமல்ல. மனோஜனும் வைத்தியர் பிரபாகரனும்தான். வீரஜ் பேசிக்கொண்டிருந்தை கேட்டுக்கொண்டிருந்தவளின் பார்வை எதேர்ச்சையாகத் திரும்ப, அப்போதே வீதியோரமாக ஒரு காரில் மனோஜன் சாய்ந்து நின்று யாருடனோ பேசிக்கொண்டிருந்ததை கவனித்தாள் கயல்.

ஏற்கனவே அவர்மேல் ஏகப்பட்ட சந்தேகம் அவளுக்கு. அவரைப் பார்த்ததும் கொஞ்சமும் யோசிக்காது அந்த இடத்தை நோக்கி ஓடிவிட்டிருந்தாள். இப்போது காருக்கு பின்னால் மறைந்தவாறு நின்று அவர்கள் பேசுவதை அவள் கவனிக்க ஆரம்பிக்க, மனோஜனோ ஒரு புகைப்படத்தை பிராபகரனிடம் காட்டி, “இது என்னோட மகன். பெயரு வீரஜ்” என்க, தன் மூக்குக் கண்ணாடியை சரி செய்தவாறு வீரஜை உற்று நோக்கிய வைத்தியருக்கு அந்த முகத்தை எங்கேயோ பார்த்த உணர்வு.

“ரொம்ப பழக்கப்பட்ட முகம்” யோசனையோடு பிரபாகரன் சொல்ல, தன் கையிலிருந்த வீரஜுடைய ஆசிரமம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அவரிடம் நீட்டிய மனோஜன், “கண்டிப்பா உங்களுக்கு பழக்கப்பட்ட ஒருத்தங்கதான்” என்றார் இறுகிய குரலில்.

வைத்தியரோ அந்த ஆவணங்களை புரட்டிப் பார்க்க, “இருபத்தினாழு வருஷத்துக்கு முன்னாடி வீரஜ்ஜ நான் ஆசிரமத்துல தத்தெடுத்தேன். அவன நான் தத்தெடுக்கும் போது அவனுக்கு வெறும் ஆறுமாசம்தான். அவன அந்த ஆசிரமத்துல ஒப்படைச்சது நீங்க மிஸ்டர்.பிரபாகரன், நீங்க தத்து கொடுத்த ஆசிரமம் ராமர் அனாதை இல்லம்” மனோஜன் சொல்ல, அவரின் வார்த்தைகளையும் ஆவணங்களில் உள்ள தகவல்களையும் இணைத்துப் பார்த்த பிரபாகரனுக்கு சில விம்பங்கள், சில நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து போகின.

நெற்றியை தட்டி யோசித்தவருக்கு வீரஜின் முக வடிவிலான ஒரு முகம் ஞாபகத்திற்கு வர, சட்டென்று அவரிதழ்களோ, “வரதராஜன்” என்று முணுமுணுத்தன. அந்தப் பெயரைக் கேட்டதும் ஆடிப்போய்விட்டார் மனோஜன்.

“என்னோட இத்தனை வருஷ கெரியர்ல சில சம்பவங்கள் ரொம்ப ஆழமா மனசுல பதிஞ்சிருக்கு. அப்படியோரு சம்பவம்தான் அது. என்ட், வரதராஜன்… அவரை என்னால மறக்கவே முடியாது. சொல்லப்போனா, ஒருவகையில என் நண்பர் அவரு” பிரபாகரன் சொல்ல, மனோஜனுக்கு ஆச்சரியத்துக்குமேல் ஆச்சரியம்.

“புரியல” அவர் பயந்தபடிக் கேட்க, “நான் முதல்ல வேலைப் பார்த்த ஹோஸ்பிடல்லதான் அவர் எனக்கு பழக்கமானாரு. அவருக்கு இப்படி நடக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கல. நீங்க உங்க பையன தத்தெடுத்த அன்னையிலயிருந்து ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு பெரிய ஆக்சிடன்ட். வரதராஜன் ஸ்போட்லயே இறந்துட்டாரு. அவரோட மனைவி பானுமதி… அவங்களுக்கு நான்தான் பிரசவம் பார்த்தேன். அவங்கள மாதிரி ஒரு ஸ்ட்ரோங் லேடிய நான் என் வாழ்க்கையில பார்த்தது கிடையாது. கார்லயிருந்து விழுந்ததுல வயித்துல பலமான அடி. குழந்தைகள உயிரை கொடுத்து பெத்தெடுத்தாங்க. அப்றம் அவங்களும்…” தன்னுடைய அனுபவத்தை பிரபாகரன் உடல் சிலிர்ப்போடு சொல்லிக்கொண்டிருக்க, அவரின் பேச்சை இடையிட்டார் மனோஜன்.

“அப்போ வீரஜ் அவரோட பையன்தானா?” திக்கித்திணறி அவர் கேட்க, “இந்த டீடெய்ல்ஸ்ஸ வச்சு பார்க்கும் போது பாதி கன்ஃபார்ம்னா, மீதி அப்பனை உரிச்சு வச்சிருக்க வீரஜோட முகத்துல தெரியுது” சிரிப்புடன் கூடிய உறுதியோடு வைத்தியர் சொல்ல, மனோஜனுக்குதான் தலையே சுற்றிவிட்டது.

ஆனால், பிரபாகரனோ அவரின் மனநிலை தெரியாது, “எனக்கு புரியுது மிஸ்டர்.மனோஜன், தத்தெடுத்த குழந்தையா இருந்தாலும் அவனோட அப்பா நீங்கதான். உங்ககிட்டயிருந்து அவனை யாராலேயும் பிரிக்க முடியாது. ஒருவேள, அவனுக்கு இப்போ தெரிஞ்சிருக்கலாம். பெத்தவங்கள பார்க்க ஆசைப்படலாம். ஆனா, உங்கமேல இருக்குற பாசம் மாறாது” ஆறுதல் சொல்கிறேன் பேர்வழியென்று பேசிக்கொண்டுச் செல்ல, மனோஜனுக்கு அப்போதுதான் ஒன்று மூளையில் சிக்கியது.

“டாக்டர், எனக்கு இன்னொன்னு தெரியணும். வீரஜுக்கு ட்வின் பிரதர் யாராச்சும் இருக்காங்களா? நீங்க கூட அப்படிதான் சொன்னீங்க” மனோஜன் தன் சந்தேகத்தைக் கேட்க, “ஆமா மிஸ்டர், பானுமதிக்கு இரண்டு பையன். ஆனா ஒன்னு, அவங்க உயிருக்கு ஆபத்து வந்தாலும் குழந்தைகளுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாதுன்னு ரொம்ப பிடிவாதமா இருந்தாங்க. அந்த பிடிவாதம்தான் உங்க பையனா வீரஜ் இருக்கான்” அவர் சொல்ல, மனோஜனுக்கோ வீரஜின் பிடிவாதக் குணமும் அழுத்தமான பார்வையும் எங்கிருந்து வந்ததென்று இப்போது புரிந்தது.

அதேநேரம் முழுமையாக இல்லாவிடினும் அரைகுறையாக காதில் விழுந்த செய்திகளில் கயல் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். அதற்குமேல் அங்கு நிற்காது மனோஜனின் விழிகளில் சிக்காது மறைந்தவாறு தன்னவனை நோக்கி அவள் ஓடிவிட, அவளின் கெட்டநேரமோ என்னவோ? வீரஜின் இரட்டை சகோதரனைப் பற்றி தன் இன்னொரு சந்தேகத்தைக் கேட்ட மனோஜனின் விழிகளில் எப்போதோ சிக்கிவிட்டிருந்தாள் கயல்.

இங்கு தூரமாக வந்து நின்று ‘அப்பாடா! தப்பிச்சிட்டோம்’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டுக்கொண்டவளுக்கு அப்போதுதான் தன்னவனின் நினைவு வந்தது. ‘அய்யய்யோ!’ என்று பதறிக்கொண்டு சுற்றி முற்றி விழிகளைச் சுழலவிட்டு தேடியவளுக்கு இப்போது பயம் மனதை கவ்வ, “என்னங்க…” என்று உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அழுதபடி வீரஜை தேடி நடக்க ஆரம்பித்தாள்.

சிறிதுநேரம் சென்றபின் திரையிலிருந்த புகைப்படத்தைக் காட்டி வீரஜ் யாரிடமோ எதையோ கேட்டுக்கொண்டிருப்பது தெரிய, அவனைப் பார்த்த அடுத்தநொடி, “என்னங்க என்னங்க…” கயல் கத்த, ‘அதே குரல்’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவன், வேகமாக சத்தம் வந்த திசையை நோக்கினான்.

அங்கு திருதிருவென முழித்துக்கொண்டு நின்றிருந்த தன் மனைவியைப் பார்த்ததும்தான் அவனுக்கு அத்தனை நிம்மதி. கூடவே கோபம் வேறு. ‘இருடீ வர்றேன்’ பற்களைக் கடித்துக்கொண்டு சட்டைக் கையை மடித்து விட்டவாறு கயலை நெருங்கிய வீரஜ், கோபத்தில் அவளை அடிக்கவென கையை ஓங்கப் போக, நடக்கப் போவது புரிந்து, “ஏங்க, நான் தொலைஞ்சு போயிட்டேங்க” வராத அழுகையை வரவழைத்தவாறு அவளோ தன்னவனை இறுக அணைத்துக்கொண்டாள்.

வீரஜிற்கு அவளின் இந்த செய்கையில் என்ன எதிர்வினை காட்டுவது என்று கூட தெரியவில்லை.  ‘என்ன பொசுக்குன்னு கட்டி பிடிச்சிட்டா’ எச்சிலை விழுங்கிக்கொண்ட வீரஜிற்கு இருந்த மொத்த கோபமும் தடம் தெரியாது காணாமல் போனது.

அவளை மெல்ல அணைத்துக்கொண்டவன், “சரி சரி அதான் என்கிட்ட வந்துட்டல்ல, ஒன்னும் இல்லை” எப்படி சமாதானப்படுத்துவதென்று தெரியாது தனக்கு தெரிந்தது போன்று பேசி சமாளிக்க, ‘அப்பாடா! எங்க போனன்னு கேக்கல’ உள்ளுக்குள் நிம்மதியாக நினைத்துக்கொண்டவள், அவனிடமிருந்து மெல்ல விலகி நின்று இல்லாத கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.

ஏனோ அவனுக்கு அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. உள்ளுக்குள் தன்னவளை ரசித்தாலும், அவளிடத்தில் அவனுடைய தேவை அவனுக்கு சரியாக ஞாபகத்திற்கு வர, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” தொண்டையை செறுமிக்கொண்டவன், வண்டியை நோக்கி நடந்தவாறே, “பாப்பா, நான் என்ன பேசிக்கிட்டு இருந்தேன்னு நியாபகம் இருக்கா?” என்று கேட்டான் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு.

அவள் அவன் பேசியதை கவனித்திருந்தால்தானே! இல்லையெனும் விதமாக அவள் தலையாட்ட, வண்டிக்கருகில் வந்து அவள் கையை இறுகப் பற்றிய வீரஜ், “அது பாப்பா, எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. உன்கிட்ட இருக்குற மோதிரத்தை கொடுத்தேன்னா, அந்த கடனை அடைச்சிட்டு சீக்கிரமே உன் டோலரையும் மோதிரத்தையும் மீட்டு தந்திடுவேன். என்னை நம்பு!” கயலை நெருங்கி நின்று மென்மையான குரலில் கேட்க, கயலுக்கு ருபிதாவின் லோக்கரில் பார்த்த பணக்கட்டுகள்தான் ஞாபகத்திற்கு வந்தன.

‘அத்தைக்கிட்ட அம்புட்டு பணம் இருக்கே, அப்றம் ஏன் இவர் பணத்துக்கு கஷ்டப்படுறாரு?’ மனதில் நினைத்துக்கொண்டாலும் வாய்விட்டு கேட்கவில்லை அவள். வீரஜும் ஆர்வமாக அவளையே பார்த்திருக்க, விரலிலிருந்த மோதிரத்தை கழற்றி அவனிடம் கயல் நீட்ட, அதை வாங்கிக்கொண்டவனோ அதை வைத்து ஏகப்பட்ட திட்டங்களை தீட்டிக்கொண்டான்.

அடுத்தநாள், சப்பாத்திக்காக மாவு பிசைந்தவாறு நேற்று மனோஜன் பேசியதை யோசித்துக்கொண்டு கயல் தரையில் அமர்ந்திருக்க, வீட்டு எண்ணிற்கு ஒரு அழைப்பு.

சோஃபாவில் அமர்ந்திருந்த ஏன்ஜல், அழைப்பை ஏற்று, “ஹெலோ…” என்க, மறுமுனையில் கேட்ட குரலில் முகம் சுழித்தவாறு, ரிசீவரை ஓரமாக வைத்தவள், “ஏய், உனக்குதான்” என்றுவிட்டு அங்கிருந்து நகர, ‘ஏன் எனக்கு பெயரில்லையா? நம்ம பெயரை ஏய்ன்னு மாத்திருவாங்க போல!’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டாலும் வாய்விட்டு கேட்கவில்லை.

யோசனையோடு வந்து அழைப்பை ஏற்ற கயல், மறுமுனையில் கேட்ட கர்ணாவின் குரலில் “சித்தப்பா நீங்களா? எப்படி இருக்கீங்க, அப்பா எப்படி இருக்காரு? எப்போ சித்தப்பா மறுபடியும் வீட்டுக்கு வருவீங்க?” அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, கர்ணாவிடமோ அமைதி மட்டுமே…

அவரின் அமைதி அவளுக்கும் சரியாக தோனவில்லை. “சித்தப்பா, என்னாச்சு?” கயலிடமிருந்து அடுத்த கேள்வி இவ்வாறு வெளிப்பட, “அப்பா ரொம்ப முடியாம இருக்காருடா. பார்த்திய வந்து பாருடா!” தேய்ந்து ஒலித்தன கர்ணாவின் குரல்.