ரகசியம் 25 💚

ei2BIGI92930-e21c0dc5

“வீர்…” என்ற கத்தலோடு கயல் விழிகளைத் திறக்க, பெரியவர்களோ பயந்தபடி அவளை நெருங்கினர். ஆனால், அவள் தன் கட்டுப்பாட்டிலே இல்லை.

“வீர்… வீர்…” என கத்திக்கொண்டே விழிகளை சுழலவிட்டுத் தேடியவள், வேகமாக கட்டிலிலிருந்து இறங்கி அறையிலிருந்து தன்னவனைத் தேடி வெளியே ஓட, அங்கிருந்தவர்களால் அவளை சமாளிக்கவே முடியவில்லை.

பெரியவர்களும் அவள் பெயரைச் சொல்லிக் கத்திக்கொண்டு அவள் பின்னே பதட்டமாக ஓட, யாரையும் கண்டுக்கொள்ளாது வீரஜை தேடி ஓடியவளின் கரத்தை வேகமாக வந்து இறுகப் பற்றிக்கொண்டான் யுகன்.

“கயல், அமைதியா இரு! சொல்றதை கேளு” அவன் கத்த, அவன் கையிலிருந்து தன் கையை விடுவிக்க முயற்சித்துக்கொண்டே, “என்னை விடுங்க, நான் என் வீர்கிட்ட போகணும். அவர் சாகல, அவர் என் கூட இருந்திருக்காரு. அவர் சொன்ன மாதிரி என்னை தேடி வந்திருக்காரு. என்னை விடுங்க யுகன்” அவளோ பதிலுக்குக் கத்தினாள்.

அவள் கரத்தை விடாது சிறிதுநேரம் அவள் முகத்தை வெறித்த யுகன், “அண்ணாக்கிட்ட நானே உன்னை கூட்டிட்டு போறேன், என்னை நம்பு” என்றுவிட்டு தன் வார்த்தையை கேட்டு கத்துவதை நிறுத்தி அமைதியானவளை அடுத்தநொடி காரில் அழைத்துக்கொண்டு இவர்களின் பீச் ஹவுஸை நோக்கித்தான் சென்றான்.

அங்கு கடலை வெறித்துக்கொண்டு இறுகிய முகமாக நின்றிருந்தான் வீரஜ். சற்று குனிந்து நீரில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்தவனுக்கு அபியின் முகத்தின்மேல் அத்தனை வெறுப்பு!

தன் முகத்தை பார்க்க முடியாமல் விழிகளை அவன் இறுக மூடிக்கொள்ள, சரியாக “வீர்…” என்று அழைத்தவாறு அவனை பின்னாலிருந்து அணைத்திருந்தாள் கயல்.

“வீர், தயவு செஞ்சு மறுபடியும் என்னை விட்டு போயிடாதீங்க! நாலு வருஷம் உங்களை பிரிஞ்சு நான் கஷ்டப்பட்டதெல்லாம் போதும். இதுக்குமேல உங்களை விட்டு நான் போக மாட்டேன். நீங்களும் போகா…” பேசிக்கொண்டேச் சென்றவள், சட்டென்று வீரஜ் திரும்பியதும் அவன் முகத்தைப் பார்த்துவிட்டு பயந்து ஒரு அடி பின்னே நகர்ந்தாள்.

மனம் அவன் ஸ்பரிசத்தை தன்னவனென ஏற்க, அபியின் முகம் அவனை வீரஜாக ஏற்க மறுத்தது. கயலில் விலகலிலும் அவளிள் அந்நியத்தன்மையான பார்வையிலும் உள்ளுக்குள் மொத்தமாக உடைந்துவிட்டான் அவன்.

மீண்டும் அவன் விழிகள் சிவக்க, அவளை நோக்கி நடந்து வந்து அவள் தோள்களை இறுகப்பற்றி, “ஏன்டீ என்னை விட்டு விலகிப் போற? இப்போ மட்டும் என்னாச்சு? இப்போ நான் உன் வீர் இல்லையா?” கோபமாகக் கத்திய வீரஜ், “இதோ இது அபிமன்யு, வீர் இல்லை. வீர் எப்போவோ செத்துட்டான். நான் அபிமன்யுதான், உன் வீர் கிடையாது” ஆவேசமாக முகத்தைக் காட்டிக் கத்த, கயலோ பயந்தபடி அவனை வெறித்தாள்.

அவளின் விழிகளில் தெரிந்த பயத்தில் தன்னையே கடிந்துக்கொண்டவன், வேகமாக அவளை விட்டு விலகி கடலலைகள் பக்கம் திரும்ப, அவன் நினைவுகளோ மீண்டும் நீரில் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்தவாறு நடந்த சம்பவங்களை நோக்கி நகர்ந்தன.

அன்று கயல் வீட்டிலிருந்து வெளியேறிய அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர் ருபிதாவும் மனோஜனும்.

வந்ததுமே கயல் வீட்டை விட்டுச் சென்ற விடயத்தைக் கேள்விப்பட்டவர்களுக்கு ஒருபக்கம் அதிர்ச்சி, இன்னொரு பக்கம் அத்தனை ஆத்திரம்.

“எவ்வளவு தைரியம் அந்த ஓடுகாலிக்கு? நாங்களும் வீட்டுல இல்லை. நீயும் வெளியில போனேன்னு நேரம் பார்த்து எவன் கூடவோ ஓடி போயிட்டா. அந்த சிறுக்கிமேல எனக்கு அப்போவே சந்தேகம் இருந்துச்சு வீரா, உன்னை நல்லா ஏமாத்திட்டா” ருபிதா ஒருபக்கம் கத்திக்கொண்டிருக்க,

இன்னொருபுறம் மனோஜனோ, “வீரா, இதை இப்படியே விட கூடாது. இந்த வீடு கூட அந்த பொண்ணு பெயருலதான் இருக்கு. திடீர்னு வந்து சொத்தை திருப்பிக் கேட்டுட்டா எங்களுக்குதான் பிரச்சினை. அவள மொதல்ல கண்டுபிடி, இப்படி நடந்துக்கிட்டு நம்ம மானத்தை வாங்கினதுக்கு மானநஷ்ட ஈடா இந்த சொத்தையே எழுதிக் கேப்போம்” என்றார் கொஞ்சமும் வெட்கமில்லாமல். அவர்களுக்கு அவர்களுடைய பயம். கயல் மூலமாக கிடைத்த சொத்துக்கள் கை நழுவி போய்விடுமோ என்று.

ஆனால், சோஃபாவில் ஒரு இடத்தையே வெறித்தவாறு அமர்ந்திருந்தவனோ எந்த பதிலும் பேசவில்லை. கை முஷ்டியை இறுக்கி முகம் சிவந்துப் போய் கோபத்தை பற்களைக் கடித்து அடக்கிக்கொண்டிருந்தான். தன் கோபத்தை காட்டும் சந்தர்ப்பமும் விதமும் இதுவல்ல என்பது மட்டும் புரிந்திருந்தது அவனுக்கு.

கத்திவிட்டு நகர்ந்த இரு ராட்சசர்களும் அறியவில்லை, இன்றே நமக்கான கடைசி நாளென்று. அடுத்தநாள், காலையிலேயே வீரஜ் வீட்டிலிருந்து வெளியேறியிருக்க, மனோஜன் சோஃபாவில் அமர்ந்திருந்தார் என்றால், கயலை பற்றி யோசித்தவாறு குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்தார் ருபிதா.

சரியாக, ருபிதாவுக்கு ஒரு அழைப்பு. அழைப்பை ஏற்றவர், மறுமுனையில் கேட்ட குரலில், “வீரா…” என்று கேள்வியாக அழைத்து, “காலையிலேயே எங்க போன நீ, ஏதாச்சும் பிரச்சினையா? ஒருவேள, அந்த ஓடுகாலிய பத்தி ஏதாச்சும் தெரிஞ்சதா?” ஆர்வமாகக் கேட்க, மறுமுனையில் அவன் என்ன சொன்னானோ, “அங்க எதுக்கு போன வீரா? இரு, பத்து நிமிஷத்துல நாங்க அங்க இருப்போம்” என்றுவிட்டு கணவரிடம் விடயத்தைச் சொன்னார்.

மனோஜனும், ‘அவன் அங்க என்ன பண்றான்?’ உள்ளுக்குள் யோசித்தவர், அடுத்தநொடி தன் மனைவியை அழைத்துக்கொண்டு தங்களின் பழைய வீட்டிற்குத்தான் சென்றார். உள்ளே “வீரா…” என்றழைத்தவாறு நுழைந்தவர்களோ சட்டென்று மூக்கை பொத்திக்கொண்டனர். காரணம், வீடு முழுக்க பெற்றோல் வாடை.

“ஏய், என்னடீ இது? வியாபார சாமானுங்க இருக்குற இடத்துல பெற்றொல் வாடை அடிக்குது. தரையெல்லாம் ஏதோ பிசுபிசுன்னு இருக்கு. எவன்டீ இந்த வேலை பார்த்து வைச்சது? வீரா…” மனோஜன் கோபமாகக் கத்த, முகத்தை சுழித்தவாறு உள்ளிருந்த அறைக்கு விரைந்தார் ருபிதா. அங்கோ அவர்களின் வளர்ப்பு மகன் சுவற்றை வெறித்தவாறு ஒரு மரக்கதிரையில் அமர்ந்திருக்க, பெரியவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

“வீரா, என்ன இது?” ருபிதா அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க, “ஆங் அம்மா…” அப்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்ததுபோல் மலங்க மலங்க விழித்தவன், “இந்த வீட்டை ரினியூ பண்ணா ரொம்ப நல்லா இருக்கும்ல!” என்று சம்மந்தமே இல்லாது ஒரு கேள்வியைக் கேட்டு வைக்க, ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் பெரியவர்கள்.

“அது… அதுக்கென்னப்பா? பண்ணலாம். இப்போதைக்கு நம்ம மளிகைச் சாமானுங்களதான் இங்க ஸ்டோர் பண்ணி வச்சிருக்கோம். கொஞ்சம் ரினியூ பண்ணி இதையே ஒரு குட்டி மளிகை கடையா மாத்திரலாம்” என்ற மனோஜன், “அதை விடுப்பா, வீடு முழுக்க ஏன்ப்பா பெற்றோல் வாடை அடிக்குது. என்ன பண்ணி வச்சிருக்க நீ?” கோபமாகக் கேட்க, அவனோ சுவற்றிலிருந்த இரு பென்சில் கீறல்களை விழிகள் கலங்க வெறித்துக்கொண்டிருந்தான்.

அறைக்குள் மெல்ல நுழைந்து ருபிதாவும் அவன் பார்வை செல்லும் திசையை புரியாது பார்த்துவிட்டு தன் கணவனை பார்க்க, அவரும் ருபிதாவினருகே வந்து நின்று வீரஜைதான் உற்று நோக்கினார்.

“சின்னவயசுல நீங்க வேலை வேலைன்னு ரொம்ப பிஸியா இருப்பீங்க. ஏன்ஜல் என்னை கவனிச்சிக்க மாட்டா. ரொம்ப ஏக்கமா இருக்கும். அப்போ அப்பா, அம்மாவ நினைச்சு அவங்கள சுவத்துல வரைஞ்சி விளையாடுவேன். அதுக்கும் நீங்க என்னை அடிப்பீங்க” வீரஜ் மெல்லிய குரலில் சொல்ல, “ஹிஹிஹி… அது எல்லா வீட்டுலேயும் நடக்குறதுதானேப்பா, சுவத்துல கிறுக்குறது தப்பு, அதான் அம்மா உன்னை அடிச்சேன். அதைப்போய் இப்போ பேசிக்கிட்டு! அய்யோ அய்யோ…” சிரித்துக்கொண்டார் ருபிதா.

அவனும் சிரித்தவாறு தலையசைத்தவன், “ஆனா ஒன்னும்மா, நான் அப்பா அம்மாவுக்காக ரொம்ப ஏங்குறேன். அவங்க பாசத்தை இழந்துட்டேன்” வலி நிறைந்த குரலில் சொல்ல, “என்ன பேசுற வீரா, உன் பக்கத்துலதான் நாங்க இருக்கோம். ஏதோ நாங்க மொத்தமா போய் சேர்ந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்க?” என்ற மனோஜன், அடுத்து வீரஜ் சொன்ன வார்த்தையில் அதிர்ந்து விழித்தார்.

“என்னை பெத்தவங்கதான் நான் பொறக்கும் போதே இறந்துட்டாங்களே மிஸ்டர் என்ட் மிஸஸ் மனோஜன்” அழுத்தமாக அவன் வார்த்தைகள் வெளிவர, மனோஜனின் விழிகள் பிதுங்க, ருபிதா சட்டென்று திரும்பி தன் கணவரைதான் நோக்கினார்.

“என்..என்ன சொல்ற வீரா? அப்படியெல்லாம் எதுவும்…” திக்கித்திணறி பேசிக்கொண்டு ருபிதா அவன் தோளைத் தொட, ஆவேசமாகத் திரும்பியவன், “என்னை தொடாத நீ! என் அப்பா அம்மாவ கொன்னுட்டியே, அவங்கள பாசத்தை அனுபவிக்க விடாம பண்ணிட்டியே! ஆஆஆ…” ஆவேசமாகக் கத்தி தலையை பிய்த்துக்கொள்ள, அவனின் அளவுக்கும் மிஞ்சிய கோபத்தில் மிரண்டுவிட்டனர் இருவரும்.

என்ன பேசுவது, என்ன சொல்லி சமாளிப்பது என்பது புரியாது ருபிதாவும் மனோஜனும் நின்றிருக்க, ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை அமைதிப்படுத்திக்கொண்டவன், மெல்ல அறையிலிருந்து வெளியேறியவாறு, “இதுவரைக்கும் எனக்கு கடவுள்மேல நம்பிக்கை இல்லை. ஆனா இப்போ வந்திருக்கு. ஏன்னு சொல்லுங்க, உங்ககிட்ட என்னையே கொண்டு வந்து சேர்த்திருக்கான் பாருங்க. கர்மா இஸ் பூமெரங்” என்றுவிட்டு பாக்கெட்டிலிருந்த தீப்பெட்டியை எடுத்தான்.

பெரியவர்களுக்கோ சப்த நாடியும் அடங்கிவிட்டது. அவர்கள் கொஞ்சமும் இதை எதிர்ப்பார்க்கவில்லை. “வீ…வீரா… எங்களை நம்புப்பா, நாங்க…” அடுத்த வார்த்தை பேசுவதற்கு அவன் விடவில்லை. தீக்குச்சியை உராய்ந்து அவங்களுக்கு நேரே அவன் சுண்டிவிட, அவர்களுக்கு எதிரே தரையில் விழுந்த தீக்குச்சியோ ஏற்கனவே தரை முழுக்க ஊற்றியிருந்த பெற்றோலோடு கலந்து தீக்கடலாக மாறியது.

பெற்றோலின் வேலை வேகவேகமாக தீ பரவ, நெருப்பிற்கு நடுவில் அந்த இடமே அதிரும் வண்ணம் கதறினர் மனோஜனும் ருபிதாவும். வீரஜோ கண்ணீரோடு அவர்கள் கதறுவதை வெறித்துக்கொண்டு நின்றிருந்தவன், தன்னைச் சுற்றி தீ பரவியதும்தான் நிகழ்காலத்தை உணர்ந்தான். கூடவே, கயலுக்கு அவன் கொடுத்திருந்தை வாக்கும் அவனின் ஞாபகத்திற்கு வந்தது.

அதேநேரம் வீட்டின் அரைப்பகுதி தீயினால் பரவியிருக்க, சுற்றியிருந்த குடியிருப்பு மக்களோ வேகவேகமாக காவல்துறைக்கு அறிவித்துவிட்டு தண்ணீர் கொண்டு வந்து ஊற்ற ஆரம்பித்தனர். காவல்துறை மூலம் தீயணைப்பு படைக்கும் விடயம் சொல்லப்பட, சரியாக கதவை உடைத்துக்கொண்டு பாதி உடல் எரியும் நிலையில் கத்திக்கொண்டு ஒரு உருவம் பற்றியெரியும் வீட்டிலிருந்து வெளியே வர, சுற்றியிருந்த மக்களோ அலறிவிட்டனர்.

வெளியே வந்ததுமே அந்த உடல் நிலத்தில் விழுந்து தரையில் புரள ஆரம்பிக்க, சுற்றியிருந்தவர்கள் முதலுதவியாக ஈரத்துணியால் மூடி நெருப்பை அணைத்தார்கள் என்றால், அடுத்தகணமே அங்கிருந்தவர்கள் ஆம்பியூலன்ஸ்ஸிற்கு தகவலை தெரிவித்திருந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் வீரஜின் பாதி எரிந்த உடல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட, அவன் உடல் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழையும் அதேசமயம் உயிரில்லா உடலாக தன் முன்னே கிடந்த தன் மகனின் பிரிவை தாங்க முடியாது, “அபி…” என்று அந்த இடமே அதிரும் வண்ணம் கத்தினார் சத்யா.

தன்னை பெற்றவர்களைத் தேடி இரண்டு நாட்களுக்கு முன் ஊருக்கு வந்தவன், ராமர் அனாதை இல்லத்தில் விசாரித்தும் அவர்களை பற்றிய தகவல் கிடைக்காத விரக்தியில் வேகமாக காரை ஓட்டியிருக்க, லோரியில் மோதி அத்தனை பெரிய விபத்துக்குள்ளாகியிருந்தான். ஒருநாள் முழுதும் சிகிச்சை அளித்தும் தலையில் விழுந்த பலமான அடியில் அபியை காப்பாற்ற முடியவில்லை.

ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன் கணவனை பிரிந்த வேதனையிலிருந்த சத்யாவுக்கு உடல் ரீதியாக ஏதோ பிரச்சினை வேறு இருக்க, மகனின் பிரிவில் வாயில் நுரைத் தள்ளி கை கால்கள் செயலிழந்து அப்படியே தரையில் விழுந்துவிட்டார். அவர் மயக்கத்திலிருந்து கண் விழிக்கும் போது கேட்ட விடயம்தான் தாதிகள் பேசிக்கொண்ட வீரஜின் சிகிச்சை.

“உடம்பு முழுக்க எரிஞ்சும் அந்த பையன் சாகலடீ, எப்படியோ நம்ம டாக்டர் காப்பாத்திட்டாரு. முகத்திலிலுந்து நெஞ்சு வரையும் ரொம்ப எரிஞ்சிருக்கு. பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. அவனுக்கு ஃபேஸ் ட்ராஸ்பெரன்ட் பண்ணலாம்னு டாக்டர் சொல்றாரு. என்ன பண்ண போறாரோ? என்ட், அவனுக்கு எந்த சொந்த பந்தமும் இல்லை போல, இப்போ வரைக்கும் அந்த பையன தேடி யாரும் வரல”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சத்யா என்ன நினைத்தாரோ, தன்னை பரிசோதிக்க வந்த வைத்தியரிடம் தன் மகனிடமிருந்து வீரஜுக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளுமாறு அனுமதி வழங்க, ஆச்சரியத்துடன் கூடிய சந்தோஷத்துடன் நன்றி செலுத்திய மருத்துவர்களோ உடனே அதற்கான நடவடிக்கைகளை பார்க்க ஆரம்பித்தனர்.

அபியின் முகம் வீரஜிற்கு கச்சிதமாக பொருந்தி, முகமாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிய, வீரஜுடைய அடையாளமும் மாறியது. தன் மகனுக்கான இறுதிக் கிரியைகளை கண்ணீரோடு முடித்த சத்யா, அடுத்து வந்து நின்றது வீரஜ் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிகிச்சை அறைக்குதான்.

மயக்கத்திலிருந்து கண்விழித்தவன், தன் முகத்தைப் பார்த்துவிட்டு தன்னை சுற்றி நடப்பது தெரியாது தானிருந்த அறையில் கத்தி ஒருவழிப்படுத்த ஆரம்பிக்க, சுற்றியிருந்த தாதிகளுக்கும் பணியாளர்களுக்கும் அவனை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆனால், ஓரமாக நின்று அவனை அமைதியாக பார்த்திருந்த சத்யாவுக்கு தன் மகனே மீண்டும் எழுந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்வதுபோல்தான் தோன்றியது.

வேகமாக தான் அமர்ந்திருந்த சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு வந்தவர், வீரஜின் கையைப் பற்றி, “அமைதியா இரு அபி!” என்று கத்த, கோபமாக அவர் புறம் திரும்பியவன், கையை உதற ஆரம்பிக்க, அவரோ விட்டபாடில்லை. அம்மாவின் பிடிவாதம் மகனின் பிடிவாதத்தையே மிஞ்சுமல்லவா!

வீரஜிற்கு அவர் யாரென்று கூட தெரியவில்லை. அபியாக நினைத்து வீரஜின் தலையை கண்ணீரோடு கோதிய சத்யா, “அபி…” என்று அழுகையோடு அழைத்து அவனை அணைத்துக்கொள்ள, அதிர்ந்து விழித்தவன், அவரின் அணைப்பில் அமைதியா நின்றுக்கொண்டான். ஏனோ சத்யா அம்மாளிடம் அவனால் கோபத்தை காட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதன்பிறகு மருத்துவமனையிலிருந்த நாட்கள் எல்லாம் சத்யாதான் வீரஜை கவனித்துக்கொண்டது. அவரோ தன் குடும்பம் பற்றி, தன் மகன் பற்றி பேசிக்கொண்டே இருப்பார் என்றால், வீரஜோ எதுவும் பேசாது அமைதியாகவே கேட்டுக்கொண்டிருப்பான். அவனிடத்தில் அவர் கேட்ட ஒரே வார்த்தை கயல்.

சிறிதுநேரம் அமைதியாக இருப்பவன், சட்டென்று விழிகள் கலங்கி அழ ஆரம்பிப்பான். அப்போது அவன் அடிக்கடி உச்சரிக்கும் பெயர்தான் அது.

மருத்துவமனையிலிருந்து சத்யா தங்களின் பீச் ஹவுஸிற்கே அவனை அழைத்துச் சென்றிருக்க, ஒரு இடத்தையே வெறித்தவாறு இருக்கும் வீரஜை பார்த்தவர் என்ன நினைத்தாரோ? இரண்டு மாதங்களில் வியாபார விடயமென்ற பெயரில் அவனை லண்டனுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

பல வருடங்களாக அவன் காத்திருந்த விடயம். இந்த புது குடும்பத்தின் மூலமாக அவனுக்கு கிடைத்திருக்க, ஆனால் அதை சந்தோஷமாக அனுபவிக்கும் நிலையில் அவனில்லை. தன் முகத்தை அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக்கொண்டவனுக்கு கயலை தேடவும் மனம் வரவில்லை.

ஆறுமாதங்கள் அங்கிருந்த தன் வியாபாரத்தைக் கவனித்தவர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்ப, வீரஜோ அங்கேயே இருப்பதாக சொல்லிவிட்டான். சத்யாவும் அவனை வற்புறுத்தவில்லை. அடிக்கடி தோன்றும் போது அவரே மூன்று மாதங்களுக்கு ஒருதடவை அவனை பார்த்துவிட்டு வருவார். அவரைப் பொருத்தவரையில் தன் மகன் அபிமன்யுவே உயிருடன் இருப்பது போன்ற பிரம்மை அவருக்கு.

நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியவன், முதலில் சென்று நின்றது கயலை தேடி கயலின் சொந்த ஊரிற்குதான். அங்கு சென்று பார்த்தவனுக்கு வெறும் ஏமாற்றமே. கர்ணாவோ யாரென்று தெரியாது விழிக்க, தான் யாரென்பதையும் நடந்ததையும் சொன்ன வீரஜுக்கு அவரிடத்திலிருந்து கிடைத்தது பளீரென்ற அறை.

ஆனால், அடுத்தநொடியே தங்கள் வீட்டுப்பெண்ணை இத்தனை வருடங்கள் தவறாக நினைத்திருந்ததை உணர்ந்து அழுதேவிட்டார் அவர். கயலிருக்கும் இடம் தெரியாது அங்கிருந்து வீட்டுக்கு வந்தவன், கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத ஒன்று தன்னவளை தன் வீட்டிலேயே காண்போமென்று.

ஆனால், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள அவனை தடுத்தது அபியின் முகம்.

இருந்தும் தன் கட்டுப்பாட்டையும் மிறி கயலை நெருங்குபவன், அவள் முகத்தில் தெரியும் அந்நியத்தன்மையில் மொத்தமாக உடைந்துப் போய்விடுவான்.

நடந்தது அத்தனையும் சொல்லி முடித்தவனின் முகம் அழுததால் சிவந்துப் போயிருக்க, நடந்தவற்றை கேட்டு தூக்கி வாரிப்போட்டவளாக ஆடிப்போய் நின்றிருந்தாள் கயல்.

“லுக், உன் வீரஜ் செத்துட்டான். இது அபி! அபிமன்யு! வீர் வீர்னு என்கிட்ட நெருங்காத!” அழுத்தமாக உரைத்துவிட்டு வீர் அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்திருக்க, “கயல், நீ எதுவும் யோசிக்காத! அண்ணா சீக்கிரம் உன்னை புரிஞ்சுப்பாரு” என்றான் யுகன் ஆறுதலாக.

ஆனால், போகும் தன்னவனையே பார்த்திருந்த கயலின் இதழ்களோ மென்மையாக புன்னகைத்தன. கூடவே, அபிக்கும் வீரஜுக்கும் இடையிலான உறவு தொடர்பாக இன்னொரு சந்தேகம் வேறு அவளுக்குள்.