ரகசியம் 26 💚

eiHO5Z010713-bcb09894

அடுத்தநாள், நேற்று நடந்த சம்பவத்தில் வீட்டிலிருக்கும் எல்லோருமே அறையிலிலேயே அடைந்துக் கிடக்க, இரவு முழுக்க தூங்காது தன்னவளுடனான நினைவுகளையே யோசித்தவாறு இரவை கழித்த வீரஜுக்கு அப்போதுதான் விழிகள் மெல்ல தூக்கத்தில் மூடின.

சரியாக, “வீர்…” என்றொரு குரல். மெல்ல அரைத்தூக்கத்தில் விழித்தவனுக்கு எதிரே மங்களகரமான தோற்றத்தில் நெற்றி வகுட்டில் குங்குமத்துடன் கயல் தெரிய, “பாப்பா…” சிரிப்போடு மென்மையாக அழைத்தவன், “இப்படிதான் என் முன்னாடி இருப்ப, அப்றம் கண்ணை மூடி திறந்தா சட்டுன்னு காணாம போயிடுவ” என்றுவிட்டு விழிகளை அழுந்த மூடி திறந்துப் பார்த்தான். ஆனால், இம்முறை அவளவன் மாயமாகவில்லை.

பளிச்சென்ற சிரிப்போடு அவள் நின்றிருக்க, பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தவன், “இங்க என்ன பண்ற?” பற்களைக் கடித்துக்கொண்டுக் கேட்க, “ராமனிருக்குமிடமே சீதைக்கு அயோத்தி” என்றாள் கயல் சிரிப்போடு.

அவனோ கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு அவளை முறைத்துப் பார்த்தவன், “உன்னால எப்படி இந்த முகத்தை ஏத்துக்க முடியுத? இது வீரஜ் கிடையாதுன்னு உனக்கு தோனுதில்லையா?” கீழுதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கியபடிக் கேட்க, விரக்தியாக புன்னகைத்தவள்தானே அறிவாள் அவளுள் நடக்கும் மனதிற்கும் மூளைக்குமிடையேயான போராட்டத்தை.

மனம் தன்னவனென தெரிந்ததிலிருந்து ஏற்றுக்கொண்டாலும் முகத்தைப் பார்த்து மூளை சற்று மனதோடு போராட்டம் செய்யத்தான் செய்கிறது.

அவனை மெல்ல நெருங்கியவள், “என்னை பொருத்தவரைக்கும் காதலோட முதல்படி ஈர்ப்பு. முகத்தை பார்த்து உருவாகுற ஈர்ப்பு அப்றம் காதலா மாறுது. ஈர்ப்பு முகத்தோட சம்மந்தப்பட்டது. காதல் மனசோட சம்மந்தப்பட்டது” என்றுவிட்டு அவன் இடதுபக்க நெஞ்சை தொட்டு, “நான் உங்கள காதலிக்கிறேன் வீர். இதோ இந்த மனசு என்னோட வீரஜ். இந்த முகம் எனக்கு தேவையில்லை” காதலோடுச் சொல்ல, விழி விரித்து சில நொடிகள் அவளை வெறித்தவனுக்கு, இப்போதும் அவளுடைய காதல்மேல் அத்தனை ஆச்சரியம்.

ஆனால், உடனே தன்னை சுதாகரித்துக்கொண்டு, “சும்மா உளராத! மொதல்ல இங்கிருந்து கிளம்பு நீ” என்ற வீரஜ், கயலை இழுத்துக்கொண்டு அறை வாசலை நோக்கிச் செல்ல, “அய்யோ வீர், கொஞ்சம் இருங்க. எனக்கொரு டவுட்டு” அவனின் இழுப்பிற்கேற்றவாறு காலை தரையில் தேய்த்துக்கொண்டு கத்தினாள் கயல்.

அவனும் கையை விட்டு அவளை ஒற்றைப் புருவத்தைத் தூக்கியவாறு கேள்வியாக நோக்க, “அது… அது வந்து… நீங்களும் அபி மாமாவும் ட்வின்ஸ்ஸா?” தன் சந்தேகத்தை தயங்கியபடி கயல் கேட்க, “எதே மாமாவா?” அவளை கோபமாக முறைத்தவன், அவள் பாவமாக முகத்தை வைத்ததும், “இல்லை” என்றான் ஒற்றை வார்த்தையில்.

கயலுக்கு அதிர்ச்சி! இதுவரை அவள் கேட்ட விடயங்களிலிருந்து அவள் யூகித்த ஒன்றுதான் இருவரும் சகோதரர்களாக இருக்கக் கூடுமென. ஆனால், வீரஜின் மறுப்பு அவளுக்கு மேலும் குழப்பத்தைக் கொடுத்தது.

“இல்லைங்க, நான் தெரிஞ்சிக்கிட்ட வரைக்கும் அத்தைக்கு இரட்டை குழந்தைங்க. ஒன்னு நீங்கன்னா இன்னொன்னு கண்டிப்பா…” அவள் ஏதோ சொல்ல வர, வேறுபுறம் பார்வையைத் திருப்பி சுவற்றை வெறித்தவாறு, “கண்டிப்பா அது அபி கிடையாது. ராமர் அனாதை இல்லத்துல என்னை பத்தி விசாரிக்க போனப்போ சில விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டேன்.  டாக்டர் பிரபாகரன்தான் என்னையும் என் கூட பொறந்தவனையும் ஆசிரமத்துல சேர்த்திருக்காரு. அம்மாவுக்கு நடந்த ஆக்சிடன்ட்ல அவன் பொறக்கும் போதே ஏதோ பிரச்சினை இருந்திருக்கு. ஆசிரமத்துல சேர்த்த இரண்டேநாள்ல அவன் இறந்துட்டான்” வீரஜ் சொல்ல, “அப்போ அபி?” திகைப்போடு கேட்டாள் கயல்.

“அபியோட உண்மையான அம்மா அப்பா யாருன்னு எனக்கு தெரியல. சத்யா அம்மாவுக்காக அவன பத்தியும் நான் விசாரிச்சேன். என்னை ஆசிரமத்துல சேர்த்த அதே மாசம்தான் அவனையும் அவனோட ட்வின் ப்ரதரையும் ஆசிரமத்துல சேர்த்திருக்காங்க. சத்யா அம்மா அபிய தத்தெடுக்க, யாரோ ஒரு ஃபேமிலி இன்னொருத்தனை தத்தெடுத்திருக்காங்க. இதை தவிர வேறெதுவும் அவன பத்தி என்னால தெரிஞ்சிக்க முடியல” அவன் சொல்ல, “அப்போ அபி மாமா உங்க ப்ரதர் இல்லையா?” என்று கேட்டு மென்மையாகப் புன்னகைத்தாள் கயல்.

“மறுபடியும் மாமாவா?” அவளின் அபியை நோக்கிய மாமாவென்ற அழைப்பில் மீண்டும் பொங்கியவன், அவளை தரதரவென இழுத்துச் சென்று அறைக்கு வெளியே தள்ளியிருக்க, உதட்டைப் பிதுக்கிக்கொண்டு பூட்டிய கதவையே பார்த்திருந்த கயல், எதேர்ச்சையாகத் திரும்ப, அவள் பார்வையில் சிக்கினான் யுகன்.

அவனோ அலைப்பேசியை சோகமாகப் பார்த்தவாறு நடந்து வர, “யுகன்…” என்றழைத்தவள், “என்னாச்சு?” அவனின் வாடிய முகத்தைப் பார்த்து புரியாதுக் கேட்க, “ஒன்னுஇல்லை கயல், ஆமா… நீ அண்ணன் ரூம் முன்னாடி என்ன பண்ற? என்ட், பார்க்கவே ரொம்ப வித்தியாசமா தெரியுற” அவளிருக்கும் தோற்றத்தை மேலிருந்து கீழ் பார்த்து மெல்லிய புன்னகையோடுக் கேட்க, சலித்துக்கொண்டவாறு, “உங்க அண்ணனை கரெக்ட் பண்ண உதவி பண்ணுங்க சின்ன மாமா” பாவமாகக் கேட்டாள் அவள்.

“எதே, அபி அண்ணாவையா?” யுகனின் கேள்வி அதிர்ச்சியாக வர, “வீரஜ்” என்றாள் கயல் பதிலுக்கு அழுத்தமாக. அதில் யுகனின் முகமே வாடிவிட்டது.

“ஆமா வீரஜ்தான். பார்க்குறதுக்கு அவர் அபி அண்ணாவா தெரிஞ்சாலும் என் அபி அண்ணா மாதிரி யாரும் கிடையாது. என் அண்ணா தினமும் என் கூட சண்டை போடுவாரு. வெளியில கோபமா காமிச்சிக்கிட்டாலும் அவர் ஒருநாள் பேசாம இருந்தா பைத்தியமே பிடிச்சிடும். அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன் கயல்” யுகனின் வார்த்தைகள் தன் அண்ணனை நோக்கி ஏக்கத்தோடு வெளிவர, விழிகள் கூட சற்று கலங்கித்தான் போகின. அவனுடைய ஏக்கத்தை கயலும் உணராமலில்லை.

பரிவாக அவள் அவனை நோக்க, கண்ணீரை விழிகளை சிமிட்டி அடக்கிக்கொண்டவன், அதற்குமேல் அங்கு நிற்காது, “சோரி கயல், ஏதோ யோசனையில ஏதேதோ உளறிட்டேன்” என்றுவிட்டு நகரப்போய் சற்று நின்று, “அது வந்து… தேனு உன் கூட பேசினாங்களா?” என்று கேட்டான் சந்தேகமாக.

கயலும் புருவத்தை நெறித்து யோசித்தவாறு, “நடந்த கலவரத்துல அவ கூட பேச முடியல, ஏன் என்னாச்சு?” என்று கேட்டுவிட்டு அவனை உற்று நோக்க, “ஆங்… நத்திங். சும்மாதான் கேட்டேன்” படபடப்பாக சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தான் அவன்.

போகும் அவனையே அவள் புரியாது பார்த்துக்கொண்டிருக்க, “யாருக்கு யாரை கரெக்ட் பண்ணணும்?” அவளின் பின்னால் கேட்டது ஒரு குரல். திடுக்கிட்டு விழித்தவள், “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தவாறு திரும்ப, அவளெதிரே கயலை உற்றுப் பார்த்தவாறு சத்யா சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்க, அவரருகே நின்றிருந்தார் சீதா.

கயலோ திருதிருவென விழிக்க, அவளை மேலிருந்து கீழ் பார்த்த பெரியவர்களோ ஒருவரையொருவர் பார்த்து மென்மையாக புன்னகைத்துக்கொண்டனர். “ரொம்ப அழகா இருக்கம்மா” நெற்றி வகுட்டில் குங்குமத்தோடு சேலையில் நின்றிருந்தவளைப் பார்த்து சத்யா அம்மாள் சொல்ல, வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்ட கயல், “ஆமா… என்ன சொல்றான் அவன்?” அபியின் அறையை எட்டிப் பார்த்துக் கேட்ட சீதா அம்மாளின் கேள்வியில் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டாள்.

“அவரை எப்படி சமாளிக்குறதுன்னு எனக்கு தெரியல சீதாம்மா, அவருக்கு என்ன பிரச்சினைன்னு எனக்கு புரியல. நானே ஏத்துக்க தயாரா இருக்கேன். ஆனா அவரு…” அவள் நிறுத்த, கயலருகே வந்து அவள் தலையை வாஞ்சையுடன் தடவிய சீதா, “அவனோட நிலைய நீதான் புரிஞ்சிக்கணும் கயல்விழி. வீரஜ் தன்னோட அடையாளமா இருக்குற அபிய ஏத்துக்க முடியாம திண்டாடிக்கிட்டு இருக்கான். என்ட், அவனோட ஒரே பயமே உன் கண்ணுல அவனை பார்க்கும் போது தெரியுற அந்நியத்தன்மைதான்” என்று பொறுமையாக புரிய வைத்தார்.

“எனக்கு புரியுது சீதாம்மா, நான் என்னோட வீர ரொம்ப காதலிக்கிறேன். இத்தனைநாள் அவர் இறந்துட்டதா நினைச்சிட்டு இருந்தேன். இப்போ என் முன்னாடி இருக்காரு. ஆனா, வேறொரு முகத்தோட. எனக்கும் மனசுக்குள்ள ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. சொந்த புருஷன் வேறொரு முகத்தோட நான்தான் உன் புருஷன்னு வந்து நின்னா அந்த மனைவி மனசு எவ்வளவு பாடுபடும்னு உங்களால உணர முடியும். இருந்தாலும் அதை ஏத்துக்கிட்டு அவரோட வாழ நான் தயாரா இருக்கேன். அவர் இதை புரிஞ்சிக்காட்டாலே போதும்” கயலின் வார்த்தைகள் தன்னவனை நினைத்து ஏக்கத்தோடு வந்தன.

“கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகும்” சீதா வேதனையோடுச் சொன்னவாறு அவளை அணைத்துக்கொள்ள, இத்தனைநேரம் அவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சத்யா அம்மாள் எதுவும் பேசவில்லை. அவரின் சிந்தனை முழுக்க தன் மகனின் முகத்துக்கு பின்னாலிருக்கும் வீரஜை நினைத்துதான்.

அன்றிரவு எல்லாரும் ஒன்றாகவே இரவுணவை முடிக்க, கயல் ஓரக்கண்ண்ணால் தன்னவனையே பார்த்தவாறு உணவை மெழுங்கினாள் என்றால், வீரஜோ நிமிர்ந்தும் பார்க்கவில்லை. தட்டிலே முகத்தைப் புதைத்திருந்தவன், ஏதோ ஒரு யோசனையோடு உணவை அளந்துக்கொண்டிருக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்… அபி” குரலை செறுமி தன் மகனை அழைப்பதுபோலே அழைத்தார் சத்யா.

அவனும் நிமிர்ந்துப் பார்த்து, “சொல்லுங்கம்மா” என பதிலளிக்க, “சாப்பிடாம என்ன தட்டை அளந்துட்டு இருக்க?” கண்டிப்புத் தாயாக சத்யா கேட்க, “இல்லைம்மா, என்னால ஒரு நிலையா இங்க இருக்க முடியல, உங்களுக்கே தெரியும். அதான், லண்டனுக்கே கிளம்பலாமேன்னு…” வீரஜ் தயக்கமாக இழுக்க, அதிர்ந்துவிட்டாள் கயல்.

சத்யாவோ யோசனையோடு புருவத்தை நெறித்தவர், கயலை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு “உன் விருப்பம் அபி” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்க, சுற்றியிருந்தவர்களோ கயலை பாவமாக பார்த்தார்கள் என்றால், மூக்கு விடைக்க தன்னை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாததுபோல் எழுந்துச் செல்லும் தன்னவனை முறைத்துப் பார்த்தாள் அவனவள்.

அடுத்தநாள் காலை, கற்களில் பட்டுத் தெறித்து நீர் வேகமாக மேலிருந்து கீழாக ஓடி குளத்தோடு கலக்க, அந்த செயற்கை நீர்வீழ்ச்சியை இறுகிய முகமாக வெறித்திருந்தான் வீரஜ். பார்வையை தாழ்த்தி நீரில் தன் முகத்தைப் பார்த்தவனின் மனம் ஏனோ தன்னை தானே ஏற்க மறுத்தது. ஒன்று இரண்டல்ல நான்கு வருடங்களாக அவன் அனுபவிக்கும் வேதனை அது.

காலால் முகம் தெரிந்த நீர்ப்பகுதியை அவன் கலைத்துவிட, இருப்பதை இருப்பது போலவே பிரதிபலிக்கும் நீரில் தெரியும் விம்பத்தை மாற்ற முடியுமா என்ன?

ஆழ்ந்த மூச்செடுத்து சிவந்த முகமாக அவன் வானத்தை வெறிக்க, “மறுபடியும் என்னை விட்டு போக போறீங்களா வீர்?” என்று பின்னாலிருந்து கேட்டது கயலின் குரல்.

முதலில் திடுக்கிட்ட வீரஜ் பின் சுதாகரித்து, “நீ இங்க என்ன பண்ற? எப்போ பாரு என் பின்னாடியே திரிஞ்சிக்கிட்டு இருப்பியா, வேற வேலையே இல்லையா உனக்கு?” திரும்பிப் பார்க்காது கடுப்பான குரலில் கேட்க, “உங்க பின்னாடியே நாய்குட்டி மாதிரி வர்றேன்னு தெரியுதே, அதுவரைக்கும் சந்தோஷம்தான். அப்போவும் சரி இப்போவும் சரி உங்களுக்காக என்னை ரொம்ப ஏங்க வைக்குறீங்க நீங்க” குற்றம் சாட்டும் குரலில் சொன்னாள் கயல்.

விழிகளை அழுந்த மூடித் திறந்தவனுக்கு அவள் வார்த்தைகளால் இதயத்தில் அத்தனை வலி. அவனும் என்னதான் செய்வான்?  அவனுடைய மனநிலை அப்படி. ஏதாவது ஓர் சந்தர்ப்பத்தில் அபியின் முகத்துக்கு பின்னாலிருக்கும் வீரஜை அறியாது தன்னவள் தன்னை அந்நியப்பார்வை பார்த்துவிடுவாளோ என்ற பயம் அவனுக்குள்.

எதுவும் பேசாது விழிகளை சிமிட்டி கண்ணீரை அடக்கியபடி அவன் நின்றிருக்க, கயலோ தன் பேச்சை விட்டபாடில்லை. அவன் அவளை பிரிந்து செல்வதாக சொன்னதிலிருந்து அத்தனை ஆத்திரம் அவளுக்குள்.

“நீங்க என்னை மட்டுமில்ல யுகா மாமாவ கூட கஷ்டப்படுத்ததான் செய்றீங்க. ஒருநாளாச்சும் அவர் கூட உக்கார்ந்து பேசிருப்பீங்களா? அவரோட அண்ணனுக்காக அவர் ரொம்ப ஏங்குறாரு வீர்” அவள் பட்டென்று சொல்லிவிட, வேகமாகத் திரும்பி, “என்ன பாப்பா சொல்ற?” வீரஜ் அதிர்ந்துக் கேட்க, சரியாக, வாசற்கதவை தாண்டி உள்ளே நுழைந்தது ஒரு கார்.

தன்னை மீறி தன்னவளை பாப்பா என்றழைத்ததை வீரஜும் உணரவில்லை. சிந்தனை திசை மாறியதில் தன்னவன் அழைத்த அழைப்பை கயலும் உணரவில்லை.

இருவருமே உள்ளே நுழைந்த காரை புரியாது நோக்க, போர்டிகாவில் நின்ற காரிலிருந்து இறங்கிய கர்ணாவைப் பார்த்ததும், “சித்தப்பா…” உற்சாகமாக அழைத்தவாறு கயல் துள்ளிக் குதித்து ஓட, தன்னை நோக்கி மான்போல் சந்தோஷத்தோடு வந்த தான் பெறாத மகளைப் பார்த்ததும் இத்தனைநேர பயணக்களைப்பே தூரப்போய்விட்டது அவருக்கு.

கூடவே, குங்குமத்தோடு அவளிருந்த தோற்றத்தைப் பார்த்தவருக்கு கயலுக்கு உண்மை தெரிந்துவிட்டதென புரிந்ததோடு, ஆனந்தத்தில் விழிகளில் லேசாக நீர் கசிந்தது.

“உன்னை பார்க்கும் போதே தெரியுது நீ எம்புட்டு சந்தோஷமா இருக்கன்னு. நிறைய கஷ்டம் அனுபவிச்சிட்ட, இனி எப்போவும் நீ இப்படியே இருக்கணும்டா. பார்த்தி ரொம்ப சந்தோஷப்படுவான்” கர்ணா சந்தோஷத்தோடு சொல்ல, வெளியில் புன்னகைத்த கயல், ‘க்கும்! உங்க மருமகன் கொஞ்சநேரம் சந்தோஷமா இருக்க விட்டாதானே!’ உள்ளுக்குள் நொடிந்துக்கொண்டவாறு தன் பின்னால் வந்தவனை முறைத்துப் பார்த்தாள்.

அவனோ அவளின் முறைப்பையெல்லாம் கண்டுக்கொள்ளாது, “எப்படி இருக்கீங்க மாமா?” என்று கேட்டவாறு வந்தவன், அவரோடு பேசியவாறு வீட்டிற்குள் நுழைய, காலை கோபமாக தரையில் உதைத்து உதட்டை பிதுக்கியவாறு அவர்களின் பின்னே சென்றாள் கயல்.

உள்ளே சோஃபாவில் அமர வைத்து வீரஜே சத்யா அம்மாளுக்கு கர்ணாவை அறிமுகப்படுத்த, அப்போதுதான்  அறையிலிருந்து வெளியே வந்த ரேவதி, அவரைப் பார்த்ததுமே கலங்கிய விழிகளோடு மன்னிப்பு யாசிப்பது போன்று கைக் கூப்ப, “அய்யோ ரேவதிம்மா, இதெல்லாம் வேணாம். நகரத்துலயிருந்து வந்தவ நீ, உன்னையும் நாங்க புரிஞ்சு நடந்திருக்கணும். அம்மாவோட பேச்சை மாத்திரமே கேட்டு உன்னை கஷ்டப்படுத்தியிருக்க கூடாது. நீ அப்படி ஒரு முடிவெடுக்க நாங்களும் ஒரு காரணம்தான்” கர்ணா பெருந்தன்மையாகச் சொல்ல, ரேவதிக்கோ மனதிலிருந்த கொஞ்சநஞ்ச பாரமும் சுத்தமாக காணாமல்போனது.

அதன்பிறகு பெரியவர்களிடையே பேச்சு வார்த்தைகள் நடக்க, ஏதோ ஞாபகம் வந்தவராக, “வந்த விஷயத்தை சொல்லாம ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கேன். ஒரு வாரத்துல என் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். நீங்கெல்லாம் கண்டிப்பா ஊருக்கு வரணும்” கர்ணா சொல்ல, “நம்ம தேனுக்கா, எப்படி சித்தப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சா?” அதிர்ந்துக் கேட்டவாறு கயல் அவர் பக்கத்திலமர்ந்து கதைக் கேட்க ஆரம்பித்தாள்.

“மாமாவோட அதிரடி அப்படிம்மா, வேணாம்னா விட்டுடுவேணா நான்?” கோலரை தூக்கிவிட்டுச் சொல்லிக்கொண்டு

கர்ணாவும் அவளின் ரவுடித்தனம், அதிரடி, தில்லாலங்கடி கதைகளை வரிசையாகச் சொல்ல, சுற்றியிருந்தவர்களோ இதுவரை நடந்த பிரச்சினைகள் மொத்தமும் மறந்து வாய்விட்டு சிரித்தார்கள் என்றால், தேனுவின் நிச்சயதார்த்த செய்தியை மாடியிலிருந்து கேட்ட யுகன், தன்னை மீறி விழுந்த கண்ணீரை துடைத்தவாறு மீண்டும் அறைக்குள்ளேயே அடைந்துக்கொண்டான்.