eiQG71T52820-f273f56d

ரகசியம் 27💚

எல்லாரையும் தன் மகளின் நிச்சயதார்த்தத்திற்கு அழைத்துவிட்டு கர்ணா அன்றே அங்கிருந்து சென்றிருக்க, அடுத்த இரண்டுநாட்கள் கழித்து மொத்த குடும்பமும் கயலின் ஊரை நோக்கி புறப்பட்டனர்.

ஊருக்குள் நுழைந்ததுமே மொத்தப்பேருக்கும் அத்தனை மனநிம்மதி. இத்தனைநாள் நடந்த வீட்டுப் பிரச்சினைகளால் ஏற்பட்ட மன அழுத்தம், வேதனை இந்த மழைநீரோடு கலந்த மண்வாசனை தீர்த்து வைக்க, மென்புன்னகையுடன் ஜன்னல் வழியே கிராம அழகை பார்த்தவாறு வீட்டை நோக்கிச் சென்றனர் அனைவரும்.

ஆனால், கயலின் பார்வை மட்டும் தன்னவனின் மீதுதான். ஊருக்குள் நுழைந்ததுமே அவளுடைய நினைவுகள் வீரஜை முதல்தடவை மாந்தோப்பில் பார்த்ததிலிருந்து அவனுடன் ஊரை விட்டு சென்ற சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்க்க, வீரஜுக்கும் அதே நினைப்புதான் போலும்!

அந்த நினைவுகளின் தாக்கத்தால் காரின் முன் கண்ணாடி வழியாக பின்சீட்டில் அமர்ந்திருந்த தன்னவளைப் பார்த்தவன், அவள் முறைப்பதைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள, கயலுக்கோ அவனின் கண்டுக்கொள்ளாத பாவனையில் மேலும் கோபம் தாறுமாறாக எகிறியது.

சில நிமிடங்களில் பெரிய வாசற்கதவைத் தாண்டி வீட்டு வளாகத்துக்குள் கார் நுழைய, தன் வீட்டை விடவும் இரண்டு மடங்கு பெரிய நிலப்பரப்பில் மாளிகை போன்றிருந்த கயலின் சொந்த வீட்டைப் பார்த்ததும் ஆச்சரியமாக விழி விரித்தார் சத்யா அம்மாள்.

கயலோ இன்றும் தன்னவனுடன் சேர்ந்தே வீட்டுக்குள் நுழைய அவனை ஆர்வமாகப் பார்க்க, ஆனால் அவனிருக்கும் மனநிலையில் அதெல்லாம் அவனுக்குத் தோன்றவேயில்லை. அவன் பாட்டிற்கு சத்யா அம்மாளின் சக்கர நாற்காலியை தள்ளியவாறு வீட்டிற்குள் நுழைய, உதட்டைப் பிதுக்கியவளுக்கு அடுத்து தன் அம்மாவை சமாளிப்பதற்கே போதும் போதுமென்று ஆகிவிட்டது.

அந்த வீட்டை விட்டு, ஊரை விட்டு, தன்னவனை விட்டு வந்து எத்தனை வருடங்கள் கடந்து விட்டன! இன்று பல வருடங்கள் கழித்து உள்ளே நுழைந்த ரேவதியோ ஆளுயர படமாக தொங்க விட்டிருந்த பார்த்திபனின் முகத்தைப் பார்த்துமே ஓவென்று அழ ஆரம்பித்துவிட, சுற்றியிருந்தவர்களுக்கே அவரின் அழுகையைப் பார்த்து விழிகள் கலங்கிவிட்டது.

என்ன சொல்லி ஏது சொல்லி சமாதானப்படுத்துவதென தெரியாது எல்லாரும் நின்றிருக்க,  சீதா அம்மாள்தான் முன் வந்து அவரை சமாதானப்படுத்தி அறைக்கு அழைத்துச் சென்றார்.

கயலும் போகும் தன் அம்மாவை பார்த்துவிட்டு தந்தையின் படத்திற்கு விளக்கேற்றி, விழியோரத்தில் கசிந்த நீரை சேலை முந்தானையால் துடைக்க, “கயலு…” என்ற தேனுவின் குரல். அந்தக் குரலில் மொத்த கவலைகளும் பறந்துப் போக, “தேனு…” என்று உற்சாகமாக கயல் திரும்ப, கயலை நோக்கி ஒரு அடி வைத்தவள், ஓரமாக தன்னையே ஏக்கமாக பார்த்தவாறு நின்றிருந்த யுகனை அப்போதுதான் கவனித்தாள்.

அவனோ அவள் பார்த்ததும் முகபாவனையை மாற்றி மெல்ல புன்னகைக்க, முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்கவென கீழுதட்டை கடித்துக்கொண்டவாறு ஓடிச் சென்று கயலை அணைத்துக்கொண்டாள் தேனு.

“எப்போவும் கல்யாணம் குழந்தையெல்லாம் நமக்கு ஒத்து வராது. சிங்கிள்தான் கெத்துன்னு சொல்லிக்கிட்டே இருப்பியேடீ, இப்போ மட்டும் எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட? எல்லா மாமாவோட மிரட்டலா? இருந்தாலும், உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்குதானே! யாருடீ அவரு?” கயல் படபடவெனப் பேசி ஆர்வமாகக் கேட்க,

தேனு சொல்ல வருவற்குள் இடையிட்டு, “மிஸ்.தேன்மொழி, இந்த செய்திய கேட்டு எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு. எப்படி உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆக போகுது, யார் சாமி அவரு உங்களுக்கும் வாழ்க்கை தரேன்னு முன் வாரது? எனக்கே பார்க்கணும் போல இருக்கே…” தேனுவை வேண்டுமென்றே வம்பிழுப்பதுபோல்  தன் இயல்பு குணம் தலைத்தூக்க கேலியாகப் பேசினான் வீரஜ்.

தேனுவோ அவன் வார்த்தைகளில் நாக்கைத் துருத்தி பழிப்புக் காட்ட, கயலுக்குதான் ஆச்சரியம்!

அவளுக்கு தெரியாதா என்ன, இந்த குறும்புப் பேச்சுக்களும் கேலிகளும் அவனின் பிறவி குணம் என்பது! ஆனால், இத்தனை வருடங்கள் அதை தொலைத்தல்லவா இருந்திருக்கின்றான்!

கயல் அவனையே விழிகளில் காதல் கலந்த ஏக்கத்தோடு நோக்க, எதேர்ச்சையாக தன்னவளின் விழிகளை சந்தித்தவன், அவள் பார்வையில் தெரியும் ஏக்கத்தில் உள்ளுக்குள் தன்னைத் தானே கடிந்துக்கொண்டவாறு அங்கிருந்து வேகமாக நகர்ந்திருந்தான்.

அதேநேரம் இருவரின் பார்வையில் தெரியும் காதலையும் ஏக்கத்தையும் கவனித்துக்கொண்டிருந்த சத்யா அம்மாள், தன் மகனுடன் இதைப் பற்றி தனியாக பேசும் தக்க தருணத்தை எதிர்ப்பார்க்க ஆரம்பித்தார்.

அடுத்து எல்லோரும் மதிய உணவை முடித்துவிட்டு ஹாலில் ஒன்று கூடி நிச்சயதார்த்தம் சம்மந்தமாக பேச ஆரம்பிக்க, “எல்லாரும் பேசிக்கிட்டு இருங்க, இதோ வர்றேன்” அதற்குமேல் தன் திருமணப்பேச்சை தானே கேட்க முடியாது அங்கிருந்து நகர்ந்து மாடிக்குச் சென்ற தேனு, பெருமூச்செடுத்து விழிகளிலிருந்து வழிந்த கண்ணீரை துடைக்கப்போக, “மாப்பிள்ளை யாருன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்ற யுகனின் குரல் பின்னாலிருந்து கேட்டது.

அதிர்ந்து விழித்தவள், முகபாவனையை மாற்றி வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், “ஆங், எப்படி இருக்கீங்க யுகனய்யா, மாப்பிள்ளை யாருன்னா கேட்டீங்க, அவரு பெரிய இடத்து பையன். லண்டன்ல இன்ஜினியரா வேலைப் பார்க்குறாரு. கல்யாணத்துக்கு அப்றம் நானும் அவர் கூடவே லண்டன் போயிருவேன்” அவனை பொறாமைப்பட வைக்க வேண்டுமென்று முயன்று சிரிப்போடுப் பேச, “கங்கிராட்ஸ்” என்றான் அவளை கூர்ந்துப் பார்த்தபடி.

இதழை கஷ்டப்பட்டு வளைத்து, “நன்றி” இறுகிய குரலில் அவள் சொல்ல, “இப்போவாச்சும் அப்பா பேச்சைக் கேட்டு திருந்தணும்னு தோனிச்சே, ரொம்ப நல்லது. இனிமேலாச்சும் அதிரடியெல்லாம் விட்டுட்டு அடக்க ஒடுக்கமா இரு!” என்றுவிட்டு யுகன் நகர, “எப்படி நடந்துக்கணும்னு நீங்க சொல்லத் தேவையில்லை. எனக்கு தெரியும்” பதிலுக்குக் கத்தியவளுக்கு மீண்டும் அவளையும் மீறி கண்ணீர் கன்னத்தைத் தாண்டி தரையைத் தொட்டது.

அவளிள் கத்தலைக் கேட்டும் யுகன் திரும்பிப் பார்க்கவில்லை. கை முஷ்டியை இறுக்கிக் கோபத்தைக் கட்டுப்படுத்தியவாறு நடந்தவனின் நினைவுகள் கடைசியாக அவளுடன் பேசிய தருணத்தை நினைத்துப் பார்த்தது.

அன்று  வீட்டில் பூஜை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன், யுகன் மடிக்கணினியில் ஏதோ வேலை செய்துக்கொண்டிருக்க, சரியாக அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

திரையில் தெரிந்த எண்ணைப் பார்த்தவன், புருவத்தை நெறித்து கொடுப்புக்கள் சிரித்தவாறு அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹெலோ…” என்றதும்தான் தாமதம், “நான் கடைசியா கேக்குறேன், என்னை நீங்க காதலிக்கிறீங்களா, இல்லையா?” கோபமாக வந்தன தேனுவின் வார்த்தைகள்.

சட்டென்று தேனு இவ்வாறு கேட்டதும் அதிர்ந்து விழித்தவன், பின் அமைதியாகச் சிரித்துக்கொண்டே, “இல்லை” என்றுச் சொல்ல, அவ்வளவுதான், அவளுக்கு வந்ததே ஒரு கோபம்.

“ஓஹோ! அப்போ நான் அப்பாவோட விருப்பப்படி நடந்துக்குறேன். வாழ்க்கையில ஒருத்தராச்சும் சந்தோஷப்படணும். அது என் அப்பாவா இருக்கட்டும். இத்தனைநாள் நான் பண்ணதெல்லாம் பொருத்துக்கிட்டு எனக்காக வாழ்ந்திருக்காரு. அவரை நான் கஷ்டப்படுத்த விரும்பல. இனி உங்களுக்கு நான் கால் பண்ண மாட்டேன். என் அப்பாவோட இஷ்டப்படி எல்லாம் நடக்கட்டும்” தேனு அழுகையை அடக்கிய குரலில் படபடவென பேசிக்கொண்டுப் போக, யோசனையோடு புருவத்தை நெறித்து, “புரியல?” என்றான் யுகன் கேள்வியாக.

சிறிதுநேர அமைதிக்குப் பின், “அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காரு” என்றுவிட்டு அவள் பட்டென்று அழைப்பைத் துண்டித்திருக்க, “வாட்?” அதிர்ச்சியில் அமர்ந்திருந்த இடத்தையும் விட்டு பாய்ந்து எழுந்தவன், மீண்டும் அவளுடைய எண்ணிற்கு அழைக்க, அவள்தான் அழைப்பைத் துண்டித்த மறுகணமே அவனுடைய எண்ணை அலைப்பேசியில் தடை செய்துவிட்டிருந்தாள்.

கோபத்தில் அலைப்பேசியை மெத்தையில் தூக்கியெறிந்தவனுக்கு அய்யோ என்றிருந்தது. அவனுக்குதான் தேனுவை பார்த்த கணமே பிடித்துப் போயிருந்ததே!

குடும்பத்தில் நடக்கும் குழப்பங்கள் காரணமாக காதலை சொல்லாது தாமதப்படுத்தியவன், குடும்ப பிரச்சினைகள் சரியானதும் தன் அம்மாவிடம் பேசிவிட்டு தேனுவின் பிறந்தநாளன்று கர்ணாவிடம் முறைப்படி பெண் கேட்கவென திட்டம் போட்டிருக்க, அதற்குள் அவளொரு திட்டத்தைத் தீட்டி அவனை கலங்கடித்துவிட்டாள்.

அன்று அவளை திட்டியது போல இன்றும் “முந்திரிக்கொட்டை! எல்லாத்துக்கும் அவசரம் அதிரடி! என்ன வேணா பண்ணி தொலை!” திட்டிக்கொண்டே யுகன் செல்ல, போகும் தன்னவனையே அழுதவாறு தேனு பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் என்றால், இத்தனைநேரம் நடந்ததை தூர நின்று பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு கவனித்துக்கொண்டிருந்தான் வீரஜ்.

அடுத்து வந்த இரண்டு நாட்கள் நிச்சயதார்த்தத்திற்கான வேலைகள் தடல்புடலாக நடக்க, வந்ததிலிருந்து எதிலும் கலந்துக்கொள்ளாது தான் உண்டு தன் புகைப்படக் கேமரா உண்டென இறுகிய முகமாக திரிந்துக்கொண்டிருந்தான் யுகன். அன்று மாடியில் அவன் வானத்தை வெறித்தவாறு நின்றிருக்க, அவன் பக்கத்தில் வந்து நின்ற வீரஜிற்கோ அவனின் இயல்பான குறும்புக் குணம் தலைத் தூக்கியது.

யுகனின் கையிலிருந்த கேமராவை பிடுங்கியவன், அதைப் திருப்பித் திருப்பிப் பார்த்தவாறு, “வாவ்! இங்கயிருந்து போற வரைக்கும் இதை நான் கொஞ்சம் யூஸ் பண்ணிக்கிறேன்” என்க, வீரஜைப் புரியாதுப் பார்த்து நின்றவன் அதற்கு மறுப்பாக எதுவும் சொல்லவில்லை. அமைதியாக முகத்தைத் திருப்பிக்கொள்ள, வீரஜிற்கோ ஆயாசமாகப் போய்விட்டது.

அப்போதுதான் யுகனின் கையிலிருந்த கைக்கடிகாரத்தை கவனித்தான் அவன். “இது நல்லாயிருக்கே…” என்றுச் சொல்லிக்கொண்டே அதை தொட்டுப் பார்ப்பதுபோல் சட்டென்று அதை கழற்றிவிட்டவன், “இனி இது என்னோடது” என்றுவிட்டு தன் கையில் அதை அணியப் போக, யுகனுக்கோ அதற்குமேல் பொறுக்க முடியவில்லை.

“அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச வாட்ச், அதை கொடுங்க” அவன் கத்திக்கொண்டே வீரஜிடமிருந்து பிடுங்கப் போக, “என்கிட்ட இருந்தா ஒன்னும் குறைஞ்சிற மாட்ட, கொஞ்சநாளைக்கு இதை நான் யூஸ் பண்ணிக்கிறேன். நீ வேற ஏதாச்சும் போட்டுக்கோ!” அலட்சியமாகச் சொல்லி அவனை மேலும் வெறுப்பேற்ற, கடுப்பாகிவிட்டான் யுகன்.

“அதெல்லாம் முடியாது. இது என்னோடது. கொடுங்க வீரா அண்ணா” அவன் வீரஜின் கையிலிருந்து பாய்ந்து பிடுங்கப்போக, கைக்கடிகாரத்தை பின்னால் மறைத்துப் பிடித்துக்கொண்டவாறு, “அபிமன்யு” என்றான் அழுத்தமாக வீரஜ். ஒருநிமிடம் யுகனிற்கு எதுவும் புரியவில்லை.

அதிர்ந்து அவனை சில நொடிகள் பார்த்திருந்தவன், வீரஜ் அவனை இழுத்து அணைத்து, “சோரிடா யுகா” என்றதும்தான் தாமதம், சிறுகுழந்தைப்போல் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டான். இத்தனைநாள் அவனுடைய சகோதரனுக்காக எந்தளவுக்கு ஏங்கியிருக்கின்றான் என்பது அவனுடைய அழுகையிலேயே தெரிந்தது.

முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல்படுத்தியவாறு, “எதுக்கெடுத்தாலும் சிணுங்குற பையனுக்கு இந்த ஊரு மீசைக்காரங்க பொண்ணு கொடுக்க மாட்டாங்களாம்” வீரஜ் கேலியாகச் சொல்ல, “நான் ஒன்னும் சிணுங்கல்ல, லேசா கண்ணு வேர்த்துருச்சு” என்ற யுகனுக்கு அப்போதுதான் ஏதோ ஒன்று புரிய, “எனக்கெதுக்கு இந்த ஊருல பொண்ணு தரணும்?” தெரியாததுபோல் கேட்டான்.

“நடிக்காதடா! மிஸ்.தேனுவ சார் லவ் பண்றது அந்த மீசைக்காரருக்கு தெரியுமா?” யுகனின் வயிற்றில் விளையாட்டாகக் குத்தி நக்கல்தொனியில் அவன் கேட்க, சட்டென்று முகம் மாற, “இதைப் பத்தி வெளியில சொல்லிடாதீங்க அபியண்ணா, எல்லாம் கை மீறி போயிருச்சு, இப்போ என் விருப்பத்தைச் சொல்லி மாமாவ அவமானப்படுத்த நான் விரும்பல” சுற்றியிருப்பவர்களின் மனநிலையையும் யோசித்து யுகன் பேச, வீரஜிற்கு அத்தனை ஆச்சரியம்!

செல்லமாக அவனுடைய தலை முடியை கலைத்துவிட்டு, “உன் வயசுல நான் இந்தளவுக்கு தெளிவா யோசிக்கல யுகா, எனிவேய் உனக்கு எது சரின்னு தோனுதோ அதை பண்ணு. தேனு கொஞ்சம் அதிரடிதான், ஆனா ரொம்ப நல்ல பொண்ணு. என்னால ஒருதடவை இந்த குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டிருச்சு. நான் எதையும் யோசிக்காம நடந்துக்கிட்டேன். ஆனா,  அவளையும் தாண்டி அவளோட அப்பாவ பத்தி யோசிக்குற உன் காதல் ரொம்ப வெல்யூடா. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு” என்று வீரஜ் அணைத்துக்கொள்ள, கலங்கிய விழிகளைத் துடைத்து தன் அண்ணனின் தோளில் சாய்ந்துக்கொண்டான் யுகன்.

அடுத்தநாள் நிச்சயதார்த்தம் என்றிருக்க, இன்று வீட்டை அலங்காரம் செய்வதெற்கென ஆட்கள் பம்பரம் போல் சுழன்று வேலைப் பார்க்க, பூக்களை கோர்த்து மாலை கட்டிக்கொண்டிருந்த கயலோ முதுகில் ஏதோ ஊசி துளைக்கும் பார்வையை உணர்ந்து, பட்டென்று நிமிர்ந்து மனம் சொன்ன திசைக்குத் திரும்பிப் பார்த்தாள்.

அவள் பார்த்ததுமே பார்வையை வீரஜ் திருப்பிக்கொள்ள, ‘க்கும்! நான் வேணாமாம், ஆனா பார்க்க மட்டும் செய்வாரு’ உள்ளுக்குள் நொடிந்துக்கொண்டு உதட்டைச் சுழித்து முறைத்துப் பார்த்தவள், முகத்தைத் திருப்பிக்கொள்ள, மீண்டும் தன்னை மீறி தன்னவளை ரசிக்க ஆரம்பித்தான் அவன்.

அவளுடைய காதலையும் ஏக்கத்தையும் அறியாதவனில்லை அவன். சொல்லப்போனால், அவளுடனான பிரிவு அவள்மேல் முன்பிருந்ததை விட அளவுக்கதிகமான காதலை உருவாக்கியிருந்தது அவனுக்கு.

ஆனால், உள்ளுக்குள் அவளை நெருங்குவதில் பயம். ஏக்கமாக அவளைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அவன் எழுந்துச் சென்றிருக்க, இதைக் கவனித்துக்கொண்டிருந்த சீதாவும் சத்யாவும் ஒருவரையொருவர் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துக்கொண்டனர்.

அதேநேரம், கயலோடு சேர்ந்து பூக்களைக் கோர்த்துக்கொண்டிருந்த தேனுவின் முகத்திலோ மருந்துக்கும் சிரிப்பில்லை. தரையை வெறித்து ஏதோ யோசித்தவாறு அவள் அமர்ந்திருக்க, பூமாலை கட்டியவாறு தன் தோழியையே நோட்டமிட்டுக்கொண்டிருந்த கயலுக்கு அவளின் இந்த சோர்ந்த முகம் புதிதுதான். எப்போதும் வாய் ஓயாது பேசிக்கொண்டு துடிப்பாக இருக்கும் தன் தோழியைப் பற்றி அவளுக்கு தெரியாதா என்ன?

“என்னாச்சுடீ உனக்கு?” கயல் சந்தேகமாகக் கேட்க, அப்போதுதான் மயக்கத்திலிருந்து விழித்ததுபோல், “ஆங்… அது வந்து ஒன்னுஇல்லை கயலு” என்ற தேனு, நேரத்தைப் பார்த்துப் பதறி, “கயலு, நீ இதை பண்ணிக்கிட்டு இரு! இதோ வர்றேன்” என்றுவிட்டு வேகமாக வெளியில் ஓட, ‘எங்க போறா இவ?’ போகும் தன் தோழியை கேள்வியாகப் பார்த்தவளுக்கு அவளின் பதற்றத்திற்கும் ஓடியதற்குமான காரணம் அன்று மாலைதான் தெரிந்தது.

மாலை, வீட்டில் நிச்சயதார்த்த வேலைகளைப் பார்க்கப் பிடிக்காது வயல்வெளிகளில் சிறிதுநேரம் உலாவிவிட்டு அப்போதுதான் யுகன் வீட்டுக்குள் நுழைய, சரியாக எல்லோர் முன்னிலையிலும் தன் ஆளொருவனின் கன்னத்தில் பளாரென அறைந்தார் கர்ணா. ஒருநிமிடம் யுகனே திகைத்து அப்படியே நின்றுவிட, ரேவதியோ, “தம்பி, என்னாச்சு?” பதறியபடிக் கேட்டார்.

தேனுவோ பாவமாக முகத்தை வைத்தவாறு உதட்டைப் பிதுக்கிக்கொண்டு நிற்க, தன் மகளின் முகத்தைப் பார்த்து மேலும் பொங்கியெழுந்து, “நீங்களே சொல்லுங்க அண்ணி, என் பொண்ணுக்கு என்ன குறைச்சல்? அழகில்லையா, அறிவில்லையா? அவள அந்த மாப்பிள்ளை வீட்டாளுங்க வேணாம்னு சொல்லியிருக்காங்க. பச்சமண்ணு அன்னி என் பொண்ணு. எவன் கால் பண்ணி தப்புத்தப்பா சொல்லிக்கொடுத்தானோ, அவனை பிடிச்சிட்டு வாங்கன்னா எதுக்கும் உதைவாம வந்து நிக்கிறானுங்க” கர்ணா கிட்டத்தட்ட அந்த நபரை வெட்டுமளவிற்குக் கோபத்தோடுக் கத்தினார்.

‘மாப்பிள்ளை வீட்டுல இவள வேணாம்னு சொல்லிட்டாங்களா? நம்புற மாதிரி இல்லையே!’ உள்ளுக்குள் நினைத்தவாறு யுகனோ தேனுவை குறுகுறுவென பார்த்தான் என்றால், வராத கண்ணீரை துடைத்தவாறு எல்லாரையும் அவள் பாவமாகப் பார்க்க, சுற்றியிருந்தவர்கள் கூட, ‘அய்யோ பாவம்!’ என்றபடி அவளை நோக்கினர்.

ஆனால், நடப்பதை பொறி உருண்டை சாப்பிட்டுக்கொண்டு ஒரேயொரு ஜீவன் மட்டும் சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருந்தது. அது சாட்சாத் நம் வீரஜ் அபிமன்யுதான்.

கயலும் தன்னவனை கவனிக்காமலில்லை. இங்கு கர்ணாவோ சோர்ந்துப்போய் எதுவும் பேசாது அப்படியே கதிரையில் அமர்ந்துவிட, சக்கரங்களை தள்ளியவாறு கர்ணாவை நோக்கிச் சென்ற சத்யா அம்மாள், “கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் தம்பி, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. பாவம் நம்ம வீட்டுப்பொண்ணு. அவளுக்கு நீங்கதானே ஆறுதலா இருக்கணும்! நீங்களே இப்படி இருந்தா எப்படி?” ஆறுதலாகப் பேசி சமாதானப்படுத்தினார்.

“இந்த வீட்டுப் பொண்ணுங்களுக்கு நிச்சயதார்த்தத்துல கண்டம் இருக்கணும்னு இந்த வீட்டுக்கு விதிச்ச சாபம் போல, என்ன பண்ண நம்ம நேரம் அப்படி!” என்றுவிட்டு தன் மகளை பரிவாகப் பார்த்தவாறு அங்கிருந்து அவர் நகர்ந்திருக்க, அடுத்த சில நிமிடங்களில் மற்றவர்களும் அங்கிருந்து தத்தமது அறைக்கு விரைந்திருந்தனர்.

வீரஜும் சோம்பல் முறித்தபடி எழுந்து நின்றவன், ஏற்கனவே தீட்டிய திட்டப்படி மொட்டை மாடிக்குச் செல்ல, அங்கு ஏற்கனவே நின்றிருந்தாள் தேனு, வீரஜை எதிர்ப்பார்த்தப்படி.

அவனும் வந்தவன், “எப்படி ஐயாவோட ப்ளானு?” என்று கோலரை தூக்கிவிட்டுக்கொள்ள, “பழைய ஐடியாதான், நினைச்ச மாதிரி நடந்துருச்சு. ஆனா, அப்பா ரொம்ப கவலையா இருக்காரே” என்றாள் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு.

“லுக், நீ சொன்னப்படி உன் வீட்டு மானம் போகாம மாப்பிள்ளை வீட்டுல வேணாம்னு சொல்ற மாதிரி ஸ்கெட்ச் போட்டு உன் நிச்சயதார்த்தத்தை நிறுத்தியாச்சு. மாமாவுக்கு உன்னை நினைச்சுதான் கவலையே! என்ட், என் தம்பி மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க மாமா கொடுத்து வச்சிருக்கணும். கூடிய சீக்கிரம் அம்மாவ பேச சொல்றேன். ஆல் இஸ் வெல்” விழிகளை சிமிட்டி அவன் சொன்ன விதத்தில் தேனுவிற்கே சிரிப்பு வர, “நீங்க கொஞ்சம் கூட மாறவே இல்லை அண்ணா” என்றுவிட்டு கிளுக்கிச் சிரித்தாள் தேனு.

அதேநேரம், “அபியண்ணா இதை கொஞ்சம் கூட உங்ககிட்ட நான் எதிர்ப்பார்க்கல” என்ற யுகனின் குரல். “அவரோட லவ்வுலயே அடைக்க இருக்கு ஏகப்பட்ட ஓட்டை. இதுல மத்தவங்க லவ்வுக்கு ஹெல்ப்பு பண்ண போறாரு ஹெல்ப்பு க்கும்!” கூடவே யுகன் பக்கத்தில் நின்று தன்னவனைப் பார்த்து நொடிந்துக்கொண்டாள் கயல்.

இதில் மாட்டிக்கொண்ட அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு திருதிருவென விழிக்க ஆரம்பித்துவிட்டனர் தேனுவும் வீரஜும்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!